உள்ளடக்கத்துக்குச் செல்

அனிச்ச மலர்/19

விக்கிமூலம் இலிருந்து

19

யோகாம்பாள் அத்தை வீட்டில் தனக்குப் பார்வை பார்த்து மந்திரிப்பது என்ற பெயரில் நடந்த எல்லாக் காரியங்களையும் அளவு மீறிய நிதானத்துடன் பொறுத்துக் கொண்டாள் சுமதி. அவளுடைய பொறுமை யும் மெளனமும் அவள் அம்மாவுக்கே ஆச்சரியத்தை அளித்தன. மந்திரிப்பதற்கு வந்திருந்த வேளாருக்குப் பத்து ரூபாய் தட்சிணையும், வெற்றிலை பாக்கும் பழமும் வைத் துக் கொடுத்து அனுப்பிவிட்டு அம்மா ஊருக்குத் திரும்பு வது பற்றிய பேச்சை மெதுவாக ஆரம்பித்த போதுதான் சுமதி உடனே பதில் சொல்ல வாய் திறந்தாள்.

"நான் இனிமேல் எந்தக் காலேஜிலேயும் எந்த ஊர்லேயும் படிக்கிறதா உத்தேசம் கிடையாது அம்மா! அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருந்தா அதை இப்பவே நீ மறந்துடு”-

'இப்போ எங்கூட ஊருக்காவது வருவியோ இல்லியோ? நீ படிக்காட்டாக் கூடப் பரவாயில்லே.”

"அதுவும் உடனே சாத்தியப்படாது அம்மா! நான் கதாநாயகியா நடிக்கப் போற சினிமாவுக்காக நாளைக்குக் காண்ட்ராக்ட் ஃபாரம் கையெழுத்தாகும். இங்கேயே இருந்து சீக்கிரமாகப் படத்தை முடிச்சுக் கொடுத்து நான் நல்ல பேரெடுக்கணும்.”

"உனக்கு நான் பெரிசா-சினிமாலே நடிக்கிறது பெரிசாடீ?”

"இப்படியெல்லாம் கேட்டால் நான் பதில் சொல்றது கஷ்டம் அம்மா”

இந்தச் சமயத்தில் யோகாம்பாள் அத்தையையும் சாட்சிக்கு இழுத்தாள் சுமதியின் தாய். ஆனால் சுமதி பிடிவாதமாக ஊருக்கு வர மறுத்து விட்டாள். யோகாம்பாள் அத்தையின் கணவர் குறுக்கிட்டுச் சுமதிக்கும் அவள் தாய்க்கும் இடையே சமாதானப்படுத்தி வைத்தார்.

"அவ ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லே! நீங்க ஊருக்குப் புறப்பட்டுப் போங்கோ. நாங்க பார்த்துக்கறோம். அவ இங்கேயே தங்கிண்டு நடிக்கிறதுக்காக ஸ்டுடியோவுக்குப் போகவேண்டிய நேரத்துக்கு மட்டும் போயிட்டு வரட்டும். மத்தவேளையிலே வீட்டோட இருக்கட்டும், ஒண்ணும் பயப்படாதீங்கோ!”

சுமதிக்கு இந்த யோசனையும் அவ்வளவாகப் பிடிக்க வில்லைதான். ஆனால் தாயிடமிருந்து தப்ப இதற்காவது இசைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தோன்றியது அவளுக்கு. அத்தை வீட்டில் இருக்க சுமதி விரும்ப வில்லை. ஆனால் வேறு வழி இல்லை. இணங்க வேண்டியிருந்தது. -

"மாமா சொல்ற இந்த யோசனையை ரெண்டு பேரும் ஒத்துக்கலாம். நான் இங்கேயே தங்கிண்டு நடிக்கப் போயிட்டு வரேன்” என்றாள் சுமதி. அம்மா இதற்கு முழு மனத்தோடு இசைந்த மாதிரிப் பதில் சொல்ல வில்லை... "எப்படியோ உனக்குத் தோணினதைப் பண்ணு” என்று சொல்லிக் கொண்டே தான் இரயிலுக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளத் தொடங்கினாள் அவள்.

"கொஞ்சம் விட்டுப் பிடியுங்கோ. ரொம்பத்தான் விரட்டினீங்கன்னா இந்தக் காலத்துப் பெண்கள் தாங்காது. அதான் கொஞ்சநாள் இங்கே இருக்கட்டும். நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னேனே? நான் சொல் றதைக் கேளுங்கோ” என்று யோகாம்பாள் அத்தையின் கணவர் மீண்டும் குறுக்கிட்டுச் சொல்லவே சுமதியின் தாய் கொஞ்சம் அடங்கினாள்.

இரவு எட்டுமணிக்கு சுமதியின் அம்மாவுக்கு மதுரை போக இரயில் இருந்தது. அங்கேயே சுமதியும் அவள் அம்மாவோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றாள் யோகாம்பாள் அத்தை. சுமதி மறுக்கவில்லை. சாப் பிட்டாள். சாப்பிடும்போது அம்மா சுமதியிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இரயிலுக்குப் புறப்படும்போது, 'கம்பெனிக் காரிலேயே உன்னை ஸ்டேஷன்லே கொண்டு போய் விட்டுடறேன் அம்மா” என்று சுமதியாக முன்வந்து பேசியபோது அம்மா நேரடியாகச் சுமதியிடம் பதில் சொல்லாமல் யோகாம்பாள் அத்தையின் பையனைக் கூப்பிட்டு, "நீ கொஞ்சம் எங்கூடத் தெரு முனைவரை வந்து ஒரு ஆட்டோ ரிக்ஷாப் பார்த்துக் குடு அப்பா, உனக்குப் புண்ணியமாப் போறது” என்று அவனைக் கூட அழைத்துக் கொண்டு போய்விட்டாள். வேண்டுமென்றே அம்மா சுமதியிடம் போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை! சுமதியின் அருகே நின்றவர்களிடம் கூடச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள். ஆனால் சுமதியிடம் மட்டும் சொல்ல வில்லை.

"இதென்ன சின்னக் குழந்தை முரண்டு மாதிரி.? குழந்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிண்டு போங்கோ !” என்று அத்தையும் அத்தை கணவரும் கெஞ்சியதுகூடச் சுமதியின் தாயை அசைக்கவில்லை.

"தான் செய்யறதை எல்லாம் அவ எங்கிட்டச் சொல் லிண்டுதானா செய்திருக்கா ? நம் மக்கிட்ட எதையும் சொல்லிக்காதவாளுக்கு நாம என்ன சொல்றது?’ என்று படியிறங்குகிறபோது சுமதியின் அம்மாவிட மிருந்து இதற்குப் பதில் வந்தது. சுமதிக்குக் கண்களில் மெல்ல மெல்ல நீர் சுரந்தது. அம்மா சொல்லிக் கொள் ளாமலே ஊருக்குப் போகிறாளே என்பதனால் மட்டும் அல்ல, தாயிடம் கூடச் சொல்லிவிட முடியாத களங்கம் தன்னிடம் ஏற்பட்டு விட்டதையும் தனக்கு மிகவும் வேண்டியவர்களிடமே அந்நியமாகி விட்டாற்போல் மனத்தால்தான் விலகி நிற்கும் தன் நிலைமையையும் எண்ணியபோது அவளுக்கு அழுகை வந்தது. பத்து நிமிஷத்துக்கெல்லாம் அம்மாவை ஆட்டோ’வில் ஏற்றி விட்டுவரச் சென்ற பையன் திரும்பி வந்து சேர்ந்தான்.

'மாமியை ஆட்டோ பேசி எக்மோருக்கு ஏத்தி யனுப்பியாச்சு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் பையன். அதுதான் சமயமென்று ‘நான் புறப்படறேன் மாமா” என்று சுமதி கிளம்பத் தயாரான போது, “கம்பெனி வண்டியைக் காலம்பர வரச் சொல் லித் திருப்பி அனுப்பி நீ இங்கேயே படுத்துக் கோம்மா” என்று குறுக்கிட்டார் யோகாம்பாள் அத்தை யின் கணவர்.'

"நாளைக்கு நான் நிச்சயமா இங்கே வந்துடறேன் மாமா என்மேல சந்தேகப்படாதீங்கோ. ஆனா இன்னிக்கு ஒரு மாற்றுப் புடவைகூடக் கையிலே எடுக்காமே நான் வந்திருக்கேன். என் பெட்டி படுக்கை சாமான்களெல் லாம் அங்கே இருக்கு. தனி வீடு மாதிரி ஒதுக்குப்புறமான போர்ஷன்லே நம்பிக்கையான வேலைக்காரி ஒருத்தியின் துணையுடன்தான் நான் இருக்கேன். சொல்லாமக் கொள்ளாம இப்பிடி வந்த இடத்திலே தங்கிட்டா அந்தப் புரொட்யூஸர் நான் சினிமாவிலே நடிக்கிறதுக்குப் பயந்து ஒடிப்போயிட்டேனு நினைச்சாலும் நினைப்பாரு. பாவம் என்னை நம்பிப் பத்திரிகைகள்ளே கூட நிறைய முழுப் பக்க விளம்பரம்லாம் பண்ணிட்டார். என்னை என் மனசு கோணாமல் ரொம்ப கெளரவமாக நடத்த வேணும்கிறத்துக்காகத்தான் புரொட்யூஸர் காரையும் டிரைவரையும் எங்கூட அனுப்பிச்சிருக்கார். அந்த மரியா தையை நான் காப்பாத்திக்கனுமா இல்லியா? நீங்களே சொல்லுங்கோ மாமா...”

அவருக்கும் அவள் சொல்வது நியாயமென்றே பட்டது. “சரி போயிட்டு வா, ஆனா நாளைக்காவது அவங்க மனசு கோணாமே விஷயத்தைச் சொல்லிட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்துண்டு இங்கே வந்துடு” என்று அந்த மாமா விடை கொடுத்தார். அத்தையிடமும், குழந்தைகளிடமும் கூடச் சொல்லிக்கொண்டு விடை பெற்று வெளியே தெருவுக்கு வந்து காரில் ஏறிக் கொண்டாள் சுமதி. மறுபடி கம்பெனிக்குத் திரும்பிய போது மேரியும் கன்னையாவும் வெளியே தோட்டத்துப் ‘புல்வெளி'யில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமதி காரில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்ததும், 'சுமதி! அப்புறம் உள்ளே போக லாம். இங்கே வா. இப்படி உட்காரு, உங்கிட்டக் கொஞ் சம் பேசணும்” என்று மேரியே அவளைக் கூப்பிட்டாள்.

"ஏன் மேரி அவசரப்படுத்தறே? உள்ளே போறதுன் னாப் போயிட்டு முகம் கிகம் கழுவிகிட்டு வரட்டுமே?” என்று கன்னையா குறுக்கிட்டுச் சொன்னார்.

"பரவாயில்லை. இப்பவே வரேன்” என்று சுமதி அப்போதே வந்துவிட்டாள். மேரியும் கன்னையாவும் அமர்ந்திருந்தது தவிர, மூன்றாவதாக ஒரு நாற்காலியும் அங்கே இருந்தது. அதை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டு சுமதி மேரியின் பக்கம் உட்கார்ந்தாள். மேரி தான். முதலில் பேச்சைத் தொடங்கினாள்.

“என்ன ? உங்கம்மா இன்னும் இருக்காளா? ஊருக்குப் போயாச்சா ?”

‘போயாச்சு. கொஞ்ச நாழிக்கு முன்னேதான் புறப் பட்டுப் போறா. நானும் கூடவே ஊருக்கு வந்தா கணும்னு சொன்னா. படத்துலே நடிக்கிறேன்னு வாக்குக் குடுத்தாச்சு நடிச்சிட்டுத்தான் வரமுடியும்னு சொல்லிட் டேன்.”

"பரவாயில்லியே. சபாஷ்! அப்படித்தான் தைரியமா ஃபேஸ் பண்ணனும்” என்றார் கன்னையா, மேரி ஒரு தாளைச் சுமதியிடம் நீட்டினாள். - -

"இதோ இதுதான் நீயும் நம்ம புரொட்யூஸர் சாரும் பண்ணிக்கப்போற காண்ட்ராக்டோட ட்ராஃப்ட். ஒரு தடவை படிச்சுத்தான் பாரேன். நீ படிச்சு ஓ.கே. பண் னினப்புறம்தான் இதை நான் டைப் பண்ணக் கொடுக் கணும். கன்னையா சொல்லலானார். "எந்தப் புரொட் யூஸ்ரும் இப்பிடி எடுத்த எடுப்பிலே ஒரு காலேஜ் கேர்ளை அப்பிடியே ஸ்டிரெயிட்டா காண்ட்ராக்ட்” போட்டு ஹீரோயினாப் போடறத்துக்குத் துணியமாட்டான் அம்மா! உனக்காகவும் உன்னோட தங்கமான குணத்துக் காகவும் மேரி சொல்றாளேங்கிறத்துக்காகவும் நான்தான் துணிஞ்சு இதை செய்றேன்ம்மா."

சுமதி அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள். சுமதிக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் கன்னையா வின் படங்களில் நடிப்பதற்கு ஐந்து வருட காலத்துக்கு அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது. படம் எடுக்கப் பட்டாலும் எடுக்கப்படாவிட்டாலும் அந்தச் சம்பளம் தரப்படும் என்றும், இந்த ஒப்பந்தகால அளவிற்குள் கம்பெனி அனுமதிபெற்று அவள் வேறு வெளியார் தயாரிப்புக்களில் நடிக்க நேரிட்டால் அந்த நடிப்புக்கான வருமானம் முழுவதும் கன்னையாவைச் சேரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாட்சிக் கையெழுத்துக்களை மேரியும் டான்ஸ் மாஸ்டரும் போடுவார்கள் என்று கன்னையா சொன்னார். சுமதிக்கு அந்த ஒப்பந்தத்தில் கோளாறுகள் எதுவும் இருப்பதாக மேலோட்டமாய்ப் பார்த்ததில் தெரியவில்லை.

"டைப் பண்ணச் சொல்லிடுங்க. நாளைக்குக் காலம் பர வடபழநி கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண் னிட்டு வந்து நான் இதிலே கையெழுத்துப் போட்டுத் தந்துடறேன்” என்றாள் சுமதி.

"கோவிலுக்குத்தானே? நானே உன்னைக் கார்லே இட்டுக்கினு போறேன்மா, புரொட்யூஸர்ங்கிற முறை யிலே நீ நல்லா நடிச்சுப் பேர் வாங்கணும்னு நானும் சாமியைக் கும்பிடணுமே? இல்லியா?”

சுமதி கன்னையாவைப் பார்த்துச் செயற்கையாக முகம் மலருவதற்கும், சிரிப்பதற்கும் முயன்றாள். சிரிப்பு வரவில்லை முகமும் மலரவில்லை.

"சாரிட்ட விசுவாசமா நடந்துக்கோ. நீ அமோகமா முன்னுக்கு வருவே, அதிலே சந்தேகமே இல்லே” என் றாள் மேரி. கன்னையாவும் சுமதியும் மறுநாள் காலை வடபழனி கோவிலுக்குப் போய்விட்டு வந்ததும் ஒப்பந்தம் பரஸ்பரம் கையெழுத்தாயிற்று. தயாரிப்பாளர் கன்னையா அட்வான்ஸ் என்று ஒரு மூவாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிச் சுமதியிடம் கொடுத்தார். இந்த ஒப்பந்தம் நடந்த மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ புதுப்படத்துக்குப் பூஜை போட்டார்கள். மறுநாளே புதுப்படத்துக்காக, ஒரு காபரே காட்சியில் இரவு நடனக்காரியாக அவள் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

அந்தக் காட்சிக்கான கால்வீட் இரவு பத்தரை மணிக்குப் போடப்பட்டிருந்தது. சுமதிக்கு உடலின் இரு பகுதியும் ஏதோ பெரிய இறக்கைகள் வைத்துக் கட்டி முக்கால் நிர்வாணமாக ஒரு தோற்றத்தில் இரவு விடுதி யில் அவள் நடனமாடி வருவதாக ஒரு காட்சியாக அது வர்ணித்துச் சொல்லப்பட்டது. .

ஆனால் என்ன காரணத்தாலோ அந்தக் காட்சியை ஒரு டிரிங்ஸ் பார்ட்டியாக நடத்தினார் கன்னையா. மேரியின் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரெக்ரியேஷன் கிளப்பிலும் அன்றொரு நாள் மைகெய்ஷா சினிமா விலும் பார்த்த பல பிரமுகர்களை இந்தக் காபரே' காட்சி ஷூட்டிங்கின்போதும் சுமதி அங்கே பார்த்தாள். அந்த முக்கால் நிர்வாணக் காட்சியில் அப்படிப் பலருக்கு முன் நிற்கவே அவள் கூசினாள். கன்னையாவோ அந்தத் தோற்றத்தோடு அவள் நிற்கையிலேயே பல பிரபலஸ்தர் களை அவள் அருகே அழைத்து வந்து அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். சுமதிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தன்னுடைய நிர்வாணத்தை அறிமுகப்படுத் தவே அவர்களை எல்லாம் கன்னையா தன்னருகே அப்படி இழுத்து வந்து விசேஷமாக அறிமுகப்படுத்துவது போல நடிக்கிறாரோ என்று சுமதிக்குத் தோன்றியது. அன்று செம்பரம்பாக்கத்தில் எடுத்த அவுட்டோர்’ காட்சி தொடங்கி ஒவ்வொன்றாகச் சிந்தித்தால் தொடர்ந்து கன்னையாவும், மேரியும் தன்னை முக்கால் நிர்வான உடம்புடனேயே காமிராவுக்கு முன்னால் நிறுத்துவதை அவள் சம்சயிக்கத் தொடங்கினாள். ஆனால் அதிலிருந்து தப்ப அவளுக்கு வழி தெரிய வில்லை. மேரியோ அவளுடைய அப்போதைய மன நிலை புரியாமல், "கூச்சப்படாதே சுமதி: கூச்சப்பட்டால் நடிக்க முடியாது” என்று சுமதியை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அடிக்கடி அவளருகே வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். சுமதிக்கு மனமும் உடலும் பதறின. காமிராமேன், டைரக்டர், ஸ்வுண்ட் என்ஜீனியர் எல்லாரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஃப்ளோரில் படப்பிடிப்பு என்று பேர் பண்ணினாலும் கன்னையா தன்னை நிர்வாணமாக நிறுத்தி நகரின் ஆஷாட பூதிகளுக்கு உண்மையாகவே ஒரு காபரே’க் காட்சியை நல்கித் தலைக்கு ஐநூறு, ஆயிரம் என்று அவர்களிடம் பணம் வசூல் பண்ணிக் கொண்டிருக்கிறாரோ என்றுகூட அவள் சந்தேகப்படத் தொடங்கினாள்.

‘வெள்ளம் தலைக்கு மேலே போயாச்சு! இனிமேல் ஜான் போனாலென்ன? முழம் போனாலென்ன?’ என்று அவளுக்கே உள்ளூர ஒரு மன ஆறுதலும் ஏற்பட்டு அவள் ரோஷ உணர்ச்சியை அமுக்கவும் தொடங்கி யிருந்தது. பத்தே நிமிஷத்தில் எடுக்க முடிந்த அந்தக் காபரேக் காட்சியை நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடிக்கவிட்டார் கன்னையா. நேரம் ஆக ஆகச் சுமதிக்கு அந்த உடையில் அப்படிப் பலர் நடுவே நிற்பது பழகி விட்டாற் போலிருந்தது. திரும்பத் திரும்பப் பிரமுகர் களோடு அவளருகே வந்து அவளை அலுக்காமல் சலிக்காமல் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் கன் னையாவும் மேரியும். தரகர்கள் கிராக்கியை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதுபோல் அது பிசகாமல் நடந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/19&oldid=1146944" இலிருந்து மீள்விக்கப்பட்டது