அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/069-383

விக்கிமூலம் இலிருந்து

65. கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியும் சுதேசீயமும்

கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியவர்கள் இந்தியர்களுக்கு சுதேசியங் கொடுப்பதால் பிரிட்டிஷ் அதிபர்களுக்கு சுகமுண்டாகுமேயன்றி கெடுதி நேரிடாதென்று கூறுகின்றாராம்.

நமது பானர்ஜியவர்கள் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமும், சகலகலாவல்லவரென்றுஞ் சொல்லுதற்கு யாதோர் ஆட்சேபனையுமன்று.

இத்தகைய விவேகமிகுத்த வல்லவராயினும் இந்தியர்களின் சாதிவூழற் சண்டைகளையும், சமயபுறட்டு மாறல்களையும் தேறக் கண்டறிந்தவரென்று சொல்லுவதற்கு ஆதாரமில்லை.

இவ்விரு கட்சியின் பிரிவுகளில் சாதியால் தங்களை உயர்த்திக்கொண்டு ஏமாற்றி சீவிப்பவர்களும் சமயங்களினால் தங்கள்சாமி உயர்ந்ததென்றே மாற்றி சீவிப்பவர்களுமே பெருங்கூட்டத்தோராகும்.

இப்பெரும்போர் மிகுத்தோர்களில் வங்காளிகள் வசம் சுயராட்சியமளித்தால் பாரசீகர்களுக்கு மனத்தாங்கலுண்டாகும். பாரசீகர்கள் வசம் சுயராட்சியம் அளித்தால் மகம்மதியர்களுக்கு மனத்தாங்கலுண்டாகும். மகம்மதியர்கள் வசம் சுயராட்சியமளித்தால் மராஷ்டர்களுக்கு மனத் தாங்கலுண்டாகும் மராஷ்டர்கள் வசம் சுயராட்சியமளித்தால் கன்னடர்களுக்கு மனத்தாங்க லுண்டாகும். கன்னடர்கள் வசம் சுயராட்சியமளித்தால் திராவிடர்களுக்கு மனத்தாங்கலுண்டாகும்.

இத்தகைய மனத்தாங்கலால் ஒருவருக்கொருவர் போர்மிகுந்துவிடுமாயின் பிரிட்டிஷார்களே அப்போரை வந்தடக்கவேண்டியதாகும்.

சாதிவிஷயத்தாலோ, சமய விஷயத்தாலோ, பாஷைவிஷயத்தாலோ, கலகம் பெருகிவிடுமாயின் பல்லைக்கடித்துக் கொண்டு புறதேச சரக்குகளை (பாய்காட்) செய்வோர்கள் பிரிட்டீஷார்களை (பாய்காட்) செய்துவிட்டு இரஷியரேனும் பெர்ஷியரேனும், சீனரேனும், ஜப்பானியாரேனும் வந்து எங்கள் கலகத்தை நீக்கிவிடவேண்டுமென்று கோறிக் கொள்ளுவார்களாயின் நமது பானர்ஜியவர்கள் யார் பக்கம் சாருவரோ.

இல்லையில்லையே, இக்கலகத்தை நீக்குவதற்கு பிரிட்டிஷார்களே வரவேண்டுமென்பாராயின் இவரையுஞ்சேர்த்து (பாய்காட்) செய்துவிடுவார்கள். சுதேசியமளித்துவிட்டால் பிரிட்டிஷாருக்கு சுகமுண்டாகுமென்று கூறுமிவர் பிரிட்டிஷாரையும், இவரையும் சுதேசிகள் (பாய்காட்) செய்ய ஆரம்பித்துக் கொள்ளுவார்களாயின் இப்போது கூறுமிவர் (பஞ்சாயத்தை) அப்போது யாரிடங் கூறுவரோ விளங்கவில்லை.

ஆதலின் நமது கனந்தங்கிய சி.பாபு சுரேந்திரநாத் பானர்ஜியவர்கள் சுதேசியமென்றால் எந்த எல்லைமுதல் எவ்வெல்லை வரையிலுமென்றும், சுதேசிகளென்றால் எந்தச் சாதிமுதல் எச்சாதி வரையிலென்றும், சுதேசிகள் சமயமென்றால் எச்சமயமுதல் எந்தசமயம்வரையிலென்றுங் கண்டறிந்து கூறவேண்டும்.

அங்ஙனமின்றி எத்தேசத்தை சுதேசியமென்றும், எச்சாதியோரை சுதேசிகளென்றும் வகுப்பதற் கேதுவின்றி சுதேசிய மளித்துவிட்டால் பிரிட்டிஷாருக்கு சுகமுண்டாகுமென்று கூறுவது யாது நியாயாதாரமோ விளங்கவில்லை.

அல்லது இந்தியர்கள் யாவரும் தன்னைப்போல் விவேகமிகுத்தவர்களென்றும், தன்னைப்போல் இராஜரீக மந்திராலோசனை மிகுத்தவர்களென்றும், தன்னைப்போல் சாதிபேதமில்லா களங்கமற்ற குணத்தோரென்றும், தன்னைப்போல் சமயபேத மதபேதமில்லா சாந்தமுள்ளோரென்று எண்ணிக் கொண்டு சுதேசியம் அளிக்கலாமென்று கூறிவிட்டனர்போலும்.

இந்தியர்கள் சகலரும் இராஜரீகமந்திராலோசனை விஷயத்திலும், குடிகளை சீர்திருத்தும் விஷயத்திலும் தெளிந்தவர்களாயிருப்பார்களாயின் குடிகளால் ஏற்படுத்தும் முநிசபில் கமிஷனர்களை ஓட்டுவாங்கும் அன்றயதினங் காணுவதே கண்டபலன். குடிகள் மறுபடியுங் கமிஷனர்களைக் காணுவதே கிடையாது.

இந்தியர்கள் சாதிபேதமற்றவர்களாயிருப்பார்களாயின் தற்காலம் பச்சையப்பன் காலேஜில் கூடியுள்ள கைத்தொழிற்சாலையில் சாதிபேதமுள்ளவர்களை மட்டிலும் அதிற் சேர்க்கப்படுமென்று விளம்பரத்தில் வெளியிட்டிருக்கமாட்டார்கள். பொதுவாகியக் கடவுளைத் தொழுமிடத்திற்கு சகலசாதியோரும் வரப்படாதென்று தடை செய்யமாட்டார்கள்.

இந்தியர்கள் மதபேதமற்றவர்களாயிருப்பார்களாயின் வடகலை தென்கலை நாமச் சண்டையிட்டுக்கொண்டு மாளாக் கோட்டு வழக்குச் செய்யமாட்டார்கள்.

ஆபிரிக்க, அமேரிக்கா முதலிய கண்டங்களில் சுதேசியம் நிறைவேறுவது போல் இந்தியாவிலும் நிறைவேற்றலாமென்று எண்ணிக்கொண்டனர் போலும்.

எண்ணத்தால் சுதேசியம் நிலைக்கமாட்டாது வித்தையினாலும், புத்தியினாலும், ஒற்றுமெயாலும், இராஜவிசுவாசத்தினாலும் சுதேசியம் நிறைவேறும்.

இந்தியர்கள் யாவரும் வித்தையில் மிகுத்தோர்களாயிருப்பார்களாயின் வேண்டியவித்தைகளைக் கற்றுக்கொள்ளுவதற்கு இங்கிலாண்டிற்கும் ஜப்பானுக்கும் போயிருக்கமாட்டார்கள்.

இந்தியர்கள் யாவரும் புத்தியில் மிகுத்தோர்களாயிருப்பார்களாயின் இந்தியர்கள் ரைல்வே, இந்தியர்கள் டெல்லகிராட், இந்தியர்கள் பொட்டகிராப், இந்தியர்கள் லெத்தகிராப், இந்தியர்கள் போனகிராப்பென்னுந் தொழிற்களை விருத்திசெய்து சகல இந்துக்களையும் சுகமடையச் செய்விப்பார்கள்.

அத்தகைய புத்தியின் விருத்தியின்றி பொன்னால் கொட்டை சிறப்புப் பெற்றதா, கொட்டையால் பொன் சிறப்புப்பெற்றதா என்றுணராமல் உருத்திராட்சக்கொட்டைக் கட்டிக்கொள்ளும் விவேகவிருத்தியும், நெற்றியால் நாமம் சிறப்புப்பெற்றதா, நாமத்தால் நெற்றிச் சிறப்புப்பெற்றதா என்றுணராது சிறியநாமம் போடப்படாது நெற்றி நிறையப் பெரியநாமம் போடவேண்டுமென்னும் விவேகவிருத்தியும், நெற்றியால் குழைத்துப்பூச்சும் சாம்பல் சிறப்பு பெற்றதா, குழைத்துப்பூச்சும் சாம்பலால் நெற்றிச் சிறப்புப்பெற்றதா என்றுணராது கோடிட்டுப் பூச வேண்டுமென்னும் விவேகவிருத்தி கூறும்படியானவர்களுக்கு என்ன விருத்தி உண்டென்பதைக் கண்டறிந்துக் கொள்ளலாம்.

இந்தியர்கள் யாவரும் ஒற்றுமெய் மிகுத்தோர்களென்பதாயின் ஒவ்வோர் சாதிகளுக்குள்ளும் கொள்வினை, கொடுப்பினை, உண்பினை, உடுப்பினை யாவும் பேதப்பட்டு நாளுக்குநாள் ஜாதிக்கிளைகள் பிரிந்து கொண்டே வருகிறபடியால் இந்தியர்களுக்குள் ஒற்றுமெ யில்லையென்பது துணிபு.

இந்தியர்கள் யாவரும் இராஜ விசுவாசிகளென்பதாயின் குடிகளுக்கும், மாணாக்கர்களுக்கும் மதி யூட்டிவரும் ஐரோப்பியர்களையே சுட்டுக் கொன்றுவிடுகிறார்களென்னும் வதந்தியால் இந்தியர்கள் இராஜவிசுவாசிகள் அன்று. இராஜவிரோதிகளென்றே கூறுதற் கேதுவுண்டாகின்றது.

இத்தியாதி பேதாபேதங்கள் யாவையும் கனந்தங்கிய பானர்ஜியவர்கள் சீர் தூக்கிப்பார்த்து சுதேசியம் பேசுவாரென்று நம்புகிறோம்.

- 3:6; சூலை 21, 1909 -