அந்திம காலம்/அந்திம காலம் - 16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓ சிஷ்யர்களே, எல்லாப் பொருள்களும் நெருப்பில் எரிகின்றன. நெருப்பில் எரியும் இந்தப் பொருள்கள் யாவை, ஓ சிஷ்யர்களே?

கண், ஓ சிஷ்யர்களே, எரிகிறது. கண் பார்க்கும் உருவங்கள் எரிகின்றன. கண்ணைப் பார்க்க வைக்கும் நரம்புகள் எரிகின்றன. இந்தக் கண்பார்வையின் மூலமாக என்னென்ன இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பெறுகிறோமோ, இந்த உணர்ச்சிகள் அனைத்தும் எரிகின்றன. - கயாவில் புத்த பெருமானின் தீ உபதேசம்.


பொழுது போகாத அந்த மாலையில் சுந்தரம் தனது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு "கருணைமகான் புத்தர்" என்ற புத்தகத்தைப் புரட்டி அங்குமிங்குமாகப் படித்துக் கொண்டிருந்தார்.

நேற்றும் முந்தா நாளும் நிறையப் பேர் அவரைப் பார்க்க வந்த வண்ணமாக இருந்தார்கள். அவருடைய நோய் பற்றிய செய்தியும் அவருடைய பேரப்பிள்ளையின் நோய் பற்றிய செய்தியும் அவருடைய குடும்பத்தைத் தெரிந்தவர்களிடையே பரபரவெனப் பரவியிருந்தது. அவருடைய முன்னாள் சக ஆசிரியர்கள், கல்வி இலாக்கா அதிகாரிகள் சிலர் வந்து கைகுலுக்கி ஆதரவு சொல்லிப் போனார்கள்.

அவர்களுடைய அன்பில் அவர் பெருமிதம் கொண்டாலும், தன் நோயும் பலவீனமும் இப்படி அம்பலப் பொருளாக ஆகிப் போனது வெட்கமாகத்தான் இருந்தது. ஆனால் இது இப்படி வௌிப்பட்டு விட்டதில் ஒரு ஆறுதலும் தோன்றியது. இனி இதைப் பார்ப்பவர்களிடமிருந்தெல்லாம் மறைத்து வைக்க வேண்டும் என்ற மன அழுத்தம் இருக்காது. "ஏன் இப்படி இளைத்துப் போனீர்கள்? ஏன் தலைமுடி கொட்டிவிட்டது?" என்று கேட்பவர்களிடம் மழுப்பிப் பேசவேண்டிய தேவையில்லை. "ஆமாம்! எனக்குப் புற்று நோய்!" என்று அவர்கள் கண்களைப் பார்த்து ஒரு விரக்திப் புன்னகையுடன் நேராகச் சொல்லலாம்.

எல்லாருடனும் கொஞ்சம் கொஞ்சம் பேசினார். தொண்டையின் வீக்கம் தணிந்து குரல் அப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருந்தது.

அவர் விளையாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றில் அதிகாரியாக இருந்து பல ஊர்கள் சுற்றி வந்த போது அவருடன் நின்று பகலில் உழைத்து, இரவில் சகோதர பாசத்துடன் பியர் குடித்துக் குலவியிருந்து, இனப் பாகுபாடு என்பது கொஞ்சமும் நினைவுக்கு வராமல் கொச்சையும் பச்சையுமான நகைச்சுவைகள் பரிமாறிக் கொண்ட சீன, மலாய், பஞ்சாபி நண்பர்கள் வந்து பேசியிருந்து அந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை நினைவு படுத்தி அவரது வலிகளைக் கொஞ்ச நேரம் மறக்கக் கற்றுக் கொடுத்துப் போனார்கள். சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பலர் விடை பெற்றுச் செல்லும் போது கண்கள் கலங்கியதையும் கண்டிருக்கிறார்.

புற்று நோய் கண்ட மற்றவர்களின் கதைகள் அடுக்கடுக்காய் வந்தன. வென்றவர்கள் கதைகள் கேட்டு மனம் தேறியது. வீழ்ந்தவர்கள் கதை கேட்டுச் சோர்ந்தது.

"இந்தப் புற்று நோய்க்கு இந்த மருந்தாலெல்லாம் பயன் இல்லை. தியானம் பண்ணுங்கள். இந்த நோயிலிருந்து விடுபடுவேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நோயை அகற்று என்று உடலுக்குக் கட்டளையிடுங்கள். நோய் தானாக மறையும்!" என்ற ஆலோசனைகள் வந்தன.

யோகாசனத்திலிருந்து குண்டலினி வரையில் சக்தியுள்ள மாற்று சிகிச்சைகள் அவருக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டன. "ஒரு அரை கிலோ காரட்டைச் சாறாக்கி தினமும் சாப்பிடுங்கள்" என்பதிலிருந்து பச்சை ஜின்செங்கை பொடியாக்கி சாப்பிடுவது வரை இயற்கை மருந்துகள் உபதேசிக்கப் பட்டன.

"ராஜ யோகாவுக்கு வாருங்கள்" "பாபாவை நம்புங்கள்" "திருத்தணியில் ஒரு சித்தர் இருக்கிறார்" என்ற வடூகாட்டல்கள் பல வந்தன. இத்தனை சுவாமியார்களா இருக்கிறார்கள்? முன் பின் பெயர் கேள்விப் பட்டதில்லை. ஆனால் அவர்களுக்காக உடல் பொருள் ஆவியைத் தரத் தயாராக உள்ள இத்தனை பிடிப்பு மிக்க அடியார்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகள் அவருக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தன. திருநீறு, குங்குமம் முதல் கங்கா ஜலம் வரை அவருக்குக் கொடுத்துச் சென்றார்கள்.

இவற்றிலெல்லாம் மிகவும் பயன்படக் கூடியதாக இருந்தவை உபதேசம் செய்த நண்பர்கள் அவரிடம் கொடுத்துச் சென்ற புத்தகங்கள்தாம். பைபிளிலிந்து மிக நவீன காலத்து ஊக்குவிப்புச் சிந்தனை குருமார்கள் எழுதிய புத்தகங்கள் வரை வந்திருந்தன. புத்த சமயத்தில் தீவிர ஈடுபாடுள்ள அவருடைய சீன நண்பர் ஒருவர் கௌதம புத்தரின் உபதேச புத்தகம் ஒன்றை விட்டுச் சென்றிருந்தார்.

"ஆனால் ஓ சிஷ்யர்களே, இவை எதனால் எரிகின்றன?

"இவை ஆசையால் எரிகின்றன என நான் சொல்லுகிறேன். இவை காமத்தால் எரிகின்றன. இவை வெறுப்பால் எரிகின்றன. பிறப்பால், முதுமையால், இறப்பால், துன்பத்தால், அழுகையால், ஏமாற்றத்தால் இவை எரிகின்றன.

"ஆகவே இதைப் பார்த்தபின், ஓ சிஷ்யர்களே, ஒரு நல்ல விவேகமான சிஷ்யன் கண்களின் மீது உள்ள ஆசையை அறுக்க வேண்டும். கண்கள் காணும் உருவங்கள் மீது ஆசையை அறுக்க வேண்டும். கண்ணைப் பார்க்க வைக்கும் நரம்புகளின் மீது ஆசையை அறுக்க வேண்டும். இந்தக் கண்பார்வையின் மூலமாக என்னென்ன இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பெறுகிறோமோ, இந்த உணர்ச்சிகள் அனைத்தின் மீதும் உள்ள ஆசைகளை அறுக்க வேண்டும்."

புத்தகத்தை மெதுவாகக் கீழே வைத்தார். ஆமாம்! உடல் நோயால் பற்றி எரிவது மட்டுமல்ல, உள்ளமும்தான் பாசத்தாலும் பந்தத்தாலும் எரிகிறது. அதைத் தணிக்க வேண்டும் என நினைக்கும் நேரத்தில் இன்னும் தீவிரமாக எரிகிறது. அதுவாக எரிந்து தணிந்த சில கணங்களில்தான் ஓய்வு. ஆனால் ஓய்வு கொடுத்த சில நிமிடங்களுக்குள் இந்த நினைவுத் தீ மீண்டும் பற்றிக் கொள்ளுகிறது.

பரமாவை அவர் செவ்வாய்க்கிழமை மாலை போய் பார்த்ததுதான். அப்போது அந்த மருத்துவ மனை வார்டில் ஜானகியை இலேசாகப் பிடித்துக் கொண்டு நடந்துதான் போனார். பரமாவின் நிலைமையில் அதிக மாற்றம் இல்லை என்று சொன்னார்கள். ரேடியேஷன் ஆரம்பித்து விட்டதாகவும் அதன் முடிவு தெரிய நாட்களாகும் என்றார்கள். அவர் பார்த்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குத் தொடர்ந்து டிரிப் போடப் பட்டிருந்தது. வாயால் அவனால் சாப்பிட இயலவில்லை என்றும் சாப்பிட்டாலும் தங்குவதில்லை என்றும் சொன்னார்கள். அவனைப் பார்த்த போது மனம் குப்பென்று தீப்பற்றி எரிந்து.

இன்று என்ன கிழமை? இப்போதெல்லாம் நாளும் கிழமையும் நேரமும் கூட நினைவில் நிற்பதில்லை. பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படித் திருப்பித் திருப்பிக் கேட்கும் போது சொல்பவர்கள், இந்த ஜானகி உட்பட, எரிச்சல் அடைகிறார்கள் என அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்தே தெரிந்து விடுகிறது. என்னோடு வாழ்வில் பந்தம் கொண்ட இவர்களே இறுதியில் என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று எண்ணுகிற பொழுதெல்லாம் மனம் பற்றி எரிகிறது.

இன்று என்ன கிழமை? பலமாக யோசித்துப் பார்த்தார். டாக்டர் ராம்லி தனக்கு சிகிச்சை ஆரம்பித்தது திங்கள் கிழமை. பரமாவை மருத்துவ மனையில் சேர்த்தது அன்று இரவில்தான். மீண்டும் செவ்வாய்க் கிழமைதான் பரமாவைச் சென்று பார்த்தது. செவ்வாய்க் கிழமை இரவு கால்கள் மிகத் தளர்ந்து விட்டன. நடக்கமுடியவில்லை. அடுத்த நாள் புதன் கிழமை ராமா ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

அதைப் பார்த்தபோது புத்தர் சொன்னதைப் போல உடம்பின் ஒவ்வொரு நரம்பும் எரிந்தது. அதை எட்டி உதைத்துத் தள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் கால்களில் கொஞ்சமும் பலம் இல்லை. முகத்தில் வெடித்த கோபத்தைப் பார்த்து ராமா சமாதானமாகச் சொன்னார்: "இது தற்காலிகமாத்தான் சுந்தரம். இது மருந்தினுடைய பக்க விளைவுன்னு டாக்டர் ராம்லி சொன்னாரில்ல! ரெண்டு மூணு வாரத்தில அநேகமா சரியாயிடும்னு சொன்னாரில்ல!"

டாக்டர் சொல்வதில் எதை நம்புவதென்று தெரியவில்லை. தன் மீது டாக்டர் ராம்லி பாய்ச்சுகின்ற இந்த மெதுவாக வேலை செய்யும் நஞ்சு அதன் குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. செவ்வாய் இரவில் கால்கள் பலவீனமாகிவிட்டன. அன்று இரவில் கண்ணை மூடினால் பயங்கரக் கனவுகள் வந்தன. பாழடைந்த மாளிகைகள், பயங்கரமாய் வாய் பிளக்கும் கட்டில்கள், தீப்பந்தங்களைக் கண்களாய்க் கொண்ட ராட்சச நாய்கள் இப்படியாக மாறி மாறி வந்து பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அவரை எழுப்பி அப்புறம் ஒரு மணி நேரம் கண்ணை மூட முடியாமல் செய்தன.

நள்ளிரவில் ஒரு முறை அப்படி விழித்த போது ஜானகி என்னமோ துணியை வைத்துப் படுக்கையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். படுக்கை நனைந்திருந்தது.

புதன் கிழமை காலையில் எங்கிருந்தோ ஒரு பீங்கான் கழிவுத் தட்டு கொண்டு வந்து படுக்கைக்குக் கீழே வைத்தாள். அவள் கொஞ்சமும் முகம் சுளிக்காவிட்டாலும் அவர் உடலும் மனமும் அவமானத்தில் பற்றி எரிந்தன.

அதெல்லாம் நேற்று. ஆகவே இன்று வியாழக்கிழமை. இன்று என்னமோ விசேஷம் இருக்கிறதே! ஜானகி காலையிலேயே பரபரப்பாக ஏதோ பேசினாளே! ஆ! ஞாபகத்துக்கு வந்தது. ஆமாம். இன்றைக்கு ராதா வருகிறாள். இங்கிலாந்திலிருந்து தன் மகனைப் பார்க்க அவள் வந்து சேரும் நாள் இன்றுதான். இப்போது மாலையாகி விட்டது. அவள் வருகின்ற நேரம்தான்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு வாசலைப் பார்த்தார். எழுந்து நடக்கவேண்டும் என ஆசை ஏற்பட்டது. முயன்றால் எழுந்து எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கலாம். அப்படி ஒன்றும் கால் முற்றாக விளங்காமல் போய்விடவில்லை. ஆனால் தவறி விழுந்து விடுவோமோ என்ற பயம் அதிகம் ஆகிவிட்டது. யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேண்டும். கூப்பிடலாம். எல்லாரும் அந்த நேரத்தில் வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குத் தொந்திரவு கொடுக்க அவர் விரும்பவில்லை.

இரண்டு நோயாளிகளுக்கு விடாமல் பணிவிடை செய்து இரண்டு பெண்களும் களைத்திருக்கிறார்கள். இவர்கள் செய்ய முடியாத வீட்டு வேலைகளைச் செய்து அத்தையும் களைத்திருக்கிறாள். உலாத்தப் போக வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக அவர்களையெல்லாம் அழைத்துத் தொந்திரவு படுத்தக் கூடாது.

பரமாவின் தந்தை சிவமணியும் இங்குதான் தங்கியிருக்கிறான் என்ற விஷயம் அவருக்குத் திடீரென நினைவுக்கு வந்தது. நேற்று புதன் கிழமை காலை தன் துணிப் பெட்டியுடன் வந்து விட்டான். அவனுடைய குட்டி யானை போன்ற பாஜேரோ, வீட்டிற்கு வௌியில் நின்று அவனை ஞாபகப் படுத்தியது. உபயோகிக்க ஆளில்லாமல் துருப்பிடித்துக் கொண்டிருக்கும் ராதாவின் சின்னக் காரின் பக்கத்தில்தான் அது நின்றது.

இந்த முறை தனியாகத்தான் வந்தான். அவன் தாய் அவனுடன் இல்லை. பணிவுடனும் கனிவுடனும் பேசினான். "மாமா! பிரேம் குணமாகிற வரையில நானே இங்கிருந்து கவனிச்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு தொந்திரவும் குடுக்க மாட்டேன்! என்ன வீட்டில தங்கவிடுங்க!" என்றான்.

ஜானகி, அன்னம் ஆகியவர்களின் முகங்களைப் பார்த்தார். அந்த முகங்களில் வெறுப்பு இருந்தது. ஆனால் இத்தனை இறங்கி வந்து விட்ட இந்த மருமகனை இரக்கமில்லாமல் விரட்ட முடியவில்லை. என்ன இருந்தாலும் இந்தக் குடும்பத்துக்குள் வந்து விட்டவன். தன் மகளின் கணவன்.

இன்னமும் கணவனா? அது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் பரமாவின் தந்தை என்ற உண்மையை மாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு இடங் கொடுத்தார். "சரி, இங்கியே தங்கிக்க சிவமணி! ஆனா வீட்டுக்குள்ள சிகெரெட் பிடிக்காத!" என்றார்.

அன்று இரவு ஜானகி கேட்டாள்: "நீங்க பாட்டுக்கு அவனுக்கு இடங் கொடுத்திட்டிங்கள, நாளைக்கு ராதா வந்தா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாத்திங்களா? ராதாவ எப்படியாச்சும் பிடிக்கணும்னு திட்டம் போட்டுத்தான் அவன் இப்ப இங்க வந்திருக்கான்!"

இருக்கலாம். ஆனால் பிடிக்க உரிமை உள்ளவன்தான். அந்த உரிமையை அத்தனை எளிதாக அவனிடமிருந்து பறித்து விட முடியாது.

வந்ததிலிருந்து அவனால் தொந்திரவு ஒன்றும் இல்லை. நேற்றிரவு அனைவருக்கும் வௌியிலிருந்து சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான். பெரும்பாலும் மருத்துவ மனையில் பரமாவின் பக்கத்திலேயே இருந்து காலம் கழித்தான். அவன் வந்தது அன்னத்துக்கும் ஜானகிக்கும் கொஞ்சம் ஓய்வாகவும் இருந்தது.

இன்று காலை வழக்கம் போல ராமா அவரை மௌன்ட் மிரியத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். வீட்டிலிருந்தவர்கள் கைபிடித்துத் தாங்கித்தான் ஏற்றி விட்டார்கள். காரிலிருந்து இறங்கியதும் சக்கர நாற்காலி துணையுடன்தான் அவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். டாக்டர் ராம்லி வழக்கமான சோதனைகளை நடத்தினார்.

தனது நேற்றைய உபாதைகளை அவரிடம் சொன்னார் சுந்தரம்.

"உடல் பலவீனம் எதிர்பார்க்கப் பட்டதுதான். நீங்கள் சிரமப் பட்டாவது திரவ ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலுக்குச் சத்து இருக்கும். இந்தக் கனவுகள் பிரமைகள் எல்லாம் மருந்தின் பக்க விளைவு. அதைத் தணிக்க இன்றைக்கு மருந்து தருகிறேன். தூக்க மாத்திரையும் தருகிறேன்" என்றார் ராம்லி.

"உங்கள் புதிய மருந்து புற்று நோயைக் கட்டுப் படுத்தும் அறிகுறி தெரிகிறதா?" என்று கேட்டார் சுந்தரம்.

"இப்போது சொல்ல முடியாது. இரண்டு வாரங்கள் போகட்டும். அப்போதுதான் முதல் அறிகுறிகளைப் பார்க்க முடியும்" என்றார்.

கேட்டது ஓரு நப்பாசையில்தான். நம்பிக்கைக்கு ஒரு ஆதாரமும் இல்லை என்று அவருக்கே தெரிந்தது. தான் ஒரு இருண்ட பள்ளத்துக்குள் விழுந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் வேகமாக விழுந்து சாகாமல் ஸ்லோ மோஷனில் அணு அணுவாக விழுந்து செத்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.

தன் உடல் தன்னைக் கைவிட்டுவிட்டது தெரிந்தது. ஆனால் மனத்தையாவது காப்பாற்ற முடியுமா?

கையிலிருந்த புத்ததகத்தை விரித்து இன்னொரு பகுதியைப் படித்தார்:

"பகவானே! நான் முதியவன், தளர்ந்தவன். என் வாழ்நாளைக் கடந்து விட்டேன். தொடர்ந்து நோயில் உழலுகிறேன். என் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டுங்கள்!" என்று நகுலபிதன் கேட்டான்.

"அப்படித்தான் இல்லறத்தவனே, அப்படித்தான்! உன் உடல் தளர்ந்திருக்கிறது, நோயுற்றிருக்கிறது, முதுமை அடைந்திருக்கிறது. ஆனால் இந்த உடம்பைத் தூக்கிச் சுமந்து கொள்ள ஆரோக்கியத்தைக் கேட்கிறாயே, என்ன அறியாமை! உனக்கு நீயே இப்படிக் கூறிக்கொள்: "என் உடல் நோயுற்றாலும், என் உள்ளம் நோயுறக் கூடாது!" இப்படியே கூறி உன்னைப் பயிற்சிப் படுத்திக் கொள்."

"நகுலபிதனுக்கு அது விளங்கவில்லை: "உடல் நோயுற்ற போது உள்ளத்தை நோயுறாமல் வைத்துக் கொள்வது எப்படி?" என சரிபுத்தர் என்னும் இன்னொரு துறவியைக் கேட்டான்.

"தம்மத்தைப் பயின்றிராதவன் தன் உடலையே தானாக நினைக்கிறான். உடல்தான் நான், நான்தான் உடல் என்ற எண்ணமே அவனை ஆண்டிருக்கிறது. ஆகவே உடலின் வாதை அவனுடைய வாதையாகிறது.

"தம்மத்தைப் பயின்றவன் தன் உடலைத் தானாக நினைப்பதில்லை. தான் என்பது தன் உடல் அல்ல என அவனுக்கு விளங்கும். நான் உடல் அல்ல, உடல் நான் அல்ல என்ற எண்ணமே அவனை ஆண்டிருக்கும். ஆகவே உடலின் வாதை அவனது வாதையாகாது. தான் என்பது தன் எண்ணம் அல்ல, எண்ணத்துக்கு அப்பாற் பட்டது என அவனுக்குத் தெரியும்.

"ஆகவேதான் இல்லறத்தவனே, அவனுக்கு உடல் நோயுற்றிருந்தாலும் உள்ளம் நோயுறுவதில்லை!"

விளங்கவில்லை. ஆனால் படித்ததில் ஏதோ ஆறுதல் தோன்றியது..

வௌியே டேக்ஸி வந்து நின்றது. ராதா ஒரு பையுடன் அவதி அவதியாக இறங்கினாள்.


      • *** ***

ராதாவின் வருகை அந்த வீட்டின் அமைதியைக் குரூரமாகக் கலக்கி விட்டது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு வௌியில் போக்குவரத்துக் குறைந்திருந்த சாலையைப் பார்த்தவாறு வீட்டின் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு புத்தரின் போதனைகளில் தன் துயரத்துக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த அந்த வேளையில் டேக்ஸியை விட்டு இறங்கிய மகள் "அப்பா" என்ற அலறலுடன் அந்தக் குளத்தில் ஒரு பெரிய பாறையைத் தூக்கிப் போட்டாள்.

ராதா பார்த்துக் கேட்டு அதிர்ச்சியடைய அந்த வீட்டில் பல நிகழ்ச்சிகள் இருந்தன.

"எப்படி இருக்கான் அப்பா என் டார்லிங்? எப்படி இருக்கான்? உண்மையச் சொல்லுங்க!" என்பது அவள் முதலில் கேட்ட கேள்வி. அழுகை, விம்மல், அலறலுடன் அந்தக் கேள்வி இருந்தது.

"இருக்காம்மா! ஆஸபத்திரியோட கண்காணிப்பில இருக்கான்! நீ போய் பாக்கத்தானே போற! அவசரப் படாத! நீயே டாக்டர நேரா பாத்து தெரிஞ்சிக்க!" என்று அவள் தலையைத் தடவிக் கொடுத்ததார்.

"நீங்க ஏன் அப்பா இப்படி இளைச்சிப் போயிருக்கிங்க? உங்க உடம்புக்கு என்ன? ஏன் உங்க மூஞ்செல்லாம் ஒடுக்கு விழுந்து..." கண்களைத் துடைத்துக் கொண்டு உண்மையான வியப்புடன் அக்கறையுடன் அடுத்த கேள்வி கேட்டாள்.

எனக்கு நோய் என்பதை என் வௌி அவயவங்கள் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டன. முன்பு உள்ளே அழுக வைத்தாலும் வௌித் தோலில் தெரியாமல் இருந்தது. இப்போது எல்லாம் வௌியாகி விட்டது. யாரிடமும் மறைக்க முடியாது.

ஜானகியும் அன்னமும் வந்து நின்றார்கள். ஜானகி சொன்னாள். "கேளம்மா, இப்பவாவது கேட்டுத் தெரிஞ்சிக்க! ஒன் மகனுக்கு வந்த நோய் வேற ரூபத்தில அப்பாவுக்கு ஏற்கனவே வந்தாச்சி!"

"என்ன சொல்ற அம்மா?"

"அப்பாவுக்கும் கேன்சர்தாம்மா. மூளையில கட்டி ஆரம்பிச்சி இப்ப உடம்பு முழுக்க பரவியிருக்கு!" ஜானகி தலை குனிந்து அழுதாள்.

"அப்படியா! அப்பா! நெசமாத்தான் சொல்றிங்களா?"

இந்தக் கேள்வி இப்போது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. பலமுறை கேட்டு அலுத்து விட்டது. இந்தக் கேள்வியைக் கேட்பதனால் தன் காதில் விழுகின்ற இந்தக் கெட்ட செய்தி புஸ்ஸென்று பொய்யாகப் போய்விடும் என்று கேட்பவர்கள் எதிர் பார்க்கிறார்களோ?

"ஆமாம்!" எனத் தலையாட்டினார்.

அவள் அவரை அணைத்ததவாறு அவர் முகத்தையும் தலையையும் வெறித்துப் பார்த்தாள். தடவிக் கொடுத்தாள். "இத்தன தடவ நான் போன் பண்ணிப் பேசியும் எனக்கு இது பத்தி ஒரு வார்த்தையும் சொல்லாம மறைச்சிட்டிங்களே அப்பா! ஏன்? நான் உங்க மகள் இல்லியா? எங்கிட்ட சொல்லக் கூடாதா?" என்று அழுதாள்.

"உனக்கு ஒன் சொந்தத் துயரமே ஏராளமா இருக்கம்மா. அதோட இதச் சேர்க்க வேண்டான்னு விட்டிட்டோம். நேரம் வரும்போது நீயா தெரிஞ்சிக்குவேன்னு விட்டுட்டோம். அதான் இப்ப தெரிஞ்சிக்கிட்டியே!" என்றார்.

"ரொம்ப மோசமா அப்பா!"

"ரொம்ப மோசம்தான். பரமா மாதிரிதான்! என் வயசில என்னாலத் தாங்கி உட்கார்ந்து பேச முடியுது. அவன் சின்னப் பிள்ள. உடம்பில பலம் இல்லாம படுத்துட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றார்.

அவர் மார்பில் முகம் புதைத்துக் கொஞ்ச நேரம் தேம்பினாள்.

"ஏன் இப்படி நடக்குதப்பா? நம்ம குடும்பத்துக்கே எல்லாம் ஏன் இப்படி நடக்குது?" என்று கேட்டாள்.

"இது தண்டனை அல்ல, சோதனை. கடவுள் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம்!" என மதர் மேகி சொன்ன தத்துவங்களை அவளுக்குச் சொல்லிக் காட்ட வேண்டுமென்று முதலில் நினைத்தார். அப்புறம் அந்த பதில் அவளுக்குப் பிடிக்குமோ என்னவோ! பரவாயில்லை, அவளுக்கு வேண்டிய பதிலை அவளே கற்பித்துக் கொள்ளட்டும் என்று அவள் தலையைக் கோதிக் கொடுத்து அமைதியாக இருந்தார்.

அன்னம் குறுக்கிட்டாள். "ராதா, களைச்சி வந்திருக்க. இந்தா டீ போட்டு வைக்கிறேன். போய் குளிச்சிட்டு வா. பிரேமப் போய் பாத்துட்டு வருவோம்! அப்பாவும் ஓய்வெடுத்துக்கிட்டும்" குழப்பம் நிலவும் இடத்தில் திடீரென்று பொறுப்பெடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முறைப் படுத்துகின்ற தன் திறமையை மீண்டும் அங்கு நிலை நாட்டினாள். அப்புறம் அவளே தொடர்ந்து அந்த மற்ற விஷயத்தையும் அறிமுகப் படுத்தினாள். "இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கே! இனி உன் புருஷன வேற பாத்து கதைகளப் பேசித் தீர்க்கணுமே!" என்றாள்.

ராதா குழப்பத்துடன் திரும்பி அன்னத்தைப் பார்த்தாள். "யாரச் சொல்றிங்க அத்தை?"

சிவமணி அறைக்குள் இருந்து வௌியில் வந்து கதவருகில் நின்றான். ராதா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து கண்களில் முள் குத்தியது போல் படீரென்று குனிந்து கொண்டாள். முதலில் அவள் முகத்தில் பயம் இருந்தது. அப்புறம் மெதுவாக ஆத்திரம் பொங்கியது.

முகம் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். சீறினாள். "ஏன் வந்திங்க இங்க? எதுக்காக என் வீட்டுக்கு வந்திங்க? நாந்தான் உங்க மூஞ்சில முழிக்க மாட்டேன்னு போயிட்டேன்ல, அப்புறம் ஏன் என்னத் தொரத்தி வந்திங்க? என் பிள்ளயக் கொல்லவா? ஏன் வந்திங்க?" உச்ச தொனியில் கத்தினாள்.

சிவமணி அவள் அருகில் வந்தான். "டார்லிங். நான் சொல்றதக் கேள். அமைதியா இரு!" என்றான்.

அவனைக் கொஞ்சம் வியப்புடன் பார்த்தாள். அவன் இப்படி நயந்து பேசிப் பார்த்து அவளுக்குப் பழக்கமில்லை போலும்.

அவன் அவள் தோள்களைப் பற்றினான். "இப்ப நம்ப சண்டை முக்கியமில்ல. பிரேம்தான் முக்கியம். அவன் குணமடையிற வரையில நம்ப சண்டய நிறுத்தி வைப்போம்!" என்றான்.

கண நேரம் யோசித்திருந்தாள். "உன்ன நம்ப மாட்டேன்! நீ ஒரு மிருகம்" என்றாள்.

அன்னம் எழுந்து கொஞ்சம் உரத்த குரலில் சொன்னாள். "சிவமணி, ராதா! உங்க சண்டையை எல்லாம் வேற இடத்தில வச்சிக்குங்க. ஏன் ராதா! உங்க அப்பா இருக்கிற நெலயில அவர் முன்னால இப்படிச் சண்ட போட்டு அவரத் தொந்திரவு செய்றது நல்லா இருக்கா?" என்றாள்.

ராதா தன் தந்தையை நோக்கினாள். "இவருகிட்ட சொல்ல வேணான்னு எத்தன தடவ கேட்டுக்கிட்டேன் அப்பா! ஏன் இவர வீட்டுக்குள்ள விட்டீங்க?" என்று கேட்டாள்.

"அவன் உன் பிள்ளையோட தகப்பன். அந்த உரிமய மறுக்க முடியாதம்மா!" என்றார்

கொஞ்சம் அழுது சொன்னாள் "என்ன மன்னிச்சிடுங்க அப்பா! உங்க நிலைமைக்கும் பிரேமோட நெலமைக்கும் நாங்க ரெண்டு பேரும் போட்ற சண்டதான் காரணம். என்னோட பாவங்கதான் உங்க எல்லோரையும் பாதிக்கிது!" தேம்பி அழுதாள்.

சுந்தரம் அவள் தலையை மீண்டும் தடவி விட்டார். "ராதா! அதெல்லாம் இப்ப யோசிக்க வேணாம். ரொம்பக் களைப்பா இருப்ப! போய் குளிச்சிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் பரமாவப் பாத்துட்டு வா. மத்ததெல்லாம் பிறகு பேசிக்கிவோம்!" என்றார்.

எழுந்து அறை நோக்கிப் போனாள். அவள் போகும் திசையை ஏக்கமாகப் பார்த்தவாறு சிவமணி நின்றான். பின்னர் ஒரு பெரு மூச்சுவிட்டு வௌியே போனான்.

கேட்டுக்குப் பக்கத்தில் நின்றவாறு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துப் பிடித்தான்.

"ஆனால் ஓ சிஷ்யர்களே, இவை எதனால் எரிகின்றன? இவை ஆசையால் எரிகின்றன என நான் சொல்லுகிறேன். இவை காமத்தால் எரிகின்றன. இவை வெறுப்பால் எரிகின்றன. பிறப்பால், முதுமையால், இறப்பால், துன்பத்தால், அழுகையால், ஏமாற்றத்தால் இவை எரிகின்றன."