அம்புலிப் பயணம்/அப்போலோ - 11

விக்கிமூலம் இலிருந்து
11. அப்போலோ-11


யிர் கூச்செறியக் கூடிய இந்த மாபெரும் எட்டு நாள் அப்போலேர - 11 பயணத்தைக் காண்பதற்குக் கென்னடி முனையில் பத்து இலட்சம் மக்கள் திரண்டு நின்றனர்.[1] அந்த இடம் திருவிழாக் கோலம் பூண்டதுபோல் காட்சி அளித்தது. குறிப்பிட்ட நேரப்படி காலை 9.32 (இந்திய நேரப்படி மாலை 7-02 மணி) மணிக்கு இந்த விண்வெளிப் பயணம் தொடங்கியது. இப் பயணத்தில் பங்கு கொண்ட விண்வெளி வீரர்கள் நீல் ஏ. ஆர்ம்ஸ்ட்ராங்க் (Neil A: Armstrong), எட்வின் ஆல்டிரின் (Edwin Aldrin), மைக்கல் காலின்ஸ் (Michael Collins) என்ற மூவர். இவர்களுள் ஆர்மஸ்ட்ராங்க் என்பவரே குழுவின் தலைவராவார்.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் : ஐந்தாவது வயதிலேயே சிறுவன் ஆர்ம்ஸ்ட்ராங் தன் தந்தையாரை தன் ஊரில் இறங்கி யிருந்த ஒரு பழங்காலத்து விமானத்தால் பறப்பதற்கென்று அழைத்துப் போனான் ; பறந்து செல்லும் அநுபவமும் பெற்றான். அந்த நாள் தொட்டு விமானங்களைத் தன் சிந்தையினின்றும் அகற்ற முடியவில்லை.

பிற்காலத்தில் புதுவித விமானங்களை வெள்ளோட்டமாக ஓட்டிச் செல்லும் வாய்ப்புகள் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்குக் கிடைத்தன. அப்போது 'X-15' என்ற விமானத்தில் தரை மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்தில் பறந்தார் ஆர்ம்ஸ்ட்ராங். பூமியைச் சுற்றிலும் உள்ள வளி மண்டலம் மறைந்து அகண்ட வெற்றிடமும் விண்வெளியும் தொடங்கும் உயரம் அது! அந்த உயரத்தில் அவர் விமானத்தை மணிக்கு 15,400 கி.மீ. வேகத்தில் ஓட்டினார். இஃது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகம்! ஒரு வினாடிக்கு 1-78 கி.மீ. வேகம்! நினைக்கவும் நெஞ்சு துணுக்குறும் அந்த வேகத்தில் செல்லுகையில் விமானம் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு மாறிமாறி ஊஞ்சலைப்போல் அலைபாயும். இதனைக் கட்டுப்படுத்த விமானத்தில் தானியங்கிச் சாதனம் ஒன்றிருந்தது. அந்த வேகத்தில் பறக்கும்போதே ஆர்ம்ஸ்ட்ராங் இந்தத் தானியங்கிச் சாதனம் இயங்குவதை நிறுத்தி விட்டார். அதன் துணையின்றியே மனிதனால் விமானத்தை அலைபாய்தலின்றிக் கட்டுப்படுத்த முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டிய துணிவுமிக்க வீரர் இவர்.

இந்தத் துணிவும் நெஞ்சு உரமுமே விண்வெளிப் பயணத்தின்போதும் அவருக்குக் கைகொடுத்து உதவின. ஜெமினி-8 பயணத்தின்போது உலகைச் சுற்றி வந்து கொண்டிருந்த மற்றொரு விண்கலத்துடன் தாம் சென்று கொன்டிருந்த கலத்தை இணைக்க முடியும் என்று முதன்முதலாக மெய்ப்பித்துக் காட்டிய மாபெரும் வீரர் இவர் : டேவிட் ஸ்காட் என்பாரும் இவருடன் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது எதிர்பாராத விதமாகத் தாம் சென்ற விண்கலத்தில் சில கோளாறுகள் ஏற்பட்டன. இதனால், மூன்று நாட்களுக்கு என்று திட்டமிடப்பெற்றிருந்த பயணத்தைச் சில மணி நேரங்களிலேயே முடித்து கொள்ள நேர்ந்தது. இந்தச் சமயத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் சிறிதும் கலவரம் அடையாமல் அமைதியாகவும் மிகத் திறனுடனும் செயலாற்றிக் கலத்தைப் பாதுகாப்பாகப் பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

1968ஆம் ஆண்டில் ஒரு நாள் அம்புலியில் இறங்குவதைப் பூமியில் சோதித்துப் பார்த்து ஒத்திகை நடத்தியபொழுது அம்புலி ஊர்தி பழுதடைந்து போயிற்று. வரவிருக்கும் ஆபத்தினை உணர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங் குதிகொடை அணிந்து குதித்துவிட்டார். அடுத்த சில விநாடிகளில் அந்த ஊர்தி : பூமியைத் தாக்கிச் சுக்கு நூறாக நொறுங்கி எரிந்துவிட்டது.! ஆயினும், குதிகொடை விரிந்து. ஆர்ம்ஸ்ட்ராங்கைப் பாதுகாப்புடன் பூமிக்கு நிதானமாகக் கொண்டு சேர்த்தது.

கொரியப் போர் நடைபெற்ற பொழுது எழுபத்தெட்டு முறை போர் விமானத்தில் சென்று எதிரி விமானங்களுடன் போரிட்டவர் இவர். விமானத் துறையில் பொறியியல் வல்லுநராக விளங்கிப் பட்டம் பெற்றவர். இதே துறையில் பல ஆராய்ச்சிகள் செய்து 'டாக்டர்' பட்டமும் பெற்றார். 'B-29' இனத்தைச் சார்ந்த மாபெரும் விமானங்களை நூறு தடவைகட்கு மேல் ஓட்டிய அநுபவம் இவருக்கு உண்டு இந்த விமானம் பறந்து கொண்டிருக்கையிலேயே அதனுள்ளிருந்து சிறிய இராக்கெட்டு விமானங்கள் கிளம்பிச் செல்லும் ! இங்ஙனம் ஆற்றலும் அனுபவமும் மிக்க இவர் குழுவின் தலைவராகப் பணியாற்றுவது மிகவும் பொருத்தமாகும். இவரே சந்திரனில் இறங்கிய முதல் மனிதராவார்.

எட்வின் ஆல்டிரின் : இவர் தாம் அம்புலியில் இறங்கிய இரண்டாவது மனிதர். தாய்க்கலத்திலிருந்து அம்புலி ஊர்தியைக் கழற்றி அதனைச் சந்திரனுக்குச் சென்ற வலவர் இவர். இவரும் விமானத் துறையில் பட்டம் பெற்ற பிறகு அதே துறையில் ஆராய்ச்சிப் பட்டமாகிய, 'டாக்டர்' பட்டத்தையும் பெற்றவர்.

ஜெமினி-12 விண்வெளிப் பயணத்தின்போது விண்கலத்தின் ஒரு கதவைத் திறந்து அதன் வழியே தலையும் உடலின் மேற்பகுதியும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்க, தமது இருக்கையில் எழுந்து நின்றபடி 208 நிமிடங்கள் அச்சமின்றிப் பயணம் செய்த துணிவுடைய வீரர் இவர். அப்போது தமக்குக் கீழே இருந்த உலகை ஒளிப்படங்கள் எடுத்தார். மேலும் இதே ஜெமினிப் பயணத்தில் விண்கலத்தை விட்டு வெளிப் போந்து விண்வெளியில் 129 நிமிடங்கள் நடை போட்டார். சூரிய கிரகணத்தை இவர் விண்வெளியில் இருந்தபடி ஒளிப்படம் எடுத்தார். இந்த இரண்டு அரிய சாதனைகளையும் இன்றுவரை வேறு யாரும் நிகழ்த்தியதில்லை. கொரியப் போரில் 66 தடவைகள், எதிரி விமானங்களுடன் போரிட்டு மீண்டவர்.

மைக்கல் காலின்ஸ் : இவருக்குச் சந்திர மண்டலம் எட்டியும் எட்டாமலும் இருந்தது. தாய்க்கலத்தில் இருந்தபடியே சந்திரனுக்கு 112 கி.மீ. உயரத்தில் "கொலம்பியாவில்“ (தாய்க்கலத்தின் பெயர்) அதனைச் சுற்றி வந்து கொண்டிருந்தவர். இவர் மூலமாகவே பூமியிலிருந்த அறிவியலறிஞர்கள் சந்திரனில் இறங்கின இருவருடனும் தொடர்பு கொண்டனர். நோடியாகத் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு இருந்தது. ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் சந்திரனில் தம் கடமைகளை முடித்துக் கொண்டு மீண்டும் "கழுகில்“ (அம்புலி ஊர்தியின் பெயர்) ஏறிமேலே கிளம்பித் தாய்க்கலத்துடன் இணையும்போது ஏதேனும் சிரமம் அவர்கட்கு ஏற்பட்டால் கொலம்பியாவைத் திறனுடன் இயக்கி இரு கலங்களையும் ஒன்றாக இணையச் செய்யும் முக்கியப் பொறுப்பு காலின்ஸுக்கு இருந்தது. இத்தகைய அநுபவத்தை நன்கு பெற்றிருந்தார் இவர். ஜெமினி-10 பயணத்தில் இவர் ஆற்றிய செயற்கரிய சாதனைகளை நாம் அறிவோம்.

அப்போலோ-8 பயணத்தின்போதே காலின்ஸ் அம்புலி மண்டலத்தைச் சுற்றி வந்திருக்க வேண்டியவர். அப்போது அவர் முதுகெலும்பில் ஏற்பட்ட நோயின் காரணமாக மருத்துவம் பெறவேண்டியிருந்ததனால் வேறு ஒருவர் அவருக்குப் பதிலாகச் சென்றார், அப்போது காலின்ஸுக்குக் கிடைக்காத பெருமை இப்போது கிடைத்தது.

இந்தப் பயணத்தில் பங்குபெற்ற மூவரிடமும் சில ஒற்றுமைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மூவரும் 1930 இல் பிறந்தவர்கள் ! மூவரும் 75 கி. கி. எடையை யுடையவர்கள் ! இருவரின் உயரம் 178 சென்டி மீட்டர் மற்றொருவரின் உயரம் 175 செ. மீட்டர் ! மூவரும் திருமணம் ஆகி மக்கட்பேறு பெற்றவர்கள் மூவரும் விமானம் கடவுவதில் நல்ல அனுபவம் உடையவர்கள் ; நாலாயிரம் மணி நேரத்திற்குக் குறையாமல் விண்வெளியில் பறந்த வர்கன். மூவருமே முன்பு நடைபெற்ற விண்வெளிப் பயணங்களின்போது ஒவ்வொரு முறை பங்குபெற்றவர்கள்.

சட்டர்ன்-5 என்ற மாபெரும் இராக்கெட்டே இந்த அப்போலோ -11 பயணத்திலும் பயன்படுத்தபெற்றது. இதன் அமைப்பைப்பற்றி நாம் நன்கு அறிவோம். இதன் மூன்றாவது பகுதியின் உச்சியில்தான் கட்டளைப் பகுதி, பணிப்பகுதி, அம்புலி ஊர்தி என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட அப்போலோ-11 விண்கலம் பொருத்தப்பெற்றிருந்தது. இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்த அமைப்பின் உயரம் 18 மீட்டராகும். இதனைத் தாங்கியுள்ள மாபெரும் இராக்கெட்டினைச் செலுத்துவதற்கென்று தனிப்பட்ட இராக்கெட்டு தனம். (Launching Pad) கென்னடி முனையில் உள்ளது. அங்கு நிறுவப்பெற்றிருக்கும் சந்திர நிலையம் (Moon Port) 158 மீட்டர் உயரமுள்ள கட்டடமாகும். இது சாட்டர்ன் இராக்கெட்டை இணைத்துத் தயாரிக்கும் இடமாக இருந்து பயன்படுகின்றது.

சாட்டர்ன் இராக்கெட்டை உருவாக்கிய இடத்திலிருந்து இராக்கெட்டு தளத்திற்கு எடுத்துச் செல்வதற்காக மிகப் பெரிய வண்டி ஒன்று பயன்படுகின்றது. அறுபது இலட்சம் இராத்தல் எடையுள்ள இந்த வண்டியின் மேல்தளம் ஒரு கால்பந்து ஆடும் களத்தின் பாதி அளவு இருக்கும். இந்த மாபெரும் ஊர்தி செல்வதற்கென்று 210 செ. மீ. கனமுள்ள- அவ்வளவு - உறுதியான - வீதிகள் ஐந்தரை கி. மீ. தொலைவுக்குப் போடப்பெற்றுள்ளன. இந்த வீதிகளில் இராக்கெட்டைத் தாங்கிய வண்டி ஆமை நகர்வதுபோல் மணிக்கு ஒன்றரை கி. மீ வேகத்தில் செலுத்தப் பெறும்.

அப்போலோ-11 விண்கலத்தைத் தாங்கிய சாட்டர்ன்-5 இராக்கெட்டு மேலெழுந்து போவதைக் கண்காணித்து மேற் பார்வையிடப் பல பொறிஞர்கள் (Engineers) கொண்ட ஒரு குழு பணி புரிகின்றது. பயணம் தொடங்குவதற்கு 2 மணி. 40 நிமிடங்கட்கு முன்னதாகவே விண்வெளிப் பயணிகள் மூவரும் கலத்தினுள் தத்தம் இருப்பிடங்களில் வந்து அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்தவுடன் கலத்தின் கதவு தாளிடப்பெற்றது.

இராக்கெட்டு தளத்திற்குச் சற்றுத் தொலைவில் பூமிக்கு அடியில் கட்டப்பெற்றுள்ள ப்ளாக் ஹவுஸ் (Block House) என்ற மாபெரும் நிலவறை ஒன்றில் பல பொறிஞர்கள் இருந்து கொண்டு தம் காதுகளில் அணிந்த தொலைபேசிகள் மூலமாகவும் மற்றும் பல கருவிகள் மூலமாகவும் விண்வெளி - வீரர்களுடன் தொடர்பு கொண்டு விண்கலத்தின் பல்வேறு விசைகள் இயங்குவதை அடிக்கடி சரி பார்த்துக்கொண்டிருந்தனர். பெரிஸ்கோப் {Periscope) என்ற கருவியைப் பயன்படுத்தியும் தொலைக்காட்சித் திரைகளிலும் இராக்கெட்டு செல்லும் வழியைக் கண்டு தெளிந்தனர்.

அப்போலோ.11 பயணம் தொடங்குவதைச் செய்தித் தாள் பொறுப்பாளர்கள் முதலானோர் இராக்கெட்டு தளத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்துதான் கண்டுகளிக்க அனுமதிக்கப் பெற்றனர். மிகப் பெரிய சாட்டர்ன் - 5 இராக்கெட்டு பேரிரைச்சலுடன் நெருப்பைக் கக்கிக்கொண்டு கிளம்பும்போது அருகிலிருப்போரின் காதுகட்கும் கண்கட்கும் தீங்கு நேரும் என்ற காரணத்தாலேயே இத்தகைய ஏற்பாடு . மேற்கொள்ளப் பெற்றிருந்தது.

இராக்கெட்டுடன் சென்று விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் விண்கலத்திலுள்ள விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொள்வதற்கென்று உலகின் பல பகுதிகளில் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன. இவற்றில் ஐந்து நிலையங்கள் அமெரிக்காவிலும், பத்து நிலையங்கள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் முதலிய நாடுகளிலும் உள்ளன. இவற்றைத் தவிர நான்கு கப்பல்களிலும் எட்டு விமானங்களிலும் கண்காணிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. விண்வெளி வீரர்கள் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு வைத்துக்கொண்டே இருப்பர். ஒவ்வொரு விநாடியும் அவர்களின் உடல் நிலை, கலத்தின் வேகம், அஃது இருக்கும் இடம், அதற்குள் உள்ள வெப்பநிலை முதலிய பல எடுகோள் விவரங்களையும் இந்த நிலையங்கள் கண்காணித்துவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ-11 விண்வெளிக் கலத்தை உச்சியில் தாங்கிக்கொண்டு விண்ணில் கிளம்பிய 3,817 டன் எடையுள்ள சாட்டர்ன்-5 இராக்கெட்டு விநாடிக்கு 15 டன் எரிபொருளை ஏப்பமிட்ட வண்ணம் எரிமலை கக்குவது போன்ற சுவாலையைப் பீறிட்டுக்கொண்டு மெதுவாக விண்ணை நோக்கிச் சென்றது; படிப்படியாகத் தன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு இரண்டரை நிமிடங்களில் 144 கி.மீ. உயரத்தை அடைத்தது. இப்பொழுது முதல் நிலைப் பகுதி கழன்று கொண்டு இரண்டாவது பகுதி இயங்கத் தொடங்கியது. இது விண்கலத்தை மேலும் உயரத்தில் கொண்டு செலுத்தியது. இதிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும், இதுவும் இசாக்கெட்டினின்றும் கழன்று கொண்டது.

மூன்றாவது பகுதி விண்கலத்தைத் தாங்கிய வண்ணம் பூமியைச் சுற்றி வந்தது. சந்திரனை நோக்கிப் பாய்வதற்குமுன் அஃது இரண்டரை மணி நேரத்தில் 11 தடவை பூமியை வலம் வருதல் வேண்டும். இப்பொழுது விண்வெளி வீரர்கள் எல்லாச் சாதனங்களையும் சரிபார்த்துக் கொண்டனர், இங்ஙனம் சரிபார்த்த பிறகு இராக்கெட்டின் மூன்றாவது பகுதி இயங்கியது. இந் நிலையில் சந்திரனை அடைவதற்கு 401,282 கி.மீ. தூரத்தைக் கடந்தாக வேண்டும். இப்போது விண்கலம் விநாடிக்கு 1,923 மீட்டர் வீதம் சென்று கொண்டிருந்தது. இந்திய நேரப்படி (சூலை-21) இரவு 1-49 மணிக்கு இதிலுள்ள அம்புலி ஊர்தி (இது 'கழுகு' எனப் பெயரிடப் பெற்றுள்ளது) அம்புலித் தரையில் இறங்க வேண்டும்.

விண்கலம் சந்திர மண்டலத்தை நோக்கி விரையும் தருணத்தில் தான் மிகச் சிரமமான செயலை நிறைவேற்றினர் அம்புலி வீரர்கள், தாங்கள் இருந்த விண்கலத்தை இராக்கெட்டினின்றும் தனியே பிரித்தனர். விண்கலம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கையிலேயே தலைமை - விமானி ஆர்ம்ஸ்ட்ராங் அதனை அரை வட்டமாகச் சுழன்று திரும்பச் செய்தார். இங்ஙனம் திரும்பிய பிறகு விண்கலத்தின் கூரிய முனை இராக்கெட்டின் மூன்றாவது பகுதியை-அதனுள் பாதுகாப்பாக இருக்கும் அம்புலிக் 'கழுகை'-நோக்கியபடி இருந்தது. இந் நிலையில் அவர் அப்படியே இராக்கெட்டினை அணுகி விண்கலத்திலுள்ள கட்டளைப்பகுதியின் கூரிய முனையுடன் அம்புலி ஊர்தியை நன்கு பொருந்திக் கொள்ளச் செய்தார். பிறகு அதனை இராக்கெட்டினின்றும் பாதுகாப்பாக விடுவித்தார். இப்பொழுது விண்கலமும் (கட்டளைப் பகுதியும்) அம்புலி ஊர்தியும் இணைந்த வண்ணம் சந்திரனை நோக்கி விரைந்தன. இப்பொழுது இராக்கெட்டின் மூன்றாவது பகுதியும் விண்வெளியில் கழற்றிவிடப்பெற்றது, இனி அதற்கு வேலை இல்லாததால்!

இணைந்த வண்ணம் சந்திரனை நோக்கிச் சென்று கொண்டிருந்த விண்கலமும் அம்புலி ஊர்தியும் படிப்படியாகச் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல் சூழ் நிலையை நெருங்கின. பிறகு, அந்த ஆற்றலின் காரணமாகச் சந்திரனைச் சுற்றி வந்தன. நான்காம் நான் (சூலை - 19 சனி) அது சந்திரனில் இறங்கவேண்டிய நாள். அன்று விண்வெளி வீரர்கள் மிகச் சாமர்த்தியமாகச் செயலாற்றுதல் வேண்டும். சந்திரனில் இறங்கப்போகும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் தாங்கள் இருந்த விண்கலத்தினின்றும் குகை போன்ற ஓர் அமைப்பு வழியாக அம்புலி ஊர் தியினுள் நுழைந்து அதனை விண்கலத்தினின்றும் பிரித்தனர். இப்பொழுது இரண்டும் தனித்தனியே சந்திரனைச்சுற்றி வந்து கொண்டிருந்தன. தாய்க்கலத்திலிருந்து கொண்டே காலின்ஸ் சந்திரனைச் சுற்றிவந்து கொண்டிருந்தார். அவருக்குக் கீழாக அம்புலி ஊர்தியிலிருந்து கொண்டு ஏனைய இருவரும் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும்தாம் ஆறாம் நாள் (சூலை - 21. திங்கள்) சந்திரனில் இறங்க வேண்டும் என்பது திட்டம். இதனை அடுத்த இயலில் காண்போம்.

மனித வரலாற்றிலேயே மாபெரும் சிறப்புமிக்க இந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டினை உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டும் வானொலி மூலம் கேட்டும் களித்தனர், பூமியிலிருந்து மனிதர்கள் இன்னொரு விண்கோளுக்குச் செல்லும் இணையற்ற அருஞ் செயலுக்கு இணையாக இருந்தது உலகமெல்லாம் இங்ஙனம் ஒரே சமயத்தில் ஒரு செய்தியினைக் கேட்ட சிறப்பு. அங்ஙனம் அவர்கள் செய்திகளை அறிவதற்கு உடனுக்குடன் நிகழ்ச்சிகளை அஞ்சல்செய்ய அட்லாண்டிக், பசிபிக், இந்திய மாகடல்கட்குமேல் "இண்டல் காட்“ செயற்கைக் கோள்கள் நிலையாக அமைக்கப்பெற்றிருந்தன. மேலும், அம்புலித் தரையில் மனிதன் இறங்கப்போகும் இந்த விண்வெளிப் பயணம் பற்றிய செய்திகளை அறிவிப்பதற்குப் பல நாடுகளின் வானொலி நிலையங்களும் ஒருங்கு இணைந்திருந்தன. வரலாற்றிலேயே மிகப் பெரிய வானொலி இணைப்பாகும் இது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒலிபரப்புக் கிளையும் உலகத்திலேயே மிகப் பெரிய அமைப்புமாகிய ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' (வி. ஓ. ஏ.), பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுடனும் (பி. பி. சி.) மற்றும் பல வானொலி அமைப்புகளுடனும் இணைந்து இந் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது. பி. பி. சி. தன் உள் நாட்டு ஒலிபரப்புகளிலும் உலகளாவிய ஒலிபரப்புகளிலும் வி.ஓ. ஏ.யின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்படியே திரும்பவும் ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தது. தென் அமெரிக்க நாடுகளிலுள்ள 2,600 வானொலி நிலையங்களும் வி. ஓ. ஏ. நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்ய ஏற்பாடு செய்திருந்தன. விண்வெளித் திட்டத்தை ஒளிவு மறைவின்றி உலகம் நன்கு. பார்த்துக் கொண்டிருக்கும்படி நடைபெறச் செய்வதுதான் அமெரிக்காவின் மரபாக இருந்து வருவதை நாம் அறிவோம்.

அம்புலியில் இருபத்திரண்டு மணிநேரம் கழித்த ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் “கழுகில்" ஏறிச் சில விசைகளை முடுக்கியதும் அந்த ஊர்தி மேலே கிளம்பிச் - சந்திரனை வட்டமிட்டது ; இதுகாறும் வட்டமிட்டுக் கொண்டிருந்த "கொலம்பியா“வுடன் இணைந்து கொண்டது. விண்வெளி வீரர்கள் இருவரும் மீண்டும் அம்புலி ஊர்தியிலிருந்து தாய்க் கலத்திற்குக் குறுகிய குகைவாயில் வழியாக வந்து சேர்ந்தனர். அவர்களைக் காலின்ஸ் அன்பொழுக வரவேற்றார். இப்போது தேவையற்ற "கழுகினைக்“ கழற்றிவிட்டனர். அது தன்னந்தனியாகச் சந்திரனை வட்டமிட்ட வண்ணம் இருந்தது.

தாய்க்கலத்திலிருந்த மூன்று விண்வெளி வீரர்களும் அதிலுள்ள இராக்கெட்டுப் பொறியைத் தக்க சமயத்தில் இயக்கினர். விண்கலம் மேல்நோக்கிக் கிளம்பி விரைவில் . அதன் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுப் பூமியை நோக்கி விரைந்தது. மணிக்கு 8,736 கி.மீ. வேகத்தில் அது வந்து. கொண்டிருந்தது. இந்த விண்கலத்திலும் இருபகுதிகள் இருந்தன, பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தை நெருங்குவதற்குச் சற்று முன்னதாகத் தேவையற்ற ஒரு பகுதியைக் கழற்றிவிட்டனர். அது வளிமண்டலத்தைத் தாண்டும்போது உராய்வினால் அதிக வெப்பமடைந்து எரிந்து சாம்பராகிவிட்டது. விண்வெளி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டிலும் மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தில் பூமியை நெருங்கியது. இந்தக் கலம் வெப்பமடைந்து எரிந்து சாம்பராகாதிருக்க விண்கலத்தைச் சுற்றி வெப்பத் தடுப்புக் கவசம் ஒன்றிருந்தது.. விண்கலம் 5,000°F வெப்பத்துடன் பழுக்கக் காய்ச்சியது போன்றிருந்தாலும், வீரர்கள் இருந்த அறை குளிர்ச்சியாகவே (81°F) இருந்தது. என்னே அறிவியலின் அற்புதம்!

விண்கலம் பூமியிலிருந்து 72,00 மீட்டர் உயரத்திலிருந்த போது இரண்டு குதிகொடைகள் விரிந்து கொடுத்துக் கலத்தின் வேகத்தைத் தணித்தன. 3,000 மீட்டர் உயரத்தில் மேலும் மூன்று குதிகொடைகள் விரிந்து கொடுத்தன. இதனால் விண்கலம் அதிக அதிர்ச்சியின்றிப் பசிஃபிக் மாகடலில் குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்தது. வட்டமிட்ட வண்ணமிகுந்த ஹெலிகாப்டர் விமானங்களில் ஒன்று விண்வெளி வீரர்களை மீட்டு அருகிலிருந்த போர்க்கப்பலில் கொண்டு போய்ச் சேர்த்தது. மாலுமிகள் விண்கலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றனர்.

விண்வெளிப் பயணம் தொடங்கினபோது 36 மாடிக் கட்டடத்தின் உயரம் இருந்த அமைப்பு அப்பயணம் நிறைவு. பெற்றபோது 3-42 மீட்டர் உயரம் உள்ள விண்கலம் மட்டிலுமே எஞ்சி நின்றது.

இவ்விடத்தில் ஒரு செய்தி நினைவு கூரத்தக்கது. கிட்டத்தட்ட நூறாண்டுகட்கு முன்னர் ஜூல்ஸ் வெர்ன் (Jules Verne) என்ற அறிவியல் புதின ஆசிரியர் மூன்று பேர் கொண்ட விண்வெளிப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1865 இல் வெளியிடப் பெற்ற "சந்திரனைச் சுற்றி“ என்ற தமது புதினத்தில் குறிப்பிட்டுள்ள சந்திரனைச் சுற்றிவரும் அம்புலி ஊர்தி ஓரளவு அப்போலோ-11 பயணத்தைப் போலவே உள்ளது. அந்தக் கதையில் ‘பால்டிமோர் துப்பாக்கிக் கழகத்தின்' உறுப்பினர்கள் 19 ஆவது நூற்றாண்டில் ஃபிளாரிடாவிலிருந்து நான்கு நாள் பயண அலுமினியத்தாலான எறி கருவியைச் (Projectile) செலுத்தினர். அங்ஙனமே ஃபிளாரிடாவிலுள்ள கென்னடி முனையிலிருந்தே மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட அப்போலோ-11 விண்கலம் தனது எட்டு நாள் பயணத்தைத் தொடங்கியது. வெர்னர் குறிப்பிட்ட ஊர்தியின் எடை 19,250 இராத்தல்; அப்போலோ-11 இன் கட்டளைப் பகுதியின் எடை மட்டிலும் 12,250 இராத்தல். ஆனால், கிளம்புவதற்கு முன் அப்போலோ-11இன் எடை கிட்டத்தட்ட 6,500,000 இராத்தலாகும்.


  1. 1969ஆம் ஆண்டு சூலை மாதம் 16ஆம் நாள் (புதன் கிழமை).