உள்ளடக்கத்துக்குச் செல்

அமுத இலக்கியக் கதைகள்/போரும் நீரும்

விக்கிமூலம் இலிருந்து

போரும் நீரும்

இளமைக் காலத்திலே பட்டத்தைப் பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன். சூழ இருந்த சிற்றரசர் களும் பேரரசர்களும் பாண்டி நாட்டின்மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். ஐந்து வகையான நிலங்களும் விரவியுள்ள நாடு அது. தமிழுக்குச் சிறந்த நாடு. செந்தமிழ் நாடு என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதல்லவா பாண்டி நாடு?

நெடுஞ்செழியனை இளம்பிள்ளை யென்று எண்ணிய பகைவர்கள் அவனோடு பொருது வென்றுவிடலாம் என்று நினைத்தார்கள். முக்கியமாக யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருந்தது. "இப்போதுதான் இவன் பட்டத்துக்கு வந்திருக் கிருன். சின்னஞ் சிறுவன். இவனுக்கு அடங்கி நடக்கும் அமைச்சரோ படைத் தலைவரோ அதிகமாக இருக்கமாட்டார்கள். நாம் சில மன்னர்களையும் துணை யாகக் கொண்டு போருக்கு எழுந்தால் மிக எளிதில் வெற்றி பெறலாம்” என்று அவன் மனக்கோட்டை கட்டினன். தன் கருத்தை மெல்லப் பரவ விட்டான். "இவ்வளவு பெரிய அரசன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி கிடைப்பதற்கு என்ன தடை? நாம் இவனுடன் சேர்வதால் இவனுக்குத் துணைவலி மிகுதியாகும் என்பதைக் காட்டிலும், கிடைக்கும் வெற்றியில் நமக்கும் பங்கு கிடைக்கும் என்பதுதான் உண்மை. தக்க சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது" என்று எண்ணிய வேற்று அரசர் சிலர் அவனுடைய கருத்தைப் பாராட்டினர்கள்; தாங்களும் அவனுடன் போருக்கு எழுவதாக உறுதி மொழியும் கூறினர்கள்.

அவர்கள் படைகளைச் சேர்த்தார்கள். போருக்கும் எழுந்தனர். நெடுஞ்செழியன் இளையவன்தான். ஆனாலும் வீரத்திற் சிறந்த பேரரசர் பரம்பரையிலே தோன்றியவன். குட்டியானாலும் பாம்பு பாம்பு தானே?

பகையரசர் கூடிப் பொர வருவதைக் கேள்வியுற்று அவன் சீறினான். "ஒகோ! இவர்கள் என்னை இளம் பிராயத்தை உடையவனென்று எண்ணி விட்டார்களோ? இவர்களே அடியோடு ஒழித்துவிடாமல் வேறு காரியம் பார்ப்பதில்லை” என்று உறுதி பூண்டான்.

ஒற்றன் ஒருவன் வந்தான்; “அரசே, சேர நாட்டிலும் மற்ற இடங்களிலும் இந்த நாட்டுப் பெருமை தெரியாமல் பலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசனுடைய நாட்டின் பெருமையைப் பெரிதாக உயர்த்திக் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. அதைக் கண்டு நாம் ஏமாந்து போக மாட்டோம். சின்னஞ் சிறு பிள்ளையாகிய அரசனுக்கு என்ன தெரியப் போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள்" என்றான்.

அரசன் சற்று மனம் உளைந்தான். "அவர்களுடைய படைகள் எத்தகையவை?" என்று ஒற்றனைக் கேட்டான்.

"யானை, தேர், குதிரை, வீரர் என்னும் நால் வகைப் படைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிருறார்கள். சேர நாட்டு யானைகளை நானே பார்த்தேன்" என்றான் ஒற்றன்.

"இருக்கட்டும்; அதனால் என்ன? மணி ஒலிக்கும். பெரிய யானைகளும், தேரும், குதிரையும் படைக்கலங்களையுடைய மற்றவர்களும் இருக்கிறார்களென்று அவர் களுக்குச் செருக்கு உண்டாகியிருக்கிறது. பகையுணர்ச்சி மூண்ட உள்ளத்தில் நிதானம் இராது. என்னுடைய படைப் பலத்தை அவர்கள் கருதவில்லை. அதனை நினைந்து அஞ்சாமல், சினம் மிகுந்து சின்னத்தனமான வார்த்தைகளைச் சொல்லித திரிகிறார்கள், கிடக்கட்டும். அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருப் பதில் பயன் இல்லை.”

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். படைத்தலைவரையும், மந்திரிமாரையும் வருவித்தான். ஆலோசனை செய்தான். "போர் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்முடைய நாட்டின் எல்லைக்குள்ளே அவர்கள் வருவதற்குமுன் நாம் எதிர்சென்று போராட வேண்டும்" என்று நெடுஞ்செழியன் வீரம் ததும்பக் கூறினான். படைத் தலைவர் உடம்பட்டார். மந்திரிமார் பின்னும் யோசனை செய்தனர்.

"இனி யோசனைக்கு நேரம் இல்லை. சிறு சொல் சொல்லிய வேந்தரைச் சிதையும் படி அருஞ்சமத்தில் தாக்கி அவர்களை அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே சிறைப்படுத்துவதாக உறுதி கொண்டு விட்டேன். அப்படிச் செய்யாவிட்டால், இதோ ஆணையிடுகிறேன், கேளுங்கள். அவர்களைச் சிறை செய்யா விட்டால், என்னுடைய குடை நிழலில் வாழ்பவர் யாவரும் புகலிடம் காணுமல் வருந்தி, எம் அரசன் கொடுங்கோலன் என்று கண்ணிருடன் நின்று பழி தூற்றும், பாவி ஆகக் கடவேன்!"

அரசன் முகம் சிவந்தது. அவனுடைய இளமையழகிலே இப்போது வீரமுறுக்குத் தெளிவாகத் தெரிந்தது அமைச்சர் வியப்புடன். வனை உற்று நோக்கி னர். 'பரம்பரைக்கு ஏற்ற வீரம்' என்ற நினைவு. அவர்கள் உள்ளத்தில் தோன்றியது.

"நான் பகைவரை வெல்லாமற் போவேனானால் ஓங்கிய சிறப்பும் உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனுர் முதலிய புகழ்பெற்ற புலவர் என் நாட்டைப் பாடாமல் ஒதுக்கும் நிலை வருவதாகுக! என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க முடியாத வறுமை என்னை வந்து அடையட்டும்! இந்த வஞ்சினத்தைப் பாண்டிய அரசர் வழி வந்தவன் என்ற உணர்ச்சியோடு நான் சொல்லுகிறேன்.”

அரசன் வஞ்சினம் கூறும்போது சிங்கம் முழங்கு வதுபோல இருந்தது. உடன் இருந்தோர் அஞ்சி நடுங்கினர். அரசன் தோள் துடித்தது; கண்கள் சிவந்தன; வார்த்தை ஒவ்வொன்றும் அழுத்தமாக வந்தது. "இனி இந்த உலகமே எதிர் நின்ருலும் போரை நிறுத்த முடியாது” என்று அமைச்சர் உணர்ந்து கொண்டனர்.

போருக்கு வேண்டியவற்றையெல்லாம் அவர்கள் செய்யலானார்கள்.

2

போர் மூண்டுவிட்டது. அரசனே நேரில் சென்று போரிடத் தொடங்கினன். "இத்தனை சிறு பிள்ளை போர்க்களத்துக்குப் போயிருக்கிருனே!" என்று அச்சமும் வியப்பும் கொண்டனர் மக்கள்.

"நேற்று வரையில் கிண்கிணி கட்டியிருந்த இளங்கால் அது; இன்று போர் வந்ததென்று அதில் வீரக் - கழலைக் கட்டிக்கொண்டான். முதல் முறையாகக் குடுமி களைந்த விழா சில நாட்களுக்கு முன்தான் நடந்தது. அந்தத் தலையில் குலத்துக்குரிய அடையாளமாகிய வேம் பையும் போர்ப் பூவாகிய உழிஞையையும் அணிந்து கொண்டான். சிறு வளைகளை அணிந்திருந்த கை இப் போது வில்லைப் பற்றிக்கொண்டது. சிங்கக்குட்டி தாவுவதுபோலத் தேரில் ஏறி நிற்கிருனே! இப்படியும் வீரத் திருக்குழந்தை உலகத்தில் உண்டா? அவன் மாலை வாழட்டும்! அவன் பெருமை வாழட்டும்!” என்று புலவர்கள் வாழ்த்தினர்கள்.

போரில் பகைவராக வந்தவர் ஒருவர் இருவர் அல்லர். சேரனும் சோழனும் அவர்களுடன் ஐந்து சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டனர். தலையாலங் கர்னம் என்ற இடத்தில் போர் மிகக் கடுமையாக நடந்தது. இரண்டு பக்கத்திலும் படைப் பலம் மிகுதி யாகவே இருந்தது.

இடைக்குன்றுார் கிழார் என்ற புலவர் இதைக் கேள்வியுற்ருர். தலையாலங்கானத்துக்கும் சென்று பார்த்து வந்தார். பாண்டிய மன்னனுடைய வீரத்தை எண்ணி அவர் பிரமித்துப் போனர். "இந்த உலகத்தில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப்பற்றிக் கேட்டிருக்கிருேம். ஒரு மன்னனை மற்றொரு மன்னன் எதிர்த்துப் போர் செய்தலும் அதில் ஒருவன் தோல்வியுறுதலும் உலக இயற்கை. ஆளுல் இதுபோல நாம் கேட்டதே இல்லை. நெடுஞ்செழியனுடைய பெருமையையும் பலத்தையும் அறியாத ஏழு பேர் கூடிக்கொண்டு அவனை எதிர்க்கிறார்கள். அவனே சலியாமல், முரசு முழங்க மேற்சென்று அடுகின்றன். இதைக் கதையிலும் கேட்டதில்லையே!” என்று வியந்து பாடினர். போர் நாளுக்கு நாள் மிகுதியாயிற்று. சிற்றரசர்களுக்குப் போரில் எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லை. சிலர் போரில் இறந்தனர், சிலர் பின் வாங்கினர். கடைசியில் யாவரும் கைவிடவே, சேர மன்னன் பலம் இழந்து சிறைப்பட்டான். நெடுஞ்செழியன் செய்த கன்னிப் போரில் இத்தகைய வெற்றி கிடைத்ததைக் குறித்துப் பாண்டி நாடே குதூகலித்தது.

இளமையில் போரில் ஈடுபட்டு விட்டமையால் அரசனுக்கு மேலும் மேலும் போரைப்பற்றிய சிந்தனை மிகுதியாயிற்று. படைகளைத் திரட்டிக்கொண்டே இருந்தான்.

3

ரசன் தன் பருவத்துக்கு மிஞ்சிய வெற்றி மிடுக்கினால் பூரித்திருந்தான். பெரும்போர் நிகழ்ந்ததால் நாட்டின் விளை பொருளுக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. போர் நின்றவுடன் நாட்டு வளம் பெருகும் துறையில் அரசன் கவனம் செலுத்தவில்லை. அரியனை ஏறியவுடன் வில்லைப் பிடிக்கவேண்டி நேர்ந்தமையால் நாட்டைப் பற்றி அப்போது சிந்திக்க இயலவில்லை. போருக்குப்பின் அதில் கிடைத்த வெற்றியிலே மயங்கியிருந்தமையால் பின்பும் அதைப்பற்றிய நினைவு எழவில்லை.

ஏரிகளும் குளங்களும் மேடிட்டிருந்தன; கரைகள் உடைந்து பயனில்லாமல் கிடந்தன சில. நீர் வளம் இல்லாமையால் நிலவளம் குறைந்தது. விளைவு குறைந்தது. பஞ்சம் வந்துவிடுமே என்ற அச்சம் பாண்டி நாட்டு மக்கள் உள்ளத்தே எழுந்தது.

அரசன் படை சேர்ப்பதை விட்டு, வீர விளை பாட்டை நிறுத்தி, நாட்டின் நிலையை உணர்ந்து வளம் படுத்த வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை. அமைச்சர் சொல்ல அஞ்சினர். இளம் பருவம் உடையவனானாலும் கோபத்திலும் வீரத்திலும் மிக மிக ஓங்கி நிற்பவன் என்பதை அவர்கள் தம் கண்முன்னே பார்த்த வர்கள்.

இந்த நிலை நீடித்தால் பாண்டி நாட்டில் நிச்சயமாகப் பஞ்சம் வந்துவிடும் என்பதை அறிந்தனர் அமைச்சர்கள். அரசனுக்கு யோசனை கூறவோ அஞ்சினர். என்ன செய்வது என்று ஏங்கி நின்ற தறுவாயில் சமயசஞ்சீவி போல ஒரு புலவ்ர் வந்தார். குடபுல வியனார் என்பது அவர் பெயர். தமிழ்ப் புலவர்கள் பொதுவாகவே யாருக்கும் அஞ்சாதவர்கள்: நியாயத்தையே எடுத்துரைப்பவர்கள். அவருள்ளும் குடபுல வியனார் நயமாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். அவரிடம் அமைச்சர்கள் தம் கருத்தைக் கூறி, "எப்படியேனும் நீங்கள் மனம் வைத்து அரசரை வழிக்குக் கொண்டு வரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். "என்னால் இயன்றதைச் செய்வேன்" என்று அவர் உடம்பட்டார்.

4

"தலையாலங்கானத்துச் செருவைப்பற்றி இன்று உலகத்தில் பாராட்டாத புலவர்களே இல்லை" என்ருர் குடபுலவியனார்.

"ஆம். பெரிய போர்தான். நான் பட்டத்துக்கு வந்தவுடன் முதல் வேலை இந்தப் போரில் வெற்றி பெறுவதாகிவிட்டது” என்ருன் நெடுஞ்செழியன்.

"எல்லாம் உங்கள் குலத்தின் பெருமை. நாவலந் தீவு. முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட உரவோர் பாண்டிய மன்னர். அவர்களுடைய மரபில் வந்த அரசர்பிரான் கோடிகோடி ஆண்டுகள் வாழவேண்டும்!”

இ. கதை-2 "அவர்கள் பெருமையே பெருமை! பாண்டி நாட்டின் பெருமை வேறு எந்த நாட்டுக்கு இருக்கிறது? மதுரை மாநகரின் சிறப்பை வேறு எங்கே பார்க்க முடியும்? பகையரசர் என்னதான் முயன்றாலும் இந்த நகருக்குள்ளே புக முடியுமா?” - ஆழமான அகழியையும் உயரமான மதில்களையும் பெரியோர்கள் அமைத்திருக்கிருர்கள். இத்தகைய வளம் பெற்ற பழைய நகரம் வேறு எங்கும் இல்லை என்பது உண்மை. இந்த நகரில் வாழ்ந்த அரசர்களெல்லாம் இம்மை மறுமைப் பயன்களைக் குறைவின்றிப் பெற்ற வர்கள்; வீரத்திலே சிறந்தவர்கள். அதனால் புகழைப் பெற்றவர்கள்.”

"அவர்கள் சென்ற நெறியிலே நானும் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

"அப்படியே ஆகட்டும். புண்ணியமும் வெற்றியும் புகழும் ஒருங்கே கிடைப்பதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. அதனை உடையவர்கள் மறுமையுலகத்துச் செல்வமும், பகை அரசரை வென்று நிற்கும் திறனும், நல்லிசையும் பெறுவார்கள்."

"படைப் பலத்தையா சொல்கிறீர்கள்?"

"அல்ல, அல்ல. யானை முதலிய படைகள் அல்ல; வேறொரு படை: உழுபடை. படைகளுக்கெல்லாம் உணவளிக்காவிட்டால் அவை போரிட முடியுமா? உடம்பிலே உயிர் தங்கி இருக்கும்படி செய்தாலல்லவா போரிட முடியும்?"

"நான் படை வீரர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்தேன். அவர்களுக்கு இனியும் குறைவின்றிக் கொடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறேன்.” .

"நல்ல காரியந்தான். உண்டி கொடுத்தவரே உயிர் கொடுத்தவர் ஆகிறர்கள். உணவு இல்லா - விட்டால் உடலும் இல்லை. ஆனால் அந்த உணவு எப்படி வருகிறது? அது தானே கிடைத்துவிடாது. நிலமும் நீரும் சேர்ந்தால் உணவு கிடைக்கும்; உணவுப் பொருள் விளையும். அந்த இரண்டையும் சேர்ப்ப வர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் ஆகிறார்கள்.”

"நம்முடைய நாட்டில் விளை நிலத்துக்குக் குறைவில்லையே?"

"உண்மைதான். ஆனாலும் நிலம் மாத்திரம் இருந்தால் போதுமா? எவ்வளவுதான் பரந்த நிலங்கள் இருந்தாலும், விதைத்துவிட்டு வானத்தைப் பார்க்கும் படியாக இருந்தால் அந்த நிலங்களால் உடையவனுக்கு என்ன பயன்? அரசே, சற்றுக் கவனிக்க வேண்டும். படை இருக்கலாம்; ஆனால் அதற்கு என்றும் கொடுத்துவர உணவு வேண்டும். நிலம் இருக்கலாம்; ஆனால் அதை விளையும்படிச் செய்ய நீர் வேண்டும். வானத்திலே நீர் இருக்கிறதென்று நம்பியிருந்தால் நமக்கு வேண்டியபொழுது அது வழங்காது; அது வழங்கும்போது நாம் சேமித்து வைக்கவேண்டும். நிலம் பள்ளமாகக் குழிந்திருக்கும் இடங்களில் வேண்டிய கரை கட்டியும், ஏரி குளங்களைக் கரை திருத்தியும் பாதுகாக்க வேண்டும். அப்படி நீரைத் தடுத்தால் நாடு வளம் பெறும். நீரை தேக்கினவர் யாரோ அவரே புகழையும் தேக்குவார்."

அரசன் சிந்தனையில் ஆழ்ந்தான். ஏரி குளங்களைச் சீர்திருத்தவேண்டும் என்று எப்பொழுதோ யாரோ சொல்லிக் காதில் விழுந்ததாக நினைவு வந்தது. அமைச்சர் சொன்னதைத்தான் பராமுகமாகக் கேட்டிருந்தான். இப்போது அதையே அழுத்தந் திருத்த மாகப் புலவர் சொன்னார்; படிப்படியாகச் சொன்னார். அவன் மனத்தில் அது உறைத்தது.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களால்தான் உடம்பையும் உயிரையும் சேர்த்து வைக்கமுடியும். வானம் நம்முடைய விருப்பப்படி பெய்யாது. நீரைத் தேக்கினவர்களே புகழைத் தேக்குவார்.” இந்தப் பொன்னான வாக்கியங்கள் ஒவ்வொன்றாக அவன் உள்ளத்தில் கணிர் கனிர் என்று மணியடிப்பதுபோல் மீட்டும் ஒலித்தன.

"புலவர் பெருமானே, நானும் நீரைத் தேக்கிப் புகழைத் தேக்க முயல்வேன்" என்ற வார்த்தைகள் அரசன் வாயிலிருந்து வந்தபோது, அங்கிருந்த அமைச்சர்களின் முகங்கள் என்றும் இல்லாத மலர்ச்சியைப் பெற்றன.