உள்ளடக்கத்துக்குச் செல்

அந்திம காலம்/அந்திம காலம் - 12

விக்கிமூலம் இலிருந்து

இரவெல்லாம் புரண்டு கிடந்து, விட்டுவிட்டுக் கண் விழித்திருந்தும் கூட நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. ஜானகியும் இரவெல்லாம் புரண்டு கொண்டிருந்தாலும் அந்த அதிகாலையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாறே ஜன்னல் பக்கம் தலை திருப்பிப் பார்த்தார். தூரத்து சாலை விளக்கின் மங்கிய மஞ்சள் வௌிச்சம் தவிர காலையின் அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. மேற்கு நோக்கிய தன்னறைக்கு சூரிய வௌிச்சம் தாமதமாகத்தான் வரும் என்றாலும் சாதாரண நாட்களில் வானம் வெளுக்கப் போகும் அடையாளங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சில அதிகாலை வேளைகளில் வானம் தௌிவாக இருந்தால் மறையவிருக்கும் சந்திர ஒளி ஜன்னல் வழியே தெரியும். இளமையில் சீக்கிரம் விழிப்பு வந்து விட்டால் அந்த வௌிச்சம் தெரியும் போது படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலருகே வந்து சந்திரனை உற்றுப் பார்க்காமல் இருந்ததில்லை. அப்போது அதில் இருக்கும் மயக்கம் - காதல் - சொல்லி விளக்க வைக்க முடியாததுதான். ஆனால் இப்போது அந்த ஒளியைப் பார்க்கும் போது இதயத்தின் ஒரு பக்கத்தில் அந்த மோகனம் புகையாகப் படர்ந்தாலும், மூளை குறுக்கிட்டு "இந்த ஒளி வெறும் பிரதிபலிப்புத்தான்; இது ஒரு செத்த, வறண்ட கோளம்" என்று சொல்லி அந்தப் புகையைக் கலைத்து வாழ்க்கையை வறட்சி ஆக்குகிறது.

படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். முன்பு இப்படி எழுந்து உட்கார்ந்ததும் உடம்பை முறித்து நரம்புகளைத் தளரப் படுத்தும் பழக்கம் இருந்தது. இப்போது முடியாது. உடம்பின் எந்தப் பாகத்தையும் யோசித்து அசைக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் ஏதாவது ஒரு புண்பட்ட தசையில் வலி வெடித்து முகம் சுளித்துக் கழுத்து வலித்து அவதிப்பட வேண்டிவரும்.

ஞாயிறு முன்னிரவு வாக்கில் தைப்பிங்கிலிருந்து வீடு வந்து சேர்ந்த போது அனைவருமே களைத்துச் சோர்ந்திருந்தார்கள். பரமாவுக்கு உடம்பு அபாயகரமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. தைப்பிங் டாக்டர் ஒருவர் கொடுத்திருந்த தற்காலிக நிவாரணி மாத்திரைகளில் அவன் காய்ச்சல் போவதும் வருவதுமாக இருந்தது. முனகிக் கொண்டே இருந்தான். மறுநாள் காலையில் ஸ்பெஷலிஸ்ட் சென்டரில் அவனுக்கு டாக்டரைச் சந்திக்கும் முறை இருந்ததால் அன்றிரவு அவனுக்கு மருத்துவ உதவியை அவசரமாகத் தேடுவது தேவையில்லையென அனைவரும் பொறுத்திருந்தார்கள். அன்று இரவு அன்னம் அக்காள் அவனுடனேயே படுத்துக் கொண்டாள்.

வீட்டிலிருந்த இரண்டு ஆண் நோயாளிகளுக்கு இரண்டு பொறுப்பான பெண்மணிகளையும் இப்படி நியமித்துக் கொடுத்திருப்பது, ஆண்டவன் திருவிளையாடல்கள் என்று சொல்கிறார்களே, அவற்றில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என, வயிற்றில் வலி குறைந்து எண்ணங்கள் அலைய ஆரம்பித்திருந்த நேரத்தில் சுந்தரம் நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

அடிமேலடி எடுத்து வைத்து குளியலறை சென்று முகம் கழுவித் துடைத்து மெதுவாக சமயலறைக்குச் சென்றார். விளக்கைப் போட்டு மின்சாரக் கேத்தலில் தண்ணீர் பிடித்துக் கொதிக்க வைத்து ஒரு கப் காப்பி கலக்கிக் கொண்டார். ஆவி பறக்கும் காப்பியுடன் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார்.

தான் தைப்பிங் போயிருந்த வெள்ளியும் சனியும் வீட்டுக்கு வந்திருந்த கடிதங்கள் பிரிக்கப் படாமல் கிடந்தன. காப்பியை இரண்டு மிடறுகள் உறிஞ்சி பக்கத்தில் வைத்து விட்டுக் கடிதங்களை எடுத்துக் உறையைப் பார்த்தார். பொருளகத்தில் இருந்து சில கடிதங்கள் வந்திருந்தன. தனது வைப்புத் தொகைகள் பழுத்து வட்டி சேர்க்கப் பட்டிருப்பதை அறிவிக்கும் கடிதங்களாக இருக்க வேண்டும். பிரிக்காமலேயே போட்டார்.

பினாங்கு நகராண்மைக் கழகத்திலிருந்து வந்த கடிதம் வீட்டு வரியாக இருக்க வேண்டும். மெதுவாகப் பிரிக்கலாம்.

வசந்தனுடைய கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. போன ஆண்டு இறுதியில் அவன் தோல்வியடைந்த ஒரு பரிட்சைத் தாளுக்கு மறு அமர்வில் அவன் தேர்ச்சி அடைந்து விட்டதாகவும், புதிய ஆண்டுக்குப் பணம் கட்ட வேண்டும் என எழுதியிருந்தான்.

கட்டிவிடலாம். அவருடைய நிதி நிலைமை நன்றாக இருந்தது. போதுமான பணம் சேர்த்து வைத்திருந்தார். அன்னம் அக்காளைப் போலவே செலவைக் கட்டுப் படுத்தி வரவில் ஒரு பகுதியைச் சேமித்து சொத்தாகவும் வைப்புத் தொகையாகவும் வைத்திருந்தார். அப்படி இருந்ததால்தான் வசந்தனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்ப முடிந்தது. ராதாவுக்குச் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் கல்யாணம் செய்து வைக்க முடிந்தது.

அவருக்கு இப்போது வந்துள்ள நோய்க்குத் தானாக மருத்துவம் பார்த்துக் கொள்வதென்றால் அவருடைய சேமிப்பு பூராவும் கரைந்திருக்கும். ஆனால் அரசாங்க ஓய்வூதியம் பெறுபவராதலால் மருத்துவச் செலவை அனேகமாக அரசாங்கமே பூராவுமாக ஏற்றுக் கொண்டிருந்தது. அதை நினைத்து நன்றியுடனும் நிம்மதியாகவும் ஒரு பெருமூச்சு விட்டு, மீண்டும் காப்பியை எடுத்துப் பருகினார்.

கிரெடிட் கார்டு கம்பெனியிலிருந்து பில் வந்திருந்தது. அதிலும் கடன் ஒன்றுமில்லை. எல்லாம் கட்டி முடித்துவிட்டார். ஏதாவது ஆடம்பரப் பொருள்களை 'அதைவாங்கினால் இது இனாம்' என்ற ரீதியில் விளம்பரங்கள் அனுப்பியிருப்பார்கள். இந்தக் கார்டு நிறுவனத்துக்கு எழுதிக் கார்டை ரத்துச் செய்து தொலைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

Pemadam என்ற முத்திரையுடன் போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த சங்கத்தில் அவர் நீண்ட நாள் உறுப்பினர். செயலவையிலும் பல காலம் இருந்திருக்கிறார். தலைமை ஆசிரியராக இருந்த போது மாணவர்கள் சம்பந்தப் பட்ட போதைப் பொருள் கருத்தரங்கங்களில் பல முறை ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வாசித்திருக்கிறார். பல அனைத்துலகக் கருத்தரங்கங்களில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொண்டிருக்கிறார். ஓய்வு பெற்ற பின்னும் தொடர்ந்து அந்தக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்.

கடிதத்தைப் பிரித்தார். இன்னும் மூன்று மாதங்களில் கனடாவில் நடைபெறவிருக்கும் "பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள்" என்ற கருப்பொருளிலான மாநாடு பற்றிய விவரங்கள் இருந்தன. அந்த மாநாட்டில் மலேசியாவின் சார்பில் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பிக்க முடியுமா என அதன் செயலாளர் திரு சுலைமான் செலாட் கேட்டு எழுதியிருந்தார்.

'போகலாமா' என ஒரு நப்பாசை எழுந்தது. கட்டுரை எழுதுவது சிரமமில்லை. ஏற்கனவே எழுதிய கட்டுரைகளுக்கான தகவல்கள் இருந்தன. புதிதாக மலேசியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், புள்ளி விவரங்கள் குறித்து வைத்திருந்தார். அதோடு கானடா நாட்டுக்கு அவர் இதுவரை போனதில்லை. போகலாம். புதிய இடங்களைப் பார்க்கலாம். புதிய மனிதர்களை, அறிஞர்களைச் சந்திக்கலாம். இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் எந்தக் கூட்டத்திலும் தங்களுக்கே உரிய சுய நம்பிக்கையுடன் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ஜப்பானிய கொரிய ஆய்வாளர்கள் தயங்கித் தயங்கி சரளம் இல்லாத ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளிலும் முடிவுகளிலும் ஆழம் இருக்கும். எல்லாம் மீண்டும் பார்த்து கேட்டு அனுபவிக்க மனதிற்கு உற்சாகமாக இருக்கும்.

'ஆனால், இஞ்சே சுலைமான், அது வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே கேள்வியாக இருக்கிறதே!' என்று நினைத்துக் கொண்டார். இஞ்சே சுலைமானுக்குத் தன் நோயின் விவரங்களைத் தெரிவிக்காமல் இந்த மாநாட்டுக்குத் தாம் போக முடியாததற்கு வேறு காரணங்கள் கற்பித்து எழுதிப் போடவேண்டும் என முடிவு செய்து கொண்டார். அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் வேறு ஆளைத் தயார் செய்ய முடியும்.

கப்பை எடுத்து காப்பியை உறிஞ்ச முற்பட்ட போது அது முடிந்துவிட்டிருப்பது தெரிந்தது. கடிதங்களை மேசையில் வைத்து விட்டு வௌியே வந்தார். வௌி வாசல் கதவைத் திறந்த போது குளிர் சில்லென வீசியது.

அவர் வௌியே வரமாட்டாரா என்று காத்துக் கிடந்த ஜிம்மி வழக்கம் போல அவர் அருகே வந்து நின்று வாய் பிளந்து வாலாட்டி காலை நக்கி ஒட்டிக் கொண்டு நின்றது. குனிந்து அதன் தலையைச் சொறிந்து விட்டார். ஒரு நாளாவது இந்த நாய் இந்த விடியற்காலை வேளையில் என் தூக்கத்தைக் கெடுக்கிறீர்களே என்று மனிதர்களை கோபித்துக் கொண்டிருக்குமா என்று நினைத்து வியந்தார். ஜிம்மி அவருடைய முகத்தை நக்க முயன்று தோற்றது.

வௌியே கொஞ்ச நேரம் போய் நடக்கலாமா என யோசித்தார். சாலையில் விளக்குக் கம்பங்களில் சிறு தூசுப் படலத்தை ஒளிப்படுத்தியவாறு விளக்குகள் அமைதியாக எரிந்து கொண்டிருந்தன. தெய்வங்களின் தலைக்கு மேல் ஓவியர்கள் வரையும் ஒளிவட்டங்கள் போன்று அவை தோன்றின. அந்தக் காட்சி கவர்ச்சியாக இருந்தது.

அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் இல்லை. நடக்க வசதியான வேளைதான். ஆனால் உடம்பு இடம் கொடுக்குமா? நேற்று தைப்பிங் ஏரிப் பூங்காவில் பரமாவுடன் பேசி அவசரமாக எழுந்து மயக்கம் போட்டு விழுந்த நினைவுகள் வந்து அவரை அச்சுறுத்தின.

இந்த மனித நடமாட்டமற்ற வேளையில் நடக்கப் போய் எங்காவது தடுக்கி விழுந்து மண்டையைப் போட்டுவிட்டால்...? பாக்கெட்டில் அடையாளக் கார்டு கூட இல்லாத நிலையில், வடூப்போக்கர்கள் கொடுத்த தகவலில் ஆம்புலன்ஸ் வந்து அனாதைப் பிணமென்று தூக்கிப் போய் பொது மருத்துவ மனைப் பிணக் கொட்டகையில் போட்டு...

"தனியா எங்கியும் போகாதிங்கன்னு தலையால அடிச்சிக்கிட்டன, கேட்டீங்களா...!" என்று ஜானகி தன் பிணத்தின் முன் அலறி அழுகின்ற அவலமான காட்சி ஒன்று மனதுக்குள் வந்தது. சோகமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் வந்தது.

இப்படியெல்லாம் யோசித்து இயலாமையிலும் தன்னிரக்கத்திலும் அவ்வப்போது ஆழ்ந்து விடுவது அவருக்கே வெட்கமாக இருந்தது. இந்த இயலாமையை மனதிலிருந்து ஓட்டுவதற்கு ஒரே வழி எதையும் முயன்று பார்த்து விடுவதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.

உள்ளே நுழைந்து தம் சட்டையை அணிந்து கொண்டு முன் கேட்டை கொஞ்சமாகத் திறந்து ஜிம்மி திமிறி ஓடுவதற்குள் அடைத்துவிட்டு சாலையில் இறங்கி நடந்தார். ஜிம்மி எரிச்சலில் ஒரு முறை குரைத்து விட்டு கேட்டைச் சுரண்டியது. அதை அலட்சியப் படுத்திவிட்டு நடந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகள் சுத்தமாக அடைத்துக் கிடந்தன. பெரும்பாலான வீடுகளில் கார் போர்ச்சின் விளக்குகள் எரிந்தவாறிருந்தன. மனித நடமாட்டம் எதையும் காணோம்.

காலைக் குளிர் உடம்பைத் துளைத்தது. அந்த அனுபவம் இனிமையாகத்தான் இருந்தது. இன்னும் இந்த உடம்பில் இதமான குளிரை உணரவும், அந்த இன்பத்தில் உள்ளம் கதகதப்படையவும் போதிய சொரணை இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விடியற்காலை வேளையின் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி உடம்பிலும் உள்ளவரை தன் வாழ்க்கை நோயில் மரத்துப் போகவில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டு உற்சாகப் படுத்தியது.

நள்ளிரவு வேளை பேய்களின் வேளை என்றால் இந்த விடியற்காலை வேளை தெய்வங்களின் வேளையா? எங்கே அவை? வானத்தை அண்ணாந்து பார்த்தார். தௌிவாக இருந்தது. நட்சத்திரங்கள் சில மின்னின. குறைவான மேகங்கள் இருந்தன. தெய்வங்கள் சஞ்சரிப்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை.

அந்தத் தேடலே அபத்தம் எனத் தோன்றியது. என்னைப் போன்ற மனிதர்கள் பார்க்க விரும்பிய போதெல்லாம் வந்து குஷிப்படுத்துவதற்காகவா தெய்வங்கள் இருக்கின்றன? தெய்வத்தின் தேடலில் முயற்சியும் வருத்தமும் துயரமும் உருக்கமும் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத பக்தி இருக்க வேண்டும். "வருமா வராதா, இருக்கிறதா இல்லையா" என்ற சந்தேகம் கலந்து ஒரு வேடிக்கையாக தெய்வத்தைப் பார்க்க நினைக்கும் தன்னைப் போன்றோருக்கு அது நிறைவேறாது.

"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா, இன்புருகு சிந்தை இடுதிரியாய்" இருக்க வேண்டும். அப்டிப்பட்ட சிந்தை எப்படி எப்போது தோன்றும் என்று தெரியவில்லை. நன்றாயிருந்த நாட்களிலும் சந்தேகப் பூச்சு கலந்த நம்பிக்கைதான் இருந்தது. நோயுற்ற நாட்களில் பயம் அதிகமானாலும் சந்தேகம் விடவில்லை.

வெண்கலத் தாம்பாளத்தை புளிபோட்டுக் கறையில்லாமல் தேய்த்து வைத்தால் அதில் சூரிய பிம்பம் தௌிவாகத் தெரிவது போல் கறையில்லாத மனத்தில் இறைவன் பிரதிபலிப்பான் என இராம கிருஷ்ணர் கூறியிருக்கிறார். என் மனதில் கறை துருவாக வளர்ந்திருக்கிறது. எப்படி வருவான் இறைவன்?

திடீரென "ஹம்மென்று" ஒரு ஒலி அசரீரியாக ரீங்காரித்தது. அந்தப் பிரதேசம் முழுவதையும் நிறைத்தது. எங்கிருந்து வருகிறது? என்ன ஒலி? அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. பின்னர் ஒரு சிறிய குரல் ஒரு பெரிய ஒலி பெருக்கியில் முனுமுனுப்பது கேட்டது: "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..." தொடர்ந்து கம்பீரமான ஒலியில் பாங்கு வந்தது: "அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்...."

முஸ்லிம் பெருமக்களின் காலைத் தொழுகைக்கு அழைப்பு கம்பீரமாக வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரத்தில் பக்கத்தில் உள்ள கோயில்களிலிருந்து மணியோசையும் நாதஸ்வர ஓசையும் கேட்கும்.

இந்த மண் பக்தி மண். இது உலகின் உன்னதமான சமயங்கள் சமாதான சகவாழ்வு நடத்துகின்ற மண். இஸ்லாத்தின் பாங்கு ஒலியும், கிறிஸ்துவ மாதாகோவில் மணியோசையும், இந்துக்களின் கோயில் நாதசுரமும், பௌத்த பிக்குகளின் மந்திரங்களும், சீனர் கோயில்களிலிருந்து மேளமும் இரத்தப் பெருக்கை ஏற்படுத்தாமல் பக்திப் பெருக்கை மட்டுமே ஏற்படுத்துகின்ற பூமி. நினைக்கப் பெருமிதமாக இருந்தது. இந்த அழைப்புக்களுக்கெல்லாம் தான் கொஞ்சம் அந்நியமானவனாக இருந்தாலும் அந்தப் பெருமிதம் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று நினைத்துக் கொண்டார்.

மனம் உற்சாகமாக இருந்தாலும் உடல் களைக்க ஆரம்பித்திருந்து. கால்கள் கடுத்தன. இது மோசமாவதற்குள் திரும்பிவிட வேண்டும் என்று திரும்பி நடந்தார். கூடக் கூடப் போனால் அரை கிலோ மீட்டர் நடந்திருப்பார். இவ்வளவுதானா?

அரை மராத்தோன் ஓடியிருக்கிறார். பத்து கிலோமீட்டர் ஜோகிங் போயிருக்கிறார். காற்பந்து நடுவராக இருந்து ஆட்டக்காரர்களோடு திடல் முழுதும் சுற்றி ஓடியிருக்கிறார். இப்போது அரை கிலோ மீட்டர் நடப்பதற்கே இளைக்கிறது.

டாக்டர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? எந்த மருந்துக்கும் தன் புற்று நோய் செல்கள் மசியவில்லை என டாக்டர் லிம் சொல்லிவிட்டார். இனி டாக்டர் ராம்லி - என் பழைய மாணவர் - என் பழைய பகைவர் - எனக்கு சிகிச்சை ஆரம்பிக்கப் போகிறார். சிகிச்சையா அல்லது மெதுவான வௌியே தெரிந்து கொள்ள முடியாத கொலையா? தெரியவில்லை. ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சாவு எப்படியும் வரப் போகிறது. டாக்டர் ராம்லி என்னைக் கொல்ல முடிவு செய்து விட்டால் அதுவும் நல்லதுதான். ராம்லி, நீங்கள் என்னைக் கொல்லப் போவது எனக்கு ஒரு தண்டனை அல்ல. என் நோயிலிருந்த எனக்கு விடுதலை அளிக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். கொன்று விடுங்கள். நான் இதைக் கருணைக் கொலை என்றே எடுத்துக் கொள்ளுகிறேன்.

ஆனால் பரமாவுக்கு வாழ்வு வேண்டும். அவன் முகை. அவன் மலராக வேண்டும். காயாகிப் பழமாக வேண்டும். அவனுக்குத் தமிழ் சொல்லித் தர எனக்கும் நேரம் வேண்டும். அவன் வாயால் திருக்குறள், தேவாரம், திருமுருகாற்றுப்படை சொல்வதை நான் கேட்க வேண்டும். ஆனால் அவை கூட இப்போது முக்கியமில்லை. இந்த உலகத்தில் எத்தனை இன்பங்கள் இருக்கின்றன! அவற்றில் ஒரு சிறு பகுதியைக்கூடப் பார்த்திராத அவனை சாவு எடுத்துக் கொள்ளுவது எத்தனை கொடுமை?

நான் பலவற்றைப் பார்த்து விட்டேன்! நான் தேய்ந்த நாணயம். அவன் பிழைப்பதற்கு என் சாவு எப்படியாவது பயன்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? டாக்டர் லிம், டாக்டர் ராம்லி! மாற்று உயிர் பொருத்தும் அளவுக்கு உங்கள் மருத்துவம் வளர்ந்திருக்கிறதா? அந்தத் திசையில் பரிசோதனைகள் நடக்கின்றனவா? இங்கே நான் ஒருத்தன் அந்தப் பரிசோதனைக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

வீடு நெருங்கியபோது உடல் கொஞ்சம் நடுங்கியது. கால்களில் கடுப்பு அதிகமாகியிருந்தது. தலை கொஞ்சமாகச் சுற்றியது. ஒரு விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நின்று இளைப்பாறினார். இந்தக் காட்சியை ஒரு ஓவியன் பார்த்தால் அழகிய ஓவியமாக்குவான் என நினைத்துக் கொண்டார். ஒரு ஓங்கிய விளக்குக் கம்பம். அதிலிருந்து ஒரு கோமாளியின் கூரான தொப்பியைப் போல் விழும் ஒளி. அதன் அடியில் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு ஒடுங்கி நிற்கும் நோயாளி. தன்னைப் போல் நிமிர்ந்து நிற்காமல் ஆளை கூன் வளைந்தவனாய் வளைத்துப் போட்டால் நோய் உருவகம் இன்னும் நன்றாக வரும். இலேசான எண்ணெய் வர்ணங்களைக் கலந்து தூரிகையால் வரைந்து "வௌிச்சத்தில் நோய்" என மர்மமான தலைப்பிடலாம். கண்காட்சியில் வைத்தால் பரிசு கூடக் கிடைக்கும். தனக்குள் சிரித்துக் கொண்டார்.

உடம்பு கொஞ்சம் தெம்பானது. தொடர்ந்து நடந்து வீட்டை அடைந்தார். ஜிம்மி கேட்டிற்குப் பின்னிருந்து மகிழ்ச்சியில் குதித்துக் குரைத்தது. வீட்டில் யாரும் இன்னும் எழவில்லை எனத் தெரிந்தது. இந்தக் காலை நடையை தனி ஒருவனாக இத்தனை ரகசியமாக வெற்றிகரமாக முடித்த சாதனையை எண்ணி மகிழ்ந்தார்.

வீட்டின் கதவைத் திறக்கு முன்னரே டெலிபோன் மணி அலறியது. காலை ஆறு மணிக்கு யார் கூப்பிடுகிறார்கள்? நண்பன் ராமாவாக இருக்குமா? இவ்வளவு சீக்கிரம் கூப்பிடக் காரணமில்லையே! ராதாவாக இருக்கலாம். பரமாவின் நோயைக் கேட்டதிலிருந்து போன இரு நாட்களில் மூன்று முறை போன் செய்து அழுதுவிட்டாள். உடனே புறப்பட விரும்பினாலும் எந்த விமானத்திலும் இடம் கிடைக்கவில்லை என்றும் வியாழக்கிழமை விமானத்தில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாகவும் கூறியிருந்தாள். அவளுக்கு டிக்கட் கிடைத்து விட்டதோ? வருகிறேன் என்று போன் செய்கிறாளோ?

போனை எடுக்க அவசரமாக நடக்க முயன்ற போது தலை கொஞ்சம் கிர்ரென்று சுற்றி நின்றது. இடது கால் தொடைத் தசையில் இறுக்கமும் வலியும் தோன்றின. சில விநாடிகள் நின்று இளைப்பாறினார். போன் தொடர்ந்து அலறியது.

போன் சத்தத்தில் ஜானகி எழுந்து வௌியே வந்து விட்டாள். அவளே போய் அவசரமாகப் போனை எடுத்து தூக்கம் இன்னும் கலையாத குரலில் "ஹலோ" என்றாள்.

பதிலைக் கேட்டு அவள் முகம் திடுக்கிட்டது. அவர் இருக்கும் பக்கம் போனை நீட்டினாள். "சிவமணி! உங்ககிட்ட பேசணுமாம்!" என்றாள் ரகசியமான குரலில்.

சிவமணியா? இந்த நேரத்திலா? கொஞ்சம் நொண்டியவாறு போய் போனை வாங்கிக் கொண்டார். "ஹலோ" என்றார்.

"நேத்தும் முந்தா நாளும் எத்தனியோ தடவ போன் பண்ணினேன், ஏன் யாருமே போன எடுக்கல?" என்று கேட்டான். அந்தக் குரலில் வழக்கமான முரட்டுத் தனம் இருந்தது.

"சிவமணியா? நேத்து குடும்பத்தோட தைப்பிங் போயிருந்தோம்பா!" என்றார்.

"ஏன், என் மகனைக் கொண்டி அங்க ஒளிச்சு வைக்கப் பார்க்கிறிங்களா?" என்றான்.

வீண் வம்பு வளர்க்கிறான் எனத் தோன்றியது. "ஒளிச்சு வைக்க வேண்டிய அவசியம் என்னப்பா வந்தது இப்ப?" என்றார்.

"அந்த பிச் சொல்லியிருப்பா! பிள்ளய கொண்டி எங்கயாச்சும் ஒளிச்சி வச்சிருங்கன்னு...!" என்றான்.

அவன் என்னதான் முரட்டுத் தனமாகவும் கிண்டலாகவும் பேசினாலும் அவனிடம் பரமாவின் நோயைப் பற்றிச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் இது என்று நினைத்தார். ராதா எவ்வளவுதான் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும் பெற்ற அப்பனிடமிருந்து மறைத்து வைப்பது முறையல்ல என்று எண்ணினார்.

"இல்ல சிவமணி... இதக் கேளு..."

"இதப் பாருங்க!" என்று இடைமறித்து வெட்டினான். "ஒரு முக்கியமான சமாசாரம் சொல்றதுக்காகத்தான் ரெண்டு நாளா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்."

"நானும் முக்கியமான செய்திதான் சொல்லணும்"

"உங்கக் கதையெல்லாம் அப்புறம் வச்சிக்குங்க. இன்னக்கி ராத்திரி நான் அங்க பினேங்குக்கு வர்ரேன். பரமாவோட துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க! அவனக் கையோட அழச்சிட்டு வரப் போறேன்!"

அதிர்ச்சியடைந்தார். மூன்று வாரம் ஒரு பேச்சும் பேசாமல் பிள்ளையைப் பற்றி ஒன்றும் விசாரிக்காமல் கிடந்தவன் இன்றைக்கு இப்படி உத்தரவிடுகிறான்.

"வேணாம் சிவமணி. அவன உன்னால ஒண்டியா வச்சி பாத்துக்க முடியாது!"

"என் அம்மா கூட வர்ராங்க! அவங்க பாத்துக்குவாங்க!" என்றான்.

அவருக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும். ராதாவையும் தன் குடும்பத்தையும் பழிவாங்கும் ஒரு வஞ்சமாகத்தான் இதைச் செய்யத் தூண்டியிருக்கிறாளே தவிர குழந்தை மேல் உள்ள பாசத்தினால் அல்ல!

"சிவமணி! நான் சொல்றதக் கேளு...!"

"முடியாது. நான் அன்னைக்கு வந்து கேட்டப்ப பையன் மனச மாத்தி அவன வரவுடாம பண்ணிட்டிக்க. அவன் என் மகன். எங்கம்மா கிட்ட இருக்கட்டும். உங்க சகவாசமே எனக்கு வேணாம்!" என்று கத்தினான்.

அவனுடைய தொனியும் தன்னை எடுத்தெறிந்து பேசிய விதமும் அவருடைய மனதில் ஆத்திர தீக் கொழுந்துகளைக் கிளப்பின. ஆனால் இது ஆத்திரப் படும் நேரம் இல்லை. ஒரு குழந்தையின் வாழ்வு இங்கே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆத்திரத்தை விழுங்கி விட்டு மெதுவாகக் கனிவாகப் பேசினார்: "சிவமணி அவனுக்கு ஒடம்பு ரொம்ப சரியில்லப்பா! ரொம்ப கடுமையான நோய்..."

"அதல்லாம் எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும். இங்க டாக்டர் இல்லியா? ஆஸ்பத்திரி இல்லியா? நான் ராத்திரிக்கு வருவேன் பையன ரெடியா வச்சிருங்க! எதாச்சும் கோளாறு பண்ணுனிங்க, நான் அடிதடில எறங்கிடுவேன்! விஷயம் போலிஸ் வரைக்கும் போயிடும் ஆமா!" போனைப் படேரென்று அறைந்து வைத்தான்.

கொஞ்சம் நடுங்கிய கையுடன் போனை வைத்தார். என்ன பிறவி இவன்? குழந்தைக்கு நோயென்றால் என்ன நோய் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய அக்கறை கூட இல்லை. தன் பொருள் தனக்கு வேண்டும். கொடுக்காவிட்டால் அதைப் பிய்த்துப் பிய்த்துக் குதறிப் போடவும் தயாரான ராட்சசனாக இருந்தான்.

"என்னங்க சொல்றான்?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் ஜானகி.

"இன்னக்கி ராத்திரி அவங்க அம்மாவோட இங்க வந்து பரமாவ கையோட அழச்சிக்கிட்டுப் போகப் போறானாம் ஜானகி!"

ஜானகி "ஐயோ" எனத் தலையில் கைவைத்தாள். "இப்படி சீக்கா இருக்கிற பிள்ளையையா...?"

"அதச் சொல்லத்தான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்! நீ கேட்டுக்கிட்டுத்தான இருந்த! அவன் எனக்குப் பேசவே சந்தர்ப்பம் கொடுக்கிலியே!"

சோர்ந்து உட்கார்ந்தார். ஜானகியும் உட்கார்ந்து விட்டாள். பேச்சுக் குரல் கேட்டு அன்னமும் அறையிலிருந்து எழுந்து வந்தாள். விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவளும் கொஞ்ச நேரம் அயர்ந்து உட்கார்ந்து விட்டாள்.

"பரமா எப்படிக்கா?" என்று கேட்டார்.

"ராத்திரி முழுக்கக் காய்ச்சதான் தம்பி! ஒரு தடவ மாத்திர குடுத்தேன். விடிய காலையிலதான் கொஞ்சம் தூங்கிறான்!" என்றாள்.

"ஐ டோண்ட் வாண்ட் டு கோ!" என்று பரமா அன்று அழுத காட்சி நினைவுக்கு வந்தது. சுந்தரத்தின் வயிற்றுக்குள் என்னென்னவோ அமிலங்கள் எல்லாம் சுரந்தன. வயிற்றையும் நெஞ்சையும் திருகின.

கவலையில் தோய்ந்திருந்த அன்னம் திடீரெனத் தலை தூக்கிச் சொன்னாள்: "ஏன் தம்பி! இன்னக்கிக் காலயில டாக்டர் கிட்ட காட்டிட்டு நான் இவனத் தைப்பிங்கில கொண்டி கொஞ்ச நாள் வச்சிக்கிட்டுமா?"

சுந்தரம் தலையாட்டினார். "வேணாம் அக்கா! அத விட வேறு வினையே வேணாம். இப்ப ரெண்டு நாள் தைப்பிங்குக்கு நாம போனது தெரிஞ்சி "பிள்ளைய ஒளிச்சு வைக்கிறிங்களா?"ன்னு கேக்கிறான். இனி நாம் தெரிஞ்சே கொண்டி வச்சா, என்னையும் விட மாட்டான், உன்னயும் சும்மா விடமாட்டான்!"

அன்னம் ஆமோதித்து மௌனமாக இருந்தாள்.

பிறகு சுந்தரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பின்னர் சொன்னார். "அக்கா அவங்க ரெண்டு பேரும் வரட்டும். வந்தவுடன முடிஞ்ச வர சொல்லிப் பார்க்கலாம். கேக்கலைன்னா அவன்கிட்டயே பிள்ளய ஒப்படைச்சிருவோம்" என்றார்.

"என்ன பேச்சுப் பேசிறிங்க? பிள்ளய கொல்லப் போறிங்களா?" என்று ஜானகி சீறினாள். "ராதா எத்தன தடவ திருப்பித் திருப்பிச் சொன்னா பிள்ளய அவன்கிட்ட குடுக்காதீங்க, குடுக்காதீங்கன்னு!"

"அவ சொல்றது சுலபம் ஜானகி! ஆனா பிள்ளைக்கு உரிமை உள்ளவன் தகப்பன். அவன்கிட்ட இருந்து பிள்ளய பிரிக்கிறது சட்டப்படி குற்றம்" என்றார்.

"உங்க சட்டத்துக்குத் தெரியுமா அவன் எவ்வளவு கொடுமைக்காரன்னு?" என்று கேட்டாள்.

"என் சட்டம் இல்ல ஜானகி! நாட்டினுடைய சட்டம். அவன் அப்பங்காரன் கொடுமைக்காரன்கிறத நிருபிக்கிறதுக்கு நம்மகிட்ட ஒரு ஆதாரமும் கிடையாது. இந்த நிலைமையில இந்த வழக்கு எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் அவன் பக்கம்தான் ஜெயிக்கும்! அந்த வழக்க முறியடிக்கக் கூடிய ஒரே ஒரு நபர் ராதாதான். அவளும் அதச் செய்ய இன்னக்கி ராத்திரி இங்க இருக்கப் போறதில்ல!"

ஏதாகிலும் ஒரு அற்புதம் நிகழ்ந்து இன்றிரவுக்குள் ராதா இங்கு வந்து சேர்ந்து இந்த அபாயத்தைத் தவிர்க்கக் கூடாதா என்று எண்ணினார். ஆனால் அது நப்பாசை என்று அவருக்கே தோன்றியது.

ஜானகியின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

சட்டத்தின் நியாயத்தைப் பற்றி அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கே பிடிக்கவில்லை. ஓநாயிடம் ஆட்டுக் குட்டியை ஒப்படைக்கக் கூட சட்டம் இருக்கிறதா? ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு ஒரு ஓநாய் தகப்பன் ஆடு என்று வேஷம் போட்டிருப்பது கண்களைக் கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதைக்குத் தெரியுமா?

காலை பூத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தன்னை அழைத்துப் போக ராமா சரியாக வந்து விடுவார். இந்தக் குடும்பத்தில் என்ன குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ராமா மட்டும் குழப்பமில்லாத, நேரான மனிதனாக இருக்கிறார். நேரம் தவறுவதில்லை. முறை தவறுவதில்லை. சமாதானங்கள் கூறுவதில்லை. தன் சமாசாரங்களில் அதிகமாகக் குறுக்கிடுவதில்லை. சொன்னதைச் செய்யும் சேவகன். அழும் நேரத்தில் கண் துடைத்துவிடும் உண்மை நண்பன். எங்கிருந்து வந்தான் என் வாழ்க்கைக்குள்...? தன்னைத் தண்டிக்கும் இந்தத் தெய்வங்கள் இடையிடையே சமாதானம் செய்வதற்காகத் தனக்கு அனுப்பியுள்ள அன்பளிப்பாகத்தான் இருக்க வேண்டும் இவன்.

அன்னம் அன்றைய நடவடிக்கைகளை தன் வழக்கமான திறமையுடன் நிர்வாகம் செய்ய ஆரம்பித்திருந்தாள். "சரி, சரி தம்பி! எல்லாம் பிறகு பாத்துக்குவோம். உனக்கு ஆஸ்பத்திரி போக நேரமாச்சி! போய் தயாராயிடு. ஜானகி! எந்திரிச்சி வேலய பாரு. பரமாவ எழுப்பித் தயார் பண்ணிக் கூட்டிட்டுப் போகணுமில்ல!"

குளியலறை போய்த் தயாராக வேண்டும் என மெதுவாக எழுந்தார். ஜானகியும் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

சமையலறையில் அத்தை எதனையோ வறுத்துக் கொண்டிருந்தாள். தானியங்கள் கருகும் மணம் ஹால் வரை வந்தது. இட்டலிக்குச் சட்டினி தயார் பண்ணிக் கொண்டிருப்பாள் போலும்.

இந்த வீட்டில் இப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு ஆள் இல்லை என்பதை அவளுக்குச் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை. அவருக்குச் சாப்பாட்டில் ருசி இல்லை. அவர் சாப்பிடாத பொருள்களை இந்தப் பெண்கள் யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் அத்தை சமைப்பதை விடவில்லை.

தனக்கு கெமோதெராப்பி தேவைப்படுவது போல் அத்தைக்குச் சமையல் ஒரு தெராப்பியாக இருக்க வேண்டும். தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டு வௌியே பொங்காமல் இருக்கிற உணர்ச்சிகளை இடைவிடாத சமையலறை வேலைகளில் அவள் தணித்துக் கொண்டிருக்கிறாள். அது இல்லையேல் அவளுக்கும் நோய் வந்து விடும்.


      • *** ***

மிக மெதுவாக சவரம் செய்ய வேண்டியிருந்தது. தோல் மிக மென்மையாகிவிட்டது. தொங்கவும் ஆரம்பித்திருந்தது. இழுத்து வைத்து சவர பிளேடை பட்டும் படாமலும் இழுக்க வேண்டும். அப்படியும் அங்கே இங்கே வெட்டி விடுகிறது. இன்று ஒரே ஒரு வெட்டுத்தான் என்பது ஒரு நிம்மதியாகக் கூட இருந்தது.

சவரம் பண்ணி முடித்து முகத்தில் தண்ணீர் அடித்துச் சுத்தப்படுத்தி மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் முகத்தை உற்றுப் பார்த்தார். இந்த இரண்டு மாதங்களில் முகம் இப்படி மாறிப் போகும் என அவர் எதிர் பார்க்கவில்லை. வலியால் சுளித்துச் சுளித்து அதுவே வழக்கமாகி முகத்தில் நிரந்தரமான ஒரு சுளிப்பு இருப்பதுபோல் இருந்தது. தோல் கருத்திருந்தது. சுருங்கியும் வறண்டும் இருந்தது.

முகத்தில் இப்போது வந்திருப்பது... ஆமாம் அந்த வருணனை ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் - சாவுக்களை. டாக்டர் ராம்லி! இந்தப் பழைய பகைவனைக் கொல்வதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படவேண்டாம். எனக்கு சாவுக்களை வந்து விட்டது. நான் சாவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. நீங்கள் என்னைத் தள்ளாமலேயே இருந்தாலும் நானே தள்ளாடி விழுந்து விடுவேன்.

தாம் இப்படி டாக்டர் ராம்லியிடம் போவது தெய்வ பலிக்கு மாலை போட்டுக்கொண்டு சுகமாகப் போகும் ஆட்டை அவருக்கு நினைவு படுத்தியது. நான் எந்தத் தெய்வத்திற்குப் பலி? வாயில் இரத்தம் கசிய கையில் அரிவாள் ஏந்தி அசுரக் குழந்தையின் தலை மீது பாதம் அழுந்தி நிற்கும் எந்தத் தெய்வம் என்னைப் பலியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது? ஏன் என்னை...?

ஷவரைத் திறந்து விட்டார். சுடு நீர் உடம்பில் வழிந்தது. சுத்தமாக அழுக்குப் போக நுரை நுரையாகச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலைக்கு நறுமண ஷாம்பூ போட்டு மயிரைப் பூப்போல மென்மையாக்க வேண்டும். துடைத்து உடம்புக்கு நிறையப் பவுடர் போட்டு, தலைக்கு எண்ணெய் விட்டுப் படிய வார வேண்டும். உடம்பு மணக்க மணக்க இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தெய்வங்கள் மகிழ்ச்சியாக இந்தப் பலியை ஏற்றுக் கொள்ளும். ஏதாகிலும் அழுக்கோ அங்கவீனமோ இருந்தால் தெய்வங்கள் பலியை ஏற்றுக் கொள்ளாதாமே! தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட பல புராணப் படங்களில் சிறு வயதில் பார்த்திருக்கிறார். அவருக்குச் சிரிப்பு வந்தது.

ஆம், தான் சிரிப்புக்குரிய பொருள்தான். விதி ஒரு கொடுமைக்காரக் குழந்தையைப் போல தன்னை ஒரு துவண்ட துணிப் பொம்மையாகப் பாவித்து அடித்துத் துவைத்து மூலைக்கு மூலை தூக்கி எறிகிறது. பொம்மைக்கும் வலியுண்டு என்ற எண்ணமே அந்த ராட்சசக் குழந்தைக்கு இல்லை. காலைத் திருகு! வயிற்றைத் திருகு! நெஞ்சுக் கூட்டைத் திருகு! இரண்டு கால்களையும் பிடித்து எதிரும் புதிருமாக இழு! தலையை நசுக்கு! ஓட்டையிடு! உள்ளே உள்ள பஞ்சைப் பற்றியெறி! சுற்றிச் சுற்றி சுவரில் கொண்டு எறி! சிரி! சிரி! எத்தனை வேடிக்கை! பார், பார், இந்தப் பொம்மை படும் பாடு பார்! சிரி! சிரி!

அவருக்கு அழுகை வந்தது. ஷவரிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த சுடு நீருடன் கலந்து வழிந்தது.

      • *** ***

உடை உடுத்தி வௌியே வந்த போது ராமா சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து அத்தையின் இட்டிலியை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "சட்னி ரொம்பப் பிரமாதம்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். சுந்தரத்தைப் பார்த்ததும் "குட் மோர்னிங்" என்றார்.

"மோர்னிங் ராமா!" என்றார் சுந்தரம்.

"சுந்தரம். அத்தையோட சட்னி ரொம்ப பிரமாதம். வந்து சாப்பிடேன்!" என்றார். அவருடைய உற்சாகம் அந்த வீட்டின் கருமை படர்ந்த சோகத்தை கொஞ்சமாகப் பிரகாசப் படுத்தியது.

"முடியாது ராமா! நீ எனக்கும் சேர்த்துச் சாப்பிடு. குடுத்து வச்சவன்! நான் இதையெல்லாம் சாப்பிட்டால் வயித்தப் பெரட்டும். வழக்கம் போல காப்பியும் ஓட்ஸ் கஞ்சியும் போதும்!"

ஜானகி தயாராக எடுத்து வைத்திருந்தாள். மெதுவாகச் சாப்பிட்டார்.

அடுத்த அறையில் பரமாவை அன்னம் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து வரும் வழக்கமான ஆர்ப்பாட்டமான சத்தம் எதையும் கோணோம்.

"பரமா எப்படி இருக்கிறான் ஜானகி இன்னக்கி?" என்று கேட்டார்.

"காய்ச்சல் இல்லிங்க! ஆனா ரொம்ப சோந்திருக்கிறான். காலையில அவனப் படுக்கைய விட்டு எழுப்ப முடியில. பாத் ரூமுக்குத் தூக்கிட்டுப் போக வேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"பிரேமுக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டார் ராமா. அவருக்கு இன்னும் விஷயம் தெரியாது. போன வெள்ளிக் கிழமையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் ஏதும் ராமாவுக்குத் தெரியாது.

"நான் ஆஸ்பத்திரிக்குப் போற வடூயில சொல்றேன் ராமா! உங்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் பலது இருக்கு!" என்று சீரியசான குரலில் சொன்னார் சுந்தரம். ராமா மௌனமாகச் சாப்பிட்டு முடித்தார்.

புறப்படு முன் பரமாவைத் தூக்கி மார்போடு இறுக அணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அவன் துவண்டிருந்தாலும் புதிய உடை போட்டு உடம்பில் சோப்பும் பௌடரும் கலந்த மணத்தோடு சுத்தமாக இருந்தான். நெற்றியில் அவனுக்கு விபூதி பூசிவிட்டிருந்தாள் ஜானகி.

ஒரு மாலை போட்டுக் கொண்ட பலி கடாவின் உருவகம் மீண்டும் அவர் மனதில் வந்து மறைந்தது.