உள்ளடக்கத்துக்குச் செல்

அபிராமி அந்தாதி/ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து


ஆராய்ச்சி

திருக்கடவூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் மாயூரம்- தரங்கம்பாடி இருப்புப் பாதையில் இருக்கும் ஒரு தலம். இத்தலம் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூவகைச் சிறப்புக்களையும் உடையது. தேவர்களெல்லாம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து ஒரு குடத்தில் கொணர்ந்து இத்தலத்தில் வைத்தனர். மீட்டும் எடுக்க முயன்ற போது அக்குடமே லிங்காகாரம் ஆகிப் பதிந்து விளங்குவதைக் கண்டனர், பிறகு அமுதம் வேண்டித் திருமாலைத் தலைவராகக் கொண்டு சிவபிரானைப் பூசித்தனர். திருமால், அருச்சனை புரிந்து வழிபடுகையில் அம்பிகையை வணங்க மறந்தமையின் சிவபிரான் திருவருள் கிடைக்கவில்லை. இப்பிழையை உணர்ந்து சிவாலயத்தில் தனியே எழுந்தருளியுள்ள அபிராமியைப் பூசித்துப் பின்னர்ச் சிவபிரானையும் பூசிக்கவே, எம்பெருமான் எழுந்தருளி அமுதம் கிடைக்கும்படி திருவருள் புரிந்தனர். அமுத கலசமே திருவுருவாக எழுந்த - இறைவருக்கு அமிர்தகடேசர் என்ற திருநாமம் உண்டாயிற்று. கடம் (குடம்) அமைந்த தலமாதலின் இத் தலத்திற்குக் கடவூர் என்ற திருநாமம் அமைந்தது.

சிவஞானம் வேண்டிப் பூசித்த பிரமதேவருக்குச் சிவபிரான் மௌனத்தை அளித்தருள, அதிலிருந்து தோற்றிய வில்வ விருட்சமே இத்தலத்துக்குரிய விருட்சமாயிற்று. அதனால் வில்வாரணியம் என்ற திருநாமம் இத் தலத்திற்கு உண்டாயிற்று.

சிவபெருமான் வீரத் திருவிளையாடல் புரிந்த அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று இது. மார்க்கண்டேய முனிவரைக் கொல்ல வந்த காலனை உதைத்து அடியாருக்கு மரண பயமின்மையை வெளிப்படுத்திய சிறப் புடையது இது. மூவர் தேவாரமும் பெற்றது.



"மருட்டுயர் தீர அன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவின்வெங் கூற்றம் பதைப்ப உதைத்துங்கனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே"

என்பது முதலிய தேவாரத் திருப்பதிகங்களில் திருநாவுக்கரசர் இவ்வீர விளையாட்டைப் பாராட்டுகின்றார்.

இங்கே எழுந்தருளியுள்ள விநாயகர் திருநாமம் கள்ளப் பிள்ளையார் என்பது; கள்ள வாரணப் பிள்ளையாரெனவும் வழங்கும். குங்கிலியக்கலய நாயனாரும், காரி நாயனாரும், உய்யவந்த தேவரும் அவதரித்த தலம் இதுவே.

இத் தலத்தின் ஆலயம் திருக்கைலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தின் பாதுகாப்பில் உள்ள கோயில்களுள் ஒன்று.

இங்கே எழுந்தருளியுள்ள அபிராமியம்பிகை மிக்க சக்தி பெற்ற மூர்த்தி. தேவர்கள் அமுதம் பெற இத் தேவியின் திருவருளும் இன்றியமையாமல் இருந்தமையின் இந் நூலில் ஆசிரியர், “விண்மேவும் புலவருக்கு, விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே!” (90) என்று பாராட்டுகின்றார். இத்தலத்தில் அடியார்களாகிய மனிதரும், அமுதம் வேண்டிய தேவரும், மார்க்கண்டேயர் முதலிய, முனிவரும் வழிபட்டதை எண்ணியே "மனிதருந் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி - குனிதருஞ் சேவடிக் கோமளமே" (4) என்று போற்றுகின்றனர்.. மாயா முனிவர் என்றது 'காலன்கைப்பாசத்திற் படாமல் சிரஞ்சீவியாக மரணமின்மை பெற்ற மார்க்கண்டேய முனிவரையென்றே கொள்ளலாம்.

கூற்றம் குமைத்த குரைகழற் காலையுடைய கடவூர் எம்பெருமானும் அபிராமியம்மையும் தம்முள் வேறல்லவராகையால், கால பயமின்றிச் செய்யும் திருவருட் பெருக்கை அம்பிகையின்பாலுஞ் சார்த்தி இவ்வாசிரியர் கூறுவர்; "இறைவரும் நீயும் வந்து, வெவ்விய காலனென் மேல் வரும் போது வெளிநிற்கவே" (18), "அந்த, கன்கைப் பாசத்தில் அல்லற் படஇருந்தேனை...ஆண்டு கொண்ட, நேசத்தை யென்சொல்லுகேன்!” (32), “அடுங்கால் னெனைநடுங்க, அழைக்கும் பொழுதுவந் தஞ்ச லென்பாய்" (33); ஆவி வெங் கூற்றுக்கிட்ட, வரம்பை அடுத்து மறுகுமப் போதுவங் தஞ்ச லென்பாய்" (49);. எக்தித்தகப்பு வேலை வெங் காலனென் மேல்விடும் போது வெளிநில் கண்டாய்" (86).

அபிராமி என்ற திருநாமத்தின் சொற்பொருள்: போழகுடையவள் என்பது; "எம்பெரு மாட்டி தன் பேரழகே" (70), 'அழகுக் கொருவரு மொவ்வாத வல்லி' (71) என்பன இப்பொருளை நினைந்து பாடியனவே.

ஆசிரியர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சோபான முறையில் அம்பிகையை வழிபட்டு அவ்வந் நிலையில் அம்பிகையின் திருவருளை நுகர்ந்தவர். ஆதலின் அருச்சித்துப் பூசிக்கும் உருவத் திருமேனியைக் கண்டு களித்தல் தொடங்கி, 'ஒளியே வெளியாகித். தம்மை மறந்து கருவி கரணம் கழன்று நிற்கும் ஆனந்தாநுபவம் வரையிலுள்ள நிலைகளை யெல்லாம் உணர்ந்து பாராட்டுகின்றார். அம்பிகையின் திருவுரு அழகையும் திருமேனிச் சோதியையும் தரிசித்து வாயாரப் பாடுகின்றார். பல பல இடங்களில் வெவ்வறு அம்சங்களை நிறுவிப் பல போல கோலத்தில் நின்று அருள் புரிபவள் பராசக்தி. அதனை உணர்ந்து அப்பெருமாட்டியின் அதிசயமான வடிவுகளை யெல்லாம் புகழ்ந்து பேசுகிறார். அம்பிகையோடு பிரிவின்றி நின்ற சிவத்தையும் இணைத்துக் காட்டுகின்றார். அம்பிகையின் அடியார்களது இயல்பையும் அருளால் அவர்கள் அடையும் பேற்றையும் பல படியாக எடுத்துரைக்கின்றார். இவற்றைச் சிறிது கவனிப்போம்.

அபிராமியின் எழுதரிய திருமேனியின் ஒளி இருநிலமும் திசைநான்கும் பரந்து ஒளிர்வதைக் கண்டு இன்புற்றவர் ஆசிரியர். ஒளியும் மென்மையும் மணமும் உடைய அத் திருமேனியைத் தரிசித்து ஒளியே என்றும், கோமளமே என்றும், பரிமள யாமளையே என்றும் துதித்துக் களிக்கின்றார். உதிக்கின்ற செங்கதிரும், சிந்துரமும், மாணிக்கமும், மாதுளம் போதும், குங்கும நீரும், கமலமும் போன்ற அம்பிகையின் திருமேனி சில சமயங்களில் மின்னாயிரம் ஒருங்கு வந்தாற்போலப் பளிச்சிடுகின்றது. இப்படிச் செந்நிறம் பெற்றதோடு அம்பிகை பச்சைப் பசுங்கொடியாகவும், பொன்னிறம் பூண்ட பிங்கலையாகவும், வெண்ணிற மேனியினளாகவும், நீலநிறமுள்ள காளியாகவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கின்றாள்.

அடியார்களுக்குப் பற்றுக்கோடாகிய அம்மையின் திருவடி மலர்களை, "எமக்கென்று வைத்த சேமம்” என்று போற்றுகின்றார். அவை மூவர் துதிப்பன; மறை பழகிச் சிவந்தன; மறைக்கும் அந்தமாவன; மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்றன. அத் திருவடியைத் தாமரையென்றும் பல்லவமென்றும் ஆசிரியர் புகழ்கின்றார். தம்முடைய தலையில் அத் திருவடியை வைத்து ஆட்கொண்ட சீலத்தை இவர் பெருமிதத்தோடு பாராட்டுகிறார் "நின் திருவடியை வைப்பதற்குச் சிவ பெருமான் திருமுடியையும் - வேதங்களையும்விட அடியேன் முடை நாய்த்தலை சால நன்றோ?” (60) என்று உருகுகிறார். அந்தச் சரணாரவிந்தங்கள் வேதமாகிய சிலம்பை அணிந்து விளங்குகின்றன.

மேல், அம்பிகையின் சின்னஞ் சிறிய மருங்கை வருணிக்கின்றார். துடியும் வஞ்சிக்கொடியும் மின்னலும் நுண்ணூலும் ஒத்து விளங்குவது அது, செய்ய பட்டும் பன்மணிக் கோவையும் இடையிற் புனைந்த கோலத்தைக் காட்டுகிறார் ஆசிரியர். மால்வரையும் உயர் ஆழியும் #ரேழ் புவனமும் பூத்த உந்தியையும், - அருள்கூர் தருணாம்புயம் போன்ற தனபாரங்களையும் அழகுபடப் புனைகிறார். அரும்பு போலவும் செப்புப் போலவும் மேரு மலை போலவும் விளங்கிப் பொன்னிறம் பெற்ற நகில்கள் எந்தைதம் கருத்தன; அவர் கண்ணன; அவர் வலிய நெஞ்சை ஆட்டுவிக்கும் இயல்பு படைத்தன. அவற்றின் மேல் சண்பக மாலையும் கடம்ப மலரலங்கலும் முத்து மாலையும் பூண்டு கோலமளிக்கிறாள் அம்பிகை. சில பொழுது பாம்பு மாலையை அணிந்த அகிமாலினியாகவும் இருக்கிறாள்.

அம்பிகையின் திருக்கரங்கள் நான்கும் கோகனதத்தைப்போன்ற அழகுடையன. அவற்றில் முறையே பாசமும் அங்குசமும் மலர்ப்பாணம் ஐந்தும் கரும்பு வில்லும் ஏந்தியிருக்கின்றாள். வளையணிந்த திருக்கைகளில் சூலம் வைத்த கோலமும், வீணை ஏந்தும் திருக் கோலமும் உடையவளாகி விளங்கும் நிலையும் உண்டு: அம்பிகையின் திருத்தோள் மூங்கிலை வென்று விளங்குவது.

அவளுடைய வதனாம்புயத்தில் சிந்தூரத் திலகம் ஒளிவிடுகிறது. வாய் பவளக்கொடி போல்வது. அதனிடையே நிலவும் தவளத் திருநகை மயிலிறகின் 'அடிக் குருத்தை, நினைப்பிக்கின்றது. அத் திருவாயாகிய பவளத்தையும் முறுவலாகிய நிலவையும் துணைவிழியில் எழுதிப் பார்த்திருக்கும் இயல்புடையவர் ஆசிரியர்.

அம்பிகையின் இன் சொல் பாலையும் தேனையும்பாகையும் போலும் பணி மொழி; பண்களிக்கும் குரல். அவள் திருச்செவியில் தரளக்கொப்பும் வயிரக் குழையும் ஒளிர்கின்றன. இயற்கை மணம் வீசும் தேவியின் கன்னங் கரிய குழலில் கடம்ப மலரும் பிச்சிப் பூவும் அழகு பெறுகின்றன; மதியை அக்கூந்தலில் அணிந்திருக்கின்றாள்.

இத்தகைய திருமேனிக் கோலத்தைச் சமுதாய சோபையோடு தியானிப்பதையன்றித் தனித்தனியே நயனாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், சரணாம் புயமும் தஞ்சமாகத் தியானித்துக் கோகனதச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் சிந்தை வைத்து அபிராமியின் கோலமெல்லாம் குறித்து இன்புற்றவர் இவ்வாசிரியர். இந்தத் தியானம் வீறு பெறப் பெற இவர் எங்கும் அம்பிகையின் திருக்கோலத்தையே காணும் அநுபவத்தைப் பெற்றதை,

"பார்க்குந் திசைதொறும் பாசாங் குசமும் பனிச்சிறைவண்
டார்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லலெல்லாம்
தீர்க்கும் திரிபுரை யான்திரு மேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே”

என்ற அழகிய பாடலால் தெரிவிக்கிறார்.

திருவுருவத் தியானத்தோடு, திருநாமங்களைப் பல பல உருவத்தில் சொல்லி இன்புறும் இயல்புள்ளவர் இவர்; "கற்றதுன் நாமம்" (12) என்று சொல்கிறார். அவை நான்மறை சேர் திருநாமங்கள் என்பர். அவற்றைச் சொல்லுவதில் இவருக்கு ஒரு தனியின்பம் முகிழ்க்கிறது. 'தீவினையுடைய அடியேன் தொடுத்த சொற்கள் பொருளற்றனவானாலும் நின் நாமங்களை விரவ வைத்திருக்கின்றேன். அவற்றைக் கூறுமளவிலாவது இவை தோத்திரமாகும்' (66) என்று இவர் உரைக்கின்றார். அம்பிகையை வருணித்தும், இயல் புரைத்தும் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் இவர் எடுத்தாண்ட திருநாமங்கள் பல. அவை வருமாறு: அகிமாலினி, அண்டமெல்லாம் பூத்தவள், அணங்கு, அணிக்கு அழகு, அணுகாதவர்க்குப் பிணி, அதிசயமான வடிவுடையாள், அர்தரி, அபிராமவல்லி, அபிராமி, அம்பிகை, அம்புயாதனத்தம்பிகை, அம்மை, அயரர் விருந்து, அரு, அருமருந்து, அருட்கடல், அருள், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அழியாத கன்னிகை, அனைத்தையும் நீங்கி நிற்பாள், ஆடகத் தாமரை ஆரணங்கு, ஆத்தாள், ஆரணங்கு, ஆனந்தவல்லி, இசை வடிவாய் நின்ற நாயகி, இதயத்துப் பிறந்தவள், இமயப் பிடி, இமவான் பெற்ற கோமளம், இறைவாசெம்பாகத்து இருந்தவள், இறைவி, உடையாள், உமை, உலகெங்குமாய் நின்றாள், உள்ளத்தே விளைந்த கள், எந்தை துணைவி, எம்பிராட்டி, எம்பெருமாட்டி, எழுதரிய மேனி மயில், ஏதமிலாள் ஒளி, ஒன்பது கோணங்களில் உறைபவள், ஒன்று, கடம்பு சாத்தும் குழல் அணங்கு, கமலத்திரு, கலா வயிரவி மண்டலி, சறைக்கண்டனுக்கு மூத்தவள், கன்னி, கனங்குழை, காளி, கியாதி உடையவள், கிளி, குணக்குன்று, குவளைக்கண்ணி, கோமள யாமளை, கோமளவல்லி, சகலகலா மயில், சங்கரனார் மனைமங்கலம், சங்கரி, சடையோன் புடையாள், சண்டி, சாம்பவி, சாமளை, சித்தி, சித்திதரும் தெய்வம், சிந்தூர மேனியள், சிந்துரானன சுந்தரி, சிவகாமசுந்தரி, சிவம், சுந்தரவல்லி, சுந்தரி, சூலினி, செங்கண்மால் திருத்தங்கச்சி, செங்கலச முலையாள், செம்பட்டுடையாள், செய்யாள், ஞாலமெலாம் பெற்ற நாயகி, தலைவி, தவள், தாய், திரிபுரசுந்தரி, திரிபுரை, திரு, தெருள், தேவரைப் பெற்ற அம்மை, தையல்நாயகி, நாராயணி, நான்முகி, நீலி, நுண் நூல் இடையாள், பசும்பெண்கொடி, பஞ்ச சாயகி, பஞ்சபாணி, பஞ்சமி, பணிமொழி, பயிரவி, பராசக்தி, பராபரை, பரிமளப் பச்சைக் கொடி, பலவுரு, பனிமொழி, பாசாங்குசை, பாலினும் சொல் இனியாள், பிங்கலை, பிணிக்கு மருந்து, புத்தி, புரத்தை; புவனம் காத்தவள், புவனம் பதினான்கையும் பூத்தவள், பூங்குயில், பூங்குழலாள், பூதங்களாகி விரிந்த அம்மை, பூரணாசல மங்கலை, பைங்கிளி, போகம், மங்கலை, மண்டலி, மணி, மணி புனைந்த அணி, மணியின் ஒளி, மதிச் செஞ்சடையாள், மருள், மலைமகள், மறையின் அரும்பொருள், மறையின் பரிமளம், மனோன்மணி, மாத்தவள், மாதங்கி, மாதுளம்பூ நிறத்தவள், மாலினி, மின்கொடி, முக்கண்ணி, முகுந்தற்கு இளையவள், முகிழ்நகை, முத்தி, முத்திக்கு வித்து, முதல்வி, முப்புரை, மூவருக்கும் அன்னை, மெல்லியல், யாமளவல்லி, யாமளை, வஞ்சர் நெஞ்சடையாள், வல்லி, வாணுதல், வாணுதற் கண்ணி, வாராகி, விழுப்பொருள், வெளி, வெளியாள், வேதப்பரிபுரை முதலியன.

ஒன்றாகிப் பலவாகிய உருவம் உடையவளாகி இருந்தும் அம்பிகை அருவே உருவானவள். அகில சராசரங்களும் வானாதி பூதங்களுமாகி நின்றும், அவற்றினின்றும் நீங்கினவள். வேதத்தின் முதலும் இடையும், அந்தமும் பொருளுமாக இருந்தும் மறைதேடநின்றவள். பிணியாகி நலிவாளும் அவள்; அப்பிணிக்கு மருந்தாகி அருள் மலிவாளும் அப்பிராட்டியே. பொருளாகவும் அப்பொருள் முடிக்கும் போகமாகவும் அப்போகத்தைக் செய்யும் மாயையாகவும் மாயா மலத்தை நீக்கும் தெருளாகவும் இலங்குவாள். ஆனந்தமாய் அறிவாய் அமுதமாய் இன்பம் தருவாள். புத்தியும் முக்தியுமாவாள். உலகுக்கு மருந்தாகவும், அமரருக்கு விருந்தாகவும் உதவுவாள். இசை வடிவாய் நிற்பாள், ஒளியாய் ஒளிர்வாள்; வெளியாய் விரிவாள். திங்களுக்குள்ளிருந்து தண்ணொளி வீசுவாள்; செஞ்சுடருக்குள்ளிருந்து தேசு தருவாள், பிரமனிடம் கலைமகளாகவும், திருமாலிடம் திருமகளாகவும் இருப்பவர்கள் அவளுடைய சத்தியமிசங்சளே யாவர். புவனம் பதினான்கையும் பூத்துக்காத்துக் கரக்கும் அப் பராசக்தி பிறப்பும் இறப்பும் அற்றவள்.

இமயவரையன் மகளாகத் திருவவதாரம் செய்தவள்; மகிடன் தலைமேல் நிற்பவள்; பிரம கபாலம் தரிப்பவள்; முகுந்தற்கு இளையவள்; கறைக் கண்ட னுக்கு ஒரு வகையில் மூத்தவள்; ஒருவகையில் அன்னையும் ஆவாள்.

எம்பெருமானுடன் ஒன்றியும், தனியே இணைந்தும் அம்மை செய்யும் ஆடல்கள் சொல்லத் தரமோ? சிவத்திற்கும் சக்திக்கும் பேதமில்லை யென்பதை நன்கு உணர்ந்த இப் பெரியார், "சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும்” ஆக அம்பிகையை வழிபடுகிறார். சொல்லும் பொருளுமென நடராசப் பெருமான் அருகில் ஒன்றி இருப்பாள் தேவி; திருமணக் கோலத்தில், இறைவருடன் வீற்றிருப்பாள்; அவருடைய ஒரு கூற்றை மெய்யினின்றும் பறித்துக் குடிபுகுவாள்; மன்மதனை எரித்த அப்பெருமானுடைய அழியா விரதத்தை ' அண்ட மெல்லாம் பழிக்கும்படி அவர் பாகத்தைக் கொண்டு அச்செயலால் அவர் மதியை வவ்வி, ஒரு மகனும் அவருக்கு உண்டாகும்படி செய்த வல்லபமுடையாள்; அப் பிராட்டியின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு இறைவர் பணிந்து அவளது சரணாரவிந்தத்தை முடிக் கண்ணியாகச் சூடுகின்றார். அப்போது அவளுடைய கோபம் மிகாதிருக்கும் பொருட்டுத் 'தம்' கரத்திலுள்ள அக்கினியையும், சிரத்திலுள்ள கங்கையையும் அவர் கரந்து விடுகிறார். இங்ஙனம் அருள் விளையாடல் புரியும் அவ்விருவரும் ஒருங்கே வந்து திருவருள் புரிதலை இவ்வாசிரியர் பல இடங்களில் சொல்கிறார்:

"புனிதரும் நீயுமென் புந்தியெந்நாளும் பொருந்துகவே" (4)
"உமையும் உமையொரு பாகரும ஏக உருவிலவந்தின்
கெமையும் தமக்கன்பு செய்யவைத்தார்" (34)

"புண்ணியஞ் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக்
கண்ணியுஞ் செய்ய கணவருங் கூடிகம் காரணத்தால்
நண்ணியிங் கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநஞ் சென்னியின் மேற்பத்மபாதம் பநித்திடவே” (41)

"......... நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கந் தரவந் துடம்போ டுயிருற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன் னேவரல் வேண்டும்."(89)

அபிராமியின் தொண்டர்கள் ஆகமபத்ததியை ஓர்ந்து மறை சொல்லியவண்ணம் தொழுது வாழ்த்தும் இயல்புடையவர்கள்; அவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை; அவர்களுக்குத் தனம், கல்வி, தளர்வறியா மனம், தெய்வவடிவு, வஞ்சமில்லா இனம், இன்னும் நல்லன எவை உண்டோ அவை எல்லாம் அபிராமியின் கடைக் கண்கள் தரும்; ரத கஜ துரக பதாதிகள், மகுடம் சிவிகை, கனகம் ஆரம் முதலிய சின்னங்களைப் பெற்ற அரச பதவியைப் பெறுவார்கள்; அவர்கள் படையாத தனமே இல்லை; இந்திர பதவியும் பெற்று வானுலக இன்பம் அத்தனையும் அடைவர். பிறகு வீட்டையும் அடைவர்.

இறைவியின் திருவருளால் மெய்ஞ்ஞானம் பெற்ற அவர்கள் தவம் முயன்று யமவாதனையினின்றும் நீங்குவார்கள்; பிறவி வேரை அறுத்துவிடுவார்கள். அச் சிவஞானிகள் 'எமதெல்லாம் உனதே' என்று எல்லாவற்றையும் அம்பிகைக்கே அர்ப்பணஞ் செய்துவிட்டுத் தன்னந் தனியிருந்து விழிநீர் மல்கிப் புளகமரும்பித் ததும்பிய ஆனந்தமாகித் தேனில் விழுந்த வண்டு போலத் தேவியின் திருவருள் விலாசப் பரவெளியில் அமுதுண்டு கிடப்பர். அவர்கள் எது செய்தாலும் அதுவே தவமாகிவிடும்.

இத்தகைய தொண்டர்கள் கூடிய அவையத்தைப் பகலிரவாக நண்ணியவர் அபிராமிபட்டர்; அவர்களுடன் கூடி முறை முறையே தேவியின் பரமாகம பத்ததியைப் பன்னியவர். அவர்கள் பின்னே திரிந்து அவர்களைப் பேணுவதற்குப் பூர்வஜன்மங்களில் தவம் செய்திருக்க வேண்டும்; 'முன்னே. தவங்கள் முயன்று கொண்டேன்' என்று இவர் பெருமிதம் அடைகிறார். அவ்வடியார் பெருமையை எண்ணாதவர்கள் நரகுக்கு உறயாகியவர்களென்று கருதி அவர்களை நண்ணாதவர் இவர். குடில் தொறும் பலிக்கு உழலுகின்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம், "ஐயோ! இவர்கள் அம்பிகையை மாத்திரைப்போதுகூடமனத்தில் நினையாதவர்கள் போலும்"! என்று இரங்குபவர். பழிக்கே சுழன்று வெம்பாவங்களை செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் கூட்டத்தை விரும்பாதவர்.

வாக்கு, மனம், காயம் என்னும் மூன்றினாலும் அம்பிகையைப் பக்தி பண்ணி இன்புற்ற பெரியார் இவர், அம்பிகையின் திருக்கோலத்தையன்றி மற்றவற்றை நெஞ்சில் இருத்தாதவர். உருகி அம்பிகையின் பாதத்திலே மனத்தைச் செலுத்தியவர். பலிபெறும் துர்த்தேவதைகளைத் தாம் பூசிப்பதாகப் பிறர் கூறுவதைக் கேட்டவராதலின் தம் நிலையை இவர் ஒரு பாட்டில் வெளிப்படுத்தி யிருக்கிறார்.

"வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்...” (64)

'இறைவியின் புகழைப் பாடவும் நாமம் கற்கவும் பக்தி பண்ணவும் நான் என்ன புண்ணிபம் செய்தேன்! என்று பூரிக்கின்றார். அம்பிகையின் சீறடி சென்னி வைக்க ஒரு பெரிய தவம் எங்களுக்குக் கிடைத்ததே என்ன ஆச்சரியம்!' என்று வியக்கின்றார். கன்னியைக் காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் முன்செய்த புண்ணியம் அன்றோ?' என்று உவகை பூக்கிறார்.

"அம்மையே, நான் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும் கரையேற்றுகை நின் திருவுள்ளம், நான் மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்று. உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் பாமாலை கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாயே; இது நின் அருளுக்கு அடுக்குமா? பரமென்று உன்னை அடைந்துவிட்டேன்; ஆகையால் பக்தருக்குள் தரம் அன்று என்று என்னைத் தள்ளத்தகாது; என் ஆவி தவிர் விலதாகிய கதியை அடையும் வண்ணம் கருதியருள வேண்டும். அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்வாயாக. அதன் பொருட்டு நான் நின்று ஏத்துகின்றேன். இனி யான் பிறந்தால் நின் குறையே அன்றி யார் குறை? காலன் நான் நடுங்கும்படி வந்து அழைக்கும் பொழுது நீ தரிசனம் தந்து அஞ்சலென்பாயாக!" என்று ஒரு நிலையில் மனமுருகி வேண்டுகிறார், இத்தேவி உபாசகர்.

தாம் அம்பிகையால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற செய்தியை மனமுருகி நினைக்கின்றார்.

"அன்றே தடுத்தென்னை யாண்டுகொண்டாய்" (30)

"ஆசைக் கடலில் அகப்பட் டருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற் பட இருந் தேனைநின் பாதமென்னும்
பாசகமலந் தலைமேல வலியவைத் தாண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லுவேன்" (32)


தம்முடைய ஔவியத்தைத் தீர்த்து, பாசத் தொடரை அரித்து, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் அருட்புனலால் துடைத்து, ஆசையை அடங்கச் செய்து, வினையை ஓட்டி, பிறவியை உடைத்து, மறலிவருகின்ற வழியை மறிக்கச் செய்த அம்மையின் திருவருட் சிறப்பை எண்ணி எண்ணி வியக்கின்றார். அத் திருவருளே துணையாக இவர் அடைந்த ஆனந்தாநுபவத்தை அங்கங்கே புலப்படுத்துகிறார். அம்பிகையின் தரிசனத்தால் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரைகாணாமல் பெருகக் கருத்தினுள்ளே தெளிந்து நின்ற ஞானம் திகழ்கின்றதாம். "மனத்தில் இருள் சிறிதும் இன்றி ஒளி வெளியாகியிருக்கும் அருள் விலாசத்தைக் கண்டு, ஏதென்றறிகிலேன்!" என்று வேசாறிநிற்கிறார். அம்பிகையை உள்ளவண்ணம் கண்டு களித்ததை நினைந்து மகிழ்கிறார். "அகிலாண்டமும் நின், ஒளியாக நின்ற ஒளிர் திரு மேனியை உள்ளுதொறும், களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, வெளியாய் விடினெங்ங னேமறப்பேன் நின் விரகினையே” என்பதில் இவருடைய இன்பப் பெருக்கின் தலையளவு குறிப்பிக்கப்படுகிறது.

எல்லாம் கடந்து நின்ற அம்மை தமக்கு அருள் செய்து ஆனந்தாநுபவத்தைப் பெறச் செய்தது தம் பக்குவத்தையும் விஞ்சியதென்ற எண்ணம் இவருக்கு மீதூர்ந்து நிற்கின்றது. "பூதங்களாகி விரிந்த அம்மையே, நீ இரங்கத்தக்க எளியேன் அறிவெல்லைக்கு உட்பட்டது பெரிய அதிசயம்" என்று வியக்கின்றார். பக்குவம் இல்லாத காலத்தில் தம்மை ஆண்டு கொண்டதை நினைந்து, "எனக்கு வம்பே பழுத்த படியே" (21) என்று சொல்கிறார். "என் புன்மொழி நின் திருவடிக்கு உரியதானது நகைப்பதற்குரியது" (26) என்கிறார். தம் பக்குவத்தை அம்பிகை நினையாமலே ஆண்டு கொண்டாள் என்று தெரிவிப்பாராகி, "நாயேனையும்இங் கொரு பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்" (61) என்று பாடுகிறார்.

இப்படியெல்லாம் எளிதில் பெரிய இன்பங்களைக் கூட்டுவிக்கும் அபிராமியம்மையின் உபாசனை யாவற்றிலும் சிறந்ததென்பார். "அபிராமி சமயம் நன்றே" (94) என்று பாராட்டிப் பேசுவது காண்க. தாம் இன்பம் பெறுவதற்குக் காரணமான நெறியை இவர் உயர்த்தி வற்புறுத்திக் கூறுவது இயல்பே.

"கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல்
லாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன பரச மயம்விரும்
பேன்வியன் மூவுலகுக்
குள்ளே அனைத்தினுக் கும்புறம்
பேஉள்ளத் தேவிளைந்த
கல்ளே களிக்கும் களியே
அளியஎன் கண்மணியே"

என்று வீறுபெறப் பேசவைத்த சமயம் இவர் சமயம்.

இந் நூலின்கண் தில்லை, சீகாழி, திருவெண்காடு, காஞ்சிபுரம், மதுரை என்னும் திருத்தலச் செய்திகள் வருகின்றன. சிவபிரான் தில்லையிலும் திருவெண்காட்டிலும் நடனம் செய்தருளியதும், அம்பிகை சீகாழியில் திருஞான சம்பந்தருக்குப் பால் அருத்தியதும், காஞ்சிபுரத்தில் சிவபெருமான் திருமேனி குழையத்தழுவியதும், இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்ததும், மதுரையில் கடம்ப வனத்தில் எழுந்தருளியிருப்பதும், ஆகிய வரலாறுகள் இந் நூலில் சுட்டப் பெறுகின்றன. தேவார திருவாசகக் கருத்தும் சொல்லும் சில சில இடங்களில் உள்ளன.

பரம்பரையாக வேதநெறியில் ஒழுகும் குடும்பத்திற் பிறந்த இவ்வாசிரியர் வேதத்திலும், ஆகமத்திலும், லலிதா ஸஹஸ்ரநாமம் முதலிய தேவீ பரமான கிரந்தங்களிலும் உள்ள கருத்துக்களை அங்கங்கே எடுத்தாண்டிருக்கிறார்.

இந்நூல் நடை வடசொற்கள் இடையிடையே விரவிச் செம்பாகமாக அமைந்திருக்கின்றது. அம்பிகையின் திருநாமங்களை மிகுதியாகப் பொருத்தி ஆசிரியர் பாடுகிறார். எளிய நடையில் பெரும்பாலும் ஆற்றொழுக்கே அமைந்து இயலுகின்றன செய்யுட்கள். எதுகை நயம் பொருந்திய பாடல்கள் சில உண்டு.

“மின்கொடி மென்கடிக் குங்கும தோயம்" (1)
"முப்புரை செப்புரை செய்யும் புணர்முலை" (5)
"சுந்தரி யந்தரி (5)
"வந்தரி சிந்துர வண்ணத்தினாள்" (8)
"வானவர் தானவ ரானவர்கள்" (14)
"அமையு மமையுறு தோளியர் மேல்லைத்த வாசை" (31)
"வண்டு கிண்டி " (76)
"விருந்தாக வேலை மருந்தான தைநல்கும்" (90)
"புண்ணிய ரெண்ணிலர்". (97)

ஒரு செய்யுளில் மடக்கு அமைந்துள்ளது :

"உடையாளை ஒல்குசெம்
பட்டுடை யாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர்
நெஞ்சடை யாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்
மான்இடை யாளைஇங் கென்னைஇனிப்
படையாளை உங்களை
யும்படை யாவண்ணம் பார்த்திருமே."


சின்னஞ்சிறிய, பென்னம் பெரிய, கன்னங்கரிய, தன்னந்தனி, தங்கைச்சி, ஆத்தாள் என்ற வழக்குச் சொற்கள் இந்நூலில் வந்துள்ளன.

அன்போடு படிப்பவர் நெஞ்சில் அபிராமியின் திவ்வியத் திருஉருவம் தோற்றும்படியும், மேலும் மேலும் படிப்பாருக்குப் பக்தி நலம் பழுக்கும்படியும் செய்வது இந்நூல். அங்ஙனம் செய்வதற்குரிய சொல்நடையும் பொருள் ஆற்றலும் இதில் நிரம்ப அமைந்து கிடக்கின்றன. உண்மையான ஞானம் பெற்று அதனால் வரும் ஆனந்தாநுபவத்தை உடையவர்க்கன்றி இத்தகைய பொருட் சிறப்புடைய வாக்கு அமைதல் மிகவும் அருமை. அடிதோறும் ஆசிரியருடைய உயர்ந்த அநுபவநிலை கொப்புளித்துக் குமிழியிட்டு மணக்கின்றது. அந்த மணத்தை நுகரவைத்த ஆசிரியர் 'அபிராமி சமய'த்தை இதன் மூலமாக நமக்குக் காட்டுகிறார். நாம் உட்புகுந்து தெளிந்து பயன்பெறுவோமாக!