அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/105-383

விக்கிமூலம் இலிருந்து

101. நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் விவசாயவிருத்தியை விரும்புவார்களாயின் குடிகளின் குறைகளை நேரிற் சென்று விசாரிக்கும்படி வேண்டுகிறோம்

பெரும்பாலும் தென்னிந்தியாவிலுள்ள விவசாயக் குடிகளுள் தாசில்தார், முநிஷிப்பு, கணக்கன் முதலானவர்கள் தங்கள் பெயர்களால் பூமிகளை வாங்காவிட்டாலும் தங்கள் குடும்பத்தோர் பெயராலேனும் வாங்கி அநுபவித்துவருகின்றார்கள்.

இவற்றுள் சாதி வித்தியாசமாகிய பொய்க் கட்டுப்பாட்டினால் சாதித் தலைவர்களாயுள்ளவர்களுக்கு மட்டிலும் சகல சுகமும் காணலாம். தாழ்ந்த வகுப்பினரென்போர் நாளுக்குநாள் தாழ்ந்து உள்ளபூமிகளையும் ஊரையும் விட்டு ஓடவேண்டியதே அநுபவமாகும்.

பூமியை உழுது பண்படுத்தி சீருக்குக் கொண்டுவரவேண்டியவர்கள் ஊரைவிட்டு ஓடிவிடுவார்களாயின் சோம்பேரிகளால் பூமிவிருத்தி பெறுமோ, ஒருக்காலுமில்லை.

கிராம உத்தியோகஸ்தர்களுக்குள் சிற்சில பூமிகள் வைத்துக்கொண்டு பணச்செலவில்லாமலே பண்ணையாட்களால் வேலை வாங்கவும், பணச்செலவில்லாமலே ஏறு உழுது பயிர்செய்யவும் வேண்டுமென்கின்றார்கள். இவ்வகையானக் கஷ்டங்களை சகிக்காது தங்கள் பூமிகளைப் பார்த்துக் கொண்டும், தங்கள் வேலையிலிருந்துவிடுவார்களாயின் அவர்களை ஏதேனும் வேறுவகையாற் குற்றஞ்சாட்டி, கெடுத்து ஊரைவிட்டோட்டுகின்றார்கள்.

ஏழைக்குடிகள் தங்களுக்கு கிராம உத்தியோகஸ்தர்களால் நேரிட்டுள்ளக் குறைகளை கலைக்ட்டருக்கு எழுதுவார்களாயின் அவர்களதை நேரில் வந்து கண்டறிந்து விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் கலைக்ட்டர் தாசிலைக் கேட்கவும், தாசில், முநிஷிப்பு, கணக்கனைக் கேட்கவுமாக ஏற்படுகிற விஷயத்தில் கிராம உத்தியோகஸ்தர்கள் தங்கள் தங்கள்மீது யாதொரு குறைவையுங் காட்டிக் கொள்ளாது முறையிட்டக் குடிகளின்பேரிலேயே குற்றத்தைச் சாட்டி கலைக்ட்டருக்குத் தெரிவித்துவிடுவதுடன் தங்கள் குறைகளைக் கலைக்டருக்கு வெளியிட்டக் குடிகளை எவ்விதத்தும் பாழ்படுத்தி கிராமத்தைவிட்டு ஓட்டிவிடுகின்றார்கள்.

'முந்தி நாம் எழுதியுள்ளக் குறைகளையே கலைக்ட்டர் நேரில்வந்து விசாரியாமல் கிராமவுத்தியோகஸ்தரிடங் காட்டிவிட்டார்', இனியேதேனும் எழுதினாலும் அப்படியாகவே நேருமென்று பயந்து பேசாமல் ஊரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார்கள்.

ஆதலின் பூமிகளின் விருத்தியையும் விவசாயவிருத்தியையும் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் கவனிப்பதாயின் ஏழைக்குடிகளின் குறைகளை நேரில் வந்து விசாரித்து குறைகளை நீக்கிவிடுவார்களாயின் கிராமவுத்தி யோகஸ்தர்கள் சற்று பயந்து குடிகளை ஆதரிப்பார்கள். குடிகளும் கவலையின்றி தங்கள் வேலையில் சுறுசுறுப்பாயிருப்பார்கள். பூமிகளும் விருத்தியடையும்.

இத்தகைய கருணை நிறைந்த ராஜரீகத்திலும், மதுராந்தகத்தைச் சார்ந்த ஓரத்தூர் முதலிய கிராமங்களுள் சாதித்தலைவர்கள் வாசங்செய்யும் வீதிகளில் போஸ்ட் பில்லர்களை வைத்துக்கொண்டு சகலவகுப்போரும் நேரில்வந்து தங்கள் கடிதங்களைப் போடுவதற்கு விடாமல் யாவனேனும் ஓர் சாதித்தலைவன் வசங்கொடுத்துப்போடவேண்டுமென்று வைத்திருக்கின்றார்கள். நேரில் ஏழைக்குடிகள் பில்லர் பாக்சில் போட்டுவிடுவார்களாயின் கலைக்ட்ருக்குக் கடிதம் யெழுதினார்களோ வேறு யாருக்காவது கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கதியை எழுதியிருப்பார்களோ என்று தெரிந்துக்கொள்ளக் கூடாமற் போய்விடும். ஆதலின் சாதித்தலைவர்கள் வீடுகளினருகே போஸ்ட் பில்லரை வைத்துக்கொண்டு ஏழையெளியோர் கடிதங்ளை தங்களையே நேரிற் போடவிடாமல் தாங்களவற்றை பார்வையிட்டுப் போடும்படியாகவும் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையுங் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்து நேரில் கண்டு விசாரித்து ஆதரிப்பார்களென வேண்டுகிறோம்.

- 3:29: டிசம்பர் 29, 1909 -