அன்பு வெள்ளம்/அன்பு நம்மில்

விக்கிமூலம் இலிருந்து

அன்பு நம்மில் முழுமை பெற்றுள்ளது

டவுளின் இயற்கை இயல்பு நம்மில் உள்ளது. மரித்தோரி லிருந்து இயேசுவானவரை, எழுப்பிய வல்லமை மிக்க மாபெரிய தூய ஆவி நம்மில் இருக்கிறது. அவருடன் நாம் ஒன்றுபட்டு விட்டோம் வாழ்வில். எப்படி? அன்பினால். வாழ்க்கையே அன்பு மயம்தான்!

ஒருவருடைய வாழ்க்கையில் அன்பு எப்படி நிறைவு பெற்றுள்ளது, முழுமையாகவுள்ளது என்பதை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். ஒருவரில் அறிவு நிறைவு பெற்று இருக்காது; ஆனால், ஒருவரில் அன்பு முழுமை பெறும், நிறைவு பெறும்.

அன்பு நம்மில் நிறையப் பெறும்போது, முழுமை பெறுகிறபோது நம் வாழ்க்கையில் அச்சத்திற்கு இடமேயில்லை! அச்சம் ஏற்படத்தக்க ஆதாரங்களான, தீவினைகள், நோய்கள், இக்கட்டான சூழ்நிலைகள், இயற்கை விதிமுறை ஆகியவற்றை வென்று அடக்கும் எல்லா அதிகாரமும் வல்லமையும் அன்புறவில் இணைந்து பிணைவதால் நாம் வென்றிட முடியும்.

எந்தச் சிறப்பும் இல்லாத ஒருவரைக் கூட தெய்வ நிலைக்கு உயர்த்திவிடும் ஆற்றல் வாய்ந்தது அன்பு! அன்பின் வெளிப் பாட்டினை நமக்கெல்லாம் அருளிச் செய்தது, கடைசி நாள்களில் சிக்கல்கள் பல வந்துறினும், அவற்றை எதிர்த்து நின்று வெற்றி கொண்டு வீரர்களாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்!

"வெளிப்படுத்தின சிறப்பு" எப்படி இறுதியில் அன்பு வெற்றி பெற்றது என்பதையும், மானிடராகிய வீரர்களையும், கயவர்களையும் கீழ் அடக்கி வெற்றி பெற்றது ஆட்டுக்குட்டி என்று நமக்கு விளங்க விரிக்கிறது. ஆட்டிக்குட்டிதான் அன்பு! வெளிப்படுத்தல் சிறப்புப் புத்தகத்தில், 20 இடத்திற்கும் மேலாக இயேசு பெருமான், 'ஆட்டுக்குட்டி' என்றே குறிப்பிடுகிறார் - அழைக்கப்பெறுகிறார். சொல்லின் மூல முதற்பொருள்படி சொல்ல வேண்டுமானால், குழந்தை ஆட்டுக்குட்டி, பச்சிளம் ஆட்டுக்குட்டி, திக்கற்ற ஆட்டுக்குட்டி என்று சொல்லி அழைக்கப் பெறுகிறார் இயேசு பெருமான். அன்பு எப்படி ஆதரவற்றதாக இருக்கிறது என்று பார்க்கிறோம். இருந்தும் அன்பே வெற்றி பெறுகிறது. கடவுள் இருப்பதனால், கடைசியில் அன்பே அனைத்தையும் வென்று மேம்பட்டு நிற்கிறது.