அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/020-383

விக்கிமூலம் இலிருந்து

16. பஞ்சமர்மீதும் பரிதாபம்போலும்

கீலக வருஷம் வைகாசிமீ 24உ வெளிவந்த ‘இந்தியா’ என்னும் பத்திரிகையில் ஆர்.என். சுவாமி என்பவர் தங்களுக்காக கல்விசாலைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதில் பஞ்சமர்களுக்கென்று வேறு பிரத்தியேகப் பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் எழுதியிருக்கின்றார்.

இவரது பரிதாபம் யாதோ விளங்கவில்லை. தற்காலம் பஞ்சமர்களுக்கென்று ஏற்படுத்தியிருக்கும் பள்ளிக்கூடங்களில் பாப்பார்கள் உபாத்தியாயராகவிருந்து பாடங்கள் கற்பிப்பதை பரிதாபம், அறியார்போலும். அங்ஙனம் அறிந்திருந்தபோதிலும் பாப்பான் படிக்கப்போகும் இடங்களிலும் பணஞ்சம்பாதிக்கும் இடங்களிலும் சாதியாசாரம் கிடையாது. பஞ்சமன் என்போன் படிக்கப்போகும் இடங்களிலும் பணஞ்சம்பாதிக்கப் போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டு என்பது இவரது பரிதாபக்கடிதத்தால் பறக்க விளங்குகின்றது.

பள்ளிக்கூடங் கற்பிப்பதில் பஞ்சமருக்கென்று பிரத்தியேகப் பள்ளிக்கூடம் ஏற்படுத்த இதம் கூறியவர் சுயராட்சியம் பெற்றுக் கொண்டால் பிரத்தியேகப்பள்ளிக்கூட எண்ணத்தையும் ஒழித்துவிட்டு நெருங்கவிடாமல் துரத்துவார் என்பது திண்ணம்.

ஆதலின் ஏழைகள் மீது இவர் எதார்த்த இதக்கமுற்றவராயின், ஆ, எமது சுதேசிகளே, மலமெடுக்குந் தோட்டிகளுக்கும் சாதிவுண்டு குறவருக்குஞ் சாதி உண்டு வில்லியருக்கும் சாதி உண்டு பார்ப்பாருக்கும் சாதி உண்டு என்று எல்லோரும் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு இத்தேசப் பூர்வ சுதேசிகளைப் பஞ்சமர்கள் என்றுத் தாழ்த்திப் பிரித்துவைப்பது அழகன்று என்றும் சகலரும் ஒத்துவாழ்வதே புகழ் என்றும் கூறி அவைகளுக்கொப்ப சீர்திருத்தங்களையும் ஒற்றுமெயும் ஒழுக்கங்களையும் போதிப்பர். அங்ஙனமின்றிப் பஞ்சமர்களுக்கு என்று பிரத்தியேகப் பள்ளிக்கூடம் போட வேண்டும் என்பது பாப்பார்கள் கூடி பணந் தானம் செய்வதுபோலாம்.

- 2:1; சூன் 17, 1908 -