அன்பு வெள்ளம்/அன்பு வேட்கை
அன்பு வேட்கை
உயிருள்ள ஒவ்வொன்றும் அன்பினை அவாவுகிறது. அன்பில் வேணவா கொள்கிறது!
என் வாழ்வியக்கத்தின் மூலம் நான் கண்டது, உலகம் முழுமையுமே 'அன்பு வேட்கை' கொண்டுள்ளது என்பதுதான். ஆனால் உலகில் உள்ளோர் தாங்கள் கொண்டிருந்த 'அன்பு' என்னும் சொல் அளவில் கொண்டிருந்த அப் பழைய கற்பனை அன்பினையும் தன்னலத்தையும் கொண்ட வெற்று மானிட அன்பினைக் கொண்டு ஏதாவது மேம்பாடு காண முடியுமா என்று பார்க்கிறார்கள். இரங்கத்தக்க நிலை! என்னே! அவர்கள் சான் றோர்களில் விளங்கிய அன்பினுக்கு எப்படி தங்கள் அன்பினை இசைவாகச் செய்யப் போகிறார்களோ?
இளைஞர்களும் இளம் பெண்களும் ஒருவர்க்கொருவர் காதல் வேட்கை கொள்கின்றனர். தன்னைக் காதலித்த இளைஞரிடம் பெண்ணும், தன்னைக் காதலித்த பெண்ணிடம் இளைஞரும் சென்று மென்தோள் வீழ்கிறார்கள். காதலெனும் உரிமைப் பெரு வெளியில் அவர்கள் பெற்றோராகிய உங்கள் ஒப்புதலின்றி களவியல் மேற்கொண்டு உங்கள் பார்வை விட்டு விலகிச் சென்று விட்டார்களா? அவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களைத் தூற்றாதீர்கள்; அவர்களைப் பற்றித் திறனாய்வு செய்யாதீர்கள். "அவர்கள் காதல் தொடர்பு - உறவு தீதான்து; கெடுதலாது” என்று சொல்லாதீர்கள். காதல் என்பது நல்லது நலம் மிக்கது என்று அவர்களுக்கு உணர்த்திடுங்கள். அவர்கள் உறவினைத் தீய செயல் என்று பகராதீர்கள்; அது பாவச் செயலேயானாலும், அந்த தீயதைக் குணமாக்கும் வகையைக் கண்டு எடுத்துக் கூறுங்கள்.
"கடவுள் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் விரும்பு கிறார். உங்கள்கள் நலனுக்காகவே-தமது ஒரே பேரரான மீட்பரைத் தந்தருளினார்” என்பதை ஆண்கள் பெண்கள் அனைவரிடமும் விளக்கமாகச் சொல்லுங்கள். அன்பின் வெளிப்பாடாக வந்த அன்புத் தெய்வம், இயேசுவின் வரலாற்றை எடுத்து விளக்குங்கள். அதனால் அம் மக்களின் உள்ளங்களை நீங்கள் கவர்ந்து விடுவீர்கள்.
ஏதும் அறியா மக்கள் அன்றன்று வேண்டிய உணவைக் கேட்கிறபோது அவர்களிடம் கல்லினைத் தராதீர்கள்... வாழ்க் கைக்கு உணவாகிற அன்பு என்னும் அமிழ்தினைத் தாருங்கள். . அன்றன்று வேண்டிய உணவுடன். அன்பினைப் பற்றிய 'தத்துவ'ச் சொற்பொழிவினை ஆற்றிடாதீர்கள். ஏதும் அறிந்திடாத அப் பேதை மக்களிடம் அதுவரை அறிந்திராத பண்பாளரின் அன்பு வரலாற்றை விளக்கிக் காட்டுங்கள்.
அன்பே அனைத்தின் திறவுகோல், அஃதறிய
நன்றே புரிவீர் நயந்து.