அம்புலிப் பயணம்/அம்புலியில் முதல் மனிதன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
12. அம்புலியில் முதல் மனிதன்

துகாறும் எந்த மனிதனும் அம்புலியில் காலடி எடுத்து வைத்ததில்லை! நானூறு கோடி ஆண்டுகளாகச் சந்திரன் விண்வெளியில் உலவி வருகின்றான் என்று மதிப்பிட்டுள்ளனர் வான நூல் வல்லுநர்கள். எனினும், மனிதனேயன்றி வேறு எந்த உயிர்ப்பிராணியும் அங்கு இருந்ததில்லை. உயிருள்ள ஒரு பொருள் -'பாக்டீரியா' போன்ற கிருமிகூட அங்கு இல்லை என்று நம்பப்பெறுகின்றது. "நமது பொருள்களைத் தூய்மைப் படுத்துவதற்கேற்ற இடம் அம்புலி ; அங்கு அவற்றைப் போட்டு வைக்கலாம்“ என்று ஓர் அம்புலி அறிவியலறிஞர் ஒருசமயம் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூரலாம். அந்த அளவுக்குக் கிருமிகள் கூட இல்லாத. அற்புத உலகம் அம்புலி.

1969இல் அந்த நிலை அடியோடு மாறிவிட்டது. 1961 இல் அமெரிக்க மக்கள் தலைவர் கென்னடி "1970க்குள் மனிதன் அம்புலியில் சென்று இறங்குவதை நமது இலட்சியமாகக் கொண்டு உழைப்போம்“ என்று கூறிய அறைகூவல் அறிவியலறிஞர்களின் இதயத்தைத் தொட்டது. அன்று சூடுபிடித்த அம்புலிப் பயணத்திட்டம் எட்டே ஆண்டுகளில் நடைபெற முடியாததை நடைபெறச் செய்துவிட்டது. அன்று மனிதன் கண்ட கனவு நனவாகியது. மனிதன் சந்திரனில் அடியெடுத்து வைத்து விட்டான். இந்த அரிய சாதனையை திகழ்த்திய விண்வெளி வீரர்கள் மூவர் ; அப்போலோ - 11 பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்களுள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரே முதலில் அம்புலியில் அடியெடுத்து வைத்தவர்; இவரை அடுத்துத் தொடர்ந்தவர். எட்வின் ஆல்டிரின் என்பார்.

சந்திரனுக்கு அண்மை உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்த 'கழுகு' என்ற அம்புலி ஊர் தியிலுள்ள சில விசைகளை இயக்கி அதனை அம்புலித் தரையில் இறக்கினர் அதிலிருந்த விண்வெளி வீரர்கள். 'கழுகு' சந்திரனில் இறங்கியதும் இருவரும் கதவைத் திறந்து கொண்டு உடனே வெளியே வரவில்லை. ஊர்தியிலுள்ள முக்கோண வடிவமான இரு சாளரங்களின் வழியாகச் சந்திரனின் மேற்பரப்பைப் பரர்ப்பதுடன், அப்போதைக்கு மன நிறைவு பெற்றனர். ஏனெனில் அம்புலியில் இறங்கிப் பதினைந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் அதன் தரையில் அடியெடுத்து வைக்கலாம் என்பது அவர்கட்கு இடப்பெற்றிருந்த கட்டளை! இறங்கிய வேகத்தில் ஊர்திக்கு ஏதாவது ஊறு நேர்ந் துள்ளதா என்பதை முதலில் அவர்கள் சோதித்துப் பார்த்தனர். பிறகு இனிமையாக உண்டு அமைதியாக எட்டு மணிநேரம் உறங்கி ஓய்வு கொண்டனர்.

ஓய்விற்குப் பிறகு ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் விண்வெளி உடைகளை அணிந்து கொண்டனர். தம்மிடமிருந்து கிட்டத்தட்ட 112 கி.மீ. உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்துகொண்டிருந்த மைக்கேல் காலின்சுடன் உரையாடினர். பூமியிலுள்ள அறிவியலறிஞர்களுடனும் தொடர்பு கொண்டனர். 'இறங்கலாம்' என்ற கட்டளை கிடைத்ததும் 'கழுகின்' கதவினைத் திறந்து கொண்டு ஆர்ம்ஸ்ட்ராங் மட்டிலும் வாயிலில் நுழைந்து சின்னஞ் சிறிய ‘தாழ்வாரத்தில்' நின்றவண்ணம் அம்புலியின் மேற்பரப்பை நோக்கினார். அம்புலியை இங்ஙனம் மனிதக் கண்கள் நோக்கியது இதுவே முதல் தடவையாகும்!

இந்த நிலவுலகில் கோடானுகோடி மிக்க மக்கள் ஆர்வத்துடன் தொலைக்காட்சி அல்லது வானொலிப் பெட்டியின் அருகில் அமர்ந்து கொண்டு இக்காட்சியை நோக்கியவண்ணம் இருந்தனர். விநாடிக்கு விநாடி அவர்களின் ஆவல் குறுகுறுப்பு அதிகரிக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த மாபெரும் செய்தியை எதிர்பார்த்துத் துடிப்புடன் காத்திருந்தனர். கனவு நனவாகும் வேளை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. பன்னெடுங் காலமாக நடைபெறாது நடைபெறவிருக்கும் ஓர் அரிய செயலைக் காண, அறிவியல் அற்புதங்களுக்கெல்லாம் கொடுமுடி வைத்தாற் போன்ற ஒரு நிகழ்ச்சி கண்ணுக்கு மெய்யாக நிகழ இருப்பதைப் பார்க்க, அவர்கள் காத்துக் கிடந்தனர். ஆர்ம்ஸ்ட்ராங் 'கழுகி' லிருந்து நீண்டு கொண்ட ஓர் ஏணி வழியாகப் பையக் கீழே இறங்கினார். நான்கு இலட்சம் கிலோ மீட்டர்கட்கு அப்பாலுள்ள மக்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது. ஆர்ம்ஸ்ட்ராங் ஏணியின் இறுதிப்படியில் இறங்கி, “இது மனிதனுடைய ஒரு சிறிய தப்படியே, ஆனால் மனிதகுலத்தின் ஒரு மாபெரும் பாய்ச்சலாகும்" என்று சொல்லிய வண்ணம் கனமான காலணி அணிந்திருந்த தமது இடதுகாலை அம்புலியின் மேற்பரப்பில் ஊன்றினார்; அடுத்து மற்றொரு காலையும் வைத்தார். மனிதன் சந்திரனை வெற்றி கொண்டாகி வீட்டது! உலகில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துக் குரல்கள் மண்ணதிர விண்ணதிர எழுந்தன.

பத்தொன்பது நிமிடத்திற்குப் பிறகு ஆல்டிரினும் அவருடன் வந்துசேர்ந்தார். இருவரும் அண்ணாந்து. நோக்கினர். பகலவன் அப்போதுதான் சந்திரனின் தொடு வானத்தில் தோன்றினான். தொலைவில் அரைவட்டமாகப் பூமி காட்சி அளித்தது. அதன் ஒருபாதி பகலவன் ஒளியால் ஒளிர்ந்தது; மற்றொரு பாதி இருண்டு கிடந்தது. அம் புலியில் ஒரு பகல் பூமியில் 14 நாட்கள் என்பதையும் இரவும் அப்படியே என்பதையும் நாம் அறிவோம். வளிமண்டலமே இல்லாத - அந்தப் பாழ்வெளியில் கதிரவனின் கதிர்கள் அம்புலியைக் கடுமையாகத் தாக்குகின்றன. ஆயினும் விண்வெளி உடை அணிந்திருந்த வீரர்கள் இருவரும் அந்தக் கடும் வெப்பத்தால் பாதிக்கப் பெறவில்லை.

அம்புலித் தரையில் ஆர்ம்ஸ்ட்ராங் நடக்கத் தொடங்கினார். பூமியில் நடப்பதுபோல் அங்கு நடக்க முடியாது. இலேசாக, கங்காரு போல் எழும்பி எழும்பிக் குதித்து நடக்க வேண்டும். ஆர்ம்ஸ்ட்ராங் இதைப் பூமியில் எத்தனையோ முறை செய்து பழகியிருந்ததால் இப்போது அவ்வாறு செய்வது எளிதாக இருந்தது. சந்திரனில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று மணி நேரம் என்ற விகிதத்தில் அவர் பூமியிலேயே செயற்கையாக நிறுவப் பெற்ற சந்திர மண்டலச் சூழ் நிலையில் ஒத்திகை பார்த்துப் பழகி விருந்தார். விண்வெளி வீரராவதற்கு அவர் பெற்ற எத்தனையோ பயிற்சிகளில் இஃது ஒருசிறு பகுதியேயாகும்.

ஆர்ம்ஸ்ட்ராங்கின் எடை 165 இராத்தல் ; அவர் அணிந்திருந்த விண்வெளி உடையின் எடை 54 இராத்தல்; அவர் முதுகில் தூக்கிச் சென்ற உயிரியம் அடங்கிய அமைப்பின் எடை 120 இராத்தல். இத்தனையும் சேர்ந்து அம்புலியில் 57 இராத்தல்களே! இந்த வேற்றுமை காரணமாக வழக்கம் போல் அவர் நடந்தால் தடுமாறி விழுந்துவிடக் கூடு மாதலால் மெல்லக் குதித்து முன்னேற வேண்டியதாயிற்று. விரைவில் அவரும் அவர் தம் தோழரும் அமெரிக்கக் கொடி ஒன்றைச் சந்திரனில் நட்டனர். வளிமண்டலமாற்றச் சூழ் நிலையில் அது பறக்காது என்ற காரணத்தால் நாலா பக்கமும் இழுவிசைக் கம்பிகள் கொடியை இழுத்துப் பிடித்து நீண்டிருக்குமாறு அமைத்தனர். அடுத்து, சந்திர மண்டலத்திலிருந்து சில பாறைகளைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகச் சேகரித்தனர். சில அறிவியல் கருவிகளைச் சந்திர மண்டலத்தில் நிறுவினர் ; ஒளிப்படங்கள் (Photographs) எடுத்தனர். சினிமா, தொலைக்காட்சிக் காமிராக்களை இயக்கிப் படங்கள் எடுத்தனர்.

ஆல்டிரினும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் சந்திரனில் தன்னந்தனியாக இருந்த போதிலும் பூமியில் கோடிக்கணக்கான மக்கள் அவர்களுடனேயே இருக்கும் உணர்வைத் தொலைக்காட்சி மூலம் பெற்றனர். அவர்களுடைய, தலைக்கவசத்திற்குள் (Helmet) நுண்ணிய் ஒலிவாங்கிகள் (Microphones) இருந்தன. சிறிய, ஒலிபரப்புச் சாதனங்களை அவர்கள் முதுகில் சுமந்துகொண்டிருந்தனர், அம்புலி ஊர்தியிலும் ஒலிபரப்புக் கருவிகள் இருந்தன. இவற்றால் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் - பூமியில் உடனுக்குடன் ஒலிபரப்பாயிற்று; மக்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்தனர். தொலைக்காட்சிக் காமிராவை அவர்கள் - இயக்கத் தொடங்கியதும் உடனுக்குடன் அக்காட்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொலைக்காட்சிச் சாதனங்கள் உள்ள இல்லங்கள் தோறும் தெரிந்தன; அவற்றை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இதற்கு ஓவிபரப்புச் சாதனங்களுடன் உலகினைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்கள் கைகொடுத்து உதவின.

படம். 15:
அம்புலித் தரையில் வைத்த நினைவுக் குறிப்புப் பலகையைக் காட்டுவது

விண்வெளி வீரர்கள் இருவரும் நிலவுலகிற்குத் திரும்புகையில். அம்புலியில் நினைவுக் குறிப்பாக ஒரு பலகையை வைத்து விட்டுத் திரும்பினர். அதில்


"பூவுலகினின்றும் போந்த மனிதர்கள் இங்குத்தான்
அம்புலிமேல் முதலில் அடி வேத்தனர்.
கி. பி. 1969 சூலை.
மக்கள் குலம் முழுவதற்கும் அமைதி காண வந்தோம்.“
என்ற செய்தி பொறிக்கப் பெற்றுள்ளது. அப்போலோ - 11 விண்வெளி வீரர்கள் - மூவரும் ஒரே வரியில் கையெழுத்திட்டுள்ளனர். ஒவ்வொரு கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர்கள் - அச்செழுத்தில் பொறிக்கப்பெற்றுள்ளன. விண்கல் வலவர்களின் கையெழுத்திற்குக் கீழே அமெரிக்க - மக்கள் அதிபரின் கையெழுத்து உள்ளது. இதற்குக் கீழே ஒரு வரியில் "அமெரிக்க அதிபர்“ என்று அச்செழுத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது. 22.9 செ.மீ. நீளமும் 19.4 செ.மீ. அகலமும் உள்ள அந்தப் பலகையின் உச்சியில் கிழக்கு, மேற்குப் பகுதிகட்கு அறிகுறியாக இரு கோளங்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. மேற்குப் பகுதிக்குரிய கோளத்தில் பொறிக்கப் பெற்றுள்ள ஒரு புள்ளி - அப்போலோ - 11 செலுத்தப் பெற்ற கென்னடி முனையைக் காட்டும்.

இதனைத் தவிர இந்தியா உட்பட 73 நாடுகளின் செய்திகளும் அங்கு வைக்கப் பெற்றன, 'அமைதிக் கடல்' என்ற இடத்தில் இவை வைக்கப் பெற்றன். மேலும், விண்வெளி வீரர்கள் "அம்புலிக்கு ஒரு கடிதம்" கொண்டு சென்றனர். ஒரு கோளிலிருந்து பிறிதொரு கோளுக்கு அஞ்சல் கொண்டு செல்லும் முதல் அஞ்சல் சேவகர்கள் இவர்களேயாவர். ஒரு பெரிய முத்திரை குத்தும் அச்சும் எடுத்துச் சென்றனர். அந்தக் கடிதத்தை நிலாத் தரையில் வைத்து முத்திரை குத்தினர். விண்வெளி வீரர்கள். அந்தக் கடிதத்திலுள்ள அஞ்சல் தலையில் "அம்புலிமீது (இறங்கிய முதல் மனிதன்“ என்ற சொற்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பெற்றிருந்தது. இதன் மீது குத்தப் பெறும் முத்திரையில் “அமெரிக்கா அம்புலியில் இறங்கிய நாள் (அமெரிக்க நேரப்படி) ஜூலை 20. 1969“ என்ற சொற்றொடர் காணப்பெற்றது. விண்வெளிக்கல வலவர்கள் தாம் பூமிக்குத் திரும்பினபோது இக்கடிதத்தையும் தபால் தலை முத்திரை அச்சையும் தம்மொடு கொண்டு வந்தனர். பூமியில் 21 நாள் 'குவாரன்டைன்' (Quarantine) முடிந்ததும், அக்கடிதம் வாஷிங்டன் நகரில் மக்கள் பார்வைக்கு வைக்கப் பெற்றது; பிறகு வெளிநாடுகளிலும் அங்ஙனமே வைக்கப் பெற்றது. - விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய அச்சு ஆகஸ்டு இறுதியில் நடைபெற்ற முதல் நாள் வெளியீட்டு விழாவில் பத்து சென்டு பெரிய விமான அஞ்சல் தலைமீது குத்தப் பெற்றது.

வரலாறு காணாச் சிறப்புமிக்க நாளாகிய சூலை - 21ஆம் நாள் (1969) திங்கட்கிழமையை நாடு முழுதும் விடுமுறை நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அதிபர் நிக்ஸன் அறிவித்தார், அவர் விடுத்த அறிக்கையில்,

"மனிதன் ஒருபோதும் போய் அறியாத இடத்திற்கு: விண்வெளி வீரர்கள் செல்லுகையில், மனிதன் ஒருபோதும் செய்ய முயலாததை அவர்கள் செய்ய முற்படுகையில், நிலவுலகில் வாழும் நாம் ஒரே மக்களாக அவர்களோடு உள்ளத்தால் ஒன்றுபட்டிருக்க விழைவோம் ; புகழிலும் வியப்பிலும் அவர்களுடன் பங்கு கொள்ள விழைவோம் ; - எல்லாம் இனிது நிறைவேறும் என்று வழிபடுவதன் மூலம் அவர்கட்குத் துணை நிற்க விழைவோம். இந்த அரும் பெருந் துணிவுமிக்க முயற்சி அவர்களுடையது மட்டுமன்று, எல்லோருடையதுமாகும். அவர்கள் ஆக்கும் வரலாறு அறிவியல் வரலாறு மட்டுமன்று, மனித வரலாறும் ஆகும்“

என்று கூறப் பெற்றிருந்தது. இந்தப் பயணம் வெற்றியுடன் நிறைவேறவும், விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகத் திரும்பிவந்து சேரவும் அனைவரும் ஒன்றுபட்டு இறைவனை வழுத்தி வேண்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இனி, எதிர்காலத்தில் சந்திர மண்டலத்திற்குப் பலர் போகலாம்; வரலாம். ஏன்? அம்புலிக்கும் அப்பாலும் எதிர் காலப் பயணங்கள் நடைபெறலாம். என்றாலும், இந்தப் பூவுலகை விட்டு மற்றோர் உலகில் முதன் முதலாக மனிதன் அடியெடுத்து வைப்பது ஒரு தடவை தானே நிகழமுடியும்?