அந்திம காலம்/அந்திம காலம் - 6

விக்கிமூலம் இலிருந்து

"பரமா! வாடா கண்ணு! தாத்தா கிட்ட வா" என்று கூப்பிட்டார். அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

பேச்சு சத்தம் கேட்டு ஜானகி அறையிலிருந்து பரபரப்பாக ஓடிவந்தாள். "ஐயோ! நான் ஒரேயடியா தூங்கிட்டங்க! விடிஞ்சது கூடத்தெரியல!" பரமாவைத் தூக்கிக் கொண்டு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். "நீங்க வெள்ளனே எழுந்திருச்சிட்டிங்களா? ஏன்? உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா?"

இனி இது இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டார். கொஞ்சம் கனைத்தாலும், கொஞ்சம் குனிந்தாலும், வெள்ளன எழுந்தாலும், தாமதமாக எழுந்தாலும் அடுத்த கணம் இவன் செத்துவிடப் போகிறானோ என்ற பயத்துடன் இருப்பாள். சாகப் போவது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு கணமும் மனத்தால் சாகவேண்டாமே ஜானகி!

"எனக்கு உடம்பு பரவால்ல ஜானகி. ஆனா. இதோ பாரு, உன் மகள் நம்ப ரெண்டு பேரு தலையிலியும் ஒரு பெரிய பாரத்தத் தூக்கி வச்சிட்டுப் போயிருக்கா!" கடிதத்தைக் கொடுத்தார்.

"என்ன கடிதம்? யார் எழுதினது? எங்க ராதா?" என்று படபடத்தாள்.

"பாட்டி! வேர் இஸ் மை மம்மி?" என்று ஜானகியின் மடியில் திமிறினான் பரமா.

"என்னங்க? ராதா அறையில இல்லியா? ராதா..." என்று குரல் கொடுத்துப் பார்த்தாள்.

"படபடக்காத ஜானகி! அவனுக்கு ஏதாகிலும் குடிக்கக் கொடு. அவன விளையாட விட்டுட்டு வா, நான் விவரமா சொல்றேன்" என்றார்.

"என்னமோ மர்மமாவே பேசிறிங்க!" என்று முனுமுனுத்துக் கொண்டே பரமாவை அழைத்துக்கொண்டு சமையலறைப் பக்கம் போனாள். "பரமா! மைலோ குடிக்கிறியா, ஹார்லிக்ஸ் குடிக்கிறியா?" என்றாள்.

"ஐ வான்ட் கொக்கோ கோலா!" என்றான் பரமா.

"அதெல்லாம் இப்ப கிடையாது. மொதல்ல மைலோவக் குடி!" என்றாள்.

சுந்தரம் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தார். கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.

"அன்புள்ள அப்பா, அம்மா!

"இப்படிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவோடு இரவாகப் போவது, அதிலும் என் அன்பு மகனை விட்டுப் போவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேறு வடூயில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்.

"என் கணவர் என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார். அவரை நம்பி நான் ஏமாந்து போனேன். என்னைக் காதலிப்பதாக நடித்து என்னைப் பணம் கறக்கும் மாடாக நடத்தத் தொடங்கிவிட்டார். அநாகரீகமான மனிதர். நான் அவர் மேல் இருந்த அன்பையெல்லாம் இழந்து விட்டேன் அவரை நினைத்தாலே வெறுப்பு குமட்டிக் கொண்டு வருகிறது. இனி அவரோடு என்னால் வாழ முடியாது. விவாகரத்துக்கு விரைவில் மனுச் செய்யப் போகிறேன்.

"அப்பா, அம்மா! நான் இவரிடம் வெறுப்புக் கொண்டு ஒரு ஆணின் அன்புக்கு ஏங்கி நின்றபோது ஒரு நல்லவரைச் சந்தித்தேன். அவர் ஒரு ஆங்கிலேயர். எங்கள் பொருளகத்தின் லண்டன் அலுவலகப் பொறுப்பாளர். இங்க அவர் வந்திருந்த போது பழகிக் காதலாகிவிட்டோம்.

"அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார். என் விவாகரத்து முடிவானவுடன் அவரைத் திருமணம் செய்து கொள்வேன். பிரேமையும் அவர் ஏற்றுத் தன் மகனாக வளர்க்கத் தயாராக இருக்கிறார்.

"நேற்றிரவு இந்த உண்மைகளை உங்களிடம் சொல்ல மனம் வரவில்லை. இரவெல்லாம் யோசித்தும் சொல்லத் தைரியம் வரவில்லை. ஆகவேதான் இந்தக் கடிதம்.

"நான் என் காதலருடன் லண்டன் சென்று வாழ முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். வேலையைத் துறந்து விட்டேன். இன்று லண்டனுக்குச் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டேன். இது ஒன்றுதான் என் கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விடுதலை பெறும் ஒரே வழி. என் நிம்மதி இனி என் காதலனிடம்தான். பிரேமை உங்களிடம் விட்டுவிட்டு விடைபெற்றுப் போகத்தான் முக்கியமாக வந்தேன்.

"அம்மா, பிரேமைத் தற்காலிகமாக உங்களிடம் விட்டுச் செல்லுகிறேன். அவனைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தற்காலிகமாகத்தான். என் மறுமணம் முடிந்தவுடன் மறுநாளே வந்து அவனைப் பெற்றுக் கொள்வேன். மகனை யார் வைத்துக் கொள்வது என்று அந்த மிருகத்துடன் விவாதித்து கோர்ட் மூலம் முடிவு காண வேண்டும். கோர்ட்டு ஏறும் அவசியம் வந்தால் அவன் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லுவேன்.

"எந்தக் காரணம் கொண்டும் பிரேமை அந்த மிருகத்திடம் கொடுக்காதீர்கள். அவர்கள் குடும்பத்திடமும் ஒப்படைக்காதீர்கள். அம்மா, பிரேம் என்னைத் தவிர உங்களிடமும் அப்பாவிடமும் மட்டும்தான் ஒட்டியிருப்பான். என் மாமனார் மாமியாருடன் அவனுக்கு ஒட்டுதல் இல்லை.

"அப்பா, அம்மா! உங்கள் கால்களைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். நான் உள்ளுக்குள் எவ்வளவு வெட்கப்படுகிறேன், ஈனப்படுகிறேன் என்பதை இந்தக் கடிதத்தில் எழுதிவிட முடியாது! ஆனால் என்னை இந்த நிலைக்கு சிவமணி தள்ளி விட்டார். என் துயரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

"இப்போதைக்கு என் லண்டன் முகவரி நான் தரவில்லை. உங்களுக்குத் தந்தால் சிவமணிக்கு அது போய் அதனால் தொந்திரவு உண்டாகும். ஆனால் லண்டன் சென்று சேர்ந்ததும் உங்களுடன் போனில் தொடர்பு கொள்ளுகிறேன்.

"மீண்டும் என்னை மன்னியுங்கள்! என்னை வெறுக்காதீர்கள்! எனக்கு வேறு வழியில்லை! என் செல்வனைக் காப்பாற்றுங்கள்!

"பிரேம்! அம்மா உன்னை சீக்கிரம் வந்து அழைத்துக் கொள்ளுகிறேன். என் அன்பு முத்தங்கள்

இப்படிக்கு

ராதா

பின் குறிப்பு: காரை விமான நிலயப் பார்க்கில் விட்டுச் செல்லுகிறேன். பார்க்கிங் டிக்கெட் காருக்குள் வைக்கிறேன். காரின் இன்னொரு சாவி இக்கடிதத்துடன் விட்டுச் செல்கிறேன்."

படித்துக் கண்ணாடியைக் கழற்றும் போது "என்னதான் எழுதியிருக்கு இந்த கடிதத்தில? ராதா எங்க போயிட்டா? சொல்லுங்களேன்!" என்ற கேட்ட படியே ஜானகி வந்தாள். பரமா சமயலறையில் தன் மைலோவுடன் இருக்கிறான் எனப் புரிந்து கொண்டார்.

சுந்தரம் கடிதத்தையும் தன் கண்ணாடியையும் அவளிடம் கொடுத்தார். ஜானகி படிக்கத் தொடங்கினாள். படித்து முடிக்கு முன்னரே அவள் கண்களில் நீர்கட்டி வழிய ஆரம்பித்து விட்டது. படித்து முடித்துக் கண்ணாடியைக் கழற்றினாள்.

"பாவி, மூதேவி. இப்படிப் பண்ணியிருக்காள பாத்திங்களா?" என்றாள்.

அவள் பாவியா, மூதேவியா அல்லது தன் வாழ்க்கைத் துன்பங்களுக்கு நிவாரணம் தேடும் சாதாரணப் பெண்ணா என சுந்தரத்தால் தீர்மானிக்க முடியவில்லை. ஒன்று தெரிந்தது. மகள் புதிய சமூக அமைப்பில் தனது சுதந்திரத்தையும் தனது நிம்மதியையும் மட்டுமே பெரிது படுத்தும் சுயநலமியாகிவிட்டாள். இதனால் தன் கணவன், தன் பெற்றோர் தன் குழந்தை பாதிக்கப் படுவார்களே என்பது பற்றிய அக்கறை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது. அதைப் பிறகு சமாளித்துக் கொள்ளலாம். தன் காரியம் முதலில் நடந்தாகவேண்டும் என்று நினைக்கிறாள்.

எந்தக் கட்டத்தில் நாம் போற்றி வந்த குடும்பப் பண்புகள், இவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்த விட்டுக் கொடுத்தல், பொறுமையாய் இருத்தல், பிறர் நலம் பேணல், அன்பு காட்டுதல் என்ற பண்புகள் மறைந்து, என் இன்பம், என் வாழ்வு, என் நலம் என்ற பண்புகள் முதன்மை பெற்றன? அநேகமாக அவள் தானாக சம்பாதிக்க ஆரம்பித்து பொருளாதார நீரோட்டத்துக்குள் நுழைந்த போதே அது ஆரம்பித்திருக்க வேண்டும். பணச்சேமிப்பு, தனக்கே சொந்தமான கார் வாங்குதல், இன்ஷூரன்ஸ் வாங்குதல், பங்கு வாங்குதல் என்பதில் அது வலுப் படுகிறது. திருமணத்துக்குப் பிறகு அதே கொள்கைகள் கொண்ட கணவனுடன் சேர்ந்து வீடு வாங்குதல், வீட்டு அலங்காரப் பொருள்கள் வாங்குதல், தம் ஒத்த வயது நண்பர்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுக்குக் குறையாமல் வாழ முனைதல் என்பதில் அது தீவிரப் பட்டிருக்க வேண்டும். இந்த ஆசையின் உச்சத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே என் இஷ்டம் உன் இஷ்டம் என்ற விரிசல்கள் தோன்றுகின்றன. இந்த விரிசல்கள் வெடிப்புக்கள் ஆகின்றன. சுயநலம் மேலும் இறுகுகிறது. அன்பு நீர் வற்றி சுயநலச் சூட்டின் வெம்மையில் வாழ்க்கை வறண்டு போய் அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவைகள் ஆகி....

வௌிநாட்டு வாழ்க்கையின்ஆடம்பரம், வெள்ளைக்காரக் காதலனின் கவர்ச்சி இவற்றில் மயங்கிப் பிறந்த நாட்டையும் அதன் வாழ்க்கை முறைகளையும் புறக்கணிக்கவும் தயாராகிவிட்டாள்

"ஏங்க, நீங்க இப்ப இருக்கிற நிலையில, இந்தப் பிள்ளையையும் என் தலையில போயிட்டு போயிருக்காளே, எப்படிங்க நான் சமாளிப்பேன்...?" ஜானகி அழுதாள்.

"ஜானகி. இதோ பாரு. நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன். ஆகவே ரெண்டு பேரும் சேந்து சமாளிப்போம். சும்மா அழுதுக்கிட்டு இருக்காம ஆக வேண்டிய வேலயப் பாரு" என்றார்.

இந்த நிலைமை என்னைக் கேட்காமலேயே வந்து விடிந்திருக்கிறது. என் துன்பங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. துன்பங்கள் தொடர் தொடராய் வரும் என்பது வாழ்க்கையில் அவர் ஏற்கனவே கற்றுக் கொண்ட பாடம்தான். இன்பங்கள் அடுக்கடுக்காய் வரும் போது களியாட்டம் போடும் இதயம் துன்பங்கள் வரும்போது மட்டும் ஏன் வாழ்க்கையைச் சபிக்க வேண்டும்? சுந்தரம்! இதுதான் தைரியமாக இருக்கும் வேளை. ஜானகிக்கும் தைரியம் கொடுக்க வேண்டிய வேளை. சுந்தரம்! இந்தத் துன்பங்களை எதிர்த்து நில். வாழ்க்கையை நடத்து. வாழ்க்கையை வெல்.

அடி வயிற்றில் சுரீர் என்று வலித்தது. வயிற்றைப் பிசைந்தவாறு குனிந்தார். "என்னங்க?" என்று முதுகைப் பற்றினாள் ஜானகி. சில விநாடிகளில் வலி தணிந்தது.

"இப்படித்தான் ஜானகி, வலி வருது, போவுது"

"சரி நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க! டாக்டர் சொன்னது போல மௌன்ட் மிரியம் போயிட்டு வந்திருவோம்! இதோ நான் அரை மணி நேரத்தில கிளம்பிர்ரேன்" என்றாள்.

"பரமாவை என்ன செய்யப் போர?" என்றார். விடூத்தாள். அவன் ஒருவன் இருப்பதை ஒரு கணம் மறந்து விட்டாள்.

"அவனையும் கூட்டிட்டுதான் போகணும் வேற என்ன செய்றது?" என்றாள்.

"வேண்டாம் ஜானகி! அவனையும் இழுத்துக்கிட்டு அங்க போய் நின்னு கஷ்டப் பட முடியாது. நான் தனியா போயிட்டு வாரேன்!" என்றார்.

"முடியவே முடியாது. நீங்க இருக்கிற நிலையில தனியா உங்கள விடமாட்டேன்! எல்லாருமா போகலாம், போய் குளிச்சிட்டு ரெடியாயிடுங்க. நான் அதுக்குள்ள மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏதாகிலும் சமைச்சி வச்சிட்டு வந்திர்ரேன்" என்று பரபரப்பாக எழுந்தாள்.

"இரு ஜானகி. பெரும்பாலும் அங்க போனா அங்கயே தங்கச் சொல்வாங்கன்னுதான் நினைக்கிறேன். அப்படின்னா நீ ஒண்டியா திரும்பி வர முடியாது. அதோட ராத்திரிக்கு சிவ மணி வேற வாரேன்னு சொல்லியிருக்கான். ஆகவே நான் போயி ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டா நீ இப்படி இதெல்லாம் ஒண்டியா சமாளிப்ப?"

"எப்படியோ நான் சமாளிக்கிறேன். ஆஸ்பத்திரிக்கு போறத எந்தக் காரணத்தக் கொண்டும் நீங்க தள்ளிப் போட வேணாம்" என்று உறுதியாகச் சொன்னாள்.

இவள் அன்புப் பிடியில் அகப்பட்டுக் கொண்டேன். இனி என் மூச்சுத் திணறும் வரை என்னை அணைத்துக் கொண்டு தொல்லைப் படுத்திவிடுவாள் என்று நினைத்தார். ஆனால் இவளுடைய இந்த அன்பு அரவணைப்புக்கள் இல்லாமல் இருந்தால் நான் எப்போதே செத்துப் போயிருப்பேன் என்றும் நினைத்துக் கொண்டார்.

யோசித்தார். எல்லா ஆபத்துக்களுக்கும் எல்லா வேலைகளுக்கும் உதவும் அவருடைய சக ஓய்வு பெற்ற ஆசிரியர் இராமச்சந்திரனின் நினைவு வந்தது. அதுதான் வடூ.

"சரி. நான் சொல்றத கேளு. ராமச்சந்திரனை வரச் சொல்றேன். அவர் கார்லயே எல்லாருமா போவோம். நான் ஆஸ்பத்திரியில தங்க வேண்டி இருந்தா தங்கிக்கிறேன். உன்னையும் பரமாவையும் அவர் கொண்டு வந்து வீட்டில விட்டிருவாரு. ராத்திரிக்கு சிவமணி வர்ரதுக்குள்ள நான் டாக்டர்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வந்திர்ரேன். உக்காந்து பேசிட்டு நாளக்குக் காலையில மறுபடி ஆஸ்பத்திரிக்குப் போயிட்றேன்" என்றார்.

"சரி" என்றாள். அந்த ஏற்பாட்டில் அவளுக்கும் நிம்மதி தோன்றியிருக்க வேண்டும். சிவமணி ஒரு புயலாக வரப் போகிறான். எப்படிக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போகிறான் என்று தெரியாது. ராதா ஓடிவிட்டாள் என்ற தகவல் அறிந்ததும் இன்னும் எப்படிக் கொந்தளிப்பானோ சொல்ல முடியாது. அவனைத் தனியாக நேர்கொள்ள ஜானகியால் முடியாது. தன்னுடைய துணை அவளுக்குக் கண்டிப்பாகத் தேவை.

எழுந்து ராமச்சந்திரனுக்குப் போன் செய்தார். ஏன், எதற்கு என்ற கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொண்டார் அவர். இவன் உற்ற நண்பன். உடுக்கை இழந்தவனின் கை போன்ற துணை. ராமச்சந்திரனின் மீது நன்றிப் பெருக்கு மனத்தில் ஊற்றெடுத்தது.

தற்காலிகமாகச் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட நிம்மதியுடன் குளிக்க எழுந்தார். வயிறு, முதுகு வலிகள் அறிகுறிகள் இல்லை. உடலில் ஒரு அமைதி நிலவிற்று. ஆனால் சமயலறையில் பரமாவின் அழுகுரல் ஓங்கிக் கேட்டது.

"பாட்டி! வேர் இஸ் மை மம்மி?"

ஜானகி தனக்குத் தோன்றும் தற்காலிக பதில் ஏதாவது சொல்லட்டும் என்று குளியலறைக்குள் நுழைந்தார்.


      • *** ***

குளித்து உடை மாற்றி வந்தபோது ஜானகி உடுத்தித் தயாராக இருந்தாள். பரமாவையும் தயார்ப்படுத்தியிருந்தாள். அவனுக்குக் குடிக்க மைலோ தயார் செய்து பிளாஸ்கில் வைத்திருந்தாள். சாப்பிட பிஸ்கட்டும் சாக்லெட்டும் வைத்திருந்தாள். அவனுக்கு மாற்று உடையும் துடைத்துவிடத் துண்டும் வைத்திருந்தாள். எல்லாம் ஒரு பேக்கில் போட்டு வைக்கப் பட்டிருந்தது.

சுந்தரத்தைக் கண்டவுடன் "இங்க வாங்க" என்று அவரை அழைத்துச் சாமியறைக்குள் நுழைந்தாள். தீபம் காட்டினாள். "வேண்டிக்கிங்க! உங்களுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்கிங்க!" என்றாள். குரல் அந்த வேளையில் தளுதளுத்திருந்தது.

கையைக் கூப்பினார். என்ன வேண்டுவது? எல்லாம் தெரிந்த இறைவனாக இருந்தால் அவனுக்குத் தெரியாததென்ன? புதிதாக என்ன சொல்வது? ஆட்டுவிப்பவன் அவன் என்றால் இது அவனுடைய ஆட்டுவிப்புத்தான். நடக்கிறபடி நடக்கட்டும். ஓ தெய்வமே! உன் இஷ்டப்படி செய்! என்னை எடுத்துக்கொள்ள நேரம் வந்து விட்டால் எடுத்துக் கொள். ஆனால் என் மீது மூர்க்கமாக விளையாட வேண்டாம். நான் தாங்க மாட்டேன்.

நான் திருநாவுக்கரசர் போல் சமயத்தை உயிர்ப்பித்து உய்விக்க வந்த பெரிய மனிதனல்ல. நான் சாதாரணன். உலகாயதவாதி. உன் படைப்பில் எண்ணிறந்த புழுக்களில் நான் ஒரு புழு. என் மீது இந்தச் சூலை நோயை எய்திப் பிரயோஜனமில்லை. இந்தச் சோதனையிலிருந்து மீண்டு வந்து செயற்கரிய காரியங்கள் செய்ய என்னால் முடியாது. என்னை விட்டு விடு. நான் வாழ்வில் வேண்டுவதெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் இதோ இந்த ஜானகிக்குத் துணையாக இருந்து முதுமையில் இவளைக் காதலித்து தள்ளாத காலம் வந்தபோது தானாக செத்துப் போய்விட வேண்டும் என்பதுதான். சின்னச் சின்ன ஆசைதான். எல்லாருக்கும் இருக்கும் ஆசைதான். அதுதான் வேண்டும். அதைக் கொடுத்தால் போதும்.

விழுந்து வணங்கி எழுந்தார். ஜானகி திருநீறு பூசி விட்டாள்.

"ரொட்டி டோஸ்ட் பண்ணட்டுமா?" என்று கேட்டாள். உணவு என்றவுடன் வயிறு குமட்டியது.

"வேணாம்! சாப்பிட முடியாது! காப்பி மட்டும் குடு" என்றார். வரவேற்பறைக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார். பரமா வந்து அவர் மடிமீது ஏறினான். அவன் வயதுக்கு அவனுக்கு கனம் இல்லை. ஒரு இறகு போல லேசாகத்தான் இருந்தான்.

"பாட்டி செய்ட் யூ ஆர் சிக்!" என்றான் பரமா. டை கட்டிய சட்டையும் அரைக்கால் சிலுவாரும் போட்டிருந்தான்.

"ஆமா பரமா! அதுக்குத்தான் ஆஸ்பத்திரிக்குப் போறோம்!" என்றார் சிரித்துக் கொண்டே.

அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். "ஆர் யூ கோயிங் டு டை?" என்று கேட்டான்.

காப்பியோடு வந்த ஜானகி கத்தினாள்: "வாய மூடு சனியன! சும்மா இரு" என்றாள். பரமா பயந்து அவர் மடிக்குள் முகம் புதைத்தான். அவனை அணைத்துக் கொண்டார்.

"சும்மா இரு ஜானகி! குழந்தயத் திட்டாத! அவனுக்கு என்ன தெரியும்? பொறுமையாத்தான் பதில் சொல்லணும்" என்றார்.

"அப்படி வளத்து வச்சிருக்காங்க ரெண்டு பேரும். இவங்க போட்டி போட்டு சண்ட போட்றதுல குழந்தைக்கு ஒரு பண்பாட்டச் சொல்லித் தரத் தெரியில. பாருங்க பேசிற பேச்ச!"

அவர் பரமாவின் தலையைக் கோதிவிட்டார். "பரமா. தாத்தா சாகப் போகல. ஆஸ்பத்திரிக்குப் போனா டாக்டர் என்ன குடுப்பாங்க?"

"மெடிசன்!"

"அவ்வளவுதான். மெடிசன் குடிச்சா தாத்தா உடம்பு நல்லாயிடும்!" என்றார். பரமா எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவனிடம் அவர் விடாமல் தமிடூலேயே பேசுவார். அவன் புரிந்து கொள்வான். ஆனால் அவன் வாயில் மட்டும் தமிழ் நுழைவதில்லை.

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து பிறகு கேட்டான்: "வென் வில் மம்மி கம் பேக்?"

"அம்மாதான! கொஞ்ச நாள் கடூச்சி வருவாங்க. நீ கொஞ்ச நாள் தாத்தாவோடயே இரு!" என்றார்.

"டேக் மீ டு மங்க்கி கார்டன்!" என்றான்.

"ஓ எஸ்! கண்டிப்பா!" என்றார். அம்மா இல்லாத குறையை குரங்குப் பூங்காவுக்குப் போவதன் மூலம் சரி செய்து விட முடியுமா? அப்படித்தான் குழந்தை மனம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறது. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றிக் கொள்கிறது. எனக்குத்தான் பற்றிக்கொள்ள ஒன்றுமில்லை. வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன். பரமா உனக்கு குரங்குப் பூங்கா இருக்கிறது. பொம்மை இருக்கிறது. ஐஸ்கிரீம் இருக்கிறது. எனக்கு?

இந்தக் குறும்புப் பிள்ளையை ஜானகி எப்படி ஒண்டியாகச் சமாளிப்பாள் என்று நினைத்தவுடன் கலக்கம் வந்தது. வீட்டில் அவர்கள் வேலைக்கு உதவியாகக் கூட யாரையும் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு இத்தனை நாள் தேவையில்லாமல் இருந்தது. இப்போது?

"ஜானகி! பரமாவை வச்சிக்கிட்டு எப்படிச் சமாளிக்கப் போற?" என்று கேட்டார்.

"காலையில அக்காவுக்குப் போன் பண்ணிட்டங்க! இன்னைக்கே புறப்பட்டு வர்ரன்னு சொன்னாங்க!" என்றாள்.

அக்கா! ஆமாம். அவள் ஒருத்தி ஆபத்து அவசரத்துக்கான காப்புத் தெய்வமாக இருப்பது மறந்து விட்டது. ஆனால்...!

"என்ன சொன்ன ஜானகி? என்னப்பத்தியும் சொல்லிட்டியா?"

"இல்ல. பரமாவ ராதா விட்டுட்டுப் போனத மட்டுந்தான் சொன்னேன். ஆனா அவங்க வந்த பிறகு இத மறைக்க முடியாதுங்க! எதுக்கு மறைக்கணும்? நம்ம உறவாவும் ஆதரவாவும் இருக்கிறவங்ககிட்ட இருந்து எதுக்கு மறைக்கணும். நானும் நீங்களுமே இத உள்ள வச்சி வேகணும்னு சொல்றிங்களா?"

உண்மைதான். இதை உள்ளுக்குள் போட்டு கொதிக்கவைத்துக் கொண்டே இருக்க முடியாது. அக்காவிடம் சொல்லலாம். அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாள். அமைதியாகக் கேட்டுக் கொள்வாள். தானும் ஜானகியும் சாய்ந்து கொள்ளத் தக்க உறுதியான தூணாக இருப்பாள்.

அதே போலத்தான் நண்பன் ராமாவிடமும் சொல்லலாம். அவன் ஒருவன்தான் உற்ற நண்பனாக இருக்கிறான். அவனுக்குத் தெரியவேண்டும்.

நினைத்துக் கொண்டிருந்த போது ராமாவின் கார் வௌியில் வந்து நின்றது. அவர்கள் போய் காரில் ஏறினார்கள். "மன்னிக்கணும் ராமா! திடீர்னு கூப்பிட்டு உன்னோட திட்டங்களயெல்லாம் வீணாக்கிட்டேனா?" என்று கேட்டுக்கொண்டே காரில் உட்கார்ந்தார்.

ராமா சிரித்தார். "நம்ம திட்டம் ஒனக்குத் தெரியாததா? காலையில வாக்கிங். அப்பறம் பேப்பர். குளியல். பசியாறிட்டு மறுபடியும் பேப்பர். அப்புறம் மார்க்கெட்டுக்கு போறது! இந்தத் திட்டத்த நீ வீணாக்கினதில எனக்கு ரொம்ப சந்தோஷம் சுந்தரம்!" என்றார். பரமாவைப் பார்த்தார். "ஓ உங்க பேரப்பிள்ள இங்க இருக்கிறாரே! குட் மார்னிங் மிஸ்டர் பரமா!" என்றார்.

"மை தாத்தா இஸ் சிக்!" என்றான் பரமா.

"இந்த சனியன் வாயில நல்ல வார்த்தையே வராது!" என்றாள் ஜானகி.

ராமா அமைதியாகக் காரோட்டினார். ஏன் ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை.

மௌவுன்ட் மிரியம் மருத்துவ மனைக்குப் போகும்படி சொன்னார். இராமச்சந்திரன் பேசாமல் காரை தஞ்சோங் பூங்கா சாலை வடூயாக ஓட்டினார். சுந்தரத்தின் வீட்டிலிருந்து மௌன்ட் மிரியம் பக்கத்தில்தான் இருந்தது. பத்து நிமிடங்களுக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

சுந்தரம் கேட்டார்: "ஏன் ராமா? எதுக்காக நான் மௌவுன்ட் மிரியம் போறேன்னு கேக்க மாட்டியா?"

ரோட்டில் பதிந்திருந்த கண்களை மீட்காமல் ராமா சொன்னார்: "நீயா சொல்லட்டும்னுதான் காத்திருக்கேன்!"

"நான் சொல்லாமலே இருந்திட்டா?"

"அப்ப அது எனக்குத் தெரியக் கூடாத விஷயம்னு பேசாம இருந்திருவேன்!"

"இதுதான் நட்புக்கு லட்சணமா, ராமா?"

"அப்ப நீ சொல்லாம இருக்கிறதுதான் நட்புக்கு லட்சணமா?"

சுந்தரம் கொஞ்ச நேரம் காருக்கு வௌியே பார்த்தார். பரமாவைத் திரும்பிப் பார்த்தார். அவன் வௌியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தணிந்த குரலில் சொன்னார். "எனக்குப் புற்று நோய் வந்தாச்சி ராமா! மூளையில் புற்று நோய்! ரொம்ப முத்தின நிலைமை! உடல் பூரா பரவிடுச்சி"

ராமா தன் கனத்த மூக்குக் கண்ணாடிகளூடே சாலையையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. முகம் இறுகியிருந்தது.

"ஏதாகிலும் சொல்லு ராமா!"

"ஓ கே" என்றார் ராமா.

"என்ன ஓ கே?"

"ஓ கே. அதுக்கு என்ன பண்றது இப்ப? இன்னக்கி நீ! நாளக்கி நானாக இருக்கலாம்!"

"அவ்வளவுதானா?"

முதன் முறையாகத் திரும்பிப் பார்த்தார் ராமா. "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியில சுந்தரம். ஏதோ வாய்க்கு வந்ததச் சொன்னேன்! இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள திறமையா வார்த்தகளப் போட்டுப் பேச எனக்குத் தெரியாது!" மீண்டும் சாலையை நோக்கினார்.

அமைதியாகப் போனார்கள். சாலை விளக்குப் பகுதிக்கு வந்து நின்று ஃபெட்டஸ் பார்க் பகுதிக்குள் திரும்பினார்.

குடியிருப்பு வீடுகளிடையே ராமாவின் கார் வளைந்து வளைந்து சென்றது. சந்திர வீதி என்னும் அழகிய பொருளுள்ள ஜாலான் பூலானில் மௌவுன்ட் மிரியம் என்ற அந்த அடக்கமான ஐந்து மாடிக் கட்டடம் இருந்தது. ஆஸ்பத்திரியின் கேட் திறந்தே இருந்தது. ராமா காரை உள்ளே கொண்டு சென்றார்.

"தாத்தா! லுக்! பாட்டி இஸ் கிரையிங்" என்றான் பின் சீட்டிலிருந்த பரமா.