அன்பு வெள்ளம்/அன்பு தணிந்து
அன்பு தணிந்து போகும்
மத்தேயு 24:12, "கொடுமை மிகுதியாவதனால், பலருடைய அன்பு தணிந்து போகும்"
கிரேக்கச் சொல்லான (Agapa) என்பதன் பொருள்பட, மெய்யான அன்பு, பேரன்பு என்னும் பொருளில் மேற்சொன்ன மத்தேயு நற்செய்தி 24:12ல் மட்டும் ஒரே ஒருமுறை கையாளுகிறார் மத்தேயு அவர்கள். திருச்சபையில் சமயத் தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வதும் அன்பினை மீறுவதும் ஒன்றேதான்.
அன்பென்னும் அருள் உலகத்தை விட்டு புலன் உணர்வு எனும் உலகத்திற்குக் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் மானிடர். "அன்பினைப் பற்றிச் சொல்லப்படுகின்ற முறையில் - நெறியில் நாம் சென்றிட முடியாது; அப்படிப் பட்ட விதிமுறை களைக் கடைப்பிடித்தல் என்பது முடியாத ஒன்று” என்று சொல்வது சரியாகாது. அன்பின் உலகிலிருந்து, சூழலிலிருந்து திருச்சபை விலகுமேயானால் அதன் இடத்தில் சாத்தான் வந்து அமர்ந்துவிடும்; ஆதிக்கம் செலுத்தும். அன்பின் அரவணைப்பிலிருந்து விடுபடும் எவரும் மறுகணமே சாத்தானின் வல்லாண்மைக்கு ஆளாக நேரிடும்.
அன்பினை விட்டகன்றால் அந்தோ மிகுதுயர்
துன்பினைக் கொண்டிடும் வாழ்வு.