அபிதான சிந்தாமணி/இரண்டாம் பதிப்பின் முன்னுரை
௳
கடவுள் துணை
இரண்டாம் பதிப்பின்
முன்னுரை
தமிழ் நூலின்கண்ணே வழங்கி வரும் சிறப்புப் பெயர்களைக் குறித்தும் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சாதனமொன்றுமில்லை. திவாகரம், பிங்கலந்தை முதலிய நூல்கள் சொல்லுக்குப் பொருள் கூறுவனவேயன்றிச் சிறப்பு பெயர்களைக் குறிக்கவுமாட்டா, விவரிக்கவுமாட்டா. அக்குறையை நீக்க எழுந்ததுவே அபிதான சிந்தாமணி என்னும் இந்நூல்.
மதுரையின் கண்ணே நிறுவப்பட்டுள்ள தமிழ்ச் சங்கம் வாயிலாக, இற்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகட்கு முன்னர் 1910 ஆம் ஆண்டில் எனதருமைத் தந்தையார் திருவாளார் ஆ. சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப் பெயரிய பெரியதொரு அகராதியை வெளியிட்டார்கள். அப்போது முதலே எனது தந்தையார் அந்நூலில் விடப்பட்டுப் போனதாகக் கண்டவற்றையும் பின்னும் தம் ஆராய்ச்சியில் தெரிந்தனவற்றையும் அவ்வப்போது குறித்து வந்தார்கள். முதற்பதிப்பு 1050 பக்கங்கள் கொண்டன. இந்நூலோ 1634 பக்கங்களுடையன. அது கொண்டே இந்நூலில் வந்துள்ள புதிய சொற்களும் இது அடைந்துள்ள திருத்தங்களும் ஒருவாறு விளங்கும்.
இந்நூல் எனது தந்தையார் அச்சுக்குக் கொடுத்துத் தாமே ஆயிரம் பக்கங்கள் வரை அச்சுத்தாள்களைத் திருத்தி வந்தார்கள். பின்னர் நோய்வாய்ப்பட்டு 1931ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (பிர) சிவபெருமானது திருவருடி நீழலை யடையவே. அதனை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பு என்னை சார்ந்தது. என்னுடைய உத்தியோகத்தோடு இவ்வேலையையும் செய்வது சிறிது அசாத்தியமாகவே இருந்தது. ஒருநாள் தற்செயலாக சென்னை யூனிவர்சிட்டியைச் சார்ந்த தமிழ் லெக்ஸிகன் ஆபீசில் எனது தந்தையாருக்குப் பின் அவர் ஸ்தானத்தில் வேலை பார்த்துவரும் எனது நண்பர் இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை திருவாரூர் சோமசுந்தர தேசிகரவர்களைச் சந்திக்க நேர்ந்த போது அவர்களை அச்சுத்தாள்களைத் திருத்துவதோடு முடியும்வரை ஆவன செய்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஒத்துக் கொண்டு பிற்பாகத்து அச்சுத்தாள்களை பார்த்தும், தன்னாலியன்ற திருத்தங்களை செய்தும், வேண்டும் உதவி புரிந்தார்கள். அவற்றின் பலனாக இந்நூல் இப்போது வெளியாகின்றது. இதனை அழகுற அச்சிட்டு முடித்த சென்னை ஸி. குமாரசாமி நாயுடு கம்பெனியாருக்கும் திரு.சோமசுந்தர தேசிகரவர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
திருமயிலாப்பூர் சீமுக தைத்திங்கள் 17 |
ஆ. சிவப்பிரகாச முதலியார், B.A., |