அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/004

விக்கிமூலம் இலிருந்து
வெறி பிடித்த வெள்ளையரும்
காந்தியும்


ராஜ்கோட் நகரில் தொழில் செய்து வந்த பாரிஸ்டர் காந்திக்குப் போதிய வருவாய் வரவில்லை. பம்பாய் சென்றால் வருமானம் வருமென்று அங்கிருந்த வழக்குரைஞர்கள் காந்தியிடம் கூறினார்கள்.

வந்தார் பம்பாய்க்கு காந்தி! இங்கும் அவருக்குரிய வருமானம் கிடைக்கவில்லை. வழக்குரைஞர் பணி புரிவோருக்கு அச்சம் அரும்பக்கூடாது. சட்டத்தின் சந்நிதானத்திலே கம்பீரமாகப் பேசும் தொனி இருக்க வேண்டும். எள் மூக்களவும் கூட கூச்ச சுபாவம் இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்கும் எப்போதும் எவரிடமும் சரளமாக வாதாடும் திறமையும் அமைய வேண்டும்.

இந்தியாவில் படித்த வழக்குரைஞருக்கே இந்த அளவுகோல் என்றால், இங்கிலாந்து போய் சட்டம் படித்து விட்டு வந்த ஒரு பாரிஸ்டருக்கு இவற்றை விட அதிகத் திறமை இருந்தால் தானே, வரம்பற்ற வருமானம் வர வழி பிறக்கும்!

காந்திக்கு எப்போது பார்த்தாலும், சங்கோஜ சுபாவமும், அச்சத்தால் அஞ்சும் குணமும் குடிகொண்டு இருந்ததாலும், அவரது தோற்றமும் அவருக்குச் சரிவர ஒத்துழைக்காததாலும், அவரால் புகழ் பெற்ற பாரிஸ்டராக வர முடியவில்லை. அதனால், அவருக்குப் போதிய வருமானம் இல்லை; வீண் செலவு தான் மிச்சமாக இருந்தது மீண்டும் காந்தி ராஜ்கோட் நகருக்கே திரும்பி விட்டார்.  காந்தியின் தமையனார் உதவியால் நீதிமன்றம் வருவோருக்கு மனுக்களை எழுதிக் கொடுத்து வருமானம் தேடினார். இந்த நேரத்தில் அவரது அண்ணன், கரிம் ஜவேரி என்ற ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த கரீம் ஜவேரி, தென் ஆப்ரிக்காவில் இருந்த தாதா அப்துல்லா என்ற பெரிய வியாபாரச் சீமானுக்கு நண்பர், அந்த வியாபார நிறுவன உரிமையில் இவர் பாகஸ்தர். அவர்களுடைய வழக்கு ஒன்று தென் ஆப்ரிக்காவில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த வழக்குக்கு உதவி செய்ய காந்தியை ஜவேரி அழைத்தார். காந்தியும் ஒப்புக் கொண்டார். இருப்பினும் தனது இல்லத் தரசியை விட்டுவிட்டுப் போக அவருக்கு மனமில்லை.

இருந்தாலும், தென் ஆப்ரிக்காவுக்குப் போயே ஆக வேண்டும் என்ற தொழில் விருப்பத்தால் "ஒரு வருடத்தில் திரும்பி வந்து விடுகிறேன்" என்ற வாக்குறுதியை மனைவிக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்.

இளம் வயதிலேயே இரண்டு பேருக்கும் பால்ய விவாகம் நடந்ததாலும், எப்போதும் அந்தத் தம்பதிகள் சேர்ந்து வாழக் கூடாது என்பதற்காகவும் இருவரும் அடிக்கடி பிரிக்கப்பட்டு, தாய் வீடு, மாமனார் வீடு என்று பிரிந்து வாழும் வாழ்க்கையினை நடத்தி வந்தார்கள்.

இப்போது சதி, பதி இருவருமே எல்லா விவரமும் தெரிந்து கொண்ட பின்பும், பிரிவுத்துயரத்தைக் கஸ்தூரி பாய் ஏற்கவேண்டிய துன்பநிலை உருவானது. இருபத்து நான்கு வயதான பின்பும், இரு குழந்தைகளை ஈன்ற பின்பும் கூடவா பிரிவுத் துன்பம் என்று எண்ணி, தனது தந்தை வீட்டிலேயே அவர் வாழ்ந்தார். 

ஓராண்டுக்குள் மீண்டும் சந்திப்போம் என்ற வாக்குறுதியைத் தந்து விட்டுப் போன காந்திக்கு தென்னாப்ரிக்கா அனுபவம், ஒரு சோதனைக் கூடமாக உருவெடுத்து விட்டது.

ஒரு வழக்கில் வாதாடிடச் சென்ற காந்தி, தென் ஆப்ரிக்கா சென்றதும் ஓர் அரசியல் வாதியாகும் நிலை எதிர்பாராமல் அவருக்கு ஏற்பட்டு விட்டது.

எந்த வழக்குக்காக அவர் உதவி செய்திடச் சென்றாரோ, அந்த வழக்கை அவர் சமாதானம் பேசி, சுமுகமாகத் தீர்த்து வைத்து விட்டதால் காந்திக்கு அங்குள்ள இந்தியர்கள் இடையே புகழ் உருவானது; நற்பெயரும் பெற்று விட்டார்.

அந்த நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றது. அவர்களால் இந்தியாவிலே இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் கூலிகள் என்றும், அடிமைகள் என்றும், சம உரிமைகளற்று இழித்துரைக்கப் படுவதைக் காந்தி நேரிலேயே கண்டார்; வேதனைப்பட்டார்; அந்த அவமானத்தை அவரும் இந்தியர் என்ற காரணத்தால் அனுபவிக்கும் இழிநிலைகளுக்கு ஆளானார். இதனால் அறப் போர் வீரராக மாறினார்.

தென்னாப்ரிக்காவின் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சட்ட மறுப்புப் போராட்டம் என்ற ஒரு புது அறப்போரைத் துவக்கினார். இந்தியர்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் அவர்களது உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். அதற்காகவே, வன்முறைகள் இல்லாத ஒரு போராட்டத்தைக் காந்தியடிகள் துவக்கினார்.

எந்தவித ஆதரவும் இல்லாமல், யாருடைய ஒத்துழைப்பையும் எதிர்பாராமல், காந்தி நடத்திய இந்த சத்தியாக்கிரகத்தால் அவர் உலகில் பிரபலமான ஒரு போராட்ட வீரர் என்ற புகழைப் பெற்று விட்டார்.

"ஒராண்டுக்குள் திரும்பி வந்து விடுகிறேன்” என்று கஸ்தூரி பாயிடம் வாக்களித்து விட்டு சென்ற காந்தியடிகள் மூன்றாண்டுகள் வரை தென்னாப்பிரிக்காவில் தங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர் நடத்திய போராட்டம் முடிந்ததும் காந்தி இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பி வந்த அவர், தென்னாப்ரிக்க இந்தியரின் உரிமைகளை மீட்டுக் கொடுத்து விட்டுத் திரும்பியதால், இந்தியாவில் உள்ள தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்து நடந்த விவரங்களை உலகுக்கு உணர்த்தினார்.

பிறகு, மனைவி கஸ்தூரி பாயையும், தனது இரு குழந்தைகளையும், சகோதரி மகனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு, மீண்டும் தென்னாப்ரிக்காவுக்கு கப்பல் ஏறிப் புறப்பட்டார்.

ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் துறை முகத்தைக் கப்பல் அடைந்தது. இதைக் கேள்விப்பட்ட தென்னாப்ரிக்க ஆங்கிலேயர் ஆட்சி, காந்தி மீண்டும் தென்னாப்ரிக்கா வருவதை விரும்பவில்லை.

காந்தியடிகள் பயணம் செய்து வந்த கப்பல் தாதாபாய் நிறுவனத்துக்கு உரிமையானது. அதனால், காந்தியை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விடுமாறும், அதற்கான செலவுகளை கப்பல் நிறுவனத்துக்குக் கொடுத்து விடுவதாகவும் ஆங்கிலேயர் அரசு தாதாபாயிடம் தெரிவித்து விட்டது. அதற்கு கப்பல் உரிமையாளர் இணங்காமல் மறுத்து விட்டார். தென்னாப்ரிக்கா வெள்ளையர்கள், தங்களை இழிவுபடுத்தி காந்தி போராடியதால், ஆத்திரம் அடைந்தனர். குடும்பத்தோடு காந்தி கப்பலை விட்டு இறங்கியதும் அவர்களைத் தாக்கத் தயாராக இருந்தார்கள்.

இதனால்,வைத்திய சோதனை என்ற காரணத்தைக் காட்டி அவர் பயணம் புரிந்து வந்த கப்பலைத் துறை முகத்திலேயே ஆங்கில அரசு நிறுத்தி விட்டது. இவ்வாறு நான்கு நாட்கள் கப்பல் கடலிலேயே காத்திருந்தது.

காந்தியடிகள் தனது குடும்பத்தினருக்கும், கப்பல் பயணிகளுக்கும் தைரியம் கூறினார். இறுதியாக, ஐந்தாவது நாளன்று கப்பலிலிருந்த அனைவரும் கரைக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள்.

காந்தி கரை வந்தால் ஆங்கிலேயர்கள் வன்முறையில் ஈடுபட ஆயத்தமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கப்பல் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால், சூரியன் மறைந்த பிறகு காந்தி கரை வந்து சேர்ந்திடத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவ்வாறு திருட்டுத் தனமாகக் காந்தி கரைவந்து சேர்ந்திட தாதா அப்துல்லா கப்பல் நிறுவன வழக்குரைஞர் லாப்டன் பிரபு விரும்பவில்லை. அதனால், லாப்டன் பிரபுவே தக்க பாதுகாப்புடன் காந்தியை அழைத்துக் கொண்டு கரை வந்து சேர்ப்பதாகக் கப்பல் தலைவருக்குத் தெரிவித்தார்.

கஸ்தூரி பாயும் குழந்தைகளும் கப்பல் நின்றிருந்த இரண்டு மைல் தூரத்திலிருந்து நடந்து வந்தே கரை சேர்ந்து ரஸ்தோம் ஜி என்ற காந்தியின் நண்பருடைய வீட்டிற்கு வந்தார்கள். அதற்குப் பிறகு காந்தியும் வழக்குரைஞரும் கப்பலை விட்டு இறங்கி பாதுகாப்புடன் கரை சேர்ந்தாார்கள். 

காந்தியைத் தாக்குவதற்காகத் திரண்டிருந்த வெள்ளையர் கூட்டம் அதோ காந்தி வருகிறார் என்று வெறித் தனத்தோடு கூச்சலிட்டுக் கலவரம் செய்தார்கள். பிறகு அவரை ரிக்‌ஷாவில் ஏற்றி அனுப்பிட லாப்டன் முயன்றபோது, அதைத் தடுத்து வன்முறையில் அவர்கள் ஈடுபட்டதைக் கண்ட ரிக்ஷாக்காரன் பயந்து ஓடி விட்டான்.

பிறகு, காந்தியைத் தாக்க அந்த வன்முறைக் கூட்டம் முயன்றது. பாதுகாப்புக்கு வந்திருந்த ஒரு காவல் துறை அதிகாரியின் மனைவி, காந்தியைக் காப்பாற்றி ரஸ்தோம் ஜி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வெறிக் கூட்டத்தினரின் ஆரவார அட்டகாசங்களைக் கண்ட கஸ்தூரி பாய் பயந்து போனார். வெளிநாட்டில் முதல் அனுபவம் அல்லவா அது?

கஸ்தூரி பாயும் காந்தியும் அவரது குழந்தைகளும், வழக்குரைஞர் லாப்டனும் தக்க பாதுகாப்புடன் ரஸ்தோம் ஜி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்!

xxx