உள்ளடக்கத்துக்குச் செல்

அனிச்ச மலர்/9

விக்கிமூலம் இலிருந்து

9

ம்மா, சுமதியை மிகவும் கடுமையாகக் கண்டித்து எச்சரித்து விட்டுப் போனாள். 'சுமதி விஷயத்தில் எந்த விதிகளையும் தளர்த்தவோ தாராளமாக நடந்து கொள்ளவோ கூடாது' என்ற வார்டன் அம்மாளிடமும் சொன்னாள். "இன்னொரு தடவை இப்படி ஏதாவது தத்துப்பித்தென்று பண்ணினாயோ படித்துக் கிழித்தது போதுமென்று காலேஜை நிறுத்திவிட்டு வீட்டோடு வாசலோடு பாத்திரம் தேய்த்துக் கோலம் போட்டுக் கொண்டு கிடக்கட்டுமென்று கொண்டு போய்த் தள்ளி விடுவேன்” என்று சுமதியிடம் கடுமையாக எச்சரித்திருந்தாள் அம்மா.

அம்மா புறப்பட்டுப் போன பின்பு வார்டன் அம்மாள், "சுமதி! நீ என்னைத் தப்பாக நினைச்சுக்காதே! இதெல்லாம் உன் நன்மைக்காகத்தான். நீ தட்டுக் கெட்டுச் சீரழிந்து விடக்கூடாதேன்னுதான் இந்தக் கண்டிப் பெல்லாம்” என்று அருகே வந்து நின்று கொண்டு ஆதர வாகத் தலையைக் கோதி விட்டபடி சுமதியிடம் சொன்னாள்.

 இதற்கு மறுநாளிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் தான் நினைத்தபடி நடக்காமல் போனதும் சுமதியைச் சோர்ந்துபோகச் செய்திருந்தன. அவள் படிப்பிலும் வகுப்புக்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினாள். ஊரிலிருந்து திரும்பி வந்த சுமதியின் ரூம்மேட், 'என்னடீ சுமதி! ஏன் என்னவோ போல இருக்கே? எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கியே?’ என்று விசாரித்தாள். -
 "ஒண்ணுமில்லே. நான் எப்பவும் போலத்தானே இருக்கேன்” என்று சொல்லிச் சுமதி சமாளிக்க முயன்றாலும் அவள் குரல் தெம்பாக இல்லை. தொடர்ந்து பல நாட்கள் சுமதி எங்கும் வெளியே செல்லவில்லை. ஹாஸ்டல் எல்லைக்குள்ளேயே அவளுடைய நாட்கள் கழிந்தன. தன் அழகையும், கவர்ச்சியையும் பற்றி அவளுக்குத் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த பெருமிதமும், கர்வமும் சிறிது மறந்திருந்தன. தான் சினிமாவில் நடித்துப் புகழ் பெறுவதற்காகவே பிறந்தவள் என்ற இறுமாப்பு உணர்ச்சியும் உள்ளூர ஒடுங்கிப் போயிருந்தது. மேரியை எதிரே காண நேரும்போதெல்லாம் இவள் பயந்து ஒதுங்குவதும் மேரி சிரித்துக் கொண்டே போவதும் வழக்கமாகி இருந்தன. அந்த வழக்கத்தை மீறி, "என்னடி சுமதீ? எப்படி இருக்கே?' என்று மேரியாகவே வலிய விசாரித்தபடி அருகே வந்த நேரங்களில் கூட சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கிறாள். சில நாட்கள் இப்படி நடந்தது.
 ஆனால் சுமதி இப்படி எல்லாம் வித்தியாசமாக நடந்து கொண்டும் கூட மேரி அவளிடம் தான் கொடுத்த 

கடனைத் திருப்பிக் கேட்கவே இல்லை. இது சுமதிக்கு வியப்பை அளித்தது. பெண், சினிமாக் கம்பெனிக்கு நூறு ரூபாய் பணம் அனுப்பித் தண்டச் செலவு செய்தாள் என்பது தெரிந்ததுமே சுமதியின் அம்மா மிகமிகக் கருமித் தனமாகப் பணம் அனுப்ப ஆரம்பித்தாள். மெஸ்ஸுக்குக் கட்டியது போகச் சோப்பு, சீப்பு, பவுடர் வாங்கக்கூடப் போதாமல் இருந்தது. இந்த லட்சணத்தில் மேரியின் கடனைத் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் இருந்தது.

மாதக்கணக்கில் ஓடிவிட்ட பின்னும் மேரியின் கடன் அப்படியேதான் இருந்தது. மேரியும் கேட்கவில்லை. சுமதியும் கொடுக்க முடியவில்லை. ஆனால் வகுப்புக் களில் மைதானத்தில், மாடிப் படிகளில் ஏறுகையில், இறங்குகையில் சந்திக்கும் போது அவள் சுமதியிடம் சுமுகமாகப் பேசுவதும், செளக்கியம் விசாரிப்பதும் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தன. சுமதி பாராமுகமாக நடந்து கொண்டால்கூட மேரி, சுமுகமாகவே இருந்தாள். சுமுகமாகவே சிரித்துப் பேசிப் பழகுகிறாள். அவளிடம் வாங்கிய இருநூறு ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்பது சுமதியின் மனத்தில் இன்னும் உறுத்திக் கொண்டுதான் இருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் எப்படிச் சம்பாதிப்பது என்பது அவளுக்குப் புரியவில்லை. பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதிப் பார்த்தாள். எல்லாம் சுவரில் அடித்த பந்துபோல் திரும்பி வந்தன. ஒரு பெரிய கவர்ச்சி வாரப் பத்திரிகையின் ஆசிரியர் மட்டும் அழகிய பெண்கள் தாங்கள் எழுதிய கதைகளோடு நேரில் வந்து தம்மைப் 'ப்ளிஸ்' செய்தால் கதைகளைப் பிரசுரித்துத் தாராளமாகப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அவரை 'ப்ளீஸ்' செய்வது எப்படி என்பதை விசாரித்தால் அது மேரியின் 'ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்பை' விட மோசமாக இருந்தது. பல பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்கூட அந்தப் பத்திரி காசிரியரின் தயவுக்காக அப்படி எல்லாம் செய்வதாகக் கேள்விப்பட்டபோது சுமதியால் நம்பமுடியாமல் இருந்தது. அதே சமயத்தில் அவற்றைப் பொய் என்றும் அவளால் தள்ளிவிட முடியவில்லை.

சுமதியின் அம்மாவோ ஒவ்வொரு செலவாகக் குறைக்கச் சொல்லி எழுதிக் கொண்டிருந்தாள். படிக்கிற காலத்தில் படிக்கிற வயதில் தலைக்கு வாசனைத் தைலம் இல்லாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. வெறும் தேங்காய் எண்ணை பூசி வாரிக்கொள் போதும், பவுடர் வேண்டாம். பவுடருக்கு ஆகிற செலவு அனாவசியம் என்று ஒவ்வொன்றாகக் குறைக்கச் சொல்லி அம்மா எழுதிய கடிதங்களில் எல்லாம் மகளுக்கான உபதேசப் பட்டியல் இருந்தது. சிக்கன விளக்கவுரை இருந்தது.

சுமதி ஏற்கெனவே நவநாகரிகப் பொருட்களின் மேல் அளவற்ற ஆசைகள் நிறைந்தவள். விலையுயர்ந்த சோப்பு, விலையுயர்ந்த ஹேர் ஆயில் என்று உபயோகிக்க விரும்புகிறவள். அம்மா அவளைச் சிக்கனப்படுத்த சிக்கனப்படுத்த அவள் பேராசைகள் உள்ளூர வளர்ந்தன. அடிபட்ட நாகம் படத்தை மேலே மேலே உயர்த்திச் சீறுவது போல் அவளுடைய ஆசைகளும், சபலங்களும் மேலெழுந்தன. மற்றவர்களுக்கிடையே ஒரு மகாராணிபோல் உலாவர வேண்டுமென்று அவள் விரும்பினாள். தாயின் கட்டுப்பெட்டித் தனத்தை அவள் வெறுத்தாள். விலையுயர்ந்த சேலை, பிளவுஸ் பீஸ் இவைகளை எல்லாம் அவள் விரும்பினாள். தன்னைப் பிறருக்கு எடுப்பாகக் காண்பிக்கும் ஆடை அலங்காரம் அழகு சாதனங்கள் இவற்றை எல்லாம் அவள் தேடித் தவித்து வாங்குவதும், சேகரிப்பதும் வழக்கமாகி இருந்தன. பீச் ஸ்டேஷன் அருகே பர்மா பஜாரில், சிங்கப்பூரிலிருந்து வருகிற மிகமிகக் கவர்ச்சியான பிரேலியர்கள் விற்கப்படுவதாக ஒரு சிநேகிதி தெரிவித்தபோது அவளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்தக் கடைக்குப் போய் ஒரு ஜோடி பிரேஸியர்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுமதி.

"இயற்கையாகவே நீ நல்ல வளர்த்தி! உனக்கு இதெல்லாம் எதுக்குடீ” என்ற அந்த சிநேகிதி கூடச் சுமதியை அப்போது கேலி செய்திருந்தாள். அப்புறம் சுமதி அதை அணிந்து வந்த தினத்தன்று "அழகுக்கு அழகு செய்வதுபோல் இது உனக்கு எடுப்பா இருக்குடீ சுமதி!" என்று அதே சிநேகிதி அவளைப் புகழ்ந்தும் இருக்கிறாள். அம்மாவும் வார்டனும் சேர்ந்து சதி செய்து இப்போது அந்தக் கனவுகளை எல்லாம் பாழாக்கி விட்டாற்போலத் தோன்றியது. அவர்கள் இருவர் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுமதிக்கு. தன் வழியில் அவர்கள் முட்டுக்கட்டைகளாய்க் குறுக்கே நிற்பதாக உணர்ந்தாள் அவள்.

நீண்ட நாட்களுக்குப்பின் ரூம்மேட் அவளை அன்று காலை வெளியே அழைத்தாள். அன்று கல்லூரிக்கு விடுமுறை நாள். யூனிவர்சிட்டி லைப்ரரியில் ஒரு வேலையாகச் சேப்பாக்கம் வரை போய்விட்டு வரலாம் என்று, அறையில் உடன் வசிக்கும் விமலா வற்புறுத்தியும்கூடச் சுமதி மறுத்தாள். விமலா அவளை விடவில்லை. மேலும் வற்புறுத்தினாள்.

"தனியாகப் போயிட்டு வர்ரதுக்குப் போராடிக்கும்டி! சும்மா எங்கூட வா... வார்டன் ஒண்ணும் சொல்லமாட்டா. ஸ்டடீஸ் சம்பந்தமாத்தான் நாம யூனிவர்சிட்டி லைப்ரரிக்குப் போறோம். கேட்ட உடனே பெர்மிஷன் கிடைக்கும்.”

"நான் ஒண்ணும் வரலை. சலவைக்குப் போன ஸாரி ஒண்ணும் திரும்பி வரலே. கட்டிண்டு வெளியிலே போறத்துக்கு எங்கிட்ட நல்ல ஸாரிகூட எதுவும் இல்லேடி விமலா...” "நான் தரேண்டி அருமையான ஸாரி, புறப்படு. ஸாரி மட்டுமில்லே. ஹேர் ஆயில், சோப்பு, எது வேணும்னாலும் நான் தரேன். உனக்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கோ உன்கில்லாததாடி?”

விமலா இதைச் சொல்லியபோது தன்னைக் குத்திக் காட்டிக் கிண்டல் செய்கிறாளோ என்று சுமதிக்கு முதலில் அவள்மேல் கோபம்தான் வந்தது. ஹேர் ஆயில் வாசனைப் பவுடர் இதெல்லாம் வேண்டாம் என்று அம்மா தனக்கு எழுதிய கடிதத்தைத் தான் எங்காவது அசந்து மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தபோது, விமலா எடுத்துப் படித்துப் பார்த்திருப்பாளோ என்று கூடச் சுமதிக்குச் சந்தேகமாயிருந்தது. ஒன்று, அவள் அந்தக் கடிதத்தைப் படித்திருக்க வேண்டும். அல்லது தன்னுடைய ஹேர் ஆயில், ஸ்நோ, பவுடர் இவை எல்லாம் தீர்ந்தபின் தான் புதியவற்றை வாங்காமலே இருப்பதைப் பார்த்து விமலாவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் விமலா அதைச் சொல்லிய விதம் கிண்டலாகவோ, கேலியாகவோ இல்லை. அவள் இரண்டாவது முறையாகவும், அதே விஷயத்தைச் சொல்லிய விதம் உண்மையாகவே சுமதி தன்கூட வருவதை விரும்பும் தொனியில்தான் இருந்தது. விமலாவின் தாராளமான முகஸ்துதி சுமதியை அவள் வசப்படுத்தியது. "உனக்கு எதுக்குடி பவுடர், ஹேர் ஆயில் எல்லாம்? நீ எந்த ஸாரி கட்டிண்டாலும் அழகாயிருக்கப் போறே. நீ கட்டிக்கிற ஸாரிக்குத்தான் உன்னாலே அழகு. ஸாரியாலே உனக்கு என்ன அழகு?”

சுமதி அன்று விமலாவோடு யூனிவர்சிட்டி லைப்ர்ரிக்குப் புறப்பட்டாள். மாதக் கணக்கில் எங்குமே வெளியே போகாத சுமதி அன்று புறப்பட்டிருந்தாள் என்பதால் வார்டன் அனுமதி மறுக்கவில்லை. பகல் நேரத்தில் விமலாவும் துணைக்கு வர அவள் போகிறாள் என்பதாலும் வார்டன் அம்மாளுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டாள். சுமதியும் விமலாவும் ஹாஸ்டல் மெஸ்ஸில் பகலுணவை முடித்துக் கொண்டு புறப்பட்டிருந்தார்கள். இருவரும் விடுதியை விட்டுக் கிளம்பி மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றபோதுதான், விமலாவுக்குத் தான் ‘மணிபர்ஸ்' எடுத்துவர மறந்துவிட்டது ஞாபகம் வந்தது.

"சுமதி! நீ இங்கேயே நில்லுடி! நான் பர்ஸை மறந்து அறையிலேயே வச்சிட்டு வந்துட்டேன். ஒரு நிமிஷத்திலே ஒடிப்போயி எடுத்திண்டு வந்துடறேன்” என்றாள் விமலா.

"எல்லாச் செலவுமா அஞ்சு ரூபாய்க்கு மேலே போகாதுன்னா நீ திரும்ப ரூமுக்குப் போகவேண்டாம். எங்கிட்டேய இருக்குடி விமலா! சமாளிச்சுக்கலாம். வா" என்று சுமதி சொல்லியும் விமலா கேட்கவில்லை.

"பரவாயில்லேடீ! நான் ரூமுக்கே போய் எடுத்துண்டு வந்துடறேன். கையிலே கொஞ்சம் பணம் வச்சிண்டு வெளியிலே புறப்படறதுதான் நல்லது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குத் திரும்ப நடக்கத் தொடங்கி விட்டாள் விமலா, விமலா போனபின் அவள் தலை கல்லூரிக் காம்பவுண்டுக்குள் மறைந்ததுமே பஸ் நிறுத்தத்தில் சுற்றும் முற்றும் நின்றவர்களைக் கவனித்தாள் சுமதி. அந்தப் பஸ் நிறுத்தம் வம்புக்கும் கலகத்துக்கும் பெயர் பெற்றது. பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருந்ததினால் வம்பு செய்யும் மாணவர்களின் குழு ஒன்று அங்கு நிரந்தர மாக இருக்கும். அன்று விடுமுறை நாளானதால் மாணவர்களின் கூட்டம் எதையும் காணோம். ஆனால் வேறு ஆட்கள் இருந்தார்கள். அவளருகே இடுப்பில் லுங்கியும், கழுத்தில் கட்டிய கலர்க் கைக்குட்டையுமாகத் தலை சீவாத பரட்டைத் தலை ஆண்கள் இருவர் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தனர். இருவரும் தன் பக்கமே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு சுமதி முகத்தை சுளித்தாள். அவசரமாகத் தன் பார்வையை அவர்கள் பக்கமிருந்து அவள் மீட்டுவிட்டாலும் அவர்களுடைய பார்வையும் கவனமும் அவள் மேலிருந்து விலகவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அவர்கள் இருவருமே அவளருகே நெருங்கி வந்தனர்.

"என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அன்னக்கி ஹோட்டல் குபேராவிலிருந்து நான்தானேம்மா இட்டாந்தேன்" தணிந்த குரலில் அந்த இருவரில் ஒருவன் சுமதியை நோக்கி ஏதோ சொன்னான்.

சுமதி பதில் சொல்லவில்லை. ரவுடிகளைப் போல வும், காலிப் பயல்களைப் போலவும் தோற்றமளித்த அவர்களிடம் தனக்கென்ன பேச்சு வந்தது என்று வாயை இறுகப் பொத்திக் கொண்டு பேசாமலிருந்தாள் அவள்.

"என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அல்லது மறந்துட்டாப்ல நடிக்கிறியா? செயிண்ட் தாமஸ் மவுண்ட் சட்டைக்காரிச்சி ஒருத்தி-அதுகூட இங்கேதாம்மா படிக்குது அந்தப் பொண்ணுசுட நீ வரமாட்டே? கபாலியை அதுக்குள்ளார மறந்தா போச்சு?”

"நீங்க ரெண்டு பேரும் யாரு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியாதுப்பா. ஆனா நீங்க ஏதோ ரொம்பத் தெரிஞ்சமாதிரிப் பேசறீங்க. வேற யாரோன்னு தவறாகப் புரிஞ்சிகிட்டுப் பேசறதாத் தெரியுது . நான் உங்களை இதுக்கு முன்னாடிப் பார்த்ததே கிடையாது..." என்று சுமதி கண்டிப்பான குரலில் இரைந்ததும் அவர்கள் இருவரில் ஒருவன், "சர்த்தான் விடுடா! புதிசா வேஷம் போடுது. பெரிய பத்தினித் தங்கமாட்டம் பேசுது” என்றான்.

சுமதிக்கு ஆத்திரம் மூண்டது.

"வாயை அடக்கிப் பேசு! போலீஸ்லே பிடிச்சுக் குடுக்கனுமா ?”

அவள் இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும்போது விமலா திரும்பி வந்துவிட்டாள். அந்த இரு ரவுடிகளும் கூட மெல்ல மெல்ல ஒதுங்கிவிட்டனர். விமலாவும் பக்கத்தில் வந்து சேர்ந்துவிட்டாள். "என்னடி சுமதி ஏதாவது தகராறா? யார் அந்த ஆட்கள்? வரவர நம்ம காலேஜ் பஸ் ஸ்டாப் பெரிய வம்புபிடித்த இடமாப்போச்சு. எத்தனையோ தடவை பிரின்ஸிபால் கிட்டவும், வார்டன் கிட்டவும், கம்ப்ளெயிண்ட் பண்ணி அவங்க போலீஸ் கமிஷனருக்குப் புகார் எழுதி இங்கே இந்த பஸ் ஸ்டாப் கிட்ட ஒரு போலீஸ்காரன் காவல் நிற்கறதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க. இன்னிக்கு வீவு நாளோ இல்லையோ அதனாலே அந்தப் போலீஸ் பாராவைக் கூடக் காணோம். ஏதாவது பெரிய தகராறு ஆனால் வார்டன் ரூமுக்குப் போய் ஃபோன் பண்ணிட்டுப் போகலாம் வர்ரயா?” என்று விமலா கேட்டவுடன், “அதெல்லாம் ஒண்ணு மில்லேடி! காலிப்பசங்க கிட்டவந்து நின்னு யாரிட்டவோ பேசற மாதிரி ஜாடைமாடையா ஏதோ உளறினாங்க. கொஞ்ச நாழி பொறுத்துப் பார்த்தேன், முடியலே. காது கொடுத்துக் கேட்க முடியாதபடி எல்லை மீறிப் போச்சு, அப்புறம் பதிலுக்கு நாலு வார்த்தை விட்டேன், வாயை மூடிண்டு போனாங்க” என்ற சிரித்தபடியே விமலாவுக்கு மறு மொழி கூறினாள் சுமதி.

“பேசினால்கூடப் புரியாது தடியங்களுக்கு, காலிலே இருக்கிறதைக் கழற்றி செமத்தியா நாலு வாங்கு வாங்கியிருக்கனும், அப்பத்தான் புரியும்.”

பஸ் வந்தது. இருவரும் ஏறிப் புறப்பட்டனர். விமலாவோடு சகஜமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றாலும் சுமதியின் மனம் என்னவோ பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த இரு தரகர்களையும் சுற்றியே இருந்தது. மேரி அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த வேறு யாரோ ஒரு பெண் என்று தன்னைத் தப்பாகப் புரிந்துகொண்டு அவர்கள் தன்னிடம் வந்து பேசியிருப்பதைச் சுமதி தெரிந்துகொண்டாள்.

யூனிவர்சிட்டி லைப்ரரியில் வேலை முடிந்து எதிரே கடற்கரை மெரீனா கேண்டீனில் தேநீர் அருந்தச் சென்ற போது கூடச் சுமதியின் சிந்தனை எங்கோ இருந்தது. விமலா எதையோ பாட சம்பந்தமாக விவரித்துக் கொண்டு வந்தாள். சுமதி போலியாக அதைக் கேட்பது போல நடித்துக் கொண்டு சென்றாள். அவள் மனம் பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த ஆட்கள்-அவர்கள் பேசிய பேச்சு எல்லாவற்றையும் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது. அவர் தன்னை மேரியோடு சேர்த்துப் பார்த்திருப்பது புரிந்து கொண்டிருப்பது பற்றியும் சுமதி நினைத்தாள்.

“புறப்பட்டு வந்ததிலிருந்து உன் யோசனை எங்கேயோ இருக்குடி, நான் எதையோ சொல்றேன். நீ பராக்குப் பார்த்துக்கொண்டே கேட்கிறே? அந்த ஆட்கள் உன்னை ஏதாவது பயமுறுத்தினாங்களா? உள்ளத்தை சொல்லுடி, போனதும் முதல் வேலையா வார்டன் கிட்டச் சொல்லிப் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம்” என்று விமலாவே மறுபடி துணிந்து கேட்ட போதுதான்,

"பயமுறுத்தறதாவது ஒண்ணாவது ? ஆளைப்பாரு ஆளை. என்னைப் பயமுறுத்தறதுக்கு அவன் தாத்தா வந்தாலும் ஆகாது” என்று தெம்பாக விமலாவுக்கு மறுமொழி கூறினாள் சுமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/9&oldid=1146886" இலிருந்து மீள்விக்கப்பட்டது