அன்பு வெள்ளம்/விரும்பும் முறைமை

விக்கிமூலம் இலிருந்து

விரும்பும் முறைமை

நான், பயன்படுத்திடப் பயன்படுத்திட, பழுதாகிப் போய், பயனற்றதாகும் அத்துணைப் பொருள்களையும் உதறித் தள்ளிவிட்டுப், பயன்படுத்தப் பயன்படுத்த மென்மேலும் பல்கிப் பெருகிப் பயன்படதக்க பொருள்களே இனிப் பெறுவேன். ஆம் அதுபோன்ற மகிழ்ச்சியை இதுவரை நான் அடைந்திலேன்!

இன்ப நற்பேற்றினை நான் கண்டு உவந்தேன். ஆனால், நான் அரிதின் முயன்று பெற்ற இன்பமெல்லாம் எந்தப் பொருள்களினால் பெற்று வந்தேனோ, எந்ததெந்த மக்களிடமிருந்து பெற்று வந்தேனோ, எந்தச் சூழ்நிலைகளின் இருந்து பெற்றுவந்தேனோ அவை எல்லாம் என் முயற்சி தளரும்போது - குன்றும் போது அவ் இன்பமெல்லாம் இல்லாதொழிந்தன.

அவை எல்லாம் எத்தனை பெரிய பொய்த்தோற்றம் - மருட்சி என்பதைக் கண்டு கொண்டேன்.

மாறாத நிலைத்த மகிழ்ச்சி காணவேண்டுமாயின் நான், மக்களை இன்புறச் செய்யும் பலவற்றை விடுத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதனை உணர்ந்தேன்; அப்படியொரு விழைவினைக் கொண்டேன்.

அத் தகு களிப்பினை உவகையைத் தரும் புதுவாழ்வு அன்பின் ஊற்றுக் கண்ணிலிருந்தே பொங்கிவரக் கூடும்.

உலக வாழ்வில் இன்பம் எல்லாம் என்னைச் சுற்றியுள்ள புலனுணர்வை அடிப்படையாகக் கொண்டவற்றிலிருந்து பெறப்படுவதாகும். ஆனால், நான் கண்டு கொண்ட மகிழ்ச்சி - உவகை உலக வாழ்விலிருந்து கிடைத்திடும் இன்பத்தினை விட உயர்ந்த தாகும், கண்ணாடியைவிட உயர்ந்த வைரம் போல; மாசுற்ற மாழை (உலோகங்)களைவிட உயர்ந்த மாசற்ற தங்கம் போல!

இப்பொது தெரிந்து கொண்டேன் அன்பு என்பது எத்தகையது என்று. ஆண்டவராகிய இயேசு, என்னை விரும்பியது போன்றே, நானும் அவரை விரும்பிட வேண்டும்.

ஆண்டவரிடம் நிறைந்துள்ள குறைவற்ற அன்பினைப் போல என்னிடம் உள்ள அன்பினையும் பல்கிப் பெருகச் செய்திட வேண்டும்.

அதோ! ஆண்டவர் இயேசு அரியணையில் அமர்ந்திருக்கிறார்; என்னை ஆளுகிறார்; அதே போன்று அன்பின் மிகுதியால் என்னையும் அரியணையில் ஏற்றி அமர்த்திடும் ஆற்றலை அளிக்கிறார். இங்கே, உலகில் நான் ஆண்டவர் இயேசு திருவாய் மலர்ந்தருளிய சொற்களை நான் பேசிட வேண்டும். அன்பினால் அவர் ஆற்றிய பரிவார்ந்த பணிகைளப் போன்று நானும் ஆற்ற வேண்டும்.

போக்கற்ற, மீட்பற்ற உயிர்களை நம்பிக்கையற்று மன முறிந்து கிடக்கிறவர்களுக்காக ஆண்டவர் இயேசு எப்படிப்பட்ட துன்பங்களை அடைந்தாரோ அப்படிப்பட்ட துன்பங்களை நானும் இனி உய்த்து உணர்ந்து ஆகவேண்டும்.

ஆண்டவர் மன்பதை மீது கொண்ட அன்பின் இடத்தை நானும் பெற்றாக வேண்டும். அப்போதுதான் அடடா! அந்த அளப்பரும் மகிழ்ச்சி எடுத்துரைக்கவொண்ணாத மகிழ்ச்சி என்னை வந்து அடைகிறது.

ஆம்! மற்றவர்களுக்காக ஆண்டவர் இயேசு தாம் பெற்ற துன்பங்களினால் குறுக்கைப் (சிலுவை)பாட்டினால் - வந்துற்ற துன்பங்களின் வாயிலாக எத்தகைய மகிழ்ச்சி பெற்றாரோ அதே மகிழ்ச்சியை நானும் பெறுகிறேன். ஏனெனில், அவர் என்னை விரும்பியது போலவே நானும் இயேசு விரும்புவதால்.

          அன்பினால் ஆவது நன்மையா தீமையா
          என்றாய்வோர் அன்பறியாதார்.