அன்பு வெள்ளம்/அன்பு தன்னையே
அன்பு தன்னையே அளிக்கிறது
அன்பினால் மலர்ச்சியுற்ற பூ, பிஞ்சாகி, காயாகி, பழமாக உருமாறிடும் நிலைக்கு விரைவில் வர இருக்கிறது. செம்மலர்கள் மக்கள் மகிழ வேண்டுமென்பதற்காகவே மலர்ந்து மணக்கின்றன. அந்த நறுமணம் காற்றில் கலந்து கமழ்வதை நான் நுகர்ந்தேன். கமழும் செம்மலர்களின் எழிலான இதழ்கள் இளங்கோமள வண்ணம் மாறிப் பழுப்பு நிறமாகிவிட்டன, வதங்கிவிட்டன. இவற்றையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவ் இதழ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேல் உதிர்ந்துவிட்டன. இப்போது செம்மலர்ச் செடி உலர்ந்து நிற்கிறது. ஆம் அந்தச் செம்மலர்ச் செடி இப்போது இறந்தே விட்டது.
ஏன்? அந்தச் செம்மலரில் இயற்கை அளித்திருந்த அன்பின் காரணமாக அழகாக-மணமாக மகரந்தத் தாதுவாக மற்றவர்களுக்காக வெளிப்பட்டதனால் அவ்வாறாயிற்று.
வாழ்க்கைக்கு முதற் காரணமாக அமைந்ததே அன்புதான்். எப்போது அன்பு இடம் பெயர்ந்து செல்கிறதோ அப்போதே வாழ்க்கையும் அதன் காரணத்தை இழந்துவிடுகிறது.
நம் வாழ்க்கை நாகரிக வளர்ச்சி பெற்றிட எவை எவை தேவைப்படுகின்றனவோ அவையனைத்துக்கும் அடிப்படையாக அமைவதே அன்புதான்். அத்தகு அன்பு அழிந்துபடும்போது, நம் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க யாவும் மறைந்து போகின்றன.
நம்மில் இருக்கும் அன்பு எப்போது நலிந்து நைந்து போகிறதோ அப்போது நம்மைப் பொறுத்த மட்டில் கதிரவன் ஒளி வீசுதல் இல்லை; முகில்கள் ஒன்று கூடி ஒன்றொடன்று மோதுகின்றன, இருள் சூழ்கிறது, வரப்போகும் பேரிடரை முன்காட்டுகிற தீக்குறி தோன்றுகிறது. சூறாவளி சுழன்றடித்து அச்சுறுத்துகிறது. இந் நிலையில், அன்பை இழந்ததால் பெறக்கூடிய கடைநாள் தீர்ப்புக் கார் இருளில் போய்ப் பதுங்குகிறோம்.
அன்பின் தோழமைப் பாங்கு நொறுங்கிப் போனதால் ஆழ்ந்த துயரம் வந்துறுவதிலும் அதுவரை நம் நெஞ்சம் பட்டறியாத சாத் துயரம் பட்டறிய வேண்டிய நிலையும் வந்துற்றது பற்றியும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
மனிதரின் வாழ்வே நெஞ்சந்தான். அதுபோல அன்புதான்் நெஞ்சத்தின் நெஞ்சம் - இயக்கம்!
நாகரிகமற்ற கீழ்த்தரமான இடத்திலிருந்தும், ஒரு காதற் காவியத்தைப் படைக்கிறது அன்பு. அருவருக்கத் தக்கனவற்றைக் கூட அணைக்கத்தக்கதாகச் செய்கிறது அன்பு. அன்புக்கு என்றோர் அரும்பெரும் ஒளிச்சுடர் உண்டு. அந்த அன்பு, தன் பேரொளிச் சுடர் வீசி, நம் வாழ்க்கையினை ஒளிமயமாக்குகிறது. அதன் மூலம் நம் வாழ்வில் உற்ற துன்பங்கள் துயரங்கள் மடியவும் மறையவும் செய்கிறது அன்பு.
வீணாகிப் போன வாழ்க்கையிலிருக்கும் மாந்தரை மீட்டு, அழகிய - மற்றவர்க்கும் பயனுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்துக் காட்டுவது அன்பு.
அன்பு என்பது ஒர் ஒப்பற்ற உயிர்ப்பாற்றல்; தெய்வ மெய்ப்பொருள்; உயிர் உண்மையம்; காரண காரியங்களை எஞ்சியும் விஞ்சியும் நிற்பது. காரண காரிய எல்லைக்குள் அடங்குவதன்று அன்பு. அவ் அன்பே மாந்தருள் உரிமையோடு உள் நின்று ஓங்கி நிலைக்கும் இறைமை ஆகும்!