அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/112-383

விக்கிமூலம் இலிருந்து

108. கத்தோலிக்கு கிறிஸ்தவர்களும் சாதியும்

சென்றமாதம் கத்தோலிக்கு கிறிஸ்தவர்கள் கூடிய (சோஷியல் காதரிங்) என்னும் உள் சீர்திருத்தக் கூட்டத்தில் சகல வகுப்பாரும் சகோதிர வாஞ்சையாய்க் கூடி சிறுதிண்டி முதலிய பட்சணங்களெடுத்துக்கொண்டும், ஒருவருக்கொருவர் கைலாகுக் கொடுத்தும் அன்பு பாராட்டிக் கிறிஸ்துவின் பிறப்பையும், அவரது சிறப்பையுங் கொண்டாடியவற்றைக் கேழ்வியுற்று மிக்க ஆனந்திக்கின்றோம்.

இத்தகையக் கூட்டத்தின் ஒற்றுமெயே கிறீஸ்து அவரானாரென்னும் அழகை தரும். இவ்வகையான பயிரங்கக் கூட்டத்தில் சாதிபேத மென்னும் பொய்ப்போர்வையை நீக்கி எறிந்து சகோதிர வைக்கியம் பாராட்டியவர்கள் தாங்களன்புடன் தொழும் கிறிஸ்துவின் ஆலயத்திற் பாராட்டாது நான் சாதிக் கிறிஸ்த்தவன், அவன் சாதியில்லாக் கிறீஸ்தவன், நான் தமிழ்க் கிறிஸ்தவன், அவன் வலங்கை கிறிஸ்தவனென்னும் பேதம் பிரித்து ஒருவருக்கொருவர் முறுமுறுத்துச் செய்யும் பூசையினால் ஏதேனும் பயனுண்டாமா. கிறீஸ்துவும் இவ்வகைப் பொறாமெயுள்ளோர் செய்யும் பூசையை ஏற்றுக்கொள்ளுவாரா. பிராமணமதத்தோர்களே, இச்சாதி நாற்றத்தால் தேசமக்களுக்கே கெடுதியுண்டாவதுடன் நாளுக்குநாள் தேசமும் பாழாகிவரகின்றதென்றுணர்ந்த விவேகிகளிற் சிலர் சாதிநாற்றங்களைக் கழுவிக் கொண்டே வருகின்றார்கள். அவர்களை அஞ்ஞானிகளென்று கூறும்படியான மெய்ஞ்ஞானக் கிறிஸ்தவர்கள் பிராமணமத சாதிக்கட்டை விடமாட்டோமென்றால் மற்றவர்களை இவர்கள் அஞ்ஞானிகளென்று கூறத்தகுமோ. பெரும் சாதியாசாரங்களை அநுசரித்து வந்தவர்களே அதினாற் கெடுதியுண்டென்றறிந்து அவற்றை அகற்றிவருங்கால் கிறீஸ்துவைப் பின்பற்றினோம் அவரது ஞானத்தைக் கைகொண்டோமென்று சொல்லிக்கொண்டே பிராமணர்களது குடிமியையும் பூனூலையும் இறுகப் பிடித்துக்கொண்டு சாதியை விடமாட்டோமென்றால் கிறீஸ்துவைப் பின்பற்றியது மெய்யாமோ, அவரைப் பூசிப்பதும் பூசையாமோ. யதார்த்தத்தில் அன்புகொண்டு கிறீஸ்துவை பூசிப்பதாயின் அருகிலுள்ள சகோதரர்கள் மீது அன்பு பாராட்டாது விரோதிக்கலாமோ. கிறீஸ்துவைப் பின்பற்றியும், அவரது போதனையாகும் தன்னைப்போல் பிறரை நேசியுங்கோளென்னும் அமுதவாக்கைத் தள்ளப்போமோ. அவரது போதனையைத் தள்ளிவிட்டு அவரைப் பின்பற்றினோமென்பது அபுத்தமேயாகும்.

வீட்டிலிருந்து கிறிஸ்துவை சிந்திப்பதால் குடும்ப விவகாரமும், பிள்ளைகளின் உபத்திரவமும், விருந்தினர்கஷ்டமும் மேற்கொள்ளுமென்று கருதி குறித்த நாளிற் கோவிலுக்குச் சென்று குடும்ப விவகாரங்கள் யாவையும் நீக்கிவிட்டு மனவமைதியும் ஆறுதலுங்கொண்டு சிந்திப்பதே தியானமாகும். அத்தகைய பரிசுத்த தியான காலத்தில் பக்கத்திலிருப்போன் பள்ளசாதி, முன்னாலிருப்போன் முக்கிட்டு சாதி, பின்னாலிருப்போன் பேயசாதியென்றெண்ணிக்கொண்டும், விரோத சிந்தையை வளர்த்துக்கொண்டும், பொறாமெ சிந்தையை பெருக்கிக்கொண்டும் பூசிப்பதினால் கோவிலுக்குப் போயும் குணமில்லை, ஆலையத்திற்குப்போயும் அருளில்லையென்றே முடியும்.

ஆதலின் (சோஷியல்) காதரிங்கென்று கூடுங் காத்தலிக்கு கனவான்கள் வெளிகளில் சாதி சீர்திருத்தம் செய்வதைவிடக் கோவில்களுக்குள் செய்துவரும் சாதிவித்தியாசக் கொடியநாற்றத்தை அகற்றி ஒற்றுமெயென்னும் பரிமளத் தைலத்தை வார்த்து சகல மனுமக்களின் இதயங்களையும் அன்பின் பெருக்கத்தால் குளிர்ச்சி செய்வார்களென்று நம்புகிறோம்.

- 3:32; சனவரி 18, 1910 -