உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/024-383

விக்கிமூலம் இலிருந்து

20. காங்கிரஸ் கமிட்டியின் காலாகோலம்

இந்தியன் நாஷனல் காங்கிரசெனப் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தார் தங்கள் வருடாந்திரக் கூட்டத்தை வருகிற டிசம்பர் மீ விடுமுறைகாலத்தில் இச்சென்னையில் வைக்க வேண்டும் என்று வேணமுயற்சிகளைச் செய்து வருகின்றார்கள்.

இது மத்தியில் நமது சென்னையில் கல்வியிலும், செல்வத்திலும் மிகுந்த பெருந்தொகையாளர் ஒன்றுகூடி அக்காங்கிரஸ் கூட்டம் இச்சென்னையில் நடைபெறக் கூடாதென்று ஆட்சேபனைச் செய்திருக்கின்றார்கள்.

இத்தகைய ஆட்சேபனையை மீறி செய்வார்களானால் சென்றவருஷ காங்கிரசில் நடந்த செய்திபோலாகும் போலும்.

ஆதலின் நமது காங்கிரஸ் கமிட்டியார் கோதானம், பூதானம், தனதானங்களைவிட்டு நிதானத்தினின்று காலமறிந்து காரியாதிகளை நடத்தல் வேண்டும்.

இஃது யதார்த்த நாஷனல் காங்கிரஸ் கூட்டமாயிருக்குமாயின் இத்தகைய இடுக்கண்கள் நேரிட்டிரா. யதார்த்த நாஷனல் என்பதையும் யதார்த்த நாஷனல் அல்ல என்பதை அடியில் வரும் விஷயங்களால் எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.

- 2:17; அக்டோபர் 7, 1908

-

இந்த நாஷனல் காங்கிரசென்னும் கூட்டத்தார் ஆதியில் சேருங்கால் இக் கூட்டமானது சாதிபேத மதபேதமின்றி சகல சாதியோருக்குள்ளக் குறைகளையும் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு விளக்கி அக்குறைகளை நீக்குமென்று வெளி வந்தார்கள்.

இவர்களது சாதிபேத மதபேதமற்ற நன்னோக்கம் மிக்க மேலாயதே என்று கருதி 1891 வருஷம் டிசம்பர்மீ முதலில் நீலகிரியில் ஓர்கூட்டமியற்றி சாதிபேதமற்ற திராவிடக் கனவான்களை தருவித்து நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாருக்கு அனுப்பவேண்டிய கருத்துகளை முடிவுசெய்து பொது நல விண்ணப்பம் என்னும் பெயர்கொடுத்து மேற்கண்டபடி. டிசம்பர்மீ 21உயில் அநுப்பினோம்.

அதனுள் அடங்கியக் கோரிக்கைகள் யாதெனில்:-

தற்காலந் தோன்றியுள்ள சாதிப்பெயர்கள் பூர்வத் தொழிற்பெயர்கள் என்றும் விளக்கி பறையர் என்னும் பெயர் சில பொறாமெய் உள்ளோரால் வகுக்கப்பட்டதென்றும், இப்பறையன் என்னும் பெயர் சகலருக்கும் பொருந்தும் என்றும்,

சாதிப்போரென்பதில் சாதி - பகுதி, ப் - சந்தி, ப் - இடைநிலை ஆர் - விகுதியாகக் கொண்டு சாதிப்போரென முடிந்தது.

சாதியாரென்பதில் சாதி - பகுதி, ய் - சந்தி ஆர் - விகுதியாகக் கொண்டு சாதியாரென முடிந்துள்ளவற்றுள்,

பறை - பகுதி, யகரமெய் - சந்தி, அன் - ஆண்பால் விகுதியாகக் கொண்டு பறையை உடையவன் பறையன் எனக் கூறுவதாயின், பறையன் எனும் பகுதியால் வாய்ப்பறை, தோற்பறை அடிப்பவர்களான சகல மனுக்களையும் பறையர்கள் என்றுக் கூறத்தகும் என்பனவற்றை விளக்கியும்,

இழிந்தச் செயல்களையுடையோர் இழிந்த சாதிகள் என்றும், உயர்ந்த செயல்களை உடையோர் உயர்ந்த சாதிகள் என்றும், நியாயச் செயலில் நடப்போர் நியாயச் சாதிகள் என்றும், தீயச் செயலில் நடப்போர் தீயர் சாதிகள் என்றும், அவனவன் செய்கைகளின் பேரிலும், தொழிற்களின் பேரிலும், சாதிக்கும் சாதிப்பின் பேரிலும் சாதிகள் தோன்றியுள்ளதை விளக்கியும் இப்பறையன் என்போரைத் தாழ்ந்த சாதிகள் என்று கூறுவதற்கு யாதோர் ஆதாரமும், யாதோர் அதிகாரமும் இல்லை என்றும், மற்றவர்களால் இவர்களைத் தாழ்ந்தவர்கள் என்று இழி கூறிவருவது அக்கிரமம் என்றும், வேண சரித்திர சாஸ்திராதாரங்களைக் காண்பித்து அடியில் குறித்துள்ள பத்து ஈடேற்றங்களை நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தோருக்கு விளக்கிக் காண்பித்து இப்பத்து ஈடேற்றங்களையும் செய்விக்க வேண்டும் என்று கோரினோம்.

அப்பத்து கோரிக்கைகள்:-

இக்கூட்டத்தோரை பறையர் என்று கூறுவதற்கு யாதோர் ஆதரவும் கிடையாது. அப்படி இருந்தும் இவர்களைப் பறையர்கள் என்று கூறுவதுடன் இழிவாகக்கூறி மனம் குன்றச் செய்துவருகின்றார்கள், இவற்றுள் கேவல கல்வியும் நாகரீகமுமற்று மிருகச் செயலுக்கு ஒப்பான ஓர் மனிதன் கல்வியிலும், நாகரீகத்திலும், செல்வத்திலும் மிகுத்த ஒருவனைப் பறையன் என்றுக் கூறி இழிவுபடுத்துவதானால் அவன் மனம் குன்றி நாணமடைந்து சீர்கெட்டுப் போகின்றான். ஆதலின் பறையன் என்று இழிவுபடக் கூறுவோரை பழித்தல் அவதூரென்னும் குற்றத்திற்கு ஆளாகும் ஓர் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்னும் முதலாம் கோரிக்கையும்,

இக்குலத்து ஏழைக்குடிகள் விருத்தியடையும்படி கல்விசாலைகள் பிரத்தியேகமாய் அமைத்து உபாத்தியாயர்களையும் இக்குலத்தோரில் நியமித்து மாணாக்கர்களின் சம்பளங்களையும் அரைபாகம் குறைக்கவேண்டியதென்னும் இரண்டாம் கோரிக்கையும், இக்குலத்துப்பிள்ளைகளுள் பிரவேச மெற்றிகுலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கவேண்டியது என்னும் மூன்றாம் கோரிக்கைப்பும்,

இங்ஙனம் கல்வியில் தேறினோர்களில் ஒவ்வொருவரை இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மென்று ஆபீசுகளிலும் உத்தியோகமளித்து ஆதரிக்க வேண்டும் என்னும் நான்காம் கோரிக்கையும்,

இவர்கள் கல்வி, நல்லொழுக்கத்திற்குத் தக்கவாறு எத்தகைய உத்தியோகங்களும் தடையின்றி கொடுத்துவரவேண்டியது என்னும் ஐந்தாவது கோரிக்கையும்,

முநிசிபில் சங்கங்களிலும், கிராம சங்கங்களிலும் இக்குலத்தோரின் கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து பேசுதற்குச் சகல டிஸ்டிரிக்ட்டுகளிலும் ஜில்லாக்களிலும், ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக் கூடாதவராயினும் கல்வி, நல்லொழுக்கம் கண்டு இக்குலத்தோர் யாரை நியமிக்கின்றார்களோ அவர்களை ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு காரியாதிகளை நடத்த வேண்டும் என்னும் ஆறாம் கோரிக்கையும்,

அக்காலத்துள்ள ஜெயில் கோர்ட் 464-வது சட்டத்தில் பறையர்களைச் சகலத் தாழ்ந்த வேலைகளையுஞ் செய்விக்கலாம் என்று ஏற்படுத்தியிருப்பதை மாற்றவேண்டும் என்னும் ஏழாவது கோரிக்கையும்,

இத்தேசத்திலுள்ள பொதுவான குளங்களிலும், கிணறுகளிலும் இக்குலத்தோர் யாதாமொரு தடையுமின்றி ஜலம் மொண்டு சுகிக்கவேண்டிய தென்னும் எட்டாவது கோரிக்கையும்,

ஆங்கிலேய துரைகளிராது இந்துக்கள் உத்தியோகஞ்செய்யும் ஆபீசுகளிலும், கச்சேரிகளிலும் இக்குலத்தோர் உள்ளுக்கு வரப்போகாது, உட்காரப்போகாது என்னும் தடைகளை அகற்றி இக்குலத்தோரை உள்ளுக்கு வரச்செய்து பிரயாதை உடனுக்குடன் விசாரித்து நீதி அளித்து அனுப்ப வேண்டும் என்னும் ஒன்பதாவது கோரிக்கையும்,

இக்குலத்தோருள் பெருந்தொகையோர் வாசஞ்செய்யும் கிராமங்களில் மணியக்காரன் முநிசிப்பு அலுவல்களில் இவர்களில் பொறுப்பானவர்கள் ஒவ்வொருவரை நியமிப்பதுடன் கலைக்டர் துரையவர்கள் கிராமங்களுக்குள் வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதி அளிக்கவேண்டும் என்னும் பத்தாவது கோரிக்கையும், குறிப்பித்திருந்தோம்.

இக்கோரிக்கைகள் யாவும் அக்காலத்தில் காங்கிரஸ் கமிட்டிக்குக் காரியதரிசியாய் இருந்த ம-அ-அ-ஸ்ரீ எம். வீரராகவாச்சாரியாரவர்கள் கண்ணுற்று இப்பொதுநல விண்ணப்பம் வந்து சேர்ந்தது அவற்றை சங்கத்தோர் முன்பு வைத்து விவரந் தெரிவிப்போம் என்று பதில் எழுதி இருந்தார்.

இக்குலத்தோரைப்பற்றிய விண்ணப்பம் இவர்களுக்கு அனுப்பியும் இவர்கள் நமக்கு பதில் அளித்தும் ஏறக்குறைய பதினேழு வருடம் ஆகிறது. இதுவரையிலும் அவ்விண்ணப்பத்தைப் பற்றியேனும், இக்குலத்தோரின் கஷ்டநிஷ்டூரங்களைப் பற்றியேனும் இவர்கள் யாதொரு சீர்திருத்தமும் செய்ததில்லை.

நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் என்று வெளிவந்து அறுபதுலட்சத் தொகைக்கு மேற்பட்டும், ஆறுபெயருக்கு ஒருவராகக் காணும் பெருந் தொகையோராயுள்ள இவ்வேழைக்குடிகளின் கஷ்டங்களைக் கவனித்து கவர்ன்மென்றாருக்குத் தெரிவிக்காமல் தங்கள் கஷ்டங்களையும், குறைகளையும் மட்டும் கவர்ன்மென்றாருக்குத் தெரிவித்துக் கொள்ளும் கூட்டத்தாருக்கு இந்து நாஷனல் காங்கிரஸ் என்னும் பெயர் வைக்கக்கூடுமோ.

இத்தகைய சுயப்பிரயோசனத்தை நாடுவோருக்கு வங்காள சாதியோர் காங்கிரஸென்றேனும் அல்லது பிராமண சாதியோர் காங்கிரஸென்றேனும் வைத்துக் கொள்ளவேண்டியது.

அங்ஙனமின்றி தங்களுக்கான சுயப்பிரயோசனங்களை மட்டிலும் இராஜாங்கத்தோருக்குத் தெரிவித்துக் கொண்டு வருகின்றார்கள். சாதிபேதமற்ற மகமதியருக்குள்ளக் குறைகளையேனும், சாதிபேதமற்ற திராவிடர்கள் எழுப்பியுள்ள பொதுநல விண்ணப்பக் குறைகளையேனும் கவனித்தவர்களில்லை.

இவ்வகையாய்த் தங்கள் சுயநலம் கருதும் கூட்டத்தார் இவ்விந்து தேசத்தில் இருப்பதால் யாதொரு பயனுமில்லை. இல்லாமல் போவதினால் யாதொரு கெடுதியும் இல்லை.

நாஷனல் காங்கிரஸென்னும் பெயர் இக்கூட்டத்தாருக்குப் பொருந்தாத தினால் மிதவாதிகள் என்றும், அமிதவாதிகள் என்றும் இருகட்சிகள் பிரிந்து கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள்,

அத்தகையக் கல்கத்தால் கலைந்திருந்தும் சென்னையிலுள்ளக் கனவான்களால் தடுத்திருந்தும் கூட்டத்தை மறுபடியும் கூட்டுவதாகத் தெரிகின்றது.

பெருந்தொகைகளைச் சிலவிட்டுக் கூட்டத்தைக்கூடி ஏழைகளுக்கு யாது சுகத்தை விளைவிக்கப்போகின்றார்கள். பஞ்சத்தின் பெரும் கஷ்டங்களை நீக்குவார்களோ இன்னும் கஷ்டத்துக்குள்ளாக்குவார்களோ, ஏழைகளின் கஷ்டநிஷ்டூரங்களைக் கவனிக்காத கூட்டத்தார் இருந்தென்ன போயென்ன என்னும் பெருங்கூச்சலாய் இருக்கின்றது.

வீணானக் கூட்டங்களைக்கூடி விருதாவான வார்த்தைகளைப்பேசி சுதேசிகளிலும் மிதவாத சுதேசிகள், அமிதவாத சுதேசிகளெனப் பிரிந்து இருகட்சியாகும் கலகத்தைப் பெருக்கிக் கவலையில் வாழ்வதினும் காங்கிரஸ் கூட்டமென்னும் பேச்சற்று கவலையற்றிருப்பது கனமாகும்.

- 2:18: அக்டோபர் 14, 1908 -