அபிராமி அம்மைப் பதிகம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக


ஸ்ரீ அபிராமி துணை

காப்பு[தொகு]

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதனால்

வாயைக் கரன்றாள் வழுத்துவாம்- நேயர்நிதம்

எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி

நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.


திருக்கடவூர் அபிராமி அம்மைப் பதிகம்

நூல் (ஆசிரிய விருத்தம்)[தொகு]

கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர் கபடுவா ராத நட்பும் [கலையாத = கற்றது மறவாத; கபடு வாராத = வஞ்சனை இல்லாத]
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும் [கன்று = வற்று, வாடு;
சலியாத மனமும்அன் பகலாத மனையியும் தவறாத சந்தா னமும் [சலியாத மனம் = பிசகாத, தளராத உள்ளம், ஊக்கம்; சந்தானம் = சந்ததித் தொடர்ச்சி, குழந்தைப்பேறு]
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் [கீர்த்தி = புகழ்]
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும் [தொலையாத நிதியம் = நீங்காத செல்வம்; கோணாத கோல் = நீதி பிறழாத அரசாட்சி]
துய்நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! [அலை ஆழி = அலைவீசும் பாற்கடல்; அறிதுயில் = அறிந்துகொண்டே தூக்கம், யோகத் தூக்கம்; கடவூர் = திருக்கடவூர்]
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! [அமுதீசர் = திருக்கடவூர்ச் சிவன்; சுகபாணி = இனிய சொல், இனிய சொல் பேசுபவளே]

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும்
கர்ணகுண் டலமும்மதி முகமண்டலம்நுதல் கத்தூரி யிட்ட பொட்டும்
கூரணி ந்திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய கொவ்வையின் கனிய தரமும்
குமிழனைய நாசியும் குந்தநிகர் தந்தமும் கோடுசோ டான களமும்
வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும் மணிநூ புரப்பா தமும்
வந்தெனது முன்னிற்று மந்தகா சமுமாக வல்வினையை மாற்று வாயே;
ஆரமணிவானில்லுறைதாரகைகள் போலநிறை ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள் வரம்பெற்ற பேர்க ளன்றோ
செகம்முழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்துமேற் சிங்கா தனத்தி லுற்றுச்
செங்கோலும் மநுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு
புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகிநிறை புத்தேளிர் வந்து போற்றிப்
போகதே வேந்திரன் எனப்புகழவிண்ணிலே புலோமிசை யொடும்சு கிப்பர்;
அகரமுதல் லாகிவளர் ஆனந்த ரூபியே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

மறிகடல்கள் ஏழையுந் திகிரிஇரு நான்கையும் மாதிரல் கரியெட் டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையு மோர்
பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும் புத்தேளிர் கூட்டத் தையும்
பூமகளை யுந்திகிரி மாயவனை யும்அரையிற் புலியாடை உடையா னையும்
முறைமுறைக ளாய்ஈன்ற முதியவர்களாய்ப் பழைமை முறைகள் தெரியாத நின்னை
மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்(று) அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய்?
அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர அருள்மழை பொழிந்ததும் இன்ப
வாரிதியிலே நின்ன தன்பெனுஞ்சிறகினால் வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர்சிற்றெறும்புமுதல்குஞ்சரக் கூட்டமுத லான சீவ
கோடிகள் தமக்கெல்லாம் புசிக்கும் புசிப்பினைக் குறையாம லேகொ டுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலி! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும்; நீலியென்(று) ஓது வாரோ
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ் ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

பல்குஞ் சரந்தொட் டெறும்புகடை யானதொரு பல்லுயிர்க் குங்கல் லிடைப்
பட்டதே ரைக்கும் அன் றுற்பவித் திடுகருப் பையுறு சீவ னுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கும் யார்க்கும் அவரவர் மனச்சலிப் பில்லா மலே
நல்குந் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு நவநிதி உனக்கி ருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனா னால்அந் நகைப்புனக் கேஅல்ல வோ?
அல்கலந் தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

நீடுல கங்களுக்(கு) ஆதாரமாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டறம்வளர்க்கின்ற நீமனை வியாய்இ ருந்தும்
வீடுவீ டுகள்தோறும் ஓடிப் புகுந்துகால் வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்துகில் அரைக்கணிய வீதியற்று நிர்வாண வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று) உன்மத்த னாகி அம்மா
உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந்தேங்கி உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர்வினை யாடிவரும் ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

ஞானந் தழைத்துன் சொரூபத்தைஅறிகின்ற நல்லோர் இடத்தி னிற்போய்
நடுவினில் இருந்துவந் தடிமையும்பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம் இல்லா மலேது ரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்துநெஞ்(சு) இருளற விளக்கேற் றியே
ஆனந்த மானவிழி அன்னமே! உன்னைஎன் அகத்தா மரைப்போ திலே
வைத்துவே றேகவலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்; ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற தாயா கினாலெ னக்குத்
தாயல்ல வோ? யான்உன் மைந்த னன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலைகரந்தொழுகுபா லூட்டிஎன் முகத்தைஉன் முன்தானை யால்து டைத்து
மொழிகின்ற மழலைக் குகந்துகொண் டிளநிலா முறுவல்இன் புற்றரு கில்யான்
குலவி விளையாடல்கொண்டருள்மழை பொழிந்(து) அங்கை கொட்டி வாவென்(று) அழைத்துக்
குஞ்சரமு கன்கந்தனுக்(கு) இளையன் என்றெனைக் கூறினால் ஈனம் உண்டோ?
அலைகடலி லேதோன்றும் மாறாத அமுதமே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!


கைப்போது கொண்டுன் பதப்போதுதன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்
கண்போதி னாலுன் முகப்போது தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன்;
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னிஉன் ஆல யத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்; மோசமே போய்உ ழன்றேன்;
மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு மைக்கடா மீதேறி யே
மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி யங்கும்
அப்போது வந்துன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!


மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு வேதனை களுந்து ரத்த
பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்த பசியென் பதுந் துரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த பலகா ரியமுந் துரத்த
நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்த நாளுந் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை நமனுந் துரத்து வானோ?
அகிலஉல கங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!


அபிராமியம்மை பதிகம்[தொகு]

(ஆசிரிய விருத்தம்)[தொகு]


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலாமதியை நிகர்வத னமும்
கருணைபொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங்கூந் தலும்
சங்கையில் லாதொளிரும் மாங்கல்ய தாரணம் தங்குமணி மிடறு மிக்க
சதுர்பெருகு துங்கபா சாங்குசம் இலங்குகர தலமும்விரல் அணியும் அரவும்
புங்கவர்க் கமுதருளு மந்தரகு சங்களும் பொலியும் நவமணி நூபுரம்
பூண்டசெஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றியென வாழ்த்த விடைமேல்
மங்களம் மிகுந்தநின் பதியுடன் வந்தருள்செய் வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலசலோ சனமா தவி!
சம்ப்ரம பயோதரி! சுமங்கலி! சுலட்சணி சாற்றருங் கருணா கரி!
அந்தரி! வராகி! சாம் பவி! அமர தோதரி! அமலை! செக சால சூத்ரி!
அகிலாத்ம காரணி! வினோதசய நாரணி! அகண்ட சின்மய பூரணி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரைராச சுகுமாரி! கௌமாரி! உத்
துங்ககல் யாணி!புஷ் பாஸ்திரம் புயபாணி! தொண்டர்கட் கருள்சர் வாணி!
வந்தரி மலர்ப்பிரம ராதிதுதி வேதவொலி வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

வாசமலர் மருஅளக பாரமும் தண்கிரண மதிமுகமும் அயில்விழிகளும்
வள்ளநிகர் முலையுமான் நடையும்நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார்
பாசபந் தத்திடை மனங்கலங் கித்தினம் பலவழியும் எண்ணி யெண்ணிப்
பழிபாவம் இன்னதென் றறியாமல் மாயப்ர பஞ்சவாழ் வுண்மை என்றே
ஆசைமே லிட்டுவீ ணாகநாய் போல்திரிந்(து) அலைவதல் லாமல் உன்றன்
அம்புயப் போதெனுஞ் செம்பதம் துதியாத அசடன்மேற் கருணை வருமோ?
மாசிலா தோங்கிய குணாகரி பவானிசீர் வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள் நவின்றதே உலகி லுள்ளோர்
நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடி னாலும்
இன்றென்று சொல்லாமல் நினதுதிருவுள்ளம(து) இரங்கி யருள்செய்கு வாயேல்
ஏழையேன் உய்குவேன்; மெய்யான மொழியதுன் இதயமறி யாத துண்டோ?
குன்றமெல் லாம்உறைந்து என்றும்அன் பர்க்கருள் குமார தேவனை அளித்த
குமரி! மர கதவருணி! விமலி !பை ரவி!கருணை குலவுகிரி ராச புத்ரி!
மன்றல்மிகு நந்தன வனங்கள்சிறை அளிமுரல வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

ஒருநாள் இரண்டுநாள் அல்லநான் உலகத்து உதித்தஇந் நாள்வ ரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல்கொண்(டு) உள்ளந் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்குமிவ் வடிமைபாற் கருணை கூர்ந்து
அஞ்சேலெ னச்சொல்லி ஆதரிப் பவர்கள்உனை அன்றியிலை உண்மை யாக
இருநாழி கைப்போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத் தையும்
இயற்றி அருளுந்திறம் கொண்டநீ ஏழையேன் இன்னல்தீர்த் தருளல் அரிதோ?
வருநாவ லூரர்முத லோர்பரவும் இனியபுகழ் வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட் டொறுக்க அந்தோ!
எவ்விதம்உளஞ்சகித்து உய்குவேன்; இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணியெள் ளளவுசுக மானதொரு நாளினும் நான்அனு பவித்த தில்லை
நாடெலாம் அறியுமிது கேட்பதேன்? நின்னுளமும் நன்றாய் அறிந்தி ருக்கும்;
புண்ணியம் பூர்வசன னத்தினிற் செய்யாத புலைய னானாலும் நினது
பூரண கடாட்சவீட் சண்ணியஞ்செய்தெனது புன்மையை அகற்றி அருள்வாய்;
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவும்இசை வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

தெரிந்தோ அலாதுதெரி யாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழையி ருந்தால்
சினங்கொண்ட தோர்கணக் காகவை யாதுநின் திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்துவத் தினியேனும் பாழ்வினையில் ஆழ்ந்(து)இனற் படாது நல்வரம் அளித்துப்
பாதுகாத் தருள்செய்ய வேண்டும்அண் டாண்டவுயிர் பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன் போதன்மா தவனாதி யோர்கள்துதி புரியும் பாதாம் புயமலர்ப்
புங்கவி! புரந்தரி! புரந்தகி! புராதனி! புராணி!திரி! புவனே சுவரி!
மருந்தினும் நயந்தசொற் பைங்கிளி வராகி!எழில் வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

வஞ்சகக் கொடியோர்கள் நட்புவேண் டாமலும் மருந்தினுக் காவேண் டினும்
மறந்துமோர் பொய்ம்மொழி சொலாமலுந் தீமையாம் வழியினிற் செல்லா மலும்
விஞ்சுநெஞ் சதனில் பொறாமைதரியாமலும் வீண்வம்பு புரியா மலும்
மிக்கபெரியோர்கள்சொலும் வார்த்தைதள் ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சமென நின(து) உபய கஞ்சந்துதித்திடத் தமியேனுக் கருள்பு ரிந்து
சர்வகா லமுமெனைக் காத்தருள வேண்டினேன் சலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர்செவ்வாய்நிகரும்வாவியாம்பன்மலரும் வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

எனதின்னல் இன்னபடி யென்றுவே றொருவர்க்(கு) இசைத்திடவும் அவர்கள் கேட்(டு)இவ்
இவ்வின்னல்தீர்த் துள்ளத்(து) இரங்கிநன் மைகள்செயவும் எள்ளளவும் முடியாது நின்
உனதமரு வுங்கடைக் கண்அருள் சிறிதுசெயின் உதவாத நுண்மணல் களும்
ஓங்குமாற்று உயர்சொர்ண மலையாகும்; அதுவன்றி உயர்அகில புவனங் களைக்
கனமுடன் அளித்துமுப் பத்திரண் டறங்களும் கவின்பெறச்செய்யும் நின்னைக்
கருதுநல் அடியவர்க்கு எளிவந்து சடுதியில் காத்துரட் சித்த தோர்ந்து
வனசநிகர் நின்பாதம் நம்பினேன்; வந்தருள்செய் வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கனதண்ட வெம்பா சமும்
கைக்கொண்டு சண்டமா காலன்முன் எதிர்க்கமார்க் கண்டன் வெருண்டு நோக்க
இருநீல கண்டனெனும் நின்பதியை உள்ளத்தில் இன்புகொண் டருச்சனை செய
ஈசன்அவ் விலிங்கம் பிளப்பநின் னொடுதோன்றி யமனைச் சூலத்தி லூன்றிப்
பெருநீல மலையென நிலத்தில்அன் னவன்விழப் பிறங்கு தாளால் உதைத்துப்
பேசுமுனி மைந்தனுக் கருள்செய்த(து) உனதரிய பேரருளின் வண்ண மலவோ?
வருநீல மடமாதர் விழியென்ன மலர்வாவி வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

சகலசெல் வங்களுந் தரும்இமய கிரிராச தனயைமா தேவி! நின்னைச்
சத்யமாய் நித்யமுள் ளத்தில்து திக்கும்உத் தமருக்(கு) இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் ஊழ்நு கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப் பாய்;
சுகிர்தகுண சாலி! பரி பாலி! அநு கூலி!திரி சூலி!மங் களவி சாலி
மகவுநான்; நீதாய் அளக்கொ ணாதோ? மகிமை வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=அபிராமி_அம்மைப்_பதிகம்&oldid=1526438" இலிருந்து மீள்விக்கப்பட்டது