அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/016-383

விக்கிமூலம் இலிருந்து

12. கனந்தங்கிய கருணாகரமேனோன் கலைக்டர்களுக்குள்ள
அதிகாரங்களைக் குறைக்கப் பார்க்கின்றார்

“பலப்பட்டரை சாதிக்கு பவுஷியமில்லை / குலங்கெட்ட சாதிக்குக் கோத்தரமில்லை.” எனும் பழமொழிக்கிணங்க இத்தேசத்து ஜில்லாக்களிலுள்ள அங்கங்களைத் தெரிந்தெடுத்துக் கலைக்டருடன் கலந்துபேசி அவர்கள் அபிப்ராயப்படி காரியாதிகளை நடத்துவது நலமென்னும் அபிப்பிராயம் கொடுக்கின்றார். அது சருவஜன சம்மதமேயாம். ஆனால் ஐயங்காரைச் சேர்ந்த ஒரு மெம்பர். ஐயரைச்சேர்ந்த ஒரு மெம்பர். குறுக்கு பூச்சு பாப்பானொரு மெம்பர். நெடுக்குப்பூச்சு பாப்பான் ஒரு மெம்பர் வந்து உழ்க்காருவார்களாயின் சிவன் கோவிலைச் சேர்ந்த ரெவினியூ காரியாதிகள் ஏதேனும் இருக்குமாயின் குறுக்குப்பூச்சு பாப்பான் நெறுக்கப் பிடிப்பார். விஷ்ணு கோவிலைச் சேர்ந்த ரெவினியு காரியாதிகளேதேனும் இருக்குமாயின் நெடுக்குப் பூச்சு பாப்பான் திடுக்கென்று எழுந்திருப்பார். ஐயங்கார்கள் அதிக வாசஞ் செய்யுங் கிராமங்களில் ரெவினியூ சம்பந்த காரியாதிகளேதேனும் இருக்குமாயின் ஐயங்கார் மெம்பர் அங்கலாய்த்தெழுந்து சிங்கநாதந்தொனிப்பார். கவுண்டர்களும் ரெட்டிகளும் அதிக வாசஞ் செய்யும் இடங்களில் ரெவின்யூ சம்மந்த காரியாதிகளேதேனும் இருக்குமாயின் ஐயங்காருக்குப் பத்திய மேற்பட்டால் பரிகாரம் ஏற்படும். பத்தியம் இல்லாவிடில் சத்தியம் பேசமாட்டார். இத்தகைய சாதிபேத சம்பிரதிகளுஞ் சமயபேத கம்பிளிகளும் நிறைந்த தேசத்தில் கலைக்ட்டர்களுக்குள்ள அதிகாரங்களைக் குறைத்து குடிகளை கூட்டிவைக்கப் பார்ப்பது கருணாகர மேனோனவர்களின் கவனக் குறைவேயாம்.

தனக்குள்ள நல்லெண்ணம்போல் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று எண்ணி தனதபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கின்றார் போலும். ஐயங்காரர் மீது ஐயங்காரர்களுக்கு நம்பிக்கைக் கிடையாது. ஐயர்கள்மீது ஐயர்களுக்கு நம்பிக்கை கிடையாது. இவ்வகை ஒற்றுமெய்க் கெட்டுவாழும் சுயப்பிரயோசன சோம்பேரிகளைக் கலைக்ட்டர்களுடன் கலந்துவிட்டால் அவர்களுடைய சுத்த எண்ணங்களும் கெட்டு குடிகளின் சுகங்களும் அற்று சுயப்பிரயோசன சோம்பேரிகள் சுகம் பெற்றுவிடுவார்கள்.

இவ்வகை அபிப்பிராயங்களை நமது கருணை தங்கிய இராஜாங்க ஆலோசனை சங்கத்தார் ஏற்காது கலைக்ட்டருக்குள்ள அதிகாரங்களை இன்னும் பலப்படுத்துவதுடன் சாதிபேதம் இல்லா சுத்தயிதயம் உடையவர்களுக்கே கலைக்ட்டர் உத்தியோகங் கொடுத்துக்கொண்டு வருவார்களாயின் சகல குடிகளுஞ் சுகம்பெற்று வாழ்வார்கள். நமது கருணாகரமேனோனவர்களும் இதையே அனுசரித்தல் வேண்டும்.

பிரிட்டிஷ் கலைக்ட்டர் அதிகாரமும் கிறிஸ்டியன் மிஷநெறிகள் கலாசாலைகளும் இல்லாமல் பலசாதி மெம்பர்கள் அதிகாரத்தில் மேனோனவர்கள் வாசித்திருப்பாராயின் இப்போது கொடுத்துள்ள அபிப்பிராயத்தை அப்போது மறந்தும் பேசமாட்டாரென்பது திண்ணம், திண்ணமேயாம்.

- 1:47; மே 6, 1908 -