அமிழ்தின் ஊற்று/தவழ்தல்
Appearance
தவழ்தல்
இருமனக் கனவில் வந்து
தவழ்கனை: எண்ணப் பாலை
அருந்தினை அழகை யுண்டிங்
கரும்பினை; பத்துத் திங்கள்
இருட்கடல் கடந்து வந்தாய் !
இன்பத்தை என்ன சொல்வேன்?
இருந்தமிழ்த் தேனே! வானே!
என்னிடம் தவழ்ந்து வாராய்!
இதயததில் தவழ்ந்தாய் தாயின்
எழில்நகில் தவழ்ந்தாய் உள்ளம்
புதிதான் உணர்வு பொங்க
புரண்டாய்என் மார்பின் மீது!
சதகோடி இன்பஞ் சேர்க்கும்
தமிழ்வடி வான கண்ணே
முதலிரா காத லின்ப
முகங்காட்டித் தவழ்ந்து வாராய்!
கற்பனைக் கவிதை ஏட்டில்
கலத்தலாய் தவழ்ந்து வாராய்!
பொற்கதிர் கடலில் நீந்திப்
பூரிக்கும் கனவாய் வாராய்!
கற்சுவர் ஒவி யத்தின்
கலையெனத் தவழ்ந்து வாராய்!
அற்புதத் தென்றல் பண்ணின்
அலையெனத் தவழ்ந்து வாராய்!