அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்/உறுதிக் கவிஞர்-கட்டுரை 3
உறுதிக் கவிஞர்
உறுதி! தோற்றத்தில், பார்வையில், உடலில், உள்ளத்தில், குரலில், உதட்டின் அசைவில், வெளிவருஞ் சொல்லில், அச்சொல் இசைத்து நிற்கும் பாட்டில், அதன் பொருளில் அனைத்திலும் உறுதி! உறுதி!!
இந்த ‘உறுதி’ தான் பாரதிதாசன். வர்ணாசிரம வைதீகத் தீயில் கருகாத பொன்னென ஒளிர்ந்து மத மூடப் பழக்க வழக்கங்களை முடியடித்த அறிவுத் தூய்மையுடன் விளங்கி, நல்லுணர்வை தட்டியெழுப்பும் நன்மணியெனச் சிறந்து வருபவர் தான் பொற்றூயமணி புரட்சிக் கவிஞர் ஆவர்.
மக்கள் மனதிலும், மன்பதை (சமூக) நிலையிலும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் விளைவிக்கக் கொண்ட உறுதியன்றோ கவிதைகளில் விளையாடுகின்றது?
தன்னம்பிக்கையுந் தாழ்வற்ற உள்ளமும், தமிழ்க் கவிதையிலே ஓர் புதுமையையும், தமிழர் வாழ்விலே ஓர் எழுச்சியையும், நாட்டிலே ஓர் புரட்சியையும் தோற்றுவித்திருப்பதையும் நாம் உணர வேண்டும்.
‘ஓடப்பர், உணர்வப்பராகி, உதையப்பராகி விட்டால், உயரப்பர் ஓடப்பரெல்லாம் ஒப்பப்பர் ஆகி விடுவார்’ என்பதிலேயே கவியின் புரட்சி உள்ளமும் உறுதியும் காணக்கிடக்கின்றன.
புரட்சியை வரவேற்கும் கவி, ஒற்றுமையை அதற்குத் துணையாக்கி, 'உதையை' அதன் செயலாக்கி, 'புத்துலகை' அதன் விளைவாக்கிப் பூரிக்கின்றார். அவருடைய மூச்சும் பேச்சும், எழுத்தும் பாட்டும் அறிவிப்பது அவ்'வுறுதி'யையே!
காலை ஞாயிற்றின் கதிர்கள், கடலலைகள் மீது தாவிடும் காட்சியினிமையும், இருள் சூழ்ந்த வையத்தில் அடர்ந்த காட்டின் நடுவிடத்தின் துன்பக் கொள்கலநிலையும், 'குடும்ப விளக்கும்', 'இருண்டவீடு'மாய்க் காட்சியளிக்கின்றன.
'குடும்ப விளக்கு' அறிவொளியும், அன்பொலியும் அழகுக் காட்சியும் பெருக்கும் குடும்பங்களே திருநாட்டினைத் திகழச்செய்யும் என்ற உறுதியால் உருப்பெற்றதாம். எல்லா நலமும் ஈந்திடுங் கல்வி இல்லா வீட்டை இருண்ட வீடாகக், கவிஞர் ஏட்டிலே காட்டுகிறார், நாட்டிலே இருண்ட வீடு இருக்கக் கூடாது என்ற உறுதியினால்!
நள்ளிரவு மெதுவாய் நடப்பதற்குக் கேள்வியால் அகலும் மடமையையும், எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம் சிற்றுணவு உண்பது வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதலையும், நெஞ்சைக் கிளிபறித்து போனதினால் (காதலர் பிரிவு) மரம்போல அங்கே அவன் தனித்திருந்தது, தண்டமிழ்த் தேன் உண்டவர்கள் பொருளை யெண்ணித் தணிப்பதனையும், குழந்தைகள் உடனிருந்து கொஞ்சியே உண்பது, பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்குதலையும், குடும்பத் தலைவி, குழந்தைகளுக்கெல்லாம் கண்ணுறங்குமுன் தணிக்கைச் செய்தல், பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக்கெல்லாம் பணிக்கை யிடலையும், உவமையாய் அமைத்திருப்பதும், அவ்வுவமையே கருத்திற் கின்பம் பயக்கும் ஓர் தனிக் கருத்தை உள்ளடக்கிக் கிடப்பதும் கண்டுணர்ந்து இன்புறற்பாலதாம். உவமையிலும் ஓர் புதுமை, உறுதிக்கருத்தை உணரவைப்பதற்காக.
இவ்வுறுதிகள் கொண்ட தமிழகத்தின் தலைசிறந்த அறிஞரை, தமிழகத்தின் விடுவிப்பாளரை, அடிமையொழிப்பாளரை, பொதுவுடமைப் போர் வீரரை, புத்துலகச் சிற்பியை, எதிர்காலத் தலைவரை, உணர்ச்சியின் உருவத்தை, புரட்சிக்கவி எனக் கூறல் மிகையாகாது.
உறுதிக் கருத்துக்களை உலகத்துக்களித்த ஒப்பற்ற கவிஞரே உலகத்தின் எதிர்காலத்தை அமைப்போராவர். ஆயின், நமது புரட்சிக்கவி, எதிர்காலத்தை நோக்கி, உலகினை ஒரு பெரு நெறியில் அமைத்துத் தருபவர் என்பதும், மக்கள் உய்ய அவ்வழியன்றிப் பிறிதொன்றில்லையென்பதும் உறுதியாமன்றோ!
உறுதிக்கவி, வெற்றி கொள்வதுறுதி !
எங்கும் எதற்கும் எவரும் புரட்சி செய்யுங் காலம் இது. புரட்சி நடவாத காலமோ, தோன்றாத நாடோ இல்லை, புரட்சி முதலில் எண்ணத்தில் தோன்றி, அதன் பின்னரே செயலில் நிகழும் வேறு எந்த நிகழ்ச்சியையும் போல. அப் புரட்சி, உள்ளத்திலே அரும்பி, சொற்களிலே மலர்ந்து, ஏடுகளிலே கமழ்ந்து, மக்களுடைய மனத்திலே நிறைந்து, அவர்தம் செயலிலே காய்த்து, இறுதியிலே நாட்டிலே அந் நாட்டு மக்கள் வாழ்க்கையிலே கனிகின்றது.
எண்ணத்தில் ஏற்படும் மலர்ச்சி, ஏட்டிலே இடம் பெற்றபின் தான் நாட்டிலே புரட்சிக்கான அடிப்படைகள் வலுப் பெறுகின்றன. உலகின் வரலாற்றிலே, ஏட்டிலே புரட்சியைத் தோற்றுவித்தோர் சிலர்; நாட்டிலே அதனை உண்மையாக்கினோரும் சிலர். இந்தியத் துணைக் கண்டத்திலோ, அன்றித் திராவிடத் திரு நாட்டிலோ என்றால், எண்ணவும் ஆள் கிடைத்திடுதல் அருமையாம். திராவிடத்தில் புரட்சிக் கருத்தை அழகான கவிதைகளாக, காவியச் சித்திரங்களாக ஏட்டிலே திகழ வைத்தவர், தனிப் பெருங் கவிஞர், பெருந்தகை பாரதிதாசன் ஆவார். கவிஞர், கருத்துலகை மலரச்செய்யுந்தலையாயகடனை, முதற்பணியை முட்டின்றி நிறைவேற்றியுள்ளார். முதற்கண் நிகழ்வது நிகழ்ந்தால் அதன் வழிப் புத்துலகம் பூக்க வேண்டுமன்றோ !
இந்நாட்டிலே புரட்சியுள்ளம் ஒடுங்கி, புதுமைக் கருத்துக்கள் மங்கி, பகுத்தறிவும் பண்பும் நசித்துப் பலப்பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. மக்களெல்லாம் நடைப்பிணங்களாக உலவுகின்றனர்; மானமிழந்து மதிகெட்டுத் திரிகின்றனர்; தன்னுணர்வற்று, தம் தாய்நாட்டை மறந்து, உரிமையிழந்து நிற்கின்றனர்; மறம் குன்றியதால், “வீரம்” வரலாற்றுச்செய்தியாகவும், 'போர்க்களம்' படக்காட்சியாகவும், 'வெற்றி' வேற்று நாட்டார் உரிமையாகவும் மாறிவிட்டன. பூரிக்குந் தோள்களோ, போர்ச்செய்தி கேட்டுக் களிப்பூறும் உள்ளமோ, வாளினது பளபளப்பைக் கண்டு ஒளிபெறும் கண்களோ, தோளொடு தோளிணைத்து நிற்கும் படை மாட்சியை எண்ணியும், தனியாற்றலைக் கருதியும் "பகைப்புலம் மாய்த்திடுவோம்" என்ற எக்காளமோ, இன்று காணாத கேளாத காட்சிகளாகிவிட்டன. தமிழகத்தின் பண்டைப் பெருமைகள்— அந்நாள் திராவிடமக்கள் பெற்ற வெற்றிகளின் அடிப்படைகள்—இன்று சிதறிவிட்டன. சீரிழந்த —சிறப்பிழந்த திராவிடமே இன்றைய தமிழகம். இந் நாடு மறுமலர்ச்சியடைய வேண்டுமானால் புரட்சி பூக்கத்தான் வேண்டும்.
புரட்சியின்றேல் புத்துலக வாழ்வில்லை. அந்தப் புது வாழ்வு இல்லையேல் பழைய சாக்காடேதான். பலப் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டைப் பாழ்படுத்தி நமது உடலை அரித்து, உள்ளத்தைத் தீய்த்து, உயிரை மாய்த்து வருகின்ற அதே சாக்காடுதான். "நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்—இது நமக்கே பரம்பரைச் சுடுகாடு என்பதுணர்ந்தோம்" என்று பாடி ஏங்கவேண்டிய அளவிற்கு இன்றைய திராவிடநாடு—ஆரியத்தின் மாயக்காடாக, வடநாட்டாரின் வாணிப வேட்டைக்காடாக, ஆங்கிலேயரின் ஆதிபத்திய கொள்ளைக்காடாக, தமிழரின் வாழ்விற்கு 'முடிவிலோர் பிடி சாம்பல்' என்ற தத்துவத்தைப் போதிக்கும் 'சுடுகாடாக' ஆகிவிட்டது.
திராவிட மக்கள் எழுச்சியுற வேண்டுமானால், அதற்குப் புரட்சியுள்ளம் வேண்டும். மக்கள் மனமெல்லாம், புரட்சி விருப்பாலே பெரு நெருப்பாதல் வேண்டும். அதற்கெனவே, கவிஞர் பாடத் தொடங்கினார். ஏட்டினை எடுத்தார், எழுத்தோவியங்களை, உணர்வுச் சித்திரங்களைப், புத்துலகக் காட்சிகளைப் பகுத்தறிவுப் பாக்களைப், புரட்சிப் புயல்களைத் தீட்டினார்; நாட்டு மக்களிடத்திலே நீட்டினார். புரட்சிக் கவிஞரின் கவிதைத்தீ நாட்டுமக்கள் உள்ளமெல்லாம் சென்று பற்றத் தொடங்கியது.“சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா?
என்று கேட்பது கவிஞர் தானே? என்றால், ஆம். சாந்தியால் உலகம் தழைப்பது நன்று. எனவே அச்சாந்திக்கு மாறான வேறுபாடுகளை விளைக்கும் சமயங் களும், சச்சரவுகளும் ஒழிக்கப்படவேண்டும். அதை ஒழிக்கப் புரட்சி தேவை, அப் புரட்சி, போர்க்களம் புகுந்தேனும் நடந்தே தீர வேண்டும் என்பது கவிஞர் கருத்து.
அணிபெறத் தமிழர் கூட்டம்
போர்த்தொழில் பயில்வதெண்ணிப்
புவியெலாம் நடுங்கிற்றென்ற
வார்த்தையைக் கேட்டுநெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?
மண்ணிடை வாளையேந்திப்
பகைப்புலம் மாய்ப்பதற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்பதென்றோ?
என்று கவிஞர், தம் நாட்டார் போர்த்தொழில் பயின்ற வீரர்களாக விளங்கவேண்டுமென விழைந்து கூறுகின்றார். அந்நிலை ஏற்பட்டுவிட்டால்,
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!"
என முழங்கி,
“வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள் “
“சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதிதீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"
எனச் சங்கநாதம் முழங்கிடுவர் தமிழர் எனக் கருதுகிறார் கவிஞர், அம் முழக்கத்திற்குப்பின்,
"கிளம்பிற்றுக் காண் தமிழர் சிங்கக்கூட்டம்
கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை
வளம்பெரியத் தமிழ் நாட்டில் தமிழரல்லார்
வால்நீட்டினால் உதைதான் கிடைத்திடுங் காண்"
என்று தமிழருடைய எழுச்சி இருக்கும் விதத்தை இங்கே சித்தரிக்கின்றார். தகுமுறை நீங்கி நடக்கும் மாற்றாருக்குத்தமிழர் கற்பிக்கவேண்டியதை எடுத்துக் கூறியுள்ளார்.
அந்தப் “புரட்சி உள்ளம்" தொழிலாளரைப்பற்றிப் பேசும்போது, இதைவிடப் பன்மடங்காகக் கனல் கக்குகின்றதைக் காணலாம்:
“நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டமீதிலே
கடவுள் என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்"
இங்கே, தொழிலாளரை அவர்களது மூட நம்பிக்கையைக்கொண்டே ஏமாற்றப் பயன்படும் கற்பனைக் கட்டினை அறுத்து அவர்களுடைய போராட்டத்தைத் துவக்குவோம் எனக் கூறுகிறார். இன்னும்,
"செப்புதல் கேட்பீர்!—இந்தச்
செகத்தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
சுப்பல்களாக—இனித்
தொழும்பர்களாக மதித்திடவேண்டாம்!
இப்பொழுதே நீர்—பொது
இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே—எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே"
என்று முதலாளிகளுக்குத் தொழிலாளிகளின் சார்பாக ஓர் எச்சரிக்கை தீட்டியிருக்கிறார். இவ்வெச்சரிக்கையிலே "இரத்தம் கொதிப்பேறுகிறது" என்ற உண்மையை உணர்த்தியிருக்கின்றார். அதன் விளைவாக ஏற்படும் போராட்டத்தில் தொழிலாளருக்கு இருக்கும் வலிவினை,
"எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ—இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ ?"
"கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனி
கெஞ்சும் உத்தேசமில்லை—சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை"
என்று எடுத்துக்காட்டி, தொழிலாளர் தங்கள் சொந்த வலிமையால், உரிமையான இன்பவாழ்வை அடைந்தே தீருவர் என்று உறுதி கூறுகிறார்.
இனி, ஏழைகளைப்பற்றியும் உலக மக்களுக்கு உணர்த்தக் கருதி, உலகப்பனை விளித்துச் சொல்கிறார்:
ஓடப்பரா யிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ
என்று. இதைக் கேட்டுவிட்டால், ஏழை மட்டுமின்றிக் கோழையாய்த் திரிபவனும் புரட்சிக்குத் தயாராகி விடுவான். அப்படி அனைவருமே புரட்சிக்குத் தயாராகும் நிலை பிறந்துவிடிலோ, அப்பொழுதும் போர்க்களத்தில் நின்று முரசொலி முழக்குகின்றார் புரட்சிக் கவிஞர். போர் வீரர்களுக்கு அவர் தரும் புத்துணர்வு இழந்த உறுப்புக்களை மட்டுமல்ல, நீங்கிய உயிரையே திரும்பத் தந்து, புதுவாழ்வளித்து, போர்க்களத்தில் வெற்றி வாகை சூடச்செய்யும் தன்மைத்து. கேளுங்கள் அம் முழக்கத்தை
"வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
கொலைவாளினை எடடாமிகு கொடியோர் செயலறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்குண மேவிய தமிழா!
இலையே உணவிலேயே கதி இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்"
'கொலை வாளினை எடடா' என்றவுடனேயே கொலை வாள் என்று கூறுவதிலே உள்ள உணர்ச்சி தெளிவாகின்றது. வாள் - கொலை செய்வதற்குரிய வாள் என்பது மட்டுமின்றி, இதுநாள்வரை கொலைத் தொழிலில் ஈடுபடாது உறையிற்கிடந்த வாள் என்பதும், இனி உறையினின்று உருவிவிட்டால், கொலை மாபாதகமானாலும், உரிமையை உண்மையாக்க, நீதியை நிலை நாட்ட, உலுத்தரின் உயிரைக் குடித்தே தீரும் என்பதும் "கொலை வாளினை எடடா" என்பதிலே கேட்கப்படுகின்றது. உணவில்லை கதியில்லை என்று கதறும் மக்களைக் காப்பாற்ற, வீணரை வீழ்த்த "கொலை வாளினை எடடா" என்று முழங்குகிறார் கவிஞர்.
ஆணுக்குப் பெண்ணும், பார்ப்பனருக்குச் சூத்திரரும், பணக்காரருக்கு ஏழைகளும், மிராசுதாரனுக்கு உழவனும், முதலாளிக்குத் தொழிலாளியும், உயர்சாதியினருக்குப் பறையரும், ஆள்பவருக்கு ஆளப்படுபவரும், உலுத்தருக்கு உழைப்பாளரும், எத்தருக்கு ஏமாளிகளும், எவரும் எங்கும் எக்காரணத்தாலும், எவ்வகையாலும் அடிமையாக இருக்கக்கூடாது. இருப்பது முறையாகாது என்று முழங்குகின்றார் கவிஞர் பாரதிதாசன் தமது கவிதை முழுதும்; இந்நாட்டு மக்கள் இக்காலத்தும் பலப்பல வகையிலும் அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு காணப் பொறாது தமது கருத்துக் கண்களினின்று கனல் கக்கியுள்ளார்; அந்தத் தீப்பொறிகளே அவரது கவிதைகள்,
"இது எனது" என்னும் கொடுமையைத் தவிர்ப்போம், "ஒரு பொருள் தனி" என்னும் மனிதரைச் சிரிப்போம், "கூழுக்கு ஒருவன் அழும்படி ஆண்டிடும் கோலை முறித்திடுவோம்", "ஏழை முதலாளி இல்லாமற் செய்திடுவோம்", "சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள், தாங்கி நடைபெற்று வரும் சண்டையுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம், பின்னர் ஒழித்திடுவோம், புதியதோர் உலகம் செய்வோம் "பொதுவுடமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்" என்று புரட்சியின் விளைவாகிய புது உலகைப் புது வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
புரட்சி மலர்ந்து, புத்துலகம் பூத்து, புதுவாழ்வு மணங்கமழப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரும்பெருந் தொண்டுகளாற்றியுள்ளார். ஆங்கில நாட்டுக் கவிஞர் ஷெல்லியைப்போல, அமெரிக்க நாட்டுக் கவிஞர் வால்ட் விட்மனைப்போல, இஸ்லாமிய இனத்திற்குக் கிடைத்த கவிஞர் இக்பாலைப்போல, திராவிட நாட்டிற்குத், தமிழ் இனத்திற்குக் கிடைத்த ஒப்பிலா அறிஞர் புரட்சிக்கவி பாரதிதாசன். அவருடைய பணியே புரட்சிக்கு முதற்பணி; எந்நாளும் நின்று நிலைத்துப் பயன் விளைக்கும் அரும்பணி; எவருக்கும் நலம் விளக்கும் பெரும்பணி; தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் வாழ்வளித்த உயிர்ப்பணி. இந்நாட்டிளைஞர்கட்கெல்லாம் இன்பப் பணி; அந்தப்—பணியே புரட்சிக்கவிஞருக்கு அணி. அப் புரட்சிக் கவிஞரே தமிழகத்தின் தலைமணி.
வாழ்க புரட்சிக் கவி!
வெல்க அவ்வுறுதிகள்!!
க. அன்பழகன்