அன்பு வெள்ளம்/முழு நிறைவான

விக்கிமூலம் இலிருந்து

முழு நிறைவான அன்பு

'சான்றவர் சான்றாண்மை நம்மில் அன்பு கூர்ந்தது போன்று, நாமும் ஒருவரில் மற்றொருவா அன்பு கூர்ந்தால், நாம் ஒருபோதும் யாரையும் புண்படச் செய்ய மாட்டோம்; மற்றவரைப் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே பழக மாட்டோம். எதைச் செய்யக் கூடாதோ, பேசவும் கூடாதோ அதுபற்றி எதுவும் பேச மாட்டோம்.

கடவுள், பழைய சட்டதிட்ட முறையில் ஒருவரை ஒருவர் அன்புடன் விரும்பச் சொல்லி ஆணையிட்டது. ஆனால் அந்தக் காலத்து மக்களால் ஒருவரை மற்றொருவர் அன்புகாட்டி விரும்பும் திறனில்லாதவராயினர்.

ஆனால் இன்றோ நமக்கு அன்பினையும் அதன் இயல் பினையும் சேர்த்தே நமக்குக் தந்தருளியுள்ளனர் நயனோடு நன்றி புரிந்தவர்கள். ஆகவே, சான்றோர் என்ன கற்பனையைக் கடைப் பிடிக்கச் சொல்கின்றனரோ கைக் கொள்ளுமாறு ஆணையிடுகிறாரோ அதனை நாம் எளிதாகச் செய்திட வல்லவர்களாக இருக்கிறோம்.

ஒரு குழந்தை, தன் பெற்றோரை அன்புடன் விரும்புகிறது என்றால் அஃது இயற்கை பண்புடையவர் வகுத்துக் காட்டிய அன்பு நம்மை இயற்கையில் அன்பர்களாக்கியுள்ளது. இன்று நாம் அன்புடன் இருக்கிறோம். முதன்முதலாக நம்மையெல்லாம் அன்புடன் விரும்பியவர், நம்மில் அன்பு கொண்டவர் இயேசு. ஆகவே அன்புக்கு நாம் உடன்பட்டுக் கீழ்பட்டு நடக்க முடியும். அப்படி நடப்பது நமக்கு எளிது.

பழைய சட்டதிட்டம், "இறப்பின் சட்டம்” என்றே குறிக்கப்படுகிறது. ஏன் என்றால், ஒவ்வொரு கற்பனைக்கும் ஒரு தண்டனையும் இணைக்கப்பட்டிருந்தது - விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் புதிய உடன்படிக்கைச் சட்டத்துடன் எந்தத் தண்டனையும் இணைக்கப்படவில்லை - விதிக்கப்படவில்லை! ஒரே ஒரு தண்டனை உண்டு! என்னவென்கிறீர்களா? அன்பு வாழ்க்கையை விட்டு விலக அடியெடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் துன்பம் உண்டு; வரும் அன்பை விட்டு விலகிச் செல்ல வைத்திடும் ஒவ்வோர் அடியும் இன்னலில் அல்லலில் அடியெடுத்து வைப்பதாகும்.

உங்களுடைய வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தால் நடந்த நாள்களை எண்ணிப் பார்த்தால் நீங்கள் செய்த தவறுகளுக் கெல்லாம் காரணம் என்னவென்று கண்டுபிடித்து விடுவீர்கள். தவறுகள் செய்ததெல்லாம் அன்பின் எல்லையை விட்டு வெளியே அடியெடுத்து வைத்த போதுதான் - அன்பினுக்கு மாறாகச் செயல் பட்டபோதுதான் என்பதனை நன்கு உணரலாம்.

நீங்கள் உங்கள் அன்புக்குரிய ஒருவரை வசை கூறினர்கள் - திட்டினர்கள் என்பதால் அந்த அன்புக்குரியவரைப் பிரிய நேரிட்டதும் கூட, நீங்கள் அன்பின் கட்டுக்கோப்பிலிருந்து விலகிச் சென்றபோதுதான் என்பதை எண்ணிப்பார்த்தால் அறிவீர்கள்.

ஒருவரை நாம் அடித்து வடுப்படுத்திச் செயலற்றவராகச் செய்வதும், உடலையும் உள்ளத்தையும் காயப்படுத்தி வருத்துவதும் கூட எப்போது நடக்கிறது? அன்பினை விட்டுவிலகிச் சென்று விட்ட போதுதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நாடிப் பெறும் அன்பு நன்று, நனிநன்று
நாடாது பெற்றிடும் அன்பு.