உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/117-383

விக்கிமூலம் இலிருந்து

113. அச்சியந்திரங்களின் சட்டமும், அனந்தபத்திரிகாகோஷ்டமும்

அந்தோ, வாய்கொழுப்பு சீலையால் ஒழுகின்றதென்னும் பழமொழிக்கிணங்க பத்திரிகைகளுக்கு அதிகாரங் கொடுத்துவிட்டார்களென்னும் செருக்கால் தங்கள் ஒற்றுமெய்க் கேட்டையும், எதிரிகளின் ஒற்றுமெய் சுகத்தையும், தங்களுக்குள்ள வித்தையின் குறைவையும், எதிரிகளுக்குள்ள வித்தையின் சிறப்பையும், தங்களுக்குள்ள பலத்தின் குறைவையும், எதிரிகளுக்குள்ள பலத்தின் வீரியத்தையும் முன்பின் யோசியாது சுதேசியமென்றும், வந்தேமாதரமென்றும் வகையற்ற வார்தைகளைப் பத்திரிகைகளில் வரைந்து கருடனை சுட்டுக்குருவிகள் எதிர்ப்பதுபோலும் சிம்மத்தின்மீது செம்மறியாடுகள் முநிவதுபோலும் அறியாமக்களை அல்லலுக்காளாக்கி அலையவிட்டபடியால் பத்திரிகைகளுக்கு எவ்வளவு அதிகாரங் கொடுத்திருந்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு அடக்கிவிட்டார்கள். ஓர் மனிதனை மேலே தூக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்குக் கீழே இறக்கிவிடத் தெரியாதோ, எளிதில் இறக்கிவிடுவார்கள்.

பத்திராதிபர்கள் அவற்றை உணராதும் பத்திரிகைகளுக்கு யாது அதிகாரங் கொடுத்திருக்கின்றார்களென்று அறியாமலும் எழுதி வீண் கலகங்களை விருத்திசெய்துவந்தபடியால் பத்திரிகைகளின் வாய்பூட்டை பதைக்கப் பூட்டிவிட்டார்கள்.

பெரும்பாலும் இந்திய பத்திரிகைகளுக்கு என்ன அதிகாரங் கொடுத்திருந்தார்களென்னில், இந்து தேசத்தில் நாளுக்குநாள் சாதிநாற்றம் அதிகரித்து ஒருவருக்கொருவரைத் தாழ்த்தி சீர்குலைத்து வருகின்றபடியால் பெரியசாதியென்னும் பெயரை வைத்துள்ளவர்கள் இராஜாங்க உத்தியோகத்திலமர்ந்து ஏழைகளை இன்னும் தாழ்த்தி ஏதேனும் இடுக்கங்களைச் செய்து குடிகளைப் பாழாக்கிக் குடியோட்டிவிடுவார்கள். அத்தகையோர் அக்கிரம் செயல்களையும், அந்நியாய வழிகளையும் அப்போதைக்கப்போது பத்திரிகைகள் வாயலாய் வெளியிடுவார்களாயின் இராஜாங்கமும் கண்ணோக்கும். பெரியசாதியென்போர் அக்கிரமச்செயல்களும் குறைவுறும், ஏழைக்குடிகளும் ஈடேறுவார்களெனும் இதக்கத்தினால் பத்திரிகைகளுக்கோர் பேசும் அதிகாரம் கொடுத்தார்கள்.

அத்தகைய அதிகாரத்தை தீட்டியமரத்தில் கூர்ப்பார்ப்பதுபோல் குடிகள் ராஜாங்கத்தை விரோதிக்கத்தக்க விஷயங்களை யெழுதுவதும், குடிகளுக்கும் இராஜாங்கத்தோருக்கும் பிரிவினையை உண்டாக்கத் தக்கக் கடிதங்களையெழுதுவதும் கல்வி சாலைகளில் கற்கும் பிள்ளைகளுக்கும், இராஜாங்கத்தோருக்கும் அயிஷ்டத்தை உண்டாக்கத்தக்கக் கடிதங்களை எழுதுவதும் சுதேசியம், சுதேசியமென்னும் சுவையற்ற வார்த்தைகளை யெழுதுவதும், வந்தேமாதரம், வந்தேமாதரம் என்னும் வகையற்ற வார்த்தைகளை யெழுதுவதுமாகியச் செயலால் பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்த அதிகாரத்தைப் பட்சம்பாராது பறித்துவிட்டார்கள்.

ஈதன்றி வாழும் பெண்ணை தாயார் கெடுத்தாளென்னும் பழமொழிக்கிணங்க, படிக்கும் பிள்ளைகள் விருத்தியை பத்திராதிபர்கள் கொடுத்தார்களென்னும் புது மொழி தோன்ற பத்திராதிபர்களுக்கு கேட்டை உண்டாக்கி விட்டதுமன்றி பள்ளி பிள்ளைகளையும் கேடுபடச்செய்துக் கொண்டார்கள்.

இத்தியாதி குறைகளுடன் இன்னுங் குடிகள் கெட்டுபாழாகாமலிருப்பதற்காய் அச்சியந்திரசாலைகளின் அதிகாரங்களையும், பத்திராதிபர்களின் பதைபதைப்பையும் இராஜாங்கத்தார் ஒடிக்கி வைத்திருக்கின்றார்கள்.

இவற்றை யுணர்ந்த இந்திய தனவான்களும், இந்திய மேதாவிகளும் ஒன்றுகூடி இராஜதுவேஷங்கொண்டு இராஜதுரோகஞ் செய்யும் பாவிகளைக் கண்டறிந்து அவர்களை யடக்கி நீதிவழிக்குக் கொண்டு வருவார்களாயின் பத்திரிகைகளின் அதிகாரமும் பலிக்கும்; பள்ளி பிள்ளைகளின் படிப்பும் விருத்திபெறும். குடிகளும் சுகம் பெற்று வருவார்கள்; கோனும் ஆறுதல் பெறும். அங்ஙனமின்றி பத்திரிகைகளின் அதிகாரங்களும் போச்சு, பள்ளிப்பிள்ளைகளின் படிப்பும் போச்சுதென்று வீண் கூச்சலிடுவதினால் ஒரு பலனுங் காணமாட்டோம்.

அச்சியந்திர சட்டத்தைக் கண்டவுடன் அலறிக்கொண்டு பேசும் பத்திரிகைகள் வெடிகுண்டிட்டு இராஜாங்க உத்தியோகஸ்தர்களைக் கொலைசெய்யுங்கால் கூச்சலிட்டு இராஜதுரோகிகளுக்கு மதிகூறி எழுதி இருக்குமா. கைத் துப்பாக்கிகளைக் கொண்டு ராஜாங்க உத்தியோகஸ்தர்களைக் கொலை செய்துள்ள இராஜதுரோகிகளின் மனமிழகவும் இனி இத்தகைய ராஜதுரோகங்களெழாமலிருக்கவும் தங்கடங்கள் பத்திரிகைகளில் வரைந்து பரவச்செய்திருக்கின்றார்களா. அவ்வகை நீதிமொழிகளை பத்திரிகைகளுக்கெழுதி இராஜதுவேஷிகளுக்கு மதிகூறியிருப்பார்களாயின் ராஜதுரோகிகள் தோன்றுவார்களா. இராஜதுரோகிகள் தோன்றாமல் இருப்பார்களாயின் ஒருக்காலும் அச்சியந்திர அதிகாரம் குறையுமோ குறையாவாம். நம்தேய பத்திரிகைகள் யாவும் வீண் கூச்சலிடுவதை யொழித்து குடிகளுக்கு நீதிநெறியை போதித்து இராஜவிசுவாசத்தில் நிலைக்கச்செய்வார்களென்று நம்புகிறோம்.

- 3:37; பிப்ரவரி 23, 1910 -