அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/068-383

விக்கிமூலம் இலிருந்து

64. இராயல் ஆர்ஸ் ஆர்ட்டில்லரி

சிலவருஷங்களுக்குமுன் செக்கன்ட்ராபாத்திலிருந்து ஓர் ஜெனரல் சாதிபேதமற்ற திராவிடர்களில் தக்க சுகதேகிகளாயிருப்பவர்களைப் பொறுக்கியெடுத்து ஆர்ட்டில்லேரி உண்டுசெய்யும்படி ஆரம்பித்தார்.

அவ்வகை ஆரம்பித்தவர் குதிரைகளையேறி சவாரிசெய்யும் விஷயத்திலும், பீரங்கிகளைத் திருப்பி மாற்றுவதற்கும், நிறுத்துவதற்கும், மருந்துகளை கெட்டித்து சுடுவதற்கும் உள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், யுக்தியையும், இராஜவிசுவாசத்தையும் ஆராய்ச்சி செய்தே ஆரம்பித்தார்.

சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், பக்தியையுங் கண்டுகொண்டபோதிலும் இராஜவிசுவாசிகளென எவ்வகையில் கண்டுகொண்டாரென்பீரேல்,

வங்காள மியூட்டினி நடந்தகாலத்தில் ஒவ்வோர் துரைமக்களுக்கும் அரண்மனை உத்தியோகஸ்தர்களாகச் சென்றவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களேயாகும்.

அந்த யுத்தத்திலிருந்த துரைமக்கள் அந்த மியூட்டினியாகிய யுத்தகளங்களுக்குச் செல்லுங்கால் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சொத்துக்களையும் இந்த ஏழைமக்களையே நம்பிவிட்டுப் போவதுமன்றி

இவர்களிடமும் ஆயுதங்களைக் கொடுத்துவைத்து பாதுகார்க்கச் செய்திருக்கின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களும் சாதித்தலைவர்களால் பலவகைத் துன்பங்களை அநுபவித்துவந்து ஆங்கிலேய துரைமக்கள் வந்து இத்தேசத்திற்கு குடியேறியது முதல் அவர்களது கருணையால் சாதித்தலைவர்களின் துன்பங்கள் சிலது நீங்கி சுகமடைந்தவர்களாதலின் ஆங்கிலேய துரைமக்களைத் தங்கள் தாய் தந்தையர்கள் போல் கருதி அவர்கள் செய்த நன்றியை மறவாது அம்மியூட்டினியில் பாதுகார்த்தார்கள்.

அம்மியூட்டினியிலிருந்து துரைமக்கள், யாவருக்கும் இது தெரிந்த விஷயமாதலின் இராஜவிசுவாசமும், நன்றியும் உள்ளவர்களென்றறிந்த அந்த ஜெனரல் இவர்களையே ஒன்று கூட்டி இராயல் ஆர்ஸ் ஆர்ட்டிலேரி சேர்க்கும்படி ஆரம்பித்தார்.

அக்காலத்திலிருந்து படைத்தலைவராகும் லார்ட் ராபர்ட் துரையவர்களாலோ, மற்றவர்களாலோ அப்பட்டாளம் சேர்க்காமல் தவிற்கப்பட்டுவிட்டது.

சாதிபேதமற்ற திராவிடர்களின் ஆர்ட்டில்லேரி தற்காலம் இருந்திருக்குமாயின் எவ்வளவோ விருத்தி அடைந்திருப்பதுமன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கும் பேராதரவாயிருக்கும்.

ஆங்கிலேய துரைமக்கள் சாதிபேதமற்ற திராவிடர்களைத் தங்கள் அரியமக்களைப்போல் அன்பு பாராட்டி ஆதரித்து வந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ ஆங்கிலேய துரைமக்களைத் தங்கள் தாய்தந்தையர்கள் போலும் சகோதரர்கள் போலும் பாதுகாத்துவந்தார்கள்.

இத்தகையோர் அன்பையும் ஒற்றுமெயையும் நாளுக்கு நாள் உணர்ந்து வந்த சாதித்தலைவர்கள் ஆங்கிலேய துரைமக்களை அணுகி சாதிபேதமற்ற திராவிடர்கள் மீதுள்ள அன்பைக் கெடுக்கத்தக்கப் போதனைகளைச் செய்துக்கொண்டு வருகின்றார்கள்.

தற்காலம் வந்துள்ள துரைமக்களோ சாதிபேதமற்ற திராவிடர்கள் அன்பையும் இராஜவிசுவாசத்தையும் உணராது சாதித்தலைவர்கள் வார்த்தைகளை நம்பிக்கொண்டு அவர்களுக்குள்ள இராஜவிசுவாசத்தையும் அன்பையும் வெறுப்படைய செய்துவருகின்றார்கள்.

இத்தியாதி மித்திரபேதங்களையும் சாதித்தலைவர்களே சமயோசிதமாக துரைமக்களிடம் பேசி ஏழை உத்தியோகஸ்தர்கள் மீதுள்ள அன்பைக் கெடுத்துவிட்டு தாங்கள் ஏதோ உதவிபுரிவதுபோல் கூட்டங்கள் கூடி படாடம்பங்கள் காட்டி வருகின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிட பேதைமக்கள் சாதித்தலைவர்களின் கூட்டத்தோர் ஏதோ உதவி புரிந்துவிடுகின்றார்களென்றெண்ணிக் கொண்டு துரைமக்களை விரோதித்துக் கொள்ளுவார்களாயின் தங்கள் சுதேசியமென்னுங் கூட்டத்தோருடன் சேர்த்துக்கொள்ளுவதற்காக “பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழனைப்போல்” மித்திரபேதஞ் செய்துவருகின்றார்கள்.

இத்தகைய மித்திரபேதச் சத்துருக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் கருணை தங்கிய துரைமக்களும் லேடிகளும் நம்பிக் கொண்டு சாதிபேதமற்ற திராவிடர்களாம் ஏழை குடிகளுக்குள்ள அன்பையும் இராஜ விசுவாசத்தையும் மாற்றாமலிருக்க வேண்டுகிறோம்.

பூர்வம் இத்தேசத்திற் குடியேறியதுரை மக்கள் யாவரும் இவ்வெழிய கூட்டத்தோரைத் தங்கள் பிள்ளைகள் போலவே ஆதரித்துவந்தார்கள். அந்த நன்றி மறவாமலே இவ்வேழைக்குடிகள் நாளது வரையிலும் துரைமக்களையும், லேடிகளையுந் தங்கள் தாய்தந்தையர்களைபோல் கருதி இரவும் பகலும் கட்டிக் கார்த்து உழைத்து வருகின்றார்கள்.

இவ்வகையாய் துரைமக்களை நெருங்கிவாசஞ் செய்யும் சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் தக்கதேகிகளைக் கண்டெடுத்து இராயல் ஆர்ட்ஸ் ஆர்டில்லரி ஒன்றைச் சேர்த்து உறுதி செய்வதுடன் ஒவ்வோர் துரைமக்கள் அரண்மனை உத்தியோகஸ்தருக்குள் தக்க பாலியர்களை தேர்ந்தெடுத்து வாலன்டியர்கார்ட் ஏற்படுத்தி, அவர்களுக்குக் கொடுக்குந் துப்பாக்கி முதலிய ஆயுதங்களையும் தாங்கள் உத்தியோகஞ்செய்யும் அந்தந்த துரைமக்கள் வீட்டிலேயே வைக்கும்படிச் செய்து (பிரேட்) பழகுவதற்குப் போகுங்கால் கொண்டுபோய் மறுபடியும் கொண்டுவந்து துரைமக்க ளடைக்கலத்தில் வைத்துவிட்டு அவ்வீட்டிற்குப் பாதுகாப்புள்ளவனாகவுஞ் செய்துவரல் வேண்டும். தாங்கள் சீர்மெய்க்குப் போகுங்கால் வாலன்டியரில் சேர்ந்துள்ளவன் விருத்தாப்பிய காலவுதவிக்காய் சொற்பப் பொருளுதவி செய்துவிட்டுப் போவதுடன் அவன் உத்தியோகஞ் செய்யக் கூடிய சுகதேகியாயிருக்குமளவும் துரைகள் உத்தியோகத்தில் மாறாமலிருக்குப்படியான கருணை செய்துவர வேண்டியது. அதாவது அவன் வாலன்டியர்கார்டைச்சார்ந்தவனாதலின், அவனது உடுப்பும், ஆயுதங்களும் துரைமக்கள் வசமிருக்கவேண்டியதாதலின் தாங்கள் சீர்மெய்க்குப்போகுங்கால் இருக்கும் மற்ற துரைமக்களிடம் அமர்த்திவிட்டுப் போவது சுகமாகும். அரண்மனை உத்தியோகத்தில் இவர்கள் சம்பளத்திற்குத் தக்கவாறு சொற்பதொகை பிடித்து (நன் காஸ்ட் டிரவீடியன் வாலன்டியர் பென்ஷன் பண்டிற்கு) சேர்த்துவிடுவதுடன் ஒவ்வோர் துரைமக்களும் அந்த பென்ஷன் பண்டிற்கு உதவிபுரிந்து வரும்படியான ஏற்பாடு செய்துவிடுவது உசிதமாகும்.

தங்கள் விருத்தாப்பிய காலத்தில் (பென்ஷன்) இருக்கின்றதென்று தெரிந்துக்கொள்ளுவார்களானால் அரண்மனை உத்தியோகத்தில் அதிக ஜாக்கிரதையில் உழைப்பதுமன்றி தற்காலம் உள்ள அன்பிலும் விசுவாசத்திலும் மிகுந்து மேலான நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்பார்கள்.

இவ்வகையான ஓர் ஏற்பாட்டை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தாமதத்தில் ஆலோசித்த போதிலும் மற்றுமுள்ள துரைமக்களும், லேடிமார்களும் சீர்தூக்கி ஆலோசித்துக் கூடிய சீக்கிரத்தில் அரண்மனை உத்தியோகஸ்தர்களுக்குள் (நன் காஸ்ட்டிரவீடியன் வாலன்டியர் கார்டாம்) துரைமக்கள் வீடுகளைப் பாதுகாக்கும் பட்டாளம் ஏற்படுத்துவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

- 3:6; சூலை 21, 1909 -