அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/118-383

விக்கிமூலம் இலிருந்து

114. கிறிஸ்தவர்களுக்குள் சாதிவைக்கலாமா வைக்கக்கூடாதா என்று ஆலோசிக்கின்றார்களாம்

அந்தோ, கிறீஸ்தவர்களுக்குள் சாதி வைக்கலாமா வைக்கலாகாதா வென்னும் ஆலோசினைத் தோன்றியது மிக்க விந்தையாகவே காண்கின்றது. எவ்வாறெனில் சாதாரண இந்துக்களாயுள்ளவர்களே சாதியைக் கழுவி சுத்தஞ் செய்வதற்கு அடையாளமாகத் தங்கட் பெயர்களின் ஈற்றில் வரைந்துவந்த ஐயர், முதலி, நாயுடு, செட்டி எனும் துடர்மொழிகளை வரையாமலே தள்ளிவருகின்றார்கள்.

சாதியை உண்டு செய்தவர்களே சாதிகளை ஒழித்துக் கொண்டுவரும்போது சாதிநாற்றமில்லாமல் இத்தேசத்திற்கு வந்துள்ள கிறீஸ்துமதத்தில் சாதிவைக்கலாமா வைக்கலாகாதா என்று ஆலோசிப்பது விந்தையே.

தற்காலம் கிறீஸ்தவர்களுக்குள் சாதிவைக்கலாமா வைக்கலாகாதா என்று ஆலோசிப்பவர்கள் கனந்தங்கிய வைஸ்ராயர்களைக் காணுதற்கு பிரதிநிதிகளை அனுப்பியபோது நாங்கள் இன்னசாதிக் கிறிஸ்தவர்களுக்குப் பிரதிநிதியாக வந்தோமென்று தங்கள் வந்தனப் பத்திரிகையில் கண்டுள்ளார்களா இல்லையே. அங்ஙனமிருக்க இப்போது கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினையை உண்டுசெய்ய ஆலோசிப்பது பிசகேயாம்.

இத்தகைய சாதிக்கிறீஸ்தவர்களென்றும், சாதியில்லாக் கிறீஸ்தவர்களென்றும் ஏற்படுவார்களாயின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் அவற்றைக் கண்ணோக்க வேண்டியதேயாகும். காரணம் கிறீஸ்தவர்களாகியும் சாதியை வைத்துக்கொண்டுள்ளவர்கள் ஏதோ ஓர் காலத்தில் சாதியை வைத்துள்ளக் கூட்டத்தோருடன் கூடிக்கொள்ளுவதற்கு ஏதுக்கள் தோன்றினும் தோன்றும். ஆதலின் கருணைதங்கிய பிரிட்டிஷ் அரசாட்சியார் சாதியில்லா கிறீஸ்தவர்களுக்குள்ளும், சாதியில்லா அரசாட்சிக்குள்ளும் சாதியுண்டென்று பிரிவினைச் செய்யும் கிறிஸ்தவர்கள் பால் கண்ணோக்கம் வைக்க வேண்டுமென்று கோரியுள்ளோம்.

கிறிஸ்தவர்களுக்குள்ளும் தீண்டப்படும் கிறிஸ்தவர்கள், தீண்டப்படா கிறீஸ்தவர்களுமுண்டோ. கிறீஸ்துவந்து நடுத்தீர்வையளிக்குங்கால் எந்தக் கிறீஸ்தவர்களை வலபுறத்திலும், எந்தக் கிறீஸ்தவரை இடபுறத்திலும் வைப்பாரோ தெரியவில்லை. தீண்டக்கூடாத கூட்டத்தாரென்றால் மநுமக்களுள் குடியர்களைத் தீண்டப்படாதா விபச்சாரிகளைத் தீண்டப்படாதா, பொய்யர்களைத் தீண்டப்படாதா, கொலைப்பாதகரைத் தீண்டப்படாதா, அல்லது வைத்திய சாஸ்திர விதிப்படி குஷ்டரோகிகளைத் தீண்டப்படாதா வைசூரி கண்டவர்களைத் தீண்டப்படாதா, பிளேக்கென்னுங் கண்டமாறிக் கண்டவர்களைத் தீண்டப்படாதா, இவற்றுள் யாரைத் தீண்டப்படாத கூட்டத்தாரென்று வகுத்திருக்கும் விவரந்தெரியவில்லை.

வேண்டுமென்னுங் கெட்ட எண்ணத்தால் ஓர் பெருங்கூட்டத்தோரை தீண்டாதவர்களென்றும், தாழ்ந்த சாதியோரென்றும் கூறி மனத்தாங்கல் உண்டாக்கிவரும் துற்கருமப் பலனானது இவ்வுலகத்திலும் விடாது நடுத்தீர்வையிலும் விடாதென்பது சத்தியம்.

கிறீஸ்துவின் சத்தியமொழி “தாழ்த்தப்பட்டவன் உயர்த்தப்படுவான்.”

- 3:37; பிப்ரவரி 23, 1910 -