அந்திம காலம்/அந்திம காலம் - 11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தட்டாம் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி பறந்த பின் ஒரு இலை மீது வந்து அமர்ந்தது. பரமா மூன்றாம் முறையாக பதுங்கிப் பதுங்கிப் போய்ப் பிடிக்க முயன்றான். ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டதில் பிசுபிசுத்துள்ள அவன் விரல்கள் அதன் இறக்கை மீது மூடுகின்ற கடைசி தருணத்தில் அது சர்ரென்று பறந்து போய் இன்னொரு இலையில் உட்கார்ந்தது. அவன் கோபத்தில் ஒரு சுள்ளியைத் தூக்கி வீசினான். அது எங்கோ போய் விழ தட்டாம் பூச்சி அரண்டு போய் ஏரியை நோக்கிப் பறந்தது.

"பட்டுக் கருநீலப்புடவை" என பாரதியார் வருணித்தாரே, அப்படி பளபளத்துக் கிடந்தது அந்தத் தைப்பிங் ஏரி. அது ஓர் ஓய்வான சனிக்கிழமையின் மாலை நேரம். ஓய்வு தேடி வந்த ஏராளமான மக்கள் அந்த ஏரிப் பூங்கா முழுவதும் இருந்தாலும் சுந்தரம் உட்கார்ந்திருந்த இடத்தில் ஓர் ஏகாந்தம் இருந்தது. அந்த அகண்ட ஏரியின் இந்த மூலை தனக்கும் பரமாவுக்கும் மட்டும் என்று எல்லை வகுத்துக் கொண்டது போல ஜனநடமாட்டம் குறைந்த ஒரு மூலையில் ஒரு மரத்தினடியில் அவர் சென்று உட்கார்ந்திருந்தார். ஏரியை ஒட்டிச் செல்லும் சாலையிலிருந்து வரும் கார்கள், மோட்டார் சைக்கிள் ஒலிகள் செவியைத் தாக்கினாலும் இந்த ஏரியின் அமைதியில் அவை கரைந்தன.

"இத்தனை ஒலிகள் இங்கு வந்து உலவுகின்றனவே, இவற்றில் எது இந்த ஏரியின் மொழி?" என்று யோசித்துப் பார்த்தார். ஏரியின் நீர்ப்பரப்பினைப் பார்த்தார். இலேசான காற்றில் கொஞ்சம் சலசலத்ததைத் தவிர வேறு ஒலிகள் அந்த நீரிலிருந்து வரவில்லை. "ஏரியின் மொழி மௌனம்" என எண்ணிக் கொண்டார். அது பேசுவதில்லை. அது அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு யோகியைப் போல இருக்கிறது.

லாருட் மலையின் நிழலில் அந்தத் தைப்பிங் ஏரி பரந்திருந்தது. அந்த மலைத் தொடரில்தான் உல்லாசத் தளமான மேக்ஸ்வெல் மலை இருக்கிறது. ஒருகாலத்தில் ஈயச்சுரங்கமாக இருந்து பின் ஏரியாக மாறியிருந்தது அந்த நீர்ப்பரப்பு.

அன்னம் பல ஆண்டுகளுக்கு முன் தைப்பிங் வர முடிவு செய்த போது இராம கிருஷ்ணன் மாமா இந்த ஏரிக்குப் பக்கமாக உள்ள அழகிய வீடமைப்புப் பகுதியான இனிய தமிழ்ப் பெயரைக்கொண்ட 'தாமான் இளையதம்'யில்' இந்த வீட்டை வாங்கிக் கொடுத்திருந்தார். தைப்பிங் ஏரிப் பூங்காவை ஒட்டி ஓடுகிற இந்த சாலையிலிருந்து ஜாலான் கம்போங் பெர்ச் வழியாக மூன்று நிமிடம் நடந்தால் அந்த தாமான் இளையதம்பி கண்ணுக்குத் தெரிந்து விடும். மரங்கள் அடர்ந்த சோலை அந்தப் பகுதி. அந்தத் திருப்பு முனையில் ஒரு சிறிய இந்துக் கோயிலும் உருவாகியிருந்தது.

தைப்பிங் வரும்போதெல்லாம் அக்காவின் வீட்டிலிருந்து மாலை வேளைகளில் அவர் நடந்தே இந்த ஏரிக்கு வந்து விடுவார். குழந்தைகளோடும் ஜானகியோடும் வந்து உலவிக் குலவிய நாட்கள் பல.

அப்போது அக்கா சேர்த்து வைத்திருந்த பணம் வைப்புத் தொகைக்கு மட்டும்தான் சரியாக இருந்தது. இப்போது கடன் முழுவதையும் கட்டி அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறாள். தைப்பிங்கிலேயே இன்னொரு இடத்தில் இன்னொரு சிறிய வீட்டையும் வாங்கி வாடகைக்கு விட்டுத் தன் பென்ஷன், அந்த வாடகை, டியூஷன் வருமானம் என மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பரமாவும் இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறான். நேற்றுப் புறப்பட்டு தைப்பிங் வந்ததுமே அவனுக்கு ஒரு உற்சாகம் வந்து விட்டது. இருமிக்கொண்டும் பலவீனமாகவும் இருந்தாலும் அவன் மனம் மாற்றத்தின் காரணமாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் சுந்தரத்துக்கு அப்படியில்லை. டாக்டர் ராம்லியின் மருந்து கொடுத்த ஒரு சில மணி நேர நிவாரணத்துக்குப் பிறகு பரமா பற்றிய செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவர் மனம் பயங்கர இருளில் ஆழ்ந்துவிட்டது. அந்த இருளில் உடம்பின் உபாதைகளும் அதிகமாயின. வாந்தியும் வயிற்றுப் புரட்டலும் அதிகமாயின. வழக்கமான தலைவலி பயங்கரமாக வந்து தாக்கியது. இரவில் தூக்கத்தை எதிர்பார்த்து தலை சுழலும் மயக்தத்திலேயே கழித்தார்.

பரமாவின் செய்திக்குப் பிறகு அன்றும் அடுத்த நாளும் தைப்பிங் பிரயாணம் பற்றி யாருக்கும் பேசத் தோன்றவில்லை. ஆனால் இரவில் அன்னம் தீர்மானமாகச் சொன்னாள்: "தம்பி, சொன்ன மாதிரி நாளைக்கு தைப்பிங் போறோம்."

சுந்தரம் தயங்கினார்: "என்ன அக்கா, இந்த நெலமையில...!"

"எந்த நெலமையில...? இப்படி நடந்திடிச்சின்னு உக்காந்து அழுதுக்கிட்டே இருக்கிறதா? வேணாம். கண்டிப்பா போவோம். பரமாவோட மருத்துவ சோதனை கடைசி முடிவு திங்கள் கிழமைதான் தெரியும். உனக்கும் திங்கள் கிழமை வரையில சிகிச்சை ஒண்ணுமில்ல. அப்புறம் என்ன?"

சுந்தரத்திற்கு அது சரியெனப் பட்டது. எல்லோரும் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

வந்த மறுநாளான இன்று மாலை தமக்குக் கொஞ்சம் தனிமை வேண்டும் என ஏரிக்குப் புறப்பட்டார். அனைவரும் தடுத்தார்கள். "வீட்டில இருந்து ஓய்வெடுக்கிறதுக்கு பதிலா ஏங்க போய் அலையிறிங்க?" என்று மறுத்தாள் ஜானகி.

"இது அலைச்சல் இல்ல ஜானகி! நான் தனிமையில சில விஷயங்கள யோசிக்க வேண்டியிருக்கு! என்னப் போகவிடு!" என்றார்.

ஜானகி கொஞ்சம் பயத்தோடு பார்த்தாள். "அப்படின்னா இருங்க! நானும் வாறேன்" என்றாள்.

சுந்தரம் அவளைப் பார்த்துச் சிரித்தார். "ஏன் ஜானகி, நான் தைப்பிங் கொளத்தில விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன்னு பயப்பட்றியா? சும்மா இரு. தனிமைன்னு சொன்னேன்ல. நீயும் கூட வந்தா அது தனிமையா இருக்காது. ஒரு மணி நேரம் உக்காந்திருந்து வந்திருவேன்" என்று புறப்பட்டார்.

ஆனால் பரமா விடவில்லை. "தாத்தா டேக் மீ என்ட் கோ!" என்றான்.

"ஐயோ, வேணாங்க! உங்களப் போட்டு அலைக்கழிச்சிருவான்! அவனுக்கும் உடம்பு சரியில்ல" என்றாள் ஜானகி.

ஆனால் பரமாவின் துணை அப்போது தனக்கிருந்தால் நல்லது என அவருக்குத் தோன்றியது. இருவருமே நாள் குறிக்கப்பட்டுவிட்ட மரண தண்டனைக் கைதிகள். ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம்.

அவனையும் அழைத்துக் கொண்டு மெதுவாக நடந்து ஏரிக்கரையை வந்தடைந்தார். தயக்கத்துடன்தான் அனுப்பி வைத்தாள் ஜானகி.

ஏரியை ஒட்டிய சாலைக்கு அப்பால் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த மழை மரங்கள் தங்கள் கிளைகளைச் சாலையைத் தாண்டி விரித்து ஏரியின் நீரைத் தொட முயன்று கொண்டிருந்தன. அந்தக் கிளைகள் சாலையைப் பந்தலாக மூடியிருந்தன. வாகனங்களும் பாதசாரிகளும் வெயில் படாமல் உல்லாசமாகப் போய் வர அந்த இயற்கைப் பந்தல் உதவியது.

அந்த மரங்களைப் பார்த்தால் பல கைகளைக் கொண்ட ஒரு அழகிய நாட்டியக்காரி அபிநயித்து நிற்பது போல அவருக்குத் தோன்றியது. அந்த மரத்தின் கிளை நீண்டு வளைந்து தண்ணீரைத் தொட முயன்ற காட்சி மைக்கலாஞ்சலோவின் வத்திக்கன் தேவாலயக் கூரை ஓவியத்தில் கடவுளின் விரல் மனிதனை நோக்கி நீண்டு தொட்டும் தொடாமல் நிற்கிறதே அதை அவருக்கு நினைவு படுத்தியது.

மரம் முழுவதிலும் காளான்கள் பூத்திருந்தன. ஏதோ ஒட்டுண்ணிச் செடிகள் பொத்தான் பொத்தானாகப் பூத்து பற்றிக்கொண்டு சரம் சரமாகத் தொங்கின. கிளைகளின் முடிவில் குட்டி உதய சூரியன்களாக ஆயிரம் பூக்கள். அந்தக் கிளைகள் தண்ணீரை அள்ள ஏந்திய கைகளாய் தொட்டும் தொடாமலும்....

எங்கும் உயிர் பூத்துக் குலுங்குகிறது. இதோ இந்தத் தட்டான் பூச்சிகளில்... இந்த நீர்ப்பரப்பில் நீந்தும் நீர்ச்சிலந்திகளில்... உள்ளே திரியும் மீன் குஞ்சுகளில்... தவளைச் சினைகளில்... எங்கும் உயிர் இருக்கிறது.

ஆனால் இதோ இங்கே ஓர் உயிருக்கு முடிவு நாள் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. பூக்கு முன்னே ஒரு பூவுக்கு கருகும் தண்டனை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

எனக்கும்தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நான் வாழ்ந்து சிலவற்றையெல்லாம் அனுபவித்துப் பார்த்துவிட்டேன். எனக்கு இது சாயுங்காலம். எனக்கு இது அந்தி. கொஞ்சம் சீக்கிரமாக இந்தப் பொழுது சாயவேண்டும் என்று இருக்கிறது. அது பரவாயில்லை.

ஆனால் இதோ இவனுக்கு இது விடிகாலைப் பொழுதல்லவா? கிழக்கு வெளுக்கும்போதே அஸ்தமனமா? அரும்பிலேயே கருகிப் போவதா?

இந்த ஏற்பாடு எனக்குப் புரியவில்லை. இறைவனா? இயற்கையா? ஏதோ ஒன்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டு இப்படிச் செயலாற்றுகிறது. இந்தத் திட்டத்தின் பின்னே வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் எனக்கு இந்தத் திடீர் நோயைக் கொடுக்க வேண்டும்? கொடுத்த பின் என் அந்திம காலத்தில் ஏன் இந்தச் சின்னப் பிள்ளையைக் கொண்டு வந்து என்னிடம் சேர்க்க வேண்டும்? சேர்த்த பின் ஏன் அவனுக்கும் நாள் நிர்ணயிக்க வேண்டும்? நாங்கள் இருவருமாக இணைந்து சென்று ஆற்ற வேண்டிய வேலைகள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றனவா? அல்லது நாங்கள் இருவரும் சென்ற பிறவியில் ஒரே மாதிரி குற்றம் செய்து இந்தத் தண்டனையைப் பெற்று வந்தோமா? தெரியவில்லை. புரியவில்லை.

பரமா சோர்ந்து போய் அவரை நோக்கி நடந்து வந்தான். "திஸ் பூச்சி இஸ் வெரி நோட்டி!" என்றான்.

"ஏன் பரமா? பூச்சி உன்ன என்ன பண்ணுது?" என்று கேட்டார்.

"ஐ வாண்ட் டு கேட்ச் ஹிம். பட் ஹீ பிளைஸ் எவே!" என்றான்.

"அந்தப் பூச்சிக்கு என்ன பேர் சொல்லு பாப்போம்?"

"ஐ டோன்ட் நோ" என்றான்.

"தட்டாம் பூச்சி! சொல்லு!"

"தட்டாம் பூச்சி!" என்று திரும்ப சொன்னான்.

"தட்டாம் பூச்சி, பறந்து போச்சி! சொல்லு பாப்போம்!"

"தட்டாம் பூச்சி, பறந்து போச்சி!" மழலையில் ஆனால் சுத்தமாக ஒப்புவித்தான்.

அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வளர்ப்பில் தமிழ் இருந்தால் எந்தக் குழந்தையால் தமிழ் பேச முடியாது. இவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்கிறான். ஒரு வெறுப்பும் இன்றிப் பேசுகிறான். குழந்தையின் மனத்தில் ஒரு மொடூ மீது வெறுப்பு எப்படி வரும்? பெற்றோரின் அசிரத்தைதான் இந்த மத்தியதர வர்க்கக் குடும்பங்களில் தமிழ் அடூந்து போவதன் காரணம் என நினைத்தார்.

இப்படிச் செய்தாலென்ன? எனக்கு மீதியிருக்கும் இந்தச் சில நாட்களில் - வாரங்களோ வருடங்களோ தெரியவில்லை - அவனுக்கும் எஞ்சியிருக்கும் இந்தச் சில நாட்களில் - அவையும் வாரங்களோ வருடங்களோ தெரியவில்லை - அவனுக்கு நல்ல தமிழை அக்கறையோடு சொல்லிக் கொடுத்தாலென்ன?

நோயெனும் தீயில் விட்டில் பூச்சிகள் போல அவர்கள் சிறகெரிந்து விழ மீதியிருக்கும் இந்தச் சில நாட்களில் தமிழைக் கற்பித்தலும் கற்றுக் கொள்ளுதலும்தான் அவர்கள் இருவருக்கும் வாழ்க்கை இலட்சியம் என்று விதிக்கப் பட்டிருப்பதாக அவருக்குத் திடீரெனத் தோன்றியது.

"பரமா! தாத்தா ஒனக்குத் தமிழ் சொல்லிக் குடுக்கிறேன். கத்துக்கிறியா?" என்று கேட்டார்.

"ஐ நோ ஹவ் டு ஸபீக் டமில்!" என்றான்.

வியந்தார். "எப்படித் தெரியும்?" என்று கேட்டார்.

"மை ஃபாதர் டோட் மீ!"

மேலும் வியந்தார். அந்த முரடனா? வாழ்க்கையில் உன்னதமான எதையும் அறிந்து கொள்ளும் திறமையற்ற அந்த அப்பனா தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறான்?

"சரி! என்ன சொல்லிக் குடுத்தார் உங்கப்பா?" என்று கேட்டார்.

"மை ஃபாதர் ஆல்வேய்ஸ் சேய்ஸ் "போடா மடையா!"

நினைத்தது சரியாக இருந்தது. தனது அநாகரிப் பழக்க வழக்கங்களைத்தான் இந்தப் பிள்ளைக்குக் கற்றுக் கொடுத்து வேடிக்கை பார்த்திருக்கிறான். சில குடும்பங்களில் தமிழை இந்த வேடிக்கை விளையாட்டுக்களுக்குத்தான் பயன் படுத்துகிறார்கள். சினிமாவில் வருகின்ற கொச்சைப் பேச்சுக்களை மனப்பாடம் செய்து பரிமாறிக் கொண்டு சிரித்து மகிழத்தான் பயன் படுத்துகிறார்கள்.

"அதெல்லாம் வேணாம் பரமா! நான் நல்ல தமிழ் சொல்லித் தாறேன். கத்துக்கிரியா?"

"யெஸ்" என்றான்.

"சரின்னு சொல்லு பாப்போம்!"

"சரி தாத்தா!" என்றான். தாத்தாவை அவனாகச் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

"சரி. இப்ப உன் பேர எப்படிச் சொல்லுவ?

"மை நேம் இஸ் பிரேம்" என்றான்.

அதையே தமிழ்ல சொல்லு! என் பேர் பிரேம்!"

"என் பேர் பிரேம்!" அப்படியே திருப்பிச் சொன்னான்.

"பாட்டி எனக்குப் பசிக்கிது"

"பாட்டி எனக்குச் சாக்லேட் குடு!"

"தாத்தா எனக்குத் தூக்கம் வருது"

அவர் சொல்லச்சொல்ல எல்லாம் அழகாகத் திருப்பிச் சொன்னான்.

"இப்ப பரமா, கொஞ்சம் கஷ்டமானது சொல்றேன். கத்துக்கிறியா?" என்றார்.

"ஐ கேன்" என்றான்.

"முடியும்னு சொல்லு!"

"முடியும் தாத்தா!" மீண்டும் தாத்தா கொஞ்சலாய் வந்தது.

தயங்கி மெது மெதுவாக, சீர் சீராகச் சொன்னார்.

"அகர..."

"அகர..:"

"முதல..."

"முதல..."

"எழுத்"

"எழுத்"

"தெல்லாம்..."

"தெல்லாம்..."


"ஆதி"

"ஆதி"


"பகவன்"

"பகவன்"

"முதற்றே"

"முதறே.."

"இல்ல... முதற்றே..."

"முதற்றே"

"உலகு"

"உலகு"

எல்லாவற்றையும் அவன் கோர்த்து முழுமையாகச் சொன்ன போது அவருக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவன் பெற்றோரின் மத்திய தர வர்க்க விகாரங்களுக்குள் இவனை முற்றாக இழந்து விட்டேன் என்று எல்லாவற்றையும் கைகழுவிவிட்ட நிலையில் இப்படி ஒருநாள் இவன் வாயில் நான் திருக்குறள் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறேனே என நினைத்துக் கொண்டார். "குழலினிது யாழினிது என்பர்" நினைவுக்கு வந்தது. அவனை அணைத்து முத்தம் கொடுத்தார்.

"பரமா! வீட்டுக்குப் போனதும் அன்னம் பாட்டி ஜானகிப் பாட்டி ரெண்டு பேருக்கும் சொல்லிக் காட்டிறியா என்று கேட்டார். இந்த சாதனையைத் தன் குடும்பத்துக்குப் பறைசாற்ற வேண்டும். இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கேடயத்தை உயர்த்திப் பிடித்து திடல் முழுக்கச் சுற்றி ஓடி வரவேண்டும்.

"சரி தாத்தா! "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!" சொல்லிக் காட்டிச் சிரித்தான். "ழ" அழகாக வந்து விழுந்தது.

"சரி! வா வீட்டுக்குப் போவோம்" அவசரமாக எழுந்தார். எழுந்த வேகத்தில் தலை விர்ரென்று சுற்றியது. அந்த பிரம்மாண்டமான மழை மரத்தின் விரிந்த கிளைகள் ராட்டினக் குடை போல சுற்றின. அப்படியே தடுமாறி விழுந்தார்.

"தாத்தா! தாத்தா" என பரமா கத்தியது கேட்டது. 'ஐயோ இந்தக் குழந்தையை இப்படித் தனியாக விட்டுவிட்டுப் போகிறோமே' என்ற நினைப்பு அந்த நிலையிலும் அவரைத் தாக்கியது. அந்த நினைவோடு கண்களில் கரிய இருள் படர்ந்தது.


      • *** ***

"நான் அப்பவே சொன்னேன் தனியா போகாதீங்கன்னு! சொன்னா கேக்கிறிங்களா?" என்று ஜானகி அழுதாள்.

"சும்மா இரு ஜானகி! இப்ப என்ன நடந்து போச்சி? கொஞ்சம் அவசரமா எந்திரிச்சதில தலை சுத்தி மயக்கம் வந்திருச்சி! இது பெரிய விஷயமா? எல்லாருக்கும் நடக்கிறதுதானே!" என்றார்.

"இப்படியே நீங்க தண்ணிக்குள்ள விழுந்திருந்திங்கன்னா என்ன ஆயிருக்கும்?"

என்ன ஆகியிருக்கும்? உரிய நேரத்தில் ஆட்கள் வந்து தூக்காமல் இருந்தால் மூச்சுத் திணறி உயிர் போயிருக்கும். ஒன்றும் நட்டமில்லை. நோயில் அழுகிச் சாவதை விட இந்த இனிய ஏரியின் அரவணைப்பில் செத்து விடுவது எவ்வளவோ சுகம். எவ்வளவோ கௌரவம்.

பரமா "தாத்தா, தாத்தா" என்று அலறியதைக் கண்ட பக்கத்திலிருந்த இரண்டு மலாய்க்கார இளைஞர்கள் ஓடிவந்து அவரைத் தூக்கினார்கள். அவர்களில் ஒரு இளைஞனுக்கு முதலுதவி தெரிந்திருந்தது. இடுப்பில் சிலுவாரைத் தளர்த்தி விட்டு, கால்களைத் தூக்கி தலைக்கு ரத்தம் பாயப் பண்ணினான். மற்றவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தௌிக்க அவர் கண்களுக்குள் ஒளி பூத்து ஓரிரு நிமிடங்களில் நினைவு திரும்பியது.

அவர் கண்ணைத் திறந்ததும் அந்த இளைஞன் தன் பக்கத்தில் வைத்திருந்த குளிர்பான டின்னை அவரிடம் நீட்டினான். அவர் வாங்கி ஆழப் பருகி காய்ந்திருந்த தொண்டையை நனைத்துக் கொண்டார். நன்றி சொன்னார். தனக்கு ஒன்றுமில்லை. சிறு மயக்கம்தான் என்றார். மருண்டு நின்ற பரமாவை அணைத்துக் கொண்டார்.

வீடு எங்கே என்று கேட்டறிந்து அவரைக் கைத் தாங்கலாகப் பிடித்து வீடு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு அந்த இளைஞர்கள் விடை பெற்றுப் போனார்கள். அன்னம் அவர்களுக்கு பலமுறை நன்றி சொல்லி அனுப்பி வைத்தாள்.

ஜானகியின் அரற்றல் ஓயவில்லை. தான் தனியாக ஏரிக்குப் போனது தப்பு என்று சாதித்தாள். அவரால் அவளை எதிர்த்துப் பேச உடம்பில் சக்தியிருக்கவில்லை. இந்த நோய்க்கு பயந்து வீட்டுக்குள் அறைக்குள் படுக்கையில் சுருண்டு கிடந்து உலர்ந்த கீரைத் தண்டு போல வதங்கிப் போவதில் ஒரு பெருமையுமில்லை என்பதை அவளுக்கு அவரால் விளங்க வைக்க முடியவில்லை. அவளுடைய அணைப்பு அன்பு அணைப்பே ஆனாலும் அதற்குள் கட்டுண்டு தன் நடமாட்டச் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து விடுவதில் கௌரவமில்லை எனத் தனக்குள் எண்ணிக் கொண்டார்.

இந்தக் கலவரத்தில் தான் முதலில் செய்ய வேண்டும் என எண்ணிய காரியம் மறந்தே போய்விட்டது. நினைவு வந்தவுடன் சொன்னார்:

"போதும் ஜானகி. இப்ப இதக் கேளு. அக்கா நீயும் வா! இதக் கேளு!" என்றார்.

அவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்ட பிறகு பரமாவை நோக்கிச் சொன்னார்:

"பரமா, எங்கே நான் சொல்லிக் குடுத்தத பாட்டிக்குச் சொல்லிக் காட்டு பாக்கலாம்!" என்றார்.

"பாட்டி எனக்கு சாக்லேட் குடு" என்றான் பரமா.

சிரித்தார். "அது இல்ல கண்ணு! திருக்குறள். "அகர முதல!" என அடி எடுத்துக் கொடுத்தார்.

கொஞ்சம் தயங்கித் தயங்கி ஒப்புவித்தான்: "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!"

அன்னம் கை தட்டினாள். "அடேயப்பா! தமிழே பேசத் தெரியாத பிள்ள ஒரு மணி நேரத்தில திருக்குறளே ஒப்புவிக்குதே!" என்றாள்.

"எல்லாம் வளர்ப்பிலதான் இருக்கு அக்கா! பிள்ளைகள் பச்சைக் கொடிகள் மாதிரி. நாம் எப்படிப்பட்ட பந்தல் போட்டுப் படர விட்றோம்கிறதப் பொறுத்துத்தான் அவங்க வளர்ரதும் படர்ரதும் அமையும்!" என்றார்.

ஜானகி அவனை அணைத்து உச்சி மோந்தாள். தொடர்ந்து அவள் முகம் சூம்பியது. கண்களிலிருந்து கண்ணீர் கசியத் துடைத்து விட்டுக் கொண்டாள்.

"பாட்டி! ஐ ஏம் டயர்ட்!" என்றான் பரமா.

"வா கண்ணு! ஒடம்ப தொடச்சிட்டு சாப்பிட்டிட்டு படுக்கலாம்!" என்றாள்.

"ஐ டோன்ட் வான்ட் டு ஈட்!" என்றான். அவள் அவனைக் கையோடு குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்.

சுந்தரம் பெருமூச்சு விட்டார். "இந்தக் குழந்தய நம்மோடயே விட்டிருந்தா எப்படியோ வளர்த்து எடுத்திருக்கலாம். ஒரு பண்பில்லாத அப்பன், அக்கறையில்லாத தாய் இவங்க கையில இருந்து இப்ப எல்லாம் முடியப் போற காலத்தில இங்க வந்து சேந்திருக்கான் பாரு அக்கா!" என்றார்.

"என்ன பண்றது, தம்பி! அதனோட விதி அப்படி! " என்று மட்டும் சொன்னாள் அன்னம்.

டெலிபோன் அலறியது. எழுந்து சென்று எடுத்து "ஹலோ" என்றாள்.

எதிர்க் குரல் கேட்டு "ஆமா! அன்னம்தான் பேசிறது! ராதாவா?" என்றாள்.

"ஆமா ராதா இங்கதான் இருக்காங்க. பிரேம் இங்கதான் இருக்கான்! இதோ உங்கப்பாகிட்ட பேசு!" என்று போனை அவர் கையில் கொடுத்து "ராதா, லண்டன்ல இருந்து பேசுது!" என்றாள்.

கையில் வாங்கி "ஹலோ ராதா!" என்றார்.

"அப்பா! வீட்டுக்குப் போன் பண்ணினேன். பதில் இல்ல. ஒரு வேள அன்னம் அத்தை வீட்டுக்குத்தான் போயிருப்பீங்கன்னுதான் இங்க போன் பண்ணினேன்!" என்றாள்.

பரமாவின் நலம் பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தாள். அவன் நினைவாகவே இருப்பதாகச் சொன்னாள். பரமாவைக் கூப்பிட்டாள். அவன் குளியலறையிலிருந்து பாதி ஈரத்தில் ஓடிவந்தான். இருமிக் கொண்டே போனை வாங்கினான்.

குழைந்து குழைந்து இருவரும் பேசினார்கள்.

"தாத்தா ஃபெல் டவுன் நியர் த லேக்!" என்றான். "ஐ எம் சிக்" என்று இருமிக் காட்டினான். "ஐ டோன்ட் வாண்ட் டு கோ வித் அப்பா!" என்றான். "வென் ஆர் யூ கமிங் பேக்?" என்று கேட்ட போது அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

சுந்தரம் போனை வாங்கிக் கொண்டார். இவளுக்கு உண்மையச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என அவருக்குத் தோன்றியது. இவள் தாய். இவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

"ராதா! நான் சொல்றத அமைதியா கேளம்மா. பரமாவுக்கு கடுமையான நோய். இன்னும் சில சோதனைகள் பண்ணவேண்டியிருந்தாலும் பெரும்பாலும் உறுதியாயிடுச்சின்னு டாக்டர் சொல்லியிருக்காரு"

"என்னப்பா? என் டார்லிங்குக்கு என்ன? சீக்கிரம் சொல்லுங்க" என்று படபடத்தாள்.

"படபடக்காதேம்மா! படபடத்து அங்கிருந்த வாக்கில டெலிபோன்ல அழுது பிரயோஜனமில்ல! அமைதியா கேட்டுக்க!"

"சரி சொல்லுங்க!"

"பரமாவுக்கு லியுகேமியாவாம். கொஞ்சம் முத்திப்போன நெலமதான்னு டாக்டருங்க சொல்றாங்க."

"லியூகேமியாவா?" சொல் அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது. "அப்பா! என்ன சொல்றிங்க? நல்லா இருந்த பிள்ளைக்கு எப்படி வரும்...?"

"நல்லா இருக்கிறதா நீ நெனைச்சா போதுமா அம்மா! உனக்கும் உன் புருஷனுக்கும் இடையில நடந்த சண்டையில குழந்தைக்கு உள்ளேயே வளர்ர நோய கவனிக்க நேரமில்லாம போச்சி...!"

விக்கினாள். டெலிபோன் அமைதியானது. அவரும் அமைதியாக இருந்தார். பின் பேசினாள்.

"உறுதியா அப்பா?"

மீண்டும் அதே கேள்விகள். அதே வழக்கமான சந்தேகங்கள். அப்படி இருக்க முடியாது என்ற பிடிவாதம்.

"இன்னும் ஒண்ணு ரெண்டு டெஸ்ட் இருக்கு, ஆனா, அப்படித்தாம்மா!"

"ரொம்ப வலியில இருக்கிறானாப்பா? இப்ப கூட நல்லாத்தானே பேசினான். கொஞ்சம் இருமினான். அவ்வளவுதான?"

"ரொம்ப சோர்ந்திருக்காம்மா. சாப்பாடு கொறஞ்சு போயி ரொம்ப மெலிஞ்சிருக்கான். உள்ளுக்குள்ள அவனுக்குள்ள வேதனைய சொல்லத் தெரியுமா பிள்ளைக்கு...?"

"அப்பா! நான் இப்பவே புறப்பட ஏற்பாடு பண்றேன். அவனுக்கு என்ன ட்ரிட்மன்ட் கொடுக்க முடியுமோ அத ஏற்பாடு பண்ணிடுங்க. பணம் நான் கொடுக்கிறேம்பா. அவனுக்காக இன்சூரன்ஸ்கூட எடுத்து வச்சிருக்கிறேன்"

"எங்களால முடிஞ்ச எல்லாம் செய்யிறோம்மா. நீ சீக்கிரமா புறப்பட்டு வா!" என்றார்.

"அப்பா! என் பிள்ளைய பாத்துக்குங்க! உங்களதான் மல போல நம்பியிருக்கேன்!" அழுதாள்.

'இந்த மலை உள்ளுக்குள் புரையோடித் தானும் சரிந்து விழக் காத்திருக்கும் அந்தக் கதை இப்போது உனக்கு வேண்டாம் என் அன்பு மகளே!' என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

"அப்பா!" மீண்டும் விம்மினாள். "அப்பா! அவருக்கு, சிவமணிக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.

"இல்லம்மா! சொல்ற சந்தர்ப்பம் இன்னும் வரல. எங்களுக்கே ரெண்டு நாளைக்கு முந்திதான் தெரிஞ்சது. அதோட டாக்டர் வர்ர வாரம்தான் கடைசி சோதனைய உறுதிப் படுத்திறதா சொல்லியிருக்காரு. அதத் தெரிஞ்சிக்கிட்டு..."

"வேண்டாம்பா! சொல்லவே வேணாம். அந்த அரக்கனுக்கு சொல்ல வேணாம்!"

"ராதா! அது சரியில்லம்மா. உனக்கு அவன் அரக்கனா இருக்கலாம். ஆனா இந்தப் பிள்ளைக்கு தகப்பன் இல்லியா? எப்படிம்மா மறைக்க முடியும்?"

"அப்பா! அவன் கிட்ட சொல்லாதீங்க! என் பிள்ளய அவன் கிட்ட குடுத்திறாதீங்க! நான் வர்ர வரைக்கும் அவன் அங்கயே உங்ககிட்ட இருக்கட்டும். அவன பினாங்கிலேயே வச்சி சிகிச்சை பண்ணுங்க. எவ்வளவானாலும் நான் கொடுக்கிறேம்பா! நான் உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேம்பா!" என்று மீண்டும் பெரிதாக அழுதாள்.

"போதும் ராதா! அமைதியா இரு. எங்களால முடிஞ்சத செய்யிறோம்!" என்றார்.

மீண்டும் பரமாவை அழைத்துப் பேசினாள். அவன் ஏதேதோ பேசி "டோன்ட் கிரை அம்மா!" எனத் தானும் அழ ஆரம்பித்தான்.

சுந்தரம் அவனிடமிருந்து டெலிபோனை மெதுவாகப் பறித்து ராதாவுக்குச் சமாதானம் சொல்லி வைத்தார். ஜானகியை "பேசுகிறாயா" எனச் சைகையால் கேட்டபோது மாட்டேன் எனக் கண்டிப்பாகத் தலையாட்டி மறுத்துவிட்டாள்.

அன்று இரவு எவ்வளவு வற்புறுத்தியும் பரமா சாப்பிட மறுத்துவிட்டான். அன்னம் கொஞ்சம் இனிப்பான ஓட்ஸ் கலந்து தண்ணீராகக் கொடுத்ததை சிரமப்பட்டுக் குடித்தான். இருமிக் கொண்டே இருந்தான்.

முன்னிரவில் டெலிவிஷன் முன்னால் குடும்பம் முடங்கியிருந்த வேளையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சுந்தரத்தின் மடியில் வந்து தலைவைத்துப் படுத்துக் கொண்டான். அவனைத் அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவாறிருந்தார் சுந்தரம். அரைத் தூக்கத்தில் இருந்தவன் திடீரென தலை தூக்கிக் கேட்டான்:

"அகர முதல எழுத்தெல்லாம்... தென் வாட் தாத்தா?"

"ஆதி பகவன் முதற்றே..."

"உலகு" என முடித்தான் பரமா. அவரைப் பார்த்துச் சிரித்தான். தலை சாய்த்துக் கொண்டான் தூங்கிப் போனான்.

அவன் பேச்சை மனதுக்குள் திரும்பத் திரும்ப அசை போட்டார். அந்த மழலையை எண்ணிப் பெருமைப் பட்டார். அவனுக்கு இந்தக் குறளைச் சொல்லிக் கொடுத்து விட்டதில் தான் ஏதோ மலையளவு சாதித்ததாக எண்ணிக் கொண்டார். அதைச் சரியாகப் பாடம் செய்து அவன் ஒப்புவித்துவிட்டதில் தன் நோய்த் துன்பங்கள் பாதி கரைந்து போனதாக அவருக்குத் தோன்றியது.

"சொல்லு மழலையிலே - கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்"

பரமாவின் தகப்பன் மூர்க்கமாக ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை அவர் அப்போது அறிந்திருக்க ஞாயமில்லைதான்.