அம்புலிப் பயணம்/அப்போலோ - 14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
15. அப்போலோ-14

ந்த விண்வெளிப் பயணம் மனிதன் அம்புலியில் இறங்கி நடமாடின மூன்றாவது பயணமாகும்.[1] அம்புலிக்குச் செல்லவும் அங்கிருந்து திரும்பவும் மேற்கொள்ளப்பெற்ற ஒன்பது நாள் பயணம் இடி மின்னலுடன் கூடிய மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தமையால் 39 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. முதன் முதலாகத் தொடங்கிய அப்போலோ -11 பயணத்தில் மக்களுக்கு உண்டான உற்சாகத்தைப்போலவும். அப்போலோ-13 பயணத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மக்கட்கு ஏற்பட்ட கவலை தரும் ஆவலைப் போலவும் இப் பயணத்தில் அவர்களிடம் ஏற்படவில்லை என்பது உண்மையாயினும், அப்போலோ-14 பயணம் மனிதன் அகண்ட வெளியிலுள்ள கோள்களை நோக்கி மேற்கொண்ட பயணத்தில் முன்னோக்கி எடுத்து வைத்த மற்றொரு தப்படி என்பதற்கு ஐயமில்லை ; அவன் இதனால் இன்னொரு மைல் கல்லைத் தாண்டி விட்டான் என்பது தெளிவு.

இந்தப் பயணத்தில் அல்லன் பி. ஷெப்பர்டு என்பார் தலைமை விமானியாகப் பங்கு பெற்றார். எட்கார் டி. மிட்செல் அம்புலி ஊர்தியின் விமானியாகவும், ஸ்வெர்ட் ஏ. ரூசா கட்டளை ஊர்தியின் விமானியாகவும் பங்கு பெற்றனர். இந்தப் பயணத்தில் இவர்கள் சென்ற தாய்க்கப்பல் கிட்டி ஹக் (Kitty Hawk) என்பது. இதிலிருந்து பிரிந்து அம்புலியில் இறங்கும் நிலாக்கூண்டு அண்டாரிஸ் {Avtaris) என்ற பெயருடையது. இந்தப் பயணத்தில் அம்புலி வீரர்கள் ஒரு தள்ளு வண்டியைத் {Trolley) தம்முடன் கொண்டு செல்லுகின்றனர். இஃது ஆய்வுக் கருவிகளைக் கொண்டு செல்லவும், அம்புலித் தரையில் அங்கும் இங்கும் சேகரிக்கும் நிலாக்கற்களையும் அம்புலி மண்ணையும் அம்புலிக் கூண்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கவும் பயன்படுத்தப் பெறும்.

இந்தப் பயணத்திலும் ஒரு சீர்கேடு ஏற்பட்டுப் 'பின்னர் அது நீக்கப் பெற்றது. அப்போலோ-14 கப்பல் விண்வெளியில் செலுத்தப்பெற்று மூன்று மணி நேரத்திற்குப் பிறகு இச் சீர்கேடு தெரியவந்தது. கட்டளை ஊர்தியையும் அம்புலிக் கூண்டையும் இணைக்கும் பொறியமைப்பில் சரியாகச் செயற்படா நிலை நிலவியது; மூன்று சிறிய தாழ்ப்பாள்கள் சரியாகப் பொருந்த மறுத்தன. அப்போலோ 14 இப்பொழுது மணிக்கு 11,380 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது ; இப்பொழுது கப்பல் பூமியிலிருந்து. 41,610 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஒருசில மணி தேரத்தில் இச் சீர்கேடுசரி செய்யப்பெற்றது. தரையில் கட்டுப்படுத்தும் அறையிலுள்ள நிபுணர்கள் அப்போலோ-14 திட்டமிட்டபடி தன் பயணத்தைத் தொடரலாம் என்று இசைவு தந்தனர். ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய இப் பயணம் தொடங்குவதற்கு முன்னர்க்கப்பலைச் செலுத்தும் தளத்தில் இடிமின்னலுடன் கூடிய மேகங்கள் சூழ்ந்திருந்தமையால் திட்டமிட்ட நேரத்திற்கு 39 நிமிடங்கள் தாமதமாகவே அப்போலோ-14 விண்வெளியில் செலுத்தப் பெற்றது.

இந்தப் பயணத்தின் நோக்கம் : அம்புலி மண்டலத்தில் ஃப்ரா மௌரோ (Fra Mauro) என்ற மலைப் பகுதியில் இறங்க வேண்டும். இங்குள்ள பெரிய பெரிய பாறைகளை ஆராய்தல் வேண்டும். இப் பாறைகளுள் சில நம் மோட்டார்கார் அளவு பருமனுள்ளவை. கதிரவ மண்டலத்தில் இவையே மிகப் பழைமையானவை என்று அறிவியலறிஞர்கள் கருது கின்றனர். அம்புலித் தரையின் கீழ் நீர் இருக்கின்றதா என்று சோதிக்க விரும்புகின்றனர் இந்த அறிஞர்கள், ஆகவே, விண்வெளி வீரர்கள் இவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற 21 வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து ஒரு சிறு பீரங்கியை இயங்கச் செய்து. அதனைக்கொண்டு நானூறு வெடி குண்டுகளைப் பல்வேறு தூரங்களில் நாலாபக்கங்களிலும் எறியச் செய்வர்.

திட்டமிட்டபடி மிகச் சரியாக 'அண்டாரிஸ்' அம்புலியில் இறங்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம், அம்புலித் தரையில் ஆலன் பி ஷெப்பார்டும் எட்கார் டி. மிட்செலும் அண்டாரிஸிலிருந்து சவாரி செய்தனர். அதன் பிறகு அண்டாரிஸை இரண்டு எரிமலை வாய்த்தொகுதிகளிடையே (Crater clusters) கொண்டு நிறுத்தினர், அந்த இடம் எட்டு டிக்ரி சரிவாக இருந்த இடமாக இருந்தது. இவர்கள் இறங்கின இடத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தாய்க்கப்பல் கிட்டி ஹாக்கிலிருந்தபடி ஸ்டூவெர்ட் ஏ, ரூசோ தனிமையாக அம்புலியை வலம் வந்து கொண்டிருந்தார். பூமியில் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து அம்புலியிலிருத்து திரும்புவதற்கு 30 - டிக்ரி வரை சரிவாகவுள்ள, தளம் தகுதியானதே என்ற தகவல் வந்தது.

அம்புலித் தரையில் காலடி எடுத்து வைத்தவர்களில் ஷெப்பர்டு ஐந்தாவது மனிதராகின்றார். ஆறு நிமிடங்கள் கழித்து மிட்செல் ஊர் தியிலிருந்து அம்புலித் - தரைக்கு வருகின்றார். அம்புலியில் இறங்கிய ஆறாவது மனிதர் என்ற நிலை இவரை வந்தடைகின்றது. பூமியிலிருந்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப்பற்றிய குறிப்புகளைப் பெறுகின்றனர். இந்த இரண்டு விண்வெளி வீரர்களும். இவர்கள் அம்புலியில் தங்கின நோம் 33½ மணி. இந்தக் காலத்தில் அவர்கள் இரண்டு முறை நான்கு முதல் ஐந்து மணி வீதம் அம்புலியில் உலா வந்தனர். இதுகாறும் அம்புலியில் நடத்தவர்களை விட இவர்களே அம்புலியில் அதிக தூரம் நடந்தவர்கள் என்ற புகழ் இவர்களை வந்தடைகின்றது. திட்டமிட்டபடி மனிதன் மூன்றவது முறையாக அம்புலியில் இறங்கினான் என்ற நற்செய்தி கேட்டு கட்டுப் பாட்டு அறையிலுள்ளவர்கள் மகிழ்ச்சிக் குரலை எழுப்பினர்.

இந்தப் பயணத்தில் 120 மீட்டர் உயரத்திலுள்ள கூம்பு {Come) என்ற எரிமலை வாயை நோக்கி ஏறிச்சென்றனர். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியைக் கடந்த நிலையில் அதற்குமேல் ஏற வேண்டா என்று பூமியிலிருந்து கட்டளை வந்தது. சாதாரணமாக மனிதனுடைய இதயம் நிமிடத்திற்கு 80 முதல் 90 முறை வீதம் அடித்துக் கொள்ளும். ஆனால், இவர்கள் மலைச்சிகரத்தில் ஏறிக் கொண்டிருத்த பொழுது. இவர்களது இதயம் நிமிடத்திற்கு 150 தடவைகள் வீதம் அடித்துக் கொண்டது. இதனை யறிந்து மேலும் ஏறுவதைக் கைவிடுமாறு பூமியிலிருந்து கட்டளை பிறந்தது. தவிர, மிட்செலின் விண்வெளி அங்கி (Space - Suit) யில் சிறிய ஒழுக்கு கண்டதும் இங்ஙனம் பணித்தமைக்கு ஒரு காரணமாகும். கிட்டத்தட்ட செங்குத்தாகவுள்ள சரிவில் ஏறுவதைக் கைவிட்டாலும், இதுகாறும் அம்புலியில் நடந்தவர்களை விட அதிகமாக நடந்தவர்கள் (சுமார் 2,700 - மீட்டர்) என்ற புகழ்மாலை சூட்டப்பெற்றனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு இரண்டரை மணி முன்ளதாகவே மலை ஏறுவதைத் தொடங்கினர் விண்வெளி வீரர்கள். ஏறிக் கொண்டிருக்கும் பொழுதே கற்களையும் மண்ணையும் சேகரித்துத் தங்களிடமிருந்த குழல்களில் நிரப்பிய வண்ணமிருந்தனர். விண்வெளி வீரர்களின் கையிலிருக்கும் பொழுதே பல கற்கள் உடைந்தன. இத் தகவலை அறிந்த தரை நூல் அறிஞர் (Geclcgist) டாக்டர் ராபின் பிரெட் என்பார் அவை விண்கற்களால் தாக்கப்பெற்றமையே. அவ்வாறு உடைவதற்குக் காரணமாகலாம் என்ற கருத்தைத் தெரிவித்தார். விண்வெளி வீரர்கள் கூம்பு எரிமலைவாயை நெருங்க நெருங்கப் பாறைகளும் அதிகமாகத் தென்பட்டன. 45,000 இலட்சம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில், அம்புலி உண்டான காலத்தில், இருந்த பாறைகள் அங்குக் காணப் பெறலாம் என்று அறிவியலறிஞர்கள் நம்புகின்றனர். பெரும்பாலான பாறைகள் அரை குறையாகப் புதைந்த வண்ணம் காணப்பெற்றன. அவை எஜக்டா மூடி (E.jecta cover) என்ற பெயர் கொண்ட கூம்பின் இடிபாடுகளாக இருக்கலாம் என்று கருதுகின்றார் டாக்டர் பிரெட். சூரியக் காற்றுகளாலும் மிகச் சிறிய விண்வெளிக் கற்களாலும் தாக்குண்டமையால் பெரும்பான்மையான கற்கள் தேய்ந்து உருண்டை வடிவங்களாயிலா என்பது அந்த அறிஞரின் கருத்தாகும்.

அம்புலியில் விண்வெளி வீரர்கள் நடந்தபொழுது பல ஒளிப்படங்களை எடுத்தனர். பல இடங்களில் பல்வேறு அறிவியல் கருவிகளை அமைத்தனர். இங்ஙனம் அவர்கள் நிறுவின தாமாக இயங்கும் 'அறிவியல் நிலையங்கள்' இன்னும் பல்லாண்டுகட்குப் பல்வேறு வித தகவல்களை அனுப்பிய வண்ணம் இருக்கும். நிறுவி 48 மணிநேரத்திற்குள் அவற்றால் கிடைத்த புள்ளி விவரங்கள் அறிவியலறிஞர்களைப் பல்லாண்டுகள் சுறுசுறுப்பாக ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்யும்.

வீண் வெளி வீரர்கள் தாம் சேகரித்த கற்களையும் மண்ணையும் அம்புலி வண்டியில் ஏற்றிக்கொண்டு அண்டாரிஸ் என்ற அம்புலிக்கூண்டை யடைந்தனர். . மிட்செல் முதலில் கூண்டில் ஏறிக்கொண்டார். அம்புலித் தரையிலிருந்த ஷெப்பர்டு கன்வேயர் பெல்ட்டு (Canveyor belt) மூலம் அனுப்பிய கற்களையும் மண்ணையும் கூண்டில் ஒழுங்காக அடுக்கினார். ஏற்றும் வேலை முடிந்ததும் ஷெப்பர்டும் ஏணிமூலம் கூண்டில் ஏறிக் கூண்டின் கதவுகளை மூடித் தாளிட்டார். கூண்டின் அடி மட்டத்திலுள்ள எஞ்சினை இயக்கியவுடன் அது கூண்டிளை அம்புலித் தரையினின்றும் கிளப்பியது. விரைவில் அதுவும் அம்புலியை வட்டமிட்ட வண்ணம் இதுகாறும் வட்டமிட்டு வந்த கிட்டி ஹாக்கை நெருங்கியது. விரைவில் இரண்டு ஊர்திகளும் இணைக்கப்பெற்றன. இணைவதில் மீண்டும் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் கட்டுப்பாட்டு அறையிலிருந்தவர்கள். இரண்டு ஊர்திகளும் இணைந்த காட்சிகளைப் பூமியிலிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தனர். அவை சற்றுக் கடினமாக இணைந்ததால் ஏற்பட்ட குலுக்கலும் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அம்புலிக் கூண்டிலிருந்த சரக்குகளை யெல்லாம் தாய்ச் கப்பலுக்குள் கொண்டு சேர்த்தனர்.

இளி, அம்புலிக் கூண்டினால் அவர்கட்கு ஒரு பயனும் இல்லை. அஃது அவர்கட்கு ஒரு சுமையேயாகும். ஆகவே, அதனைத் தாய்க்கப்பலினின்றும் கழற்றிவிட்டனர். அண்டாரிஸின் எடை, 10,000 - இராத்தல்கள் (கிட்டத்தட்ட 4,464 கிலோ கிராம்). அஃது அம்புலியை நோக்கி {மணிக்கு 3,700 மைல்) மணிக்கு 5,920 கிலோ மீட்டர் வீதம் விரைந்தது; விரைவில் அம்புலியில் விழுந்து நொறுங்கியது. அஃது அப்போலோ-14 இறங்கின இடத்திலிருந்து (32 மைல்) 51 கி.மீ. தொலைவிலும் அப்போலோ-12 இறங்கின இடத்தி லிருந்து (78 மைல்) 125 கி.மீ. தொலைவிலும் உள்ள ஓர் இடத்தை நோக்கிக் குறிவைத்துக் கழற்றிவிடப் பெற்றது. அண்டாரிஸ் அம்புலியில் விழுந்த இடத்தில் அது (65 லிருந்து 75 அடி) 19-5. லிருந்து 22-5 மீட்டர் நீளமும், (7 அடி) 2-1 மீட்டர் அகலமும், (3 அடி) 90 செ. மீ. ஆழமும் உள்ள ஓர் அகழியைத் தோண்டியது. அப்போலோ 12ஆம் 14 ஆம் அமைத்த நில அதிர்ச்சி மானிகள் (Seismograph) அது விழுந்ததால் நேரிட்ட அதிர்ச்சியைப் பதிவுசெய்து காட்டின.

இனி, அப்போலோ-14 என்ற தாய்க்கப்பல் அம்புலியின் சுற்று வழியிலிருந்து விடுபட்டு (2,50,000 மைல்)4,00,000 கி.மீ. பயணம் செய்து பூமியை வந்தடைய வேண்டும். திரும்பும் பயணத்தில் யாதொரு சீர்கேடுமின்றி அப்போலோ-14 தென் அமெரிக்க சாமோவாவிற்கு 1,406 கி.மீ. தெற்கில் பசிபிக் மாகடலில் வந்திறங்கியது. விண்வெளிக் கலம் இறங்கியபொழுது வானம் மப்பின்றித் தெளிவாகவே இருந்தது. மீட்புக் கப்பலொன்று அவர்களை ஏற்றுக் கொண்டது. ஹெலிகாப்டர் ஒன்று அவர்களை ஏற்றிக் கொண்டு சென்று நியூ ஆர்லியன்ஸில் ஒரு குவாரண்டைன் வண்டியில் தனிமையாக இருக்க ஏற்பாடு செய்தது. மீண்டும் ஒரு ஹெலிகாப்டரில் ஏறி மறு நாள் ஹூஸ்டன் அருகிலுள்ள விண்வெளி மைய இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பிப்ரவரி 26ஆம் தேதி வரை ஆய்வகத்தில் குவாரண்டைனில் இருந்தனர். அவர்களுடன் வந்த கற்களும் சோதனைக்கு உட்படுத்தப் பெற்றன.

இந்த அப்போலோ-14 பயணத்தைத் தத்துவக் கண் கொண்டு நோக்கிய விண்வெளி வீரர் எட்கார் மிட்செல் சொன்னார் : "மனிதன் முழு நிறைவு பெற்றவன். ஆகவே, அறிவியலைச் சமயத்தினின்றே அல்லது மானிட இனத்தினின்றோ பிரித்துப் பார்ப்பதற்கு நான் ஒருப்படேன். அஃது எல்லாம் நிறைந்த மீன்களைக் கொண்ட ஒரு பெரிய கொதி கலன்“ என்பதாக. அரசியலும் முன்னேறும் தேசிய ஆசைகளும் கலந்தால் உண்மையில் அது மீன்களைக் கொண்ட கொதிகலனே என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.


  1. 1971ஆம் ஆண்டு பிப்பிரவரி முதல் நாள் (திங்கட் கிழமை) இந்திய நேரப்படி 02-82க்குத் தொடங்கப் பெற்று 10 ஆம் தேதி (புதன் கிழமை) இந்திய நேரப்படி 02-34க்கு நிறைவு பெற்றது.