அன்பு வெள்ளம்/அன்பும் அறிவமும்
அன்பும் அறிவமும்
அறிவம் (ஞானம்) என்பது அறிவைப் எப்படி பயன் படுத்துவது என்னும் திறம். நாம் எத்துணை அறிவினைப் பெற்றும் அதனைப் பயன்படுத்திட நமக்குப் போதுமான அறிவும் இல்லையேல் அனைத்துத் துறையிலும் நாம் காண்பது தோல்வியாகத்தான் இருக்கும்.
கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலுமிருந்தும் பல்வேறு பட்டங்கள் பெற்றிடுவோருள் பெரும்பான்மையான ஆடவர் - மகளிர் அவர்கள் தம் வாழ்க்கையில் காணும் தோல்விக்குக் காரணம் தான் என்ன? அவர்கள் கற்ற அறிவு நிரம்பப் பெற்ற அளவுக்கு அதனைப் பயன்படுத்தும் அறிவு பெறவில்லை என்பதேயாம்!
கடவுள் அன்பாக இருக்கிறார். அவ் அன்பின் வழி நடந்தால், அறிவத்தின் வழி நடக்கலாம்.
அன்பினால் ஆளப்பட்டோம் என்றால் அதனால் யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லலாம். நீதி மொழிகள் 6:2. 'நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டால் இந்த உரை நினை விருக்கும்.
அன்பு நம்மை ஆளுகின்றது என்பதறிந்திருந்தால், அன்பு நம்மை ஆண்டு கொள்கிறது என்பதறிந்திருந்தால், நமக்கிடையே ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க மாட்டோம்; நம்மை அன்பே முற்றிலும் தன் வயப்படுத்தியிருக்கிறது என்பதை அறிந்திருந்தால் திருமணம் என்னும் உலக நடைமுறைகளைச் செய்திருக்க மாட்டோம்.
நம்மை அன்புக்கு ஒப்படைத்திருப்போமேயானால் அதுவே நம்மை மேலாட்சி செய்யட்டும் என்று விட்டிருப்போமேயானால், நம் தவறுகளால், நம் வாழ்க்கை பதங்கெட்டுப் பாழ்பட்டுப் போகத் தக்க இடத்தினைப் பெற்றிருக்காது.
கடைசியாக நுணுகி ஆராய்ந்து பார்த்தால், அன்புதான் அறிவம்! மற்றவர்களை இன்பமுறச் செய்ய நாம் கண்டுபிடித்த அனைத்தினையும், ஆராய்ந்து, கண்டு, படைத்திட மாந்தராகிய நமக்குக் காரணமாகக் - கருவியாக இருந்ததே அன்புதான்!
பிறர்நிலை எண்ணிப் பார்க்கிறவராகப் பண்பார்ந்த நடையினராக - மெல்ல அமைதி வாய்ந்தவராகக் - கனிவுள்ளவராக நம்மைச் செய்வது அன்பு!
அன்பில் தோய்ந்தவராக நாம் இருந்தால் நம் பேச்சில் மக்களை வெல்லும் ஏதோ இனம் புரியாத ஒன்று இருப்பது உணரலாம். ஆகவே பேச்சில் மட்டும் மெய்யார்வம் காட்டாமல், அன்பில் தோய்ந்த பேச்சில் மட்டுமே நம் மெய்யார்வம் இருத்தல் வேண்டுவோம்.
மக்களுக்கு ஏதாவது நலம் உதவ முடிவது எப்போது? நாம் மக்களை அன்புட்ன் விரும்பத் தலைப்பட்டால்தான் உதவி செய்வது எளிதாயிருக்கும். சமயவாணரா? நல்லது! அப்படியானால் சமயப் பணியில் வெற்றி பெற வேண்டுமா? அந்த வெற்றி வாயிலில் கதவினைத் திறந்துவிடும் திறவுகோலாக இருப்பது அன்பு.
அன்பினராக - ஆர்வலராக நீ இருப்பதால்தான் மக்கள் உன்னை விரும்புகிறார்கள். அம் மக்களில் ஒவ்வொருவரும் உன்றன் அன்பார்ந்த இன்னுரையினைக் கேட்க விரும்புகிறார்கள். ஆகவேதான் மக்கள் அனைவருமே உன்னிடம் ஒடோடி வருகிறார்கள். உன்னிடம் அவர்கள் அனைவரும் பேசிட விழைகிறார்கள். ஏன்? உன்னால் அவர்கள் விருப்பம் பெற வேண்டும் - உன்றன் அன்புக்குரியவராக வேண்டும் என்பதால்!
ஆகவே, "என்றன் அன்பில் ஆழ்க, தழைக" என்னும் தேவனின் உரையினைப் பின்பற்றுதல் நன்று.