அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/116-383

விக்கிமூலம் இலிருந்து

112. கொடிது கொடிது இராஜதுரோகங் கொடிது

குலத்துரோகம் குருத்துரோகம் இரண்டும் செய்தவரைச் சாரும். இராஜதுரோகமோவெனில் தேசக் குடிகளையே சாருமென்பது திண்ணம்.

ஆதலின் இந்தியசோதிதரர்களே, நமது இந்திர நாடானது தெய்வ விசுவாசத்திலும், குரு விசுவாசத்திலும், இராஜ விசுவாசத்திலும், குடும்ப விசுவாசத்திலும், சிநேக விசுவாசத்திலும் மிக்கோரென சகலருங் கொண்டாடப் பெற்றிருந்தது.

இராஜ விசுவாசத்தை எவ்வகையால் விளக்கிவந்தார்களென்னில், சுதேச அரசர்கள் தேச க்ஷேமத்தையும், குடிகளின் சுகத்தையுங் காணவேண்டுமென்னும் சாந்த அறிகுறியாய் வெண்பிறைமுடி, வெண்ணங்கி, வெள்ளைக்குதிரை அல்லது வெள்ளையானைமீதேறி வெண்சாமறைவீச வெள்ளைக்குடை வெள்ளை கொடி பிடித்து ஊர்வலம் வருவது வழக்கமாகும். அவற்றை அறிந்த குடிகள் யாவரும் வீதிகளெங்கும் சுத்தஞ்செய்து பழய மணல்களை வாரி எறிந்துவிட்டு புது மணல்களைப் பரப்பி அரசிலை தோரணங்கள் கட்டி வாழை கமுகுகள் நாட்டி வீதிகளெங்கும் வாசனைப் புகைகளிட்டு அரசன் மாடவீதிகளாகும் இராஜபாட்டை வருங்கால் இஸ்திரீகளும் புருஷர்களும் வெளிவந்து கற்பூர ஆலாத்தி ஏந்தியும் கன்னச்சாந்தாகும் ஆலங்களேந்தியும் அரசனை வாழ்த்துதல் கூறி மயில்விசிறி ஆலவட்டங்களால் விசிரியும் அரசன் யாதுகுறைவுமின்றி பல்லாண்டு வாழ்கவென மங்களங்கள் வாழ்த்துதல் கூறி குடிகளுக்குள்ள இராஜவிசுவாசத்தைக் காட்டுதலும்; அரசனோ குடிகளுக்குற்ற குறைகளை நீக்கி அன்புடன் ஆதரித்துவருவதும் பூர்வ வழக்கமாயிருந்தது.

பூர்வ பௌத்த தர்மகாலத்தில் அரசர்களைச் செய்துவந்த உற்சாகங்களையே நாளதுவரையில் கோயில் என்னும் அரசன் மனையினின்று வீதிவலக் கொண்டாட்டத்தை சுவாமி உச்சவம் சுவாமி உச்சவமென வழங்கி வீணுச்சாகங் கொண்டாடி வருகின்றார்கள்.

இத்தியாதி அநுபவங்களை உணர்ந்த நாம் இராஜபக்தி, தெய்வபக்தி, குருபக்தி குடும்பபக்தி யாவையும் ஒழித்து உன் சாதி பெரிது என் சாதி பெரிதென்னும் பெரியசாதி சண்டைகளையும்; உன்சாமி பெரிது என்சாமி பெரிதென்னும் பொய்மதச் சண்டைகளையும் நாளுக்குநாள் பெருக்கி ஒற்றுமெய்க் கேடடைந்து ஒருவருக்கொருவர் உறுமிக்கொண்டு நிற்கும் பொறாமெய்ச்சொல் போராது இராஜதுரோகிகளென்னும் பெயர்களையும் ஏற்பது நியாயமாமோ.

இத்தகைய வித்தையும், புத்தியும், யீகைப்பும், நீதியுமமைந்த ராஜரீகம் உலகெங்குந் தேடிடினும் கிடைக்குமோ, ஒருக்காலும் கிடையா.

சாதிநாற்றம், சமய நாற்றமென்னும் இருவகைக் கேட்டினால் பிரிந்து நிற்போரைத் தங்கள் ஒருகுடைநீழலில் நிறுத்தி ஒற்றுமெயும், சுகமுமடையச் செய்துவருவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒருவரோடொருவர் சேர்ந்து கப்பலேறி மறுதேசஞ்சென்று பொருள் சம்பாதித்து சுகம் பெறச்செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒருதேச விளைவு தானியங்களை இரயிலிலேற்றி மறுதேசஞ்சென்று அவ்விடத்திய பஞ்சங்களை அகற்றி சருவவுயிர்களையும் கார்த்து வியாபாரிகளையும் மிக்க தனவந்தர்களாகச் செய்துவருவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒரு தேசத்தோர் குடும்ப சங்கதிகளை மறுதேசத்தோரறிந்து கொள்ள தபால் இலாக்காக்களை உண்டு செய்துள்ளது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. அதனினுந் துரித சங்கதிகளை தந்தியிலாக் காக்களின் மூலமாக உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள செய்துள்ளது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ.

ஒருசாதியோருடன் மறுசாதியோர் சண்டையிட்டு மண்டைகள் உடைத்துக்கொள்ளுவதை சமாதானப்படுத்தி அடக்கியாளுவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒருமதத்தோருடன் மறுமதத்தோர் போர்புரியும் மதகர்வத்தை அடக்கியாளுவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. தங்கடங்கள் சுயபாஷையையே கல்லாது கையேந்தி நிற்பவர்களுக்கு இராஜாங்கத்தோர் கல்வியையும் சுயக்கல்வியையும் அளித்து இராஜாங்க உத்தியோகங்களையுங் கொடுத்து வண்டி குதிரை ஏறி உலாவச்செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ, வேளாளத் தொழிலாளர்கள் யாவரும் நஞ்சைபூமி புஞ்சை பூமிகளை உழுது பயிர் செய்வதற்கு ஆற்றுப்பாய்ச்சல்களையும், ஏரிப் பாய்ச்சல்களையும் செவ்வை செய்து செருக்கடையவைத்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. சருவ மக்களும் சுத்தநீரை மொண்டு குடிக்கவும், சுத்த ஆடைகளைக் கட்டவும், சுவையான பதார்த்தங்களைப் புசிக்கவும், வீதிவீதிக்கு வேதாந்த சங்கை விசாரிக்கச்செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. மல்லு பீசுகளென்றும், உல்லன் பீசுகளென்றும், மாச்சிஸ்பெட்டிகளென்றும், வாக்சிஸ்பெட்டிகளென்றும், வாசனை சோப்புகளென்றும், பூசனை சோப்புகளென்றும், கொழுப்புக் காண்டிலென்றும், மெழுக்குக் காண்டிலென்றும் பெயர் வைத்து அதன் சுகத்தை அடையச் செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ.

இத்தியாதி சிறந்த செயல்களையும், செயலின் நன்றியையும் மறந்து பிரிட்டிஷ் இராஜதுரோகம் செய்வதாயின் இந்த துற்கருமம் யாரைச் சாரும். இந்தியாவையும் இந்தியக்குடிகளையே சாரும். இந்திய சோதிரர்களே, இந்திய கனவான்களே, இந்திய விவேகிகளே கருணை கூர்ந்து கண்ணோக்குங்கள்.

நீதிபின் செங்கோலைக்கொண்டு நம்மொண்டுவரும் பிரிட்டிஷ் துரைமக்கள் பத்துநாள் நமது தேசத்தை விட்டகன்று அன்னியதேசத்தில் தங்கியிருப்பார்களாயின் இருபது தீவட்டிக் கொள்ளைக்காரர் ஒருவீதியில் நுழைந்து கொள்ளையடிக்குங்கால் பத்து வீதி சுதேசிகளும் சேர்ந்து பக்கத்துணை வருவார்களோ, ஒருக்காலும் வரமாட்டார்கள். தங்கள் சொத்துக்களையும், தங்கள் உயிரையும் பாதுகாத்துக்கொண்டு பதுங்குமிடத்தைப் பார்ப்பார்கள். அதற்குதவியாக அந்த வீதிக்காரன் என்ன சாதியென ஒற்றுமெய்க் கேட்டை ஊன்றிநிற்பார்கள்.

இவர்களை ஓர் கதேசிகளென்றும், இந்த சுதேசிகள் தன்னவரைப்போல் அன்னியர்களைப் பாதுகாப்பார்கள் என்றும் எண்ணிக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் நன்றியை மறப்பது நன்றன்று. அவர்கள் செய்நன்றியை மறந்திருப்பினும், அவர்களுக்குக் கேடுண்டுசெய்யும் வழிகளைத்தேடி இராஜ துரோகிகளென்னும் பெயரை ஏற்பது அதனினும் நன்றன்று. ஆதலின்,

கொடிது கொடிது குலக்கேடு கொடிது
கொடிது கொடிது குருநிந்தை கொடிது
கொடிது கொடிது கடவுட்குறை கொடிது
கொடிதுகொடிது ராஜதுரோகங்கொடிதே.

- 3:35; பிப்ரவரி 3, 1910 -