அந்திம காலம்/அந்திம காலம் - 17

விக்கிமூலம் இலிருந்து

சடசடவென்று மழை பெய்து கொண்டிருந்தது. அவருடைய வார்டிலிருந்து பார்த்தால் மௌன்ட் மிரியத்தின் பின்னால் உள்ள செமினரிக் கட்டடம் தெரிந்தது. இங்குதான் கிறித்துவ சமயத்தைப் பரப்பத் தேவையான குருமார்களைப் பயிற்றுவிக்கிறார்கள். அந்தக் கட்டடத்தைச் சுற்றி வீடுகள் இருந்தன. பினாங்குத் தீவின் மத்திய தர வர்க்கத்தினரின் வீடுகள். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள் என்று வேறுபாடு கருதாமல் வாழ்கிறார்கள்.

தங்கள் குடியிருப்புப் பகுதியின் மத்தியில் இப்படி ஒரு உள்ளுக்குள் உறுப்புகள் அழுகும் புற்று நோய்க்காரர்களைக் கொண்ட மருத்துவ மனை இருக்கிறதே என்று யாரும் முகம் சுளித்ததில்லை. மாறாக அந்தக் கட்டடத்தை ஒரு மரியாதை கலந்த அன்புடன் பார்க்கிறார்கள். வாழ்க்கையில் அவலப் பட்டவர்களுக்கு இங்கு உதவப் படுகிறது. இது மானுடத்தின் உன்னதமான கடமைகளில் ஒன்று என மதிக்கிறார்கள்.

அவலப் பட்டவர்களில் நானும் ஒருவன் என நினைத்த போது அழுகை வந்தது. அவலப் பட்டவர்களில் பரமாவும் ஒருவன். ஒரே குடும்பத்தில் அவலப் படுபவர்கள் இரண்டு பேர் இருக்கிறோம். ஒரே நேரத்தில் அவலப் படுகிறோம். இது நீதியில்லை என தெய்வங்களிடம் பலமுறை முறையீடு செய்தாகிவிட்டது. ஆனால் நிலைமை மாறவில்லை. மாறாக தெய்வத் தீர்ப்பையா அவமதிக்கிறீர்கள் என்று இருவரின் தண்டனைகளும் இன்னும் தீவிரமாக்கப் பட்டுள்ளன.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மழைத் தாரைகளினூடே அந்த செமினரிக் கட்டடத்தின் கூரையைப் பார்த்தவாறே இருந்தார்.


      • *** ***

மூன்று வாரங்களுக்கு முன்னால் ராமாவும் சிவமணியுமாக அவரைத் தூக்கிக் காரில் உட்கார வைத்து இங்கு கொண்டு வந்தார்கள். டாக்டர் ராம்லியுடன் டாக்டர் லிம்மும் அன்று அவரை நீண்ட நேரம் பரிசோதித்து அவர்களுக்குள் கலந்து பேசினார்கள். பின்னர் கொஞ்ச நேரத்தில் மதர் மேகியும் அங்கு வந்து அவர்கள் பேச்சில் கலந்து கொண்டார். இப்போதெல்லாம் டாக்டரைப் பார்த்து உடம்பு எப்படியிருக்கிறது என்ற கேள்வியை கேட்கக் கூட அவருக்கு தெம்பு இருப்பதில்லை. மதர் மேகியிடமும் நீண்ட நேரம் கேள்வி கேட்டுத் தொந்திரவு கொடுக்க அவருக்கு முடிவதில்லை. ஆகவே அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர் சோர்ந்து படுத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கடூத்து மதர் மேகி மட்டும் படுக்கையின் பக்கமாக வந்தார். "சுந்தரம், எப்படியிருக்கிறீர்கள்?" என்று வழக்கமான புன்னகையுடன் கேட்டார்.

"அதுதான் நீங்களே பார்க்கிறீர்களே!" என்றார் சுந்தரம்.

"சோர்ந்திருக்கிறீர்கள். ஆனால் நான் பார்த்துள்ள சில மோசமான கேஸ்கள் போல நீங்கள் மனத்தால் சோரவில்லை! அது மிகவும் முக்கியம்!" என்றார்.

பலவீனமாகப் புன்னகைத்தார். சாவுக்கு என்னை நான் ஒப்புவிக்கத் தயாராக இல்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்வில் உள்ள எல்லாச் சுவைகளும் மறைந்து கொண்டு வருகின்றன. வாழ்வதற்கு வேண்டிய காரணங்கள் மிகவும் அருகிவிட்டன. தனிமையில் மலமும் ஜலமும் கடூத்து சுத்தப் படுத்திக் கொள்ளும் அடிப்படைகளைக் கூட இழந்து விட்ட பிறகு பிழைப்பு வெட்கம் கெட்டதாகத்தான் போய்விட்டது. ஆனாலும் உயிரை விட்டு விடலாம் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை.

மதர் மேகி தொடர்ந்து பேசினார்: "மருந்து முறைகளையும் சிகிச்சையையும் கொஞ்சம் தீவிரப் படுத்தி அணுக்கமாக அதைக் கவனிக்கவிருப்பதால் இங்கே மருத்துவ மனையிலேயே நீங்கள் தங்கிக் கொள்வது நல்லது என டாக்டர் ராம்லி கருதுகிறார். டாக்டர் லிம்மின் கருத்தும் அதுதான். என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

உள்ளத்துக்குள் குப்பென்று மறுப்புத் தோன்றியது. என் வீட்டை விட்டு என்னைத் தனிமைப் படுத்துவது என் கூட்டைவிட்டு என்னை வௌியே தூக்கிப் போடுவது போல அல்லவா? இந்த மருத்துவ மனையின் மருந்தும் மரணமும் கலந்த சூழ்நிலையிலா என் முழு நேரமும் கழிவது? என்று எண்ணி அயர்ந்தார்.

ஆனால் ஜானகியின் களைத்த முகம் கண்ணில் தெரிந்தது. தான் உறங்காத இரவுகளில் அவளும் உறங்காமல் மருந்து கொடுத்து, உடம்பு துடைத்து, மல ஜலம் அள்ளி, பின் காலையில் பேரப் பிள்ளையைப் பார்க்கத் தூக்கம் கலையாத முகத்துடன் ஓடுவதை எண்ணிப் பார்த்தார். சில வேளைகளில் அவளும் சரி அன்னமும் சரி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தூணில் சாய்ந்து தூங்குகிறார்கள்.

ராமா தன் குடும்பத்தை மறந்து எனக்காக ஓடியாடித் திரிகிறார். இன்னும் சிரித்த முகம் மாறாமல் இருக்கிறார். ஆனால் சிரமும் களைப்பும் அவருக்கும் இருக்கிறது.

அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். நல்லதுதான். ஆனால்...

தன்னை மருத்துவ மனையிலேயே முழு நேரமாகத் தங்கச் சொல்லும் டாக்டர் ராம்லியின் நோக்கம் சரியானதுதானா எனத் தெரியவில்லை. சிகிச்சையில் எந்த முன்னேற்றத்தையும் காணோம். சிகிச்சை எப்படி நடக்கிறது என்பதை அவர் விளக்கிச் சொல்வதுமில்லை. இந்த நிலையில் தன்னை முழு நேரமாகத் தன் பாதுகாப்பில் அவர் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்? அவர் தயார்ப் படுத்தியுள்ள தூக்குக் கயிற்றில் தன் கழுத்தை முழுமையாக மாட்டிய பின் கடைசி இறுக்கத்தைத் தானே இழுத்து முடித்து வைத்து மகிழ விரும்புகிறாரா?

"மதர் மேகி! சிகிச்சையில் ஒரு மாற்றமும் தெரியவில்லையே. இந்த நிலையில் ஏன் நான் இங்கு முழு நேரமாகத் தங்க வேண்டும்?" என்று பலவீனமாகக் கேட்டார்.

"அவர் உங்களுக்காக வகுத்திருக்கும் ஹோர்மோன் தெராப்பியில் அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை என அவர் நினைக்கிறார். ஹோர்மோன் சுரப்பிகளின் இயக்கத்தை அடிக்கடி சோதித்து மருந்தை அளந்தும் மாற்றியும் கொடுக்க வேண்டும் என்கிறார்! அதற்காகத்தான் இந்த ஏற்பாடு!"

இதில் சுந்தரத்துக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் தான் நினைப்பதை மதர் மேகியிடம் சொல்லவும் முடியவில்லை. இந்த அன்னைத் தன் வாழ்க்கையில் மனிதர்களின் நல்ல குணங்களின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருப்பவர். ஆண்டவனின் நல்ல குணத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தன்னை அதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரிடம் தன்னுடைய அவநம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் சொல்வதற்கு வெட்கமாக இருந்தது. ஒரு முறை சொல்லி அதனை விரைவாகப் பேசித் தீர்த்து விட்டார். இன்னொரு முறை அந்த விஷயத்தை எழுப்பி எல்லோர் மீதும் சந்தேக நாற்றத்தை அவர் தௌிக்க விரும்பவில்லை.

அதோடு ஜானகியின் களைத்த முகம் மீண்டும் நினைவுக்கு வந்தது. தனக்காக ஒவ்வொரு நாளும் காரை எடுத்துக் கொண்டு அலைகின்ற அன்பு நண்பன் ராமாவின் நினைவு வந்தது. சரியென்று முடிவு செய்து விட்டார்.

"சரி மதர் மேகி! இன்றைக்கு வீடு திரும்பிச் சொல்லிவிட்டு முடிந்தால் இன்று மாலையே வந்து விடுகிறேன்!" என்றார்.

"நல்லது. அப்படியானால் நாம் இங்கே இனிமேல் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கலாம், இல்லையா!" என்று கேட்டு விட்டு டாக்டர்களுக்குத் தகவல் சொல்லப் போனார் மதர் மேகி.

என்னவோ மதர் மேகியுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதில் கூட இப்போது ஆசையில்லாமல் போய்விட்டது.


      • *** ***


விஷயம் கேட்டு ஜானகி அழுதாள். இப்போது எதற்கெடுத்தாலும் சுலபமாக அழுகிறாள். சில சமயங்களில் தனியாக உட்கார்ந்தும் அழுது கொண்டிருக்கிறாள்.

"நான் ஒருத்தி உங்களுக்குப் பணிவிட செய்ய இங்க இருக்கும் போது நீங்க எதுக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்கணும்?" என்று கேட்டாள்.

"நானாகவா போய் இருக்கணும்னு சொல்றேன்? டாக்டர்கள்தான் அங்க இருக்கச் சொல்றாங்க ஜானகி!" என்றார்.

அன்னம் வந்துதான் அறிவுடன் பேசினாள்: "ஜானகி! தம்பிய நம்பளால பாத்துக்க முடியாதுன்னு அவங்க இப்படிச் சொல்லல. அடிக்கடி மருந்து குடுத்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கிறதினாலதான் இப்படிச் சொல்றாங்க. அது தம்பியோட நன்மைக்குத்தானே! பக்கத்திலதான ஆஸ்பத்திரி! எப்ப வேணும்னாலும் போய்ப் பார்க்கலாம! போகவிடு ஜானகி!" என்றாள்.

ஜானகி நீண்ட நேரம் முனகிக்கொண்டும் அழுது கொண்டும் இருந்து அப்புறம் அவருக்கு வேண்டிய அத்தியாவசியத் துணிகளையும் உணவுப் பொருள்களையும் எடுத்து ஒரு பையில் அடுக்கினாள்.

மாலையில் ராமாவின் காரில் ஜானகி, அன்னம் இருவரும் அவரோடு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டுப் போனார்கள். ஜானகி கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள்.


      • *** ***

சில மனிதர்களுக்குச் சாவு ஒரு நொடியில் வருகிறது. லாரியில் அடிபட்டு அரைபட்டுப் போய்விடுகிறார்கள். யாரையும் கட்டிப் பிடித்து அழுது "நான் போயிட்டு வாரேன்! என் பிள்ளை குட்டிகளைப் பாத்துக்குங்க!" என்று சொல்ல அவர்களுக்கு நேரமும் தேவையும் இருப்பதில்லை.

சில மனிதர்களுக்குச் சாவு நீண்டதாக இருக்கிறது. சாவின் தொடக்கம் எது என்று புரிவதில்லை. எப்போது முடிந்தது என்பதிலும் தௌிவில்லை. கோமாவில் ஆண்டுக் கணக்கில் கிடந்து செத்துப் போனவர்களுக்கு எந்தக் கணத்தில் உயிர் போயிருக்கும் என்பது மருத்துவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

தன் சாவு மௌன்ட் மிரியத்தின் அந்தப் படுக்கையில் வந்து படுத்தபோது ஆரம்பித்திருக்கிறது என அவர் நினைத்துக் கொண்டார். ஒரு வேளை இதற்கு முன்பே கூட ஆரம்பித்திருக்கலாம். அவர் மூளையில் அந்தப் புற்று நோய் செல் கருக்கொண்ட அந்தக் கணம் தனது சாவின் தொடக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு நாளும் நேரமும் யாராலும் நிர்ணயிக்க முடியாது. டாக்டர்களாலும் கூட முடியாது.

தான் டாக்டர் ராம்லியை சந்தித்த நாளைக் கூடத் தனது சாவின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம். அந்த நாள் அந்த நேரம் நன்றாக நினைவிருக்கிறது. அவருடைய உணர்ச்சியில்லாத பார்வையில் சாவு கருக்கொண்டிருக்க வேண்டும். அப்போது அது தெரியவில்லை.

ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு சாவுக்கெதிரான தற்காப்புகள் இருந்தன. வீடு என்று ஒன்று இருந்தது. குடும்பம் என்று ஒன்று இருந்தது. ஜானகியும் அன்னமும் இருந்தார்கள். ராமா எப்போதும் இருந்தார். உயிர் காப்பான் தோழன்.

பிறகு தனக்குப் பிடிக்காத மருமகனும் ஆதரவாக வந்திருந்தான். தன்னை மருத்துவ மனைக்குக் கொண்டு வருவதில், தூக்கிச் சக்கர நாற்காலியில் உட்கார வைப்பதில், "உடம்பு இப்ப எப்படி மாமா?" என்று கேட்பதில் ஆதரவாக, தன் சாவை நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக பக்க பலமாக இருந்தான்.

பின்னால் மகளும் வந்து சேர்ந்தாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்வது என்பதே அவளுடைய முக்கிய குணமாக இருந்தாலும் தன் வாழ்க்கைப் பிரச்சினைகளும், தன் மகனின் நோயுமே அவள் மனதைப் பெரும்பாலும் சூழ்ந்திருந்தாலும் "அப்பா, அப்பா" என்று அவள் குழையக் குழைய அழைத்து மனதுக்கு இதமாக இருந்தாள்.

இந்தத் தற்காப்புகளை எல்லாம் எத்தனை சுலபமாக எத்தனை திறமையாக அகற்றிவிட்டார் இந்த ராம்லி! இப்போது நான் முற்றிலும் அவர் கைகளில். நான் இந்தப் படுக்கையில் வந்து படுத்த நேரம்தான் டாக்டர் ராம்லியின் கொலை முயற்சியிலிருந்து எல்லாத் தற்காப்புக்களையும் இழந்த நேரம். ஆகவே இதுதான் என் சாவின் தொடக்கம்.

மருத்தும மனையின் அந்த முதல் இரவு பயங்கரமானதாக இருந்தது. அந்த வார்டில் அதிகமான நோயாளிகள் இல்லை. ஆனால் இருந்த ஓரிருவருக்கு நோய் முற்றிய நிலையில் இருந்தது.

உண்மையான தனிமை என்பது என்ன என்பதை அன்றுதான் உணர்ந்தார். ஜானகி தன் படுக்கையில் இல்லாத தனிமை. தன் படுக்கையே தனக்கு இல்லாமல் போன கொடுமை. தன் வீட்டின் அமைதியான ஒலிகளைக் கேட்டு சுகங்காண முடியாத வெறுமை.

இனி காலையில்தான் வருவார்கள். ஜானகியும் அன்னமும் முறை வைத்துக் கொண்டு வருவார்கள். ஏனென்றால் பரமாவைப் பார்க்க ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் அவர்கள் மாறி மாறிப் போக வேண்டும்.

தொடர்ந்து எத்தனை நாள் இப்படி வருவார்கள்? சலிக்காதா? சலிக்கும். அப்புறம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார்கள். "நேத்து ஒடம்பு சரியில்ல!" என்று சமாதானம் கூறுவார்கள். "இங்கதான் உங்கள நல்லா கவனிச்சிக்கிறாங்கள அப்புறம் நாங்க ஏன் அடிக்கடி வரணும்!" என்பார்கள். வருகையின் இடை வௌி நீளும். ஏனென்று கேட்டால் எரிச்சல் படுவார்கள். "எங்களுக்கு வேற வேல இல்லியா?" என்று கேட்பார்கள். இந்தத் தனிமை பழகிப் போகும். ஆஸ்பத்திரி வாழ்க்கை அன்றாட வாழ்க்கையாகிவிடும். அப்புறம் இங்குள்ள மற்ற நோயாளிகளின் முகங்களில் பூத்துள்ள வெறுமையும் விரக்தியும் தன் முகத்திலும் பூத்துவிடும்.

ஆஸ்பத்திரியின் மங்கலான விளக்குகளில் இருள் மஞ்சள் பூசியிருந்தது. ஆனால் அவர் மனதுக்குள் இருந்த இருள் கன்னங்கரிய இருளாக இருந்தது. மனதுக்குள் அதள பாதாளங்கள் தோன்றியிருந்தன. அவற்றுக்குள் அவர் உருண்டு விழுந்தவாறிருந்தார். தரை எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. தரை தட்டப் போவதில்லை என்றே தோன்றியது. ஒருவேளை இப்படி விழுந்த வாக்கிலேயே தன் வாழ்க்கை முடிவுற்று விடலாம் என நினைத்தார்.


      • *** ***


ஆனால் போன இரண்டு வாரங்களில் வீட்டிலிருந்து யாராவது தொடர்ந்து வந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஜானகி உணவு கொண்டு வருவாள். கூடவே இருந்து சாப்பிட உதவிக் கழுவி வைத்து விட்டுச் செல்லுவாள். பெரும்பாலும் கஞ்சியாக்கப்பட்ட உணவுகளை மட்டும்தான் சாப்பிட முடிந்தது. திடப் பொருள்களை ஜானகியின் வற்புறுத்தலால் கொஞ்சம் சாப்பிட்டாலும் பேதியானது. அதையும் அவளே கழுவி எடுக்க வேண்டுமே என்ற பயத்திலேயே திடப் பொருள்களைச் சாப்பிடுவதை விட்டு விட்டார்.

உடல் இளைத்துக் கொண்டே வந்தது. பேசினாலும் மூச்சு வாங்கியது.

ராமா காலையில் வந்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் இதமாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஏதாகிலும் புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்தவாறு இருப்பார். சுந்தரத்தின் பக்க மேசையில் ஏராளமான புத்ததகங்கள் வந்து சேர்ந்து விட்டன. மதர் மேகியும் சில புத்தகங்கள் கொடுத்திருந்தார். முடியும் நேரங்களிலெல்லாம் படித்தார். கண்களில் தௌிவு குறையவில்லை.

மதர் மேகி முதல் மூன்று நாட்கள் வந்து படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். மூன்றாவது நாள் பேசி விட்டுப் புறப்படும்போது சொன்னார்: "சுந்தரம். நான் இரண்டு வாரங்கள் இனி வந்து உங்களைப் பார்க்க முடியாது. ரோம் போகிறேன். வத்திக்கனில் எங்களுக்கு ஒரு கருத்தரங்கு நடக்கிறது. அதை முடித்து ஒரு இரண்டு நாள் பெல்ஜியத்திற்குப் போய் என் குடும்பத்தைப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவேன்!" என்றார்.

"அடடா! நீங்கள் இல்லாமல் எனக்குப் பொழுது போகாதே!" என்றார் சுந்தரம்.

"நீங்கள்தான் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களே! உங்களைப் போலத் தீவிரமாகப் படிப்பவரை நான் பார்த்ததில்லை! உங்களைப்போல நிறையப் படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லையே என நான்தான் பொறாமைப் படுகிறேன்!" என்றார்.

சுந்தரம் தன் புத்தகங்களைத் தேடி "இராமகிருஷ்ணர் அருளுரை" என்ற சிறு புத்தகத்தை எடுத்து மதர் மேகியிடம் கொடுத்தார். "விமானத்தில் போகும் போது படியுங்கள்!" என்றார்.

"மிக்க நன்றி. விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு படித்திருக்கிறேன். அவருடைய குருநாதரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு. மீண்டும் நன்றி!" என்று எழுந்து நின்றார்.

"மதர் மேகி! வத்திகனில் உள்ள தேவாலயத்தில் மைக்கலேஞ்சலோ ஓவியம் ஒன்று உள்கூரையில் இருக்கிறதாம். அதில் கடவுளின் கரங்கள் மனிதனை நீக்கி நீண்டிருந்தாலும் அவரின் விரல்கள் மனிதனின் விரலைத் தொடாமல் இடைவௌி விட்டு நிற்கிறதாம். அந்த ஓவியத்தை நீங்கள் பார்த்தால் அதன் கீழ் நின்று இறைவனின் விரல்கள் மனிதனை விரைவில் தொடவேண்டும் என எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்றார்.

மதர் மேகி சிரித்தவாறிருந்தார். ஏன் என்று கேட்கவில்லை. "சரி! அப்படியே வேண்டிக் கொள்வேன்!" என்றார்.

"போப்பாண்டவரைக் கண்டாலும் என் அன்பைக் கூறுங்கள்!" என்றார் சுந்தரம் சிரித்துக் கொண்டே.

"இந்தக் கருத்தரங்கின் போது அந்த பாக்கியம் கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆனால் வத்திக்கனில் இருக்கும்போது இரவில் பிரார்த்தனை பண்ணும் போது இயேசுவிடம் சொல்லி போப்பாண்டவருக்கு உங்கள் அன்பைத் தெரிவிக்கச் செய்வேன்" என்றார்.

"இத்தனை பெரிய தூதுவர் உங்களுக்கு இருக்கும் போது என்ன குறை?" என்றார் சுந்தரம்.

மதர் மேகி அடுத்த படுக்கைக்குப் போய் கொஞ்ச நேரம் பேசியிருந்து போய்விட்டார். அவர் அந்த அறையை விட்டு வௌியேறியதும் தனிமை இன்னும் மோசமானது.

டாக்டர் ராம்லி அவரைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்தார். இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை வந்து பரிசோதிப்பார். நடுநிசியிலும் வருவார். உதவியாளர்களைக் கொண்டு ரத்தம் எடுப்பார். திடீரென்று எக்ஸ்ரேக்கள் எடுக்கச் சொல்லுவார். ரேடியோதெராப்பிக்கு உத்தரவிடுவார். தான் கொன்று தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒரு பகைவனுக்காக ஒரு கொலைகாரன் இத்தனை சிரமப்பட்டு சிகிச்சை செய்வது சுந்தரத்துக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது.


      • *** ***

இன்று ஏன் இப்படி காலையிலிருந்து அடை மழை பொடூகிறதென்று தெரியவில்லை. இதனால் காலையில் வந்திருக்க வேண்டிய நண்பன் ராமாவையும் காணவில்லை.

அன்று இரவு கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினார். உடம்பின் வருத்தங்கள் அதிகமாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து மெதுவாகத் தாமே மைலோ கலந்து குடித்தார். ஜானகியிடம் சொல்லி இன்னொரு டின் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைவு படுத்திக் கொண்டார்.

தாதியைக் கூப்பிட்டுக் குளியலறைக்கு அழைத்துப் போகச் சொன்னார். அந்தச் சீனப் பெண் தோளுக்குக் கீழ் கைகொடுத்து அவரைக் குளியலறையில் விட்டு வந்தாள். வழுக்கி விழுந்து விடுவோமோ என பயந்தார். அதையும் இதையும் பிடித்துப் பிடித்துக் காலைக் கடன்களையும் குளியலையும் முடித்தார். தலை கொஞ்சம் சுற்றினாலும் விரைவில் நிலைப் பட்டது. ஆனால் விரைவில் களைப்புத் தோன்றிவிட்டது. படுக்கையில் சாய்ந்து விட்டார்.

தாதி காலை உணவு கொண்டு வந்தாள். டோஸ்ட், வெண்ணெய், அவித்த முட்டை, காப்பி. சாப்பிட்டார். அத்தனையையும் தங்க வைத்துக் கொள்ள முடிந்தது. உணவு உடம்புக்குக் கொஞ்சம் தெம்பூட்டியது.

தாதியிடம் சொல்லி சக்கர நாற்காலியில் உட்கார வைத்து ஜன்னலோரமாக நிறுத்தச் சொன்னார். அவள் அவரை வசதியாக உட்காரப் பண்ணிவிட்டு மடியில் போர்வையை விரித்து மடித்துச் சொருகிவிட்டு "நீண்ட நேரம் இப்படி உட்கார்ந்திருக்காதீர்கள். மழைநாளாக இருக்கிறது. சளி பிடிக்கும்!" என எச்சரித்துவிட்டுச் சிரித்துப் போனாள்.

வழிந்து கொண்டிருக்கும் மழைத்தாரைகள் அவரை வசியப் படுத்தின. எங்கு எப்பொழுது மழை பொழிந்தாலும் அதில் ஒரு வசியம் இருக்கிறது. மனதை அப்படியே ஈர்த்துவிடுகிறது. அதிலும் இன்று இடியோடும் மின்னலோடும் "சோ" என்ற சத்தத்தோடு பெய்கிறது. மௌன்ட் மிரியத்தின் கூரைகளில் சத்தத்தோடு கொட்டுகிறது. வடிகுழாய்களில் சடசடவென இறங்குகிறது. கால்வாய்களில் சலசலவென ஓடுகிறது.

பக்கமுள்ள மரங்களைக் குளிப்பாட்டுகிறது. அந்த மரங்களில் நீர் கோத்துக் கிளைகள் தாழத் தொங்கின. இலைகள் மழைத் துளிகளை வாங்கிக் குனிந்து தரையில் ஊற்றிவிட்டு மீண்டும் நிமிர்ந்து, வாங்கி, ஊற்றி....

இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் நேரத்தில் தாம் ஒரு சிறுபிள்ளையாகிப் போய் விடுவதாக நினைத்துக் கொண்டார். அதுவும் நல்லதுதான். சிறுபிள்ளையாகிவிட்டால் வாழ்வின் துயரங்கள் மறந்துவிடும்.

உண்மைதானா? சிறுபிள்ளைகளுக்கு வாழ்க்கையின் துயரம் தெரியாதா? பிள்ளைப் பருவத்தில் பல பயங்கள் இல்லையா? இருட்டைப் பார்த்தால் பயம். புதியவர்களைப் பார்த்தால் பயம். மிருகங்களைப் பார்த்தால் பயம். அதிலும் வேடிக்கையாக பயம் காட்டும் பெற்றோர்கள் அல்லது சகோதரர்கள் இருந்து விட்டால் மூலைக்கு மூலை பயம்தான். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தலை தூக்கி நிற்கும் அளவுக்கு அவற்றில் உள்ள மர்மங்களுக்கு பயந்து பயந்து சாவதும் சிறு பிள்ளைப் பருவத்தில்தான்.

பரமா அப்படித்தான். எதைப் பார்த்தாலும் முதலில் பயப்படுவான். விளையாட்டுப் பொருள்களில் ஆடும் ஓடும் இயந்திர பொம்மைகள் இருந்தால் பயப்படுவான். பின்னர் பழகிவிட்டால் விளையாடுவான்.

முதல் முதலில் ஜிம்மியைப் பார்த்ததும் அவனுக்கு பயம்தான். தன் தாயின் கழுத்தைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டு தொங்கினான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரம் கொடுத்த தைரியத்தில் அதன் தோலைத் தடவிக் கொடுக்கப் பழகினான். அதன் பின் ஜிம்மி அவன் முன் பதுங்கி வாலை ஆட்டி குதித்து அவன் முகத்தை நக்கி அவனை வசியப் படுத்தி விட்டது. அப்புறம் அவனும் ஜிம்மியும் கட்டிப் புரண்டிருக்கிறார்கள். அதன் குரைப்பும் அவன் சிரிப்பும் அவர்கள் வீட்டை நிறைத்ததுண்டு. "ஐயோ, இந்த நாய வெரட்டுங்களேன். பிள்ளய போட்டு அழுக்காக்குதே!" என்று ஜானகி கத்துவாள். ராதாவோ சுந்தரமோ அவர்களை வற்புறுத்தி இழுத்துப் பிரித்தால்தான் உண்டு.

ஆனால் இப்போது பரமாவைக் கட்டிக் கொண்டிருக்கும் மிருகம் ஜிம்மியைப் போல மென்மையானதல்ல! அது விளையாடும் மிருகம் அல்ல! அது புற்று நோய் என்னும் கொலைப் பிராணி. அதன் பிடியும் கடியும் விளையாட்டுக்கள் அல்ல. வினைகள். அதைப் பார்த்து பயப்படக் கூட பரமாவுக்குத் தெரியாது. அது ஜிம்மியைப் போல மென்மையான மயிர்ப் போர்வை கொண்ட மிருகம் அல்ல. அதை நாம் அணைக்கவோ தள்ளவோ முடியாது. அதுவே அணைக்கும். இறுக்கும். மூச்சுத் திணற வைக்கும். கொல்லும். அது என்னையும் இப்போது இறுக்கியிருக்கிறது. மூச்சு இப்போது மெதுவாகத் திணறுகிறது. விரைவில் கொல்லும்.

பரமாவின் நிலைமை பற்றி அடிக்கடி அவருக்குத் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவனுடைய உறுப்புக்கள் செயலிழக்க ஆரம்பித்திருந்தன. கிட்னி செயலிழந்ததால் டயலிஸிஸ் செய்ய ஆரம்பித்திருந்தார்கள் என்று சொன்னார்கள்.

போன வார இறுதியில் டாக்டரின் அனுமதி பெற்று பரமாவைப் பார்க்கப் போனார். ராமாவுடன் சிவமணி வந்திருந்து சக்கர நாற்காலியில் உட்கார வைத்து காரில் ஏற்றி இரண்டு பேருமாக பரமாவின் படுக்கை வரை அவரைக் கொண்டு சென்றார்கள். அன்னம், ஜானகி, ராதா அனைவரும் அப்போது அவனுடன்தான் இருந்தார்கள்.

அவன் படுத்த வாக்கில்தான் இருந்தான். கிட்டத்தட்ட கோமா நிலைதான். அவன் இதயத் துடிப்பு பலவீனமாக இருப்பதாகச் சொன்னார்கள். பலவிதக் குழாய்கள் போட்டிருந்தார்கள்.

சோகம் ஒரு கரிய புகைமூட்டம் போல் கவிந்து நின்ற அந்தச் சூழ்நிலையில் யாரிடம் என்ன பேசுவது என சுந்தரத்துக்குத் தெரியவில்லை. தான் என்ன சொன்னாலும் அந்தச் சூழ்நிலையை அது இன்னும் மோசமாக்குமே தவிர பிரகாசப் படுத்தாது. ஒரு வகையில் தானும் தனது சக்கர நாற்காலியும் அங்கு வந்ததன் மூலமாகவே அந்த சூழ்நிலையை இன்னும் சோகப் படுத்திவிட்டோம் எனத் தோன்றியது.

ராதா கூந்தல் கலைந்து சோர்ந்து நோயாளி போல இருந்தாள். சிவமணி அவள் பின்னால் நின்று தோள்களை அழுத்திக் கூந்தலைத் தடவிவிட்டதை அவள் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டதைப் பார்த்த போது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பரமாவின் இந்த நோயால் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறதோ?

"ராதாவும் சிவமணியும் ஒரு வகையில சமாதானமாப் போயிட்டதாகத்தான் தெரியுது. ராதா இனி திரும்ப லண்டனுக்குப் போறதப்பத்தி ஒண்ணும் முடிவு பண்ணலன்னு அன்னைக்கிச் சொன்னா! அநேகமா போகமாட்டா போலத்தான் இருக்கு" என்று ஜானகி அவரிடம் ஒரு நாள் சொல்லியிருந்தாள்.

"அப்ப அவளோட அந்த வெள்ளைக்காரக் காதலன் என்ன ஆனான்...?" என்று கேட்டார்.

"அந்தச் சனியனெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் பிள்ளைங்க கோவத்தில அதையும் இதையும் பண்ணிட்டு அப்புறம் இப்படித்தான் சிக்கல்ல மாட்டிக்கிட்டு நிக்கும்" என்றாள்.

பரவாயில்லை. வெள்ளைக்காரக் கலாச்சாரத்தில் இது தீவிரக் குழப்பத்தை ஏற்படுத்தாது. எப்படி தீவிரமாக, எல்லாருக்கும் தெரிய பகிரங்கமாகக் காதலிக்கிறார்களோ, அதே தீவிரத்தில் பகிரங்கமாகப் பிரிந்து விடுவார்கள். அது ஆணையும் பெண்ணையும் வாழ்நாள் முழுக்கப் பிணித்து வைக்கும் கலாச்சாரமல்ல. திருமண பந்தம் எல்லாம் தனி மனித வசதிக்கு ஏற்பத்தான். இன்று வசதியானால் திருமணம். நாளை வசதியில்லையானால் ரத்து. ராதாவின் வெள்ளைக்காரக் காதலன் சரிகட்டிப் போய்க் கொள்வான்.

ஆனால் ராதாவும் சிவமணியும் தங்கள் வாழ்க்கையை அத்தனை எளிதாகச் சரிகட்டிக் கொள்ள முடியாது. சிவமணி இப்போதைய துயரத்தில் ராதாவின் குறைகளை மறந்து அவளை ஏற்றுக் கொள்வது போல் இருக்கிறான். அவளும் அவன் தீயகுணங்களைத் தற்காலிகமாக மறந்திருக்கிறாள். ஆனால் நமது கலாச்சாரத்தில் நாம் பழைய புண்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டோம். கிளறிக் கிளறிச் சண்டை போடுவோம்.

பரமாவின் படுக்கை அருகில் ராதாவின் தோளைப் பற்றி நிற்கும் சிவமணியைப் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையில் அந்தக் கிளறல்களும் சண்டைகளும் வக்கிரமாகவும் விகாரமாகவும் ஆகாமல் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வார்கள் என மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

டாக்டர் சொக்கலிங்கம் அந்தப் பக்கம் வந்தார். சுந்தரத்தின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் குலுக்கினார். "மன்னிக்க வேண்டும். இனி உங்கள் பேரப்பிள்ளைக்கு நாங்கள் செய்வதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை. பிள்ளையின் உறுப்புக்கள் செயலிழந்து வருகின்றன. மூளையும் செயலிழந்து வருகிறது. ஒரே ஒரு நிம்மதி இந்த வலியையெல்லாம் அவன் உணரமுடியாது என்பதுதான்" என்றார்.

சுந்தரம் பலவீனமாகத் தலையாட்டினார். கண்களுக்குள் கண்ணீர் கொப்புளித்தது.

டாக்டர் சொக்கலிங்கம் தொடர்ந்தார்: "உங்கள் வியாதிக்கும் உங்கள் பேரப்பிள்ளை வியாதிக்கும் சம்பந்தம் இருக்கிறது. டாக்டர் ராம்லி சொல்லியிருக்க வேண்டுமே!" என்றார்.

டாக்டர் ராம்லியின் குணாதிசயங்கள் பற்றிப் பேச விரும்பாததால் "சொல்லவில்லை. எப்படி? நீங்களாவது சொல்லுங்களேன்" என்றார்.

"உங்கள் இரண்டு புற்று நோய் செல்களும் அமைப்பில் ஒரே விதமாக உள்ளன. இரண்டுக்குமே மருந்து எதிர்ப்புச் சக்தி தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் மற்ற நோயாளிகளைக் குணப் படுத்தும் மருந்துகள் உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையையும் குணப் படுத்த முடியவில்லை! அநேகமாக இது "ஜெனடிக்", அதாவது பரம்பரையாக வருவதுதான். உங்கள் ஜீனில் இது இருக்கிறது. பெரும்பாலும் ஆண் வாரிசுகளுக்குத்தான் வரும் என டாக்டர் ராம்லி கூறுகிறார்" என்றார்.

அப்படியானால் நான்தான் இதற்குக் காரணமா என எண்ணி அந்தக் குற்ற உணர்ச்சியில் மனம் சோர்ந்து போனது.

டாக்டர் சொக்கலிங்கம் தொடர்ந்தார்: "உங்கள் டாக்டர் ராம்லி, ஒரு ஜீனியஸ். அருமையான மருத்துவ ஆராய்ச்சியாளர். இந்தப் புற்று நோய்த் துறை ஆராய்ச்சியால் நம் நாட்டுக்குப் பெரிய பெருமைகளைக் கொண்டு வரப் போகிறார் பாருங்கள்!"

'ஆனால் இந்த டாக்டர் ராம்லி எனது உயிர்ப் பகைவன் என்பது உங்களுக்குத் தெரியாது' என மனதுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம். டாக்டர் போய்விட்ட வெகு நேரம் வரை பரமாவின் நிலைமைக்கு நான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி திரும்பத் திரும்ப மேலெழுந்து கொண்டிருந்தது.


      • *** ***

மழை விட்டது போல் இருந்தது. தூறல் ஆரம்பித்திருந்தது. இலைகளிலிருந்து மழைநீர் கொட்டுவது நின்று சொட்ட ஆரம்பித்திருந்தது. வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. மழைக்காட்சி அவருக்கும் அலுத்து விட்டது. உட்கார்ந்திருந்த இடத்திலேயே இருப்பது எரிச்சலாக இருந்தது. தாதியைக் கூப்பிட்டு மீண்டும் படுக்கைக்குக் கொண்டு செல்லச் சொல்லலாமா என நினைத்தார்.


தானாக ஏன் நடக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. என்ன ஆகிவிடும். கீழே விழுவேன். அடிபடும். பலத்த அடியானால் உயிர் போகும். அவ்வளவுதானே. ஒன்றும் பெரிய விஷயமில்லை.

சக்கர நாற்காலியின் இரண்டு பக்கப் பிடிகளையும் அழுத்திக் காலை ஊன்றி உந்தினார். முழங்கைகளும் கால் தசைகளும் வலியில் கெஞ்சின. இடங் கொடுக்காமல் உந்தி எழுந்து நின்றார். வலிகள் பொங்கி ஆறின.

வலது கால் ஒரு அரையடி நகர்ந்தது. இடது கால் அந்த அரையடியை இழுத்து நிரப்ப, மீண்டும் வலது கால் அரையடி முன்னேறி, இடது, வலது, இடது...!

சக்கர நாற்காலியை விட்டுத் தள்ளித் தள்ளிப் போக படுக்கை கிட்டக் கிட்ட வந்தது. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒரு சீன சக நோயாளி அவருடைய நடை முன்னேற்றத்தைப் பொறாமையுடன் பார்த்தார். வலது, இடது, வலது, இடது...!

கால்களை ஊன்றுவதில் அவற்றின் மீது நடப்பதில் ஒரு தன்னம்பிக்கை தோன்றியது. வலது, இடது, வலது, இடது...!

மனதுக்குள் நம்பிக்கை ஊற்று ஒன்று பொங்கியது. தளர்ந்த கால்களில் கூன் குருகி நடந்தாலும் உள்ளம் நிமிர்ந்திருந்தது. கால்களில் தரை வசப்பட்டதும் மனதில் வானம் வசப்பட்டது. வலது, இடது... நான் நடக்கிறேன்! எனக்கும் என் படுக்கைக்கும் இடையே உள்ள தூரத்தை நான் வெற்றி கொள்ளுகிறேன். எனக்கும் என் சக்கர நாற்காலிக்கும் உள்ள தூரத்தை நான் அதிகப் படுத்துகிறேன்.

ஏ என் சீன சக நோயாளியே! என்னைப் பார்! என் மீது நம்பிக்கை வை! என்னை உதாரணமாகக் கொள்!

மனதுக்குள் பாரதியின் பாடல் ரீங்காரம் செய்தது.

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"

படுக்கையை அடைந்தார். படுக்கையின் விளிம்பைப் பிடித்து வெற்றிப் புன்னகையுடன் நிமிர்ந்த போது வார்டின் வாசலிலிருந்து ராமா அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

"வா ராமா, வா. மழையைப் பார்த்து பயந்து தாமதமாக வரும் என் தோழனே, நான் இங்கே மலையையே வெற்றி கொண்டிருக்கிறேன். வா என் வெற்றியை என்னோடு சேர்ந்து கொண்டாடு!" என அவருக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில், அவர் வாய் திறக்கு முன்னரே ராமா அவசரமாகக் கூறினார்:

"சுந்தரம். பிரேம் போயிட்டாம்பா! காலையில ஒம்போது மணிக்கு அவன் கதை முடிஞ்சது பிரேதத்தை வீட்டுக்குக் கொண்டு வந்திட்டாங்க!" என்றார்.

படுக்கைக்குப் பக்கமாக நின்றது நல்லதாகப் போயிற்று. ராமா கை நீட்டிப் பிடிப்பதற்குள் சுந்தரம் தலை சுற்றி அந்தப் படுக்கையின் மேலேயே விழுந்தார்.