அன்பு வெள்ளம்/தனக்கென்று எதையும்
தனக்கென்று எதையும் தேடாமை
தொழிலாளியதிற்கும் முதலாளியதிற்கும் சுருக்கமாக விளங்கச் சொல்வதனால், தொழிலுக்கும் முதலுக்கும் - உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் உள்ள தீர்வு முடிவு காண்பதற்கு வழிவகை உள்ளது. புதிய சட்ட திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதிலும், ஒரு புது முயற்சி - புத்தாக்கம் சிறந்தது, தேவையும் கூட!
அதனையே ஒரு சட்டமாக ஏற்றுக் கொண்ட அச் சட்டமே நமது பொருளாதாரத்தை மேலாண்மை செய்வதாகக் கொள்ள வேண்டும். அப்படிக் கொண்டால், எல்லாச் சிக்கல்களும் - பாடுகளும் தீர்ந்துவிடும். நம் இல்லற வாழ்வில் எல்லா மட்டங்களிலும் ஏற்பட்டுள்ள குற்றங்களை, ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிச் சமன் செய்யத் தக்கதாகும். இல்லத்தில் மட்டுமல்ல, திருச்சபைப் பணியில் காணப்படும் குறைகளையும் போக்கி நிறைவு பெறச் செய்யும். ஒவ்வொருவரும் தமக்கே என்ற மனப்போக்கினை விடுத்து மற்றவர்க்கும் - எல்லாருக்கும் என்ற மனப்பாங்கு வருவித்துக் கொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் தேவையானவை தாமே வந்து சேரும்.
ஆண்டாண்டுக் காலமாக மாந்தர்படும் கடுந்துயர் என்னும் மிக நீளமான புகைவண்டித் தொடரை இழுத்துச் செல்லும் மிகப் பெரிய மங்கோலிய எஞ்சினைப் போன்றது தன்னலம் என்பது. ஆறாத் துயரம் தீரும் முறைத் தீர்ப்பு தான் அதுபோய்ச் சேரும் இடம்! எனவே தன்னலம் என்னும் அந்தத் தொடர் வண்டியினை விட்டு இறங்குவோம். ஆறாத்துயர் தரும் தன்னலத்தின் தொடர்பும் - பயணமும் நமக்குத் தேவையில்லை. அன்பு வாழ்க்கை வாழ் வோம் அன்பான நெறியில் நடந்து வாழ்வோம்.
இப்படி வலியுறுத்திக் கூறுவது அன்பின் இலக்காக; அன்பின் பொருட்டாக. அன்பினை அறியாது அறிந்து அதன்படி நடவா தவர்களைக் குறை கூறுவதாக எண்ணிட வேண்டா! அன்பு அப்படித்தான் நயந்தும் - பரிந்தும் - வலிந்தும் சொல்லச் சொல்லும்.
இப்படியெல்லாம் சொல்வது செய்யும் தீவினைகளையும் தவறுகளையும் இனிச் செய்திடாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட - கொண்டுவரப்பட்ட சட்டம் என்று யாரும் நினைக்க வேண்டா. தன்னலத்தை அழிப்பதன் மூலம் தீச்செயல்களையும் அழித்துவிடக்கூடிய புதுவகையான வாழ்க்கை முறை: வாழும் வழி; வாழ்க்கை நெறி; வாழ்வியல் சட்டம்.
தன்னலம் என்னும் தடைகல் பெயர்ப்பதால்
இன்னலம் எய்தும் உலகு.