அமுத இலக்கியக் கதைகள்/மீண்ட குழந்தைகள்
மீண்ட குழந்தைகள்
2000 ஆண்டுகளுக்கு முன் கிள்ளிவளவன் என்னும் அரசன் உறையூரில் ஆண்டுகொண்டிருந்தான். திருக்கோவலூரில் மலையமான் என்னும் வீரன் ஒருவன் இருந்தான். அவன் எந்த அரசனுக்குப் போரில் துணையாகச் செல்கிறானோ அவனுக்கு நிச்சயமாக வெற்றி உண்டாகும். அதனால் அவனிடத்தில் மன்னர்களுக்கெல்லாம் அச்சம் இருந்து வந்தது.
காட்சி 1
இடம்:-கிள்ளி வளவன் அரண்மனை. அரசன் வீற்றிருக்கிறான். சூழ மந்திரிகள் வீற்றிருக்கின்றனர்.
வளவன்:-எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. இந்த ஒரு வாரமாக நான் அடைந்துவரும் இன்பத்துக்கு எல்லையே இல்லை. நம்மோடு போர் புரிய வரும் அரசன் யாராக இருந்தாலும் நம்முடைய படைப் பலத்தால் வென்றுவிடலாம் என்ற உறுதி நமக்கு ஏற்பட்டிருக்கிறது
ஒரு மந்திரி:-அரசே, இன்னும் நாம் படைகளை மிகுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
வளவன்:-அது தெரியும். ஆனால் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் நம்முடைய பகைவன் படையில் மலையமான் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தோடல்லவா இதுவரைக்கும் இருந்தோம்? வெற்றியோ தோல்வியோ போரிடும் மன்னர்களின் படைப்பலத்தைப் பொறுத்து நிற்பது தான் இயற்கை தமிழ்நாட்டில் அந்த இயற்கைக்கு மாறாக மலையமான் வந்து முளைத்தான். அவனுடைய துணை யாருக்குக் கிடைக்கிறதோ அவனுக்கே வெற்றி என்றுதானே இன்று வரைக்கும் இருந்தது? மலையமான் இறந்துவிட்டான் என்ற செய்தி என் காதில் குளிர்ச்சியாக விழுந்தது.
ஒரு புலவர்:-அரசே, அப்படிச் சொல்லக்கூடாது. ஒரு பெருவீரனை நாம் பாராட்ட வேண்டியது அவசியம். அவன் இருக்கும்போது அவனை நாம் மனத்துக்குள் வியந்து கொண்டிருந்தோம். அதுதான் வீரர்களுக்கு அழகு.
வளவன்:-புலவரே, நீர் சொல்வீர். சண்டையில் கலந்து கொண்டு போர் செய்தவர்களுக்குத் தெரியும், அவனுடைய பயங்கரமான பலம். அப்பா வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டல்லவா போர் செய்ய வேண்டி யிருந்தது? இப்போது படைத்தலைவர்கள் நன்றாகத் தூங்குவார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் படைப் பலத்தைக் காட்டி வெற்றிபெற முயல்வார்கள். இனி மலையமானால் தமிழ்நாட்டுக்கு அச்சம் இல்லை.
புலவர்:-மன்னர்பெருமானே, நான் சொல்வது தவறாக இருந்தாலும் சற்றுக் கேட்டருள வேண்டும். மெய்யான வீரம் யாரிடம் இருந்தாலும் அதைப் போற்ற வேண்டும். மலையமானைக் கண்டு அஞ்சினேன் என்று சொல்வது வீரமாகாது. அவன் இறந்த பிறகும் இருப்பவர் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனைப் போன்ற வள்ளல்கள் சிலரே இந்த உலகத்தில் இருப்பார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு ஒப்பான புகழ் அவனுக்கு இருக்கிறது. அதன் காரணம் என்ன?
அரசன்:-காரணம் என்ன? அவர்கள் அவனிடம், நீ எங்களுக்குத் துணையாக வேண்டும் என்று சொல்லி நின்றார்கள். அவனும் கூலிக்கு வேலை செய்வது போல அவர்கள் கொடுக்கும் பொருளை நச்சிப் போர் செய்தான்.
புலவர்:-அப்படிச் சொல்வது நியாயம் ஆகாது. அவன் கூலிக்குப் போர் செய்யவில்லை. அவன் தங்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தான் என்பதை நினைந்து அரசர்கள் அவனுக்குப் பரிசில் தந்தார்கள்; காணிக்கை செலுத்தினர்கள் என்று சொன்னல்கூடத் தவறாகாது. அவன் அந்தப் பொருளை என்ன செய்தான்? தன் இன்ப வாழ்க்கைக்காகச் செலவிடவில்லை. என் போன்ற புலவர்களுக்கு வாரி வாரி வழங்கினான்.
அரசன்:-(கைகொட்டிச் சிரித்து) ஆகா! இப்போது தெரிகிறது உண்மை. அரசர்கள் தந்த பணத்துக்காக மலையமான் போரிட்டான். அவன் தந்த பொருளுக்காக நீங்கள் அவனைப் புகழுகிறீர்கள்; நீர் என்னுடன் சொற்போரிடுகிறீர்.
புலவர்:-அரசே, நான் கைக்கூலி வாங்கிக்கொண்டு ஒரு சார்பாகப் பேசுகிறேனென்று தாங்கள் எண்ணுவது அறம் அன்று. மலையமான் இன்று உயிரோடு இல்லை. அவன் தயையை எதிர்நோக்கி நான் அவன் புகழைப் புனைந்துரைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எங்களுக்கு எல்லாரும் நம்பினர். யாரும் பகைவர் இல்லை. உண்மையைச் சொல்வது எங்கள் அறம். இது அரசர்பிரானுக்கு இப்போது கசப்பாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால் என்னுடைய வார்த்தைகளின் உண்மை விளங்கும். அதிகமாகப் பேச்சை வளர்த்த நான்தான் காரணமானேன். இதோ நான் விடிை பெற்றுக் கொள்கிறேன்.
(புலவர் விரைவாகப் போகிறார்,தடியை
ஊன்றிக்கொண்டு.)
அரசன்:-புலவருக்கு எவ்வளவு கோபம் பாருங்கள்! எங்களிடம் கூலி வாங்கிப் பிழைத்த ஒருவனை என் முன்னிலையிலேயே புகழ்கிறார். உண்மையாம்! வீரமாம்! இவர்களையெல்லாங்கூடத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்ட மலையமான் மிகவும் பொல்லாத வகைத்தான் இருக்கவேண்டும். சரி, இனி அவனைப் பற்றி என்ன பேச்சு? ஒழிந்தான்! அவனுக்குப் பிறகு அவன் பெயரைச் சொல்லயாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பூண்டோடு நாசமாகி விட்டது அவன் குலம்.
மந்திரி:-(கனத்துக்கொண்டு) அரசே அவனுக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்களாம்.
அரசன்:-(திடுக்கிட்டு) ஆ என்ன? பிள்ளைகளா? அவனுக்கா? அப்படி இருப்பதாக நான் கேள்விப் படவில்லையே! இருந்திருந்தால் அவர்களும் போரில் தலைகாட்டியிருப்பார்களே!.
மந்திரி:-அவர்கள் இளங்குழந்தைகளாம்.
அரசன்:-அப்படியா? (சிறிது யோசிக்கிறான்).....அட, அப்படியானல் நான் நினைத்தபடி அவன் குலம் நாச மாகவில்லையா? மழை விட்டும் தூவானம் விடவில்லை போலும்!...அமைச்சரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அப்படிச் செய்யலாமா?
மந்திரி:-அரசர்பிரான் ஆணையிடட்டும்.
அரசன்:-அவர்கள் சிறு குழந்தைகள் என்று சொல்கிறீரே. குழந்தைகளாக இருந்தாலும் நாளைக்குப் பெரியவர்களாகிவிட்டால் அவர்கள் தகப்பனப்போல அரசர்களுடைய அச்சத்துக்குக் காரணமாய் இருக்கக்கூடும். குட்டியாக் இருந்தாலும் பாம்பு பாம்புதான். சிறிய பாம்பானாலும் பெரிய தடிகொண்டு அடிக்க வேண்டும். ஆகவே, அந்தக் குழந்தைகளையும் தகப்பன் போன இடத்துக்கே அனுப்பிவிட்டால்......?
மந்திரி:-(திடுக்கிட்டு) என்ன! மன்னர்பிரான் சொல்வது விளங்கவில்லையே! அந்தக் குழந்தைகளைக் கொல்ல......
அரசன்:-அதுதான் சொல்கிறேன். முள்மரத்தைச் சிறியதாக இருக்கும்போதே களைந்துவிட வேண்டும்.
மந்திரி:-(தடுமாற்றத்துடன்) உ.ல...க ம் பழிக்குமே!
அரசன்:-என்ன? உலகமா? தனி மனிதனுக்கு உரிய அறம் வேறு; அரசியல் அறம் வேறு. நாளைக்கு அவர்கள் பெரியவர்களாகிப் பலபேருடைய நாசத்துக்குக் காரணமான பிறகு அவர்களை அழிக்க முயல்வதைவிட இப்பொழுதே செய்துவிடுவது மேல். சரி. தக்க ஆட்களைக் கொண்டு அந்தச் சிறுவர்களைச் சிறை யெடுத்து வர ஏற்பாடு செய்யும். . . .”
மந்திரி:-(குழப்பத்துடன்) அரசே சிறிது யோசித்து.
அரசன்:-யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. அந்த இரண்டு பாம்புக் குட்டிகளையும நசுக்கிவிட வேண்டும். இதில் யோசனை செய்வது முட்டாள்தனம். சிறுவர்களைக் கொண்டு வர வேண்டியதுதான். வேறு பேச்சு இல்லை. போம்.
காட்சி 2
இடம்:-அரண்மனையை அடுத்த பரந்த வெளி, பெருங் கூட்டத்தின் ஆரவாரம். தூரத்தில் களிறு ஒன்று பிளறிக்கொண்டு நிற்கிறது, சங்கிலியாற் கட்டப்பட்டு. மற்றெரு பக்கம்,மலையமான் குழந்தைகள் இருவரும் அழுதுகொண்டு நிற்கிறார்கள். கூட்டத்தில் ஒருவர்:-என்ன ஐயா அக்கிரமம் கிள்ளி வளவனுக்கு இப்படியா புத்தி போகும்? சாமானிய மனிதன் கூட இந்தக் கொலை செய்ய அஞ்சுவானே!
மற்றொருவர்:- சிறு குழந்தைகளை இந்த யானைக் காலால் இடறச் சொல்லிக் கட்டளை யிட்டிருக்கிறானே! இவனுடைய குலம் விளங்க வேண்டாவா? பச்சைப் பசும் பாலகர்கள்; ஒன்றும் அறியாத குழந்தைகள். இவர்கள் என்ன பாவத்தைக் கண்டார்கள்? இவர்களுடைய தகப்பன் இந்த அரசனுக்குப் பகைவன் என்ருல் அதற்கு இவர்களிடமா பழி தீர்த்துக் கொள்வது?. வீரம் இருந்தால் மலையமானைச் சிறைப் பிடித்திருக்கலாமே! அவன் இருந்தபோது எல்லாரும் அடங்கிக் கிடந்தார்கள். இப்போது குழந்தைகளிடம் தங்கள் அரக்க இயல்பைக் காட்டு கிறார்களே!
முதலில் பேசியவர்:-மலையமானையா சிறைப் பிடிப்பது? மலையமான் இறந்து போயும் இவனை மருள வைக்கிறானே! அவனல்லவா வீரன்? இவன் அரசன்? மனித உணர்ச்சி உள்ளவனா? குழந்தைகளைப் பெற்றவனா?
இரண்டாமவர்:-யாரேனும் வளவனை அணுகி இது அடாத செயல் என்று சொல்லக்கூடாதா?
முதல்வர்:-மந்திரிமார்கள் சொன்னர்களாம். இது சம்பந்தமாக அவைக்களப் புலவர்கூட அரசனிடம் கோபங்கொண்டு அரண்மனைக்கு வருவதில்லையாம்.
(குழந்தைகள் அழுகின்றன. மக்கள் ஆரவாரம் செய்கின்றனர்.)
இரண்டாமவர்:-ஐயோ! பாவம் குழந்தைகள் கதறுகின்றன. குழந்தைகளைத் தெய்வமாகப் போற்றும் இந்த நாட்டில் இத்தகைய அதர்மச் செயல் நடப்பது நல்லதற்கு அல்ல. இதைப் பார்ப்பதைவிட நம் கண்களைப் பிடுங்கிக் கொண்டு விடலாம்.
(ஆரவாரம். கோவூர் கிழார் என்ற சத்தம்)
கூட்டத்தில் ஒருவர்: -புலவர் பிரான் கோவூர் கிழார் வரு கிருராம். அரசனுக்கு அறிவுரை கூற வருகிறார் போலும்! கடவுளே இவரை அனுப்பியிருக்கிறார்.
கோவூர் கிழார்:-(விரைவாக நடந்துகொண்டே) அரசன் எங்கே? குழந்தைகள் எங்கே? இன்னும் தண்டனையை நிறைவேற்ற வில்லையே?
உடன் வகுபவர்:-இல்லை இல்லை; நிறைவேற்றக் காத்து நிற்கிறார்கள். அரசன் அதோ அரண்மனையின் மேல்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கிறான். கூட்டம் அதிகமாக இருக்கிறது. மக்களுடைய உள்ளக் கொதிப்பு மிகுதியாகி வருகிறது.
கோவூர் கிழார்:-அரசனிடம் நான் வருவதாகச் சொல்லி அனுப்புங்கள்; கூட்டத்தைச் சற்றே விலக்குங்கள்.
உடன் வருபவர்:-சற்று விலகுங்கள்; வழி விடுங்கள்.
(அரசன் கோவூர் கிழாரை வரவேற்க - எதிர்கொண்டு வருகிறான்.)
கோவூர் கிழார்:-கிள்ளிவளவன் புகழ் மங்காமல் ஓங்குக!
அரசன்:-என்ன, அப்படித் தங்களுக்கு மூச்சு வாங்குகிறதே உடல்நிலை சரியாக இல்லையோ?
கோவூர் கிழார்:-வேகமாக வந்தேன். நல்ல வேளை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்தேன். என் உடல் நிலை சரியாகவே இருக்கிறது. உள்ள நிலைதான் சரியாக இல்லை. தயை செய்து அரசர்பிரான் என் சிறு விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும். இப்போது செய்யத் தொடங்கிய காரியத்தைச் சிறிது நிறுத்தி வைக்க வேண்டும். நான் இரந்து கூறுவதைச் செவியேற்ற பிறகு திருவுள்ளத்துக்கு எது உடன்பாடோ அதைச் செய்யலாம்.
அரசன்:-ஓ! இதுவா? பகைவரால் அச்சம் நேராமல் நாட்டைப் பாதுகாப்பது அரசன் கடமை. அந்த நீதி பற்றி நான் இதை மேற்கொண்டேன். தாங்கள் இவ்வளவு வேகமாக வந்து ஒரு கருத்தைச் சொல்லப் புகும்போது நான் கேளாமல் இருப்பேனா? சொல்லுங்கள்.
கோவூர் கிழார்:-அரச நீதியை மன்னர்பிரான் உணர்ந்தது பற்றி உவகை கொள்கிறேன். அதனை முற்றும் உண்ரவேண்டும் என்பதுதான் என் கருத்து. வளவர் பெருங்குலம் வழிவழியாகப் புகழை ஈட்டி வருவது. அரசர்பிரானுடைய முன்னேர்களில் ஒவ்வொருவரும் உலகம் அறிந்த புகழை உடையவர். பிற உயிரைத் தம் உயிர்போல் எண்ணும் பேரருளாளர். ஒரு புறாவுக்காகத் தன் உடம்பின் தசையை அறுத்துத் தந்த சிபியின் புகழ் இன்று இதிகாசத்தை உண்டாக்கியிருக்கிறது. அவனுடைய பரம்பரையில் வந்த பெருமான் நம் மன்னர்பிரான் என்பதை நினைக்கையில் என் உள்ளம் பெருமிதம் அடைகிறது. இக்குல முதல்வோர் மனித சாதிக்கு வந்த இடுக்கண்கள் பலவற்றை நீக்கியிருக்கிருர்கள். - ‘.
(குழந்தைகள் அழுகிறார்கள். மக்களின் - ஆரவாரம்.)
கூட்டத்தில் ஒருவர்:-(மெல்லிய குரலில்) கோவூர் கிழார் வந்துவிட்டார். இனி இந்த அரசன் என்ன செய்யப் போகிறான், பார்க்கலாம். கோவூர் கிழார்:-கருணையாளர் வழிப்பிறந்த தோன்றலே, இதோ அழுகிற குழந்தைகள் யாரென்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குலம் மன்னர் பிரான் குலத்துக்கு எதிர் நிற்பதா? தங்களுக்குக் கிடைத்தவற்றை நாளக்கு என்று வைக்காமல் புலவர்களுக்குக் கொடுத்துவிடும் பரம்பரையிலே பிறந்தவர்கள் இவர்கள்.
கூட்டத்தில் ஒருவர்:-(மெல்ல) அரசனுக்குச் சொல்லாமல் சொல்கிறார் ஐயா! கவனியும். நீ அவர்களைக் கொன்றால் புலவர்கள் சாபத்துக்கு ஆளாவாய் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்; தெரிகிறதா?
கோவூர் கிழார்:-இவர்களுடைய தந்தையின் வீரமும் கொடையும் ஒரு பால் இருக்கட்டும். இந்தக் குழந்தை களைச் சற்று உற்று நோக்கும்படி அரசர் பெருமானைக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் முகத்தில் பால் வடிகிறதே பச்சைக் குழந்தைகள்! இவர்கள் தங்களுக்கு நேரப்போகும் துன்பத்தை நினைந்து அழவில்லை. எதற்காகத் தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளக் கூட இவர்களுக்குப் பருவம் வரவில்லை. பாவம்! கூட்டத்தைக்கண்டு, எல்லாம் புதிதாக இருக்கிறதனால் அழுகிறார்கள்.
(களிறு பிளிறுகிறது. குழந்தைகள் அழுகையை நிறுத்துகிறார்கள்.)
அதோ, மன்னர்பிரான் தம் அருள் விழிப் பார்வையைச் சற்றே இக்குழந்தைகளின்மேல் செலுத்தட்டும். யானையைக் கண்டு இவர்கள் அழுகையை மறந்துவிட்டார்கள். அழுகிற குழந்தைகள் பொம்மையைக் கண்டு சமாதானம் அடையவில்லையா? இவர்கள் பாவம்! தங்கள் உயிரை வாங்குவதற்காக வந்து நிற்கும் யானையைக் கண்டு, முன்பு அழுத அழுகையைக்கூட நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எவ்வளவு புனிதமானவர்கள்! என்ன பேதைமை! அரசர்பிரான் ஒன்றும் அறியாத இந்தக் குழந்தைகளைக் கண்டு மருண்டு இவர்களுடைய உயிரையே போக்கத் துணிகையில், இந்தக் குழந்தைகளோ உண்மையிலே தங்கள் உயிரை வாங்க வந்த யானையைக் கண்டு வேடிக்கை பார்க்கிறார்களே! இது இரங்கத் தக்கது அல்லவா? மன்னர் பிரான் திருவுள்ளத்தில்......
வளவன்:- (கனைத்துக்கொண்டு உரத்த குரலில்) அமைச்சரே, தண்டனையை நிறுத்துங்கள். குழந்தைகளை விடுதலை செய்யச் சொல்லுங்கள். (தழுதழுத்த குரலுடன்) புலவர் பெருமானே! என்னைத் தாங்கள் பழியினின்றும் விடுவித்தீர்கள். என் மனநிலை சரியாக இல்லை. என் வாழ்த்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்....மற்ருெரு முறை சந்திக்கிறேன்.
(அரசன் வேகமாகப் போய்விடுகிறான். கோவூர் கிழார் வேகமாகச் சென்று குழந்தைகளைக் கட்டிக்கொள்கிறார்.)
கோவூர் கிழார்:- இன்று கடவுள் திருவருளால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்.
(குழந்தைகள் அழுகை)
(கூட்டத்தில் கோவூர் கிழார் வாழ்க!” என்ற முழக்கம்.)