அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/017-383
13. ஆங்கிலேய அரண்மனை உத்தியோகஸ்த்தர்காள் ஜாக்கிரதை ஜாக்கிரதை
சுயப்பிரயோசன சுதேசிகள் தோன்றி ஆங்கிலேயர் அரண்மனை உத்தியோகங்களை விட்டு விடுங்கோளென்றும் பூமியை உழுது பயிரிடுங்கள் என்றும் உங்களுக்குப் போதித்து வருவதாகத் தெரிகின்றோம்.
அவர்களுடையப் போதனைகளை நம்பி மோசம்போகாதீர்கள். இந்த சத்துருக்களுடைய இடுக்கங்களுக்குப் பயந்து நெட்டாலுக்குப்போய் சீவித்து வருகிறவர்களுக்கும் சீவனங்கெட்டிருக்கின்றது. இத்தகைய சீவன விருத்திகளையும் சத்துருக்களின் மித்திரபேதங்களையும் உணராமல் சுதேசீயம் சுதேசீயம் என்னும் சுயப்பிரயோசனக்காரர்களின் வார்த்தைகளை மெய்யென்று நம்பி மோசம் போவீர்களானால் உங்களுக்குப் போதித்துக்கொண்டே (தொழுக்கட்டை) சட்டத்தை ஏற்படுத்த யோசிக்கின்றவர்கள் துரைகள்வீட்டு உத்தியோகங்களை விட்டு நீங்கி பூமிவேலைக்குப் போய் பழய சத்துருக்களிடந் தொங்குவீர்களானால் கோலுங் குடுவையும் கொடுப்பதுடன், கழுமரங்களை நாட்டி வழுவிய வஞ்சங்களெல்லாந் தீர்த்துக்கொள்ளுவார்கள்.
பாப்பானுக்கு மூப்பான் பறையன் கேள்ப்பாரில்லாமற் கீழ்ச்சாதி ஆனானென்னும் பழமொழியுண்டு. அது சாத்தியமே. ஆதலின் இத்தேசத்தோர் போர்த்திருக்கும் பொய்ச்சாதிப் போர்வைகளை நீக்கிவிட்டு பார்ப்பான் பெண்ணைப் பறையனுக்கும், பறையன் பெண்ணைப் பார்ப்பானுக்கும் கொடுத்து பார்ப்பான் வீட்டு வாரிசை பறையன் வீட்டிற்கும், பறையன் வீட்டுவாரிசை பார்ப்பான் வீட்டிற்கும் பரிமாறிக்கொள்ளுவார்களானால் அக்காலந்தான் உங்கள் சத்துருத்துவம் விலகியதென்று எண்ணல் வேண்டும். அங்ஙனம் எண்ணுவதற்கும் சற்று சந்தேகமே.
அஃதேதென்பீரேல் - கல்வி மிகுத்த பாப்பார் தங்கள் விவேகமிகுதியால் பாப்பானுமில்லை பறையனுமில்லை எல்லோரும் மனிதசாதி என்றே வெளிவந்தபோதிலும் கல்வியற்ற செம்புத்தூக்கும் பார்ப்பார்கள் வெளிவந்து பாப்பாத்திக்கும் பறையனுக்கும் பிறந்தபிள்ளை தாப்பாள்சாதி என்றும், பறைச்சிக்கும் பாப்பானுக்கும் பிறந்த பிள்ளை நொறைச்சாதி என்றும் வகுத்து இன்னோர் மநு அதர்ம்மசாஸ்திரம் எழுதினாலும் எழுதிக்கொள்ளுவார்கள். ஆதலின் ஆங்கிலேயர்களாகும் துரை மக்கள் செய்துள்ள நன்றியை
மறவாதீர்கள் - மறவாதீர்கள். சுத்தஜலம் மொண்டுகுடிக்கவிடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள், மோசம் போகாதீர்கள். ஆங்கிலேயர்களாகும் துரைமக்களுக்கு ஏதேனும் இடுக்கம் நேரிடுமாயின் உங்கட் பிராணனை முன்பு கொடுத்து அவர்கள் இடுக்கங்களை நீக்கிவையுங்கள். அதுதான் அவர்கள் செய்துவைத்த நன்றிக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு. உங்கள் சத்துருக்கள் செய்த தீங்குகளை மறந்துவிடுங்கள். மித்துருக்கள் செய்த நன்றிகளை மறவாதீர்கள் - என்றும் மறவாதீர்கள்.
- 1:49; மே 20, 1908 -