அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/119-383

விக்கிமூலம் இலிருந்து

115. நெடால் கூலிகளும் இந்தியச் சாதி நாற்றமும்

இந்தியாவிலிருந்து நெட்டாலுக்குச் சென்றுள்ள கூலிகளை அவ்விடம் மெத்தக் கொடூரமாக நடத்துகிறார்களென்றும் அப்படி நடத்துகிறபடியால் இந்தியக் கூலிகளை இனிமேல் நெட்டாலுக்கு அனுப்பப்படாதென்றும் கனந்தங்கிய கோகேல் முதலிய பிரமுகர்கள் கேட்டுக்கொள்ளவும் அதை நமது கருணைதங்கிய கவர்ன்மெண்டார் அங்கீகரித்ததாகவும் கேழ்விப்பட்டு மிக்க விசனிக்கிறோம்.

அதாவது நெட்டாலுக்குச் சென்றுள்ள இந்திய வியாபாரிகளுக்கு சில இடுக்கங்கள் நேரிட்டுவந்ததாகப் பத்திரிகைகளின் வாயிலாகக் கண்டுள்ளோமன்றி கூலிகளுக்கு இடுக்கமுண்டாயதென்று கேழ்விப்படவில்லை. அங்ஙனம் இந்திய கூலிகளுக்கு என்ன இடுக்கம் உண்டாயிருக்குமென்றால் சில உழைப்புத் தொழில் அதிகரித்திருக்ககூடும். ஆயினும் இந்தியாவில் அரைவயிற்றுக் கஞ்சேனும் சரவரக் குடியாது நாள் முழுவதும் உழைப்பவர்களுக்கு பசியாற உண்டு அதிகம் உழைப்பதினால் யாதொரு கெடுதியும் நேரிடாது.

ஈதன்றி நெட்டாலுக்குச் செல்லும் ஏழைக்குடிகள் பெரும்பாலும் தென்னிந்தியவாசிகளேயாம். இத்தென்னிந்திய ஏழைகள் மட்டிலும் நெட்டாலுக்குப்போகும் காரணம் யாதென்றால், சாதிபேதக் கொடூரச் செயலால் நல்லத்தண்ணீரை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரம் செய்யவிடாமலும் நாள் முழுவதுங் கஷ்டப்பட்டபோதினும் அரைவயிற்றுச் பூசிக்காகும் கூலியேனும் சரிவரக் கொடாமலும், கொல்லாமற் கொன்றும், வதைக்காமல் வதைத்தும் சாதித்தலைவர்கள் செய்துவரும் படும்பாவச் செயல்களுக்கு பயந்தே பரதேசமாம் நெட்டாலுக்குப் போய் சீவிக்கின்றார்கள். அவ்வகை நெட்டாலுக்குச் சென்று இந்தியாவுக்கு வந்துள்ள ஒவ்வோர் ஏழைக்குடிகளும் இரண்டு வீடு மூன்றுவீடுகளை வாங்கிக்கொண்டு சுகசீவிகளாக வாழ்வதுடன் நாடுகளிலும் இரண்டுகாணி மூன்றுகாணி பூரிகளை வாங்கிக்கொண்டு சொந்தத்தில் உழுது பயிர்செய்து சுகித்திருக்கின்றார்கள்.

இத்தகையாய் நெட்டாலுக்குச் சென்றிருந்த இந்திய ஏழைக்குடிகள் யாவரும் சுகவாழ்க்கையில் இருக்கின்றார்களன்றி முன்போல் சாதித் தலைவர்கள் வசம் கூலிகளாக வசப்பட்டுக்கொண்டு குடிக்கக் கூழுக்கும் குண்டியிற் கட்ட வஸ்திரத்திற்குமில்லாமல் எலும்புத் தோலும் குடுவையும் கோலுமாகயில்லை. இவ்வகை நெட்டாலுக்குச் செல்லும் கூலிகள் நாளுக்குநாள் சுகம் பெற்று சீரடைந்துவருவது சகலருக்கும் பிரத்தியட்சமாக விளங்கும் போது அவர்களைப் போகக்கூடாதென்று தடுப்பது அவர்களேன் சீருக்கு வருகின்றார்களென்று கெடுப்பதற்கே ஆதாரமாக விளங்குகின்றது.

இந்தியக் கூலிகளை நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுக்க முயலும் கோகேல் அவர்களும் மற்றும் பிரமுகரும் இந்தியாவிலிருந்து நெட்டாலுக்குச் சென்று வந்துள்ள ஏழைக் குடிகள் யாவரையும் நேரில் தருவித்து நீங்கள் நெட்டாலுக்குச் சென்று தனவந்தர்களாகவந்து சுசத்தை அனுபவிக்கின்றீர்களா அன்றேல் நெட்டாலுக்குச் சென்று அனந்தங் கஷ்டப்பட்டு இங்குவந்து துக்கத்தை அநுபவிக்கின்றீர்களாவென்று கேட்டு சுகாசுகந் தெரிந்து நெட்டாலுக்குப் போகும் ஏழைக்குடிக்களை தடுக்க முயல்வார்களாயின் அஃது பேரும் காரமும் நியாயமுமாகவுங் காணும். அங்ஙனம் நெட்டாலுக்குச் சென்று வந்துள்ள கூலிகளின் சுகாசுகங்களைக் கண்ணாரக் காணாமலும், அவர்களை நேரில் தருவித்து அவர்கள் வார்த்தையைக் கேளாமலும் இந்திய ஏழைகளை நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுப்பது முன்போலக் கோலும் குடுவையும் தூக்கிக் கொள்ளுங்கோள் என்பதற்கு அறிகுறியேயாம்.

நீதியும் நெறியும் கருணையும் நிறைந்த ராஜாங்கத் தோன்றியும் பொய்யாகிய சாதிபேதத்தால் தாழ்த்தப்பட்ட ஏழைக்குடிகள் ஈடேறுவதற்கு வழியில்லாமல் நாளுக்குநாள் இடுக்கம் பெறுவதற்கு வழியாதென்பீரேல் இவ்வேழைக் குடிகளின் சீர்திருத்தத்திற்கென்று ஓர் பிரதிநிதியிருந்து இராஜாங்கத்தோருக்கு விளக்கிக் காண்பிக்கா குறையேயாம். இந்த சாதிபேதமற்ற திராவிட ஏழைகளுக்கென்று ஓர் பிரதிநிதி இராஜாங்க சங்கத்தில் இருப்பராயின் கனந்தங்கிய கோகேலவர்களும் மற்றுமுள்ளோரும் நெட்டாலுக்குப் போய் சீவிக்கும் ஏழைக்குடிகளைத் தடுப்பது தருமமல்லவென்றும் அப்படி தடுப்பது ஏழைகளைக் கெடுப்பதற் கொக்குமென்றும் எடுத்துக்காட்டுவார்கள். அத்தகைய ஏழைகளுக்கென்றோர் பிரதிநிதியில்லாக் குறைவால் எடுத்தக் கைப்பிள்ளை எல்லோருக்கும் பிள்ளையென்பது போலும் எழியவன் பெண்சாதி எநுமானனுக்கெல்லாம் பெண்டென்பது போலும். ஏழைமக்களை சீர்பெறவிடாது இழுத்திழவு கொள்ளுகின்றார்கள். நெட்டாலுக்குச் செல்லும் நூறு ஏழைக் குடிகளில் பத்துபேர் வியாபாரிகளாகச் செல்லுவார்களாயின் தொண்ணூறு பேர் கூலிகளாகவே உழைத்து சுகம் பெறுகின்றார்கள். இவர்களுள் பத்து வியாபாரிகளுக்காக முனைந்து கொண்டு தொண்ணூறு ஏழைக்குடிகளைக் கெடுத்துவிடலாமோ. இதுவும் பொதுவாயப் பிரதிநிதிகளுக்கழகாமோ. இந்திய சாதித்தலைவர்களால் ஏழைக்குடிகள் படுங் கஷ்டங்களில் நெட்டால் தலைவர்களால் படுங் கஷ்டம் எட்டில் ஒரு பங்கிருக்கமாட்டாதே. அத்தகைய நெட்டால் ஏழைகளுக்கென்று படுங் கஷ்டத்தில் கால்பாகம் இந்திய யேழைகளுக்கென்று நமது கோகேலவர்கள் பாடுபடுவராயின் பொதுவாய பிரதிநிதியென்றே இவரைக் கொண்டாடலொக்கும். அங்ஙனமின்றி பொய்யாகிய சாதிநாற்றத்தால் ஏழைக்குடிகள் நசிந்து நாசமாய்ப்போகினும் போகட்டும் நெட்டாலுக்குப்போய் சுகம்பெறலாகாதென்று முயல்வதால் எவ்வகையிற் பொதுப் பிரதிநிதியென்று எண்ணக்கூடும். எப்போதவர் ஏழைக்குடிகளின் Fஈடேற்றத்தைத் தடுக்க முயல்கின்றாரோ அவரை சாதித்தலைவர்கள் பிரதிநிதியென்றே கூறல்வேண்டும்.

அத்தகைய சாதித்தலைவர்களின் பிரதிநிதி வாக்கியத்தை ஏற்றுக்கொண்டு சாதிபேதமற்ற ஏழைக்குடிகளின் ஈடேற்றத்தை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் தடுக்காமலிருக்க வேண்டுகிறோம்.

- 3:38; மார்ச் 2, 1910 -