அமிழ்தின் ஊற்று/சிறு தேர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிறு தேர்


மாணிக்கச் சிற்பக் கூத்தில்
வானத்து மீனி ழைத்துப்
பானுவை மதியை ஒடும்
உருளையின் பக்கம கூட்டி
ஆணிப்பொன் குழமபைக் கொட்டி
அற்புதக் கலைக்கோ யில்போல்
காணிக்கை தந்தேன் கண்ணே !
சிறுதேரை உருட்டி வாராய் !


தங்கத்தின் குன்றெ டுத்துக்
கைவல்ல தச்சன் ஞால
மெங்கெங்கும் சிறந்து யர்ந்து
மின்னிடும் வைரங் கூட்டி
பொங்கிப்பல் கலைவ ளர்க்கும்
புத்தொளிக் கல்லி ழைத்து
மங்கையின் கனவாய் வந்த
மணித்தேரை இழுத்து வாராய் !

பொங்கிடும் கடலுக் கப்பால்
பொற்கன வாயி ரம்போல்
மங்கல வாழ்த்துப்பாடி
ஞாயிறு மகிழ்ந்தெ ழும்பும்
இங்கந்தக் காட்சி தன்னை
ஈருயிர் கலந்த வாழ்வே
சங்கத்துத் தமிழாய்க் கண்டேன்
தரளத்தேர் இழுத்து வாராய் !


மான்விழி அச்சகம், சென்னை, 2.