அம்புலிப் பயணம்/நாம் வாழும் பூமி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


3. நாம் வாழும் பூமி

சூரிய மண்டலத்தில் உலவி வரும் கோள்களில் பூமி ஒன்று என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். இந்தப் பூமியின் இயற்கை அமைப்பு, தட்ப - வெப்பநிலை, தாவர இனங்கள், பிராணி இனங்கள் முதலியவைபற்றிக் கீழ் வகுப்புக்களில் பூகோளம், அறிவியல், வரலாறு முதலிய பாடங்களில் ஓரளவு அறிந்து கொண்டுள்ளோம். மேலும், சில புதிய செய்திகளை இங்குத் தெரிந்து கொள்வோம்.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். அது பந்தைப் போல் கிட்டத்தட்ட உருண்டையாக உள்ளது. அதன் குறுக்களவு 12,203 கி.மீ. அது 1,488 இலட்சம் கி.மீ.

படம். 2: பூமியின் அச்சு சாய்ந்திருப்பதை விளக்குவது


தொலைவில் சூரியனை - 365 நாட்கள் 5 மணி 9. நிமிடம் 9.54 விநாடிக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. இதையே நாம் ஆண்டு என்று வழங்குகின்றோம். பூமியும் தன் அச்சில் 23 மணி 56 நிமிடம் 4.1 விநாடிக்கு ஒருமுறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுகின்றது. இதனையே நாம் நாள் என்று வழங்குகின்றோம். இவ்வாறு அது தன் அச்சில் சுழல்வதால்தான் பகலும் இரவும் உண்டாகின்றன. இந்தப் பூமியை விட்டு விண்வெளியில் பயணம் செய்யும் இராக்கெட்டுப் பயணிக்கு இரவு பகல் என்ற வேற்றுமையே இராது. பூமி சூரியனைச் சுற்றிவரும் வழி ஒரே தளத்தில் உள்ளது. பூமியின். அச்சு அத்தளத்திற்குக் கிட்டத்தட்ட 670 அளவுள்ள கோணத்தில் சாய்ந்துள்ளது. பூமி சூரியனை வலம் வருங்கால் எப்பொழுதும் அதன் அச்சு ஒரே திசையில் சாய்ந்திருப்பதைப் படத்தில் கண்டு தெளிக.

செப்டம்பர் மாதத்தில் சில மாதங்களில் சூரியனின். தோற்றம் முதல் அதன் மறைவுவரையில் உள்ள நேரம் சற்றுக் குறைவாக உள்ளது. அங்ஙனமே, மார்ச்சு மாதத்திற்குமேல் சில மாதங்களில் அந்நேரம் அதிகமாக இருக்கின்றது. இவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்ன ? பூமியின் அச்சு அது செல்லும் தளத்திற்குச் சாய்ந்திருப்பதே இதற்குக் காரணமாகும். அங்ஙனமே,, ஓர் ஆண்டில் கார் காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என்ற பருவங்கள் நேரிடுவதற்கும் இந்தச் சாய்வே காரணமாகும்.

பூமியைச் சுற்றிலும் காற்றினாலாகிய உறை ஒன்று சூழ்ந்துள்ளது. அறிவியலார் அதனை வளி மண்டலம் அல்லது காற்று மண்டலம் (Atmosphere) என்று வழங்குவர். அதில் உயிரியம் (oxygen), நைட்டிரஜன் (Nitrogen) என்ற மந்த வாயு, கரியமில வாயு, நீராவி முதலிய பல வாயுக்கள் கலந்துள்ளன. இந்தக் காற்று மண்டலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 320 கி.மீ.வரை பரவியுள்ளது. இது தரை மட்டத்தில் அடர்த்தியாகவும், மேலே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்தும் உள்ளது, காற்று மண்டலத்தின் பெரும் பகுதி (99 விழுக்காடு) 32 கி.மீ. உயரத்திற்குள்ளாகவே அமைந்து கிடக்கின்றது.

காற்று மண்டலம் இல்லாவிட்டால் தாவரங்களோ, அல்லது பிராணிகளோ பூமியில் உயிர்வாழ முடியாது. உயிர் வாழ்க்கைக்குத் தனிப்பட்ட உயிரியம் வேண்டும். அங்ஙனமே, தாவர வாழ்க்கைக்குக் கரியமில வாயு மிகவும் இன்றியமையாதது. காற்று மண்டலம் இல்லை என்றால் இந்த இரண்டு வாயுக்களும் இருக்க முடியாது. காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் விண்வெளியில் (Space) தப்பி ஓடிவிட்டால் பூமியில் உயிர்வாழ் பிராணிகளும் தாவரங்களும் அற்றுப் போகும். இதைக் கேட்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அந்த வாயுக்கள் அங்ஙனம் தப்பி ஓடமுடியாது. ஏனென்றால், பூமி தன் ஈர்ப்பு ஆற்றலால் அவற்றைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டுள்ளது.

காற்று மண்டலம் ஒரு போர்வை போல் பூமியைச் சூழ்ந்து கொண்டு நமக்குப் பல நன்மைகளைப் புரிந்து வருகின்றது. முதலாவது : சூரியனிடமிருந்து வரும் புற ஊதாகக் கதிர்கள் (Ultra - violet rays) பூமியில் அதிக அளவில் படியாதவாறு பாதுகாக்கின்றது. இரண்டாவது : வானவெளியி விருந்து வரும் விண்கற்களில் (Metaorites) பெரும்பாலானவை பூமியில் விழாதவாறு தடுக்கின்றது. மூன்றாவது : அண்டக் கதிர்கள் (Cosnic rays ) பூமியில் அதிகம் தாக்காதவாறு தடுத்து நிற்கின்றது. நான்காவது : பூமியினின்று சூரிய வெப்பத்தால் மேலேலும் நீராவியைத் திரும்பவும் மழையாகப் பொழியச் செய்து நீராகத் தருகின்றது. ஐந்தாவது : காற்று மண்டலம் இல்லாவிடில் பகல் நேரத்தில் தாங்க முடியாத சூரிய வெப்பம் பூமியைப் பொசுக்கும்; இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிரால் நீர் நிலைகள் உறைந்து போகும். ஆனால், காற்று சதா இடம் விட்டு இடம் மாறி வீசிக் கொண்டு இருப்பதால் தட்ப - வெப்ப நிலையை ஒருவாறு சமப்படுத்து தின்றது. ஆறாவது : காற்றிற்கு வெப்பத்தைக் கடத்தும். ஆற்றல் மிகக் குறைவாதலால் இரவு நேரத்தில் பூமி தன் வெப்பத்தை விரைவில் இழப்பதில்லை. இதனால் அது பூமியின் மேற்பரப்பை வெது வெதுப்பாக வைத்துக்கொள்வதற்கேற்ற ஒருகனத்த கம்பளம்போலச் செயற்படுகின்றது. வானத்தில் காணப்பெறும் விண்மீன்கள் (Stars) 'மினுக் மினுக்'கென்று மின்னுவதும் இக்காற்று மண்டலத்தின் விளைவேயாகும். விண்மீன் ஒரு புள்ளி போன்றது. அதிலிருந்து வரும் ஒளிர்க்கதிர் சதா சலனமடையும் காற்றில் அங்குமிங்கும் திருப்பப் பெறுகின்றது. இதனால் விண்மீன் சில சமயங்களில் நமக்குத் தென்படுகின்றது. சில சமயம் மறைகின்றது. இதுவே மினுக்கிடுவதுபோல் தோன்றுகின்றது. வெண்ணிறச் சூரிய ஒளியில் அடங்கியுள்ள ஏழு நிறங்களும் வெவ்வேறு அளவாக முறிக்கப் பெறுவதால், (Refracted) சில சமயங்களில் வெவ்வேறு நிறங்களும் மினுக்குவதோடு தென்படுகின்றன. விண்மீன் அடிவானத்திலிருக்கும்போது அதன் ஒளி அதிகமாகக் காற்றினூடே வரவேண்டியுள்ளது. இதனால் மினுக்கிடுவதும் அதிகமாகின்றது. பூமியிலிருந்து 320 கி.மீ. உயரத்தில் காற்று இல்லாததால் அந்த உயரத்தில் விண்மீன்கள் மினுக்கிடா. அந்த உயரத்தில் பயணம் செய்யும் விண்வெளி விமானிக்கு அவை புள்ளிகள் போலவே தோன்றும்.

சூரிய ஒளியைக் காற்றணுக்கள் சிதற, அடிக்கின்றன; இங்ஙனம் சிதற அடிக்கப்பெறும் ஒளியின் நீல நிறம் சிவப்பு நிறத்தை விட அதிகச் செறிவுள்ளது. இதனால் தான் ஆகாயம் நீல நிறமாகத் தோற்றம் அளிக்கின்றது. ஆனால், - 320 கி.மீ. உயரத்தில் காற்று இல்லையாதலின் அங்கு ஆகாயம் கறுப்பு நிறமாகத் தோன்றும். காற்றில் சிதறப் - பெறும் ஒளி விண்மீன்களின் ஒளியைவிட அதிகமாக இருப்பதால் பகல் நேரத்தில் அவை கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால், 320 கி.மீ. உயரத்தில் ஒளிச் சிதறல் இல்லை ஆகவே, அந்த உயரத்தில் சூரியன், சந்திரன், விண்மீன்கள் இவை யாவற்றையும் ஒரே சமயத்தில் காணலாம். இங்ஙனம் கண்டதாகவே இதுகாறும் விண்வெளிப் பயணத்தை மேற் கொண்ட விமானிகளும் கூறியுள்ளனர்.