அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/019-383

விக்கிமூலம் இலிருந்து

15. சுதேச சீர்திருத்தம்

எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாமென்னும் பழமொழிக்கிணங்க சுதேசிகளாகிய நாம் நமது சுதேசத்தை எவ்வகையில் சிறப்படையச் செய்யலாம் என்னில் சீர்திருத்தம் என்னும் பூமியை ஒற்றுமெய் என்னும் கலப்பையால் உழுது, சாதிகள் என்னும் கல்லுகரடுகளையும் சமயங்கள் என்னும் களைகளையும் பிடுங்கி, சமுத்திரத்தில் எறிந்துவிட்டு சகோதர ஐக்கியமென்னும் நீரைப்பாய்த்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை என்னும் வரப்பை உயர்த்தி, ஊக்கம் விடாமுயற்சி என்னும் எருவிட்டு, சருவசாதி சமரசம் என்னும் பரம்படித்து, இங்கிலீஷ் கல்வி, ஜப்பான் கைத்தொழில், அமேரிக்கன் அபிவிருத்தி பாவனை என்னும் விதைகளை ஊன்றி, அவன் சின்னசாதி இவன் பெரியசாதி எனக் குரோதம் ஊட்டும் சத்துருக்களாகிய பட்சிகள் நாடாவண்ணம், சகலரும் சுகமடையவேண்டும் என்னும் கருணை என்போனைக் காவல் வைத்து கல்வி, கைத்தொழில், யூகம் என்னும் கதிர்களை ஓங்கச்செய்யின் அதன் பலனால் நாமும் நமது குடும்பமும் நமது கிராமவாசிகளும் நம் தேசத்தோரும் சீர்பெறுவதுடன் தேசமும் சிறப்படையும்.

இத்தகைய சீர்திருத்தங்களை முதனோக்காது கனவான்களும் கல்வியாளரும் ஒன்றுகூடி சுதேசியம், சுதேசியம் என்னும் பெருங்கூச்சலிட்டுப் பணங்களைச் சேர்த்து மயிலாப்பூர் பொக்கிஷச்சாலை, திருவல்லிக்கேணி பொக்கிஷச்சாலை, வைத்திருக்கும் சுதேசிகளை நம்பாமல் ஆர்.த்நட்டை துடர்ந்த காரணமென்னோ. நம்மை நாம் நம்பாமைக்குக் காரணம் நமது செய்கை என்றே தீர்த்தல் வேண்டும்.

- 1:2; சூன் 26, 1907 -

தம்முடையச் செயல்களில் வித்தையின் பூரிப்பால் விழியில் கண்ணாடியிட்டு விளித்து நிற்பதும், சாதியின் பூரிப்பால் சாக்கடை நாற்றமறியாது சம்பிரதாயம் பேசுவதும், தனத்தின் பூரிப்பால் தன்னினம் பாராது தத்துவங் கூறுவதும், மதத்தின் பூரிப்பால் மல்லாந்துமிழ்ந்து மார்பை எச்சமாக்குவதும் ஆகியச்செயல்களை ஆராயுங்கால் கண்டு படிப்பது வித்தை, கொண்டுகாப்பது சாதி, விண்டுயீவது தனம், பண்டைகாப்பது மதமென்னும் உணர்வற்று, பி.ஏ. எம்.ஏ., முதலிய கெளரதா பட்டங்களைப் பெற்று தேச சீர்திருத்தங்களுக்கு ஆரம்பித்தவர்கள் தாங்களே முன்னின்று காரியத்தின்பேரிற் கண்ணோக்கம் வைத்து காரியாதிகளை முடிக்காமல் கலாசாலை சிறுவர்கள் பக்கமும் சீர்திருத்தத்தை விடுத்தபடியால் கன்றுகள் கூடி களம்பரிப்பதுபோல் தங்கள் சொந்த படிப்பையும் மறந்து வந்தேமாதரங்கூறி பந்துக்களைக் கண்கலங்கச் செய்துவிடுகின்றார்கள், இத்தகைய ஏதுக்களுக்குக் காரணம் யாரென்றால் சுதேச சீர்திருத்தக்காரர்களேயாம்.

இவ்வகைசீர்திருத்தக்காரர்கள் கலாசாலை மாணவர்களைக் கொண்டு சீர்திருத்தம் செய்யவேண்டுமானால் சிற்றரசர்களையும் ஜமீன்களையும் ஒன்றுகூட்டி பணங்களைச் சேர்த்து மாணவர்களை பிரவேசப்பரிட்சை மட்டிலும் வாசிக்கச்செய்து வியாபார யுந்தாதிகளையும், வியாபாரக் கணிதங்களையும், பதியவைத்து நமது தேசத்தில் அன்னிய தேசங்களிலிருந்து வந்து பென்னி கம்பனியென்றும், பெஸ்ட் கம்பனியென்றும் ஓக்ஸ் கம்பனியென்றும் வைத்துக் கொண்டு தங்கள் தேச சரக்குகளைக்கொண்டு இவ்விடத்தில் விற்பதும் நம்முடைய தேச சரக்குகளைக் கொண்டுபோய் அவர்களுடைய தேசத்தில் விற்பதும் ஆகிய செயல்களைப்போல் நாமும் நம்முடைய மாணவர்களுக்குப் பொருளுதவிச்செய்து அமேரிக்கா, ரோம், ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலிய தேசங்களுக்கு அனுப்பி இராமசாமி கம்பனி, முத்துசாமி கம்பனி, பொன்னுசாமி கம்பனி என்னும் ஒவ்வோர் கம்பெனிகளை ஏற்படுத்தி அத்தேசச் சரக்குகளை பிடித்தனுப்பி நமது தேசத்தில் விற்கவும் நமது தேசத்து சரக்குகளைக் கொண்டுபோய் அத்தேசங்களில் விற்கவும் அந்தந்த கம்பனிகளின் ஆதரவில் மாணவர்களை அனுப்பி வித்தைகளைக்கற்று வரச்செய்யவும் முயற்சிப்பார்களானால் அன்னியதேசங்களில் மாடமாளிகைகள் கூடகோபுரங்களுயர்ந்து சிறப்பதுபோல் நமது தேசமும் சிறப்புற்று விளங்கும். சீர்திருத்தக்காரர்கள் காரியத்தின் பேரில் கண்ணோக்கம் வைக்காமல் வீரியத்தின் விருதுகட்டிக்கொண்டு அன்னியதேச சரக்குகளை வாங்கக் கூடாதென்று

ஆயிரம் பெயர்க் கூச்சலிடுவதில் அன்னிதேச சரக்குகளைத் தருவித்து அதினால் சீர்பெறும் ஐயாயிரம் பெயர்களை ஆதரிப்பவர்கள் யார். துரும்புங் கலந்து தண்ணீரைத் தேக்குமென்னும் பழமொழிக்கிணங்க வியாபாரச் சிந்தையில் விரோதத்தைப் பெருக்குவதால் அன்னிய வியாபாரம் கெட்டு நம்முடைய முயற்சியும் நழுவும்.

- 1:3; சூலை 3, 1907 -

முயற்ச்சியுடையார் இகழ்ச்சி யடையாரென்னு முதுமொழிக்கிணங்க சீர்திருத்தக்காரர்கள் தாமெடுத்த முயற்சியில் கண்ணோக்கம் வைக்காமல் அன்னியதேச சரக்குகளை வாங்கக்கூடாதென்றும் அச் சரக்குகளை நெருப்பிலிட்டு கொளுத்துவதும் ஆகிய செயல்களை யாராயுங்கால் கைப்பணமிருந்தும் பட்டிணி, கலியாணம் செய்தும் சன்னியாசி என்பதுபோல் சுதேச சீர்திருத்தம் என்பதுபோய் சுதேச போர்வதமாக முடியும்போற் காணுகின்றது.......(மீதி தெளிவில்லை )

- 1:5; சூலை 17, 1907 -

பொது சீர்திருத்தத்தை நாடுவோர் தென்னிந்தியாவிலுள்ள சகலக்குடிகளும் நடுநிலமை நாடி சகலர் சுகத்தையும் கருதுகின்றார்களா அன்றேல் சுயப்பிரயோசனத்தைக் கருதி சுருசுருப்பிலிருக்கின்றார்களா என்பதேயாம். காரணம், இவ்விந்துதேசமானது ஆயிரத்தியைன்னூறு வருஷங்களுக்குமுன் நீர்வளம் நிலவளமோங்கி சகலகுடிகளின் அன்பின் பெருக்கத்தினாலும் நீதியின் ஒழுக்கங்களினாலும் ஒற்றுமெயுற்று, வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமாகும் சித்தசுத்தியினிற்கும் சுகவாழ்க்கையால் குடிகள் அரசர்களைப் பாதுகாத்தலும் அரசர்கள் குடிகளைக்காத்தலுமாகிய செயலுற்றிருந்தார்கள். அக்காலத்தில் மிலேச்சரென்னும் ஓர் கூட்டத்தார்கள் குமானிடரென்னுந் தேசத்தில் வந்து முதலாவது குடியேறி யாசக சீவனத்தால் பல இடங்களிலும் பரவி இத்தேசபாஷைகளையுங்கற்று தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி என மாறுபடுத்தி சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு தாங்களே உயர்ந்த சாதிகளென்றும் மற்றவர்கள் அவர்கள் சொற்படி அடங்கி நிற்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அடங்காமல் எதிர்த்தவர்களை தாழ்ந்த சாதியாரென்றும் வகுத்து தேசசிறப்பையும் ஐக்கியத்தையும் வேறுபடுத்தி தங்கள் சுயப்பிரயோசனத்தை விருத்தி செய்து வருங்கால் மகமதியர்கள் வந்து குடியேறி மற்றும் பாழாக்கினார்கள். அவர்களுக்குப்பின் கிரேக்கர் போர்ச்சுகீயர் பிராஞ்சியர் வந்து குடியேறினார்கள். இவர்களோ வேண்டிய பொருட்களை ஆராய்ந்து கொண்டு போய் தங்கடங்கள் தேசங்களைச் சிறப்பித்துக் கொண்டார்கள். கடைசியில் ஆங்கிலேயர் வந்து குடியேறினார்கள் இவர்கள் வந்து தங்கள் செங்கோல் நிருத்தி ஒரு தேசங்களைவிட்டு மறுதேசங்களுக்குப் போகுங் கப்பல் சுகங்களையும், இரயில் பாதை சுகங்களையும், வித்தியாசாலை சுகங்களையும், வைத்தியசாலை சுகங்களையும், உத்தியோக சுகங்களையும் கொடுத்து சகலரையுந் தங்களைப்போல் சுகமடையச்செய்து வருகின்றார்கள். இவ்வகை செங்கோலைப்பெற்ற ஆங்கில விவேகிகள் தங்களாற்கூடிய சீர்திருத்தஞ்செய்து சுத்திகரித்து வந்தபோதிலும் ஆயிரத்தைந் நூறு வருடங்களுக்கு முன் வந்து குடியேறிய மிலேச்சர்களாலும் சாதிகளென்னுந் துர்நாற்றங்களும்.......(வரிகள் தெளிவில்லை)

ஆடுகள் கசாயிக்காரனை நம்பி பின் செல்லுவதுபோல் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காய் நம்மையும் நமது தேசத்தையும் கெடுத்துவரும் சத்துருக்களைப்பின் பற்றுவோமானால்.

- 1:8; ஆகஸ்டு 7, 1907 -

தற்காலம் நாமடைந்திருக்கும் கிஞ்சித்துவ சுகமுங்கெட்டு சீரழிவது திண்ணம். ஆதலின் கல்வி கேள்விகளால் மிகுத்து சுதேச சீர்திருத்தத்தை நாடும் தேசாபிமானிகள் ஒவ்வொருவரும் இத்தேசம் யாரால்

க்ஷீணதிசையடைந்ததென்றும் தேசக்குடிகள் யாவரால் நசுங்குண்டு நாகரீகமற்றார்களென்றும் அவ்வகைக் கேட்டுக்குள் அமைந்தக் குடிகள் சிலர் யாவரால் கிஞ்சித்து சுகமடைந்து பூர்வநிலைகளை நாடுகின்றார்கள் என்றும் ஆய்ந்தோய்ந்து சுதேசியத்தை சீர்திருத்துவார்களாயின் சகலரும் சுகமடையலாம். அங்ஙனமின்றி பிள்ளையையுங்கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் சுயப்பிரயோசன சோம்பேரிகளுடன் பட்டு சுதேசிய சீர்திருத்தத்தை நாட்டுவது சேற்றில் நாட்டுங் கம்பம் போல் முடியும்.

அதாவது எடுத்துள்ள சீர்திருத்தங்களுக்கு அதிகாரிகளும் இதங்கி சுதேசிய சுகத்தை அருளிச்செய்வார்களாயின் தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடி சகலரையுங் கெடுத்து வாழ்வோர் இத்தேசத்திலுள்ள சகலருக்கும் யாங்களே மேலானவர்களாதலால் மேலதிகாரங்கள் யாவையும் நாங்கள் அநுபவிக்க வேண்டும் எனத் தங்கள் சுயசாதியோர் யாவரையும் ஒன்றாகச் சேர்த்து அதிகாரக்கூடங்களில் வைத்துக்கொண்டு மற்றவர்களைக் கோலுங்குடுவையுங் கொடுத்து அல்லோகல்லத்தி லலையச்செய்துவிடுவார்கள்.

அங்ஙனஞ் சுதேசிகள் என்போர் ஓர்வகைக் கூட்டத்தினரின்றி பலவகுப்பினராயுள்ளமெயால் ஒருவருக்கொருவரைத் தாழ்த்தியும் உயர்த்தியும் நிலைகுலைந்திடுவார்கள் என்று ஆலோசித்து சுதேசிகள் என்போர்க்கு இடங்கொடாமல் பிரிட்டிஷ் ராஜாங்கத்தை இன்னும் நிலைபெறச் செய்துவிடுவார்களாயின் சுயப்பிரயோசன சுதேசிகள் சமையோசித வேஷமிட்டு ஆரியவர்த்தத்தினின்று அவர்கள் அப்படிப் போனவர்கள் நாங்கள் இப்படி வந்தவர்களாதலின் இருவர்களும் ஒருவர்களென்னும் முறைக்கூட்டி அவ்வழியிலுந் தங்கள் சுயப்பிரயோசனத்தை வலுவு செய்து கொள்ளுவார்கள். மற்றவர்களோ ஈட்டி முனையில் உதைத்தவர்களைப்போல் இடுக்குண்டுப் புண்பட்டவர்களாய் தற்காலம் அடைந்திருக்குங் கிஞ்சித்து சுகத்தையும் பறிகொடுத்துப் பாழாகவேண்டிவரும்.

அதுவுமின்றி சுதேசிகள் எனச் சிலர் தோன்றி சுதேசியக் காண்டில், சுதேசிய மாச்சிஸ், சுதேசிய சோப், சுதேசியக் காகிதம், சுதேசியப் பென்சில், சுதேசிய சருக்கரைச் செய்து விற்பனைச் செய்வார்களாயின் இவற்றை ஐரோப்பியரும் யூரேஷியருமன்றி மற்றவர்கள் பெரும்பாலும் வாங்குவரோ. இல்லை, இல்லை. சிமிளி விளக்கு ஒன்று வாங்கினால் சீக்கிரத்தில் உடைந்து துட்டு சிலவாகும். ஒரு காசுக்குத் தகரக் குடுக்கைவாங்கி ஒருகாசுக் கிரசன் எண்ணெய் விட்டுத் தீபமேற்றி வாயிலும் புகை, நாசியிலும் புகை, வீட்டிலும் புகையை நிரப்பிக் கொள்ளுவோர் காண்டில் வாங்குவரோ. பைநிரம்பப் பணமிருந்தாலும் பக்கத்து வீட்டிற்கு நெருப்புக்குப் போகிறவர்கள் மாச்சிஸ் வாங்குவார்களோ. நல்லவெல்லம் வாங்கினால் மூன்றணா வீசை யாகும் பனைவெல்லம் வாங்குவது நலமென்போருக்கு அஸ்டகிராம் சருக்கரை உதவுமோ. ஓலை எழுத்தாணி விசேஷமென்போருக்குக் காகிதம் பென்சில் கைநிரம்புமோ.

- 1:12; செப்டம்பர் 4, 1907 -

நெல்லஞ்சோற்றுக்குக் கடித்துக்கொள்ளப் பதார்த்தம் வேண்டுமோ என்போருக்கும், பணஞ் சிலவிட்டு பெட்டி வாங்குவானேன். வஸ்திரங்களைப் பானைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்போருக்கும், மில் துணிகள் வாங்கிக் கட்டுவது எங்களுக்கு வழக்கங் கிடையாது, காடா துணிகளே வேண்டும் என்போருக்கும், கோதுமை உரொட்டி எங்களுக்குப் பிடியாது சோளரொட்டிதான் சுகமென்போருக்கும், பஞ்சு தலையணை வைத்து படுப்பதில் நித்திரைவாராது தலைக்கு மணையைவைத்துப் படுப்பதே குணம் என்போருக்கும், பணஞ்சிலவிட்டு விறகு வாங்குவானேன் இலைகளைக்கூட்டி எரிப்பதே இதம் என்போருக்கும், வண்ணானுக்கு வஸ்திரம் போடுவது வீண்சிலவு வீட்டில் துவைப்பதே வழக்கமென்போருக்கும், பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தாலும் பதிங்காதவழியில் ஓரணா பிச்சைக் கொடுக்கின்றார்கள் என்றால் இடுப்புத்துணியை இறுகக் கட்டிக்கொண்டு இரப்பெடுக்க ஓடி யாசகம் வாங்குபவருக்கும் சுதேசகாண்டில் - சுதேச சோப் - சுதேச மாச்சிஸ்

- சுதேச சருக்கரையால் சுகமுண்டாகுமோ, இவர்களதை வாங்கப்போகிறதுமில்லை அதினாற் சுகமடையப்போகிறதுமில்லை.

அண்டைவீட்டுக்காரனும் அயல்வீட்டுக்காரியும் ஆர்பத்நாட்டில் பணத்தைப்போட்டு அடியோடு கெட்டதுபோல் சும்மாயிருந்த பணத்தை துர்த்தர் கையில் கொடுத்து சூதன் கொல்லையில் மாடுமேய்வதை சுற்றிப் பார்த்திருப்பதுபோல் சுகமற்றுப்போம்.

பூர்வம் இத்தேசத்தில் நல்வாய்மெய் - நற்சாட்சி - நற்கடைபிடி நல்லூக்கம் - நல்லுணர்ச்சி - நாகரீக மிகுத்திருந்த குடிகள் யாவருஞ் சீரழிந்து சிந்தை நைந்திருக்கின்றார்கள். சீரற்றிருந்த குடிகளிற் சிலர் நாகரீக முற்றிவருகின்றனர் இவர்கள் பெற்றுள்ள நாகரீகத்தால் சுதேசீயம் சீர்பெறுமென்பது சுத்த பிசகு. பூர்வம் நாகரீகத்திலிருந்து தற்காலம் சீரழிந்து இருப்பவர்கள் எக்காலம் சுகமுறும் வாழ்க்கைப் பெறுவார்களோ அக்காலத்தில்தான் சுதேசிய நாகரீகந்தோன்றி சுதேசப் பொருட்களை அநுபவிக்கும் சுகத்தைக் காணலாம். காரணம் சாதி பேத பொறாமெயும் சமயபேத பொச்சரிப்புமேயாம். சாதிபேதங்கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகாருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.

அதாவது சென்ற மாதம் இராயப்பேட்டைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே ஓர் சிறுவன் மின்சார வண்டியில் சடுதியிலகப்பட்டு மரணமடைந்தான். அவனை சுற்றி நின்ற சுதேசிகள் அவனென்ன சாதிப் பையன், யார்வீட்டுப் பையன் என்று விலகி நின்றார்களன்றி நெருங்கினவர்கள் கிடையாது. யூரேஷிய இன்ஸ்பெக்ட்டர் ஒருவர் அப்பையனைத் தாவியெடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டுபோக நேரிட்டது. இவ்வகைச் செயலால் சுதேசிகள் என்போர் சீவ காருண்ணியரா, பரதேசிகள் என்போர் சீவகாருண்ணியரா, விவேகிகளே விளக்குவார்களாக.

சமயபேதப் பொச்சரிப்பைக் காண வேண்டுமாயின் தற்காலம் ஸ்ரீரங்கத்தில் நடந்துவரும் ஆழ்வார்சாமி வியாக்கியமே அத்தியந்தச் சான்றாம்.

- 1:15: செப்டம்பர் 25, 1907 -

இதுகாரும் எழுதிவருஞ் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக விளங்குகின்றது.

நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. கதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்துவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி வெளியிட்டிருக்கின்றோம்.

சுதேசசுகத்தை நாடாது பரதேசிசுகத்தை நாடுதுமாயின் பரதேசிகளுக்குப் பல்லாண்டு கூறி அடியிற்குறித்த உபகாரங்களை அலங்கரித்திருப்போம்.

- அதாவது -

பி.ஏ, எம்.ஏ., முதலிய பட்டங்களைப் பெற்று பெருத்த உத்தியோகங்கள் அமர்ந்து பெண்சாதி பிள்ளைகளுடன் சுகித்து வாழும் படிப்பைக் கொடுத்தவர்கள் பரதேசிகளன்றோ. வீதியிற்சென்று உலாவுஞ் சுகமளித்தவர்கள் பரதேசிகளன்றோ. தீபசுகமளித்து தெருவுலாவச் செய்தவர்கள் பரதேசிகளன்றோ. சுத்தஜலமளித்து நித்த சுத்தமடையச் செய்தவர்கள் பரதேசிகளன்றோ. தூரதேச பந்துக்கள் சங்கதியை தந்தியாலறியச் செய்தவர்கள் பரதேசிகளன்றோ.

இருப்புப்பாதை வண்டியிலேறி விருப்பமுடன் செல்ல வைத்தவர்கள் பரதேசிகளன்றோ.

பாதரட்சையை சிலரணியலாம் சிலரணியலாகாவென்னும் பற்கடிப்பை போக்கி சகலரும் பாதரட்சையணிய சுகமளித்தவர்கள் பரதேசிகளன்றோ.

சகலரையும் வண்டி குதிரையேறி சுகமடையச் செய்தவர்கள் பரதேசிகள் அன்றோ.

பற்பல வியாதியஸ்தர்களுக்கும் மருந்தளித்து பாதுகாப்பவர்கள் பரதேசிகளன்றோ, என்று அவர்கள் அளித்துள்ள மற்றுஞ் சுகங்களை

விளக்குவதுடன் இஸ்பென்சர், ஒக்ஸ், பெஸ்ட், பென்னி, அசயில பரதேசிகளால் உண்டாகும் பல சுகங்களையும் பரக்க விளக்கி புத்தகருபமாக்கி பிரசுரித்திருப்போமென்பதே.

அங்ஙனமின்றி சுதேசீய சுகத்தை நாடிய விவேகமிகுத்த பெரியோர்களும் கலாசாலை சிறியோர்களும் கலக்கமுறுவதைக்கண்டே கவலையுற்று சுதேசி மறுப்பகற்றி திருத்தமெழுதி வருகின்றோம்.

அவ்வகை சீர்திருத்த வாக்கியங்களில் ஒருமனிதன் தவறி கிணற்றில் விழுந்தானென்றால் சகலரும் ஏற்றுக்கொள்ளுவர். அங்ஙனமின்றி தானே விழுந்தானென்றால் அதனிலையை அன்னோர் சார்பினரே தெரிந்துக் கொள்ளல் வேண்டும்,

பரோடா அரசனும் ஜப்பான் சக்கிரவர்த்தியும் சுதேசீய செயல்களை மறுத்து மதிகூறியுள்ளப் பிரசங்கங்களையும் வரைந்துள்ள பத்திரிகைகளையும் பார்வையிட்டிருப்பரேல் யாமெழுதிவரும் சீர்திருத்தம் மறுப்பா அன்றேல் விருப்பா என்பது வெள்ளென விளங்கும்.

சுதேச சுகத்தை நாடும் நாம் நீண்ட விரோதத்தால் சுதேசியத்தை நிலைநிறுத்தல் கூடுமோ ஒருக்காலும் கூடா.

நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் சுதேசியத்தை நிலைபெறச் செய்து நித்திய சுகத்தைத் தருமென்பது சத்தியம்.

- 1:16; அக்டோபர் 2, 1907 -

சீரதுதிருத்தம் செய்யிற்றே வருத்துணைகொண்டுருஞ்
சீரதுதிருந்தச் செய்யில் தேசமுஞ் சிறப்பை யெய்துஞ்
சீரது திருந்தச் செய்யில் செய்தொழில் விருத்தியாகுஞ்
சீரது திருந்தச் செய்யில் செல்வமு மிகுதியாமே.
அவசரச் செய்கையாவு மாற்றலற் றவதிசெய்யும்
அவசரச் செய்கையாவு மாருயிர்க் கெடுதியாகும்
அவசரச் செய்கையாலே யருந்தொழிற் பாழேயாகும்
அவசரச் செய்கை முற்று மழவது திண்ணமாமே.
அந்தணர் நூற்ரும் அறத்திற்குமாதியாய்
நின்றது மன்னவன்கோல்.

அதாவது சத்திய தருமத்தைப் போதிக்கும் நூற்களுக்கும் தருமச் செயல்களுக்கும் முதன்மெயாக நிற்பது அரசர்களின் செவ்வியக்கோலென்று கூறியிருத்தலால் கருமச் செயல்களின் மீதும் அவர்கள் செவ்வியக் கோலிருத்தல் அவசியம். அங்ஙனம் நாமவர்களின் செவ்வியக்கோலைத் தழுவாது கொடுங்கோலுக்கு எதிர்நோக்கி கோதாட்டொழிற் புரிவதில் கொண்டுங் குறைவேயாம். கொண்டுங் குறைவாவதைக் கூட்டுதலினும் என்றும் நிறைவாவதே ஏற்ற சுகமாம். என்றும் சுகத்தை நாடுஞ் சீர்திருத்தக்காரர்களாகிய நாம் எல்லோர் சுகத்தையும் நாடி இதஞ்செயல்வேண்டும். எல்லோர் ஈடேற்றமுங் கருதி யீகைபுரிதல் வேண்டும்.

பிறர்நலங்கருதி பாடுபடும் பிரமுகர்களை நந்தேயத்திற் காணவேண்டுமாயின் நூற்றிற்கு ஒருவரோ இருவரோ காணலரிது. ஒருவர் குடியை உயர்த்திக்கொள்ளுவதற்கு நூறு குடிகளைப் பாழாக்குவது நந்தேயத்தோர் சுவாபம். இத்தகைய அநுபவத்தார் வெளிவந்து சகலர்களையுஞ் சீர்படுத்துகிறோம் என்றால் சருவக்குடிகளுஞ் சற்றேறப்பார்க்கின்றார்கள்.

அரசர்களின் கோரப்பார்வையாலும் குடிகளின் ஏறப்பார்வையாலும் எடுத்தவிஜெயம் ஈடேறுமோ, ஒருக்காலும் ஈடேராது என்பது சத்தியம்.

எங்ஙனமென்னில் ஓர் சீர்திருத்தக்காரன் வெளிவந்து பிரசங்கிக்குங்கால் சிலக்கூட்டத்தார் செவியில் நாராசங் காய்த்து விட்டதுபோல் (யீனப்பறையர்களேனும்) என வாய்மதங் கூறலை மற்றொருவன் கேட்டு (யீனப் பாப்பார்களேனும்) என மறுத்துக் கூறுவானாயின் ஒற்றுமெய் நிலைக்குமோ ஒருக்காலும் நிலைக்கா.

பெரியோர்கள் பிழைப்பட கூறுவரோ பிறழ்ந்துங் கூறார், நயம்படக்கூறி நானலம் பிறப்பர்.

யாகாவாராயினு நாவாகாக்காவாக்காச்
சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு.

பெரியசாதி என்று பெயர்வைத்துக் கொண்டபோதிலும், பி.ஏ; எம்.ஏ; பட்டம் பெற்ற போதிலும், பயிரங்க சீர்திருத்தப் பிரசங்கங்களில் தன் நாவைக்காவாமல் புண்படக்கூறுவார்களாயின் இழிவடைவார்களன்றி புகழடையார்கள். புகழடைவோர் புன்மொழிக் கூறி, சாத்திர சம்மதமாய் சகலரையுஞ் சன்மதிக்கச் செய்து எடுத்த காரியங்களை யீடேற்றஞ் செய்வார்கள்.

அங்ஙனமின்றி சாதிகர்வம், மதகர்வம், வித்தியா கர்வம், தனகர்வம், நான்கையுங் கைபிடித்துக்கொண்டு பொதுச் சீர்திருத்தம் செய்யப்போகின்றோம் என்றால் சிறப்புறுமோ, இல்லை.

சருவமக்களையுஞ் சோதரரென்றெண்ணி நல்வாய்மெய், நன்முயற்சி, நல்ஞானம், நற்கடை பிடியினின்று சீர்திருத்தத்தை நோக்குவோமாயின் சிறப்புற்று விளங்கும். விதவாப்பிரசங்க வேதாந்தியர்களாலும் சில்லரை பிரசங்க சித்தாந்தியர்களாலும் பாட்டுப்பிரசங்க பாரதியார்களாலுஞ் சொல்லும் பிரசங்கங்களால் சுதேசஞ் சீர்பெறுமோ, இல்லை.

வித்தையில் மிகுத்த மேனாட்டாரும், புத்தியில் மிகுத்த புண்ணியவான்களும், தனத்தில் மிகுத்த யீகையாளரும், சன்மார்க்கமிகுத்த சத்திவந்தர்களும் ஒன்றுகூடி சுதேச சீர்திருத்தம் எடுப்பார்களாயின் சத்தியமே நித்தியமாக நின்று சருவ சீர்திருத்தங்களும் நிலைபெறும்.

அவசரக்கோலம் அள்ளித் தெளித்து அந்தஸ்தில் மிகுத்த ஐயாமார்கள் சாலை சார்வதானால் அவர்களைப் பின்பற்றிய அப்பாமார்கள் மூலசேர வேண்டியது முற்றும்,

அரசையெதிர்த்தக் குடியும் ஆதர வற்றக் கொடியும் அடியழிந்து கெடுமென்னும் பழமொழிக்கிணங்க.

- 1:17; அக்டோபர் 9, 1907 -

நடப்பது பழிக்கும் பாவத்திற்கும் எத்தனமாகும். நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் நீதியும் அன்பும் சமரசமும் நிறைந்த பாதையை உலகெங்கும் காண்பது அரிது.

காரணம் நகரசீர்திருத்தக்காரரை முதலாவது விசாரிப்பாம்.

முநிசிபல் கமிஷனர்கள் முதல் குப்பைதொட்டிப் பியூன்கள் வரையிலும் உள்ளவர்கள் யார் சுதேசிகளா பரதேசிகளா.

கமிஷனர் உத்தியோகத்தை நாடிவீடுபோரும் வண்டிகளைக் கொண்டுவந்து அழைத்துப்போய் கையெழுத்து வாங்கிக்கொள்ளுகிறவர்கள் சுதேசிகளா பரதேசிகளா, சுதேசிகளேயாம்.

இத்தகைய சுதேசிகள் வண்டியைக் கொண்டுவந்து அழைத்துப்போய் கையெழுத்தை வாங்குங்கால் கண்ட கமிஷனரை குடிகள் மற்றகாலத்தில் ஏதேனும் கண்டதுண்டோ இல்லை. இந்த வீட்டிற்கு அவ்வளவு வரி போடலாம், அந்த வீட்டிற்கு இவ்வளவு வரி போடலாம் என்று கூறி வெளிவரும் முநிசிபல் உத்தியோகஸ்தர்களுடன் கலந்து இந்தக் கமிஷனர்களும் வந்து பார்வையிடுவதுண்டோ. அதுவுமில்லை, போட்ட வரியைக் கொடுத்து விட்டால் பின்னிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கா இக்கமிஷனர்களை ஏற்படுத்திக் கொண்டது.

பரதேசிகளைத் துரத்திவிட்டு சுதேசிகளைக் காப்பாற்றுகிறவர்கள் இவர்கள் தானோ, இல்லை இல்லை.

சுதேசிகளென்று வெளிவந்து பிரசங்கிக்கின்றார்களே அவர்கள்தான் கயவதிகாரங்களை நடத்துவார்கள் என்றாலோ, சென்றமாதம் 20உ ஆதிவாரம் மாலை இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவிலண்டை பிரசங்கித்த ஓர் சுதேசப் பிரசங்கியார் அவ்விடம் வந்துள்ளக் கூட்டத்தாரை நோக்கி நாங்கள் சுதேச சீர்திருத்தம் எவ்வளவு போதித்தும் நீங்கள் கவனிக்காமல் வெள்ளைப்பறையர்களால் நெய்த சல்லாத்துணியை வாங்கி உங்கள் பிரேதங்கள்

மீது போடுகின்றீர்களே சுதேசிய சல்லாக் கிடைக்கவில்லையா என்று பிரசங்கித்தாராம்.

அந்தோ! இப்பிரசங்கியார் வஞ்சம் வெள்ளைக்காரர்மீதுள்ளதா அவர்கள் சல்லாவின் மீதுள்ளதா. அன்றேல், பறையர்கள் மீதுள்ளதா. இதனந்தராத்தம் விவேகிகளுக்கே பரக்க விளங்கும்.

பறையன் எனும் மொழி பறை - பகுதி, யகர மெய் - சந்தி, அன் ஆண்பால் விகுதியாகக் கொண்டு பறையனென்பதில் வாய்ப்பறையடிப்பவனும் பறையன், தோற்றையடிப்பவனும் பறையனாக விளங்குகிறபடியால் பிரசங்கியாருக்கு அதனுட்பொருள் விளங்கவில்லை போலும்.

விளங்கியிருப்பின் யதார்த்த சீர்திருத்தக்காரர் ஏனைய சோதரரை இழிவு கூறுவரோ, இல்லை இல்லை, பிரரவங்கூறும் பேதை நிலையால் இவர்களை சுதேசநலம் கருதுகிறவர்கள் என்று எண்ணாது சுயநலம் கருதுவோர்கள் என்று எண்ணுகிறார்கள்.

பட்சபாதமின்றி பலர் பிரயோசனம் கருதி பாடுபடுவது சத்தியமாயின் பயிரங்கப் பிரசங்கங்களில் பறையர்களென்போரைத் தூற்றி பழியேற்க மாட்டார்கள்.

- 1:21; நவம்பர் 6, 1907 -

பழியை ஏற்று பாவத்துக்கு உள்ளாகும் காட்சியைக் காணவேண்டில் விழுப்புரத்துண்டாகிய வியசனமே போதுஞ் சான்றாம்.

காரணம் பழிக்கும் பாவத்திற்கும் மதத்துவேஷமும் சாதித்து வேஷமுமேயாம்.

இந்துக்களும் மகமதியர்களும் வாசஞ்செய்யும் வீதிகளில் கிறீஸ்து சுவாமிகளைக் கொண்டு வந்தால் என்ன, கிறிஸ்தவர்களும் இந்துக்களும் வாசஞ்செய்யும் வீதிகளில் மகமதியர் சுவாமியைக் கொண்டுவந்தால் என்ன, மகமதியர்களுங் கிறீஸ்தவர்களும் வாசஞ்செய்யும் வீதிகளில் இந்துக்கள் சுவாமியைக் கொண்டுவந்தால் என்ன. தத்தம் மதமே மதம். தத்தம் சுவாமியே சுவாமி என்று போற்றி மற்றோர் மதத்தைத் தூற்றி அதனால் சீவிப்பவர்கள் ஆதலின் ஒருவர் சிறப்பை மற்றவர் பொருக்கா மதத்துவேஷத்தால் மீளாசினமுற்று மண்டையோடு மண்டை உருளும்படி நேரிடுகின்றது.

இத்தியாதி கேடுகளுக்குஞ் சாதி பேதங்களே மூலமாகும். நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரியசாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, பணமுள்ளோன் பெரிய சாதி, பணமில்லான் சிறியசாதி, உழைப்புள்ளவர்கள் சிறியசாதி சோம்பேறிகள் பெரியசாதிகள் என்று சொல்லித் திரிவதுடன் தங்கள் தங்கள் சீவனோபாயங்களுக்காய் ஏற்படுத்தி உள்ள மதங்களுக்கு சார்பாயிருந்து வேண்டிய உதவி புரிபவர்கள் யாரோ அவர்கள் யாவரும் உயர்ந்த சாதியார்கள், தங்கள் சீவனங்களுக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கதை யாவும் கற்பனை என்றும் பொய் என்றும் கூறி யார் புறக்கணிக்கின்றார்களோ அவர்கள் யாவரும் தாழ்ந்த சாதியாரென்றும் வழங்கிவருவது சகஜம்.

மதத்தைக்கொண்டுஞ் சாதியைக் கொண்டும் சீவனஞ்செய்யுங் கூட்டத்தார் பெருந்தொகையாய் இருக்கின்றபடியால் சாதிகளுஞ் சமயங்களுமற்று தேசஞ் சீர்பெறப்போகிறதில்லை. இத்தேசத்தோர் சாதியையுஞ் சமயத்தையும் எதுவரையில் துலைக்காமல் இருக்கின்றார்களோ? அதுவரையில் தேசம் ஒற்றுமெய் அடையப்போகிறதும் இல்லை. இவர்களுக்கு சுயராட்சியங் கிடைக்கப்போகிறதும் இல்லை. சுயராட்சியமும் சுதேச் சீர்திருத்தமும் அடையவேண்டுமானால் இத்தேசத்தின் சுயமார்க்கம் எவை என்றறிந்து அதன்மேறை நடப்பார்களாயின் சுதேச சீர்திருத்தம் உண்டாகி சுயராட்சியமுங் கிடைக்கும்.

சீர்திருத்தங்களுக்கு மூலம் எவை என்று உணராமல் அன்னியதேச சரக்குகளை வாங்கப்படாது என்று (பைகாட்) பண்ணுவதினால் சுதேசஞ் சீர்பெறுமா. இவ்வகைக் கூச்சலிடுஞ் சுதேசிகள் உங்கள் சுவாமி எங்கள்

வீதியில் வரப்படாது, எங்கள் சுவாமி உங்கள் வீதியில் வரலாம் என்பது வந்தேமாதரத்தின் செயலாமோ. சாதி பொறாமெயை (பைகாட்) பண்ணாமல் ஏழைகளின் குடிசைகளைக் கொளிர்த்தி அவர்கள் சுவாமிகளின் ரதங்களையுங் கொளிர்த்தி அதனால் இவர்கள் (பைகாட்) நிலைக்குமோ ஒருக்காலும் நிலைக்கா. நமது தேசத்தோர் செய்கைகள் யாவும் ஆரம்பத்தில் அதி சூரம், மத்தியில் அதன் குறைவு, அந்தியில் அர்த்தநாசம் என்பது அனுபவமேயாம்.

ஆதலின் நமது தேசத்தார் தமக்குள்ள ஒற்றுமெய்க் குறைவையும், விவேகக் குறைவையும், தனக்குறைவையும், வித்தியாக் குறைவையும் உற்றுநோக்காமல் சாம - தான - பேத - தண்டம் என்னும் சதுர்விதவுபாயங் கண்டவர்களும், வித்தை - புத்தி - யீகை சன்மார்க்கம் நிறைந்தவர்களுமாகிய பிரிட்டிஷ் கவர்ன்மென்றாரைப் புண்படுத்துவது அவலமேயாம். நம்முடைய சொற்ப சோம்பலற்று கிஞ்சித்து வேகம் பிறந்திருப்பதும் அவர்களுடைய கருணையேயாம். அவ்விவேகத்தை மேலுமேலும் விருத்திபெறச் செய்து, செய்யும் நன்முயற்சிகளை ஆதியில் ஆய்ந்தோய்ந்தெடுத்து மத்தியில் வித்தியாவிருத்திகளைத் தொடுத்து அந்தியில் எடுத்தத் தொழில்களை முடித்துக் காட்டுவார்களானால் அதன் பலனை அனுபவிக்கும் குடிகள் யாவரும் இவர்களைக் கொண்டாடிக் குதூகலிப்பார்கள். அங்ஙனமின்றி வெறுமனே அரோரக் கூச்சலுஞ் கோவிந்தக் கூச்சலும் போடுவதுபோல் வந்தேமாதரம் கூறுவதில் யாதுபலன்.

பெரியசாதிகள் என்போர் புசிக்கும் பதார்த்தங்களாகும் அரிசி, பருப்பு, நெய், புளி முதலியவைகளைப் பறையனென்போன் தொடலாம் அவைகளைத் தூக்கலாம், கல்லினாலுஞ் செம்பினாலுஞ் செய்துள்ள சிலைகளை மட்டும் பறையன் என்போன் தூக்கப்படாது,

- 1:28; டிசம்பர் 25, 1907 -

பெரியசாதிகள் என்போர் புசிக்கக்கூடிய பதார்த்தங்கள் யாவையுஞ் செய்வதற்கும் தொடுவதற்கும் பேதமற்றப் பறையன் என்போன் செம்பு சிலைகளையும் பித்தளைச் சிலைகளையுந் தீண்டலாகாது, அவைகளை எடுத்துக்கொண்டும் ஊர்வலம் வரலாகாதென்னுங் காரணம் யாதென்பீரேல், ஊர்வலம் வருபவன் சிலாலயத்துள் செல்ல வேண்டி வரும். அவ்வகையில் உள்ளுக்குச் செல்லுவதினால் நாளுக்கு நாள் சிலாலயத்துள் செல்லும் வழக்கம் அதிகரித்து அதில் வைத்துள்ள அரசமரம் வேப்பமரத்தின் காரணங்கள் யாதென்றும் நிருவாண யோகசயன சிலைகளின் சரித்திரங்கள் யாதென்றும் கண்டுத் தெளிந்துப் பூர்வநிலையைப் பற்றிக்கொள்ளுவார்களென்னும் பீதியால் உள்ளே நெருங்கவிடாமல் துரத்திக்கொண்டிருந்த பழக்கமானது அவர்களைக் கண்டவுடன் தாழ்ந்தவர்களென்னும் பொறாமெயால் புறங்கூறிக்கொண்டு வந்தார்கள்.

இத்தகைய பொறாமேயால் நெறுக்குண்டு க்ஷீண திசையடைந்த குடிகளை கிறிஸ்துமதத்திற் பிரவேசித்து சொற்ப நாகரீகம் பெற்றும் பூர்வ நிலையை ஆராய்ந்து சீரடையாமல் என்பினால் செய்த சிலைகளையும் மரங்களினால் செய்த சிலைகளையும் இரதங்களில் வைத்து ஊர்வலம்வர ஆரம்பிப்பதைக் காணும் ஏனையோர் மனஞ்சகியாது கலகத்திற் கேதுவைத் தேடிவிடுகின்றார்கள். இவ்வகை ஒற்றுமெய்க் கேடாகுங் கலகங், கல்வியற்றவர்பாற் காணலாமா, கல்விபெற்றவர் பாற் காணலாமாவென்று உசாவுங்கால் உள்ள பொறாமெய் இருதிறத்தவர்பாலும் உண்டென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது.

அதாவது விழுப்புரத்தில் நேர்ந்த கலகம் கல்வியற்றவர்களே பெருக்கி விட்டார்களென்னும் வதந்தியிலிருந்தது. அவ்வதந்திக்கு மாறாய் 1907ம் வருடம் டிசம்பர் மாதம் கூடிய நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரின் கலகத்தை நோக்குங்கால் கல்வி பெற்றவர்களின் கலகமே கடும் போராயினவாம்.

இதுவரையிலுஞ் சொல்லிவந்த நாஷனல் காங்கிரஸென்னும் வார்த்தை சொல்லின் மயமாயிருந்தன்றி அநுபவத்திலில்லை என்பது காங்கிரஸ் கலைந்த கலகமே போதுஞ் சான்று.

எடுத்தவிஷயம் தொடுத்த முயற்சியினின்றும் சாதிபேத மதபேதங்களின் பிரிவால் முயற்சி கெட்டு இகழ்ச்சிக்குள்ளாகிவிட்டது.

பூர்வத்திலிருந்த ஆந்திர சாதி, கன்னட சாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதியென வெவ்வேறு பாஷைகளை சாதிக்குங் கூட்டத்தினராயிருந்தும் புத்தமார்க்கமென்னும் சத்தியதருமத்தைப் பின்பற்றி நின்றபடியால் அவர்களெடுத்துள்ள சீர்திருத்தங்கள் யாவுஞ் சிறப்புற்று விளங்கியதாக சரித்திரங்கள் கூறுகின்றது.

அவ்வகைச் சீரையுஞ் சிறப்பையுங் கெடுத்த அசத்திய சாதிகளையும் அசத்திய தன்மங்களையுஞ் (பாய்காட்) செய்யாமல் அவன் சரக்குகளை வாங்கலாகாது, இவன் சரக்குகளைக் கொடுக்கலாகாதென்னும் (பாய்காட்) வீண் புரளியால் ஒருவருக்கொருவர் மனத்தாங்கலுண்டாய் மண்டையோடு மண்டை உருளும்படி நேரிடுகின்றது.

இராஜாங்கத்தை சீர்திருத்த முயன்ற காங்கிரஸ் கமிட்டியாரில் மிதவாதிகளாயிருந்தாலென்ன, அமிதவாதிகளா யிருந்தாலென்ன, வாதத்தை வாயினால் வாதிப்பதைவிட்டு கைநீட்டும் வாதத்தில் ஆரம்பித்தவர்கள் கற்றவர்களாமோ. இதுதான் நாஷனல் காங்கிரஸென்னும் பெயரோ. மிதவாதிகளாகிய காங்கிரஸ் கமிட்டியார் இத்தகைய கலகத்தால் கலைந்திருக்க அமிதவாதிகளின் சுதேசியக் கூட்டங்களில் அதிகப்போருண்டாகுமாயின் பரதேசிகளின் பஞ்சாயத்தும் பரதேசி படைகளின் பாதுகாப்பும் வந்தே தீரவேண்டும்போல் காணுகின்றது. நாவினாற் சுதேசிகளென்னுங் கூச்சலும் நடத்தையால் பரதேசிகளை யேக்கலென்னும் பேச்சிலும் பேர்பெற்றவர்கள் கையில் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் என்ன செய்வார்கள்.

பறையர்களுக்கு கவர்னர் வேலையும் பாப்பார்களுக்குப் படைத்தலைவர்கள் வேலையும் கொடுப்பார்களா, ஒருக்காலுங் கொடார்கள். காரணம் தாழ்ந்த சாதியோர்களுக்கு உயர்ந்த வேலைகளைக் கொடுக்கப் படாதென்றும் உயர்ந்தசாதி பாப்பார்களுக்குப் படை பயிர்ச்சி தெரியாதென்றுங் கட்சிசெய்வார்கள். ஆனால் பாப்பார்களுக்கு கவர்னர் வேலைகளும் பறையர்களுக்குப் படைத்தலைவர்கள் வேலையேனுங் கொடுப்பார்களா, அதுவுங் கொடுக்கப்போகிறதில்லை. காரணம் பாப்பாரென்போர்களுக்கும் பறையரென்போர்களுக்கும் உண்டாயிருக்கும் பூர்வ புத்தமார்க்க விரோதத்தைக்கொண்டு பார்ப்பார்களைப் பறையர்கள் பழுக்கப் பார்ப்பார்களென்னும் பீதியால் படையிலுஞ் சேர்க்கமாட்டார்கள். இவ்விரு கட்சியில் சுயராட்சியம் எப்போது நிலைக்குமென்னில், பறையர்களென்போர்களைப் பாப்பார்கள் கண்டவுடன் துள்ளிவோடும் பயம் நீங்கி பட்சமுண்டாகுங்காலமும் பறையர்களென்போர் வாசஞ்செய்யுங் கிராமத்துள் பாப்பார்களென்போர் வந்தவுடன் அவர்களை அடித்துத்துறத்தி சாணச்சட்டியை உடைக்கும் வழக்கமும் முற்றிலும் நீங்கி சகோதிரர்கள் வந்தார்கள் என்னும் காலமும் உண்டாகி புத்த தருமம் பூரணமாயின் அன்றே சுயராட்சியம் நிலைக்கும் என்பது திண்ணம்.

இத்தகைய ஆராய்ச்சியில் சாதிகளை பாய்காட் பண்ணாமலும் சமயங்களை பாய்காட் பண்ணாமலும் சாராயக் கடை கள்ளுக் கடைகளை பாய்காட் பண்ணாமலும் அன்னியதேச ஜவுளிகளை பாய்காட் பண்ணுவதால் 3-ரூபா விலையிலிருந்த மல்பீசுகள் 4-ரூபா விலையிலும், 5-ரூபா விலையில் இருந்த மல்பீசுகள் 7-ரூபா விலைக்கும் வந்துவிட்டது. ஆனால் சுதேசிய மல்லுகளோ சுத்த பூஜ்ஜியமே.

ஊராரைக் கொண்டே, உப்பு விளைவிப்பதுபோல் புஞ்சையும் விளைவிக்கும்படி ஆரம்பித்துக்கொள்ளுவார்களாயின் (பாய்காட்) பலன் யாதோ பகுத்தறிய வேண்டியதே.

- 1:30; சனவரி 8, 1908 -

பாய்காட் நிலைப்பதற்கு சுதேச ஒற்றுமெயும், சுதேச ஐக்கியமும் இல்லை என்பது அடியிற் குறித்துள்ள கனவான்களை கனயீனஞ் செய்துள்ளக் காரணமே கரியாம்.

சிலர் தென்னிந்தியாவில் மட்டும் சாதிப் பிரிவினைகளுண்டு வட இந்தியாவில் இல்லை என்று கூறுவதைக் கேட்டுள்ளோம். அதற்கு மாறாக வட இந்தியாவிலும் சாதிப் பிரிவினைகள் உண்டு என்பதை அவர்கள் சாதிக்கட்டினால் விளங்குகின்றது.

இவ்வருடம் நடந்தேறிய காங்கிரஸ் கமிட்டியில் கலகஞ்செய்தவர்கள் யாவரையும் சாதிக் கட்டிட்டு நீக்கவேண்டும் என்று ஓர் கூட்டமும் இயற்றியுள்ளார்களாம். அந்தோ! இதுதானே நாஷனல் காங்கிரஸ். இது தானே சகலரையும் ஒற்றுமெய் அடையச் செய்யுங் கூட்டம். இதுதானே இந்தியர்களை ரட்சிக்குஞ் சங்கம். இவ்வகை சாதிக்கட்டுள்ள சங்கத்தை சகலரும் நிதானிக்க வேண்டியதே. காரணம் இதுவரையிலும் நாஷனல் காங்கிரஸ் என்று கூடிவந்த கூட்டம் வாஸ்தவ நாஷனல் காங்கிரஸா அன்றேல் சாதி காங்கிரஸா என்பதேயாம்.

நமது இந்தியர்களுக்குள்ள இத்தகையச் செயல்களால் கவர்னர் ஜெனரல் கர்ஜன் வாக்குபலிக்கும் போலும்.

அமிர்தபஜார் பத்திரிகையோர் அபிப்பிராயம்.

இவ்வருஷம் நடந்த காங்கிரஸில் கலகம் நேரிட்டது நல்லதென்றும் கலகம் பிறந்தாலே நியாயம் பிறக்கும் என்றும் அபிப்பிராயப்படுகிறார். அவ்வபிப்பிராயம் அவலமேயாம்.

எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாமென்னும் பழமொழியை உணராமல் பிரிவினையும் கோபமும் பொறாமெயும் கட்சியும் ஏற்படுத்தும் கலகத்தை நோக்குவதால் காரியம் நிலைக்குமோ.

கூடுங் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் கலகமே பெருகுமாயின் பிரிட்டிஷ் கவர்னமென்டாரே முன்னின்று தடுத்து நியாயம் விசாரிக்கும்படி நேரிடும். இவ்வகை நியாயம் விசாரிப்போர் முன் சென்று எங்களுக்கு சுயராட்சியம் வேண்டும் என்றால் என் சொல்லுவார்கள்.

பத்திராதிபர்களே, பகுத்தறியவேண்டியது தான். அவசர கோலம் அள்ளித் தெளிப்பது போல் அவரவர் மனப்போக்கில் அபிப்பிராயங்களை கூறுவதால் அங்கங்கு வாசிப்பவர்களின் கட்சி தடிப்பேறி ஆவேசமுண்டாய் சுதேசிய பற்றுக்களும் அற்று சுயமுயற்சியுங் கெட்டு உமக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கிவிடுவார்கள். இவ்வகை ஒதுங்குவதினால் உத்தேசம் நிலைபெறுமோ ஒருக்காலும் நிலைக்கா. ஆதலின் ஒவ்வோர் பத்திராதிபரும் நம்தேயம் ஒற்றுமெயிலும் ஒழுக்கத்திலும் சீர்பெரும் உபாயத்தை ஓதிவருவார்களாயின் உத்தமம் உத்தமம். அன்றேல் அதமமே.

திலகரைச்சார்ந்தவர்களுக்கு ஜாதிபிரஷ்டமும் கோஷுக்கு அவமானமுமா.

இவ்வருஷம் சூரத்தில் நடந்த காங்கிரஸ் சூரத்தாகவே விளங்குகின்றது.

காரணம் - கனந்தங்கிய கோஷவர்களை கணநாயகராக நியமித்தவர்கள் கூட்டத்தோர்களே அன்றி அவர் தானே நியமித்துக் கொள்ளவில்லை.

அங்ஙனம் சங்கத்தோரால் நியமிக்கப்பட்டு ஆசனம் வகித்தும் அச்சங்கத்தோர் அபிப்பிராயத்தால் திலகரின் (அமென்ட்மென்டை) அடக்கி இருப்பார் அன்றி அவர் சுய அபிப்பிராயமாகா. அவர் சுய அபிப்பிராயமாயின் அங்ஙனமுள்ள அவர் கட்சியாரே தடுத்து ஆமோதித்து இருப்பார்கள்.

இவ்வகை நோக்கங்களை சீர்தூக்கிப்பாராமல் பெரியோர் பிரஸிடென்டை தூஷித்த சுருதி கொண்டு டாக்டர் கோஷவர்கள் டிரேயினில் போகுங்கால் பத்து பனிரெண்டு வயதுள்ள பையன்கள் கூடிக்கொண்டு அவரை

ஸ்டேஷ்னண்டை கண்டவுடன் அவமானம் அவமானமென்றும், வெட்கம் வெட்கம் என்றும் சொல்லிக் கூச்சலிட்டார்களாம். அந்தோ! இவ்வகை சிறுப்பிள்ளைகள் செய்யுஞ் சேஷ்டை விளையாட்டை அடக்க முடியாதவர்கள் பெரியோர்களுக்கு உண்டாயிருக்கும் பொறாமெயை அகற்றுவார்களோ. ஒருக்காலும் அகற்றப்போகிறதும் இல்லை, உவரை ஆளப்போகிறதும் இல்லை. காரியத்தின் பேரில் கண்ணோக்கம் இராது வீரியத்திற்கு விருது கட்டுகிறவர்கள் வீணர்களேயாம்.

- 1:31: சனவரி 25, 1908 -

நம்முடைய தேசத்திற்கும் புறத்தேசங்களுக்கும் உள்ள சீர்திருத்த பேதங்களையுஞ் செல்வ பேதங்களையும் உற்றுநோக்குங்கால் நூற்றுக்கு ஒருவரை சீர்திருத்தக்காரர் என்று கண்டெடுப்பதற்கு அரிதாகின்றது.

அமெரிக்காதேசத்துக் குடிகளுள் சொந்த பூமியை வைத்துக் கொண்டு வேளாளர்களாய் இருப்பவர்கள் நூற்றுக்கு 87 பெயரிருக்கின்றார்கள். நமது தேசத்திலோ சொந்த பூமியிற் பயிரிடுந் தொழிலாளராகும் வேளாளரை நூற்றுக்கு 5 பெயரைக் கண்டெடுப்பது அரிதாயிருக்கின்றது.

அதற்குக் காரணம் யாதென்றால், நமது தேசத்திலுள்ள சில சுயநலங் கருதுகிறவர்களால் ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் அண்டை பாத்தியமென்னும் சட்டமேயாம்.

அவ்வகை அண்டை பாத்தியமென்னுஞ் சட்டத்தால் உண்டாகும் கெடுதிகளை நமது கருணை தங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தாருக்கு விளக்குவாருங் கிடையாது. ஒரு மனிதன் நூறு ஏக்கர் பூமியை வைத்துக் கொண்டு செவ்வனே பண்படுத்தாமலும் காடழித்து கரம்பு போக்காமலும் காலத்திற்குக்காலம் விளைவிக்கக்கூடிய தானியங்களைப் பயிறு செய்யாமலும் கரம்பேற வைத்திருந்தபோதிலும் அவன் பூமிக்கு அண்டையிலிருக்குங் காலிபூமியை வேறொரு மனிதன் தர்க்காஸ்து கொடுப்பானேயானால் நூறேக்கரை வைத்துக்கொண்டு சீர்படுத்தக் கையாலாகாதவன் தன்னுடைய பூமிக்கு அருகாமை மற்றொருவன் வரக்கூடாதென்னும் பொறாமெயால் தர்க்காஸ்துக் கொடுத்து உள்ளவனுக்குக் கொடுக்கப்படாது, அண்டை பாத்தியமுள்ள எனக்கே அப்பூமியைக் கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பமிட்டு தன் நூறேக்கருடன் அன்னியன் தர்க்காஸ்து கொடுத்த பூமியையுஞ் சேர்த்துக் கொள்ளுகின்றான்.

இவ்வகைத் தன்னைப்போல் அன்னியன் பூமியை வைத்துக்கொண்டு பிழைக்கலாகாதென்னும் பொறாமெயும் தானே சகல பூமியையும் கட்டி ஆளவேண்டும் என்னும் பேராசைக்கொண்ட பேமானிகளாதலின் சொந்த பூமியையாள்பவர் நூற்றுக்கு ஐந்து பெயரைக் காண்பதும் அரிதாயிருக்கின்றது.

அவ்வகை பூமி ஆளும் விருத்திக் குறைவுக்கு சாதிநாற்றக் கசிமலங்களும் ஓர் காரணமேயாம். எவ்வகையில் என்றால், ஓர் பார்ப்பான் பூமிக்கருகில் பறையன் தர்க்காஸ்துக் கொடுப்பானேயாகில் அண்டைபாத்திய சட்டத்தைக்காட்டி அவனை விரட்டிவிடுகிறான். பார்ப்பான் பூமிக்கருகில் மற்றோர் பார்ப்பானே தர்க்காஸ்து கொடுப்பானேயாமாகில் அண்டை பாத்திய சட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு ஐயனை அருகில் சேர்த்துக் கொள்ளுகின்றான்.

சோம்பேரியுஞ் சோம்பேரியும் ஒன்றுசேர்ந்து பூமியைப் பெருக்கிக்கொண்டு பண்படுத்த விதியற்றுப்பறையனைத் தேடுவார்கள். அப்பறையருள் ஏமாளிப் பறையனேனும் இளிச்சவாய்ப் பறையனேனும் அகப்படுவானாகில் அவனுக்கும் அவன் பெண்சாதிக்கும் நிதம் ஒரு அணாகூலிக்குத் தக்க தானியங்களைக் கொடுத்து நொறுக்கி வேலைவாங்கிக் கொள்ளுவான். அவனுக்கருகே ஓர் விவேகமுள்ளப் பறையன் பூமியைவைத்துக் கொண்டு சுகமாக வாழ்வானாயின் பார்ப்பானுக்கு முன்பு பறையனும் பூமி வைத்துக் கொண்டு வாழலாமா என்னும் பொறாமெயால் அவன் பயிறுக்கும் கால்நடைகளாகும் கன்றுக்காவிகளுக்குங் கேடுண்டு செய்து துறத்தும்படி ஆரம்பிக்கின்றான். இவனுக்கு உண்டாகுங் குறைகளை கலைக்கட்டருக்குத் தெரிவித்தாலோ கலைக்கட்டர் அதை தாசில்தாருக்கு அனுப்பி விசாரிக்கும்படிச் செய்கின்றார். தாசில்தாரோ முநிஷிப்பையுங் கணக்கனையும் விசாரிக்க ஆரம்பிக்கின்றார். கணக்கனும் முநிஷிப்பும் பார்ப்பானுக்கு உரியவர்களாதலின் B லெட்டர் உடைந்து போச்சி C லெட்டர் புரம்போக்கில் போச்சுதென்னும் ஒவ்வோர் முடிகளிட்டுப் பறையனை பூமியைவிட்டு ஓடும்படிச் செய்து விடுகின்றார்கள். கணக்கன் காலால் போட்டமுடியை கலைக்ட்டர் கையால் அவிழ்க்க முடியாது என்னும் ஓர் பழமொழியும் உண்டு. இத்தியாதி கேடுகளையும் கலைக்ட்டர் விண்ணப்பத்தைக் கண்டவுடன் குடியானவன் வீட்டண்டை நேரில் வந்து விண்ணப்பத்தாரியை அழைத்து ஒவ்வொரு கெடுதிகளையும் விசாரிணைச் செய்வரேல் சகலமும் சிறக்க விளங்கும். பிரிட்டிஷ் ராஜாங்கமும் துலங்கும். இத்தகைய விசாரிணையற்று கணக்கனையும் முநிஷீப்பையும் பொறுப்பிடுவதால் குடிகள் யாவரும் இராஜாங்கத்தின்மீது குறைகூறும்படி நேரிடுகின்றதுமன்றி சகலகுடிகளுங் களங்கமற்று பூமியை ஆளுவதும் அரிதாய் உழுது பயிரிடுங் குடிகளின் முயற்சிகெட்டு சாதிநாற்றம் பொறுக்கமுடியாது சீர்கெட்டு பலதேசங்களுக்குஞ் சிதறிப்போய்விட்டார்கள்.

இத்தகைய வஞ்சகர் பெருக்கத்தினாலும் பொறாமெயர் காந்தலினாலும் மழை குன்றி விஷரோகங்கள் தோன்றி தேசமுஞ் சீர்கெட்டு வருங்கால் சுதேச சீர்திருத்தத்தை நாடியவர்கள் சுதேச சீர்கேட்டிற்கு மூலம் யாதென்று தெளிந்து அம்மூலத்தை களைந்தெரியவேண்டியதே கற்றவர்களின் கடனாம்.

- 1:34: பிப்ரவரி 5, 1908 -

இத்தேசத்துள் கொசுக்கள் அதிகரித்து மக்களை வாதிப்பதற்கு மூலம் யாதெனில், நீரோடைகளிலும் கால்வாய்களிலும் கிணறுகளிலும் நீரோட்டம் இன்றி தங்கி நாற்றமுறில் அதனின்று சிறிய புழுக்கள் தோன்றி அந்நாற்ற பாசியைப் புசித்து வளர்ந்து இறக்கைகளுண்டாய் புழுக்கள் என்னும் பெயர் மாறி கொசுக்கள் என்னும் உருக்கொண்டு பரந்து வெளிவந்து சீவர்களை வாதிக்கின்றது. இவ்வகை வாதிக்கும் கொசுக்களின் உற்பத்திக்கு மூலம் அங்கங்கு கட்டுப்பட்டக் கெட்ட நீர்களேயாம்.

அதுபோல் உலகிலுள்ள சகலவிவேகிகளும் கொண்டாடும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்த இந்து தேசமானது நாளுக்குநாள் வித்தை கெட்டு, புத்தி கெட்டு, யீகை கெட்டு, சன்மார்க்கங்கள் கெட்டுவருவதற்கு மூலம் யாதெனில், தங்களை உயர்த்திக்கொள்ள தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளும் வித்தை புத்திகளால் பிழைக்க விதியற்று சாமிபயங்காட்டிப் பிழைக்கும் சமயங்களுமேயாம்.

அஃது எவ்வகையிலென்னில் பூர்வம் இவ்விந்துதேச முழுதும் புத்ததருமம் நிறைந்திருந்த காலத்தில் புத்த சங்கத்தைச்சார்ந்த சமண முநிவர்கள் விவேகமிகுத்த தண்மெயால் வடமொழியாம் சமஸ்கிருதத்தில் பிராமணரென்றும் - பாலியில் அறஹத்தென்றும் தென் மொழியில் - அந்தணர் என்றும் பெயர் பெற்று அரசர்களாலும் குடிகளாலுஞ் சிரேஷ்டமாக வணங்கப் பெற்றிருந்தார்கள்.

ஆயிரத்தியைஞ்ஞூறு ஆண்டுகளுக்குப்பின் இந்துதேசத்தில் வந்து குடியேறி யாசகசீவனத்தால் பிழைத்திருந்த ஓர் சாதியார் இத்தேசத்தில் ஆந்திரசாதி, கன்னட சாதி, மராஷ்டகசாதி திராவிட சாதி என்னும் கூட்டத்தார் புத்த தன்மத்தால் ஒருவருக்கொருவர் பேதமின்றி கொள்வினை கொடுப்பினையிலும் உண்பினை உடுப்பினையிலும் ஒற்றுமெயுற்று சுக வாழ்க்கையில் இருப்பவர்களைக் கண்டு யுத்தத்திலேனும் மற்று வேறு விதத்தேனும் இவர்களை ஜெயிக்கமுடியாது, அரசர்கள் முதல் குடிகள் வரையில் பயந்து நிற்கும் அந்தணர்கள் வேஷத்தால் இவர்களை அடக்கி ஆளவேண்டும் என்று எண்ணி வடமொழியாம் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டு பிராமணவேஷம் ஆரம்பித்தார்கள்.

அவ்வேஷமாவது புத்த சங்கத்தோருக்குள் விவேக மிகுதியால் சமண நிலை கடந்து உபநயனம் என்னும் ஞானக்கண்ணளிக்கப் பெற்றவுடன் மதாணிப் பூணுாலென்னும் பூணுநூல் அணைந்து உபநயனம் பெற்ற அடையாளங் குறித்திருந்தார்கள்.

இரண்டாவது, புத்த சங்கத்தில் சேராமல் குடும்பத்தில் இருந்துக் கொண்டு பஞ்சபாதகம் அணுகா வாழ்க்கையிலிருக்கும் குடும்பிகள் என்று அறிந்துக்கொள்ளுவதற்கு (குடுமி) வைத்தும், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிரசிலுள்ள முடி முழுதும் சிறைத்தும், குடும்பிக்கும் சங்கத்திற்கும் சம்மந்தமின்றி சங்கத்திற் சென்று ஞான விசாரிணைப் புரிதலும் குடும்பிகளிடம் வந்து புசித்தலுமாகிய ஓர் நிலையின்றி இரண்டுபக்கம் இடியுண்டவர்களுக்கு சிர முழுதும் முடிவளர்க்கச் செய்து இரு இடிகள் இருடிகளென வழங்கி வந்தார்கள்.

இவ்வகையாக அவர்கள் தொழிலுக்கென்றும் அவரவர்கள் அந்தஸ்தின் குறிப்பிற்கென்று வைத்திருந்த பெயர்களையுஞ் செயல்களையும் மாறுபடுத்தி வடகலை நூலின்றி தென்கலை நூற்கள் வழங்கிவந்த இன்னாட்டில் தாங்கள் கற்றுக்கொண்ட வடகலைநூற் சுலோகங்களிற் சிலவற்றைச் சொல்லி நாங்கள் தான் பிராமணர், நாங்கள்தான் அந்தணர் என்று சொல்லி சிலர் மொட்டையடித்துக் கொண்டும் சிலர் முடிவளர்த்துக் கொண்டும், சிலர் குடுமிவைத்துக் கொண்டும் கல்வியற்ற குடிகளை வஞ்சித்தும் அவர்களிடம் அதிகார யாசகஜீவனஞ்செய்துக் கொண்டு வந்தார்கள். இத்தகைய யாசகத்திலும் அதிகாரத்துடன் சில வடகலை நூற் சுலோகங்களைச் சொல்லிப் பொருள் சம்பாதிப்பதை உணர்ந்த இத்தேசத்து சோம்பேரிகளிற் சிலர் தாங்களும் பிராமணர்கள் என்று வேஷமிட்டுப் பொருள்பறிக்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட முன் வேஷபிராமணர்களுக்கும் பின் வேஷபிராமணர்களுக்கும் விரோதம் உண்டாகி பெண் கொடுக்கல் வாங்கலிலும், உண்பினையிலுஞ் சேராமல் மாறுபட்டு நின்றார்கள். இந்த அதிகாரப் பிச்சை வேஷத்தை அறிந்த மற்றும் சிலரும் பிராமணவேஷமிட்டு யாசக சீவனம் ஆரம்பித்ததினால் ஐயங்கார் பிராமணர், ஐயர் பிராமணர், ஆசாரி பிராமணர், பட்டர் பிராமணர் என நூற்றியெட்டு பிராமணர்கள் தோன்றி ஒருவருக்கொருவர் ஒற்றுமெயில்லாமல், மாறுபட்டு பூர்வத்தொழில்களையும் விட்டு புத்த தருமங்களையும் மறைத்து மடங்களையும் பாழாக்கி பௌத்தர்களையும் தாழ்ந்த சாதியாக வகுத்துவந்தார்கள். இத்தகைய மாறுதற் செய்கைகளினால் தாங்களுங் கெட்டு பௌத்தர்களையும் கெடுத்து வருங்கால் மகமதிய துரைத்தனத்தார் வந்து குடியேறினார்கள்.

அம்மகமதியரரசாங்கத்தோர் இதுவரையில் தங்கள் ஆளுகையை நிறைவேற்றி வருவார்களாயின் வேஷபிராமணங்கள் யாவும் மாறி சாப்சலாம் சாயப், சலாம் அலேக்கும் சாயப்பென்னும் பக்கிரிபாத்திலிருப்பார்கள்.

ஏதோ சொற்ப சற்கருமத்தால் இங்கிலீஷ் துரைத்தனம் வந்து தோன்றி தங்கள் சீவனங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட வேதங்களையும் புராணங்களையும் இஸ்மிருதிகளையும் பாஷியங்களையும் சுருட்டி எறிந்து விட்டு ஐகோர்ட்டு உத்தியோகங்களுக்கான வேதங்களையும் ரெவினியூபோர்ட்டு உத்தியோகங்களுக்கான ஸ்மிருதிகளையும், ஆப்காரி ஆபீசு உத்தியோகங்களுக்கான உபநிஷத்துக்களையும், முநிசிபில் ஆபீக உத்தியோகங்களுக்கான பாஷியங்களையுங் கற்றுக்கொண்டு சுகஜீவனத்திலிருந்தும் மற்றும் சிலர் வடகலை நாமத் தென்கலைநாமச் சண்டையுடன் வடை பாயாசச் சண்டை, தோசை நெய் சண்டை, யிட்டுக்கொண்டு இருக்கின்றபடியால் அவர்கள் யாவருந் தங்களைப்போல் வேதப்புராணங்களை மறந்து கவர்ன்மென்டு ஆபீசுகளில் நிறைந்துவிடுவார்களானால் அப்போதுதான் தங்கள் வேஷபிராமணத்தை மாற்றி சகலரிடத்தும் ஒற்றுமெயடைய எண்ணம் கொண்டிருகின்றார்போலும்.

அதுவுமின்றி மற்றவர்களுடன் ஒற்றுமெய் அடைந்துவிட்டால் ஆயிரத்தி ஐன்னூறு வருஷ காலங்களாக தங்களைப் பெரியசாதியென்று ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்கு அடங்கினவர்களால் சாமி, சாமியென்று அழைக்கும் கெளரதை நீங்கிவிடும் என்று எண்ணினாலும் எண்ணுவர்.

இத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்களாயிருப்பினும் தங்கள் சுயநலங் கருதி சாதியை ஒழித்து ஜப்பான் சைனா முதலிய தேசங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து சாப்பிட்டுக் கொண்டு கைத்தொழிலையும் கற்று வருகின்றார்கள்.

அவர்களைப் பின்பற்றி நிற்கும் மற்றவர்கள் அவர்கள் செயல்களை நோக்கி தாங்களும் பலதேசங்களுக்குச் சென்று வித்தைகளைக் கற்று சுகமடையவேண்டும் என்னும் எண்ணம் கொள்ளாமல் இன்னமும் அவர்கள் கட்டுக்குள் தாழ்ந்து நிற்பது என்ன குறையோ விளங்கவில்லை.

முதலிகள் என்போர் வகுப்பிலும் நாயுடுகள் என்போர் வகுப்பிலும் செட்டிகள் என்போர் வகுப்பிலும் எத்தனையோ பிரிவினைகள் நாளுக்குநாள் தோன்றிக்கொண்டே வருகின்றது. இத்தகையத் தோற்றங்கள் எக்காலத்தில் நீங்கி ஒற்றுமெயடையுமோ அதுவும் விளங்கவில்லை.

இவைகள் தான் சில நாட்களாக தொன்று தொட்டு வழங்கிவந்த போதினும் பிராமண மதத்தில் மோட்சம் போவதற்கு நேரான வழியில்லை. கிறிஸ்துமதத்தில் நேரான வழியுண்டு என்று மதமாறினவர்களில் பலர் செட்டிக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், முதலில் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன் என்று டம்பஞ் சொல்லி சாதிப்பெயர்களைப் பரவச் செய்துவருகின்றார்கள்.

- 1:35: பிப்ரவரி 12, 1908 -

இத்தகைய சாதிப் போர்வையை இழுத்து விழுத்து போர்ப்பவர் மகமதியர் மார்க்கஞ் சேர்ந்திருப்பார்களாயின் செட்டி மகமதியன், நாயுடு மகமதியன், முதலி மகமதியனெனக் கூறுவரோ, ஒருக்காலுங் கூறார்கள்.

காரணம் - மகமதியர்மார்க்கஞ் சேர்ந்தவுடன் அம்மார்க்கத்தோர் நடை உடை பாவனைகளைப் பின்பற்றி அதன்மேரை நடத்தல் வேண்டும். அங்ஙனமின்றி செட்டி மகமதியன், முதலி மகமதியனென்னும் அழைப்புக்கிடங் கொடுக்கமாட்டார்கள்.

கிறிஸ்தவர்களோ அங்ஙனங் கிடையா. அதாவது கத்தோலிக்குப் பாதிரிகள் சேர்ந்த கும்பலைக்கொண்டே சார்ந்து பணஞ் சம்பாதிப்பவர்கள்.

புரோட்டெஸ்டான்ட் பாதிரிகளோ சேர்ந்த கும்பலுக்குத் தக்கவாறு நேர்ந்த சம்பளம் வாங்குகிறவர்கள். பிரதிபலன் கருதி தங்கள் சமயத்திற் சேர்ப்பவர்களாதலின் கிறிஸ்துமதத்தில் சேர்பவர்களின் மனோபீஷ்டப்படி செட்டிக் கிறிஸ்தவன், முதலிக் கிறிஸ்தவனென வைத்துக்கொள்ளும்படி உத்திரவளிப்பதுடன் பொட்டுகளும் இட்டுக்கொள்ளுவதற்கு சந்தனக்கட்டைகளையும் குங்கத்தையும் விஞ்சாரித்து அதாவது மந்திரித்து கொடுப்போம் என்பார்கள்.

இப்பாதிரிகளின் ஆதரவால் பிராமணப்போர்வையும், கிறிஸ்துமத சேர்வையஞ் செய்துவருகின்றார்கள்.

கிறிஸ்துமதத்திற் சேர்ந்தவர்களை பிராமண மத சாதிப்போர்வையை அகற்றவேண்டுமென்று அறிக்கை இடுவார்களாயின் கிறிஸ்துமதமும் மறைந்து பணவரவுங் குறைந்துபோமென்று எண்ணி சாதிகளை அவர்களும் பரவச்செய்து வருகின்றார்கள்.

பெரும்பாலும் நமது தேசத்தோர் வித்தையிலும், புத்தியிலும் முயற்சியற்று வேஷ பிராமணர் சோம்பலிற் பிழைக்கும் வழிகளைப் பின்பற்றி (சுவாமிகள்) பயங்காட்டி மதக்கடைகளைப் பரப்பி எங்கள் சுவாமி கண்ணைக் கொடுப்பார், உங்கள்சாமி மூக்கைக் கொடுப்பார் என்னும் ஆசைஊட்டி சம்மாங்குடைகளுக்கு மேற்குடை செய்யத்தெரியா சம்பிரதாரிகளும், பண்ணை பூமியில் பழைய ஏற்றத்தைவிட புதிய ஏற்றஞ் செய்யவறியா போதகர்களும்,

வாழைப்பழமும், மாம்பழத்திற்குமேல் பழவிருத்தி செய்யவறியா பாவாணரும், ஜெகத்திற்கே குரு என்று சொல்லிக் கொண்டு பத்தாயிரரூபாய் சம்பாதிப்பார்களானால் அவர்கள் பாடங்கற்ற புரோகிதர்களும் பாதிரிகளும் பூசாரிகளும் தங்கடங்கள் மதக்கடைகளைப் பரப்பி சோம்பேரி சீவனஞ் செய்வதற்கு சமயங்களையும் அதையே மேம்பாடு செய்துக்கொண்டு ஏழைகளை வஞ்சித்து பொருள் சம்பாதிப்பதற்கும், ஏழைகளை ஏய்த்து வேலைகள் வாங்கிக்கொள்ளுவதற்கும் பெரியசாதி சின்னசாதி என்னும் வேஷங்களையும் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

இதுவுமன்றி மதுரை முதலிய இடங்களிலுள்ள பட்டு நூல் வியாபாரிகளும் கைக்கோளரென்று அழைக்கும்படியான வருமான ஓர் கூட்டத்தார் முப்பது வருடங்களுக்கு முன்பு குப்புசாமி, பரசுராமன் என்று அழைத்து வந்தார்கள். அவர்களே சில வருடங்களுக்குமுன் நூல் வியாபாரத்தைக்கொண்டு தங்களைக் குப்புசாமி செட்டி, பரசுராமசெட்டி என்று வழங்கிவந்து தற்காலந் தங்கள் பெயர்களை குப்புசாமி ஐயர் பரசுராம ஐயர் என்று வழங்கி வருகின்றார்கள்.

இவ்வோர் அநுபவத்தைக்கொண்டே அரைச்செட்டையை நீக்கிவிட்டு முழுச்செட்டையை போர்த்துக்கொள்ளுவதும், முழுச் செட்டையை நீக்கிவிட்டு அரைச்செட்டையை போர்த்துக்கொள்ளுவது போல் சாதிப்பெயர்கள் யாவும் ஒவ்வோர் கூட்டத்தார் சேர்ந்து சாதிதொடர் மொழிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய காலத்தில் சேர்த்துக் கொள்ளுவதும், அவற்றை நீக்கிவிடவேண்டிய காலங்களில் நீக்கிவிடவேண்டிய பெயர்களாய் இருக்கின்றபடியால் இச்சாதிப் பெயர்களைப் பெரிதென்று எண்ணி தேச சிறப்பையும் ஒற்றுமெயையும் கெடுத்துக் கொள்ளுவது வீண்செயலேயாம்.

நமது தேசத்தின் சீர்கேட்டிற்கும், சுகக்கேட்டிற்கும், ஒற்றுமெய்க் கேட்டிற்கும் இட்டபொய்யாகிய சாதி கட்டுகளும் சமய கட்டுகளுமே மூலமென்று உணர்த்தும் அவைகளை மேலும் மேலும் பரவச் செய்வதால் நமது தேச சிறப்பும் தேச சுகமும் நாளுக்குநாள் கீழுகிழென்றே தாழ்ந்துபோமென்பது திண்ணம்.

ஆதலின் நமது தேசத்தோரை சீர்திருத்த வெளிவந்துள்ள பத்திரிகாபிமானிகள் ஒவ்வொருவரும் பூர்வ வழக்கம்போல் தமிழ்பாஷைக்குரியோர்கள் யாவரையுத் தமிழ்சாதி என்றும் கன்னடபாஷைக்கு உரியோர்கள் யாவரையும் கன்னடசாதி என்றும், மராஷ்டக பாஷைக்குரியோர் யாவரையும் மராஷ்டக சாதி என்றும், தெலுகு பாஷைக்குரியோர்கள் யாவரையும் தெலுகுசாதி என்றும்,

- 1:36; பிப்ரவரி 19, 1908 -

பத்திரிகைகளில் வரைந்துக்கொண்டு வருவதுடன் வார்த்தைகளிலும் பேசிக் கொண்டு வருவோமாயின் சாதிப்பிரிவினைகள் நாளுக்கு நாள் மறந்து பாஷைப் பிரிவினைகள் பெருகிக் கொண்டே வரும்.

அத்தகைய பாஷைப் பிரிவினைகளின் பெருக்கத்தால் மேற்சாதி கீழ்ச் சாதியென்னும் பொறாமெகள் அகற்று தமிழ்பாஷைக்காரர்கள் யாவருமோனும் ஒன்றுகூடி கல்வி விருத்தியிலும், கைத்தொழில் விருத்தியிலும் ஒற்றுமெய் அடைந்து தேசத்தை சீர்திருத்தாவிடினுந் தாங்களேனுஞ் சீரடைவார்கள்.

சீர்திருத்த மூலங்களைத் தெரிந்து செய்யாமல் அவன் வேறு சாதி அவனைப்பற்றி நமக்கென்ன, இவன் வேறுசாதி இவனைப்பற்றி நமக்கென்னவென்று நீங்குவதால் சுயநலங்கருதி மணிலாக்கொட்டை விளைத்து பலதானிய விருத்தி குறைந்து பஞ்சந்தோன்றியதுபோல் பாழாய்விடும்.

அதாவது நகரவாயல்களிலுள்ள யாவரும் பொதுப்பிரயோசனங் கருதி சுதேசி சுதேசி என்று கூச்சலிட்டுவர நாட்டுவாயல்களிலுள்ள யாவரும் சுயப்பிரயோசனங் கருதி மணிலாக்கொட்டை எனும் வேறுகடலை விளைவால் (மெனிமணி) லாபத்தில் இருக்கின்றார்கள்.

இப்படியாகத் தங்கள் சுயப்பிரயோசனங் கருதி சருவ சீவர்களையுங் காப்பாற்றும் நவதானியங்களைப் பயிறு செய்யாது தாங்கள் குடும்பம் பசியாறப் புசித்தால் போதும் என்னும் எண்ணத்தால் உள்ள பூமிகளில் எல்லாம் மணிலாக் கொட்டையை விளைத்து வருவதால் அரிசி, கேழ்வரகு, துவரை முதலிய தானியங்கள் விளைவில்லாமல் பஞ்சம் என்று சொல்லும் படியாய் இருக்கின்றது. பெய்திருக்கும் சொற்ப மழைக்குத்தக்கவாறு பலதானியங்களை விளைவித்து இருப்பார்களாயின் இவ்வருஷம் எவ்வகையாலும் ரூபா ஒன்றுக்கு ஆறுபடி ஏழுபடி அரிசி வாங்கக்கூடும். இந்த நெல் முதலிய தானியங்களைக் கவனிக்காமல் மணிலாக்கொட்டை மலப்பில் இருக்கின்றபடியால் நாளுக்குநாள் தானியங்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவ்வகை விலை அதிகரிப்பதால் ஏழைகள் நசிந்து சுகங் குறைந்துக் கொண்டே வருமாயின் சுதேசிகள் வேலை என்ன செய்யும்.

சுதேசிகள் என்று கூச்சலிட்டுக்கொண்டு புரதேச சரக்குகளை (பாய்காட்) செய்வதால் தேசத்தில் பஞ்சம் உண்டாகின்றதா அல்லது சுதேசிகள் என்று சொல்லிக்கொண்டே சுயப் பிரயோசனங் கருதி மணிலாக்கொட்டை விளைவிப்பதால் பஞ்சம் உண்டாகின்றதா என்பதை நாமே சீர்தூக்கி ஆலோசிக்க வேண்டியதாய் இருக்கின்றது.

ஏனெனில் சொந்த பூமிகளை வைத்துக்கொண்டிருக்கும் சுதேச கனவான்கள் யாவரும் சுதேசிகளின் புசிப்பையும் அவர்கள் சுகத்தையும் கருதாமல் சுயப்பிரயோசனங்கருதி பணஞ் சம்பாதிப்பதைக் கண்டிருந்தும் இத்தகைய சுதேசிகள் வசம் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் ஏதேதுசெய்து ஏங்கவிடுவார்களோ என்பதுதான்.

காங்கிரஸ் சபை என்றும் மஹாஜனசபை என்றும் பெருங்கூட்டங்களிட்டு ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் பத்து நூறென்னுஞ் சிலவுகளை வைத்துப் பாழ்செய்தவர்கள், சுதேசத்தில் கண்டிருக்கும் பஞ்சத்தையும் அப்பஞ்சம் உண்டாயதற்கு மூலத்தையும் அறியாமல் வீண் சங்கைகளை வளர்த்து குடிகளுக்கும் அரசுக்கும் வீண் விவகாரத்தை உண்டு செய்தது என்னமதியோ விளங்கவில்லை.

நம்முடைய தேசத்தார் மசாணவைராக்கியம் பிரசவ வேதனா வைராக்கியங்களைப்போல் கூட்டவைராக்கியங் கொண்டவர்கள். அதாவது ஓர் கூட்டங்கூடவேண்டும் என்று ஒருவர் அல்லது இருவர் முயன்று ஒவ்வோர் காரியங்களை உத்தேசித்து ஆயிரம் பெயரைக்கூட்டி நடாத்தும் முடிவை நாடுகின்றது. அவ்வகை நாட்டமுருங்கால் முயிற்சியினின்ற ஒருவரோ இருவரோ அயர்ந்துவிடுவார்களாயின் அவர்களுடன் சேர்ந்த ஆயிரம் பெயர்களும் அயர்ந்துவிடுவது சுவாபம்.

அதன் காரணம் யாதெனில் - பி.ஏ., படித்து லாயர்வேலை செய்வதும், எம்.ஏ., படித்து உபாத்தி வேலை செய்வதும், எப்.ஏ., செய்து ரைட்டர்வேலை செய்வதுமாகிய செயல்கள் கல்வியற்றவன் கூலிவேலை செய்வதற்கொப்பாய் தங்கடங்கட் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவதே கண்ணோக்கமாய் உள்ளவர்கள் தேசத்தில் சீர்குலைந்துள்ள சீவர்கள் மீது கண்ணோக்கம் வைப்பார்களோ, ஒருக்காலும் வையார்கள். அவரவர் குடும்பத்தைப் போஷிப்பதே அவர்களுக்குக் கஷ்டம்.

இத்தகைய சீர்திருத்தக் கூட்டங்கள் யாவும் கைத்தொழிலாளரும் வியாபாரிகளும் முன்னின்று செய்யவேண்டும். காரியாதிகள் யாவும் சுயபாஷைகளில் நிறைவேற்றல்வேண்டும். அங்ஙனமின்றி, பி.ஏ. செய்து லாயர்வேலைக்குப்போகாதவரும், எம்.ஏ. செய்து உபாத்தி வேலைக் கிடைக்காதவரும், எப்.ஏ, செய்து ரைட்டர் வேலைக் கிடைக்காதவரும் ஒன்றுகூடி கூட்டங்களை ஆரம்பித்துப் பேசுவதில் அவர் பேசிய இங்கிலீஷில் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசினார், இவர் பேசியதில் (கிராமர்) கவனித்துப் பேசினார் என்னும் டம்பத்தை நோக்குகின்றார்கள் அன்றி, விஷயத்தை

நோக்குகின்றவர்களில்லை. விஷயங்களை நோக்கவேண்டியவர்களாயின் அவரவர்கள் சுயபாஷைகளில் விஷயங்களை விளக்கி முடிவுசெய்யல் வேண்டும், அவ்வகை முடிவுகளை அதேபாஷையில் பதிவுசெய்து பிரசுரித்தல் வேண்டும். பிரசுரிக்கும் பத்திரிகைகளைக் கண்டுணர்வோர் நாளக்குநாள் ஒற்றுமெயுற்று நற்சீரை நோக்குவார்கள்.

நம்முடைய சீர்திருத்தங்களை ஆலோசிப்பதற்குமுன் அன்னிய தேசத்தோர் சீருக்குவந்த வழிகளையும், அவரவர்கள் குணாகுண ஒழுக்கங்களையும், அந்தந்த தேச சரித்திரங்களையும் வாசித்துணர்ந்து அதன்மேறை நடத்தல் வேண்டும்.

- 1:37: பிப்ரவரி 26, 1908 -

பலதேச சீர்திருத்தங்களில் நமது பந்துக்களாக விளங்கும் ஜப்பானியர்களின் சீரையுஞ் செய்கைகளையும் முதலாவது விசாரிப்பாம்.-

ஜப்பான் தேசக் கனவான்களில் ஒருவர் (ரிக்ஷா) என்னும் வண்டியில் ஏறிக்கொள்ள ஜப்பான் தேசத்து ஏழைகளில் ஒருவன் அவ்வண்டியை இழுத்துக்கொண்டு நெடுந்தூரஞ்சென்று அவ்விடமுள்ள ஓர் பலபட்சணங்கள் விற்கும் வீட்டுள் நுழைந்துவண்டியில் ஏறி வந்த கனவான் நாற்காலியின்மீது உட்கார்ந்து வேண்டிய பதார்த்தங்களைக் கொண்டுவரச்செய்து புசிக்குங்கால் அவ்வண்டியை இழுத்துச் சென்ற ஏழையும் உட்சென்று அவர் எதிர் நாற்காலியில் உட்கார்ந்து தன் கையிலுள்ள பணத்திற்குத் தக்கவாறு வாங்கி புசித்து கனவானும் ஏழையுங் கலந்து பேசிக்கொண்டு வெளிவந்து அவர் வண்டியிலேறிச் செல்லுவதும் இவன் இழுத்தோடுவதும் வழக்கமாயிருக்கின்றது. இத்தகையக் களங்கமற்றச் செய்கையை நமது தேசத்தோர் கையாடுவரோ. ஒருக்காலுங் கையாடார்கள்.

அதாவது - சாதிநாற்றங்கள் இங்கு மூக்கை அடைத்துக் கொண்டும் சமயநாற்றப் பொறாமெய்க் கண்ணை மறைத்துக் கொண்டும் இருக்கிறபடியால் அம்மேலோர்கள் குணம் இவர்களுக்கு வாய்ப்பது கஷ்டசாத்தியமாம். அங்ஙனம் ஒருகால் சாத்தியப்படினும் சிலர் பொருளவாக் கருதிபடிவரன்றி களங்கமற்ற நெஞ்சினராய்ப் படியார். களங்கமற்ற நெஞ்சினரல்லார் என்பதை அடியிற் குறிக்குஞ் செயல்களால் அறிந்துக் கொள்ளலாம்.

சிலவருஷங்களுக்கு முன்பு இச்சென்னை மின்சாரவண்டியென்னும் டிராம்வே நடாத்துதற்கு கூட்டங்கள் நியமிக்குங்கால் அக்கூட்டத்தாருடன் சேரவேண்டிச் சென்ற அசுதேசிகளிற் சிலர் டிராம்வே கம்பனியில் வேலைசெய்யுங் கண்டக்டர்கள் பறையர்களாய் இருக்கப்படாது என்றும் வேறு சாதியோராய் இருக்கவேண்டும் என்றும் பேசியது சகலருக்குத் தெரிந்த விஷயம். இவர்கள் சாக்குப்போக்கும் பறையர்களைத் தலையெடுக்கவிடாமல் செய்துவருஞ் செய்கையும் நாளுக்குநாள் உணர்ந்துவரும் ஐரோப்பியர் அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்துக் காரியாதிகள் நடத்தி வருங்கால் சொற்ப நஷ்டங்கண்டவுடன் சென்னைவாசிகள் யாவரும் நழுவிவிட்டார்கள். ஐரோப்பியர்களோ யாதுநஷ்டம் வரினுந் தளர்வடையாது காரியத்தை நடாத்தி லாபத்தை அடைந்து வருகின்றார்கள்.

டிராம்வே கம்பனியில் சேரும்போதே பறையன் சுகமடையலாகாது என்று எண்ணிக்கொண்டே அச்சங்கத்திற் சேர்ந்த பலன் பணமும் பாழாய் பாகமுந் துலைந்து பாழடைந்தார்கள்.

பறையன் கண்டக்கட்டராகவந்து எங்களைத் தீண்டப்போகாது என்ற அசுதேசிகள் தாங்களே தற்காலம் கண்டக்டர் வேலையில் அமர்ந்துகொண்டு வண்டிகளிலேறியுள்ள பறைச்சிகளிடமும் சக்கிலிச்சிகளிடமும் தோட்டிச்சிகளிடமுஞ் சென்று அருகில் நின்றுக்கொண்டு டிக்கட்டுக்கு அம்மா துட்டு கொடுங்கோ அம்மா துட்டு கொடுங்கோள் என்றுக் கேட்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

இத்தகைய செயல்களால் பார்ப்பான் என்போன் பணஞ்சம்பாதித்து முன்னுக்கு வரவேண்டிய இடங்களில் எல்லாம் சாதியாசாரங் கிடையாது.

பறையனென்போன் பணஞ் சம்பாதித்து முன்னுக்கு வரவேண்டிய இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டு. ஆதலின் இத்தேசத்தோர் சீர்திருத்தங்கள் யாவும் பறையனைப் பாழாக்கி பார்ப்பான் சுகமடையவேண்டியச் செய்கைகளிலிருக்கின்றபடியால் கதேச ஒற்றுமெயுஞ் சுதேசச் சீரும் எங்ஙனம் உண்டாகும்.

ஜப்பான் தேசத்திய இன்னோர் சிறப்புச்செயலையும் விசாரிப்பாம்.

அதாவது, ஓர் மந்திரியின் மைந்தனாயினும் ஓர் பெருத்த வியாபாரியின் சேயனாயினும் ஓர் பெருத்த உத்தியோகஸ்தனுடைய புத்திரனாயினும் தாங்கள் வாசஞ் செய்யுங் கிராமங்களை விட்டு அன்னிய கிராமங்களுக்காயினும் அன்னிய தேசங்களுக்காயினுஞ் சென்று தங்கட்கையிலிருந்தப் பணங்கள் சிலவாய்விடுமாயின் ஒருவரிடம் போய்க் கடன்கேழ்க்கமாட்டார்கள். (ரிக்ஷா) வண்டிகள் வைத்திருப்பவனிடஞ் சென்று ஓர் வண்டியை வாடகைக் கொடுத்துக்கொண்டுபோய் அவ்விடம் ஏறக்கூடிய மனிதர்களை ஏற்றிக்கொண்டுபோய் விடவேண்டிய இடங்களில் விட்டுப் பணங்களை சம்பாதித்து வண்டிக்கு உடையவனுக்குக் கொடுக்கவேண்டிய வாடகையையும் வண்டியையும் அவனிடஞ்கொடுத்து விட்டு தங்களிடமுள்ள பணத்தை வழி செலவுக்கு வைத்துக் கொண்டு வீடு சேர்வது வழக்கமாய் இருக்கின்றது.

இத்தகைய பிரபுக்களின் புத்திரர்கள் செயல்களைத் தங்கள் பெற்றோர்களிடஞ் சொல்லுவார்களானால் அவர்கள் சந்தோஷங்கொண்டு தங்கள் பிள்ளைகள் கையில் பணம் வரண்டபோது ஒருவனிடம் போய் கடன்வாங்காமலும் ஒருவனிடம் யாசகஞ் செய்யாமலும் ஒருவனிடம் களவு செய்யாமலும் தேகத்தை வருத்தி சம்பாதித்து சுகத்துடன் வந்து வீடுசேர்ந்தபடியால் எங்கள் பிள்ளைகள் தங்கள் தங்கள் சீவியகாலம் வரையில் ஆதுலர் நிலயற்று குபேர நிலையில் நிற்பார்கள் எனக் கூறுவர்.

இத்தகைய ஜப்பானிய சிறுவர்கள் செயலையும் பெரியோர்கள் மதியையும் இத்தேசத்தோர்கள் ஏற்பரோ, ஒருக்காலும் ஏற்கார்கள். அதாவது, இத்தேசத்தில் பிச்சை ஏற்பவன் பெரியசாதி என்றும் உழுதுண்பவன் சின்னசாதி என்று வகுத்து சோம்பேறி சீவனஞ் செய்துக் கொண்டு வருபவர்களாதலின் அம்மேலோர்கள் மதியஞ் செயலுங் காண்பது அரிதேயாம்.

இத்தேசத்தில் அத்தகைய மதியும் செயலும் பெற்றவர்கள் யாரென்பீரேல் பலசாதியோர்களாலும் பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைந்திருக்குஞ் சுதேசிகளேயாம். புத்ததன்ம சீலமிகுத்த சுகசீவிகளாக வாழ்ந்திருந்த சுதேசிகளை, வந்து குடியேறிய அசுதேசிகள் பறையர், பறையர் என்று தாழ்த்தி பலவகைத் துன்பங்களைச் செய்து நசித்தும், இந்த கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்திலும் அவர்களை கிராமங்களில் சுத்தசலங்களை மொண்டு குடிக்க விடாமலும், அம்மட்டர்களைச் சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை அவர்கள் வஸ்திரங்களை வெளுக்கவிடாமலும் தக்க உத்தியோகங்களில் பிரவேசிக்க விடாமலுஞ் செய்துக் கொண்டுவருகின்றார்கள்.

இவ்வகையான விரோதச் செய்கையை இன்னுஞ் செய்துக் கொண்டே வருவார்களாயின் அதிக முடிக்கியக் கயிறு அறுந்து திரும்புவது போல் அறுத்து லட்சத்திற்கு மேற்பட்டுள்ள பறையர்கள் என்போரில் ஒரு லட்சத்திற்குமேற் பட்டவர்கள் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் கருணையால் விவேகமிகுத்து தங்கள் பூர்வநிலையையும் தங்கள் சத்துருக்கள் செய்துக்கொண்டுவருங் கொடூரச் செய்கைகளையுங் கண்ணோக்கம் வைத்துக் கொண்டே வருகின்றார்கள்.

- 1:38: மார்ச் 4, 1908 -

யாது கண்ணோக்கமென்னில் இத்தென்தேசத்துள்ள வில்லியரென்னும் ஓர் கூட்டத்தார் காடுகளிலும் மலைகளிலுந் திரிந்துகொண்டு தக்க வஸ்திரம் இல்லாமலும் மலோபாதைக்குச் சென்றால் காலலம்பாமலுந் தேகசுத்தம்

இல்லாமலும் துற்கந்தம் மிகுத்தோர்களைத் தங்கள் வீடுகளில் சேர்த்துக் கொள்ளுவதும் பால், தயிர் கொண்டுவர வேண்டிய ஏவல் புரிவதுமாகியச் செயல்களில் வைத்துக் கொள்ளுகின்றார்கள். மற்றும் மலைவாசிகளாயிருந்து பூனை, நரி, ஓணான் முதலிய செந்துக்களைப் புசித்துக் கொண்டு நாகரீகமற்ற அசுத்தநிலையுள்ளவர்களைத் தங்கள் வீடுகளில் தாராளமாக நுழையவுஞ் சகல ஏவல்புரியவும் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இத்தேசத்துள் நூதனமாகக் குடியேறியுள்ளப் பராய சாதியோர்களால் பறையர் பறையர் என்று அழைக்கும்படியானவர்களோ பெரும்பாலும் பயிரிடும் வேளாளத் தொழிலாளரும் அரண்மனைத் தொழிலாளருமாய் இருப்பார்களன்றி வேறு மிலேச்சத்தொழில் கிடையாது.

இத்தகைய சுத்ததேகிகளை கிராமங்களில் சுத்தசலம் மொண்டு குடிக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலுந் தடுத்து இவர்கள் சுகத்தைக் கெடுப்பதுமல்லாமல் இவர்கள் உத்தியோகத்திற்குச் செல்லுமிடங்களிலுஞ் சத்துருக்களாயிருந்துக் கெடுத்துவருவதையும் நாளுக்குநாள் உணர்ந்தும், தங்களை தலையெடுக்கவிடாமல் செய்பவர்களை சத்துருக்கள் என்று எண்ணாமல், மித்துருக்களாகவே எண்ணி தங்கள் கஷ்டசீவனங்களையுஞ் சுகசீவனமாக நடத்திவருகின்றார்கள்.

அதன் காரணம் யாதெனில், தங்கள் சற்குருவாகிய புத்தபிரான் போதித்துள்ள நீதி நெறிகளில் பகைகொண்டவர்களை பகையால் வெல்லலாகாது, சாந்தத்தால் வெல்லலாமென்றும், பொறாமெய் கொண்டவர்களைப் பொறாமேயால் வெல்லலாகாது, அன்பால் வெல்லலாம் என்றும் போதித்துள்ளபடியால் அப்போதனையை சிரமேற்கொண்டக் குடிகள் யாவரும் இவ்வாயிரத்தி ஐந்நூறு வருஷகாலமாகப் பகைப் பொறாமைகளைப் பெருக்கிக்கொள்ளாமல் சாந்தமும் அன்பையுமே பெருக்கிக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

மற்றுஞ் சிலர் வாசஞ்செய்யும் கிராமங்களில் வேஷ பிராமணர்கள் வந்துவிடுவார்களானால் அவர்களை அடித்துத்துறத்திச் சாணச் சட்டியைக் கொண்டுபோய் உடைப்பது வழக்கம். அவ்வழக்கமானது பகையாலும் பொறாமெயினாலுஞ் செய்வதல்ல. தங்கள் புத்தசங்கங்களையும் அரசாங்கங்களையும் தன்மகன்ம குருபீடங்களையும் அழித்துத் துன்பஞ் செய்தவர்கள் இக்கிராமத்துள்ளும் வந்து இன்னுமென்னத் துன்பஞ் செய்வார்களோ என்னும் பீதியாலும் இவர்கள் இத்தேசத்துள் வந்து குடியேறியது முதல் ஞானமும் வானமுங் குன்றி தேசம் சீரழிந்து வருகிறபடியாலும் இக்கிராமத்துள் இவர்கள் வருவதினால் தற்காலம் இருக்குஞ் சொற்ப சுகமுங் கெட்டுப் பாழாகி விடுவோமென்னும் எண்ணத்தினாலுமேயாம்.

இத்தகைய பகையும் பொறாமெயுங் கொள்ளாது சாந்தமும் அன்பையும் பெருக்கிக் கொண்டுவருங் குடிகள் இதே நிலையில் இருக்க மாட்டார்கள். அதாவது, மகாஞானிகள் வகுத்துள்ள நீதிவாக்கியத்தின்படி தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்படுவதற்கும் உயர்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்படுவதற்கும் ஓர் காலம் வரும். ஆதலின் இத்தென்னிந்தியாவில் பறையர் என்று தாழ்த்தப்பட்டப் பூர்வக்குடிகள் ஓர்கால் உயர்த்தப்படுவார்கள் என்பது, சத்தியம். அவ்வகை உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாந் தாழ்த்தி நிலைகுலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தி துன்பஞ் செய்யாவிடினும் அவரவர்கள் செய்துவந்த தீவினைகள் தங்களையே சுட்டுப் பாழாக்கிவிடும்.

அவ்வகையாகத் தங்கள் தீவினை தங்களைச் சுட்டுப் பாழாக்குவதற்குமுன் தங்கள் தங்கள் நல்வினையைப் பெருக்கி சகலசாதியோரையுஞ் சகோதிர ஒற்றுமெயில் நெறுக்கி ஆதரிப்பார்களேல் சுதேச கல்வியும் சுதேசக் கைத்தொழிலும் சுதேசச் செல்வமும் பெருகி சுதேச சிறப்புண்டாகுங்கால் சுயராட்சியந் தானே நிலைக்கும். அங்ஙனமின்றி சாதிபேதம் என்னும்

அரண்கட்டி சமய பேதமென்னும் அகழி தோண்டி ஒற்றுமெய் அற்ற ஒன்பது கோடி படையைக் கொண்டவன் சாதிபேதமற்ற அரண் சமயபேதமற்ற அகழி ஒற்றுமெய்க்கொண்ட படை ஒரு நூறுடையவனை ஜெயிக்கமாட்டான் என்பது திண்ணம்.

- 1:40; மார்ச் 18, 1908 -

ஆதலின் சுதேசியமென்பதும் சுயராட்சியம் என்பதும் ஒற்றுமெயால் நிலைக்குமேயன்றி ஒற்றுமெய்க்கேட்டால் நிலைக்காவாம். நமது தேசம் ஒற்றுமெய்க்கேட்டில் இருப்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறியலாம்.

அதாவது தற்காலந் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் நடந்தக் கலகத்தைப்பற்றி கலைக்ட்டரும் மற்றுமுண்டான ஜட்ஜுகளும் சில சுதேசிகள் என்போரைத் தருவித்துப் பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் வாசித்தவர்களாயிருந்தும் உங்களுக்கான ரிக்கார்டுகளையும் உங்கள் தேச சுகாதாரத்திற்கென்று கட்டியிருந்தக் கட்டிடங்களையும் இடித்துப் பாழாக்கி விட்டீர்களே இனி அக்கட்டிடங்களையும் ரிக்கார்டுகளையும் புதுப்பிக்க வேண்டுமானால் உங்கள் துகைகளைக்கொண்டே செய்ய வேண்டியதா யிருக்கின்றபடியால் ஏழைக் குடிகளுக்கு இடுக்கண் செய்பவர்கள் நீங்களாக இருந்துக்கொண்டு இராஜாங்கத்தின்பேரில் வருத்தப்படுவதில் யாதுபயன். உங்கள் கைபைக் கொண்டு சிரசிற்குட்டி நோயெடுக்கின்றதென்னில் அதனை யார் சகிக்கவேண்டிய தென்றார்களாம். அதற்கு சுதேசிகள் என்று ஏற்பட்ட பெரியமனிதர்கள் யாதுமறுப்புக் கூறினார்களாம் என்றால், ஐயா நாங்கள் எல்லோரும் வாசித்தவர்கள் அவ்வகை வேலை செய்யமாட்டோம் இவ்விடம் வாசஞ்செய்யுந் தாழ்ந்த வகுப்பார்களே கூடி இத்தகைய கெடுதிகளை உண்டுசெய்து விட்டார்கள் என்று கூறினார்களாம்.

அந்தோ! பிள்ளையுங்கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் காரியாதிகளை அந்தரங்கத்தில் முடிவுசெய்து பகிரங்கத்தில் ஏழைகளைக் காட்டிக்கொடுக்கின்றார்கள். இதை நந்தேயத்தார் கவனிக்காமலிருப்பது கவலையேயாம்.

அதாவது தற்காலம் நமது தேசத்தில் சுதேசிகள் சுதேசிகள் என்றுக் கூச்சலிடுவோர் எதார்த்த சுதேசிகளா அன்றேல் சமயசுதேசிகளா என்று ஆராயவேண்டியது அவசியமாகும். ஏனென்பீரேல், எதார்த்த சுதேசிகளாய் இருப்போர் தங்கள் சுதேசத்தை சீர்திருத்துங்கால் காரியத்தின்பேரிற் கண்வைத்து நுண்ணிய கருமமாயினும் முன்பின் எண்ணிசெய்வார்கள். அங்ஙனம் எண்ணாது ஏழைக்குடிகளை இடுக்கத்திற்கு உள்ளாக்குவோர் எதார்த்த சுதேசிகளாவரோ, ஒருக்காலும் ஆகார்கள், சமயசுதேசிகளேயாம்.

இதன்பகரமாய் ஓர் நியாயநிலையுண்டு. அதாவது இரண்டு ஸ்திரீகள் ஒரு குழந்தையைப் பிடித்துக்கொண்டு இது என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை அல்லவென்று பெரும் போரிட்டு முடிவில் நியாயாதிபரிடஞ் சென்றார்கள். நியாயாதிபரோ அவ்விரு மாதர்களையும் நேரில் அழைத்து விசாரிணைப்புரியுங்கால் அக்குழந்தையை இருவருந் தங்கள் தங்கள் குழந்தையென்றே சாதித்தார்கள். அவ்விருவருக்குந் தக்கசாட்சியம் இல்லாமற்போனதால் நீதியதிபர் அவர்களை நோக்கி நீங்கள் இருவரும் குழந்தையை என்னுடையவை என்னுடையவை என்று கூறுகிறபடியால் உங்களிருவருக்கும் பொதுவாய்க் குழந்தையைக் கொன்றுவிடும்படித் தீர்ப்பு செய்கின்றேன், யாதுசொல்லுகிறீர்கள் என்றார். அதில் என் பிள்ளையென்றுப் பொய்க்கூறியவளோ அப்படியே கொன்றுவிடலாம் என்றாள். அக்குழந்தையைப் பெற்றவளோ நீதியதிபரை நோக்கி ஐயன்மின் தாங்கள் அக் குழந்தையைக் கொலைபுரிய வேண்டாம் அவளிடமே கொடுத்து விடுவீராயின் கண்ணிலேனும் பார்த்திருப்பேன் என்று மன்றாடினாள்.

அதை அறிந்த நீதியதிபர் குழந்தையை கொலை புரிய வேண்டாம் என்று மன்றாடுகிறவளே ஈன்றவள் என்றும் கொலைபுரியலாம் என்பவள்

ஈணாமலடியென்றும் உணர்ந்து பெற்றவள் பால் மகவை அளித்துப் பெறாதவளைப் பிழைக்குள்ளாக்கினார்.

அதுபோல் தற்காலஞ் சுதேசியம் என்னும் கூட்டத்தலைவர்கள் எதார்த்த சுதேசிகளாயிருப்பார்களாயின் குடிகளுக்குத் துன்பம் நேரிடாமல் தங்களுக்கும் அபகீர்த்திவராமல் வீரியத்தை அடக்கிக் காரியத்தின்பேரில் கண்ணோக்கம் வைத்து செவ்வனே சீர்திருத்தி சுதேசீயத்தை நிலைக்கச் செய்வார்கள்.

அங்ஙனமின்றி முன்பின் பாராமலே சிலகாரியங்களைச் செய்து ஏழைகளையும் ஏழைச்சிறுவர்களையும் பாழ்படச்செய்வதைப்பார்க்கில் சுயப் பிரயோசனக் கேட்டால் எதார்த்த சுதேசிகளை கெடுக்குஞ் சமயசுதேசிகள் என்றே தீர்த்தல் வேண்டும்.

அதாவது, கல்கத்தாவில் கவர்னர் ஜெனரலாயிருந்த கர்ஜன் பிரபு அவர்கள் இந்தியாவையும் இந்தியாவிலுள்ளக் குடிகளையும் அவரவர்கள் சிறப்பையும் ஆராய்ச்சி செய்யுங்கால் தங்களாளுகையில் இவ்விடமுள்ள சில சாதியோர்மட்டுஞ் சருவசுகங்களை அநுபவித்து ஏனையசாதியோர் இடுக்கத்தில் இருப்பதை உணர்ந்து சகல சாதியோருஞ் சுகத்தை அனுபவிக்கத்தக்க ஏதுக்களையும் அதற்குத்தக்க சட்டங்களையும் நியமிக்க ஆலோசிக்குங்கால் சுயப்பிரயோசனக் கூட்டத்தார் அதன் சுருக்கம் உணர்ந்து கர்ஜன் பிரபுவின் கண்ணோக்கத்தைக் கலைக்க ஆரம்பித்ததுமன்றி சுதேசியம் என்னும் பொய்க்கூத்திட்டு தற்காலங்குடிகளுக்குள்ள சொற்ப சுகங்களையுங் கெடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.

- 1:42: ஏப்ரல் 1, 1908 -

இவர்கள் வாஸ்தவ சுதேசிகளாயிருந்து சுதேசியத்தை நிலைநிறுத்த முயல்வார்களாயின் ஏழைக்குடிகளை முன்னுக்கு இழுத்துவிட்டுத் தாங்கள் பின்னிடையமாட்டார்கள்.

சமய சுதேசிகளாகத் தோன்றினவர்களாதலின் இத்தியாதி கேடுகளை விளைவித்து ஏழைக்குடிகளை இராஜாங்கத்தாருக்கு எதிரிகளாக்கி விடுகின்றார்கள். இதன் பகரமாய் சகலசாதியோரும் ஒற்றுமெயாய்க் கூடியுள்ள நாஷனல் காங்கிரசென்றும் சகல சாதியோரும் சமரசமாய் ஏற்பட்டுள்ள சுதேசியக் கூட்டம் என்றும் வெளிவந்துள்ளவர்கள் எதார்த்த வாதிகளாய் இருப்பார்களாயின் இந்த ஏப்ரல்மீ 4உ சனிவாரம் வெளிவந்த மெயில் பத்திரிகையில் (வில்லேஜ் போலீஸ்) அல்லது வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டென்று குறிப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதியான் தப்பிதம் செய்வானாயின் அவனை சத்திரத்திலேனுஞ் சாவடியிலேனும் சில மணிநேரம் இருக்கச்செய்வதும், தாழ்ந்த சாதியான் தப்பிதஞ் செய்வானாயின் அவனைத் தொழுக்கட்டையில் மாட்டிவைக்கவேண்டுமென்றும் உத்தேசங் கூறியிருக்கின்றார்கள். ஆனால் இவர்களுஞ் சுதேசிகளாம்.

நாஷனல் காங்கிரஸ் நாடோடிகளே, சுதேசிய சூரர்களே, சற்று நோக்குங்கள். பெரியசாதி என்போன் பூசுணைக்காய்த் திருடினால் சிறிய திருட்டு, சின்னசாதி என்போன் பூசணிக்காயைத் திருடுவானாயின் பெரியத்திருட்டாமோ. பெரியசாதி என்போன் நெல்லைத் திருடினால் சொல்லாலடிப்பதும் சின்னசாதி என்போன் நெல்லைத் திருடினால் கல்லாலடிப்பதுபோலும். அந்தோ! கறுப்பர்களுக்கு ஓர் சட்டமும் வெள்ளையர்களுக்கு ஓர் சட்டமும் மாறுபடவேண்டுமோவெனக் கண்டு கேட்டவர்கள் உயர்ந்த சாதியானுக்கு ஓர் சட்டமும், தாழ்ந்த சாதியானுக்கு ஓர் சட்டமும் உண்டாவென உத்தேசிக்க இடம் இல்லாமல் போயதுபோலும்.

இந்த தாழ்ந்தசாதி சட்டத்தையும் உயர்ந்தசாதி சட்டத்தை கர்ஜன் பிரபு கண்ணிற் காண்பாராயின் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரும் மெய்யர்களே. சுதேசிகள் என வெளிவந்தவர்களும் மெய்யர்களே, என்று மெச்சிக் கொண்டாடுவார். வெள்ளையர்களுக்கு ஓர் சட்டமும் கறுப்பர்களுக்கு ஓர் சட்டமும் உண்டோவெனக் கரந்துகரந்து பத்திரிகைகளில் வரைந்தவர்கள் கண்ணுக்குத் தாழ்ந்தசாதி சட்டமும் உயர்ந்த சாதி சட்டமும் தெரிந்தும்

தெரியாதது போல் இருக்கின்றார்கள். காரணம் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங் கருதியேயாம். இத்தகைய சுயப்பிரயோசனங்கருதுவோருக்கு சுதேசியம் என்பதும் ஓர் கேடாமோ, இன்னும் படவேண்டியதும் பாடாமோ விளங்கவில்லை.

1816 வருஷத்திலும் 1821 வருஷத்திலும் தொழுக்கட்டையின் தண்டனை ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே. ஆனால் அக்காலத்தில் இருந்த குடிகள் அவற்றைக் கவனிக்காமல் இருந்துவிட்டார்கள். அதனினும் அக்காலமோ தட்டிக்கேட்க ஆளில்லாது தம்பி சண்டப்பிரசண்டகாலம். தற்காலமோ, புத்தமார்க்கம் வெளிவந்த பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு காலம். இத்தகைய நீதியும் நெறியும் நடுநிலையம் வாய்ந்த ராஜாங்கத்தில் தாழ்ந்த சாதிக்கோர் சட்டமும் உயர்ந்த சாதிக்கோர் சட்டமும் பிறக்கக்கூடுமோ, ஒருக்காலுங் கூடா.

உயர்ந்த சாதி என்னும் காலமுந் தாழ்ந்தசாதி என்னும் பொறாமெயும் தன்கு வாசித்தவர்களிடம் இருக்குமாயின் கல்வியற்றக் கசடர்பால் எவ்வளவிருக்கும் என்பதை பொது சீர்திருத்தக்காரர் கவனிக்கவேண்டியதேயாம்.

இவ்வகையான சீர்திருத்தங்களை ஒருவருக்கொருவர் விரோதமின்றி ஐக்கியமடையத்தக்க அன்பினைகளையும் கைத்தொழிற் சாலைகளையும் இயந்திரசாலைகளையும் நியமிக்காமல் குடிகளுக்கும் அரசுக்கும் விரோதத்தை உண்டுசெய்துவிட்டு எங்கள் சாதிக்கோர் சட்டம் உங்கள் சாதிக்கோர் சட்டம் இருக்கவேண்டும் என்பது விவேகிகளின் சீர்திருத்தமாமோ. இந்த ஒரு வருஷகாலத்தில் ஐரோப்பியர்களால் நடக்கும் பீரங்கியையும் பெருந்தீயை ஐந்து நிமிஷத்தில் அவிக்கக்கூடிய மருந்துங் கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

இத்தகைய அரிய வித்தைகளைக் கண்டு எல்லோரையும் ஆதரிக்க வல்லவர்களைப் பெரியசாதி என்று கூறலாமா. அன்றேல் ஊர் குடிகளைக் கெடுத்து ஊரார் சொத்துக்கு உலை வைத்து உள்ளவற்றையும் கெடுப்போர்களைப் பெரியசாதி என்று கூறலாமா. ஒவ்வொரு விவேகிகளும் இவற்றை ஆழ்ந்து ஆலோசிப்பரேல் நம்தேயத்தின் பெரியசாதிகள் என்னும் பேச்சுப் பேயநிலை என்றே விளங்கும்.

சாதிபெரிது, ஜமாத்துப் பெரிதென்று ஓர் மனிதன் வெளிவருவதைப் பார்க்கினும் வித்தை பெரிது, விவேகம் பெரிதென்று ஓர் மனிதன் வெளிவருவானாயின் அவனையே மநுகுல சிரேஷ்டரென்று கூறத்தகும்.

வித்தை, புத்தி, புகை, சன்மார்க்கம் இல்லா வீணர்கள் வாசஞ்செய்யும் நாடும் விவேகமற்றோன் வீடும் வீணே கெட்டழியுமன்றிவிருத்தி பெறாவென்பது திண்ணம்.

- 1:44; ஏப்ரல் 15. 1908 -

வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் என்னும் நான்கு சாதனங்களில்:-

பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டாம், வீணருக்கு வித்தைவரில் சொத்தையுண்டாம் எனும் பழமொழிக்கிணங்க நமது தேசத்திலுள்ளப் போலிகளிற் சிலர் பாரீசுதேசஞ்சென்று குண்டுமருந்து வித்தைகளைக் கற்றுக்கொண்டுவந்து பெண்டுகளைக் கொன்று பேரெடுத்த சொத்தைச் சொல் இவர்களது நித்தியத் தலைமுறை தலைமுறைக்குங் குலக்குறை கூறிக்கொண்டே வருவது திண்ணம்.

இதுதானோ சுத்தவீரம் இதுதானோ வித்தையைக் கற்ற புத்தி. இவர்கள் தானோ சுயராட்சியம் ஆளப்போகிறவர்கள். இல்லை, இல்லை. முதற்கோணல் முற்றுங்கோணல் என்பதுபோல் குண்டுப்போடும்போதே பெண்டுகளைப் பார்த்து சுட்ட சுத்தவீரர்கள் கையில் கத்திகளை ஏந்துவார்களாயின் வத்தலறுத்து ஊறுகாய் போடுவார்கள் என்பது நிட்சயம். இத்தகைய சுத்தவீரர்களைப் பற்றி நமது தேசத்திய தமிழ் பத்திராதிபர்களாகும் பித்தவீரர்கள் போற்றுவது யாதெனில்:-

குண்டுமருந்து கற்றுக்கொண்டுவந்து பெண்டுகளைச் சுட்டு பேலபீதவிழிக்குந் தெண்டசோற்றுராமர்களைப் போல் சுத்தவீரர் யாரும் இல்லை என்றும் அதிகாரிகள் அவர்களைப் பிடித்துக் கேழ்க்குங்கால் தாங்களே

பயப்படாமல் செய்தோம் என்று சொல்லுகிறார்கள் என்று சந்தோஷங் கொண்டாடுவதுடன் மற்றவர்களுக்கும் இத்தகைய ஈனகுணம் பிறக்கத்தக்க உற்சாகமாகவும் எழுதிக் கொண்டுவருகின்றார்கள்.

இவைகள் யாவும் சுதேசத்தை சீர்திருத்த வேண்டும் என்றும் சுயராட்சியம் அளவேண்டும் என்றும் கோறும் நல்லெண்ணம் உள்ள மேன்மக்களின் எண்ணங்களாகக் காணவில்லை. சுதேசத்தை இப்போது சீர்கெடுத்துள்ளதை விட இன்னுஞ் சீர்கெடுத்துப் பாழாக்கிவிடவுஞ் சுயராட்சியஞ் சுயராட்சியம் என்னும் நயவஞ்சக சுயப்பிரயோசனப் பாட்டுகளைப் பாடிக்கொண்டு, “பிள்ளையையுந் துடையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல்” இராஜாங்கத்திற்கும் குடிகளுக்கும் கலகத்தை உண்டாக்கிவிட்டு மத்திய பஞ்சாயத்தில் மகிழ்ச்சிப் பெற்றுக் கொள்ளுங் கீழ்மக்கட் செயல்களாகவே காணப்படுகின்றது.

அத்தகைய வீண்மக்கள் செயல்களை நமது தேசப் பூர்வக் குடிகள் ஆழ்ந்தாலோசிக்காமல் நயவஞ்சக சுயப்பிரயோசனக்காரருடன் சேர்ந்துக் கொண்டு நம்மையும் நமது நாட்டையுஞ் சீர்குலைத்துக் கொள்ளுவது அழகன்று.

நம்மையும் நமது நாட்டையுஞ் சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் முன்பு நமது வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நான்கையும் விளக்கி சாதிநாற்றம், சமயநாற்றங்களைத் துலைத்துநிற்போமாயின் நாடுஞ் சீர்பெற்று நாமுஞ் சீரடைவோம்.

இத்தகைய சீர்திருத்தங்களை ஆலோசிக்காது எங்கள் சுத்தவீரர் அக்கினியாஸ்திரம் கண்டுபிடித்து இரண்டு பெண்பிள்ளைகளைக் கொன்றுவிட்டார்கள் என்றால் உங்கள் அக்கினியாஸ்திரத்திற்கு ஆங்கிலேயர் அஞ்சுவர்களோ ஒருக்காலும் அஞ்சார்கள். அவர்கள் சீர்மையில் இருந்து விட்டிருக்கும் கவுன்சல் மெம்பர்கள் என்னும் (நீராஸ்திரமானது) யூரேஷியர்கள், மகமதியர்கள், நேட்டீவ் கிறிஸ்தவர்கள், சாதிபேதமில்லா திராவிடர்கள் இந்நான்கு கூட்டத்தார் மனதையுங் குளிரவைத்து மறுபடியும் சீர்மைக்குப் போயிருக்கின்றது. அத்தகைய விவேகமிகுத்த நீராஸ்திரத்தால் குளிர்ந்துள்ள யூரேஷியர், மகமதியர், நேட்டிவ் கிறிஸ்தவர், சாதிபேதமில்லா திராவிடர்களாகியப் பெருங்கூட்டத்தார் முன்பு உங்கள் அக்கினியாஸ்திரம் வீசுமோ. உங்கள் சுதேசியம் என்னும் வார்த்தை நிலைக்குமோ; ஒருக்காலுமில்லை.

- 1:48: மே 13, 1908 -

காரணம் யாதென்பீரேல், சுதேசிகள் சுதேசிகள் என வாய்ப்பறையடிக்குஞ் சீர்திருத்தக்காரர்கள் சுதேசிகளை யாவர், என்று நிலைக்கச் செய்துக் கொண்டார்கள். ஒருவரும் நிலையில்லையே.

நிலையுள்ள யூரேஷியர்கள் முன்பும் நிலையுள்ள மகமதியர்கள் முன்பும் நிலையுள்ள சுதேசக் கிறிஸ்தவர்களின் முன்பும் இத்தேசப் பூர்வக் குடிகளாகும் சாதிபேதமில்லா திராவிடர்களின் முன்பும் வாய்ப்பறை சுதேசியம் வலு பெரும் என்பது வீண்பறை. ஆதலின் வெடிகுண்டாம் அக்கினியாஸ்திர கொடூரமும் சுயராட்சிய கோரிக்கையும் நிலைபெறாதென்று கூறினோம்.

ஒரு கவர்ன்மெண்டு ஆபீசுக்குள் பிராமணர் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் போய் சேர்வாரானால் ஒருவருஷம் இரண்டு வருஷத்திற்குள்ளாக அந்த ஆபீசு முழுவதும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களையே சேர்த்துக் கொள்ளுகின்றார்கள். இத்தகைய சுஜாதீயபிமான சுயப்பிரயோசனம் விரும்புவோர் வாசஞ் செய்யும் இடத்தில் சுயராட்சியம் கொடுத்துவிட்டால் யார் சுகமடைவார்கள், யார் அசுகமடைவார்கள் என்பதை வித்தை புத்தியில் மிகுத்த மேன்மக்களாகும் ஆங்கிலேயர்கள் அறியார்களோ. சகலமும் அறிந்தே தங்களது ராட்சியபாரத்தைத் தாங்கிவருகின்றார்கள்.

இத்தேசத்துப் பூர்வக்குடிகளோ தங்களுடைய விருத்திகளையும் குடியேறியுள்ள சுயப்பிரயோசனக்காரர்கள் விருத்திகளையும், அவர்கள்

சமயத்திற்குச் சமயம் மாறுதலடையும் தந்திரங்களையும் தாங்கள் வயிற்று சீவனத்திற்குப் போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரங்கள் கிடையாது. மற்றவர்கள் வயிற்று சீவனத்திற்கு ஏகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டு என்றும் வகுத்துவைத்திருக்கும் சமயோசிதங்களையும் நன்காராய்ந்தறியாமல் தங்களை தாழ்ந்தசாதி என்று ஒடுக்கிக்கொண்டு இத்தேசத்திற்கு அன்னியப்பட்டவர்களும் அடியோடு குடிகெடுப்போர்களுமாகிய பராயர்களைப் பெரியசாதி என்று உயர்த்திக் கொண்டு வருமளவும் அவர்கள் தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய் செய்துவரும் சூதிலும் வஞ்சினத்திலும் குடிகெடுப்பிலும் பெரியசாதி என்னும் பெருமெயிலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இலிங்கத்தைக் கண்டால் பண்டாரம் என்றும் நாமத்தைக் கண்டால் தசரியென்றுங் கூறுவதுபோல் காரியாதிகளை நடத்தி தேசம் பாழானால் என்ன, தேசக்குடிகள் கெட்டால் என்ன, தேசஞ் சீரழிந்தால் என்ன என்னும் சுயப்பிரயோசன நோக்கத்திலிருக்கின்றார்கள்.

மற்றவர்களோ இவர்களின் நயவஞ்சகம் அறியாமல் விவேகமும் வித்தையும் அன்புமிகுத்த அரசாங்கத்தை சுட்டுக்குருவி பருந்தை எதிர்ப்பது போல் எதிர்த்து பாழடைகின்றார்கள்.

ஏனப்பா, பந்தயத்தில் தோற்றுப்போனீரே என்றால் இன்னும் போடும்பந்தயம் என்பது போல் வீராப்பிடுவதைவிட்டு நான்கு படி அரிசிவிற்கும் பஞ்சகாலமாயினும் நன்குநிலைத்து அரை வயிற்றுக் கஞ்சேனும் அன்பாய் புசித்து ஆறுதலடைந்து வருவது ஆங்கிலேயர் அரசாட்சியின் செயலா அன்றேல் சுதேசிகளென வெளி வந்துள்ள சுயப்பிரயோசனக்காரர் செயலா என்று ஆராய்வரேல் சகலசாதியோர் சுகசீவனங்கள் யாவும் ஆங்கில அரசாட்சியின் அன்பின் மிகுதியால் அடைந்துள்ளோம் என்று அறிந்து ஆனந்தக்கூத்தாடி அவர்கள் அரசாட்சியும் அவர்கள் சீவியமும் என்றும் வாழ்கவாழ்த்தி இதயங்குளிர நிற்பார்கள்.

இத்தகைய நன்றியை மறந்து சுதேசியம் என்னும் படாடம்பங் கொண்டு பூச்சிக் காட்டிவருவரேல் பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாதென்னும் பழமொழிக்கிணங்க ஆங்கிலேயர்கள் இவ்வகைய வூளைமிரட்டுக்கும் புறட்டுக்கும் அஞ்சாமல் உள்ள சுகத்தையும் கெடுத்துப் பாழாக்கிவிடுவார்கள். அப்பாழும் அவர்கள் செய்வதன்று, சுதேசிகள் என்போர் செய்கைகளே இவர்களைப் பாழாக்கிவிடும் என்று அஞ்சுவதுடன் எதார்த்த சுதேசிகளையும் பாழாக்குமே என அஞ்சுகிறோம்.

- 1:50; மே 27, 1908 -

பிள்ளையார் முதுகைக் கிள்ளிவிட்டு நெய்வேத்தியங் கொடுப்பதுபோல் ஆங்கிலேயர் ஆயிரம் இரண்டாயிரஞ் சம்பளம் பெற்றுக் கொண்டு பஞ்சத்திற்குப் பரிந்து பாடுபடுகின்றார்கள் என்றும், இத்தேசத்தில் இரயில் வண்டிகள் ஓடுவது ஆங்கிலேயர்களுக்கே சுகமென்றும் இரண்டு பத்திரிகைகளில் வரைந்துள்ளதைக் கண்டு மிக்க விசனிக்கின்றோம். பிரிட்டிஷ் துரைத்தனத்திற்கு முன்பு எத்தேசத்திற் பஞ்சங்களுண்டாயதோ அத்தேசம் முழுவதும் பாழடைவது சுவாபம் என்பதை பத்திராதிபர்கள் அறியார் போலும். அங்ஙனம் அறிந்திருப்பார்களாயின் பஞ்சகாலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் படுங்கஷ்டங்களைப் பரிகசிக்கமாட்டார்கள்.

குதிக்கமாட்டாதவன் கூத்தைப் பழித்தான் பாடமாட்டாதவன் பாட்டைப் பழித்தான் என்னும் பழமொழிக்கிணங்க சாமிக்கதைச் சொல்லும்போதே சூத்திரன் கேட்கப்பட்டாதென விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது யாருக்கிட்டு யாரை விலக்குவார்கள் என்பது தெரியாதோ. ஆடு நனையுதென்று ஓனாய் குந்தியழுவதுபோல் ஏழைகள் யாவரும் பஞ்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள் என்றுக் கூச்சலிடும் கனவான்கள் தங்கள் திரவியங்களைச் சிலவிட்டு பஞ்சத்தை நிவர்த்திப்பதுண்டோ இல்லையே. ஏழைகளைக் கார்க்க ஆங்கிலேயர்கள் ஏதேனும் உதவி செய்வார்களானால் அந்தத் துகையிலேயே லாபஞ் சம்பாதித்துத் தாங்கள் பெண்சாதி பிள்ளைகளைக் காப்பாற்றிக்

கொள்ளும் படியானவர்களுக்கு ஏழைகளின்மீது இதக்கம் உண்டாமோ, ஒருக்காலும் உண்டாகாது. காரணம்:-

தற்காலம் இந்தியர்களின் இதக்கமின்மெயேயாம். இதக்கமும் மாநூஷீக தண்மெயும் இருக்குமாயின் ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களாக திராவிட, பௌத்தர்களை அழித்துவிடவேண்டும் என்னும் எண்ணத்தினால் பறையர்கள் என்னும் தாழ்ந்தசாதிகளென வகுத்து கழுவிலுங் கற்காணங்களிலும் வசியிலும் வதைத்துக் கொன்ற பாவிகள் இன்னும் அவ்வஞ்சகம் நீங்காமல் கிராமங்களிலுள்ளப் பறையர்கள் என்போர் வீடுகளின் ஓரமாகத் திண்ணைகளை வைத்து கட்டவிடாமலுஞ் சுத்த சலங்களை மொண்டு குடிக்கவிடாமலும் அரை வயிற்றுக் கஞ்சிக்கேனுந் தக்க கூலி கொடாமலும் பொது சத்திரங்களில் தங்கவிடாமலும் வதைப்பார்களா, வதைக்க மாட்டார்கள். தற்கால இந்தியர்கள் என்போர் இதக்கமும் மானுஷீக தண்மெயும் அற்றவர்களேயாவர். ஆதலின் இப்பஞ்சகாலத்தில் ஆங்கிலேயர் செய்துவரும் முயற்சியை இகழ்ச்சியாகக் கூறி இதக்கமுற்றவர்போல் நடிக்கின்றார்கள்.

இவர்கள் நடிப்பு எதார்த்தமாயின் இந்தியருக்குள் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் பெரும்படியானவர்கள் யாரேனும் முன்னுக்கு வந்து தங்கள் பணங்களைக் கொடுத்து பஞ்சத்தில் பாடுபடும் ஏழைகளைப் பாதுகாக்கின்றார்களா அதுவுமில்லையே. கொடுக்கவும் கையாலாகாது, விடுக்கவும் ஆசைவிடாத பாவிகள் இப்பஞ்சகாலத்தில் கொடுத்து ஆதரிக்கும் ஆங்கிலேயர் மனதையும் புண்படுத்தப்பார்க்கின்றார்கள். ஆனால் ஆங்கிலேயர்களோ சாதிவேஷம்போட்டு சகல குடிகளையும் கெடுக்காமல் நீதிவேஷத்தினின்று நெறியைக் கையாடுவோர்களாதலின் இவர்களது கெடுமதிச்சொல் அவர்கள் நடுநெறியிலேறாவாம்.

சுதேசிகள் என வெளிவந்தோர் சுதேச ஏழைகள் பஞ்சகாலத்தில் படுங் கஷ்டங்களை உணர்ந்து அவர்களை ஆதரிக்கவேண்டிய முயற்சியிற் சிறந்து கனவான்களின் திரவியங்களை இரந்து ஏழைகள் அடைந்துள்ள பஞ்சத்தை நிவர்த்திப்பார்களாயின் இவர்களே எதார்த்த சுதேசிகளாவர். அங்ஙனமின்றி ஓட்டுப்பெயர் எழுதி மொட்டைக் கடிதாசிகள் விடுத்து பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரை வீண் விரோதத்திற்கு உள்ளாக்குவதே சுதேசியம். பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் இந்திய சக்கிரவர்த்தினி மாதா குயின் விக்டோரியம்மைக்குப் பட்டங்கட்டியகால் இல்லாத சுதேசிய மாதா இப்போது எங்கிருந்து தோன்றினாள். இவ்விந்துக்களின் சுதேச மாதாவை யீரோஷியர் எற்பரோ, மகமதியரேற்பரோ, சுதேசக் கிறிஸ்தவர்களேற்பரோ, அறுபதுலட்சத்திற்கு மேற்பட்ட சாதிபேதம் இல்லா திராவிடர்கள் ஏற்பரோ, ஏற்கார்கள்.

- 1:51; சூன் 3, 1908 -

அதாவது ஓர் தமிழ்ப்பத்திராதிபர் பஞ்சகாலத்தில் ஆங்கிலேயர் படும்பாடுகள் யாவும் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு செய்துவருகிறார்கள் என்று பொறாமேயால் போதித்துள்ள போதிலும் மற்றோர் தமிழ்ப்பத்திராதிபர் இருப்புப்பாதைப் போட்டிருக்குஞ் சுகம் யாவும் இங்கிலீஷ்காரருக்கே என்று இருமாந்துக் கூறும் இவரது விருத்திபுத்தியை என்னென்று கூறுவாம். இவரும் இவரது பந்துக்களும்கூடி இன்னும் ஓர் இருப்புப்பாதையை ஏற்படுத்தி இல்லா சுகத்தையேன் அனுபவிக்கப்படாது. சேர்த்த பணத்தை சிலவுஞ் செய்யார்கள். பார்த்தசுகத்தை பொருக்கவும் மாட்டார்கள்.

இத்தகைய பொறாமெய் குணம் வாய்த்த இன்னும் பத்து விவேகிகள் இந்தியாவில் இருப்பார்களாயின் இருக்கும் சுகமும் கெட்டு கலிக்காவதாரம் எப்போது தோன்றும், இந்திய மாதா எப்போது வருவாளென்று இஞ்சித்தின்னக் குரங்கைப்போல் இளிக்கவேண்டி வரும்.

இருப்புப்பாதை ரதங்களில் இந்தியர்களுக்கு எத்தனை ரதங்கள் பூட்டப்பட்டிருக்கின்றது. ஐரோப்பியர்களுக்கு எத்தனை ரதங்கள் பூட்டப்பட்டிருக்கின்றது. இந்தியர்கள் எத்தனை உற்சவப் பிரயாணம் செய்கின்றார்கள்.

ஐரோப்பியர்கள் எந்த உற்சவப்பிரயாணஞ் செய்கின்றார்கள். இந்தியாவில் ஐரோப்பியர் செய்திருக்கும் உபகாரங்களில் இருப்புப்பாதையின் உபகாரமே மிக்க மேலானதென்று உரைக்கவேண்டும்.

காரணம்:- செங்கற்பட்டினின்று சென்னை வந்து சேரவேண்டிய அரிசி மூட்டை வண்டி சேற்றில் விழுந்து சீர்குலைந்துபோக, கள்ளர்கை பட்டுக் கனங்குலைவது காட்சியாம். இந்த சொற்பதூர யாத்திரையில் சீர்குலைந்து சிரச்சேதப்படும் வியாபாரிகள் நெடுந்தூர சரக்குகளைப் பிடிக்கவும் மற்றொரு தேசங்களுக்கு சென்று விற்கவும் எளிதாமோ, எத்தனை வண்டிகள் குடைகவிழ்ந்து ஒடிந்ததும், எத்தனையோ மாடுகள் ஜில்லாக்களில் மடிந்ததும், எத்தனையோ வண்டிக்காரர்கள் புலிகளுக்கும் கரடிகளுக்கும், கள்ளர்கை பலியாயதும் உலகறிந்த விஷயமாம்.

இதுவும் அன்றி வேலூரில் பஞ்சம் உண்டானால் சென்னைக்குத் தெரியாமலும் சென்னையில் பஞ்சம் உண்டானால் வேலூருக்குத் தெரியாமலும் அங்கங்குள்ள ஜனங்களும் கன்றுகாலிகளும் ஆகாரமின்றி அங்கங்கு மடிந்த சங்கதிகளை தப்பிப்பிழைத்தோர் தரணியோரறிய உரைத்திருக்கின்றார்களே. இத்தியாதி இடுக்கங்களையும் அகற்றி இந்தியாவிலுள்ள எல்லோரையும் அரைவயிற்றுக் கஞ்சேனும் குடித்து ஆளாகத் தோற்றவைத்திருப்பது ஆங்கிலேய அரசரருளாம் இருப்புப்பாதையின் சுகமன்றோ.

இத்தகைய நன்றிசெய்த ஆங்கிலேயர்களுக்கு வந்தன வாழ்த்துதல் செய்யவேண்டியதைவிட்டு வாயில் வந்தவாறு வைவது வன்னெஞ்சர் இயல்பாம். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை வருத்துவதால் ருஷிய ராஜாங்கம் அல்லல்படுவதுபோல் இவர்களும் படுவார்கள் என்று கூறுகின்றார்கள். இதன்விகற்பபேதம் அறியாதோர் இன்னும் என்ன அறியப்போகின்றார்கள் என்று விசனிக்கின்றோம்.

அதாவது எல்லோரும் ஒரேசாதியராயுள்ள உருஷிய தேசத்துள் குடிகளுக்கும் அரசருக்கும் உண்டாயக் கலகத்தைக் கொட்டினவாயில் இரக்கிவிடுவதுபோல் அடக்கிவிட்டார்கள். அங்ஙனமிருக்க இத்தேசத்தை ஆளும் ஆங்கிலேய அரசாங்கத்தார் ஒற்றுமெய்க்கேடாகும் ஆயிரத்தெட்டு சாதிகளை வகுத்துக்கொண்டு அடுப்புக்கட்டைக்குஞ் சாதியுண்டு துடைப்புக்கட்டைக்குஞ் சாதி உண்டு என்போர்களை அடக்குவது வெகு நேரமோ, எளிதில் அடக்கிவிடுவார்கள். ஈதோர் மிரட்டாகாவாம். ஒற்றுமெயின் தகுதியுஞ் செல்வத்தின் மிகுதியும் வித்தையின் தொகுதியும் வெளிப்படையாயின் விவேகிகள் வியந்து நிற்பார்கள். அங்ஙனமின்றி ஒற்றுமெய்க்குறைவு செல்வக்குறைவு வித்தைக் குறைவுள்ள வீணர்கள் தோன்றி விருதாகூச்சலிடுதல் விவேகிகட்கு ஏற்காவாம்.

- 1:52; சூன் 10, 1908 -

சுதேசவிருத்தியை நாடும் நாம் ஒற்றுமெய் விருத்தியை நாடினோமில்லை, விவேகவிருத்தியை நாடினோமில்லை, வித்தைகள் விருத்தியை நாடினோமில்லை. மற்றும் நாம் எவ்விருத்தியை நாடியுள்ளோமென்னில், உன் சாதி சிறிது என்சாதி பெரிதென்னும் சாதிவிருத்திகளை நாடியுள்ளோம். உன்சாமி சிறிது என்சாமி பெரிதென்னும் மதவிருத்திகளை நாடியுள்ளோம்.

இத்தகைய விருத்திகளால் விரோதவிருத்தி பெருகி கல்வியும் கைத்தொழிலும் குறுகி நாளுக்குநாள் சீர்கெட்டு வந்த நாம் கருணைதங்கிய ஆங்கிலேயர்களால் சொற்ப சீர்திருத்தங்களுண்டாய் சுகமடைவதற்குமுன் சுயராட்சிய சுரணை வந்துவிட்டதென்று சூழ்ந்து சூழ்ந்து கூச்சலிடுவது யாது காரணமோ விளங்கவில்லை.

சுரணை என்பதற்குப் பொருள் உணர்ச்சி என்று கூறப்படும். அத்தகைய உணர்ச்சி உண்டாவதற்குக் காரணம் - இவர்கள் பாட்டன்மார்களேனும் பூட்டன்மார்களேனும் அரசாங்கத்தை இழந்திருப்பார்களாயின் புத்திர பௌத்திராதிகளாகிய இவர்களுக்கு அவ்விராஜாங்க சுரணை தோன்றிற்றென்று கூறலாம்.

அவ்வகை ஓர் ஆதாரமுமற்ற கூட்டத்தாருக்கு சுதேச சுரணை வந்துவிட்டதென்று முன்னேறுவது பின்னிடையச்செய்தே கெடும்.

இத்தேசத்திய நூதன சாஸ்திரங்களை வாசிப்போர் க்ஷத்திரியர்கள் யாவரும் பரசுராமனால் நசிந்து பாழடைந்திருக்க எந்த க்ஷத்திரியர்களுக்கு சுதேச சுரணை வந்துவிட்டதென்றும் கேட்பார்கள். இத்தகையக் கேள்விகளுக்கெல்லாம் நமது தலைகாலற்ற பொய் வேதங்களும் பொய்ப் புராணங்களே காரணமாகும்.

அதாவது சிலதினங்களுக்குமுன் நமது கவர்னர் ஜெனரலாயிருந்த கர்ஜன் பிரபு அவர்கள் இந்து தேசத்துக் கலைக்ட்டராக சிவில் செர்விஸ் நடத்தி இவ்விடமுள்ளோர் குணா குணங்களை ஏதேனும் ஆராய்ந்திருப்பாரா. அன்றேல் ஓர் யாத்திரைக்காரராகவேனும் வந்து இத்தேசத்தைச் சுற்றியேனும் பார்வையிட்டு இத்தேசத்தோர் மொழிபேதங்களைப் பார்த்திருப்பாரா, யாதும் கிடையாது. அங்ஙனமிருக்க இந்துக்கள் யாவரும் பொய்யரென்று கூறிய சாட்சி பிரம்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்களும் அவர்கள் ஓதுதற்கு தவளை வயிற்றிலும் நாயின் வயிற்றிலும் கழுதை வயிற்றிலும் பிறந்தவர்கள் எழுதிவைத்த வேதங்களும் ஆதாரமாயினும் பொய்சொல்லா அரிச்சந்திரபுராணமே போதுஞ்சான்றாயின.

எவ்வகைத்தென்னில்:- ஆகாயத்தில் தேவர்கள் எல்லோரும் கூடி பூலோகத்தில் பொய்சொல்லாதவன் யார் என்று உசாவியபோது அரிச்சந்திரன் என்னும் அரசனே பொய்சொல்லாதவன் என்று குறிக்கப்பட்டான். அப்போது பூலோகத்தில் அரிச்சந்திரன் ஒருவன் தவிர மற்றுமுள்ள மனுக்கள் யாவரும் பொய்யரென்றே தீர்ந்தார்கள்.

இதன் மத்தியில் கர்ஜன் பிரபுவும் கவர்னர் ஜெனரலாக வந்துசேர்ந்தார். அவர் வந்துள்ள காலத்தில் பொய்சொல்லா அரிச்சந்திரன் ஒருவனும் இல்லாமல் போய்விட்டபடியால் மற்றவர்கள் யாவரையும் பொய்யரென்று சொல்லித் தீர்த்தார். இவ்வகையாக கவர்னர்ஜனரல் கர்ஜன் பிரபு கூறியது பிசகென்பாரேல் தேவர்கள் யாவரும் கூறியது பிசகாகவே முடியும். கர்ஜன் பிரபுவும் பூலோகத்தில் இருப்பவர் தானே என்பாருமுண்டு, அங்ஙனம் கூறுதற்கு ஆதாரம் இல்லை. எங்ஙனமென்னில்:-

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களுக்கு இந்துதேசமே பூலோகம். அவர்கள் வேதபுராணங்களுக்கும் இந்துதேசமே பூலோகம் பூமிபாரந் தீர்க்கவந்த கிருஷ்ணருக்கும் இந்து தேசமே பூலோகம். பௌத்தர்களை அழிக்க வந்த சங்கராச்சாரிக்கும் இந்துதேசமே பூலோகம். பௌத்தர்களை பழிக்கவந்த அப்பர் சுந்திரர், மாணிக்கருக்கும் இந்துதேசமே பூலோகம். சைனா, சிலோன், பர்மா, மங்கோலியா, தீபேத் மற்றுமுள்ள பௌத்த தேசங்கள் இவர்களுக்குத் தெரியாது. இவர்களை அனுப்பியுள்ள விட்ணு சிவனாந் தேவர்களுக்குந் தெரியாது. ஆதலின் தேவர்கள் யாவரும் இந்துதேசத்தையே பூலோகமாகக் கருதி பொய்சொல்லா ஒருவனைக் கண்டுபிடித்தார்கள்.

மேலோகமாகிய ஐரோப்பாவிலிருந்து கர்ஜன்பிரபு வந்தபோது அப்பொய்சொல்லா அரிச்சந்திரன் ஒருவன் இல்லாமல் போய்விட்டபடியால் இந்துக்களின் தேவர்கள் வாக்கையும் இவர்கள் போக்கையும் கண்டு இந்துக்கள் யாவரும் பொய்யர்கள் என்று தீர்த்துவிட்டுப் போனார் போலும்.

- 2:4; சூலை 8, 1908 -

கடவுளைத் தொழப்போய்க் கலகம், சாமியைத் தொழப்போய்ச் சண்டையுண்டு செய்யும் பொய் வேதங்களும் பொய்ப்புராணங்களுமே இத் தேசத்தோர்களையும் பொய்யர்களாக்கி பாழ்படுத்திவிட்டது.

நமது பாட்டன் பூட்டன் எழுதிவைத்தப் புராணமென்றும், பெரியாச்சாரி சின்னாச்சாரி எழுதிவைத்த வேதமென்றும், கோடம்பாக்கத்தையன், கும்பகோணத்தையன் எழுதிவைத்த இதிகாசம் என்றும் நம்பிக்கொண்டு மெய் பொய் என்னும் பகுப்பற்று சொன்னதைச் சொல்லும் கிளிபோல் சொல்லிக்கொண்டு, விசாரிணை இல்லாமல் இருக்குமளவும் விவேக விருத்தி, வித்தியாவிருத்திகள் அற்ற பொய்யர் என்று தீர்த்தவுடன் பொல்லார் என்று

தீர்த்துவிடுவார்கள். அதாவது:- ஆய்ந்தோய்ந்து பாராதவன் தான் சாகக் கடவதென்னும் முதுமொழி பலிக்க சிதம்பரம்பிள்ளை அவர்களும், சுப்பிரமணிய சிவா அவர்களும் தாங்கள் எடுத்துள்ள கப்பல் வியாபார விருத்தியையும், கைத்தொழில் விருத்தியையும் எவ்வகையாரைக்கொண்டு எவ்வழியிற் சீர்படுத்தலாம் என்பதை உணராமலும் எவனோ ஒருவன் தங்கள் வியாபாரங்களுக்கு எதிரிடையான சத்துருவெனத் தோன்றுவனாயின் அவனுக்குத் தக்கமித்துருவைக் கொண்டு தங்கள் வியாபாரங்களை செவ்வை செய்துக்கொள்ளாமலும் தாங்கள் எடுத்துள்ள வியாபாரங்களில் உண்டாகும் நஷ்டங்களுக்கு ஏதுக்கள் எவை என்று உணராமலும் ஏதுக்கள் தோன்றிடினும் சாதுவில் நின்று அவரவர்கள் கெடுவெண்ணப் போக்குகளையும் நல்லெண்ண நோக்குகளையும் நன்காராய்ந்து அதிருஷ்டம் காணுமாயின் அவற்றை அடியோடு விடுத்து இலாபத்தைப் பெறக்கூடிய வேறு வியாபாரத்தைத் தொடுத்து விருத்தியடைய வேண்டியதே விவேகிகளின் முயற்சியாகும்.

அங்ஙனமின்றி அந்தணனுக்கு ஞானத்தில் நோக்கமும், அரசனுக்கு ஆளுகையில் நோக்கமும் வாணிபனுக்குப் பொருளில் நோக்கமும், வேளாளனுக்கு பூமியில் நோக்கமுங்கொண்டு அவரவர்கள் காரியங்களை ஆய்ந்தோய்ந்து நடத்துவார்கள். இவர்களோ வாணிபர்கள் என வெளிவந்து தங்கள் வியாபார விருத்தியை நாடாது அரசாங்கத்தோர் மீது விரோத விருத்தியை நாடி வீண் கூட்டங்களைக்கூடி வாயில் வந்தததைப்பாடி மாளா துக்கத்தைத் தேடிக்கொண்டார்கள்.

மாளா துக்கத்திற்கு இவர்களாயதுமன்றி மனைவி மக்களையும் இனிய நேயர்களையும் துக்கத்திற்கு ஆளாக்கிவிட்டார்கள்.

தங்கள் சுதேசத்திற்காகப் பாடுபடுவோரும் சீர்திருத்தக்காரர்களுமானவர்கள் செய்யுஞ் செயல்களால் தாங்கள் சுகமடைவதுமன்றி தன் மனைவி மக்களும் நேயர்களுந் தேசத்தோருஞ் சுகமடைதல் வேண்டும்.

தானுந் தன் மனைவி மக்களும் நேயர்களுஞ் சுகமற்று துக்கத்தை அடைவார்களாயின் இஃது விவேகிகளின் சீர்திருத்தமாமோ, ஆகாவாம்.

சுதேசிகள் சுதேசிகளுக்காகப் பாடுபடுகின்றார்கள். நாம் கவலைப்பட வேண்டுவதில்லை என்று இரடிவிழுந்தாலும் அதுவும் ஓர் கிரடியென்று சொல்லித்திரிகின்றார்கள். அது பொருந்தாவாம்.

இவ்விருவரை மட்டிலும் சுதேசிகள் என்றால் இவர்கள் வியாஜ்ஜியத்தில் அஸ்ஸர்களாக உட்கார்ந்து இவ்விருவரும் குற்றவாளிகள் என்றே செப்பிய மிஸ்டர் அனந்தநாராயண ஐயரும், மிஸ்டர் இராமச்சந்திர ஐயரும் சுதேசிகளன்றோ. அவ்விருவருக்கும் இச்சுதேசியப் பிரசங்கஞ் செய்யத் தெரியாதோ, தெரியும்.

அவலை நினைந்து உரலையிடிப்பதுபோல் இரஜத்துவேஷ அதனப்பிரசங்கஞ் செய்வதினால் புதின சட்டங்கள் தோன்றும் என்றவர்களுக்குத் தெரியும். ஆதலின் சுதேசிகளாகுந் தன்னவர் என்றும் பரதேசிகளாகும் அன்னியர் என்றும் பட்சபாதம் பாராது இருவர்கள் செய்கைகளும் குற்றங்குற்றமென்றே மத்திய நியாயம் கூறிவிட்டார்கள்.

- 2:5; சூலை 15, 1908 -

நமதன்பர் சிதம்பரம் பிள்ளையவர்கள் கப்பல் வியாபாரக் கலகத்திற்கு முன்பு சுதேச விருத்தியைப் பற்றியேனும் சுதேசக் குடிகளின் விருத்தியைப்பற்றியேனும் ஓர் முயற்சி எடுத்து இருப்பாரா, இல்லை. தன் வியாபாரத்தில் உண்டாகிய விரோதத்தையே ஆதாரமாகக் கொண்டு வீணே ராஜாங்கத் துவேஷியாய் நிந்திக்க ஏற்பட்டதின்பேரில் இராஜாங்கத்தார் இவர்மீது சிந்திக்க ஏற்பட்டார்கள். அத்தகைய சிந்தனையால் இவர் செய்துவந்தப் பிரசங்கங்களில் குடிகள் யாவரும் இராஜ விரோதமுற்று வீணே கெடுவதை உணர்ந்து அவற்றை அடக்கத்தக்க ஏதுவைத் தேடினார்கள்.

இதுவுமன்றி சுப்பிரமணிய சிவா என்பவர் தான் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தான் சன்னியாசி என்றும் முத்தியடையும் மார்க்கங்களைப்

போதிக்க வந்தவர் என்றும் சுயராஜ்ஜியம் என்னும் தெய்வக் கட்டளையையும் அதற்கு இடையூருள்ளதை விலக்கவேண்டியது என்றும் போதித்தேன் என்றும் கூறியவர், மறுபடியும் அதற்கு மாறாக ஆங்கிலேயர் இந்தியாவை வந்து கைப்பற்றியதுமுதல் குடிகளுக்கு, யாதாமொரு திருப்த்தியும் கிடையாது என்றும் இந்துதேசத்தை மோசத்தால் அபகரித்துக்கொண்டார்கள் என்றும், கவர்னர் ஜெனரல்கள் யாவரும் பொய்சொல்லி ஏமாற்றிவிட்டுப் போய்விடுகிறார்கள் என்றும், மகா அக்கிரமமாக ஆயுதங்களுக்கு சட்டங்களை ஏற்படுத்தி ஆயுதங்களை உபயோகிக்கக்கூடாது செய்துவிட்டார்கள் என்றும், வரிகள் என்று பெயர்வைத்து சீவ ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் என்றும், நீதியின்றி பெரியோர்களைத் தண்டித்தார்கள் என்றும் ஆர்மேனிய நாட்டில் நடந்தக் கொடுமைகள் யாவையும் இங்கு நடத்தினார்கள் என்றும் பலவகையான இராஜ நிந்தனை செய்திருக்கின்றார்.

இவர் எதார்த்த சன்னியாசியும் முத்திக்குப் பாடுபடுவோருமாய் இருப்பாராயின் இத்தகைய வீண் விரோத நிந்தைகளை வீணில் பெருக்க மாட்டார். உலகத்தை மாயையென்று கூறும் சன்னியாசிக்கு ஆங்கிலேய ராஜ்ஜியம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் பேதமுண்டாமோ.

வீணே சன்னியாசி என வேஷமிட்டு குடிகள் யாவரையும் இராஜாங்கத்தோர் முன் இழுத்துவிட்டு அங்குமிங்கும் அல்லல்பட்டு குடிகளுடன் தானும் கெட்டு தவிக்கின்றார்.

தன்னை சீர்திருத்திக்கொள்ளத் தெரியாது தேசத்தை சீர்திருத்துவோம் என்று வெளிவருவது சித்த சபலமேயாம். பிரிட்டிஷ் ராஜாங்க சீர்திருத்தமோ என்னில் அன்னிய ராஜாங்கத்தார் இந்தியாவின் மீது படையெடுத்து தேசத்தையும் குடிகளையும் பாழ்படுத்தாமல் காப்பாற்றிவருகின்றார்கள்.

வரிகொடாவிடில் சித்திரவதை செய்யாமல் உண்டானப் பொருளால் வசூல்செய்துவருகிறார்கள்.

உடன்கட்டை என்னும் புருஷனுடன் பெண்ணையும் போட்டு துள்ளத் துடிக்கக் கொளுத்துத் துன்பத்தை துலைத்து வருகின்றார்கள். சிசுவத்தி என்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொல்லும் கள்ளவிபச்சாரிகளை அடக்கி வருகின்றார்கள். ஒருவருக்கொருவர் செய்துக்கொள்ளுஞ் சண்டைகளையும் ஒருகிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் உண்டாகிவருஞ் சண்டைகளையும் விசாரித்து விரோதங்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்.

ஒருசாதியோருக்கும் மற்றொரு சாதியோருக்கும் உள்ள சண்டைகளையும் ஒருமதத்தோருக்கும் மற்றொரு மதத்தோருக்கும் உள்ள சண்டைகளையும் விலக்கி நீதிசெலுத்தி வருகின்றார்கள்.

இத்தகைய உட் சீர்திருத்தங்களில் இன்னும் எத்தனையோ சாதிக்கேட்டின் பிரிவினை கலகங்களும் மதக்கேட்டின் பிரிவினை கலகங்களும் இருக்க அவைகளை அடக்கி ஒற்றுமெய் அடையத் தெரியாதவர்கள் சுயராட்சியம் பெருவார்களாயின் இராட்சியபாரத்தை எவ்வகையில் தாங்குவரோ விளங்கவில்லை.

- 2:6; சூலை 22, 1908 -

சுயராட்சியம் கருசுருப்பில் வேண்டும் என்ற விவேகம் மிகுத்தவரும் கல்வி உடைத்தவருமான கனம் தில்லாக்கென்னும் கனவான் காங்கிரஸ் கமிட்டியின் மிதவாதிகள் பட்டபாடுகள் யாவையும் பாழாக்கி அமிதவாதியெனத் தோன்றி அவசரத்தில் செய்த செய்கைகள் யாவும் அவமானத்திற்கு உள்ளாக்கி விட்டது.

சிலர் நமது தேசத்திற்குப் பாடுபடுங் கனவான்களில் தில்லாக்கென்னும் கனவானே முக்கியமானவர் என்று முழுப்பிரிதியில் பேசிவருகின்றார்கள். அவர் வாசஞ்செய்த தேசத்துக் குடிகளுக்கு எத்தகைய இடுக்கங்கள் உண்டாயிருந்தன அவற்றுள் எத்தகைய இடுக்கங்களை நீக்கி ஆதரித்து இருக்கின்றார். அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை பறையர் பறையர்

என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை நீக்கியிருப்பாரா. சுத்த ஜலங்களை மொண்டு குடிக்கவிடாமல் சுகக்கேட்டை உண்டு செய்து மடிய வைப்பவர்களுக்கு அறிவூட்டி அவர்கள் கருணையற்ற செயலை மாற்றியிருப்பாரா. அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும் வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலுஞ் செய்து அசுத்த நிலை அடையவும் அதின் குறையால் மடியவுஞ் செய்பவர்களுக்கு மதியூட்டி ஏழைகளையீடேற்றி இருப்பாரா. பார்ப்பான் பணம் சம்பாதிக்கப்போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரங் கிடையாது. பறையன் பணஞ் சம்பாதிக்க போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டென்று கூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமல் கெடுத்து சீரழிப்பதை ஏதேனும் தடுத்து இரட்சித்திருப்பாரா.

இத்தேசத்தில் நூதனமாக ஏற்படுத்திவிட்ட சாதிகஷ்டத்திற்கும், இழிவுக்கும் பயந்து பலதேசங்களுக்குப்போய் வீண் கஷ்ட நிஷ்டூரங்களை அடைய வேண்டாம் இதேதேசத்தில் உங்களுக்கு வேண்டிய பூமியும் பணமும் கொடுத்து ஆதரிக்கின்றோம் பூமிகளைப் பண்படுத்தி தானியத்தை விருத்தி செய்யுங்கோளென்று கூறி வெளிதேசம் போகும் ஏழைகளைத் தடுத்து ஆதரித்திருப்பாரா.

ஐந்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு ஆறுமாதகாலம் வேலைவாங்கிக் கொள்ளுவதும், அரைபடி நெல்லை அளந்துகொடுத்து ஒருநாள் முழுவதும் வேலை வாங்கிக் கொள்ளுவதுமாகிய படுங்கஷ்டத்தால் எலும்புந்தோலுமாய் ஈனதிசை அடைவோர்களை யீடேற்றியிருப்பாரா.

தங்கள் அரசாங்கங்களும் நசிந்து குருபரம்பரையையும் இழந்து கோவில் குளங்களும் அழிந்து திராவிட பெளத்தாளென்னும் பெயரும் மறைந்து பறையனென்னும் பெயரால் இழிந்துள்ள ஒருவன் ஏதோ சொற்ப பூமியும் கன்று காலியம் வைத்துக்கொண்டு கிஞ்சித்து சுகத்திலிருப்பானாயின் ஆ, ஆ, பறையன் நமக்கு முன்பு மேலான அந்தஸ்தில் வாழ்வதா என்னும் பொறாமெய்கொண்டு இரவுக்கிரவாய் அவன் பயிறுகளையும் கன்று காலிகளையும் அழித்து அவனையும் ஒழிக்க முயலும் சாதிகர்வம் உற்றோருக்கு சாந்தங்கூறி ஒருவருக்கொருவரை சமரசஞ் செய்திருப்பாரா, இல்லையே.

இத்தகைய சாதிமுடுக்குகளுஞ் சமய இடுக்கங்களுமற்ற நாடுகளாகும் வங்காளம், பம்பாய் முதலிய இடங்களில் பிரிட்டிஷ் இராஜாங்கத்தார் குடியேறி கல்விவிருத்தி கைத்தொழில் விருத்திகள் செய்தது முதல் ஒவ்வொரு குடிகளும் சீருஞ் சிறப்பும் பெற்று மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் கட்டி சுகவாழ்க்கை பெற்றதுடன் பஞ்சி இயந்திரசாலைகளும், இரும்பியந்திரசாலைகளும், பீங்கானியந்திரசாலைகளும், கண்ணாடி இயந்திரசாலைகளும் மற்றும் விருத்திகளுமடைந்து ஏழைகள் யாவரும் கனவான்கள் என்று எண்ணுங்காலம் நேரிடும்போது அவரவர்கள் தீவினைக்கீடாய் பிளைக்கென்னும் பெரு மாறி தோன்றி பாழாக்கியதற்கு உதவியாய் சீர்கேடர்கள் சிலர் தோன்றி உள்ள சீரையுஞ் சிறப்பையும் கெடுத்தற்கு மத்தியில் எழுந்து குடிகளுக்கும் இராஜாங்கத்தோருக்கும் இருந்த அன்னியோன்னியங்களை கெடுத்து வீண் விரோதங்களை உண்டு செய்து வருகின்றார்கள்.

இத்தகைய விரோதச்செயலை நாளுக்குநாள் உணர்ந்துவரும் இராஜாங்கத்தார் பிளைக்கென்னும் பெருமாளிக்கு மூலமெஃதென்று அறிந்து முறித்து நாளுக்குநாள் நசித்து குடிகளுக்கு சுகத்தை உண்டு செய்து வருவதுபோல் குடிகளுக்கும் இராஜாங்கத்திற்கும் வீணேவிரோதத்தை வளர்ப்பதற்கு மூலாதிபர்கள் யார் யாரென்றறிந்து இரும்பைக்கொண்டே இரும்பை கடைத்திரட்டல் போல் சீர்திருத்த சுதேசிகளாம் நியாயாதிபதிகளையும் ஜூரிகளையுங்கொண்டே சீர்கேடராம் சுதேசிகளை அடக்கி குடிகளுக்கு சுகத்தைக் கொடுத்துவருகின்றார்கள்.

இவ்வகை சுகத்தைக் கொடுத்தாளும் நீதியும் நெறியும் அமைந்த இராஜாங்கத்தை சுயராட்சியம் என்னும் பொருளறியாதோர் எல்லாம் விரோதிப்பாராயின் அஃது குடிகள் அறிந்து செய்யும் செயலா அன்றேல் குடிகளறியாமலே சுதேச சீர்கேடரின் வாக்கை நம்பிக்கெடும் வழுவுச் செயலா என்பதை நாம் சீர்தூக்கி சிந்தித்து ஆயிரம் குடிகள் கெட்டு அல்லல்படுவதைப் பார்க்கினும் துற்கன்மியாம் ஒரு குடியை அகற்றி ஊரார் யாவரையும் சுகம் பெறச் செய்வது இராஜ தன்மங்களில் ஒன்று என்று உணர்ந்து,

- 2:7; சூலை 29, 1908 -

இதே ராஜரீகத்தோரால் நாம் சீர்பெறுவோமா அன்றேல் அன்னிய ராஜாங்கத்தாரால் சீர்பெறுவோமா என்பதை சீர்தூக்கி உலகில் தோன்றியுள்ள ஒவ்வோர் இராஜநீதிகளையும் ஆராய்ந்துணரல் வேண்டும். அவ்வகையுணர்வோமாயின் இந்த பிரிட்டிஷ் இராஜநீதியே மேலானதென்று உணர்ந்து ஆனந்திக்கவரும்.

அதாவது தற்காலம் பம்பாய் இராஜதானியில் சிலர் காயமடைந்து வயித்தியசாலையில் இருப்பதும், சிலர் மரணமடைந்ததுமாகியக் காரணம் அவர்களால் நேர்ந்ததா அன்றேல் கனம் தில்லாக்கவர்களால் நேர்ந்ததா, இராஜாங்கத்தோரால் நேர்ந்ததா என்பதை சீர்தூக்கி ஆலோசிப்போமாக.

தூத்துக்குடியிலுந் திருநெல்வேலியிலும் கனஞ் சிதம்பரம்பிள்ளை அவர்கள் செய்துவந்த ராஜத்துவேஷ பிரசங்கத்தைக் கேட்டிருந்த குடிகள் யாவரும் இராஜத்துவேஷத்தை மனதில் வைத்துக்கொண்டிருந்து பிள்ளை அவர்களை ஓராண்டில் பிடித்து அடைத்தவுடன் அவரால் இராஜ துவேஷ பிரசங்கம் கேட்டிருந்த குடிகள் யாவரும் திரண்டுபோய் இராஜாங்கப்பொதுக் கட்டிடங்களையுந் தஸ்தாவேஜுகளையும் கொளத்தியும் இடித்து பாழ்படுத்தியதால் சிலர் காயமுற்றுஞ் சிலர் மரணமடைந்தும் சிலர் இராஜாதிகார விசாரிணையிலும் இருக்கின்றார்கள். குடிகளின் இத்தியாதி சுகக்கேடுகளுக்கும் காரணபூதமானோர் கனஞ் சிதம்பரம் பிள்ளையும் கனஞ் சிவா அவர்களும் என்றே தீர்ந்தது.

அதன் ஆதரவைக்கொண்டே பம்பாய் ராஜதானியிலுள்ளக் குடிகளின் கஷ்டங்களை ஆலோசிக்குங்கால் தில்லாக்கென்னும் கனவான் தனது பத்திரிகையிலும் போதனையிலும் கூறி வந்த ராஜதுவேஷ மொழிகளையும் கனவீன வாக்கியங்களையும் நாளுக்குநாள் வாசித்துங்கேட்டுவந்த குடிகள் கனந் தில்லாக்கவர்களை தெண்டித்து கப்பலேற்றிவிட்டார்கள் என்றவுடன் அக்குடிகளுக்கு இராஜாங்கத்தின் மீது இருந்த அவமதிப்பாலும் துவேஷத்தாலும் சுட்டுக்குருவி கருடன் மீது போர் தொடுப்பதுபோல் வீண் கலகத்தை விளைவித்து காயங்களால் துன்பமடைவதற்கும் மரணத்திற்கும் ஆளாகிவிட்டார்கள்.

குடிகளின் இத்தியாதி சுகக்கேட்டிற்குக் காரணந் தில்லாக்கென்னும் கனவானென்றே கூறுவர்.

கனந் தில்லாக்கென்பவர் ஒன்றுஞ் செய்யவில்லையே, இராஜாங்கத்தோர் தான் பட்டாளத்தைக் கொண்டுவந்து சுட்டெறித்தாரென்று சொல்லுவார்கள். அக்கூறுபாடுகள் அறியாமெயேயாகும்.

எவ்வகையில் என்பீரேல் குடிகள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு யாரிடத்து இராஜரீகஞ் செலுத்துவார்கள். பிரிட்டிஷ் ராஜரீகம் எக்காலுஞ் செங்கோலை உடைத்தாயதேயன்றி கொடுங்கோலை உடைத்ததன்று. இஃது பொது நீதிவாய்த்த சகலரிடத்துஞ் சத்தியமாக விளங்கும்.

பிரகலாதனென்னும் பிள்ளையைத் தன்வசப்படுத்திக் கொண்டு நாராயணா நமாவென்று சொல்லுந் தகப்பனாகிய இரணியனை வஞ்சித்துக் கொல்லு என்னும் கொடுங்கோல் செலுத்தமாட்டார்கள்.

கண்காணாக் கடவுளை நம்பிக்கொண்டு கண்கண்ட தகப்பனைக் கொல்லும்படியானவர்கள் இராஜாங்க உத்தியோகத்தில் இல்லாதவர்கள்

வார்த்தைகளை நம்பிக்கொண்டு இராஜாங்க உத்தியோகஸ்தர்கள் வார்த்தைகளை அவமதிப்பது இயல்பாகும்.

பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பம்பாயில் குடிகளால் ஏற்பட்டக் கலகத்தை சாம, தான, பேத, தண்டமென்னுஞ் சதுர்வித உபாயத்தால் நடத்தியிருக்கின்றார்கள்.

அதாவது குடிகள் யாவரும் போதனா துவேஷத்தால் வீரர்வேஷம் கொண்டு வீண் கலகங்களை விளைவித்தபோது முதலாவது வேண்டிய வரையிலுஞ் சமாதான வார்த்தைகளாலடக்கிப் பார்த்தார்கள். அதினாலும் அவர்கள் தணியவில்லை. இரண்டாவது, அவர்களுக்குள்ளப் பெரியோர்களைக்கொண்டும் அமைதி செய்தார்கள். அதினாலும் அவர்கள் அடங்கவில்லை. மூன்றாவது, பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு பேதித்து பயமுறுத்தியும் பார்த்தார்கள். அதினாலும் அவர்கள் அமர்ந்தபாடின்றி மேலுமேலும் கலகத்தைப் பெருக்கிக் கற்களால் அடிக்க முயன்றதால் பிராண அபாயமில்லாமல் இடுப்பிற்குக் கீழ் சிலரை சுடும்படியாக உத்திரவு கொடுத்திருப்பதாய்த் தெரிய வருகிறது.

காரணம் அவ்விடம் காயமுண்டாகி வைத்திய சாலையில் இருப்பவர்கள் யாவருக்கும் இடுப்பின் கீழ் துடையிலும், முழங்காலிலும், பாதத்திலுமே பெரும்பாலும் காயம் பட்டிருப்பதாகப் பத்திரிக்கைகளால் தெரிய வருகிறது.

அதினால் குடிகள் யாவரும் துவேஷத்தால் வீரர்வேஷம் கொண்டு கலகஞ் செய்தபோதிலும் இராஜாங்கத்தார் கருணையினாலேயே தெண்டித் திருக்கின்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது.

- 2:8; ஆகஸ்டு 5, 1908 -

பி.ஏ., எம்.ஏ, முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்களும் ஒவ்வோர் சபைகளுக்குத் தலைவர்களானவர்களும் தினசரி பத்திரிகைகளை நடத்துகிறவர்களுமாகிய பெரியோர்களே தாங்கள் நடத்தும் காரியங்களை எண்ணித் துணியாமல் எண்ணாமல் துணிந்து செய்து இழுக்கடைவதானால் கல்லாதவர்களுஞ் சொற்பக் கல்வியை உடையவர்களும் எக்காரியங்களை சீர்பெறச் செய்வார்கள்.

நாமும் நம்முடைய தேசத்தோரும் சொற்ப புத்தியும் அற்று சுயபுத்தியும் அற்று சூன்யநிலையில் இருக்கின்றோம். அதாவது ஒருவன் கலாசாலையில் வாசித்து இராஜாங்க உத்தியோகம் பெற வேண்டும் என்று முயற்சி செய்வானாயின் அவனை ஒத்தே மற்றுமுள்ள யாவரும் கல்விகற்று ராஜாங்க உத்தியோகமே தேட முயற்சி செய்வார்கள்.

ஒருவன் டெல்லகிராப்வேலை செய்யப்போவானேயானால் அவன் வீட்டின் அருகிலிருப்போர்கள் யாவரும் அதே வேலைக்குப் போக ஆரம்பிப்பார்கள்.

ஒருவன் போட்டகிராப் பிடிக்கக் கற்றுக்கொண்டு சீவிக்க வெளிவருவானாயின் அவனைக் காண்பவர்கள் எல்லோரும் அதே போட்டகிராப் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

ஒருவன் வெற்றிலைப்பாக்குக் கடைவைக்க ஆரம்பிப்பானாயின் இருப்பவர்கள் யாவரும் வெற்றிலைக் கடைகளையே வைக்க ஆரம்பிப்பார்கள்.

ஒரு கைம்பெண் மூசுவுருண்டைக் கடை விற்க ஆரம்பிப்பாளாயின் மற்றுமுள்ள கைம்பெண்கள் எல்லாம் அம்மூசுவுருண்டைக் கடை விற்பதற்கே ஆரம்பிப்பார்கள்.

இத்தியாதி செய்கைகள் யாவும் தங்கள் சுயபுத்தியையுஞ் சுயமுயற்சியையும் விட்டு அன்னியர் முயற்சியும் கெட்டு அல்லல் படவேண்டியதாகின்றது.

ஒன்றைப்பார்த்து ஒன்றை செய்யும் விருத்திக்குறைவால் பூமியைப் பண்படுத்தி பயிரிடுதலையும் விருட்ச விருத்திகளையும் மறந்து ஒவ்வொருவர் வீடுகளின் அருகிலுள்ள பூமிகளை வெறுமனே பாழாக விட்டிருக்கின்றார்கள்.

தச்சுவேலைச் செய்பவன் மகன் தச்சுவேலையே செய்யவேண்டும், தச்சசாதி என்று சொல்லவேண்டும் என்பான். தையல்வேலைச் செய்பவன் மகன் தையல்வேலையே செய்யவேண்டும், தையற்கார சாதி என்று சொல்ல வேண்டும் என்பான். ஒருவன் தரிநெய்யும் சேணத்தொழில் செய்வானாயின் அவன்

மகனும் அதே சேணத்தொழில் செய்து சேலைநெய்யும் சாதி அல்லது சேணெய்யுஞ் சாதி என்று சொல்லவேண்டும் என்பான்.

ஓர் இளந்தை வயதுடையப் பெண்ணின் புருஷன் இறந்துவிடுவானாயின் அவளுக்கு மறுவிவாகம் செய்விக்காமல் தடுத்து அவளை அறுத்துகட்டா சாதி என்று சொல்லும்படி செய்வான்.

மற்றோர் இளந்தை வயதுடைப் பெண்ணின் கணவன் இறந்து மறுவிவாகஞ் செய்துக் கொள்ளுவாளாயின் அவளை அறுத்துகட்டுஞ் சாதி என்று சொல்லும்படி செய்வான்.

இவ்வகையால் எடுத்ததற்கு எல்லாம் சாதியம் படித்ததற்கெல்லாம் சமயமும் ஏற்படுத்தத்தக்க முயற்சியில் இருப்பார்கள் அன்றி தங்கள் விருத்தியையும் தேசவிருத்தியையும் நாடமாட்டார்கள்.

சுயமுயற்சியற்ற சூன்யநிலையில் சுயராட்சியம் என்னும் சொல்லும் பிறக்கப்போமோ.

சுயராட்சியம் என்றால் தங்கள் கொல்லைகளிலுள்ளக் கிள்ளுக் கீரைகள் என்று எண்ணிக் கொண்டனர்கள் போலும்.

அன்னிய ராஜாங்கச் செய்கையும் அவர்கள் முயற்சியும் அறிவின் விருத்தியும் ஒற்றுமெயும் சகலரையும் தன்னைப்போல் ஆதரிக்கத்தக்க குணமும் சகல சாதியோரும் தங்களைப்போல் ஆனந்தமான உடைகளை அணைந்து வண்டிகுதிரைகளில் ஏறி சுகமடைய வேண்டும் என்னும் ஆனந்தமும், தாங்கள் அருந்துஞ் சித்தசலங்களை சகல சாதியோரும் அருந்தி சுகமடைய வேண்டும் என்னும் அன்பும் இத்தேசத்தோருக்கு உண்டாமாயின் அக்காலமே சுயராட்சிய அஸ்திபாரமாகும்.

சுயமுயற்சிகளை விடுத்து சுயப் பிரயோசனத்தை நாடுவோர் வசம் சுயராட்சியம் அளிப்பது சுத்தப் பிசகேயாம்.

சுயராட்சியத்தை வைஷ்ணவர்களாகும் வடகலையார் வசம் ஒப்பி வைப்பதானால் தென்கலையார் தடுப்பார்கள் என்று தெரியாதோ. தென்கலையார் வசம் ஒப்பிவைப்பதனால் வடகலையார் வழக்கிற்கு வருவார்கள் என்று தெரியாதோ.

சைவர்கள் வைணவர்கள் ஒன்று சேர்த்து விட்டாலும் கிறிஸ்தவர்கள் கிட்டே நெருங்குவார்களோ.

வைணவர், சைவர், கிறிஸ்தவர் பொருந்திய போதிலும் மகமதியர் மகிழ்ச்சி கொள்வரோ. மகமதியர், வைணவர், சைவர், கிறிஸ்தவர் நால்வரும் பொருந்தியபோதினும் பெரியசாதிகள், சின்னசாதிகள் பொருந்தி வாழ்வரோ.

வைஷ்ணவர்கள் இருவருக்குள்ளும் ஒத்துப் போவார்களேயானால் சைவர்கள் சண்டைக்கு வருவார்கள் என்று தெரியாதோ.

சாதிகளுஞ் சமயங்களும் பொருந்திய போதினுஞ் சகலசாதியோருஞ் சுகமாக வாழவேண்டும் என்னும் குணம் வாய்க்குமோ.

அத்தகையப் பெறாமெய் குணங்களை வெளிக்குக் காட்டடாது உள்ளுக்கு வைத்திருந்த போதினுஞ் சுயராட்சியபார சதுர்வித உபாயம் விளங்குமோ ஒருக்காலும் விளங்கப் போகிறதில்லை.

அத்தகைய சதுர்வித உபாயம் விளங்கினும் இராட்சியந்திருந்த திரவியசேகர யுக்த்தி விளங்குமோ. திரவியசேகர யுக்த்தி விளங்கினும் வேற்றரசர் படை வருங்கால் அவர்களை ஜெயித்தாளும் புஜபல பராக்கிரமமுண்டோ. “குடிமி தட்ட வேண்டியதுதான்.”

இத்தியாதி விஷயங்களில் சீர்தூக்கிசெய்யும் கருமங்களை எண்ணித் துணியாமல் வீணே துணிந்து விழலுக்கிரைத்த நீர் போல் தாங்கள் கற்றக் கல்வியின் பயனால் தாங்களுஞ் சுகமடையாது தங்களை அடுத்தக் குடிகளையுஞ் சுகமடையவிடாது சீர்கெடுப்பது இராஜாங்கத்தோர் மீதுள்ள விரோதசிந்தை என்றே விளம்ப வேண்டியதாகும்.

- 2:9; ஆகஸ்டு 12, 1908 -

இராஜ அவிரோதமாகும் இராஜவிசுவாசம் இருக்குமாயின் இராஜ விரோதிகள் ஒருவரை தெண்டிப்பதினால் பத்துப்பெயர் சேர்ந்து பரிதாபக் கூட்டம்

கூடுகிறதும் இன்னும் மற்றவர்களுக்கும் உச்சாகம் உண்டாக்கத்தக்க விரோதங்களை எழுப்புகிறதும் அன்னியசரக்குகளைத் தடுக்கவேண்டும் என்னும் ஆரவாரஞ் செய்வதுவுமாகிய வீண் விரோதங்களை விளைவிப்பார்களோ ஒருக்காலும் விளைவிக்கமாட்டார்கள்.

இத்தியாதி விஷயங்களையும் ஆராயாது செய்வது அவதிக்கிடமேயாம். தற்காலமுள்ள பிரிட்டிஷ் ராஜாங்கத்துள் இத்தேசத்தில் வாழும் சுதேசிகளே பெரும்பாலும் இராஜாங்கத்தொழில்களை நடாத்திவருகின்றார்கள். ஆங்கிலேயர்களோ அந்தந்த டிஸ்டிரிகட்டுகளில் ஒருவரோ இருவரோ இருந்து இராட்சியபாரத்தை தாங்கிவருகின்றார்கள்.

இத்தகைய இராஜ்ஜியத்தில் நமது சுதேசிகள் கருத்து எவ்வகையாகக் காணப்படுவதென்னில் ஒவ்வோர் டிஸ்டிரிக்ட்டுகளிலும் ஆங்கிலேயருள் ஒருவர் இருவர் இருந்து நடத்தி வருந் தொழில்களையும் தடுத்து அவர்களை சீமைக்கனுப்பி விட்டு தங்கள் சகலகாரியங்களையும் நடத்திக் கொள்ள வேண்டும் என்னும் பேரவாபோலும்.

இவ்வகைப் பேரவாவுக்கு ஓர் யானைகதை உண்டு. அதை எழுதுவதில் பயனில்லை. ஆயினும் தற்காலமுள்ள ஓர் டிஸ்டிரிக்ட்டில் டிஸ்டிரிக்ட் ஜர்ஜூம், டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்டும், ஜாயின்டு மாஜிஸ்டிரேட்டும் சுதேசிகளாக இருந்து குடிகளை அதிக உபத்திரவஞ் செய்வதால் அவ்விடமுள்ளக் குடிகள் யாவருஞ்சேர்ந்து பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி இவ்விடமுள்ள பெருத்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் ஆங்கிலேயர்களாகவே இருக்கவேண்டும் என்று கேட்கப்போவதாய் தெரியவருகின்றது.

இவ்வகையாய் சுதேசிகளுக்குள்ள குறைகளை சுதேசிகளே தெரிந்துக்கொள்ள சக்த்தியற்றவர்களும் அக்குடிகளை நிவர்த்திக்க அதிகாரம் அற்றவர்களும் ஒருவரை ஒருவர் நம்ப நம்பிக்கையற்றவர்களும் ஒருவருக்கொருவரைத் தாழ்த்தி பொறாமெய் மிகுந்த ஒற்றுமெயற்றவர்களுமானோர்க்கு சுயராட்சியம் வேண்டும் என்பது வீண்கலகம் என்றே விளங்குகின்றது.

இம்மேறை உண்டாம் வீண்கலகங்களை அடக்கத்தக்க கூட்டங்கள் ஏற்பட்டு அவர்களுக்கு வேண்டிய விவகாரங்களை விளக்குவதுடன் குடிகளுக்கும் இராஜாங்கத்தாருக்கும் அன்பு பொருந்தி வாழவேண்டிய வாழ்க்கை ஒழுக்கங்களை விவரித்துவர வேண்டியது.

அன்னியதேச சரக்குகளை வாங்கவிடாமல் தடுக்கும் கூட்டத்தார் கூச்சலை அமர்த்தி அந்தந்த சரக்குகள் தங்களுடைய தேசத்தில் உண்டு செய்யத்தக்க முயற்சிகளைத் தேட வேண்டியது.

இராஜநிந்தனைக் கூட்டத்தார் கூட்டங்களில் சேராமலும் அவர்கட் பிரசங்கங்களுக்குச் செவிகொடாமலும் இடங்கொடாமலுந் தடுத்து ஒரு மனிதன் செய்யும் இராஜநிந்தனா செய்கைகளுக்கு ஆயிரங்குடிகள் அறிவின்றி படுங்கஷ்டங்களை விளக்கிக் காண்பிக்கவேண்டியது.

ஆதலின் நம்தேய கனதனவான்களும் கூட்டின் பெருத்த வியாபாரிகளும் கலை நூல் வல்லவர்களும் ஒன்றுசேர்ந்து சுயராட்சியம் வேண்டும் என்னும் கூட்டத்தாருக்கு அமைதிகூறி அவர்களுள் யாரார் சுயராட்சியம் வேண்டும் என்கிறார்களோ அவர்கள் யாவரையும் வரவழைத்து எவ்வகை ஆதரவால் எவ்வழியாய் சுயராட்சியம் நடத்தப்போகின்றீர்கள் என்று கேழ்க்க வேண்டியது.

அத்தகையக் கூட்டங்களுக்கு அவர்கள் வராமலும் தக்க மறுமொழி அளிக்காமலும் நின்று விடுவார்களாயின் இக்கூட்டத்தோரே அச்சுயராட்சியக் கூட்டத்தாருக்கு மறுப்பும், கூட்டத்தாராய் விளக்கி குடிகளை ஆதரிக்கவேண்டியது.

- 2:10: ஆகஸ்டு 19, 1908 -

அங்கங்குள்ள கனவான்கள் ஒன்று கூடி இராஜவிசுவாசக் கூட்டத்தாரென்று கூறி குடிகள் யாவரையுந் தருவித்து முற்காலத்திருந்த தேசச்

சீர்கேட்டையும்,தற்கால பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் செய்து வரும் சீர் சிறப்பையும் விளக்கி இராஜாங்கத்தார் மீது குடிகள் அன்பு பாராட்டவும் குடிகள் மீது இராஜங்கத்தார் அன்பு பாராட்டவுஞ் செய்ய வேண்டியது.

கனவான்கள் இத்தகைய இராஜவிசுவாசத்தைத் தற்காலம் நோக்காமல் இராமன் ஆண்டாலென்ன இராவணனாண்டாலென்னவென்னும் பாராமுகமாய் இருப்பார்களாயின் இராஜதுரோக சிந்தனையால் குடிகள் சீர்கெடுவதுமன்றி அவன் கெட்டால் நமக்கென்ன என்போரையும் அலக்கழிக்காது விடாது.

ஆதலின் நம்தேய கனவான்கள் ஒவ்வொருவரும் முன்னேறி குடிகளுக்கு நல்லறிவூட்டி இராஜவிசுவாச சுடரேற்றல் வேண்டும்.

அப்போது தான் நமக்கும் நமது தேசத்தோருக்கும் ஆறுதல் பிறக்கும். அவ்வகை ஆறுதலினால் குடிகள் ஒவ்வொருவரும் ஆங்கிலேயருக்குள்ள சுருசுருப்பையும் விடாமுயற்சியையும் பின்பற்றி தாங்களும் சுகமடைவார்கள். ஈதன்றி குடிகளுக்குள்ள இராஜதுவேஷத்தை நீக்குவதுடன் அன்னிய தேசிய சரக்கை விலக்கும் ஆர்ப்பாட்டங்களையும் அமைதி செய்யவேண்டும்.

ஏனென்பீரேல் இவ்விந்து தேசத்திற் பஞ்சம் உண்டாயதென்று கேழ்விப்பட்டவுடன் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஏழைகள் மீது கருணை கூர்ந்து வேணவுதவி புரிந்தார்கள்.

அதுபோல் நந்தேயத்துள்ள கனவான்கள் ஏழைகளுக்குள்ள கஷ்டங்களை கவனித்து பஞ்ச நிவர்த்திக்கான உதவிகள் ஏதேனும் புரிந்ததுண்டோ, இல்லை.

இத்தகைய சுயப்பிரயோசன கனவான்களுக்கு உதவியாய் கற்றுமுள்ள ஏழைக்குடிகள் ஒன்றுகூடி அன்னியதேச சரக்குகளை வாங்காது விடுவது யாதுபயன்.

அன்னிய சரக்கு விலக்கினால் குடிகளுக்கு ஏதேனும் சுகமுண்டோ, வீண் குதூகலிப்பேயாம்.

அன்னியதேச விளைவாகும் கோதுமை மாவை அத்தேச வியாபாரிகள் இத்தேசத்தில் கொண்டுவந்தது முதல் நாளுக்குநாள் விலை சரசமாக விடுத்து சகலருக்கும் உணவளித்து வருகின்றார்கள்.

சுயதேச உணவாகும் அரிசியோ எனில் “நாளுக்குநாள் நகுந்ததடி யம்மானே” என்பதுபோல் ரூபாயிற்கு எட்டுபடி, ஏழுபடி, ஆறுபடி, ஐந்துபடி, நான்குபடி என்று குறைந்துக் கொண்டே வந்துவிட்டது. ஏழைக்குடிகளோ நொந்து கெட்டது.

இவ்வகையாய் அன்னியதேச சரக்குகள் நாளுக்குநாள் விருத்தியடைந்து வரவும் சுயதேச சரக்குகள் நாளுக்குநாள் குறைந்துகொண்டு வரவும் காரணம் யாதென்பீரேல்.

அன்னிய தேசத்தோருக்குள்ள விடாமுயற்சியும் கருணையும் சுதேசிகளுக்குள்ள சோம்பலும் பொறாமெயுமேயாம்.

தற்காலத் தோன்றியுள்ள இராஜதுவேஷிகள் யாதார்த்த சுதேசிகளாய் இருப்பார்களாயின் பஞ்சகாலத்தில் ஏழைகள் படும் பரிதாபத்துக்கிரங்கி பல முயற்சிகளால் பஞ்ச நிவர்த்திக்கான பாடுபட்டு பலனடையச் செய்வார்கள்.

அங்ஙனமின்றி நீங்கள் பஞ்சத்தில் மிஞ்சிகெட்டாலும் கெட்டுப் போங்கள். பெருவாரிமாறிகளால் மடிந்தாலும் மடிந்துப்போங்கள் அல்லது எங்கள் வார்த்தைக்கு இணங்கி இராஜத்துவேஷிகளாய் அழிந்தாலும் அழிந்துப்போங்கள் என்று அல்லலடையச் செய்வார்களோ, ஒருக்காலுஞ் செய்யமாட்டார்கள்.

பொதுநல சுதேசிகளன்றி சுயநல சுதேசிகளாதலின் அரசன் கெட்டாலென்ன குடிகள் கெட்டாலென்ன என்னும் கெடு எண்ணத்தால் இத்தியாதி கேடுகளையும் விளைவித்து வீண்கலகங்களை விருத்தி செய்கின்றார்கள். மற்றுமுள்ள கனவான்கள் இத்தகைய கேடுகளுக்கு இடம்கொடாது இராஜாங்கத்தோரால் பெறவேண்டிய சுகங்கள் யாவும் சகல குடிகளின் சம்மதத்தின்

பேரில் பொருத்தமுற்றதாதலின் அவரவர்கள் இஷ்டம் போல் ஒவ்வோர் கூட்டங்களைக் கூடிக்கொண்டு விதண்டவாதம் வளர்க்கலாகாதென்று தடுக்க வேண்டியது.

- 2:11; ஆகஸ்டு 26, 1908 -

அவ்வகைத் தடுக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல், நகர சுத்திகரிப்புக் கூட்டத்தோராகும் (முனிசிபாலிட்டியில்) சுதேசிகளே சேர்ந்து சுதேசிகளுக்குள் ஒருவரைப் பிரதிநிதியாகும் கமிஷனர்களென ஒவ்வொரு பிரிவுகளாகும் டிவிஷன்களுக்கு ஒவ்வொருவரை நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் யாவரும் சுதேசிகளே யாவர்.

இத்தகையக் கமிஷனர்களால் தெரிந்தெடுக்கப்பட்டு தேசசீர்திருத்த இராஜாங்க ஆலோசனை சங்கத்தோராய் சிலர் வீற்றிருக்கின்றார்கள். அவர்களும் சுதேசிகளேயாம்.

ஈதன்றி குடிகளுக்குள்ள கஷ்ட நிஷ்டூரங்களை இராஜாங்கத்தோருக்கு விளக்கி வேண உதவி புரிய வேண்டும் என்னும் நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தாரும் வேறிருக்கின்றார்கள். அவர்களும் சுதேசிகளேயாம்.

அதுவும் போதாது இன்னும் குடிகளுக்குள்ள உள் சீர்கேடுகளை செவ்வை செய்ய வேண்டும் என்னும் சென்னை மஹாஜன சபைக் கூட்டத்தாரும் இருக்கின்றார்கள். அவர்களும் சுதேசிகளேயாம்.

இத்தியாதி சுதேசக் கூட்டத்தோரின் ஆலோசனையில் கலவாது கண்டவர்கள் எல்லாம் ஓர் கூட்டம் கூடிக்கொண்டு சுதேசிகள் என்பதும், நின்றவர்கள் எல்லாம் ஓர் கூட்டம் கூடிக்கொண்டு சுதேசப் பிரசங்கங்கள் செய்து தாங்கள் செய்துக் கொள்ள வேண்டிய உட்சீர்திருத்தங்களை விடுத்து இராஜாங்கத்தோரை தூஷிக்க ஏற்படுகின்றார்கள்.

அத்தகைய தூஷணாச்செயலால் தாங்கள் கெடுவதுமன்றி தங்களை அடுத்த அறியாக் குடிகளையும் அவதிக்குள்ளாக்கிவிடுகின்றார்கள்.

ஆதலின் கனவான்கள் ஒவ்வொருவரும் இதனை தேற ஆலோசித்து வீண் கூட்டத்தோரைத் தடுத்து இராஜவிசுவாசத்தைக் கொடுத்துக் குடிகளை ஆதரித்தல் வேண்டும்.

இவற்றிற்கு மாறாக சிலர் கூறுவாரும் உண்டு. அதாவது காங்கிரஸ் கூட்டத்தார் நமது இராஜாங்கத்தோருக்கு எவ்வளவோ தெரிவித்தும் அவர்கள் கவனிப்பதில்லையே என்கின்றார்கள். அஃது விசாரிணைக் குறைவேயாம்.

காங்கிரஸ் கமிட்டியார்க் கூறுவதில் இராஜங்கத்தோருக்கு ஏதேனும் தோற்றுமாயின் அக்குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தும் இருக்கின்றார்கள். நிவர்த்தி செய்துக் கொண்டும் வருகின்றார்கள்.

இராஜாங்கத்தோர் குடிகள் மீது அதிக வரிகளை ஏற்படுத்துகிறார்கள் என்று கூச்சலிடுகின்றார்கள். அவைகளும் வீண்கூச்சலேயாம்.

அதாவது (ரெவினியுவை) ச்சார்ந்த வரி வசூல்களை சுதேச கவுன்சல் மெம்பர்கள் காணாததல்ல. முநிசபில் வரி வசூல்களை சுதேச கமிஷனர்கள் காணாததல்ல. சுதேசிகளைக் கொண்டே வரிகளைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் அநுபவத்தில் இருக்க இராஜாங்கத்தோரை குறைகூறுவது பிசகேயாம்.

வரிகளை அதிகப்படுத்துவோரும் அவற்றை வசூல் செய்கிறவர்களும் வாதைப்படுகிறவர்களும் யாவரென்று நாட்டுப் புறத்தோரை விசாரித்தால் நன்கு விளங்குமே.

இன்னும் நாளதுவரையில் நாட்டுப் புறங்களிலுள்ளக் குடிகள் சாவியடைந்த பூமிகளையும் விளைந்த பூமிகளையும் ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களே நேரில் வந்து பார்வையிட்டு வரியிறை ஏற்படுத்துவார்களாயின் சுகமடைவோம். அங்ஙனமின்றி சுதேச உத்தியோகஸ்தர்கள் வரலாகாதென்று அவரவர்கள் தேவதைகளுக்குத் தேங்காய் உடைக்கின்றார்களே இஃது யாவரும் அறியா விஷயமோ.

சுதேச உணர்ச்சி வந்துவிட்டபடியால் சுதேசிகளை இனி வருத்த மாட்டார்கள். சுயராட்சியமும் செவ்வனே செய்வார் என்பாரும் உண்டு.

தற்காலம் அந்தஸ்திற்கு வந்துள்ளக் குடிகள் சுதேச எழியக் குடிகளை வருத்தாமல் சுயராட்சியஞ் செய்வரோ, ஒருக்காலுஞ் செய்யமாட்டார்கள். பரோபகார அனுபவமும், இராஜ பக்த்தியும், வல்லபமும் இவர்களுக்குக் கிடையாது.

காரணம் - அந்தந்த டிஸ்டிரிக்ட்டுகளிலுள்ள ஆலய வழக்குகளை அவர்களுக்குள்ளே தீர்த்துக் கொள்ளத்தக்க ஆலோசனையும் சக்த்தியும் இல்லாமல் ஆங்கிலேய நீதியதிபர்களைக் கொண்டே நியாயம் தீர்த்துக் கொள்ளுகின்றார்கள்.

- 2:12; செப்டம்பர் 2, 1908 -

இதன் அனுபவத்தை அறிய வேண்டுமாயின் காஞ்சிபுரத்தில் சுதேசிகளுக்குள் நேரிட்ட வடகலை தென்கலை கலகத்தை ஏதேனும் தங்களுக்குள் அடக்கி ஆண்டுக் கொண்டார்களா.

திரிசிரபுறத்தில் சுதேசிகளுக்குள் நேரிட்ட வடகலை தென்கலை வழக்கை ஏதேனும் தங்களுக்குள் அடக்கி ஆண்டுக் கொண்டார்களா, இல்லையே.

இச் சென்னையிலுள்ள சுதேசிகளின் ஆலய தர்மகர்த்தாக்கள் நியமன வழக்கை ஏதேனுந் தங்களுக்குள் அடக்கி ஆண்டு கொண்டார்களா, இல்லையே.

இத்தகைய சொற்ப ஆலய வழக்குகளைத் தங்களுக்குள் அடக்கியாள சக்த்தியற்றவர்கள் ஓர் தேசத்தைக் கட்டியாளுவோம் என வெளிவந்தது விந்தையேயாம்

விந்தையிலும் நிலையற்ற விந்தை என்று விளங்குகின்றது. அதாவது, தற்காலம் இத்தேசத்திலுள்ள ஓர் மனிதனை நோக்கி ஐயா, நீவிர் யாவருடைய ஆளுகையில் இருக்கின்றீர் என்றால் அவன் கூசாமல் நான் ஏழாவது எட்வர்ட் சக்கிரவர்த்தியின் ஆளுகையில் இருக்கின்றேன் என்பான்.

இந்த சுதேசிகள் வசம் சுயராட்சியம் அளித்த பின்னர் ஒருவனை நோக்கி நீவிர் யாவராளுகையில் இருக்கின்றீர் என்றால் யாது கூறுவான். நாங்களே ஆண்டுக் கொள்ளுகிறோம் என்பனோ, அன்றேல் ஆளுகைக்கதிபராய் எங்களுக்குள்ள சுதேசிகளில் ஒருவரைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவோம் என்பார் போலும்.

சுதேசிகளின் சொற்பக் கோவில்களுக்கு ஓர் தருமகர்த்தாவைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவதற்குள்ளாக உனக்கெனக் என்னும் உள் விரோதங்கள் உண்டாய் பெரும்போர் பிறந்து பிரிட்டிஷ் நியாயாதிபதிகளால் தருமக்கர்த்தாக்களை நியமிப்பது அநுபவத்தில் இருக்க சுதேசிய சுயராட்சியத்திற்கு ஒருவரை நியமிக்குங்கால் உண்டாகுங் கலகங்களை நிவர்த்திக்க யாரிடஞ் சென்று தீர்த்துக் கொள்ளுவார்களோ விளங்கவில்லை.

சுதேசிய சுயராட்சியத்தில் அவ்வகைக்கலகம் நேரிடுமாயின் பிரிட்டிஷ் அதிபர்களைத் தருவித்தே தீர்த்துக் கொள்ளுவோம் என்பாராயின் காலத்திற்குக் காலம் அவர்களே வந்து ஒவ்வொருவரை நியமிப்பதைப் பார்க்கினும் அவர்களேயிருந்து ஆளுகைச் செய்வது அழகா என்பதை சகலரும் அறிந்துக் கொள்ள வேண்டியதேயாகும்.

இத்தகைய சுதேசக் குடிகளின் குணாகுணங்களையும் ஆங்கிலேய அரசர்களின் ஆளுகைகளையும் தேற விசாரியாது காக்கை ஒன்று காகா என்றவுடன் காரமின்றி மற்றக் காகங்கள் யாவும் கா- கா சென்று கலந்து கூச்சலிடுவது போல் சுதேசியம் என்று ஒருவர் சொன்னவுடன் அதன் கருத்து இன்னது இனியதென்று உணராது எல்லோரும் கூடிக் கொண்டு சுதேசியம் சுதேசியம் எனக் கூச்சலிடுவது அழகின்மையே ஆகும்.

நமது தேசத்தை சீருஞ் சிறப்பும் பெறச் செய்வது வித்தியாவிருத்தியின் கூச்சலும், விவேக விருத்தியின் கூச்சலும், ஈகை விருத்தியின் கூச்சலும், சன்மார்க்க விருத்தியின் கூச்சலுமேயாம்.

இவைகளை விடுத்து நமது தேயத்தில் பொய்வேஷ வித்தியாவிருத்திகளும், பொய் வார்த்தை விருத்திகளும் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை தற்கால வங்காள விருத்தாந்தத்தில் அறியலாம்.

அதாவது வங்காளம் மைமன்சிங் ஜில்லா பாஜித்பூரிலுள்ள சில சுதேசிகள் போலீஸ் கான்ஸ்டேபில்களைப் போல் வேஷந்தரித்துக் கொண்டு பொய்வாரண்டொன்று தயார் செய்து ஓர் சுதேசகனவான் வீட்டில் சென்று சோதிக்க நுழைந்து அவனுக்குள்ள சாமானங்களையும் நோட்டுகளையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம். இத்தகைய வித்தையில் மிகுந்த சுதேசிகள் இன்னும் எத்தகைய வித்தையில் சுயராட்சியம் செய்வார்கள் என்பதை சுருக்கத்தில் ஆலோசிக்குங்கால் மீனை மீன் பிடித்துண்பது போல் சுதேசிகளே சுதேசிகளை வதைத்து சுகக்கேட்டை உண்டு செய்வார்கள் போலும்.

- 2:13; செப்டம்பர் 9, 1908 -

அதாவது நமது தேயத்தோர் நூதனமாக சாதிகளை ஏற்படுத்திக் கொண்டு உப்பு அதிகரித்தால் நீரும், நீரதிகரித்தால் உப்புமிட்டுக் கொள்ளுவதுபோல் தங்களுக்கு லாபமும் சுகமும் கிடைக்கக்கூடிய இடங்களில் சாதியில்லை என்பது போல் நடித்து அன்னியர் தங்களுக்கு லாபமும் சுகமும் கோறும் இடங்களுக்கு சாதி உண்டு என்று நடிப்பது வழக்கமாதலின் சாதிபேதம் இல்லா திராவிடர்கள் யாவரும் அஞ்ச வேண்டியவர்களேயாம்.

காரணம் யாதென்பீரேல், புத்ததன்மங்களையும், பௌத்தர்களையும் பாழாக்கிய வேஷபிராமணர்கள் தங்கள் சீவனத்திற்காய் நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதிகளையும், மதங்களையும் பரவச்செய்தற்கு தங்களுக்கு எதிரிகளாக நின்ற சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் சாதிக்கும், மதத்திற்கும் அன்னியப்பட்டவர்களாதலின் அவர்களை பராயர் பரயமர் என்று கூறி அவ்வாக்கியத்தையே பறையர் பறையர் என்றுந் தாழ்ந்தசாதிகள் என்றும் வகுத்து பலவகையாலும் துன்பஞ் செய்து நசித்து வருங்காலத்தில் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் வந்து தோன்றி வாடி மடிந்துபோகத்தக்க பயிர்கள் நீரைக் கண்டவுடன் நிமிர்ந்து சீவித்தது போல் சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்களுக்கு நேரிட்டுவந்த சில துன்பங்கள் தவிர்ந்து சுகமுற்றார்கள்.

அக்காலத்தில் பிரிட்டிஷ் இராஜாங்கத்தோர் இத்தேசத்துப் படைவீரரை நியமிக்குங்கால் சாதிகளையே சதமென்று நம்பியிருந்தவர்கள் யாவரும் பட்டாளங்களிலும், சாப்பிரிஸ்மைனரிலும் போய்ச்சேர்ந்தால் தங்கள் சாதி கெட்டுப்போமென்று விலகிவிட்டார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ அவ்வகையில் விலகாமல் பிரிட்டிஷ் ராஜரீக ராணுவங்களில் சேர்ந்து காடுமலைவனாந்திரங்களை சீர்திருத்தி தேசத்திற்கு தேசவழிகளை உண்டு செய்து யுத்த களங்களில் உயிர்கொடுத்து உதிரஞ்சிந்த பாடுபட்டார்கள்.

உயித்தியங்கள் யாவும் அடங்கி தேசங்கள் சீர்பெற்று சாதிபேதமற்ற திராவிடர் சுகித்திருப்பதை சகியாமல் பட்டாளங்களில் சேர்ந்தால் சாதி கெட்டுப்போமென்று விலகிநின்றவர்கள் யாவரும் பட்டாளங்களில் வந்து சேர்ந்து சாதி பேதமற்ற திராவிடர்களுக்கு இடம் கிடைக்காமல் செய்துவிட்டார்கள், செய்தும் வருகின்றார்கள்.

பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் வந்து தோன்றி இராணுவ உத்தியோகஸ்தர்களுக்கும், குடிகளுக்கும் வைத்தியசாலைகளை நியமித்தபோது அப்பாத்தகிரிகளிலும், டிரசர்களிலும், கம்பவுண்டர்களிலும் சேர்ந்தால் பிணங்களை அறுக்க வேண்டும், பலசாதிகளைத் தொடவேண்டும் என்று பிராமண மதஸ்தர்கள் யாவரும் சேராமல் விலகிவிட்டார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ யாதொரு களங்கமுமின்றி அவ்வுத்தியோகங்களில் பிரவேசித்து யுத்தகளங்களிலும் சென்று யுத்தவீரர்

களையும் கார்த்து தங்களுயிர்களையும் கொடுத்து உதிரமும் சிந்தப்பாடுட்டதுமன்றி வைத்திய சாலைகளிலுள்ள சகலசாதி வியாதியஸ்தர்களையும் அன்புடன் ஆதரித்து வியாதிகளைப் பரிகரித்துவந்தபடியால் சகலராலும் மதிக்க நாகரீகமும் சுகமும் பெற்றிருந்தார்கள்.

அவர்கள் சுகத்தையும், நாகரீகத்தையும், நன்மதிப்பையும் பார்த்துவந்த சாதியாசாரமுடையவர்கள் மனம் சகியாமல் பலசாதி பிணங்களை அறுப்பதால் சாதி கெட்டுப்போம். பற்பலசாதியோரைத் தொடலால் சாதி கெட்டுப்போம் என்று விலகினின்ற பிராமணமதஸ்தர்கள் யாவரும் வைத்தியசாலை உத்தியோகங்களில் வந்துசேர்ந்துவிட்டார்கள். அதினால் இத்தேச சீர்திருத்த காலங்களிலும், யுத்தகாலங்களிலும் பாடுபட்ட சாதிபேதமற்ற திராவிடர்களுக்கு வைத்தியசாலை உத்தியோகமுங் கிடைப்பதரிதாகிவிட்டது.

ஈதன்றி பிரிட்டிஷ் துரைத்தனத்தில் பரோபகார மிஷநெரிகளால் ஏற்படுத்திய கலாசாலைகளில் பிராமணமதஸ்தர்கள் மட்டிலும் வாசிக்கலாம் மற்றவர்களைச் சேர்க்கலாகாதென்று தடுத்து சாதிபேதமற்ற திராவிடர்களை பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதிகள் என்றும் கூறி கல்வியும் கற்கவிடாமல் பரோபகார கல்வி கற்பிக்கும் மேலோர் மனதையும் கெடுத்துக் கொண்டே வந்தார்கள்.

இத்தகைய நீச்சகுணங்களையும் பொறாமெய் செயல்களையும் நாளுக்குநாள் பார்த்துவந்த மேலோர்களாகும் ஆங்கிலேயர்கள் கருணைகூர்ந்து சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள்ள இடுக்கண்களையும், துன்பங்களையும் அமேரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் விளக்கி சில பொருள் சேகரித்து இவர்களுக்கென்று பிரத்தியேக கலாசாலைகளை நியமித்து கல்விகற்பிக்குங்கால், இவர்கள் பறையர்கள் தாழ்ந்தசாதியார் எங்கள் குலத்துப் பிள்ளைகளுடன் உட்காரலாகாது, தீண்டலாகாது, நெருங்கி நிற்கலாகாது என்று ஏழைகளின் கல்விவிருத்திக்கு இடுக்கண் செய்து வந்த வகுப்பினரே தற்கால ஏழைப் பிள்ளைகள் கலாசாலைகளுக்கு உபாத்திமார்களாகவும் பார்வையோர்களாகவும் அமர்ந்து சேரிகளிலுள்ளப் பாடசாலைகளில் தாங்கள் கொண்டுவரும் புசிப்பை உண்ணவும் சலபானம் அருந்தவும் இருக்கின்றார்கள்.

- 2:14; செப்டம்பர் 16, 1908 -

கிறிஸ்துமத மிஷநெரிமார்கள் இத்தேசத்தில் வந்து தங்கள் மதத்தைப் பரவச் செய்தபோது சாதிபேதமுடைய பிராமண மதஸ்தர்கள் அவர்களை இழிவாகக் கூறி அவர்கள் மதம் பரவக்கூடா இடுக்கங்களைச் செய்துவந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ யாதொரு களங்கமுமின்றி அம்மதத்துள் பிரவேசித்து அந்த துரைமக்கள் கருணையால் பி.ஏ. எம்.ஏ., முதலிய கவுரதா பட்டங்களும் பெற்று நாகரீகமுற்று காடு மலை வனம் வனாந்திரங்களைச் சுற்றி கிறீஸ்துமத வாக்கியங்களைப் போதித்து எங்கும் அம்மதத்தைப் பரவச் செய்து வந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களால் கிறீஸ்துமதம் பரவியதுமன்றி சாதிபேதத்தால் தங்களுக்கு உண்டாயிருந்த சில இடுக்கங்களும் நீங்கி சுகவாழ்க்கையைப் பெற்றார்கள்.

அவர்கள் ககவாழ்க்கையைக் கண்ணால் பார்க்கப்போறாத சாதிபேதமுடைய பிராமணமதஸ்தர்கள் கிறீஸ்துமத்தில் வந்து சேர்ந்து சாதியையும் வைத்துக் கொண்டு ஆதியில் இக்கிறிஸ்து மதத்தை கற்களின் அடியும், தடியடியும், சாணங்களின் அடியும் பட்டு விடாமுயற்சியால் பரவச்செய்துவந்த சாதிபேதமற்ற திராவிடர்களுக்கு தற்காலம் அம்மதத்தில் யாதொரு சுகமும் இல்லாமல் போய்விட்டது.

இத்தகைய அனுபவங்களால் சாதிபேதமுள்ளக் கூட்டத்தார்வசம் சுயராட்சியங் கிடைக்குமாயின் சாதிபேதமற்ற திராவிடர்களையே முன்பு கெடுத்துப் பாழாக்கிப் பதங்குலையச் செய்துவிடுவார்கள் என்பதற்கு ஆட்சேபமில்லை.

காரணம், இச்சாதிபேதமற்ற திராவிடர்களையும் புத்தமார்க்கத்தையும் நசிக்க வேண்டி பௌத்தர்களை பறையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் வகுத்து பறையர் என்னும் பெயரை பலவகையாலும் பரவவேண்டிய உபாயங்களையுஞ் செய்து ஊரிலுள்ள சுத்தஜலங்களை மொண்டு குடிக்க விடாமலும், குளிக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும் தடுத்து அசுத்த நிலையடையச் செய்து நூதனமாக இத்தேசத்தில் குடியேறி வருபவர்களுக்குக் காண்பித்து இவர்கள் பறையர்கள் தாழ்ந்தசாதியோரென்றும் கூறி அவர்கள் மனதையும் கெடச்செய்து இவர்களை தலையெடுக்கவிடாமல் செய்ததுமன்றி கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தில் இராணுவ உத்தியோகங்களிலும், பிரோட்டிஸ்டாண்டு கிறீஸ்து மதத்திலும் பிரவேசித்து கல்வியும், செல்வமும் நாகரீகமும் மிகுத்துவருங்கால் அவர்கள் சுகத்தைக் கண்டு மனஞ்சகியாத சாதிபேதமுள்ளவர்கள் யாவரும் மேற்சொன்னபடி உத்தியோகங்களிலும், மதத்திலும் பிரவேசித்து சாதிபேதமில்லா திராவிடர்களுக்கு அங்குஞ் சுகம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டதுமன்றி செய்தும் வருகின்றார்கள்.

இதற்கு பகரமாய் தற்கால சுதேச விருத்திக் கூட்டத்தார் பணஞ் சேகரிக்கும் விஷயங்களில் சாதிபேதம் கிடையாது, சகலசாதியோரிடத்திலும் பணம் வசூல் செய்யலாம் என்று கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் பயிரங்கமாகப் பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.

இவற்றை சகல பத்திரிகைகளிலுங் காணலாம். இவ்வகையாய்ப் பணஞ்சேகரிக்கும் காலத்தில் மட்டும் சாதிபேதம் கிடையாது என்று கூறி வசூல் செய்கின்றவர்கள் அத்தொகையைக் கொண்டு ஜப்பான், அமேரிக்கா முதலிய தேசங்களுக்கு வித்தை கற்கும்படி சிறுவர்களை அனுப்புங்கால் சாதிபேதமில்லாமல் சகலசாதி சிறுவர்களையும் அனுப்புகின்றார்களா.

இவர்கள் ஆரம்பித்துச் செய்யும் கைத்தொழிற்சாலைகளிலேனும் சகலசாதி பிள்ளைகளையும் வைத்து வித்தை கற்பிக்கின்றார்களா இல்லையே.

பணஞ்சேகரிக்கும் காலத்தில் மட்டும் சாதிகிடையாது. அப்பணத்தைச் சிலவிடுங்கால் சாதி உண்டென்பது ஓர் சுதேசியக் கூட்டமாகுமா. இவர்கள் செயலும் நிலைபெறுமா. இவர்கள் வித்தையும் விருத்தியடையுமா. இதன் பலன் தன்னவரன்னியரென்னும் பட்சபாதம் அற்றவர்களுக்கே விளங்கும்.

- 2:15; செப்டம்பர் 23, 1908 -

தன்னவர் அன்னியர் என்று எக்காலும் பிரிவினையால் தங்களை உயர்த்தியும் ஏனையோரைத் தாழ்த்தியும் சீவிக்கும் சுயப்பிரயோசனமுடையார்க்கு இதன் அந்தரார்த்தம் விளங்காது.

சில பெரியோர் தேசபிமானத்தால் கூட்டம் கூடுவதும், பத்திரிகைகளில் பேசுவதுமேயன்றி இராஜவிரோதம் கிடையாது என்று வெளிவந்திருக்கின்றார்கள்.

இராஜபிமானமற்றவர்களுக்கு தேசாபிமானம் உண்டு எனில் விவேகிகள் ஏற்பரோ. யதார்த்த தேசாபிமானிகளாயின் இராஜாங்கத்தோரை விரட்டித் துறத்திவிட்டு சுயராட்சியம் ஆளவேண்டும் என்னும் கூட்டங்கள் கூடுவரோ. பலவகை விரோதவாக்கியங்களைப் பத்திரிகைகளில் தீட்டுவரோ, இராஜாங்கத்தோர் செல்லும் பாதைகளில் வெடிகுண்டுகளைப் புதைத்து வீண்கலபை செய்வர்களோ. அத்தகைய வீணர்களை அரசாங்கத்தோர் பற்றி நீதி செலுத்துங்கால் அவர்களுக்கு உதவியாய்ப் பரிதாபக் கூட்டங்கள் கூடுவரோ, ஒருக்காலும் கூட்டமாட்டார்கள்.

எட்டினால் குடிமி எட்டாவிடில் பாதமென்னும் பழமொழிக்கிணங்க சுதேசிகளாகும் விவேகமிகுத்தோர் எத்தகைய மிதவாதம் கூறினும் அவற்றை செவிகளில் ஏற்காது அமிதவாதத்தையே ஆனந்தமாகக் கொண்டாடியதால் அரசாங்கத்தோர் முநிந்தளித்த அடியோடு தேசாந்திர சிட்சையும், ஐந்துவருட தேசாந்திரசிட்சையும், ஆறுவருட தேசாந்திர சிட்சையும் விளங்கியப்பின்னர்

அமிதவாதத்தையும் விட்டு அரசாங்க விசுவாசமே ஆனந்தம் என்று கூறி வெளிவருகின்றார்கள்.

இஃது யதார்த்த இராஜவிசுவாசம் ஆகுமோ, ஒருக்காலும் ஆகா. இவைகள் யாவும் சமயயுக்த்தம்), சமயதந்திரம், சமயோபயோகசாராங்களேயாகும். இத்தகைய யுக்த்தியால் நந்தேயம் ஒருக்காலும் சீர்பெறமாட்டாது.

சுவற்றை வைத்துக் கொண்டு சித்திரம் எழுத வேண்டும் என்னும் பழமொழிக்கிணங்க நம்மை வித்தையிலும், புத்தியிலும் சீர்திருத்தி சகலவிஷயங்களிலும் சுகமுற்று வாழச் செய்துவரும் பிரிட்டிஷ் ராஜாங்கமே இவ்விடம் நிலைத்திருக்கவேண்டிய ஆதாரங்களை முன்பு தேடிக்கொண்டு ஆங்கிலேய வித்தியா புருஷர்களில் ஒவ்வொருவரைக் கைத்தொழிற்சாலை அதிபதிகளாகவும், இயந்திரசாலைகள் அதிதிகளாகவும் நிருமித்து சீர்திருத்த காரியாதிகளைச் செவ்வைச் செய்வோமாயின் நம்முடைய தேசத்து செம்மறியாடுகள் அவர்கள் மேய்ப்புக்கடங்கி சகல காரியாதிகளுக்கும் ஒடுங்கி வித்தைகளில் விருத்தி பெறுவார்கள்.

அங்ஙனமின்றி ஆங்கிலேயர் துரைத்தனத்தையும் அழித்துவிட்டு ஆங்கிலேயர்களையும் துரத்திவிட்டு ஆட்சி செய்யலாம் என்று எண்ணுவார்களாயின் அவன் சாதிக்கு நான் தாழ்ந்தவனோ, இவன் சாதிக்கு அவன் தாழ்ந்தவனோ, உவன் சாதிக்கு அவனுயர்ந்தவனோ என்னும் சாதி கர்வத்தினாலும், என்சுவாமியைவிட, அவன் சுவாமி பெரிதோ அவன் சுவாமியைவிட என்சுவாமி சிறிதோ என்னும் மதகர்வத்தினாலும், என்னைவிட அவன் அதிகங்கற்றவனோ அவனைவிட இவன் அதிகங்கற்றவனோ என்னும் வித்தியா கர்வத்தினாலும், என்னிலும் அவன் அதிகபணக்காரனோ, அவனிலும் இவன் அதிகப் பணக்காரனோ, என்னும் தனகர்வத்தினாலும் ஒருவன் வார்த்தைக்கு மற்றொருவன் அடங்காமலும், மற்றொருவன் வார்த்தையை சிற்றறிவோன் கற்காமலும், வித்தியாவிருத்திகளைப் பெருக்காமலும் ஒவ்வொருவருக்குள்ள சாதிபேத சமய பேதங்களால் விரோதசிந்தையையே பெருக்கி வித்தையும் புத்தியும் கெட்டு வீணே சீர்கெடுதலாகும்.

- 2:16; செப்டம்பர் 30, 1908 -

இன்னும் அவற்றிற்குப் பகரமாய் நமது தேசமாகிய இந்தியாவிலிருக்கும் ஜனத்தொகை ஏறக்குறைய முப்பது கோடியேயாகும்.

இம்முப்பதுகோடி ஜனங்களுள் நூற்றிற்கு 97 - பெயர் வாசிப்பறியாதவர்கள். இவற்றுள் புருஷருக்குள் 10 - பெயரில் ஒருவருக்கும், இஸ்திரீகளுக்குள் 150 - பெயர்களுக்குள் ஒருவளுக்கும் கல்வி பயிற்சி இருப்பதாக விளங்குகின்றது.

இத்தகைய கல்விபயிற்சியில் வித்தியாவிருத்தி கல்வியிலிருப்பவர்கள் நூற்றிற்கு ஒருவரும் உலக விருத்திக் கல்வியிலிருப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவரைக் காண்டலும் அறிதேயாகும்.

சீர்சிறந்த ஜப்பானியரை நோக்குகையில் கல்வி பயிற்சியிலுள்ளவர்கள் புருஷர்கள் நூற்றிற்கு தொண்ணூற்றொருவரும், இஸ்திரீகள் நூற்றிற்கு எழுபத்தொன்பது பேருமாக விளங்குகின்றார்கள்.

அமேரிக்கா முதலிய தேசத்தவர்களோ அதனினும் பெருந்தொகை உடையவர்களே யாவர்.

இவற்றுள் ஓர் மனிதனுக்கு அறிவுவிருத்தி பெறவேண்டுமாயின் முதலாவது கல்வி விருத்தி வேண்டும். அதற்கு உதவியாய் செல்வ விருத்தி வேண்டும். இவ்விரண்டும் உண்டாயின் வேண்டியவிருத்திக்கு ஆளாவான்.

நம்முடையதேசத்தவர்களுள் ஆயிரங் குடிகளை வட்டியால் அர்த்தநாசஞ் செய்து ஆயிரத்தில் ஒருதனவந்தர் விளங்குவார்.

ஐரோப்பா, அமேரிக்கா முதலிய தேசத்தவர்களோ மின்சாரத்தாலும், புகைரதத்தாலும், தந்திகள் சங்கதியாலும் ஆயிரங் குடிகளுக்கு ஆனந்த உபகாரஞ் செய்து ஆயிரத்துள் நூறு தனவந்தர்கள் தோன்றுகிறார்கள்.

இத்தகைய வித்தையிலும் புத்தியிலும் சிறந்தவர்களாக இருப்பதுமன்றி புருஷர்களும் இஸ்திரீகளும் கல்வி விருத்திப் பெற்று விவேகிகளாக

விளங்குகின்றார்கள்.

அவ்விவேக மிகுதியால் அவர்கள் செய்யும் அரசாங்கமானது தன்னவரன்னியரென்னும் பட்சபாதமில்லாமலும், தன்னாடு புறநாடென்னும் களங்கமில்லாமலும் சீர்திருத்தி சிறப்புறச் செய்துவருகின்றார்கள்.

நமது தேசத்திலுள்ள சில சாதியோர் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காய் யாவரையும் கல்வி கற்கவிடாத ஏதுக்களைச் செய்துவந்ததுமன்றி இஸ்திரீகளுக்குக் கல்வியின் சப்தமே கேட்கவிடாது செய்துவிட்டார்கள்.

காரணம் யாதென்பீரேல் இத்தேசத்து பேதை மக்களுக்குத் தாங்களே உயர்ந்தசாதிகள் என்றும் தாங்களே சுவாமிகள் என்றோதி வஞ்சித்துப் பொருள் பறித்து தின்றவர்களாதலின் ஏனைய மக்கள் கல்விகற்றுக் கொள்ளுவார்களாயின் தங்களது வஞ்சகக் கூற்று விளங்கிவிடுவதுமன்றி தங்கள் சுகசீவனத்திற்கும் கேடுண்டாகும் என்று எண்ணி சகலருக்கும் கல்வி விருத்தி பெறக்கூடா தடைகளையே செய்துவந்தார்கள்.

அத்தகைய இடுக்கத்தால் புருஷர்களில் நூற்றிற்கு ஒருவனையும், இஸ்திரீகளில் ஆயிரத்துள் ஒருத்தியையும் கல்வி கற்றவர்கள் என்று கூறுதற்கு ஆதாரம் இல்லாமல் போயது.

அக்காலத்தில் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி ஆங்கிலேய மிஷநெரி பாதிரிகளின் நன்னோக்கத்தால் எங்கும் கலாசாலைகளை ஏற்படுத்தி கல்விவிருத்தி செய்வதனால் புருஷருள் நூற்றிற்கு பத்து பெயரும், இஸ்திரீகளுள் நூற்றிற்கு ஒருத்தியும் கல்வி கற்றவர்கள் என்று சொல்லவும், கேழ்க்கவும் வெளிவந்து வித்தியாவிருத்தி செய்கின்றார்கள்.

இத்தகைய சொற்பக்கல்வியைக் கற்றவுடன் தீட்டியமரத்தில் கூர்பார்ப்பதுபோல் செய்நன்றியை மறந்து சுயராட்சியம் கேழ்க்க வெளிவந்தது சூன்யவிருத்தி என்னலாகும்.

அதாவது - தற்கால கல்விவிருத்தி பெற்றுள்ளோர் கணக்கின்படிக்கு சுயராட்சியமென்னும் வார்த்தையின் (பொருளறிந்தோரை) நூற்றிற்கு ஒருவரையேனும் காண்பதரிது.

- 2:17: அக்டோபர் 7, 1908 -

சுதேசம் என்னும் வார்த்தையின் பொருளும், சுயராட்சியம் என்னும் வார்த்தையின் பொருளும் தெள்ளற விளங்காதப் பெருந்தொகையார் வசம் இராட்சியபாரம் ஏற்றுவதானால் அவர்கள் தாங்குவரோ.

அவ்வகை ராட்சியபாரத்தைத் தாங்கச் செய்து தன்னவர் அன்னியரென்னும் பேதமில்லாமல் நடத்தும் களங்கமற்ற நெஞ்சினர் களிருக்கின்றனரோ. அன்னோரையும் காண்பதரிது.

இத்தகைய சுயராட்சியம் கேட்போர் வசம் இந்துதேசத்தை அளித்த பின்னர் தற்காலம் ஐதிராபாத்தில் நேரிட்ட துக்கசம்பவம் உண்டாகி இருக்குமாயின் இச்சுதேசிகள் என்போர் யாது உதவி செய்திருப்பர்.

அவனென்னசாதி இவனென்னசாதி அவனென்ன சமயம் இவன் என்ன சமயம் என்றுக் கேட்டுக் கொண்டே சுயநலம்நாடி ஓடியிருப்பார்கள்.

அதற்குப் பகரமாய் தற்கால ஐதிராபாத்து விபத்தில் ஓர் இந்து மனிதனிருந்து ஆதரித்தான் என்னும் வதந்தியும் கிடையாது. இந்துக்கள் விஷயமாக எழுந்த வதந்திகள் யாதென்னில் செக்கின்றாபாத்திலும் ஜலம் பெருகிவிடும் என்று பயந்து தங்கள் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு அவர்கள் முன்வாசதேசஞ் சென்று விட்டார்கள் என்பதேயாம்.

பிரிட்டிஷ் ராஜாங்க ஆங்கிலேயர்களோ எனில் தங்கள் பிராணனையும், சொத்துக்களையும் ஓர் திரணமாகக் கருதி ஜலத்தில் இறங்கி மனிதசீவர்களையும், மிருக சீவன்களையும் காப்பாற்றி கரைசேர்த்திருக்கின்றார்கள்.

இவ்வகை ஆபத்து பந்துவாக விளங்கிய ஆங்கிலேயருள் சிலர் ஏழைகளைக் கார்க்க முயன்று நீரிலிறங்கி அவர்களும் காணாமலிருப்பதாகத் தெரிகின்றது.

இத்தகைய சுத்தவீரமும், உத்தமகுணமும் வாய்த்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தை ஓட்டிவிட்டு சுத்தவீரமற்ற அதமகுணத்தோர் ஆளுவோம் என்பது அந்நியாயமேயாகும்.

ஏகமதம், ஏகசாதி, ஏகபாஷையுடைய ஓர் தேசத்தையாளும் அரசனுக்குள்ள கஷ்டநிஷ்டூரங்களையும், இராஜகீயச் செயல்களையும், மந்திராலோசனைப் பெருக்கல்களையும் உய்த்துணர்வோமாயின் பலமதம், பலசாதி, பாஷை பெருத்த தேசக்குடிகளை எத்தகையாலாண்டு சாட்சியாபாரம் தாங்குவோம் தாங்கமாட்டோம் என்னும் பகுப்பு தெள்ளற விளங்கும்.

இங்குள்ள மதபேத விரோதங்களையும், சாதிபேத விரோதங்களையும், பாஷைபேத விரோதங்களையும், இவர்களை ஒற்றுமெய்ப்படுத்தியாளும் இராஜகீயங்களையும், மந்திராலோசனைகளையும் நன்காராய்வோமாயின் தற்காலம் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கமே பிதுரு மாதுருக்கு ஒப்பானதென்றும், அவர்களே தற்கால தன்மதேவதைகள் என்றும், அவர்களே நமது ஆபத் பந்துவுமென்றெண்ணி அவர்கள் இராஜகீயமே நிலைக்கத்தக்க எதுக்களைத் தேடி அவர்கள் உத்தம குணத்திற்குத் தக்கவாறு நாமும் உத்தமகுணத்தினின்று காரியாதிகளை நடத்தி வருவோமாயின் சகலரும் சுகமடையலாம்.

கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் தங்கள் ஆங்கில பாஷையையே ஒவ்வொருவரையும் வாசிக்கச்செய்து அப்பாஷையிலேயே சகல காரியாதிகளையும் நடத்திக் கொண்டுவருகின்றார்கள்.

அதினாற் சகல பாஷையோரும், சகலமதத்தோரும், சகலசாதியோரும் அதனைக் கற்று யாதொரு பேதமுமின்றி இராஜகீயகாரியாதிகளை நடாத்திவருகின்றார்கள்.

அத்தகைய காரியாதிகள் நிறைவேறுவதில் சுதேசிகளின் கர்மங்களினால் சுதேசிகளுக்கு இடுக்கண்கள் உண்டாய் வாதைப்படுகின்றார்களன்றி ஏனைய ஆங்கிலேயர்களால் யாதோர் இடுக்கண்களும் கிடையாது.

கவர்ன்மென்றாபீசுகளிலும், முநிசபில் ஆபீசுகளிலும், வைத்தியம் சாலைகளிலும், இரயில்வே உத்தியோகங்களிலும் உள்ள சுதேசிகள், சுதேசிகளுக்குச் செய்துவரும் இடுக்கண்களையும் இச்சுதேசிகளுக்கு கருணைதங்கிய ஆங்கிலேயர் செய்துவரும் சுகங்களையும் கண்டு எழுதுவோமாயின் விரியும் என்று அஞ்சி விடுத்திருக்கின்றோம்.

அவ்வுத்தியோகங்களில் இல்லாத வியாபாரிகளும், பயிரிடும் தொழிலாளரும், கைத்தொழிலாளிகளும் இவற்றைக் கவனிப்பார்களாயின் சுதேசிகளுக்கும், கொடுத்திருக்கும் பெரும் உத்தியோகங்கள் யாவற்றையும் ஆங்கிலேயர்களுக்கு அளிப்பதே ஆனந்தம் என்று கூறுவார்கள்.

அதாவது சுதேசிகள், சுதேசிகள் எனக் கூறிக்கொண்டு சுயப்பிரயோசனத்தை நாடுவதினாலேயாம்.

தன் சுகத்தை நாடாது பிறர் சுகத்தை நாடுவது உத்தமம்.

தன் சுகத்தையும் பிறர் சுகத்தையும் நாடுவது மத்திமம்.

தன் சுகத்தையே நாடி பிறர் சுகத்தைக் கெடுப்பது அதமம்.

- 2:18; அக்டோபர் 14, 1908 -

சுதேசியக் கூட்டத்தாருள் சுயநல சுதேசிகளும், பிறநல சுதேசிகளும், பொதுநல சுதேசிகளுமாக விளங்கி எடுத்த விஷயங்களால் யாவும் சுயநலமாகவே தோன்றும் போலும்.

காரணம் - பச்சையப்பன் தன்மநிதியின் விஷயமாய் தற்கால அட்வகேட் ஜெனரல் யோசித்துள்ள டிரஸ்ட்டிகளின் நியமனம் சரியல்ல என்று உள்ள டிரஸ்ட்டிகளும், ரெவினியூ போர்டாரும் தடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

அவர்களின் உத்தேசம் யாதெனில் - அட்வகேட் ஜெனரலின் அபிப்ராயப்படி டிரஸ்டிகளை நியமிப்பதானால் பிராமணர்களே பெருந்தொகையாகச் சேர்த்துக்கொண்டு மற்ற வகுப்பார்களுக்குத் தன்மந் தடைப்படும் என்பதேயாம்.

இதன் கருத்தை உணர்ந்த சுதேசமித்திரன் பத்திராதிபர் தான் வெளியிட்டுள்ள அக்டோபர்மீ 10உ சனிவாரத்திய பத்திரிகையில் பச்சையப்பமுதலி தர்மங்கள் என்னும் முகப்பிட்டு அதன் கடைசியில் “பச்சையப்பமுதலியார் ஜாதி மதவேற்றுமை உணர்ச்சியை மனதிற் கொண்டு தர்மஞ் செய்தாரோ நாமறியோம். பொதுவிஷயங்களில் வேற்றுமை உணர்ச்சியை மனதில் கொண்டு பார்க்கும்போது தான் அவ்வேற்றுமை உணர்ச்சி இருக்குமேயன்றி அதை மறந்து பார்க்கும் பட்சத்தில் அது தோன்றாது இதனை அநுபவத்தில் அறியக்கூடும்” என்பதாய் சாதிபேதம், சமய பேதங்களை அற்றவர்போல் வரைந்திருக்கின்றார்.

இத்தகைய சாதிபேத உணர்ச்சிகளை இவர் அற்றிருப்பாராயின், பச்சையப்பன் தன்மசத்திரங்களிலும், பச்சையப்பன் கலாசாலைகளிலும், பச்சையப்பன் நிதிப்பெயரிலும், பச்சையப்பன் கலாசாலை, பச்சையப்பன் தன்மசத்திரம், பச்சையப்பன் தன்மநிதி என்று கல்லுகளில் அச்சிட்டிருப்பதை இவர் கண்ணாரக் கண்டிருந்தும் இவர் எழுதும் பத்திரிகையில் பச்சையப்பனுக்கு இல்லாத சாதியை நிலைபடுத்த வேண்டும் என்னும் உணர்ச்சியா அன்றேல் சாதிகளைத் தவிற்கவேண்டும் என்னும் முயற்சியா இவரது கருத்தை விசாரிணைப்புருஷர் உணரற்பாலதே.

இவ்வகையாய் தன்மசொத்தைப் பாதுகாக்கும் விஷயங்களிலும், பரிபாலிக்கும் விஷயங்களிலும் சுயநலங்கருதுவோர் சிலர் பொதுநலம் கருதுவோர் சிலராய் இருப்பார்களாயின் தன்மபூர்த்தி பெறுமோ.

ஏதோ ஓர் பிரபுவின் தன்மசொத்தைக் கொண்டு பரிபாலிக்கும் விஷயத்தில் இந்த வகுப்பார் அந்த வகுப்பாரென்னும் பேதப்போர் உண்டாயின் சுயராட்சியபாரத்தை யார் தாங்குவார்கள் என்று உணரவேண்டும்.

இந்த வகுப்பார் தந்திரங்களையும், அந்த வகுப்பார் தந்திரங்களையும் ஆராய்ந்து ஓர் காரியங்களைச் செய்யாவிடின் ஒருவகுப்பாரே மலிந்து உள்ளதையும் தங்கள் வயமாக்கிக் கொள்ளுவார்கள் என்னும் பீதியால் பல வகுப்போரும் விழித்துக் கொண்டார்கள்.

அவ்வகை விழித்தும் சரியாகப் பார்த்தோரில்லை. எவ்வகையில் என்னில், ஓர் மனிதன் தருப்பைப் புல்லைக் கையில் ஏந்திக் கொண்டு வந்து நான் பிராமணன் நான் பிராமணனென்பானாயின் அவனை சரிவர விழித்துநோக்காமலும் இவன் நம்மெய்ப்போன்ற மனிதனா அன்றா என்று பாராமலும் இவன் நமக்கு ஏதேனும் வித்தைகளைக் கற்பிக்கக்கூடியவனா என்று உணராமலும் யாது விசாரிணையும் இன்றி அவனை சுவாமி சுவாமியென்று வணங்கி கும்பிடும்படியான நாம், குண்டு மருந்து ஒருபுறமும், துப்பாக்கி பீரங்கி ஒருபுறமும் வைத்துக் கொண்டு நீதிநெறிகளாம் செங்கோலைக் கையேந்தி சீருஞ் சிறப்புஞ் செய்துவரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தோரை எதிர்த்து நிற்பது என்ன காலக்குறைவோ, யாது விபரீதமோ, யாவர் தூண்டுதலோ விளங்கவில்லை.

கட்டுசாதமும், ஒருவர் கற்பனாசெயலும் நெடுநாளிருக்கமாட்டாது. நடுநாளில் அழிந்துபோம். அக்கால் துயருரும்படி நேரும்.

அதற்குப் பகரமாய் சிலநாட்களுக்கு முன்பு எழுதிவந்த பத்திரிகைகள் யாவிலும் இராஜாங்கத்தோர் ஒருவரைக் கண்டித்தாலும், தண்டித்தாலும் அதனை வரைந்து தங்கள் வித்தியா விருத்தியைக் காட்டிவந்ததினால் அதனைக் காணும் பத்திராதிபர்களும் முன்பின்பாராது அவர்களைப் பின்பற்றி நின்றார்கள். இதனை வரைவது தகுந்ததாதென்னும் பகுப்பின்றி ஏனையோர் வார்த்தைகளையும், ஏனையப் பத்திரிகைகளையும் பின்பற்றி இராஜ விரோதங்களைப் பெருக்கிக் கொண்டதினால் தானுந் தனது பந்து மித்திரர்களும் பெருந்துக்கத்தில் ஆழும்படி நேரிட்டது.

இப்பெருந் துக்கத்திற்குக் காரணம் நாம் ஆய்ந்தோய்ந்து பாராமல் செய்யும் செயல்களும்,

- 2:19; அக்டோபர் 21, 1908 -

எல்லோரையும் மனிதசீவர்கள் என்று உணராமல் அவன் சாதியில் தாழ்ந்தவன். நான் சாதியில் உயர்ந்தவன் என்னும் பொறாமெயும், அவன் சுவாமிக்குப் பரத்துவமில்லை, என்சுவாமிக்குப் பரத்துவம் உண்டென்னும் பற்கடிப்பும், அவன்பாஷை அகரபாஷை, என்பாஷை தேவபாஷை என்னும் இருமாப்புக் கொண்டு எண்ணங்கள் யாவிலும் சாதிசமயக் களிம்பேறி நீதிநெறிகள் அற்றிருப்பதினால் சொற்ப சுகமும், மீளாதுக்கமும் அநுபவித்து வருகின்றோம்,

ஆங்கிலேயர்கள் தங்களுடைய பாஷையை விரித்து எழுதக்கூடியதும், சுருக்கி எழுதக் கூடியதுமாகிய வித்தைகளைக் கண்டுபிடித்துவருவது மன்றி விரல்களால் அச்சிடக்கூடிய, சிறிய அச்சியந்திரங்களும், பெரிய அச்சியந்திரங்களும் கண்டுபிடித்து தாங்களும் தனவிருத்தி அடைவதுமன்றி ஏனையோரையும் சீவனவிருத்தி அடையச் செய்து வருகின்றார்கள்.

நமது தமிழ்பாஷையையோ பூர்வத்தில் விருத்திபெற்றுவந்த இலக்கியங்களையும், இலக்கணங்களையும் பாழாக்கிவிட்டு அதன் சிறப்பையும் கெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

நமது தேயத்தில் பெருகியிருக்கும் வித்தைகள் யாதெனில் பிராமணர்கள் என்ற விஷயத்தில் ஒருவர் வீட்டில் ஒருவர் புசிப்பதும், கொடுப்பதும், கொள்ளுவதும் இல்லாதுமாகிய எத்தனையோ பிரிவுகள் பெருகியிருக்கின்றது.

இதன்மேறையே முதலியார், செட்டியார், நாயுடுகாரிவர்களும் பெருகிக்கொண்டு ஒருவருக்கொருவர் உயர்த்தியும் தாழ்த்தியும் ஒற்றுமெய்க்கேட்டை விருத்தி செய்துவருகின்றார்கள்.

சாதிவித்தைகளின் சிறப்பும், அதன் பெருக்கும் விபரீதமாக விருத்தி அடைந்து வந்த போதிலும் மதவித்தைகளின் பெருக்கமோ எனில் சிவமதவித்தைகள் பெருகியவுடன் விஷ்ணுமத வித்தைகள் பெருகிற்று. அவற்றிற்கு மேலென்னும் வேதாந்தமத வித்தை பெருகிற்று. அதன்பின் பிரம்மசமாஜமதவித்தைப் பெருகிற்று. இம்மதங்களின் வித்தை விருத்திகள் மாறுதல் அடைவதால் தற்காலம் நூதனமான ஆரியமதமென்னும் வித்தை வெளிவருகின்றது. சில கால் அதுவும் மயங்கில் பூரியமத வித்தையென்று வெளிவரும்போலும்.

இத்தகைய மதவித்தைகளும், சாதிவித்தைகளும் நாளுக்குநாள் பெருகிவருவதைக் காண்டலும் கேட்டலுமாய் இருக்கின்றதன்றி பெரிய சாதிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்போர் பூமியைத் திருத்தும் நூதனக் கலப்பைகளைக் கண்டு பிடித்தார்கள் என்றாயினும் சுருக்கத்தில் நீரைப்பாய்ச்சும் ஏற்றங்களைக் கண்டுபிடித்தார்கள் என்றாயினும் நெல்லுகளையும், அரிசிகளையும் வெவ்வேறு பிரிக்கக்கூடிய இயந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள் என்றாயினும் இதுகாரும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.

சருவசுகந்தரும் பூமியின் விருத்தியில் சொற்ப அறிவை விருத்திச் செய்ய வகையற்றநாம் போட்டோகிராப், டெல்லகிராப், போனகிராப், மோனகிராப் என்னும் வித்தைகளையும் ஸ்டீம் இரயில்வே, டிராம்வே என்னும் வித்தைகளைக் கண்டுபிடிப்போமோ, ஒருக்காலும் ஆகாவாம்.

சிறந்த வித்தையிலும், புத்தியிலும் விருத்திப் பெற்று உலகெங்கும் உலாவி சகலதேச சருவசாதியோரிடத்திலும் கொள்வினை, கொடுப்பினை, உண்டபினை, உடுப்பினையால் ஒற்றுமெயுற்று சகலராலும் மதிக்கப்பெற்ற செங்கோலேந்தி சன்மார்க்கப் பெருக்கத்தால் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்துடன் இராட்சியபாரந் தாங்கி வரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரை ஓட்டிவிட்டு வித்தியா குறைவு, விசாரிணைக்குறைவு, ஒற்றுமெய்க் குறைவு, உறுதிக்குறைவு மிகுத்த நாம் சுயராட்சியம் வேண்டும் என்று எண்ணுவது எண்ணெய் வாணியன் கதைபோல் முடியும்.

ஏது சீர்திருத்தங்களை எண்ணி துணிந்தெழுதினும் இல்லா சாதிவித்தைகளும், இல்லா மத வித்தைகளும் இன்னும் பெருகுகின்றபடியால் இம்மட்டில் சுதேசசீர்திருத்தத்தை விடுத்து பூர்வசுதேசிகளாம் சாதிபேதமற்ற

திராவிடர்களின் திருத்தத்தை ஆலோசிப்போமாக.

- 2:20; அக்டோபர் 28, 1908 -