அன்பு வெள்ளம்/இல்லறம் ஓங்கும்

விக்கிமூலம் இலிருந்து

இல்லறம் ஓங்கும் நம் இல்லத்தை ஓங்கச் செய்வது அன்பு

நாகரிக முதிர்ச்சி பெற்ற - முற்பட்ட காலத்திற்குரிய மொழிகளில் 'இல்லம்' என்னும் சொல் எங்கேனும் கையாளப் பட்டுள்ளதா என்று நீங்கள் அறிந்திருப்பீர்களேயானால் அஃது ஒர் அற்புத்மே.

தூய (Bible) திருமறையில் எபிரேய (Hebrew) மொழியிலிருந்து 'இல்லம்' என்னும் சொல்லினை மொழி பெயர்த்திருக்கிறோம். "Home எனும் சொல் எபிரேய மொழியில் 'வீடு, கூடாரம், வாழும் இடம்' என்று பொருள்படும். அந்த வீடு அல்லது கூடாரம் என்பதில் ஒருவர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று மனைவியருடன் வாழும் இடம் என்றே பொருள்படும். அத்தகு வாழும் இடத்தைக் கூடாரத்தை வீடு என்று வழங்குவதால் அது பொருத்தம் இல்லை என்று கருதி, 'இல்லம்' என்று சிறந்த பொருளைக் கொண்டதாக மொழி பெயர்க்கப் பெற்றது. புதிய ஏற்பாட்டில் கூட, கிரேக்கத்திலிருந்த வீடு எனும் பொருள்படும் சொல்லினை மாற்றி (Home) 'இல்லம்’ என்றே மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது.

கிறித்துவ வாழ்வியலின்படி 'இல்லம்' என்றால் ஒருவன் ஒருவளோடு நிலைபேறு இறைவனின் இயற்கைப் பண்பினைப் பெற்றுக் கொண்டவராய், இன்புற இணக்கமாக வாழும் இடம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

கணவன் மனைவியாக வாழும் ஆணும் பெண்ணும் தம் வாழ்வில், நிலை பேறான தெய்வப் பேற்றைப் பெற்று வாழ்வார் ஆவார்! அப்படி வாழும் ஆணோ, பெண்ணோ திருமண முறிவை (Divorce) ஒருபோதும் விரும்பார், கேளார், ஏலார்!

அதுபோல நிலைபேறு வாழ்க்கை பெற்ற கணவன் மனைவியானவர் அன்பில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கை நெறியில் நடப்பவராக இருப்பாரே அன்றி, இருவரிடையே மனமுறிவு ஏற்பட்டு அதனுள் திருமண முறிவு கேட்டு அறமன்றங்களுக்குச் சென்றிடும் எவரையும் நாம் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளிலே கூட கண்டிட இயலாது.

உண்மையில் இஃது ஒரு தடுமாற்றம் அல்லவா? திருமணத்திற்கோ திருமணத்தின் நிறைவேற்றமான இல்லற வாழ்விற்கோ ஒரு தீர்வு உண்டு என்பது ஒரு கண்கூடாகத் தெரியவில்லையா?

தன்னலம் என்பது பிரிவினை உண்டாக்குவது. அன்பு என்பது ஒன்று சேர வைப்பது.

புதிய அன்பின் மெய்ம்மையை உலகுக்கு இயேசு அறிமுகம் செய்தார் கொணர்ந்தார்; அதனை அவர்தம் வாழ்க்கையின் மூலம் செயல்படுத்தினார். அதுவும் புதிய திருச்சபை தோன்றிய போதே தோற்றுவிக்கப் பெற்றது. அந்த அன்பின் வெளிப்பாடுதான்் ஒவ்வோர் இல்லத்திலும் - ஒவ்வொருவருவர் இல்வாழ்க்கையிலும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க உதவும் பெரும் உத்தியாகும்; உதவும் கருவியாகும். மீண்டும் பிறப்பெடுக்கப் பெற்ற மாந்தருள் விளங்கும் ஆவி - அன்பின் கனியாகும்.

எதற்கெடுத்தாலும் ஏன்? எதற்கு? என்று வினாக்கள் கேட்டு ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவின் விளைவுகளிலிருந்து தோன்றுவதில்லை அன்பு வாழ்க்கை.

அன்பு வாழ்க்கையைப், பகுத்தறிவு ஒருபோதும் தோற்றுவிக்காது. தூய ஆவியிலிருந்து பிறப்பது - அன்பு.

உரோமன் 5 : 5-ஐ நினைவு கூர்வோமாக "நமக்கு அருளப் பட்ட தூய ஆவியினாலே, தேவ அன்பு, நம்முடைய நெஞ்சங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது".

'நெஞ்ம்’ (Heart) என்னும் சொல் 'ஆவி' (Spirit) என்றும் கொள்ளப்படுகிறது. இவ் இரு சொற்களும் இணையானவை. மாற்றுச் சொற்கள்.

மீண்டும் புதிதாகத் துய ஆவியினால் - நாம் பிறந்த பின்பு, நம்முடைய நுரையிரல்களின் காற்றைக் கொண்டு மூச்சு உட் கொள்வதும் வெளியிடுவதும் போன்றே இயேசுவின் அன்பு வாழ்க்கை தோய்ந்த நம் ஆவியில், நாம் உயிர் மூச்சுப் பெறுகிறோம்.

அளப்பரிது அன்பு; அதாவது அருளாளரின் அன்பே அன்பானது; அளப்பரிது. அவ் அன்பு கடவுளின் அன்பு. நம்மில் அவ் அன்பு இறைவனின் தெய்விகத்தை அதன் இயல்பினைக் கொண்டுள்ளது. அவ் அன்பு எல்லோரிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் போய்ப் பரவிட வேண்டுமாயின், பரவிடத்தக்க வகையில் பல்கிப் பெருகிடச் செய்வோமாயின், யார் எவர் என்று எண்ணாமல், எல்லோருக்கும் எல்லா உயிர்க்கும் உதவி செய்ய நமக்கு அவ் அன்பே உதவுகிறது.

நாள்தோறும் நாம் ஒரு பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். அப் பயிற்சி, நாம் காலையில் விழித்தெழும்போதே, விழிப்புணர்வு பெற்றிடும் போதே, "என்னுள் கடவுள் வந்துறைகிறது இன்று" என்று எண்ணுவதுதான்! அக் கடவுள் என் பணிகளை நான் செவ்வனே செய்து முடிக்க, எளிதாக முடித்துவிட, அருள் செய்யும் மாபேராற்றல் உடையது; எல்லாம் வல்லது: ஆகவே கடவுள் என்னுள் இருந்து என்னை ஊக்குவித்து எண்ணமாயினும் சொல்லாயினும் செயலாயினும் அனைத்தினை யும் அன்பின் வழியாகவே செய்து முடித்திட அருள்கிறது. எவ் வகையிலும் எத்தகைய கண்டம் வந்தாலும், அந்தத் திரும்பு கட்டத்தில் என்னைத் தன்னந்தனியே கைவிடாமல், அங்கே என்னைத் தடுத்து ஆட்கொள்ளும்; என் பணியில் வெற்றி பெற்றிட அருளும் என்று உறுதியாக எண்ணுவது தான் அப் பயிற்சி.

தன் வாழ்வின் தளிர்க் கைகளைக், கொடிமுந்திரி கிளைகளின் மேல் தாவிப் பற்றிடச் செய்கிறதோ அதுபோன்று நாம் நமது நெஞ்சங்களைத் தூய்மையுடன் திறந்து வைத்தால் கடவுள் தன்னுடைய அன்பினை வார்த்திடும் என்பது உறுதி.

அறிவுக்கு வரையறை - ஒர் எல்லை உண்டு! ஆனால் அன்புக்கு இல்லை! அன்பினால் நெஞ்சம் சிலிர்க்கிறது; புளகாங்கித உணர்ச்சி பெருகிடச் செய்கிறது. இந்த அளவில் அன்பினை நாம் உணர்ந்தோம் என்றால், வாழ்க்கை என்பது மேன்மையானதாக உண்மையானதாக இயல் கடந்த புதுமைக் காவியமாக ஆகும்.

எனவே ஒவ்வொரு நாளும், நாம் விழித்தெழும்போதே, விழிப்புணர்வு பெற்றபோதே "இன்று நான் நடக்கவிருப்பது அன்புப் பாதையில், இன்று நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை; எல்லாம் வல்ல இறையின் ஆற்றல் - பேறு எனக்கு வாய்த்துள்ளது, இன்று அவ் இறையின் இயல்பு என்னில் பொங்கிப் பெருகுகிறது, அவ் இறை காட்டிய கனிந்தருளிய அன்பு வாழ்க்கையை நான் கைக் கொள்கிறேன்" என்று எண்ணவும் பின்பு எண்ணியபடி நடக்கவும் வேண்டும்.

எந்த நல்ல செயலிலும் காணப்படுவன தெய்விகம், அன்பு. நல்ல செயல் இன்றேல் அன்பின் செயல் இல்லை, அன்பு இல்லை! அதனால்தான், அன்பினை இறை, திருக்குமரானான இயேசுவிடம் அளித்தார். தம்மில் நிறைந்த இறை அன்பினால் இயேசு அருட்பணி ஆற்றினார். மன்னுயிர்களிடம் அன்பு கூர்ந்து, அவ் அன்பினால் அனைவரையும் ஆட்கொள்ளும் அற்புதப் பணிகள் ஆற்றினார்.

அப்படிப்பட்ட அன்பினை நம்மில் நிறைந்திட - பொங்கி வழிந்திடச் செய்யும் நாள் எந்நாளோ, அந்நாள் நம் வாழ்க்கையில் ஒரு மேலான நாள் ஆகும். நாமாகத் திருப்பி நம்மில் பாய்ச்சிடத் தக்க வெள்ளமாகப் பெருக்கெடுத்து அன்பு எங்கேனும் ஒடுகிறதா என்ன? இல்லை; ஒருக்காலும் இல்லை; எங்கனும் இல்லை. கடவுள் நம் நெஞ்சத்தில் அன்பினைப் பொழியுமாறு நாம் நடந்து கொள்ளவேண்டும். அப்படி நடந்து, இறையின் திருவருள் அன்பென நம்முள் பெருக்கெடுத்திடுமேயானால் அத்தகு அன்பிற்கு வரையும் இல்லை; எல்லையும் இல்லை; அடிைக்கும் தாழும் இல்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

அன்பின் வெளிப்பாடு - அருள் இரக்கம் 2 தெசலோனி 1:3 "உடன்பிறந்தோரே! நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகக் கடவுளைப் போற்றிப் புகழ்கிறோம். உங்கள் பற்றார்வம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்கள் எல்லோரும் ஒருவரில் ஒருவர் வைத்திருக்கின்ற அன்பு மிகுகின்றபடியினாலும் அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது"

அன்பு உடன் பிறப்புகளே! சற்றே எண்ணிப் பாருங்கள்!

நம்மில் ஒருவர்க்கொருவர் கொள்ளும் அன்பு மாண்பானது. அம் மாண்புறும் அன்பால்தான், திருச்சபையில் நமக்கென்றொரு மேம் பாட்டு நிலையினை - இன்னும் சொல்லப் போனால் வல்லமை யையே ஈட்டுகிறோம் என்பது எண்ணி எண்ணிப் பெருமைப்படத் தக்க ஒன்று.

        கள்ளம் கபடம் கலக்கம் இவைமூன்றும்
        எள்ளளவும் இல்லதே அன்பு.