அம்புலிப் பயணம்/அமுதளிக்கும் அம்புலி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்புலிப் பயணம்

1. அமுதளிக்கும் அம்புலி

நினைப்பிற்கும் எட்டாத நெடுங் காலமாகவே இரவு நேரத்தில் ஒளியை அளித்து மக்களுக்குக் களிப்பினை ஊட்டி வரும் சந்திரன் அவர்கள் கவனத்தைக் கவர்ந்து வந்திருக் கின்றான். பால் மணம் மாறாப் பச்சிளங் குழவிகளும் வான் மதியின் அழ்கில் ஈடுபட்டுக் களிப்படைவதை நாம் இன்றுங் காணலாம். இளவேனிற் காலத்தில் மப்பு மந்தாரம் இல்லாத இரவு நேரத்தில் தாய்மார்கள் தங்கள் குழவிகளை ஏந்திக் கொண்டு அம்புலியைக் காட்டி அகமகிழச் செய்வது இன்றும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வருகின்றது. அவர்கள் குழவிகட்கு விசும்பில் 'தகதக' என்று ஒளிவிட்டுத் திகழும் நிலவினைச் சுட்டிக் காட்டி,

"நிலா நிலா வா வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டுவா"[1]

என்ற பாடலால் மகிழ்வித்துக் கொண்டு வருவதை இன்றும் நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும்.

எல்லா நாட்டுக் கவிஞர்களும் சந்திரனின் வனப்பில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து இனிய பாடல்களை ஆக்கியுள்ளனர், தமிழ்மொழியில் 'பிள்ளைக்கவி' என்று வழங்கப்பெறும் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் மிகவும் பேர்போனவை. தமிழ் இலக்கியத்தில் இத்தகைய பாடல்கட்கு முதன் முதலில் வித்திட்டவர் தாயுள்ளம் படைத்த பெரியாழ்வார் என்ற வைணவப் பெரியார். தான் யசோதைப் பிராட்டியாக நின்று பேசும் தேனூறும் பாடல்கள் சிந்தைக்கும் செவிக்கும் வாய்க்கும் அமுதாகத் தித்திக்கின்றன.

ஒருநாள் மாலை நேரம். தெற்றியில் சுட்டி அசையத் தவழ்ந்து போகின்றான் கண்ணன் என்ற குழந்தை; இடுப்பில் -சதங்கைகள் 'கிண்கின்' என்று ஒலிக்கப் போய்ப் புழுதி அளைகின்றான். "என்னடா கூத்து, கையெல்லாம் புழுதியாக்கிக் கொண்டு?“ என்று சொல்லிக் கொண்டே குழந்தையின் குறும்புச் செயல்களில் குதூகலம் அடைந்தவவாளாகிறாள் யசோதை. இந்திலையில் வானத்தில் சந்திரன் தோன்றுகின்றான்; அன்று பௌணமி. சந்திரனைக் கண்டதும், "அடே சந்திரா, கண்ணனின் கூத்தை நீயும் பார்க்க வந்து விட்டாயா? நல்லது, பார்த்துப் போ“ என்கின்றாள் தாய்.

புழுதியைத் துடைத்துக் குழந்தையை ஒக்கலில் வைத்துக் கொள்கின்றாள் யசோதை. வத்துக் கொண்டதும் அமுதபானம் செய்தது போல் ஆனந்த வெறி ஏற்படுகின்றது அன்னைக்கு. "எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்“ என்று பூரித்துப் போகின்றாள். சந்திரனைக் கண்டதும் கண்ணன் கைகளை நீட்டுகின்றான், "என் செல்வம். என் சிறு குழந்தை, தன் அருமைச் சிறு கரங்களைக் காட்டி அழைக்கின்றான் ; இரண்டு கைகளாலும் அழைக்கின்றானே! எத்தனை தரம் அழைக்கின்றான், பார்! 'விளையாட வா“ என்று அழைக்கின்றான். ஏ, சந்திரா ! உனக்கு ஆசை இல்லையா, இவனோடு விளையாடுவதற்கு?“ என்று கொஞ்சுகின்றாள் ; கெஞ்சவும் செய்கின்றாள். குழந்தையும் தன் மழலை முற்றாத இளஞ் சொல்லால் 'அம்புலி அம்மா! வா, வா!“ என்று கொஞ்சி அழைக்கின்றான் சந்திரனை.

இந்தச் சமயத்தில் சந்திரன் மேகத்தினுள் மறைந்து போகின்றான். உடனே யசோதை.

"மஞ்சில் மறையாதே மாமதி!
மகிழ்ந்து ஓடி வா“[2]

என்று வேண்டுகின்றாள். “அந்தத் திரைக்குள்ளே மறைத்து ஓடாதே, அப்படி எல்லாம் 'பிகு' பண்ண வேண்டாம், ஓடிவா“ என்றெல்லாம் மறைந்து கொண்டிருக்கும் 'அம்புலி மாமா' வோடு பேசுவது போல் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் போதே மேகத்திலிருந்து மறுபடியும் வெளிப் படுகின்றது முழுமதி ; இப்போது அது முன்னிலும் அழகாய்த் தோன்றுகின்றது. அந்தச் சந்திர வட்டத்தையும் தன் கண்மணி போன்ற கண்ணனின் முகச் சந்திரனையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றாள் யசோதை. கண்ணன் கை நீட்டிய வண்ணம் 'ஆம்புலி மாமா'வைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றான்.

“கைத்தலம் நோவாமே
அம்புலி! கடி{து)ஓடிவா!“[3]

என்று பரிந்து தாயும் சிபாரிசு செய்கின்றாள். இங்ஙனம் தாய் சொல்லக் குழந்தை ஒக்கலில் இருந்த வண்ணம் அம்புலியை விரலால் சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக் கின்றான். இங்ஙனம் பெரியாழ்வார் காட்டும் காட்சிகள் பல.

மேற்கூறியவாறு கவிஞர்கள் சந்திரனின் அழகில் ஒரு வகையில் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருக்க மற்றெரு வகையில் அறிவியலறிஞர்கள் தொலை நோக்கிகனாலும் (Telescopes) பிற வகையாலும் அதனை ஆராய்ந்த வண்ணம் இருந்து வருகின்றனர். இந்த விதமாகத்தான் இன்றுள்ள வான நூல் {Astronomy) வளர்ந்தது. சந்திரனுடைய அமைப்பு, அங்குள்ள தீர்வளம், நிலவளம், உயிர்வாழ் பிராணிகள் முதலியவை பற்றி ஓரளவு அறிந்து கூறியுள்ளனர் வான நூற் புலவர்கள்

கடந்த பதினைந்து ஆண்டுகளாக மனிதன் சந்திரனுக்கும் போய்த் திரும்பிவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றான். 1968ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாள் அன்று அமெரிக்காவின் மூன்று விண்வெளிவீரர்கள் அப்போலோ-8 என்ற விண்வெளிக் கப்பலில்[4] சென்று சந்திரனுக்கு 111 கிலோ மீட்டர் அருகில் இருந்து கொண்டு அதனைப் பத்துத் தடவைகள் வட்டமிட்டுத் திரும்பினர். அடுத்து இயக்கப் பெற்ற[5] அப்போலோ-9 சந்திரனில் இறங்கும் ஒத்திகையின் ஒரு பகுதியை வெற்றியுடன் செய்து முடித்தது. சந்திரனின் தரையில் இறங்குவதற்கென்று அமெரிக்கா உருவாக்கியுள்ள அம்புலி ஊர்தியைத் (Lunar Module) தாய்க் கலத்தினின்றும் பிரிப்பதும் பின்னர் இணைப்பதுமான, சோதனை பூமியின் சுற்று வழியிலேயே செய்யப்பெற்றது. ஆயினும், சந்திரனில் இறங்கும் பொழுது செய்ய வேண்டியனயாவும் இச் சோதனையில் செய்து பார்க்கப் பெற்றன. அப்போலோ-10 பயணத்தில்[6] அப்போலோ-II பயண விண்வெளி வீரர்கள் - பாதுகாப்பாக இறங்க வேண்டிய நல்ல இடம் கண்டறியப் பெற்றது. அடுத்து மேற்கொள்ளப்பெற்ற அப்போலோ-11 பயணத்தில்[7] பயணத்தின் ஆறாம் நாள் (சூலை - 21} விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் முதன் முதலாகத் தன் காலடியை வைத்து அம்புலியில் இறங்கி "அம்புலியின் முதல் மனிதன்" என்ற அழியாப்புகழ் பெற்றார். இந்த மாபெரும் நிகழ்ச்சி நிறைவேறுவதற்கு மானிட இனம் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றி அடுத்துவரும் இயல்களில் காண்போம்.


  1. குழந்தைப் பாடல்.
  2. பெரியாழ்வார் திருமொழி 1, 4:2.
  3. பெரியாழ்வார் திருமொழி, 1. 4: 5.
  4. 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் இயக்கப்பெற்றது.
  5. 1969ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 3 ஆம் நாள்.
  6. 1969ஆம் ஆண்டு மேத் திங்கள் 18-ஆம் நாள்.
  7. 1989 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 16ஆம் நாள் தொடங்கப் பெற்றது.