அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/104-383

விக்கிமூலம் இலிருந்து

100. ஐரோப்பியரை புகழ்ந்து கூறுவது அன்னோர் சார்பாமோ

அன்பார்ந்த நேயர்களே! நாம் நமது பத்திரிகையிற் கூறிவரும் சீர்திருத்தங்கள் யாவும் பொதுநலங்கருதி கூறிவருகின்றோமன்றி சுயநலங் கருதினோமில்லை.

ஆதலின் ஐரோப்பியரது குணாகுணங்களையும், அவர்களது வித்தியா விருத்திகளையும் அவர்கள் செய்துவரும் பொதுநலப்புண்ணியங்களை தன்னவரைப்போல் அன்னியர்களைப் பாதுகாக்குஞ் செயல்களையும், சகலவகுப்போரையும் பேதாபேதமின்றி சுகமளித்தாளும் அன்பின் மிகுதியையும் ஓர் தராசுதட்டிலிட்டு நமது தேசத்தோர் செயல்கள் யாவையும் ஓர் தராசு தட்டிலிட்டுப் பார்ப்போமாயின் யாம் ஐரோப்பியர்களை புகழ்ந்துவரும் சுகம் எளிதில் விளங்கும்.

அதாவது ஓர் ஐரோப்பிய துரைமகன் தேசத்திய கலைக்ட்டர் ஆபீசுக்கு அதிபராகவந்து அமர்வாராயின் அவரைச்சார்ந்த ஐரோப்பியர்களை டிப்ட்டி கலைக்ட்டராக வாயினும், செருஸ்ததாரர்களாவாயினும், தாசில்களாகவாயினும் சேர்த்துக் கொள்ளுகின்றார்களா, கிடையாது. சகல வகுப்போர்களையுந் தங்கள் வகுப்பினர்கள்போற் கருதி தாழ்ந்தவன் உயர்ந்தவனென்னும் பேதம்பாராது சகலரும் மனிதவகுப்போர்களேயென்றுணர்ந்து சகல வகுப்பாருக்கும் சமரச சுகமளித்து வருகின்றார்கள்.

யீதன்றி இத்தேசத்து குடிகளுக்கு நீரினாலேனும் நெருப்பினாலேனும் ஓர் விபத்து நேரிடுமாயின் தங்கட் பிராணனையும் தேகசுகத்தையுங் கருதாது முன்வந்து ரட்சிக்கின்றார்கள். கொடிய பஞ்ச காலம் வந்துவிடுமாயின் தங்களாற் கூடியவரையில் வேண்டிய முயற்சிகளெடுத்து பஞ்சத்தை நிவர்த்திக்கத்தக்க ஏதுக்களைத் தேடி ஏழைகளின் அருகிற்சென்று அவர்களுக்கு சமைத்துள்ள சாதங்களையுங் கஞ்சிகளையும் தாங்கள் முதற் புசித்துப்பார்த்து ஏழைகளுக்களித்து உயிர்பிச்சைத் தருகின்றார்கள்.

இரட்சண்ணியவான்களாம் ஐரோப்பியர்களின் காருண்யச்செயல்களையிம்மட்டில் நிறுத்தி நமது தேசத்தில் சாதித்தலைவர்களென்றும், சகலசாதியோருக்கும் பெரியசாதிகள் என்றும் பிராமணர்களென்றும் பெயர் வைத்துக்கொண்டும் இருக்கும்படியானக் கூட்டத்தோருள் ஒருவர் ஓர் கலைகட்டராபீசில் செருஸ்ததாரராக வாயினும், எட்கிளார்க்காகவாயினும் அமருவாராயின் நாலைந்து வருடத்திற்குள் அந்த ஆபீசி முழுவதும் பிராமணரென்று சொல்லிக்கொள்ளுங் கூட்டத்தோரையே காணலாம்.

இத்தகைய செயலால் சகல வகுப்பாரின் விருத்தியைக்கருதி சகலரையுஞ் சுகம் பெறச் செய்கிறவர்கள் ஐரோப்பியர்களா நமது தேயத்தோரா சீர்தூக்கிப் பாருங்கள்.

யீதன்றி நீரிலேனும், நெருப்பிலேனுங் குடிகளுக்கு ஆபத்துவந்து விடுமாயின் அடி சேஷி, அடா சுப்பாவென்று தங்களினத்தோரைமட்டுந் தேடிக்கொண்டு தங்களெதிரில் நீரிலேனும், நெருப்பிலேனும் தவிப்பவர்களை தூரவிலகிக்கொண்டே அடா, அவனென்னசாதி அடியா, அவளென்ன சாதியெனக் கேட்டுக் கொண்டிருப்பார்களன்றி சீவகாருண்யமென்னும் சிந்தையே அவர்களிடங் கிடையாது.

தங்களுக்குத் தாங்களே பெரியசாதி என்னும் பெயரை வைத்துக்கொண்டும் பெரியச்செயலாம் சீவகாருண்யம் இல்லாமற்போமாயின் அவர்களை சுயனலப்பிரியர்களென்று கூறலாமா, பொதுநலப்பிரியர்களென்று புகழலாமா சீர்தூக்கிப்பாருங்கள்.

சாதித்தலைவர்கள் என்போர் தருமஞ்செய்வதாயின் தங்கள் சுயசாதியோர்களுக்கே செய்துக்கொள்ளுவதன்றி ஏனையவகுப்போரை நெருங்கவிட மாட்டார்கள். இத்தகைய சுயநல தருமச்சிந்தையையுடையவர்கள் பஞ்சகாலம் வந்துவிடுமாயின் யாருக்கு தானம் ஈய்ந்து உயிர்பிச்சை அளிப்பார்கள் என்பதை தாங்களே தெரிந்துக் கொள்ளவேண்டியதுதான்.

தேயத்தோர் குணபேதங்களையும் செயல்பேதங்களையும் நன்காராயாது எம்மெய் ஐரோப்பியரைச் சார்ந்தவனென்றும் எமது பத்திரிகையை ஐரோப்பியர் வாலென்றும் அவமதிப்பாய்க் கூறுவது அழகின்மெயேயாம். ஒவ்வொன்றையுந் தேறவிசாரித்துக் குறைகூறுங்கள். ஆழ்ந்தறிந்து அவமானப்படுத்துங்கள். வீணே புறங்கூறாதிருக்க வேண்டுகிறோம்.

- 3:28; டிசம்பர் 22, 1909 -