அன்பு வெள்ளம்/வாழ்க்கையில் அன்புபெறும்

விக்கிமூலம் இலிருந்து

வாழ்க்கையில் அன்புபெறும் உரிமை இடம்

பாடல் புனைவதில் - கவிதை யாப்பதில் தேர்ந்த திறம் பெற்று அவற்றின் வாயிலாக ஏதோ சற்று அன்பினைப் பற்றி எடுத்து இயம்பிட முடியுமே அல்லாமல், வெறும் வாய்ச் சொற்களால் அன்பினைப் பற்றிச் சொல்லிவிட முடியாது.

நம்மை நாம் உணர்ந்திட வேண்டுமானால், அன்பிற்குரிய இன்னிசையுலகில் நாம் இரண்டறக் கலத்தல் வேண்டும். பகைமை என்னும் வன்மம் கொண்டிராமல் மறுமையின் உயிர்துடிப்பினை நாம் கேட்டுணர்கிறோம்.

பொறுப்புணர்ச்சி, பேராசை, பகைமை போன்ற இடர்ப்பாடுகளை எல்லாம் கடந்து மேல் நின்று மெய்யின்பம் பெற வைப்பதற்கான ஒருவகை புதிதான் ஆற்றலால் இயங்கவல்ல மேல் உயர்த்தும் ஒன்றினை நாம் காணுகிறோம்.

அன்பே, மனிதன் பிறத்தலுக்கும் உயிர்த்தலுக்கும் வாழ்தலுக்கும் முழுமுதற் காரணமாகும்.

அன்பின் வேட்கை மட்டும் இல்லாது போயிருப்பின் ஊழுழி காலமாகத் தொடர்ந்து மனிதன் படைக்கப்பட்டிருக்க மாட்டான். அன்புதான் மனிதரை உலகில் படைத்து உலவ விட்டிருப்பது.

மனிதர் படைக்கப்பட்டுப் பண்பட்டபோது, உலகமெங்கும் இசையும் நகையும் நிறைந்திருந்தன. எங்கும் இன்மணப்பூக்கள் பூத்துக் குலுங்கியிருந்தன. அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து கமழ்ந்தது. எல்லாப் படைப்புகளும், மாந்த இனத்தை வரவேற்று திருவிசைப்பா பாடி முழங்கின. மாந்தன் உலகில் வந்து பிறந்தனன்.

அன்பின் வலிமை வென்றது. இறை அன்பின் இடைவிடாத போராட்டம் வெற்றி கண்டது.

மாந்தருக்கு ஏற்படும் எத்தகைய புண்ணையும் ஆற்றிடும் அருமருந்தாகும் அன்பு!

மாந்தரின் தோல்வியினால் ஏற்படும் ஆறாத மனப்புண் ஆறிட, வார்த்த்திடப் பெரும் மருந்துக் களிம்பு, கடவுளின் அன்பு!

அனைத்துப் படைப்புக்கும் தேவையான படைப்பாற்றலே அன்புதான். அன்பு என்பது படைப்பாற்றல். உய்யும் பொருட்டு வந்துய்யும் நம் பிறவிக்கு வாய்த்த பெற்றோர் என்னும் தோற்றுவாயைத் தோற்றுவித்தது அன்பு.

எதிர்வரும் தலைமுறையினைக் காணும்பொருட்டு ஒரு மேன்மைத் திருமணத்தைக் கூட்டுவிப்பதன் மூலம் ஒர் ஆணையும் பெண்ணையும் அருளப் பெற்றிட அப்பனாக அம்மையாகச் செய்வது அன்பு: மகப்பேறு பெற்றிடச் செய்ய, ஒன்றுகலந்த ஆணையும் பெண்ணையும் முறைப்படி காத்திருந்து தாய்மையாக, தந்தமையாகச் செய்வதும் அன்பு!

அன்புதான் குழந்தையை நல்கவும் வளர்க்கவும் வல்லது. அது அன்பற்ற சூழலில் பிறந்திடும் குழந்தையும் உண்டு. ஆனால் அவர்களால் பிறந்த குழந்தைக்கு மாறாக அவர்களாலேயே இழைக்கப்படும் குற்றமாகும். பிறந்திடும் ஒவ்வொரு குழந்தையும் அன்பின் வழியதாகவே இருந்திட வேண்டிய உரிமை பெற்றதாகும்.

குற்றங்களில் எல்லாம் மாபெரும் குற்றமாகக் கொள்ளப்படுவது அன்பினை வதைபட வைப்பதுதான். இயற்கையினால் நமக்கு அளிக்கப் பெற்ற அத்தனையுமே அழகானவை.

அன்பு கொல்லப்பட்டதெனின், நமக்கு அருளப்பெற்ற அக, புற அழகு இறந்துபடும்.

அன்புதான் நம் வாழ்க்கையின் நெஞ்சின் இயக்க ஆற்றலாகும். அவ் அன்பே, நம் இல்லத்தை - இல்லறத்தை ஆக்கும் ஆற்றல் விசையாகும். அன்பு குடிக்கொள்ளாத இடத்திற்குச் சென்றால் நாம் வாழ்ந்திட ஒர் இல்லம் அற்றவராவோம்.

வீடு என்று எண்ணி அதன் உள்ளே சென்றால், அங்கே ஆயிரம் அழகுப் பொருள்கள், நாற்காலி உயர்பலகை, நிலைப் பேழைகள் எனப் பலப்பல இருப்பினும் அன்பில்லாதவர் வாழும் வீடாக அது இருக்குமேயானால், அந்த வீட்டினுள் நுழைந்ததும் ஏதோ ஒன்று இல்லாததுபோன்ற ஒர் உணர்வு நமக்குள் ஏற்படுகிறது அல்லவா! அந்த விட்டில் ஏதோ இழவு நேர்ந்திருக்குமோ வேறு ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. ஏன்? அங்கே அன்பினைக் காணோம்; காணமால் போன அவ் அன்பு கல்லறைக்குள் போகவில்லை அவ்வளவுதான்! அவ் வீட்டினுள் அளப்பரும் செல்வம் இருக்கலாம்; இருந்தும் அது ஒரு வீடாகக் கருத முடியாதுதான்.

அன்பு ஒன்றுதான் - அன்பு மட்டுமே நமக்கு இல்லறம் அல்லது நல்லறம் அன்று என வாழும் இல்லத்தை அளித்திருக்கிறது.

ஒருவனுக்கு ஒருவள் என்னும் நெறி மீறி ஒருவருக்கு மேற்பட்டுப் பலரை மணக்கும் வழக்கத்தைக் கொண்ட வாழ்வறப்பற்றற்றவர் வாழும் நாட்டில் இல்லறம் ஏது? இல்லற ஒழுக்கம் வாழும் இல்லம்தான் ஏது? ஏதோ பலர் சேர்ந்து ஒரிடத்தில் வாழ்கின்றனர் .... அவ்வளவே!

பொன்னுலகம், பலமகளிர் மனத்தை அழித்துப் போடும். இல்லறம் வாழும் இல்லம் என்பதனை இயேசுவின் அன்புதான்் படைத்தளிக்கிறது.

அன்பு என்பது ஒருவனையும் ஒருவளையும் தலைவன் தலைவியாக ஒருவர்க்கொருவர் இல்லறத் துணைவர்களாக இணைக்கும் வாழ்க்கைச் சட்டம்.

ஒருவனுக்கு ஒருவள் என்னும் கற்பு ஒழுக்க நெறியில் இணையும் காலம் போன்ற கவின்மிக்கது வேறு ஏதும் இல்லை. படைப்பினங்கள் அனைத்துமே அந்த இன்பப்போதினைக் கொண்டாடுகின்றன.

ஒர் ஆண்பெண் இணை புறாக்களைக் கண்டேன்; எத்துணை மகிழ்வுடன் அவை இரண்டும் இணையும் நேரத்தினைக் கூடிக் குலவி கொண்டாடுகின்றன! ஊர்க்குருவிகளைக் காணுங்கள்; ஒன்று மற்றொன்றை எவ்வளவு அன்புடன் காதலிக்கின்றன!

தேனிக்களைக் காணுகின்றோம்; ஒவ்வொரு மலராகத் தேடித் தேடிப் பறந்து பறந்து தேனினை - மகரந்தத் தாதினைக் கொண் டோடிச் செல்கின்றன.

இவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது: படைக்கப்பெற்ற யாவுமே ஒன்றுக்கு ஒன்று இணை சேர்கின்றன. படைக்கப் பெற்ற அனைத்துமே ஒன்று மற்றொன்றைக் காதலிக்கின்றன.