அனிச்ச மலர்/3
சிவசக்தி மகளிர் கல்லூரியின் விடுதி அறைகளில் உள்ளவர்களுக்காகப் பொதுவில் ஒரே ஒரு டெலிபோன் மட்டும் இருந்தது. அதுவும் பொது உபயோகத்திற்கான டெலிபோன் ’பூத்'களில் உள்ளதுபோல் காசுபோட்டுப் பேசுகிற வகையைச் சேர்ந்தது. முதலில் எல்லா விடுதி அறைகளுக்கும் நடு மையமான பகுதியில் மூன்று ’பூத்’கள் வைத்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் படிக்கிற மாணவிகளின் கூட்டம் அந்த ’பூத்’களையே மொய்த்துக் கொண்டிருக்கவே, அதைத் தவிர்க்கக் கருதி, மறு ஆண்டில் ஃபோன்களை இரண்டாகக் குறைத்தார்கள். அப்போதும் ஃபோனைச் சுற்றிக் கூட்டம் போடும் மாணவிகளின் எண்ணிக்கை குறையாமல் இருக்கவே, கடைசியில் ஒரே ஒரு டெலிபோனை மட்டும் ’பூத்’தை
நீக்கிவிட்டுத் திறந்த நிலையில் வராந்தாவில் வைத்து விட்டார்கள்.
சுற்றிலும் கண்ணாடி அடைப்பு வைத்து இரகசியமாகப் பேசுவதற்குப் 'பூத்' அமைத்து, வசதி செய்து கொடுத்தால்தான் நிறையப் பேச வருவார்கள். அந்த வசதிகளைக் குறைத்துவிட்டு, ஃபோனை வராந்தாவில் வைத்துவிட்டாலே முக்கால்வாசி மாணவிகள் பேசுவதைக் குறைத்துக்கொண்டு விடுவார்கள் என்று யோசனை செய்து பிரின்ஸிபால் அம்மாள் இந்த முடிவுக்கு வந்திருந்தாள். டெலிபோனைச் சுற்றி இருந்த கண்ணாடி அடைப்புக்கள், தடுப்பு மரச்சுவர், கூண்டு எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வராந்தாவில் சுவரை ஒட்டினாற்போலக் காசு போடுகிற பெட்டி, டெலிபோன் கருவி எல்லாவற்றையும் பொருத்திய பின்பும் கூடக் கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே டெலிபோன் என்று ஆகியிருந்ததனால், கூட்டம் முன்னைவிடப் பெருகியிருந்தது. திறந்த வெளியில், வராந்தாவில் 'பிரைவஸி' இல்லாமல் பேச நேருகிறதே என்பதாலும் மாணவிகள் கவலைப்பட வில்லை. எப்படியோ பேசிச் சமாளித்துக் கொள்ளப் பழகியிருந்தார்கள். டெலிபோன் பேசுவதற்காகச் சுமதி படியிறங்கி வந்தபோதும் ஃபோனடியில் இரண்டு மூன்று மாணவிகள் கூடி நின்றுகொண்டிருந்தனர். எவ்வளவோ அசெளகரியங்கள் இருந்தும், மாணவிகளின் ஃபோன் பேசுகிற ஆர்வமோ, ஃபோனுக்காகக் காத்து நிற்கிற ஆர்வமோ ஒரு சிறிதும் குறைந்ததாகத் தெரியவில்லை. காத்திருக்க வேண்டும் என்பதோ, டயல் செய்து விட்டுப் பத்துக்காசு நாணயங்களாகத் தயாராய் மாற்றி வைத்திருந்து சிலவற்றை எண்ணிப் போடவேண்டுமென்பதோ ஒரு சிறிதும் பாதித்திருக்கவில்லை.
ஃபோனருகே காத்திருந்த மாணவிகள் பேசிவிட்டுப் போகட்டும் என்று சுமதி ஒதுங்கி நின்றுகொண்டாள். சிறிது முன் படித்த கடிதத்திலிருந்து குறித்துக் கொண்டு வந்திருந்த ஃபோன் நம்பர், கையில் பத்திரமாக இருந்தது.
தான் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்யும்போது அங்கே பக்கத்தில் யாரும் நின்று ஒட்டுக் கேட்க நேரக் கூடாது என்பதில் சுமதி முன்னெச்சரிக்கை கொண்டிருந்தாள்.
"ஹாய் சுமதி! என்னது? டெலிபோனுக்காக வெயிட் பண்றியா?” என்று விசாரித்துக் கொண்டே அங்கே வந்தாள் ஒரு விடுதித் தோழி.
"ஆமாம்! ஒரே கூட்டமாயிருக்கே... மத்தவங்கள்லாம் பேசிட்டுப் போகட்டும்னு இருக்கேன்..."
"ஏன்? வேறு யாரும் கேட்கக் கூடாதா.. ரகசிய ஃபோனா? யாராவது பாய் ஃபிரண்டா? அல்லது...?”
"இரகசியமாப் பேசணும்னாலே அது பாய் பிரண்டோடதான் இருக்கணும்னு, என்ன விதி? வேற யாரோடவும் இரகசியமாகப் பேசறதுக்கு விஷயமே இருக்காதா?” என்று சிறிதுகூடத் தயங்காமல் உடனே பதிலுக்குக் கேட்டுவிட்டாள் சுமதி.
"நான் உன்னோட மோதத் தயாராயில்லேடீ அம்மா! இப்போ உன் 'மூட்' சரியில்லை போலிருக்கு"-
சொல்லிவிட்டு மெதுவாகச் சுமதியிடமிருந்து நழுவினாள் அந்த மாணவி.
பத்து நிமிடம் காத்திருந்த பின் சுமதிக்கு ஃபோன் கிடைத்தது. -
தன்னுடைய ஆவலை அதிகம் கவர்ந்திருக்கிற-தன் மனம் அதிகமாக எதிர்பார்க்கிற ஒர் இடத்துக்கு ஃபோன் பேசுகிறபோது ஏற்படும் படபடப்பு இப்போது அவளுக்கு ஏற்பட்டிருந்தது.
ஃபோன் பேசுகிற இடத்தில் அவளருகே யாரும் இல்லை என்றாலும் சிறிது தொலைவில் சற்றுமுன் அவளுடன் வந்து பேசியவளும் வேறொருத்தியும் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இருவரில் ஒருத்தி தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டி மற்றவளிடம் பேசிக் கொண்டிருக்கவே சுமதியின் கவனம் அவர்கள் பக்கமும் திரும்பி லயித்தது. ஃபோனில் நம்பர் கிடைத்து எதிர்த் தரப்பில் யாருடைய குரலாவது கேட்ட பின் பெட்டியில் போடுவதற்காகப் பத்துக்காசு நாணயங்கள் சுமதியிடம் தயாராயிருந்தன. எங்கேஜ்டு ஒலிதான் முதலில் வந்தது. சிறிது காத்திருந்து மறுபடி ஃபோன் செய்தபோது அந்த நம்பரில் மணி அடித்தது ஆறுதலாயிருந்தது. யாரோ ஃபோனை எடுத்து 'ஹலோ' என்றார்கள். பத்துக்காசு நாணயங்களைப் போட்டாள் சுமதி.
"பாலன் நாடகக் குழுதானே?”
"இல்லீங்களே... நீங்க யார் பேசறது? முதல்லே அதைச் சொல்லுங்க...”
"சொப்பன உலகம் நாடகக்குழு ஆபீஸா?” என்று அதன் மற்றொரு பெயரைக் குறிப்பிட்டு இரண்டாவது முறையாக விசாரித்தாள் சுமதி. மறுபடியும் பழைய மாதிரியே பதில் வந்தது.
"நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்லே...”
சுமதி தான் யாரென்பதைச் சுருக்கமாக விவரித்தாள்.
"ஓ! அந்த விஷயமா? கொஞ்சம் லயன்லே இருங்க... ஆளைக் கூப்பிடறேன்” என்பதாக எதிர்ப்புறமிருந்து ஒரு தினுசாகப் பதில் வந்தது.
சுமதி அவசர அவசரமாகக் கையிலிருந்த தாளிலிருந்து நம்பரை மறுபடி சரிபார்த்துக்கொண்டாள். அதே நம்பர்தான், சந்தேகமில்லை. ஃபோனை எடுத்தவன் பேசிய விதத்திலிருந்து அந்த டெலிஃபோன் நாடகக் குழுவிற்குச் சொந்தமானது இல்லையோ என்று எண்ணத் தோன்றியது. வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிற மாதிரி ஒரே டெலிபோன் நம்பரில் பலர் ஒண்டுக் குடித்தனம் இருப்பது என்பது சென்னை போன்ற பெரிய நகரத்தில் சகஜம்தான். புது முகங்களுக்காக விளம்பரம் செய்துள்ள அந்தக் கம்பெனியும், இந்த டெலிஃபோன் நம்பரில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிறதோ என்னவோ என்று ஊகிக்க முயன்று ஃபோனில் காத்திருந்தாள் சுமதி. சிறிது தொலைவில் அந்த இரு மாணவிகளும் கலைந்து போகாமல் இன்னும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் இன்னும் தன்னைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்களோ என்ற அவள் மனம் குறுகுறுத்தது. பேச்சு முடிந்து அவர்களோ, அல்லது வேறு யாராவது மாணவிகளோ டெலிஃபோனுக்கு அருகே வந்துவிடக் கூடாதே என்று வேறு சுமதியின் நெஞ்சம் பரபரப்பு அடைந்தது.
அப்பாடா! நல்லவேளையாக டெலிஃபோனை எதிர்ப்புறம் யாரோ மீண்டும் எடுத்துக் குரல் கொடுத்தார்கள்.
“பாலன் நாடகக் குழு என்கிற சொப்பன உலகம் கம்பெனியிலிருந்து யாரையாவது பேசச் சொல்கிறீர்களா?”
“நான் அதனோட மேனேஜர்தான்ம்மா பேசறேன்...” “நீங்க பேப்பர்ல விளம்பரம் பண்ணியிருந்தீங்களே... அது சம்பந்தமா...”
“ஆமாம்! மேலே சொல்லுங்க...”
சுமதி, தான் அவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியது, தன் பெயர், முகவரி எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத் தனக்கு அவர்கள் அனுப்பிய பதில் பற்றியும் குறிப்பிட்டாள்.
“ஃபாரத்தை எழுதி அனுப்பறதோட நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணிடுங்க. அப்புறம் ‘இண்டர்வ்யூ’ டேட் எழுதறோம்...”
“இப்போ எனக்குக் கொஞ்சம் பணக் கஷ்டம். அதனாலே ஃபாரத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அப்புறம் நேரே வர்ரப்போ பணம் கொடுத்துடலாம்னு பார்க்கிறேன்...”
“நாங்க அப்படி ஒத்துக்கறதில்லேம்மா. எம்.ஓ. ரசீதை சேர்த்து அனுப்பியிருக்கிற அப்ளிகேஷன்ஸை மட்டுந்தான் கவனிப்போம். அவங்களுக்குத்தான் நேரே வரச் சொல்லி ‘இண்டர்வ்யூ’க்கு எழுதுவோம்” “எனக்கு மட்டும் நீங்க கொஞ்சம் உதவி பண்ணப்பிடாதா? நான் கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கிற மாணவி.”
“கொஞ்சம் லயன்ல இருங்க. கேட்டுச் சொல்றேன்” என்று ஃபோனை வைத்துவிட்டு, யாரிடமோ கேட்கப் போனான் அவன்.
சுமதி சில விநாடிகள் காத்திருந்தாள். இப்போது ஃபோனருகே இன்னும் சில பெண்கள் வந்துவிட்டார்கள். தான் இனிமேல் பேச வேண்டியவற்றை அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் பேசி முடிக்க வேண்டும் என்பதைத் தன் மனத்திற்குள் எச்சரித்துக் கொண்டாள் சுமதி. மீண்டும் ஃபோன் எடுக்கப்படும் ஓசை கேட்டது. “நாங்க அதிலே போட்டிருக்கிற தேதிக்கு முன்னே பின்னே இரண்டு மூணுநாள் ஆனாலும் பரவாயில்லை. நீங்க எப்படியும் பணத்தை அனுப்பிச்சிடுங்க. அப்புறம்தான் உங்களை வரச்சொல்லி நாங்க எழுதுவோம்” என்று கூறிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பாராமலே ஃபோனை வைத்துவிட்டான் அந்த ஆள்.
“என்னடி சுமதி? இன்னும் ஃபோனை வைக்க மனசு வரலியா?” என்று கேட்டுக் கொண்டே சக மாணவி ஒருத்தி அருகே வந்தாள். சுமதி ஃபோனைக் கொக்கியில் தொங்கவிட்டாள். தன்னோடு கலகலப்பாகப் பேச முயன்ற மற்ற மாணவிகளை எவ்வளவு அவசரமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அவசரமாகத் தவிர்த்துவிட்டு, உடனே அறைக்குத் திரும்பினாள் அவள். நூறு ரூபாய்ப் பணத்தை எதிர்பார்த்துத் தயங்குவதன் காரணமாகத் தன் வாழ்வின் எதிர்காலத்தையே பொன்மயமாக மாற்றிவிடப் போகிற ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதா? என்று யோசித்தாள் அவள்.
கை வளைகளையோ, கழுத்துச் சங்கிலியையோ எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மார்வாடிக் கடைக்குப் போய்விட்டு வந்தால்தான் காரியம் முடியும் என்று தோன்றியது அவளுக்கு.
திடீரென்று தன் கழுத்தில் சங்கிலியையோ, கைகளில் வளைகளையோ காணாவிட்டால் சக மாணவிகளில் யாராவது அவைகளைப்பற்றி விசாரிப்பார்களே என்றும் தயக்கமாயிருந்தது.
அன்று வகுப்புகளுக்குக்கூட அவள் செல்லவில்லை. 'தலைவலி என்று தோழிகளிடம் சொல்லி அனுப்பிவிட்டாள். வகுப்பு, கல்லூரி, பாடம், படிப்பு எதுவுமே அவள் நினைவில் அப்போது இல்லை. எப்படியாவது எங்கேயிருந்தாவது தொடங்கி சினிமா ஸ்டாராகிவிட வேண்டும் என்ற வெறிதான் மூண்டிருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும், தெருச்சுவர்களிலும் தன் உருவத்தைக் காணப்போகிற எதிர்காலம் பற்றி அவள் இப்போதே கனவுகளில் மிதக்கத் தொடங்கியிருந்தாள்.
தான் மார்வாடிக் கடையில் போய் அடகு வைத்துப் பணம் வாங்கி அது பிரின்ஸிபால் அம்மாளுக்கோவார்டனுக்கோ தெரியவந்தால் தன்னைக் கல்லூரியிலிருந்தே நீக்கிவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. இறுதியில் பயம், தயக்கம், கூச்சம் எல்லாவற்றையும் ஆசை வெற்றிகொண்டது. எப்படியாவது பணத்தைப் பெற்று எம்.ஓ. செய்து விண்ணப்பத்தாளுடன் இணைத்து அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டாள் அவள். கடைசியாக மார்வாடிக் கடைக்குப் போவதைத் தவிரவும் இன்னொரு வழி மீதமிருப்பது தெரிந்தது. முன் பொரு நாள் மேரி தன்னைத் தேடிவந்து கூறிய விஷயம் சுமதிக்கு இப்போது நினைவு வந்தது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் குடியிருக்கும் மேரி சுமதியின் சக மாணவி. ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான அவள் படு துணிச்சல்காரி. சுமதியின் உடல் அழகைப்பற்றி அவளே கூச்சம் அடையும்படி அடிக்கடி அவளிடம் நேருக்கு நேர் புகழ்ந்திருக்கிறாள் மேரி. அந்த மேரியை இப்போது சந்தித்துப் பேசினால் என்னவென்று தோன்றியது. சுமதிக்கு. ‘டேஸ்காலரான’ மேரி அப்போது வகுப்புக்குப் போயிருப்பாள் என்றும், முதல் பீரியடு முடிந்ததும் அவளைப் பார்த்துத் தன் அறைக்கே அழைத்து வந்து தனியாக அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தாள் சுமதி.