அந்திம காலம்/அந்திம காலம் - 7
"ஆண்டவன் என்னும் அன்பில், எல்லா சகோதரர்களும் சகோதரிகளும், அவர்கள் பிரார்த்தனையில் இருக்கும் போதும், கர்த்தரின் சொல்லை அறிவிக்கும் போதும், சாதாரண உடலுழைப்பு வேலை செய்யும் போதும் எல்லாவற்றிலும் எளிமையாக இருக்க வேண்டும். அவர்கள் புகழை நாடக் கூடாது. தற்பெருமை கொள்ளக் கூடாது. தங்கள் நற்செய்கைகளை கடவுளின் நற்செய்கைகளாக நினைத்து அதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் எல்லா நன்மைகளும் உலகாளும் அந்த உயர்ந்த கர்த்தனுக்கே உரியது என நினைந்திருக்க வேண்டும். யாரிடமிருந்து இந்த நன்மைகள் அனைத்தையும் பெருகிறோமோ அவனுக்கே எல்லா நன்றிகளும் உரித்தாக வேண்டும்"
-செயின்ட் பிரான்சிஸ் அசிசி சேவகர்களின் விதி.
தான் காத்து உட்கார்ந்திருந்த அறையில் மௌன்ட் மிரியம் மருத்துவ மனையின் கையேட்டைப் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வரிகள் அவரைக் கவர்ந்தன. பிரான்சிஸ்கன் மிஷனரியின் கீழ் நடத்தப்படும் அந்த மருத்துவ மனையில் கிறிஸ்துவர்களின் சேவை மனப்பான்மை ஒவ்வொரு அம்சத்திலும் இருந்தது.
மௌன்ட் மிரியத்தற்குள் நுழைந்தவுடனேயே கண்ணில் பட்டவர்களையெல்லாம் இவருக்கு என்ன புற்று நோயாக இருக்கும் என்று மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்த பலரும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். சிலர் சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். உடலளவில் இளைத்திருந்தாலும் உற்சாகமாகக் காணப்பட்டார்கள்.
காலையில் வந்து பதிவு செய்து கொண்டு, மருத்துவ அறிக்கைகளையெல்லாம் சமர்ப்பித்த பின் ஓர் ஓய்வறைக்கு அவரை அனுப்பி அங்கு காத்திருக்கச் சொன்னார்கள். விரைவில் ஒரு சிஸ்டர் வந்து பார்ப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஒரு குமாஸ்தா. ஜானகி, பரமா, ராமா ஆகியோரை வௌியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அறைக்குள் சென்று காத்திருந்தார். அங்குள்ள சில நாளிதழ்களையும், இதழிகளையும் புரட்டிக் கொண்டிருந்தார்.
அறை சுத்தமாக இருந்தது. மருத்துவ மனை அறைபோல் இல்லாமல் அலுவலகக் கூட்டம் நடக்கும் அறை போல இருந்தது. அமைதியாக இருந்தது. அவர் மனத்துக்குள் மட்டும் "ஓ" என்று ஒரு பய ஓசை இருந்தது. யாராகிலும் வந்து ஏதாவது சொல்லமாட்டார்களா என்று படபடப்புடன் காத்திருந்தார்.
ஒரு பத்து நிமிடத்தில் கட்டையாக ஒல்லியாக கிறித்துவ கன்னிமார் உடையில் ஓர் அம்மையார் பரந்த சிரிப்புடன் உள்ளே வந்தார். கையில் ஒரு கோப்பு வைத்திருந்தார். "மிஸ்டர் சுந்தரம், என் பெயர் மதர் மேக்டலினா. நீங்கள் என்னை மதர் மேகி என்று கூப்பிடலாம்" என்றார். கையை நீட்டிக் குலுக்கினார்.
கைகுலுக்கினார். "நீங்களும் இந்த மிஸ்டரை விட்டுவிட்டு வெறும் சுந்தரம் என்றே கூப்பிடலாம்" என்றார்.
"நல்லது, நல்லது, சுந்தரம்!" என்று ஒரு முறை பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டார் மதர் மேகி.
தலையைச் சுற்றிக் கட்டியிருந்த ஸ்கார்ஃப் அழகாக இருந்தது. வெள்ளை வெளேரென்ற தோல் அவரை ஒரு மேற்கத்திய நாட்டினர் என்பதைக் காட்டியது. ஆங்கிலத்தைக் கொஞ்சம் பிரஞ்சு போன்ற ஐரோப்பிய வாடையுடன் பேசினார். அகன்ற நெற்றி. அமைதியான முகம். முப்பது முப்பத்தைந்து வயது இளமைத் தோற்றம் இருந்தாலும் அவருக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயது இருக்கலாம் என ஊகித்துக் கொண்டார்.
"நான் டாக்டர் அல்ல சுந்தரம். ஓரளவு நர்சிங் பழகியிருக்கிறேன். இங்கு நான் பொது உறவு அதிகாரி போன்ற ஒரு பொறுப்பில் இருக்கிறேன். உங்களுக்கு எங்கள் சிகிச்சை முறை பற்றி கொஞ்சம் அறிமுகப் படுத்துவதுதான் என் வேலை. சிகிச்சையளிக்கும் டாக்டர் பின்னால் உங்களைப் பார்ப்பார்" என்றார்.
"தேங்க் யூ, மதர் மேகி" என்று பலவீனமாகச் சொன்னார் சுந்தரம்.
"உங்கள் விவரங்களை இப்போதுதான் மேலோட்டமாகப் பார்த்தேன். நீங்கள் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என அறிந்து கொண்டேன்" என்றார்,.
"ஆமாம். இப்போதுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்"
"மிகவும் மகிழ்ச்சி. என் தகப்பனாரும் ஒரு பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்தான். இன்னமும் பெல்ஜியத்தில் வேலை பார்த்து வருகிறார். நான் பெல்ஜியம் பிரஜை. இந்த பிரான்சிஸ்கன் மிஷனில் சேர்ந்த பிறகு சேவைக்கு என்னைப் பல நாடுகளுக்கு அனுப்பி விட்டார்கள். போன வருடம்தான் மலேசியாவுக்கு வந்தேன்" என்றார்.
"எங்கள் நாடு பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார் சுந்தரம். மதர் மேகியின் குரலினிமையில் நோயை மறந்து விட்டு அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் தோன்றியது.
"அற்புதமான நாடு. இத்தனை இனமக்கள் இவ்வளவு சுமுகமாகப் பழகி வாழ்கிறீர்களே! அதோடு இந்த நாடு எவ்வளவு பசுமையாக இருக்கிறது பாருங்கள். ஆண்டு முழுக்க வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. இதுதான் சுவர்க்கம்" என்றார் மதர் மேகி.
அவருடைய உற்சாகமும் அன்பும் பண்பும் மற்றவர்களிடம் சுலபமாக பூசிக் கொள்ளும் என சுந்தரம் எண்ணிக் கொண்டார். அவருடைய நோய் இப்போதே கொஞ்சம் குணமாகிவிட்டதைப் போல் இருந்தது.
மதர் மேகி கோப்பைத் திறந்தார். "சுந்தரம், உங்கள் நோயைப் பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். உங்கள் டாக்டர்கள் சொல்லியிருப்பார்கள்."
பயம் நெஞ்சைத் திடீரென கவ்விக் கொண்டது. தெரிந்த விஷயமாக இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப் படுவதைக் கேட்கவிருக்கும் கைதி போல மனம் படபடத்தது.
"ஆமாம் சொன்னார்கள். மூளையில் புற்று நோய்க் கட்டி என்று..."
"நீங்கள் படித்தவராக இருப்பதால் நான் அதிகம் உங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டியிருக்காது"
'சொல்லுங்கள் அம்மா, தைரியம் சொல்லுங்கள்' என மனம் உள்ளுக்குள் கெஞ்சியது.
"முதலில் புற்று நோய் என்றால் அது மரணப் பாதை என யாரும் நினைக்க வேண்டியதில்லை. எத்தனையோ பேர் குணமாகி சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நோயையும் போலத்தான் இந்த நோயும். இதைக் குணப் படுத்த எத்தனையோ மருந்துகள் இப்போது உள்ளன."
கேட்க சுகமாக இருந்தது.
"உடலை நாங்கள் குணப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்வோம். மனத்தளவில் நீங்கள்தான் உறுதியாக இருக்க வேண்டும்"
தாம் உறுதியாக இருக்கிறோமா எனத் தன்னைத் தானே கேட்டுப் பார்த்தார் சுந்தரம். இல்லை. மரண பயம் உலுக்குகிறது. மனம் செத்துச் செத்துப் பிழைக்கிறது.
"நோய் குணமாகும் என்று நம்புங்கள். அந்தச் செயலை இறைவனிடம் ஒப்படையுங்கள். அவனால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்" என்றார் .
'அவன் என்னைக் கைவிட்டு விட்டான் என்றே தோன்றுகிறது' என மனசுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.
"உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, சுந்தரம்?" என மதர் மேகி கேட்டது முகத்தில் அறைந்தது போல இருந்தது.
தனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என அவருக்கே சரியாக விளங்கவில்லை. மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டதைத் தவிரத் தாமாகக் கடவுளை நம்புகிற சுய நம்பிக்கை இன்னும் உள்ளத்தில் முற்றாகத் தோன்றவில்லை என்றே தோன்றியது. ஆனால் பழக்க தோஷத்தில் தலை மட்டும் மதர் மேகியின் முன் 'ஆம்' என்று ஆடியது.
"நல்லது. அதுதான் முக்கியம். நம் கையில் ஒன்றுமில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என விட்டுவிடுவதில் உள்ள நிம்மதி போல் வேறு இன்பம் கிடையாது. உங்கள் மருத்துவ அறிக்கைகளை டாக்டரிடம் கொடுத்துவிட்டேன். அடுத்த வாரம் அவர் உங்களைப் பார்த்து சிகிச்சை பற்றிப் பேசுவார்"
"அடுத்த வாரமா? ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா?" படபடப்போடு கேட்டார் சுந்தரம்.
"ஆமாம். மன்னித்துக் கொள்ளுங்கள். நிறைய நோயாளிகள் இருக்கிறார்கள். உங்கள் சிகிச்சை ஒரு வாரம் கழித்துத்தான் ஆரம்பிக்கும். இதற்கிடையில் வலி நிவாரணிகள் கொஞ்சம் தருவோம். வலி வரும் போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்."
கோப்பிலிருந்து சில கையேடுகளை எடுத்துத் தந்தார். "புற்று நோய் பற்றிய பொதுவான விவரங்களும், ரேடியோதெராப்பி, கிமோதெராப்பி இவை பற்றிய பொதுவான விவரங்களையும் இந்த சிறு புத்தகங்களில் பார்க்கலாம். உடல் சிகிச்சையோடு புற்று நோய் பற்றிய ஒரு பயிற்று நிகழ்ச்சியும் உங்களுக்கு நடத்துவோம். அதற்கு முன் நீங்கள் வீட்டில் இவற்றைப் படித்துப் பார்க்கலாம்"
பல கையேடுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில தமிழிலும் இருந்தன. மார்பகப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் பற்றிய படங்கள் சில பயத்தை ஊட்டின. மருந்து செலுத்துகின்ற முறை, பக்க விளைவுகள் பற்றியும் விவரங்கள் இருந்தன.
"டாக்டர் உங்கள் விவரங்களைப் பார்த்துவிட்டு அடுத்த வாரம் இன்னும் சில சோதனைகள் செய்து என்ன சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்வார். ஒரு சிகிச்சைத் திட்டத்தை வகுத்து உங்களுக்கு விளக்கிச் சொல்லுவார். அதன்பின்தான் சிகிச்சை ஆரம்பமாகும்" என்றார் மதர் மேகி.
"இங்கு தங்க வேண்டியிருக்குமா மதர்?" என்வறு கேட்டார்.
"பெரும் பாலோர் இங்கு தங்க வேண்டியதில்லை. சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டுக்கே திரும்பிவிடலாம். உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா சுந்தரம்?" என்று கேட்டார்.
"இருக்கிறார்கள். மனைவி, இரண்டு பிள்ளைகள், ஒரு பேரப்பிள்ளை. இப்போது கூட மனைவியும் பேரப்பிள்ளையும் வௌியில் இருக்கிறார்கள்!"
"மிக நல்லது. நல்ல அன்பான குடும்பத்தைப் போல வேறு மருந்து உலகத்தில் இல்லை" என்றார் மதர் மேகி.
அந்த நேரத்தில் ஏனோ சுந்தரத்தின் உள்ளத்தில் அந்தக் கேள்வி திடீரென வந்து முளைத்தது. மதர் மேகி இவ்வளவு அன்பாகப் பேசி நெருக்கத்தைக் காட்டியதால்தான் இருக்க வேண்டும்.
"அப்படி இருக்கும் போது நீங்கள் மட்டும் உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து விட்டீர்களே!"
மதர் மேகி திகைத்தது போல் இருந்தார். அப்புறம் அவர் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. "என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டீர்கள், சுந்தரம். இதுவரை நான் சந்தித்த எந்த நோயாளியும் என்னை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை. தங்கள் துயரத்தில் தங்களைப்பற்றியே சிந்தித்து வருந்திக் கொண்டிருப்பார்களே தவிர, என்னை ஒரு சுமைதாங்கியாக நினைப்பார்களே ஒழிய, என்னைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை" என்றார்.
"மன்னிக்க வேண்டும். உங்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனோ?"
"இல்லை, இல்லை. என்னை மகிழச் செய்திருக்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன். என் குடும்பம் அன்பான குடும்பம். இன்னும் அவர்கள் மேல் ஆழமான அன்பு வைத்துள்ளேன். ஆனால் கர்த்தருக்குச் சேவகம் செய்ய வந்ததனால் கர்த்தரின் மந்தைகள் அனைத்தும் என் குடும்பம் ஆகிவிட்டது. ஆகவே என் அன்பு இப்போது உலகத்தவர் அனைவருக்கும். குறிப்பாக வருந்துபவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும். அதற்குப் பிரதியாக நான் சந்திக்கும் அனைவரின் அன்பையும் நான் பெற்றுக் கொள்ளுகிறேன். ஒரு சிறிய குடும்பத்தைப் பிரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் இணைந்து விட்டேன்"
மதர் மேகியின் பேச்சும் உதட்டில் இருந்த மாறாத சிரிப்பும் கண்களின் கூர்மையும் சுந்தரத்தின் உள்ளத்தைத் தொட்டன. "உங்கள் உள்ளம் மிகவும் பண்பட்டதாக இருக்கிறது!" என்றார்.
"நீங்களும் ஒரு நல்ல மனிதர். உங்களை இங்கு சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனி இங்கு அடிக்கடி சந்திப்போம். உங்கள் நோய் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்வேன்."
ஒரு மருந்துச் சீட்டுக் கொடுத்தார். "மருந்துக் கௌண்டரில் சென்று இந்த வலி நிவாரணிகளை மட்டும் இன்று வாங்கிக் கொள்ளுங்கள். டாக்டரைப் பார்க்க வேண்டிய அடுத்த அப்பாயின்ட்மென்ட் இந்தக் கார்டில் எழுதியிருக்கிறேன். குட் பை" என்று எழுந்து போய்விட்டார்.
- *** ***
வீட்டுக்கு விரைவாகத் திரும்பி விட்டதில் ஜானகிக்குப் பெரிய நிம்மதி என்றாலும் சிகிச்சையை ஒரு வாரம் தள்ளிப் போட்டது அவளுக்குப் பொறுக்கவில்லை. காரில் திரும்புகிற போது "என்ன இப்படித் தள்ளிப் போட்டுட்டாங்களே. மனுஷங்களோட வருத்தம் புரியாதவங்களா இருக்கிறாங்க!" என்று கோபித்துக் கொண்டாள்.
சுந்தரத்திற்கு சிகிச்சை தள்ளிப் போனது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. சிகிச்சையின் பயத்தையும் வலிகளையும் ஒத்திப் போடுவதில் ஒரு நிம்மதி இருந்தது. "ஏன் இப்படி அலட்டிக்கிற ஜானகி? அவங்களுக்குத் தெரியாததா! நமக்குத்தான் நோய் முதன் முதல்ல அனுபவிக்கிறதில அது ரொம்ப பயங்கரமாத் தெரியுது. அவங்க ஆயிரக் கணக்கில பாத்தவங்க. எப்ப அவசரப்படணும், எப்ப அலட்டிக்காம இருக்கலான்னு அவங்களுக்குத்தான் தெரியும்" என்றார்.
"அவங்க அவசரப்படாம இருக்கிறதிலியே உன் நோய் அவ்வளவு மோசமில்லன்னு தெரியுதில்ல" என்றார் ராமா. அப்படியும் இருக்கலாம். ஆனால் இது முற்றிப் போன கேஸ். அவசரப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதாகவும் இருக்கலாம் என சுந்தரம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் அதை வாய் விட்டுச் சொல்லி, மருத்துவ மனைக்குப் போகும் போது இருந்த கடுமை மாறி கலகலப்பாக இருக்கும் சூழ்நிலையைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. பரமா கூட காரில் ஆடிக் கொண்டே
"ரோ, ரோ, ரோ யுவர் போட், ஜென்ட்லி டவுன் த ஸ்ட்ரீம், மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி, லைஃப் இஸ் பட் எ ட்ரீம்..."
என்று நர்சரி ரைம் பாடிக் கொண்டிருந்தான். காரில் இருந்த சுமுகச் சூழ்நிலை அவனையும் உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.
மனிதர்களின் மனநிலைகள் எவ்வளவு சீக்கிரம் மாறிவிடுகின்றன என எண்ணிப் பார்த்தார். இருட்டுகள் எப்போதுமே இருட்டுகளாக இருப்பதில்லை. சாம்பலாக வெளுத்து சுண்ணாம்பாகப் பளிச்சிடுகின்றன. வௌிச்சங்கள் வௌிச்சங்களாகவே இருப்பதில்லை. புகையாக மங்கித் தார் போல கருத்து விடுகின்றன. நிலையானது என ஒன்று இல்லை. மாற்றம்தான் நிலையானது. இந்த ஓடிக்கொண்டே இருக்கும் அருவியில் மகிழ்ச்சியாக மெதுவாக உன் படகைச் செலுத்து. மெரிலி, மெரிலி, மெரிலி....
இன்றிரவு ஒரு கரிய இரவாக இருக்கப் போகிறது என்பதை நினைவு படுத்திக் கொண்டார். சிவமணி வந்திறங்கப் போகிறான். "என் மனைவி எங்கே?" என்று சீறப் போகிறான். அவள் இல்லை என்று அறிந்து வீட்டைக் கலக்கப் போகிறான்.
தலைப் பொட்டில் அவருக்கு வலி தொடங்கியது. வயிற்றில் கொஞ்சம் குமட்டல் இருந்தது.. வீட்டை அடைந்ததும் மாத்திரை போடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
காரில் யாரும் பேசவில்லை. ஆனால் பரமா மட்டும் பின் சீட்டிலிருந்து மெல்லிய குரலில் இயந்தரத் தனமாக "மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி" என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். சுந்தரத்தின் நெஞ்சில் கொஞ்சமாக இருள் கவிந்தது.
- **** ****
இருளுக்கு முன் ஒளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இருள் கவிய வழி இல்லை. சிவமணி என்னும் இருள் இன்றிரவு கவியப் போகிறது என்ற எண்ணத்தோடு மத்தியானம் ஒரு மணி போல் வீடு சேர்ந்து ராமாவின் காரிலிருந்து இறங்கிய போது அவர் வீட்டு வாசலில் அக்கா என்னும் ஒளி பூத்திருந்தது. கார் சத்தம் கேட்டு அன்னம் உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.
வாய் முழுக்க சிரிப்பாக "எப்ப வந்த அக்கா?" என்று கேட்டுக் கொண்டே இறங்கினார்.
"நான் பதினொரு மணிக்கெல்லாம் வந்திட்டேன் தம்பி. வீடு பூட்டியிருந்திச்சி. பக்கத்து வீட்டு அம்மா சாவி கொண்டாந்து குடுத்தாங்க!" என்றாள் அக்கா.
"அன்ட்டி" என்றவாறு அவளை ஓடிக் கட்டிக் கொண்ட பரமா "தாத்தா இஸ் வெரி சிக்!" என்று அறிவித்தான். ஜானகி "சனியன், சனியன்" எனத் தலையில் அடித்துக் கொண்டே இறங்கினாள்.
சமயலறையிலிருந்து கமகமவென குழம்பு வாசனை வந்தது. அத்தை அடுப்படியில் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள். "என்ன மாமியும் அத்தையும் வந்தவுடன சமைக்க ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜானகி.
அன்னத்தின் முகம் கொஞ்சம் கவலையால் இருண்டது. "என்ன தம்பி ஒடம்புக்கு? ஜானகி ஒண்ணுமே சொல்லலியே!" என்றாள்.
"மெதுவா சொல்றேங்கா. நீதான் வந்திட்டல்ல, இனிமே என் உடம்பு நல்லாயிடும்" என்றார் சுந்தரம். அக்காவைப் பார்த்தது உண்மையிலேயே தெம்பாக இருந்தது.
ராமா அன்னபூரணியிடம் நலம் விசாரித்து காரை எடுத்துக் கொண்டுத் திரும்பத் தயாரானார்.
"அதெல்லாம் ஒண்ணும் முடியாது! கண்டிப்பா நீ சாப்பிட்டுத்தான் போகணும். இன்னைக்கு அத்தையோட சமையல். பிரமாதமா இருக்கும்!" என்று அவரைத் தடுத்து உட்காரப் பண்ணினார் சுந்தரம். ஆனால் தான் சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை. மனது உற்சாகமாக இருந்தாலும் வயிறு குமட்டியவாறே இருந்தது.
- *** ***
சாப்பாடு முடிந்து ராமா காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார். தனது உதவி எப்போது வேண்டுமானாலும் கூப்பிடும்படி சொல்லிவிட்டுப் போனார்.
ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் அன்னம் வந்து கேட்டாள்: "என்ன தம்பி உடம்புக்கு? எப்பவும் எங்கியும் சொந்தமா கார ஓட்டிப் போற நீ, உன் நண்பரக் கூப்பிட்டு அவர் கார்ல போற அளவுக்கு உன் உடம்புக்கு என்ன வந்திச்சி? ஆளும் ரொம்ப இளச்சிருக்கியே!"
சுந்தரம் சிரித்தார். "எல்லாருக்கும் போற காலம் ஒண்ணு வருந்தானக்கா! எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கு அவ்வளவுதான்!" என்றார்.
"என்ன வந்திருக்கு?"
"மூளையில புற்று நோய். ரொம்ப முத்தியிருக்கு!"
அன்னம் அவர் முகத்தை வைத்த கண் வாங்காமல் ஒரு முழு நிமிடம் பார்த்தாள்.
"உண்மையா தம்பி?"
எதிர் பார்த்த எதிரொலிதான். ஒருமுறை சொல்லியவுடன் நம்பக் கூடிய செய்தி அல்ல. முதல் முறை கேட்டது தவறில்லை, பொய்யில்லை, விளையாட்டில்லை என மறுமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய செய்தி. இரண்டாவது முறையில் "சும்மா பொய் சொன்னேன்" என்ற நிம்மதியான வார்த்தை வராதா என்ற எதிர்பார்ப்பு.
"உண்மைதாங்கா! எல்லா டாக்டர்களும் உறுதிப் படுத்தியாச்சி!"
"சீரியசா!"
"சீரியஸ்தான். சிகிச்சை வெற்றி பெறலன்னா சாவுதான். அதுக்கு முன்னால படவேண்டிய நரக வலியெல்லாம் ஆரம்பிச்சாச்சி!" உணர்ச்சியில்லால் சொன்னார். இதெல்லாம் எனக்குப் பழகிவிட்டது என்ற தொனியுடன்.
"என்ன செய்யிது?" அக்காவின் குரல் தளுதளுக்கத் தொடங்கியிருந்தது.
"தலையில பிளக்கிற மாதிரி வலி. அடிக்கடி மயக்கம். வயித்தில குமட்டல், வாந்தி. வலி. சில சமயத்தில முதுகிலியும் வலி. சோர்வு. சின்ன வேல செஞ்சாலும் உடல் களைப்பு. தூக்கம் பிடிக்கிறதில்ல. சாப்பாடு தங்கிறதில்ல. சாப்பிட ருசியும் இல்ல..." அவர் குரலிலும் தளுதளுப்பு இருந்தது. அக்காவுக்குச் சொல்வது போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சுய இரக்கத்தில் ஆழ்ந்து விடுவது அவருக்குத் தெரிந்தது. வயிற்றில வலியும் குமட்டலும் ஆரம்பித்திருந்தன. அடக்கி உட்கார்ந்திருந்தார்.
அன்னம் தலையைக் கைகளில் கவிழ்த்துக் கொண்டு அழத் தொடங்கியிருந்தாள். விசும்பினாள். அவள் தோள்கள் குலுங்கின.
சமயலறைச் சுவருக்குப் பக்தத்திலிருந்து மெல்லிய முனகல் குரல் கேட்டது. "தண்ணிப் பக்கம் போகாத போகாதன்னா யார் கேக்கிறாங்க? ஏன் தண்ணிப் பக்கம் போகணும்? தண்ணில ஏன் எறங்கணும்?" அத்தை அங்கு மறைவாக உட்கார்ந்து தங்கள் உரையாடலைக் கேட்டிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டார்.
ஜானகி சமயலறை வேலைகளை முடித்து விட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். அன்னம் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். "ஏன் ஜானகி இந்த விஷயத்த எங்கிட்ட முன்னாலிய சொல்லல? எங்கிட்ட இருந்து மறைக்கலான்னு பாத்திங்களா?" என்று கோபமாகக் கேட்டாள்.
"ஐயோ, எனக்கே நேத்து ராத்திரிதான் தெரியும் மாமி. வலிக்குது வலிக்குதுன்னு டாக்டரப் போய் பாத்துப் பாத்திட்டு வந்தாங்க. சாதாரண தலவலி வயித்து வலின்னுதான் நானும் இருந்தேன். ரெண்டு வாரத்துக்கு முன்னதான் ஜெனரல் ஆஸ்பத்திரியில எல்லா டெஸ்டும் பண்ணி நேத்துதான் முடிவு சொன்னாங்க. அப்புறம் ராதா வேற இந்தப் பிள்ளய கூட்டிட்டு ராத்திரி வந்திருந்தாளா? நேத்து இங்க நடந்த கூத்தில எனக்கு தலையே சுத்திப் போச்சி. அப்புறந்தான் காலையில உங்களுக்குப் போன் பண்ணினேன்."
"இதுக்கு மருந்து, சிகிச்சை இருக்கணுமே தம்பி. இப்பதான் மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கே!" என்றாள் அன்னம்.
மதர் மேகியின் முகம் அவர் மனதுக்குள் வந்தது. அவருடைய இனிய சொற்கள் காதில் ஒலித்தன.
"இருக்கு அக்கா. அடுத்த வாரந்தான் மௌன்ட் மிரியம் ஆஸ்பத்திரியில சிகிச்சை ஆரம்பிக்கப் போறாங்க. ரேடியோதெராப்பி, கெமோதெரப்பி கொடுப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதிலியும் கடுமையான பக்க விளைவுகள் இருக்கு. நெனச்சா பயமாத்தான் இருக்கு!"
"பயந்தா முடியுமா! எல்லாத்தையும் செஞ்சிதான் பாக்கணும். எல்லாம் குணமாயிடும்கிற நம்பிக்கை வேணும். மனசு உற்சாகமா இருக்கணும். கவலப் படக் கூடாது!" அன்னம் பேசுவது மதர் மேகி பேசுவது போல இருந்தது. மதர் அழகிய பிரஞ்சு வாசனை உள்ள ஆங்கிலத்தில் சொன்னார். அன்னம் பாசமான வீட்டுத் தமிழில் சொல்கிறாள். அதுதான் வேறுபாடு.
"பாட்டி கிவ் மீ சொக்கலேட்" என்றவாறு பரமா அங்கு வந்தான்.
"இந்த சந்தர்ப்பத்தில இவன் வேற இங்கு வந்து மாட்டிக்கிட்டான் மாமி!" என்றவாறு அவனை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டாள் ஜானகி. "நேத்து ராத்திரி அவங்க அம்மா கொண்டாந்து...."
"ஜானகி" என்று அதட்டினார் சுந்தரம். "அந்தக் கதையெல்லாம் பிறகு அக்காகிட்ட தனியா இருக்கும் போது சொல்லு. குழந்தயப் பக்தத்தில வச்சி அவனுக்குக் கலவரத்த உண்டாக்காத!" என்றார்.
ஜானகி அடங்கிப் போனாள். அன்னமும் அமைதியானாள். சமயலறையில் அத்தை விசும்பி அழும் குரல் கேட்டது. சாதாரண புத்தி உள்ளவர்களுக்கே மனதில் இருளை உண்டாக்கும் இந்த நோய்ச் செய்தி அத்தையின் குழம்பிப்போன முதிர்ந்த மனதில் என்னென்ன இருண்ட அதல பாதாளங்களை உண்டாக்குகிறதோ என எண்ணினார்.
இந்த வீட்டில் கருமை படர்ந்திருக்கிறது. இந்த வீட்டினுள் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இனி இரவில் கடும் புயல் சுழன்று வீசப் போகிறது. தன் மனத்தின் அவலங்களுக்கு ஒரு முடிவு இல்லை என எண்ணினார் சுந்தரம். இது ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் காலம். உறுத்தி வருத்தித்தான் விடும். இதிலிருந்து தப்பிப்பது என்பது இல்லை.
நெஞ்சு குமட்டியது. மெதுவாக எழுந்து குளியலறையை நோக்கிச் சென்றார்.
அந்த வீடு சிவமணியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தது.