அந்தமான் கைதி/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


காட்சி 29.

இடம் : நடராஜன் வீடு.
காலம் : மாலை
பாத்திரங்கள்: நடராஜன், காமாட்சி.
[காமாட்சி ஒருபலகையில் உட்கார்ந்திருக்கிறாள். நடராஜன் ஆத்திரமும், துக்க ஆவேசமும் தூண்டப்பட்டவனாய் கோபத்தோடு]

நட: ஆம். நீதான் பெற்றாய்! வளர்த்தாய்! அதற்காக இப்படியா செய்யவேண்டும்? அம்மா! அம்மா! நீ மட்டுமா உலகத்தில் அதிசயமாக மக்களைப் பெற்று வளர்த்தாய்? உன்னைப்போல் எத்தனையோ கோடிக்கணக்கான தாய்மார்கள் மக்களைப் பெற்று வளர்க்கவில்லையா? அவர்களில் யாராவது இப்படி உன்னைப் போல் தன் மக்களே உயிரோடு பலிகொடுக்க விரும்புவார்களா? ஐயோ! இதைவிட நீ லீலாவை ஆற்றிலோ குளத்திலோ தள்ளியிருந்தால் கூடப் பரவாயில்லையே! அதைவிடக் கொடுமையல்லவா செய்திருக்கிறாய்!

காமா: இப்ப என்னடா உலகத்திலே இல்லாத கொடுமையை நான் செய்து விட்டேன்? லீலா ஒருத்தி தான் அதிசயமா நாலாந்தாரமாகக் கட்டிக்கிட்டா? இன்னம் எத்தனையோ லட்சம் பேர் இந்தமாதிரி ரெண்டாந்தாரம், மூணாந்தாரமுன்னு கல்யாணம் செய்துக்காமேயா இருக்காங்க! எல்லாம் அதது விதியப்போலத்தான் நடக்குன்னுட்டுப் போவாமே...

நட : விதி விதி யாருக்கு விதி: சோம்பேறிகளும், கையாலாகாதவர்களும் அல்லவா தன்னால் ஆகாத காரியங்களுக்கெல்லாம் விதி விதியென்று சொல்லி, யானை, தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். அந்தோ விதியின் பெயரைச் சொல்லி இந்நாட்டில், எத்தனை கோடிப் பேர்களைக் கெடுத்திருக்கிறார்கள்; எத்தனை கோடிப் பேர் தன்னைத்தானே கெடுத்துக்கொண்டார்கள்; அம்மா கொஞ்சம் நன்றாக யோசித்துப் பார். லீலாவை இன்று ஒரு கிழவனுக்கு மனைவியாக்கி அவள் வாழ்க்கையைப் பாழாக்கியது நீயா அல்லது விதியா? நீ விதியென்று தான் சொல்வாய்; அப்படியானால் நாளையே லீலாவுக்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்கிறேன்; அப்போது அந்த விதி என்ன செய்கிறது? அந்த விதியினால் இதைத் தடுக்க முடிகிறதா என்பதைப்பார். அதன் பிறகாவது விதியின் பெயரால் நீ எவ்வளவு பெரிய அக்ரமத்தைச் செய்து விட்டாய் என்பது தெரியும்.

காமா : இப்படி யெல்லாம் வருமுன்னு நாங்கண்டேன்? எல்லாம் உன் நன்மையை உத்தேசித்துத்தான் செய்தேன்.

நட: மறுபடியும் எனக்காகச் செய்தேனென்று சொல்லாதே; உன் அண்ணன் உறவு விட்டுப்போகக்கூடாது என்பதற்காகக் கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுத்ததைப்போல் கொடுத்துவிட்டு, என் நன்மைக்காகச் செய்தேனென்று வேறா சொல்லுகிறாய்?

காமா : அதுனாலே இப்ப என்னடா கெட்டுப்போச்சு! அவள் ராஜாத்தி மாதிரி இருக்கா. அவளுக்கென்ன குறைச்சல்?

நட: ராஜாத்திமாதிரி இருப்பது அது இல்லை...... நீ தான் இப்போது அப்படி இருக்கிறாய்...... தங்கச் செயின், பட்டுப் புடவை, என்ன அலங்காரம்! என்ன ஒய்யாரம் சே! இந்த அற்பப் பொருள்களுக்காகவா ஒரு பெண்ணைப் பலி கொடுக்க வேண்டும்? உன்னால், உன் பண ஆசையால், உன் அறியாமையால் இன்று லீலா தன் வாழ்க்கையில் சுகங்கள் எல்லாவற்றையும் இழந்து நரக வேதனைப் படுகிறாள் தெரியுமா?

காமா : அவள் சுகத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை; நீ....

நட : சுகமா! அடடாடா, இந்த சுகம் உன் வயிற்றில் பிறவாதிருந்தால் கிடைத்திருக்குமா?......... விஷமே உருவாகிய உன் வயிற்றில் நாங்கள் பிறந்தோமே!

காமா : (முகத்தில் துணியை வைத்துக் கசக்கிக்கொண்டு). ஹும் இதெல்லாம் என்னெப் புடிச்சப் போராத காலம். நல்லதுக்குச் செய்யப்போனா என்னமோப் பெரிய கொலை பண்ணிட்டாப்போல பேசுறே! எம் புத்திக்கி இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

நட : கொலை செய்திருந்தால் கூடப் பரவாயில்லையே, அம்மா! அதைவிடப் பெரிய கொடுமை யல்லவா செய்து விட்டாய். ஐயோ! பத்து மாதம் சுமந்து வருந்திப் பெற்றுப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பச்சிளங் கன்னிகையை உயிரோடு பலியிட்டாயே அம்மா! நீயே யோசித்துப்பார்; நீ கல்யாணம் செய்து கொண்ட காலத்தில் என் தந்தை ஒரு கிழவனாய் இருந்திருந்தால், உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

அம்மா, அம்மா, அம்மா! பெண்ணாய் பிறந்த உனக்கு ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சி தெரியாமல் போய்விட்டதே! அம்மா, ஐயோ! நினைத்தாலும் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறதே! உனது தாயுள்ளத்தைப் பணப் பேய்க்கு இரையாக்கி விட்டாயே! அம்மா, ஐயோ! உனது ஹிருதயமென்ன கல்லாகி விட்டதா? தொண்டு கிழவன் உன்னருங் குமரியைத் தொட்டுத் தாலிகட்டிய அந்தக் கோரக் காட்சியைக்கண்டு உன் கண்களிலே இரத்தம் சிந்தவில்லையா? ஐயோ என் உள்ளத்தின் குமுறல், இதயத்தின் எதிரொலி, உன் செவிகளிலே விழவில்லையா? அம்மா...அம்மா...... ஆம், ஆம்! உன் மீது குற்றமில்லை! இந்தச் சண்டாளர்களின் கூட்டத்தில் அபலையான என் தங்கையை விட்டுச் சென்றது என் அறியாமையே! அந்தோ! நானே சண்டாளன்! நானே சண்டாளன்...ஆம். மனமற்ற இத் திருமணத்தை உதறித் தள்ளிவிட்டு நாளையே மறுமணம் செய்வேன் என் தங்கைக்கு நீயல்ல உன் தமையனல்ல, இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் சரி, கவலையில்லை. மறுமணம் செய்தே தீருவேன். இருளடைந்த என் அருந்தங்கையின் வாழ்க்கையில் ஒளி நிலவட்டும், மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போகட்டும்.

(வெறி கொண்டவன்போல் ஓடுகிறான்.)"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/29&oldid=1073522" இருந்து மீள்விக்கப்பட்டது