அன்பு வெள்ளம்/அன்பெனும் சட்டத்தின்

விக்கிமூலம் இலிருந்து

அன்பெனும் சட்டத்தின் பொருள் விளக்கம்

'பத்துக் கற்பனைகள்' என்பது திருமறையில் உள்ள லேவியாகமத்தின் பொழிப்புரையாகும்.

யோவான் 13:34.35 "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவ்ர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய அடியார்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்”

1 கொரிந்தியர் 13:1-2 "நான் மாந்தர் மொழிகளையும் தூதர் மொழிகளையும் பேசினாலும், அன்பு எனக்குள் இராவிட்டால், ஓலமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடும் கைத்தாளம் போலவும் இருப்பேன்"

"நான் வருவதுரைக்கும் பேற்றை உடையவனாயிருந்து, அனைத்துப் புதிர்களையும், அனைத்து அறிவையும் அறிந்திருந்தாலும், மலைகளைப் பேர்க்கத் தக்கதாக அனைத்துப் பற்றுள்ள வனாயிருந்தாலும், அன்பு எனக்குள் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை”

பன்மொழி கற்றுத் தேர்ந்திடும் திறமை என்பது, சமய நுணுக்கம் வாய்ந்த கலை அறிவாராய்ச்சித் துறை சார்ந்த உலகில் ஒரு பெரிய அருஞ்செயலாக இருக்கலாம். ஆனால் அதனால் ஆவதொன்றும் இல்லை.

மேலுள்ளவற்றை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால் பொருள் புரிந்து கொள்ள முடியும். அதாவது மேற்சொன்ன உரையின்படி, நான் வருவதுரைக்கும் பேறு பெற்றவனாக இருந்தால் ஒரு நூற்றாண்டில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே சொல்லி விடமுடியும். உலகில் இதுவரை அறியப்படாத புதிர்களையும் பல்கலை அறிவையும் நான் அறிந்து கொண்டாலும், அன்பு எனக்குள் இராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

உலகின் மடியில் இருக்கும் எண்ணெய், உலோகங்கள், வேதியியல் பற்றிய கமுக்கங்களை எல்லாம் ஆய்ந்தாய்ந்து கூறு பலவாகக் காண்பதற்காக, உலோகவியல்களை வல்லாரும் வேதியியல் கலைவல்லாரும் மேற்கொள்ளும் போராட்டங்களைப் பற்றி அறிவோம் நாம். இத்துணைக் கலைகளில் தேர்ந்து விளங்கும் ஒருவர், இயேசுவானவர் உலகில் வாழ்ந்த நாள்களில் மலைகளையும் பேர்த்தெடுக்கும் பற்றார்வத்தைப் பெற்றிருந்ததைப் போன்ற செயலார்வம் பெற்றிருந்தாலும், இயேசுவின் அன்பினை ஒத்த அன்பினைப் பெற்றிராவிட்டால் அவர், "ஒன்றுமில்லை.”

இதற்கு மேலும் ஒருபடி சென்று நமக்கு உண்டானயாவற்றையும் நாம் அன்பளிப்பாகத் தந்தாலும் நம் உடலையே நன்கொடையாகக் கொடுத்தாலும் அன்பு நமக்குள் இராவிட்டால், நாம் ஒன்றுமில்லை.

அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய செல்வரும் வள்ளலுமான (Rockfeller) இராக்ஃபெல்லர் போலவும், கர்னகி (Carnage) போலவும் நாம் வாரிவழங்குகின்ற இறைவன் ஆனாலும், அஃபிரிக்க காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்காக, நம் வாழ்க்கையையே இழந்துவிடக்கூடிய பெருமானம் பெற்றவர் ஆனாலும் இயேசுவின் அன்பைப் போன்ற அன்பினை நாம் பெற்றிராவிட்டால் எம் மக்கள் பணிக்குப் பொருள் ஒன்று மிராது.

"அன்பு இடைவிடாது துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும்". அன்பு, நீடிய அமைதியும் தயவும் உள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது; இறுமாப்பா யிராது. இத்தகைய அன்பினைப் பொதுவான மாந்தரின் அன்புடன் ஒப்பிட்டுப் பார்த்தல் கூடாது.

அன்பு, நெடுங்காலத்துக்கும் தொடர்ந்து துன்புறும் என்பது சரி. தவிர்க்க முடியாத நிலை வரும் போது அதே அன்புக்கும் மகிழ்வற்ற நிலையும் இன்னல்களும் வந்துறுகின்றன. இயற்கையில் மாந்தரின் அன்பு கூடத் தன்னலத்தில் தான்் தோன்றுகிறது. அந்தத் தன்னலம் குலைந்து போகும்போது இன்பங்களாக மாறிவிடுகின்றது.

"அன்பு, பொறாமை கொள்ளாது" உலகம் எங்கிலும், பொருளாதார, சமுதாய, பேரெழுச்சிகள் பரவியதற்குக் காரணம் செல்வரைக் கண்டு, ஏழைகள் கொண்ட பொறாமை; வெற்றியாளரைக் கண்டு தோல்வியுற்றவர்கள் கொண்ட பொறாமை, புலன் அறிவு, ஏழை எளியவர்களை அமைதியற்றவர்களாக ஆக்குகிறதே தவிர, அவர்கள், அமைதி பெற்றிட நல்வாழ்வு காண, ஒரு விதிமுறையைத் தரவில்லை.

"அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது" உண்மையான இயற்கையான அன்பு, தற்புகழ்ச்சி அணிவகுப்பை நடத்தாது. தன்னைப்பற்றி புகழ் தம் பட்டம் அடிக்காது. தற்பெருமை தன் செயல் வெற்றியை எப்போதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். ஆனால், இதற்கெல்லாம் மாறுபட்டது எதிரானது இயேசுவின் கனிந்த அன்பு.

"பண்பற்ற முறையில் நடந்து கொள்ளாது" மணமுறிவு முறைமன்றங்களுக்குச் சென்றுபாருங்கள் இயற்கையாக மாந் தருக்கு உள்ள அன்பு எப்படிப்பட்டது என்பதை அறியலாம். கணவன் மனைவி ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் கொண்டிருந்த காதலைப்பற்றிய கமுக்கங்களைப் எடுத்துச் சொல்வதைக் கேட்க முடியாது. இப்போது அவர்கள் காதல் மனத்தில், கசப்புணர்ச்சி, தன்னலம், பகைமை எல்லாம் நிறைந்து பொங்கி வழிவதும், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடுவதும் காண்போர் உள்ளத்தைக் கலக்கும், கவலை தரும்.

இன்றைய நாகரிகமிக்க குடும்பம் வாழும் இல்லங்களுக்குச் சென்று பார்ப்போமானால், அங்கு நிலவும் மகிழ்ச்சியற்ற நிலையும், குழந்தைகள் முன்னிலையிலேயே கணவன் மனைவியிடும் சண்டையும் கண்ணறாவும் காட்சியாகும். அங்கே கணவன் மனைவியிடையேயுள்ள அன்பு எரிச்சலூட்டும் வகையில் அலைக் கழிக்கப்படுவதைக் காணப் பொறுக்காது.

"அன்பு தன்னலம் காண்பதில்லை” இதனை நினைவிற் கொண்டால், தன்னலம் அகற்றப்பட்டுவிடுமே. அன்பு தனது என்று எதையும் பார்க்காது. மற்றவர்களுடையதைத் தனதாக்கிக் கொள்ள விரும்பாது அன்பு.

மணமுறிவு கோரும் முறை மன்றங்களில் புதிதான் அன்பு, 'தனது', 'தான்’ என்பதனைக் காண்பதில்லை; கைக் கொள்வதில்லை.

என்ன வியப்பு! இந்தப் புதிய அன்பின் தெய்விக நிலையை நாம் என்னென்பது?

"சினம் - கொள்வதில்லை; தீங்குகளைப் பொருட்படுத்துவதில்லை” இந்த மறைமொழி நெஞ்சில் - நினைவில் நிலைத்து நிற்குமானால், தலைவிரித்தாடும் பழிப்புக்கு முடிவு ஏற்படும். காதலரைத் தனித்தனியே பிரித்துக் குடும்பங்களைப் பாழ்படுத்தும் தேவையற்ற ஐயப்பாடுகளை அகற்றிவிடும்.

'நேர்மைக் கேடுகளில் மகிழ்ந்து கொண்டாடுவது இல்லை; ஆனால் உண்மை எதுவோ அதில் மகிழ்ச்சி கொண்டாடும் அன்பு'. தீங்கு புரிவதில் இன்புறுவதில்லை! தவறுகள் இழைப்பதில் இன்பம் காண்பதில்லை; அடுத்தவரைப் புண்படுத்துவதில் இன்பம் அடைவதில்லை அன்பு. மெய்ப்பொருள் காண்பதில்தான் அன்புக்கு இன்பம்!

'எதையும் தாங்கும் அன்பு' என்பது மறைமொழி. குற்றம் குறை அனைத்தையும் மூடி மறைக்குமே தவிர வெளிப்படுத்து வதில்லை. அவதூறு பேசுவதில்லை கடந்த காலத்தில் ஏற்பட்ட அன்பற்ற செயல்களை நினைவு கூர்வதில்லை மாந்தரின் இயற்கையான அன்பு, செய்த தீங்குகளை நினைத்துப் பார்க்கும்; செய்த தீங்குகளின் வடுக்களை மற்றவர் பார்வைக்குத் தென்படவைக்கும். ‘'எதிலும் நம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்' பற்றார்வத்தை வெளிப்படுத்திக் காட்டும் புதிய முறை. அன்பு கூரும் ஒருவரில் நம்பிக்கை கொள்கிறோம். அன்பு வாழும் இடத்தில் ஐயம் எழுவதில்லை, அன்புடையாரிடம், ஐயப்பாடு கொள்வது கூடாது, முடியாது.

'நடக்கக் கூடியது என்னும் நம்பிக்கை கொள்க' மிகவும் தீங்கு விளைக்கும் சூழ்நிலையில் நடக்கும் எனும் ஆர்வ நம்பிக்கை என்பது, தோல்விவரக் கூடும் என்ற நிலையினையும் கடந்து, வெற்றியையும் அளித்து ஒரே சீரான மகிழ்ச்சியையும் தரவல்லது.