அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/103-383

விக்கிமூலம் இலிருந்து

99. இராஜவிசுவாசிகளுக்கும் மிதவாதிகளுக்கும் கேட்டசுகம் கிடைக்காமற் போமோ

எவ்விதத்துங் கிடைக்கும். ஆனால் இராஜதுரோகிகளுக்கும், அமிதவாதிகளுக்குங் கிடைக்காதென்பது திண்ணம்.

எவ்வகையிலென்பீரேல் அவனவன் அளந்தபடி அவனவனுக்கு அளக்கப்படும் என்றும், அவனவன் செய்தவினையை அவனவன் அனுபவிப்பான் என்பதுந் தரும் சாஸ்திர துணிபு. ஆனால் தருமசாஸ்திரங்களைப் பாராமலும், தரும் விதியின்படி நடவாமலும், அதன்மசாஸ்திரங்களை வாசித்து அதன்ம நடையில் நடந்து பொதுநலங் கருதாது சுயநலங் கருதுவோருக்கு நீதிநெறி அமைந்த ராஜாங்கம் விரோதமாகவே தோன்றும். மிதவாதமாம் நியாய நிலையிலிருக்குங் குடிகள் மிகுவிரோதிகளாகவே விளங்குவார்கள். அதினால் இராஜவிசுவாசிகளை இராஜதுரோகிகள் ஏசுவதும், மிதவாதிகளை அமிதவாதிகள் தூற்றுவதும் சுவாபமாகும். அத்தகைய இராஜதுரோகிகள் ஏசுதலுக்கும், அமிதவாதிகள் நூற்றுதலுக்கும் அஞ்சாது நீதியிலும், நெறியிலும் நடப்பதே சுகந்தரும்.

குடிகளிடத்து எவ்வளவு ஆறுதலும் அமைதலுமிருக்கின்றதோ அரசும் அன்னிலையில் நிற்கும். குடிகளிடத்து சீர்கேடும், கோபாவேஷமும் விளங்குமாயின் அவர்களை அடக்குமாறு செங்கோலை அடக்கி கொடுங்கோலை நடத்த நேரிடும். அக்கொடுங்கோல் தண்டனையை அநுபவிப்போரும் அவருற்றார் பெற்றோரும் அன்னோரையொற்ற ராஜ விரோதிகளும் நீதிநெறி அமைந்த ராஜாங்கத்தை நிந்திப்பதில் யாதுபயன்.

ஓர் குடும்பத்திலுள்ள பிள்ளை தனது அறிவில்லாக் குறையால் ஓர் குற்றஞ் செய்து விடுவானாயின் அக்குடும்பத்தோர் அவனை தெண்டித்தும், பயமுறுத்தியங் கெட்டச்செயலை நீக்கும்படிச் செய்வார்களாயின் அக்குடும்பத்தோருக்கு புகழுங் கீர்த்தியுமுண்டாகும். அங்ஙனஞ் சிறுவன் குற்றத்தைக் கண்டியாது இன்னும் அவனுக்கு உச்சாகம் உண்டாகத்தக்கப் போதனைகளையும் பொருளுதவியையுஞ் செய்வார்களாயின் அவன் சீர்கேடடைவதுடன் அவனது குடும்பமும் சீர்கெடுமென்பது திண்ணம். ஓர் குடும்பத்திற்கு நேரிட்ட பலனே ஓர் கிராமவாசிகளுக்கும் நேரிடும். ஓர் கிராமவாசிகளுக்கு நேரிட்ட பலனே ஓர்தேசவாசிகளுக்கும் நேரிடுமென்பது சொல்லாமல் அமையும்.

தேசத்திலுள்ள இராஜதுரோகிகளையும், அமிதவாதிகளையும் அத்தேசக் குடிகளேயடக்கி அறிவைப்புகட்டாது வாக்குறுதியும், பொருளுதவியுஞ் செய்து வருவார்களாயின் அவர்களுக்குண்டாகுங் கேட்டினது பாகம் இவர்களுக்கும் உண்டாகுமென்பது துணிபு.

அமிதவாதிகள் இருக்கின்றார்களேயன்றி இராஜதுரோகிகள் ஒருவருமில்லையென்று கூறினுங் கூறுவர். அக்கூற்று வீணேயாகும். எங்ஙனமென்பீரேல் தற்காலம் நமது தேசத்தைக் கண்ணாரக்கண்டுக் குறைவு நிறைவுகளை சீர்படுத்தவேண்டுமென்று வந்துள்ள கவர்னர் ஜெனரலானவர் இந்திர தேச சக்கிரவர்த்தியின் பிரதிநிதியேயாகும். அதாவது இந்திரதேசச் சக்கிரவர்த்தியாகிய ஏழாவது எட்வர்ட் இறைவனே இவ்விடம் வந்துள்ளாரென்று ஏற்க வேண்டும்.

இவரையே சக்கிரவர்த்தியென்று எண்ணி சகல ஆனந்தங்களுங் கொண்டாட வேண்டியிருக்க அவ்வானந்தச் செயல்களைவிட்டு குரோதச் சிந்தனையால் கோபாவேஷங் கொண்டு வெடிகுண்டெறிய ஏற்பட்டவர்கள் இராஜ துரோகிகளல்லவா. அவர்களை இன்னர்தானென்று இதுவரையிலுங் காட்டிக்கொடாதவர்கள் யாவரும் ராஜதுரோகிகளல்லவா. வாக்குறுதிக்கும், பொருளுதவிக்கும் உதவியாயுள்ளவர்கள் ராஜ துரோகிகளல்லவா.

இத்தகைய கொடூர சிந்தையும் வஞ்ச நெஞ்சமும் உள்ளவர்கள் அருகில் வாசஞ் செய்வதுங் கொடிதல்லவோ.

பிரிட்டிஷ் ஆட்சியில் அடங்கியுள்ள சில மித்திரபேதச் சத்துருக்கள் நாங்கள் ராஜவிசுவாசிகள் நாங்கள் ராஜவிசுவாசிகளென்று சொல்லிக்கொண்டே பசுவின் தோலை போர்த்துலாவும் புலிபோலிருப்பவர்களும் இங்கிருப்பதாக விளங்குகின்றது.

அத்தகைய வஞ்சநெஞ்சமுள்ள பாபிகளை குடிகளே கண்டுபிடித்து இராஜாங்கத்தோரிடம் ரூபித்து விடுவார்களாயின் நமது தேசமுந் தேசத்தோரும் அமைதியும் ஆற்றலுமுற்று களங்கமற்ற வாழ்க்கை பெருவார்கள்.

- 3:27; டிசம்பர் 15, 1909 -